சாப்பானும் அவருடைய குடும்பத்தாரும் உங்களுக்கு பரிச்சயமானவர்களா?
உங்கள் பைபிளை வாசிக்கும்போது, சாப்பானைப் பற்றியும் செல்வாக்குள்ள அவருடைய சில குடும்ப அங்கத்தினர் பற்றியும் வரும் குறிப்புகளை நீங்கள் கவனித்ததுண்டா? யார் அவர்கள்? அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களிடமிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்?
சுமார் பொ.ச.மு. 642-ல் யோசியா உண்மை வணக்கத்தை திரும்ப நிலைநாட்டியதைப் பற்றி பைபிள் கூறும்போது ‘மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பானை’ நமக்கு அறிமுகப்படுத்துகிறது. (2 இராஜாக்கள் 22:3) அதைத் தொடர்ந்து வந்த 36 ஆண்டுகளில், பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்படும் வரையான காலத்தில் நாம் அவருடைய நான்கு மகன்கள் அகீக்காம், எலாசா, கெமரியா, யசனியா பற்றியும் அவருடைய இரண்டு பேரன்கள் மிகாயா, கெதலியா ஆகியோரைப் பற்றியும் தெரிந்துகொள்கிறோம். (அட்டவணையைப் பார்க்கவும்.) “சாப்பானின் குடும்பமே [யூதா ராஜ்யத்தில்] அதிகார வர்க்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி யோசியாவின் காலம் முதல் நாடு கடத்தப்படும் வரையில் ராஜாவின் சம்பிரதியாக பதவி வகித்துவந்தனர்” என என்ஸைக்ளோப்பீடியா ஜுடேயிக்கா விளக்குகிறது. சாப்பானையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி பைபிள் கூறுவதை மறுபார்வை செய்வது, அவர்கள் எரேமியா தீர்க்கதரிசியையும் யெகோவாவின் உண்மை வணக்கத்தையும் எவ்வாறு ஆதரித்தார்கள் என்பதை புரிந்துகொள்ள உதவிசெய்யும்.
சாப்பான் உண்மை வணக்கத்தை ஆதரித்தார்
பொ.ச.மு. 642-ல் யோசியா அரசன் 25 வயதுள்ளவராய் இருந்தபோது, சாப்பானே அவரது செயலராகவும் நகல் எடுப்பவராகவும் சேவித்துக் கொண்டிருப்பதை நாம் அறிகிறோம். (எரேமியா 36:10) அந்த வேலையில் என்ன உட்பட்டிருந்தது? அரண்மனை சம்பிரதியும் செயலருமாக இருந்தவர் ராஜாவின் அந்தரங்க ஆலோசகராக இருந்தார். பண விஷயங்களில் பொறுப்புள்ளவராக இருந்தார். அவர் ராஜ தந்திரியாக, அயல்நாட்டு விவகாரங்கள், சர்வதேச சட்டம், வியாபார ஒப்பந்தம் ஆகியவை பற்றி விஷயமறிந்தவராக இருந்தார் என்று மேலே குறிப்பிடப்பட்ட நோக்கீட்டுப் புத்தகம் கூறுகிறது. இதன் காரணமாக, அரண்மனை செயலராக இருந்த சாப்பான் ராஜ்யத்தில் அதிக செல்வாக்குள்ள மனிதராக இருந்தார்.
பத்து வருடங்களுக்கு முன்பு, இளம் யோசியா “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட” ஆரம்பித்திருந்தார். சாப்பான் யோசியாவைவிட வயதில் அதிகம் மூத்தவராக இருந்தபடியால் ஆன்மீக விஷயங்களில் அவருக்கு நல்ல ஆலோசனையைக் கொடுக்க தகுதியுள்ளவராக இருந்தார். உண்மை வணக்கத்தை திரும்ப நிலைநாட்ட யோசியா எடுத்த முதல் நடவடிக்கைகளை இவர் தீவிரமாக ஆதரித்தார்.a—2 நாளாகமம் 34:1-8.
