வாழ்க்கை சரிதை
போருக்குப் பின் விஸ்தரிப்பில் ஈடுபடும் நல்வாய்ப்பு
ஃபிலிப் எஸ். ஹாஃப்மன் சொன்னபடி
மே, 1945-ல் அப்போதுதான் ஒருவழியாக இரண்டாம் உலகப் போர் நடந்து ஓய்ந்திருந்தது. அந்த வருடம் டிசம்பர் மாதம், யெகோவாவின் சாட்சிகளது உலகளாவிய பிரசங்க வேலையை மேற்பார்வை செய்து வந்த நேதன் எச். நார் டென்மார்க்குக்கு வந்தார்; அவருடன் 25 வயதே நிரம்பிய அவருடைய செயலர் மில்ட்டன் ஜி. ஹென்ஷலும் வந்தார். ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த அந்த வருகைக்காக ஒரு பெரிய ஹால் வாடகைக்கு எடுக்கப்பட்டது. குறிப்பாக இளைஞர்களாகிய எங்களுக்கு, சகோதரர் ஹென்ஷலின் பேச்சு சுவாரஸியமானதாக இருந்தது; ஏனெனில் அவருக்கும் கிட்டத்தட்ட எங்கள் வயதுதான்; அத்துடன், “உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்ற தலைப்பில் அவர் பேசினார்.—பிரசங்கி 12:1.
அந்த வருகையின்போது, உலகளாவிய பிரசங்க வேலையை முன்னேற்றுவிப்பதற்காக பரபரப்பூட்டும் காரியங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதும் அவற்றில் நாங்களும் பங்கேற்க முடியும் என்பதும் எங்களுக்கு தெரிய வந்தது. (மத்தேயு 24:14) உதாரணமாக, மிஷனரி வேலைக்காக இளம் ஆண்களையும் பெண்களையும் பயிற்றுவிக்க ஐக்கிய மாகாணங்களில் ஒரு புதிய பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதில் சேர எங்களுக்கு அழைப்பு கிடைத்தால், “போவதற்கு மட்டுமே டிக்கெட்” வழங்கப்படும் என்று சகோதரர் நார் திட்டவட்டமாக கூறினார்; ஆகவே பட்டம் பெற்ற பிறகு எங்கே அனுப்புவார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாதிருந்தது. இருந்தாலும் எங்களில் சிலர் விண்ணப்பித்தோம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் நடந்தவற்றை விளக்குவதற்கு முன்பு 1919-ல் நான் பிறந்ததிலிருந்து நடந்தவற்றை சொல்கிறேன். போர் தொடங்குவதற்கு முன்பும் போரின் போதும் நிகழ்ந்த எத்தனையோ விஷயங்கள் என் வாழ்வில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின.
பிளாக் ஷீப் அளித்த பைபிள் சத்தியம்
‘ஆண் குழந்தை பிறந்தால் அவன் மிஷனரி ஆகனும்’ என தன் முதல் குழந்தையாகிய என்னை வயிற்றில் சுமந்த அம்மா கடவுளிடம் வேண்டிக்கொண்டார்கள். அம்மாவின் அண்ணன் ஒரு பைபிள் மாணாக்கர்; யெகோவாவின் சாட்சிகள் அப்போதெல்லாம் அப்படித்தான் அழைக்கப்பட்டனர். ஆனால் குடும்பத்தினர் அவரை பிளாக் ஷீப் என்றே நினைத்தனர். கோபன்ஹாகனுக்கு அருகில் எங்கள் வீடு இருந்தது; பைபிள் மாணாக்கரின் வருடாந்தர மாநாடுகள் நடக்கையில் தூரத்தில் வசித்து வந்த எங்கள் தாமஸ் மாமாவை எங்கள் வீட்டில் தங்கும்படி அம்மா அழைப்பார்கள். அவருக்கிருந்த அபார பைபிள் அறிவாலும், தர்க்க ரீதியில் விவாதிக்கும் திறமையாலும் 1930 வாக்கில் அம்மாவும் ஒரு பைபிள் மாணாக்கர் ஆகிவிட்டார்கள்.
அம்மாவுக்கு பைபிள் என்றால் கொள்ளைப் பிரியம். உபாகமம் 6:7-ல் கொடுக்கப்பட்ட கட்டளைக்கு இணங்க, ‘அவர்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும்’ எனக்கும் என் தங்கைக்கும் அதிலிருந்து கற்பித்தார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நான் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்ள ஆரம்பித்தேன். சர்ச்சுகள் போதித்து வந்த அழியாத ஆத்துமா, எரிநரகம் போன்ற விஷயங்களைப் பேசுவது எனக்கு சுவாரஸ்யமாய் இருந்தது. அப்படிப்பட்ட போதகங்கள் தவறானவை என்பதை என்னால் பைபிளிலிருந்து திறம்பட எடுத்துக் காட்டிப் பேச முடிந்தது.—சங்கீதம் 146:3, 4; பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4.
