பால்கனில் களிகூருவதற்கான காலம்
அது 1922-ம் வருடம். எர்னஸ்ட் பைபிள் ஸ்டூடன்ட்ஸ்—யெகோவாவின் சாட்சிகள் அப்போது இப்படித்தான் அழைக்கப்பட்டார்கள்—ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டம் ஆஸ்திரியாவிலுள்ள இன்ஸ்ப்ரூக்கில் நடந்துகொண்டிருந்தது. செர்பியா, வாய்வெடினாவிலுள்ள ஆபடினைச் சேர்ந்த ஃப்ரான்ட்ஸ் ப்ரான்ட் என்ற இளைஞரும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தார். யெகோவா என்ற கடவுளுடைய பெயரை பேச்சாளர் சொன்ன மாத்திரத்தில் கலகக்கார கும்பல் காட்டு கூச்சல் போட ஆரம்பித்தது; அது பேச்சாளரை தொடர்ந்து பேசவிடாமல் தடுத்தது; அதனால் கூட்டம் அத்தோடு முடிவடைந்தது. ஆனாலும், ஃப்ரான்ட்ஸ் கேட்ட விஷயம் அவரில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியதால், அவர் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கித்தார். பால்கன் நாடுகள் ஒன்றில் மலைக்க வைக்கும் அளவுக்கு ஆன்மீக வளம் கொழிக்க இந்தச் சிறிய ஆரம்பமே வித்திட்டது.
யுகோஸ்லாவியா என்ற பெயரைக் கேட்டாலே இன்று அநேகருக்கு கண்முன் வந்து நிற்பது போரும் இரத்தக்களரியும்தான். பயங்கரமான ஒட்டுமொத்த கொலை, சோகத்தில் ஆழ்ந்துபோன அகதிகள், தரைமட்டமான வீடுகள், கஷ்டப்படும் அநாதைகள் போன்ற சோக காட்சிகளே அடிக்கடி மனத்திரைக்கு வருகின்றன. 1991 முதல் 1995 வரை பால்கன் தீபகற்பத்தை சூறையாடிய போரினால் ஏற்பட்ட கடும் வேதனையையும் துயரத்தையும் வாய்விட்டுச் சொல்ல முடியாது; கவலையில்லாத, செழிப்பான எதிர்காலத்தை மனிதனால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அது சுக்குநூறாக்கிவிட்டது. அந்தப் போரின் விளைவாக முன்னாள் யுகோஸ்லாவியாவைச் சேர்ந்தவர்கள் பணக் கஷ்டத்திலும் கடும் ஏழ்மையிலும் சிக்கித் தவிக்கிறார்கள்.a
உலகின் இப்பகுதியில் இத்தகைய துயரங்களின் மத்தியில் சந்தோஷமாக வாழ்பவர்களைக் காண்பது அரிது என்றே நினைப்போம். நம்ப முடியாவிட்டாலும் இப்படிப்பட்டவர்கள் அங்கு இருப்பது நிஜம். சொல்லப்போனால், 20-ம் நூற்றாண்டின் முடிவில், அவர்கள் ஒரு நாள் விசேஷித்த விதத்தில் களிகூர்ந்து மகிழ்ந்தார்கள். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட இளம் மனிதர் ஃப்ரான்டஸ் ப்ரான்ட், இந்தக் களிகூருதலுடன் எப்படி சம்பந்தப்பட்டிருந்தார்?
பால்கனில் ஆன்மீக வளர்ச்சி
ஃப்ரான்ட்ஸ் ப்ரான்ட் புதிய சத்தியங்களை கேட்டபோது சிலிர்த்து போனார்; அந்த நற்செய்தியை மற்றவர்களுக்கும் பரப்ப தீர்மானித்தார். ஆஸ்திரியாவின் எல்லைப் புறத்தில் அமைந்திருந்த ஸ்லோவேனியாவிலுள்ள மாரிபார் நகரில் அவருக்கு பார்பர் வேலை கிடைத்தது; தன்னுடைய வாடிக்கையாளர்களிடத்தில் பிரசங்கிக்க ஆரம்பித்தார்; ஷேவிங் செய்யப்படுகையில் அதை அவர்கள் அமைதியாக உட்கார்ந்து கேட்பது வழக்கம். அவருடைய முயற்சிகளின் பலனாக 1920-களின் பிற்பகுதியில் மாரிபாரில் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களின் ஒரு சிறிய தொகுதி உருவானது. ஒரு ரெஸ்டாரன்டில் பைபிள் பேச்சுகள் கொடுக்கப்பட்டன; பிற்பாடு அது நாவி ஸ்வெட் (புதிய உலக) ஸீஃபூட் ரெஸ்டாரன்ட் என பொருத்தமாகவே அழைக்கப்பட்டது.