ஆலயத்தைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது, ‘நியாயப்பிரமாண புஸ்தகம்’ கண்டெடுக்கப்பட்டது. சாப்பான் “அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.” அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளைக் கேட்டபோது யோசியா அதிர்ச்சியடைந்தார், அந்தப் புத்தகத்தைக் குறித்து யெகோவாவிடம் விசாரிக்கும்படி தீர்க்கதரிசினியாகிய உல்தாளிடம் சில நம்பகமான ஆட்களின் ஒரு குழுவை அனுப்பி வைத்தார். அந்தக் குழுவில் சாப்பானையும் அவருடைய மகன் அகீக்காமையும் அனுப்பியதிலிருந்து, ராஜா அவர்கள்மீது நம்பிக்கை வைத்திருந்தது தெரிகிறது.—2 இராஜாக்கள் 22:8-14; 2 நாளாகமம் 34:14-22.
சாப்பான் என்ன செய்தார் என்பதை இந்த வசனம் மாத்திரமே குறிப்பிடுகிறது. மற்ற பைபிள் வசனங்களில், அவர் தகப்பன் என்றும் தாத்தா என்றுமே குறிப்பிடப்படுகிறார். சாப்பானின் பிள்ளைகள் எரேமியா தீர்க்கதரிசியோடு நெருங்கிப் பழகியவர்களாய் இருந்தனர்.
அகீக்காம், கெதலியா
நாம் ஏற்கெனவே கவனித்தபடி, சாப்பானின் மகன் அகீக்காம், உல்தாள் தீர்க்கதரிசினியிடம் அனுப்பப்பட்ட குழுவில் இருந்ததாக அவரைப் பற்றி முதல் முறையாக குறிப்பை வாசிக்கிறோம். ஒரு நோக்கீட்டு புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “எபிரெய பைபிளில் அகீக்காமின் பதவி என்ன என்பது கொடுக்கப்படாவிட்டாலும், அவர் உயர் பதவியில் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.”
இந்த நிகழ்ச்சிக்குப்பின் சுமார் 15 வருடங்கள் சென்றபோது, எரேமியாவின் உயிர் ஆபத்திலிருந்தது. எருசலேமை யெகோவா அழிக்க நோக்கங்கொண்டிருக்கிறார் என்று அவர் மக்களை எச்சரித்த போது, “ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்” என்றார்கள். அதற்குப்பின் என்ன நடந்தது? பதிவு தொடர்ந்து இவ்வாறு சொல்லுகிறது: “எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, சாப்பானுடைய குமாரனாகிய அகீக்காம் அவனுக்குச் சகாயமாயிருந்தான்.” (எரேமியா 26:1-24) இது எதைக் காட்டுகிறது? தி ஆங்கர் பைபிள் டிக்ஷ்னரி இவ்வாறு கூறுகிறது: “அகீக்காமுக்கு இருந்த செல்வாக்கிற்கு இந்த சம்பவம் சாட்சியாக இருப்பதோடு, சாப்பானுடைய குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களைப் போலவே அவரும் எரேமியாவுக்கு ஆதரவாக இருந்தார் என்பதையும் காட்டுகிறது.”
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின், பொ.ச.மு. 607-ல் எருசலேமை பாபிலோனியர்கள் அழித்து, பெரும்பாலான ஆட்களை நாடு கடத்திய பிற்பாடு சாப்பானின் பேரனும் அகீக்காமின் மகனுமாகிய கெதலியா மீதமுள்ள யூதர்கள்மீது அதிபதியாக நியமிக்கப்பட்டார். சாப்பானின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களைப் போலவே, இவரும் எரேமியாமீது அக்கறை கொண்டிருந்தாரா? பைபிள் பதிவு இவ்வாறு வாசிக்கிறது: “அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய் . . . அவனோடே தங்கியிருந்தான்.” ஒரு சில மாதங்களுக்குள் கெதலியா கொல்லப்பட்டார், மீதமுள்ள யூதர்கள் எகிப்துக்கு இடம் மாறிச் சென்றபோது எரேமியாவை தங்களோடு அழைத்துச் சென்றார்கள்.—எரேமியா 40:5-7; 41:1, 2; 43:4-7.
கெமரியா, மிகாயா
சாப்பானின் மகன் கெமரியாவும் பேரன் மிகாயாவும் எரேமியா 36-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்களில் முக்கிய பங்கு வகித்தார்கள். அது பொ.ச.மு. 624. யோயாக்கீம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு. எரேமியாவின் செயலர் பாருக்கு, புத்தகத்திலிருந்து எரேமியாவின் வார்த்தைகளை யெகோவாவுடைய ஆலயத்தில் “சாப்பானுடைய குமாரனாகிய கெமரியா என்னும் சம்பிரதியின் அறையிலே” சப்தமாக வாசித்தான். இதனால், “சாப்பானுடைய குமாரனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புஸ்தகத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்க கேட்”டான்.—எரேமியா 36:9-11.
மிகாயா அந்தப் புஸ்தகத்தைப் பற்றி தன் தகப்பனிடமும் மற்ற எல்லா பிரபுக்களிடமும் தெரிவித்தான், அவர்கள் அனைவரும் அதிலுள்ள வார்த்தைகளைக் கேட்க ஆசைப்பட்டார்கள். அதைக் கேட்டு அவர்கள் எப்படி பிரதிபலித்தார்கள்? “அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.” ஆனால் ராஜாவிடம் பேசுவதற்கு முன்பாக அவர்கள் பாருக்கிடம் இந்த ஆலோசனை சொன்னார்கள்: “நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது.”—எரேமியா 36:12-19.
எதிர்பார்த்தபடியே, புஸ்தகத்திலுள்ள செய்திக்கு ராஜா செவிசாய்க்காமல் அதை துண்டுதுண்டாக எடுத்து சுட்டெரித்துவிட்டார். சாப்பானின் மகன் கெமரியா உள்ளிட்ட சில பிரபுக்கள், ‘அந்தச் சுருளைச் சுட்டெரிக்க வேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம் பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களுக்கு அவன் செவிகொடுக்கவில்லை.’ (எரேமியா 36:21-25) எரேமியா—அன் ஆர்க்கியாலஜிக்கல் கம்ப்பேனியன் இவ்வாறு முடிக்கிறது: “யோயாக்கீம் அரசனின் அவையில் எரேமியாவுக்கு கெமரியா முழு ஆதரவாக இருந்தார்.”
எலாசா, யசனியா
பொ.ச.மு. 617-ல் யூதா ராஜ்யத்தை பாபிலோன் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. எசேக்கியேல் தீர்க்கதரிசி உட்பட, ஆயிரக்கணக்கான யூதர்களும், ‘சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளும் . . . சகல தச்சரும் கொல்லரும்’ நாடுகடத்தப்பட்டார்கள். பாபிலோனியரால் சிதேக்கியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட மத்தனியா புதிய சிற்றரசரானார். (2 இராஜாக்கள் 24:12-17) பிற்பாடு சிதேக்கியா பாபிலோனுக்கு ஒரு குழுவை அனுப்பிவைத்தார், அதில் சாப்பானின் மகன் எலாசா இடம் பெற்றிருந்தார். நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்களுக்கு யெகோவாவிடமிருந்து வந்த ஒரு முக்கியமான செய்தி அடங்கிய நிருபத்தை எரேமியா எலாசாவிடம் ஒப்படைத்தார்.—எரேமியா 29:1-3, பொது மொழிபெயர்ப்பு.
ஆகவே, சாப்பானும் அவருடைய மூன்று மகன்களும் இரண்டு பேரன்களும் தங்களுக்கிருந்த செல்வாக்கான பதவிகளை மெய் வணக்கத்தையும் உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும் ஆதரிப்பதற்காக பயன்படுத்தினார்கள் என்று பைபிள் பதிவு காட்டுகிறது. சாப்பானின் மகன் யசனியாவைப் பற்றி என்ன? சாப்பானின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களைப் போல் இல்லாமல், அவன் விக்கிரக ஆராதனை செய்துவந்ததாக தெரிகிறது. எசேக்கியேல் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்த ஆறாவது ஆண்டில் அல்லது பொ.ச.மு. சுமார் 612-ல் தீர்க்கதரிசி எருசலேமிலுள்ள ஆலயத்தில் விக்கிரகங்களுக்கு தூபம் காட்டும் 70 மனிதர்களை தரிசனத்தில் கண்டார். இவர்களில் யசனியாவும் ஒருவன். இவன் மட்டுமே பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறான். இந்தத் தொகுதியில் இவன் பிரபலமானவனாக இருந்திருக்கலாம் என்று இது காட்டுகிறது. (எசேக்கியேல் 8:1, 9-12) தேவபக்தியுள்ள குடும்பத்தில் வளர்க்கப்பட்ட ஒருவர் கட்டாயமாக யெகோவாவின் உண்மை வணக்கத்தாராக இருப்பார் என்று சொல்வதற்கில்லை என்பதை யசனியாவின் மாதிரி காட்டுகிறது. ஒவ்வொரு தனிநபரும் தன் செயல்களுக்கு பொறுப்புள்ளவராக இருக்கிறார்.—2 கொரிந்தியர் 5:10.