கொஞ்ச காலத்திற்குப் பின் நாடு முழுவதிலும் நற்செய்தி பரவியது. இந்தளவு பரப்புவதற்கு “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” (படங்களும் ஸ்லைடுகளும் ஒலிப்பதிவுகளும் ஒருசேர இயக்கப்பட்ட எட்டு மணிநேர படக்காட்சி) கைகொடுத்தது. பின்னர் 1930-களில் ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் கடும் துன்புறுத்துதலை எதிர்ப்பட்டபோது யுகோஸ்லாவியாவிலுள்ள சாட்சிகள் தங்கள் நாட்டிற்கு தப்பி வந்த ஜெர்மானிய பயனியர்களால் ஊக்கமளிக்கப்பட்டனர். மலைப்பாங்கான இந்த நாட்டின் மிகவும் ஒதுக்குப் புறமான பகுதிகளுக்கு சென்று பிரசங்கிப்பதற்காக தங்களுடைய தனிப்பட்ட சௌகரியங்களை அவர்கள் தியாகம் செய்தனர். ஆரம்பத்தில் அவர்களுடைய செய்திக்கு அவ்வளவு வரவேற்பு கிடைக்காததுபோல் தோன்றியது. 1940-களின் ஆரம்பத்தில் 150 பிரஸ்தாபிகள் மட்டுமே வெளி ஊழியத்தை அறிக்கை செய்தனர்.
அங்கு 1941-ல் தலைதூக்கிய கடுமையான துன்புறுத்துதல் 1952 வரை நீடித்தது. கடைசியாக, செப்டம்பர் 9, 1953-ல் ஜெனரல் டிட்டோவின் கம்யூனிஸ ஆட்சியில் யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! அந்த வருடத்தில் நற்செய்தியை பிரசங்கிக்கும் பிரஸ்தாபிகள் 914 பேர் இருந்தனர்; அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. 1991-ம் வருடத்திற்குள் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 7,420-ஆக அதிகரித்தது; அந்த ஆண்டு நினைவு ஆசரிப்புக்கு 16,072 பேர் ஆஜராயினர்.
1991-ல் ஆகஸ்ட் 16 முதல் 18 வரை, குரோஷியாவிலுள்ள ஜாக்ரெப்பில் யெகோவாவின் சாட்சிகளுடைய முதல் சர்வதேச மாநாடு நடைபெற்றது. அந்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் 14,684 பேர் கலந்துகொண்டார்கள். நெஞ்சைவிட்டு நீங்காத அந்த மாநாடு, வரவிருக்கும் சோதனைகளை எதிர்ப்பட யெகோவாவின் ஜனங்களை தயார்படுத்தியது. குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கு இடையில் அமைந்திருந்த சோதனை சாவடியைக் கடைசியாக கடக்கவிருந்த வாகனங்களில், தங்கள் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த செர்பிய பிரதிநிதிகளின் பேருந்துகளும் இருந்தன. சோதனை சாவடியைக் கடைசி பேருந்து கடந்ததும் எல்லை மூடப்பட்டது, போரும் ஆரம்பமானது.
யெகோவாவின் ஜனங்கள் களிகூருவதற்கு காரணங்கள்
பால்கனிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு போர் நடந்த வருடங்கள் கடும் சோதனை காலமாக இருந்தன. ஆனாலும் எக்கச்சக்கமான அதிகரிப்பினால் யெகோவா தம் ஜனங்களை ஆசீர்வதித்திருப்பதே அவர்கள் களிகூருவதற்கு காரணத்தை அளிக்கிறது. 1991 முதற்கொண்டு, பண்டைய யுகோஸ்லாவியாவின் பாகமாக இருந்த பகுதியில் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. 2001-ம் ஊழிய ஆண்டு 13,472 என்ற உச்சநிலையை எட்டியது.