சாப்பான் குடும்பத்தின் வம்ச வரலாறு
எருசலேமில் நடந்த சம்பவங்களில் சாப்பானுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஒரு பங்கு இருந்த அந்த சமயத்தில் முத்திரைகளை உபயோகிப்பது யூதாவில் வழக்கமாகிவிட்டது. முத்திரைகள் ஆவணங்களில் கையொப்பமிட அல்லது சாட்சி கையொப்பமிட பயன்படுத்தப்பட்டன. இவை விலைமதிப்புள்ள கற்கள், உலோகம், தந்தம் அல்லது கண்ணாடியால் செய்யப்பட்டன. பொதுவாக முத்திரையின் சொந்தக்காரருடைய பெயர், அவருடைய தந்தை பெயர், சில சமயங்களில் அதன் சொந்தக்காரருடைய பதவியும் அதில் பொறிக்கப்பட்டிருந்தன.
களிமண்ணில் எபிரெய முத்திரைகளின் அடையாள பொறிப்புகள் நூற்றுக்கணக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழங்காலத்திய செதுக்கு சாசனங்களின் எபிரெய கல்வெட்டியல் அறிஞர் பேராசிரியர் நம்மான் ஆவிகாட் இவ்வாறு குறிப்பிட்டார்: “எபிரெய முத்திரை பொறிப்புகள் காணப்படும் கல்வெட்டுகள் மாத்திரமே பைபிளில் உள்ள நபர்களின் பெயர்களை குறிப்பிடுகின்றன.” சாப்பான், அவருடைய குடும்பத்திலுள்ளவர்கள் பெயர்கள் பொறித்த முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளனவா? ஆம், சாப்பான், அவருடைய மகன் கெமரியாவின் பெயர்கள் பக்கம் 19 மற்றும் 21-ல் காணப்படும் முத்திரைகளில் காணப்படுகின்றன.
சாப்பான் குடும்பத்தில் அநேகமாக இன்னும் நால்வரின் பெயர்களும்கூட முத்திரை பதிப்புகளில் இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்—சாப்பானின் தந்தை அத்சலியா; சாப்பானின் மகன் அகீக்காம்; சாப்பானின் மகன் கெமரியா; அத்துடன் கெதலியா; இந்தக் கெதலியா, “அரசவை அதிகாரியாக” இருந்திருக்கலாமென ஒரு முத்திரையிலிருந்து தெரிகிறது. இந்த முத்திரைகளில் நான்காவது, சாப்பானின் பேரன் கெதலியாவுக்குரியதாக கருதப்படுகிறது; ஆனால் அவருடைய தந்தை அகீக்காமைப் பற்றி இதில் குறிப்பிடப்படவில்லை. முத்திரை பதிப்பில் காணப்படும் பதவிப்பெயர், தேசத்தில் அவர் மிக உயர்ந்த பதவியில் இருந்தார் என்பதைக் காட்டுகிறது.
நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
சாப்பானும் அவருடைய குடும்பத்தாரும் செல்வாக்குள்ள தங்கள் பதவியை உண்மை வணக்கத்தையும் உண்மையுள்ள எரேமியாவையும் ஆதரிப்பதற்காக பயன்படுத்திக்கொண்டதில் என்னே சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்கள்! நாமும்கூட நம்முடைய வளங்களையும் செல்வாக்கையும் யெகோவாவின் அமைப்பையும் நம் உடன் வணக்கத்தாரையும் ஆதரிப்பதற்காக பயன்படுத்தலாம்.
பைபிளை ஒழுங்காக வாசிப்பதோடுகூட, சாப்பானையும் அவருடைய குடும்பத்தாரையும் போன்ற பண்டைய யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி முழுவதுமாக ஆராய்ந்து அவர்களோடு பரிச்சயமாவது அதிக மதிப்புள்ளது, அது விசுவாசத்தை உயிரோட்டமுள்ளதாக வைக்க உதவுகிறது. அவர்களும்கூட ‘மேகம் போன்ற திரளான சாட்சிகளின்’ பாகமாக உள்ளனர். இவர்களுடைய விசுவாசத்தை நாம் பின்பற்றலாம்.—எபிரெயர் 12:1.
[அடிக்குறிப்பு]
a யோசியா 25 வயதுள்ளவராக இருந்த போது சாப்பானின் மகன் அகீக்காம் வளர்ந்த ஆளாக இருந்தார் என்பதை எண்ணிப்பார்க்கையில், சாப்பான் யோசியாவைவிட வயதில் மிகவும் மூத்தவராக இருக்க வேண்டும்.—2 இராஜாக்கள் 22:1-3, 11-14.
[பக்கம் 22-ன் பெட்டி]
உல்தாள்—செல்வாக்குள்ள தீர்க்கதரிசினி
ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட “நியாயப்பிரமாண புஸ்தகத்தை” யோசியா ராஜா வாசிக்க கேட்ட போது, அந்தப் புஸ்தகத்தைக் குறித்து ‘யெகோவாவிடத்தில் விசாரிக்கும்படி’ சாப்பானுக்கும் உயர் பதவியிலிருந்த மற்ற நான்கு அதிகாரிகளுக்கும் அவர் கட்டளையிட்டார். (2 இராஜாக்கள் 22:8-20) இந்தக் குழு எங்கே போய் விசாரித்தார்கள்? தீர்க்கதரிசிகளாயும் பைபிள் எழுத்தாளர்களாயும் இருந்த எரேமியாவும், ஒருவேளை நாகூமும் செப்பனியாவும்கூட அந்தச் சமயத்தில் யூதாவில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இந்தக் குழுவோ தீர்க்கதரிசினியான உல்தாளிடம் சென்றது.
ஜெரூசலேம்—அன் ஆர்க்கியாலஜிக்கல் பையாக்ரஃபி என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “இந்த நிகழ்ச்சியைப் பற்றிய சிறப்பான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் ஆண்-பெண் அம்சம் முக்கியமாக இல்லை. ஆண்கள் மாத்திரமே அடங்கிய ஒரு குழு நியாயப்பிரமாண சுருளை எடுத்துக்கொண்டு அதைக் குறித்து விசாரிக்க ஒரு பெண்ணிடம் சென்றது பொருத்தமாக இருக்காது என்று எவரும் கொஞ்சங்கூட நினைக்கவில்லை. அது கர்த்தருடைய வார்த்தையே என்று அவள் அறிவித்தபோது, அந்த விஷயத்தைத் தீர்மானிப்பதற்கு அவளுக்கிருந்த அதிகாரத்தைக் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. பண்டைய இஸ்ரவேலில் பெண்களின் பங்கு என்ன என்பதை மதிப்பிடுகையில் கல்விமான்கள் இந்தச் சம்பவத்தை அடிக்கடி கவனிக்க தவறிவிடுகின்றனர்.” நிச்சயமாகவே, செய்தி யெகோவாவிடமிருந்தே வந்தது.
[பக்கம் 21-ன் படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சாப்பானின் வம்ச விருட்சம்
மெசுல்லாம்
↓
அத்சலியா
↓
சாப்பான்
↓
↓ ↓ ↓ ↓
அகீக்காம் எலாசா கெமரியா யசனியா
↓ ↓
கெதலியா மிகாயா
[பக்கம் 20-ன் படம்]
எரேமியாவின் சுருளை எரிக்க வேண்டாம் என்று கெமரியாவும் மற்றவர்களும் யோயாக்கீமிடம் மன்றாடினார்கள்
[பக்கம் 22-ன் படம்]
யசனியா, சாப்பானின் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தும் விக்கிரகங்களை வணங்குவதாக ஒரு தரிசனத்தில் காணப்பட்டான்
[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]
Courtesy Israel Antiquities Authority
[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]
Courtesy Israel Antiquities Authority