முன்னாள் யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் அனைவரின் ஊழியத்தையும் ஜாக்ரெப்பிலும் பெல்கிரேடிலும் (செர்பியா) உள்ள அலுவலகங்கள் கவனித்து வந்தன. பிரஸ்தாபிகளின் அதிகரிப்பாலும் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களாலும் பெல்கிரேடிலும் ஜாக்ரெப்பிலும் மட்டுமல்ல, லுஜுபுல்ஜானாவிலும் (ஸ்லோவேனியா) ஸ்கோப்ஜியிலும்கூட (மாசிடோனியா) புதிய அலுவலகங்களை ஸ்தாபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த அலுவலகங்களில் சுமார் 140 பேர் சேவை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினர்; யெகோவாவிடம் முழுமையான பற்றையும் அன்பையும் காட்டுபவர்கள். இவர்களில் கணிசமான எண்ணிக்கையினர், குரோஷியன், மக்கதோனியன், செர்பியன், ஸ்லோவேனியன் ஆகிய மொழிகளில் பைபிள் படிப்புக்கு உதவும் புத்தகங்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த மொழிகளில் வரும் யெகோவாவின் சாட்சிகளுடைய பெரும்பாலான பத்திரிகைகளும் பிரசுரங்களும் ஆங்கில பதிப்பு பிரசுரிக்கப்படும் அதே சமயத்தில் வெளியாவது எவ்வளவு மகிழ்ச்சி தரும் விஷயம்! அநேகர் ஆறுதலையும் நம்பிக்கையையும் கண்டடைவதற்கு இந்த வெளியீடுகள் கைகொடுத்து உதவுகின்றன.
பிற நாடுகளைச் சேர்ந்த எண்ணிறந்த முழுநேர ஊழியர்கள் சுயநலமின்றி பிரசங்க வேலையில் தரும் ஒத்துழைப்பு களிகூருவதற்கு மற்றொரு காரணத்தை அளிக்கிறது. சமீப வருடங்களில் எண்ணற்ற அழகிய ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டிருப்பது சபைகளின் மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. எனினும் மகிழ்ச்சியில் திளைக்க இன்னுமதிக காரணங்கள் காத்திருந்தன. அது எப்படி?
ஓர் ஒப்பற்ற திட்டம்
‘புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் எப்போதாவது நம் மொழியில் கிடைக்குமா?’ என அநேக பிரஸ்தாபிகள் அடிக்கடி நினைத்ததுண்டு. ஒவ்வொரு வருட மாவட்ட மாநாட்டின் போதும் அதைப் பற்றி அறிவிப்பு செய்யப்படுமா என அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த மொழிகளில் மொழிபெயர்ப்பு குழுக்கள் சில வருடங்களுக்கு முன்புதான் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன, மொழிபெயர்ப்பாளர்களும் வெகு சிலரே இருந்தனர், இச்சூழ்நிலையில் இந்த மாபெரும் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது?
எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பின்பு, ஒரு கூட்டு திட்டத்திற்கு ஆளும் குழு ஒத்துக்கொண்டது. அதன்படி, குரோஷியன், மக்கதோனியன், செர்பியன் மொழிபெயர்ப்பு குழுக்கள் கூட்டாக சேர்ந்து பணியாற்றி, குறிப்புகளை பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் நன்மை பெறலாம். குரோஷியன் குழுவே முன்நின்று செயல்பட வேண்டியிருந்தது.
களிகூருவதற்கான நாள்
ஜூலை 23, 1999, பால்கனிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு நெஞ்சைவிட்டு நீங்கா நாள். “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” என்ற தலைப்பில் பெல்கிரேட், சரஜெவோ (போஸ்னியா-ஹெர்ஸிகோவினா), ஸ்கோப்ஜி, ஜாக்ரெப் ஆகிய இடங்களில் ஒரே சமயத்தில் மாவட்ட மாநாடுகள் நடைபெறவிருந்தன. பெல்கிரேடில் NATO-வின் குண்டுவெடிப்புகளின் காரணமாக எந்தப் பொதுக்கூட்டங்களும் அனுமதிக்கப்படாததால் அங்கு மாநாடு நடத்த முடியுமா என்பது கொஞ்ச காலத்திற்கு சந்தேகமாகவே இருந்தது. இப்படியாக முடியுமா, முடியாதா என்ற பல மாத சந்தேகங்களுக்குப் பின்பு சகோதரர்கள் ஒன்றுகூடிவர முடியும் என தெரிந்த போது அவர்கள் எவ்வளவாய் மகிழ்ச்சியடைந்தனர்! என்றாலும், அவர்களுடைய எதிர்பார்ப்புகளையும் விஞ்சிவிடும் அளவுக்கு காரியங்கள் நடந்தேறின.
வெள்ளிக்கிழமை மதியம், மாநாடு நடைபெற்ற நான்கு நகரங்களிலும் ஒரு விசேஷ அறிவிப்பு செய்யப்பட்டது. மாநாடுகளுக்கு வந்திருந்த 13,497 பிரதிநிதிகளும் அறிவிப்பை அறியும் எதிர்பார்ப்பில் நிசப்தமாக காத்திருந்தார்கள். கடைசியாக பேச்சாளர், குரோஷிய மொழியிலும் செர்பிய மொழியிலும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை வெளியிட்டு, மக்கதோனிய மொழியிலும் மொழிபெயர்ப்பு வேலை மும்முரமாக நடைபெற்று வருவதாக அறிவித்த போது பிரதிநிதிகளால் தங்கள் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் போனது. கரவொலியின் முழக்கத்தால் பேச்சாளர் தன் அறிவிப்பை முடிக்க முடியாமல் போனது. சரஜெவோ மாநாட்டில் அறிவிப்பு செய்யப்பட்டபோது, கூடிவந்திருந்தோர் திகைப்பில் ஆழ்ந்ததால் திடீர் நிசப்தம் நிலவியது. அதைத் தொடர்ந்து எழும்பிய கரவொலி வெகு நேரத்திற்கு நீடித்தது. பெல்கிரேடிலுள்ள அநேகரது கன்னங்களில் ஆனந்த கண்ணீர் உருண்டோடியது. பேச்சாளர் அறிவிப்பை செய்து முடிக்குமுன் இடையிடையே கரவொலி தொடர்ந்தது. அனைவரும் அடைந்த ஆனந்தத்தை என்னவென்று விவரிப்பது!
குரோஷியன், செர்பியன் மொழிகளில் பைபிளை அச்சிடுவதற்கான உரிமையை யெகோவாவின் சாட்சிகள் பெற்றிருந்ததே இந்தப் பரிசை இன்னும் அதிகமாக போற்றுவதற்கு காரணத்தை அளித்தது. ஆகவே, இந்த இரு மொழிகளிலும் உள்ள எபிரெய வேதாகமத்தோடு இந்தக் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பையும் சேர்த்து ஒரே தொகுப்பாக வெளியிட்டனர். அதுமட்டுமல்ல ரோமன் எழுத்து வடிவிலும் சிரிலிக் எழுத்து வடிவிலும் செர்பியன் பைபிள் அச்சிடப்பட்டது.
தாங்கள் பெற்ற அருமையான எல்லா பரிசுகளுக்கும் வழிநடத்துதலுக்கும் நன்றியை வெளிக்காட்டுகிறவர்களாக பால்கனைச் சேர்ந்த இந்த யெகோவாவின் ஜனங்கள் தாவீதின் வார்த்தைகளுக்கு உண்மையிலேயே போற்றுதல் தெரிவிக்கிறார்கள். “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் [யெகோவா] என்னோடே கூட இருக்கிறீர்” என தாவீது பாடினார். தொடர்ந்து எதிர்ப்பட்டுவரும் நெருக்கடிகளின் மத்தியிலும் ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதையே தங்கள் பெலனாக’ கொண்டிருக்க அவர்கள் தீர்மானமாயிருக்கிறார்கள்.—சங்கீதம் 23:4; நெகேமியா 8:10, NW.
[அடிக்குறிப்பு]
a முன்னாள் யுகோஸ்லாவியாவில் போஸ்னியா-ஹெர்ஸிகோவினா, குரோஷியா, மாசிடோனியா, மோன்டெனெக்ரோ, செர்பியா, ஸ்லோவேனியா ஆகிய ஆறு குடியரசுகள் இருந்தன.
[பக்கம் 20-ன் படம்]
மாரிபாரையும் ஸ்லோவேனியாவையும் சேர்ந்த பிரஸ்தாபிகளின் முதல் குழு, தொலைவிடங்களில் பிரசங்கிக்கிறது