ஒன்றுபட்ட எங்கள் குடும்பம்
1937-ல் கோபன்ஹாகனில் நடந்த மாநாட்டுக்குப் பின்பு, யெகோவாவின் சாட்சிகளது டென்மார்க் கிளை அலுவலக புத்தக கிடங்கில் தற்காலிக உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. வணிக கல்லூரியில் என் படிப்பை அப்போதுதான் முடித்திருந்தேன்; எனக்கென்று எந்தப் பொறுப்பும் இல்லாததால் அந்தக் கிடங்கில் உதவி செய்ய முன்வந்தேன். அங்கு வேலை முடிந்ததும், கிளை அலுவலகத்திற்கு வந்து உதவி செய்யும்படி என்னை கேட்டார்கள். அதற்குப் பிறகு விரைவில் வீட்டிலிருந்து கோபன்ஹாகனிலுள்ள கிளை அலுவலகத்திற்கு மாறிச் சென்றேன்; இத்தனைக்கும் அப்போது நான் முழுக்காட்டப்படவில்லை. முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களோடு தினமும் கூட்டுறவை அனுபவித்ததால் என்னால் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய முடிந்தது. அடுத்த வருடம், அதாவது ஜனவரி 1, 1938-ல் யெகோவா தேவனுக்கு என் ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றேன்.
செப்டம்பர் 1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. பிறகு ஏப்ரல் 9, 1940-ல் ஜெர்மானிய படைகள் டென்மார்க்கை கைப்பற்றின. டென்மார்க் வாசிகளுக்கு ஓரளவு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்ததால் எங்கள் பிரசங்க வேலையை தொடர முடிந்தது.
அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அப்பா உத்தம சாட்சியாக சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பித்தார்; இது எங்கள் குடும்பத்தின் சந்தோஷத்தை முழுமையாக்கிற்று. ஆகவே, நானும் டென்மார்க்கைச் சேர்ந்த இன்னும் நால்வரும் கிலியட் பள்ளியின் எட்டாவது வகுப்பில் கலந்துகொள்ள வருமாறு அழைக்கப்பட்டபோது என் குடும்பத்தார் அனைவரும் என்னை உற்சாகப்படுத்தினர். செப்டம்பர் 1946-ல், நியூ யார்க் மாகாணத்தில் சௌத் லான்சிங்கிற்கு புறம்பே உள்ள அழகிய வளாகத்தில் எங்கள் ஐந்து மாத கால படிப்பு ஆரம்பமானது.
கிலியட்டிலும் பின்னரும் கிடைத்த பயிற்சி
புதுப்புது அரும்பெரும் நண்பர்களை அடைய அற்புத வாய்ப்பளித்தது கிலியட். ஒருநாள் மாலை, இங்கிலாந்திலிருந்து வந்திருந்த ஹெரல்ட் கிங் என்பவரும் நானும் அந்த வளாகத்தைச் சுற்றி காலார நடந்தோம்; அப்போது, பயிற்சிக்குப் பிறகு எங்கே நாங்கள் அனுப்பப்படுவோம் என்பதைப் பற்றி பேசிக்கொண்டோம். “தென் இங்கிலாந்தின் டோவரிலுள்ள செங்குத்தான வெண்முகடுகளை திரும்பவும் பார்ப்பேன் என்று நினைக்கிறேன்” என்றார் ஹெரல்ட். அவர் சொன்னது சரிதான். ஆனால் அதற்கு 17 ஆண்டுகள் எடுத்தன; அவற்றில் நாலரை ஆண்டுகளை அவர் சீன சிறையில் தனிக்காவலில் செலவிட நேர்ந்தது!a
பட்டம் பெற்ற பின்பு, பயணக் கண்காணியாக சேவை செய்வதற்காக அ.ஐ.மா., டெக்ஸஸுக்கு அனுப்பப்பட்டேன்; அது ஆவிக்குரிய உதவியளிக்கும் நோக்குடன் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுக்கு விஜயம் செய்யும் பணியாகும். என்னை அனைவரும் இருகரம் நீட்டி கனிவுடன் வரவேற்றனர். டெக்ஸஸிலுள்ள சகோதரர்களுக்கு, கிலியட் படிப்பை முடித்த கையோடு ஓர் ஐரோப்பிய இளைஞன் வருவது ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் டெக்ஸஸில் ஏழு மாதங்கள் மட்டுமே இருந்தேன்; அதற்குப் பிறகு நியூ யார்க், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது உலக தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். அங்கு, சகோதரர் நார் அலுவலக பணியில் என்னை நியமித்தார்; எல்லா துறைகளிலும் வேலை நடைபெறும் விதத்தைக் கற்றுக்கொள்ளும்படி அறிவுரைகள் வழங்கப்பட்டன. பிறகு டென்மார்க் திரும்பியதும், புரூக்ளினில் செயல்படும் விதமாகவே எல்லாம் நடைபெறுகிறதா என்று உறுதி செய்து கொண்டு, நான் கற்றுக்கொண்டதைப் பின்பற்ற வேண்டியிருந்தது. மிகவும் திறம்பட செயல்படுவதற்கு உலகெங்கும் உள்ள கிளை அலுவலக வேலைகளை ஒருங்கிணைப்பதே அதன் நோக்கம். பிறகு, சகோதரர் நார் என்னை ஜெர்மனிக்கு மாற்றினார்.
கிளை அலுவலகங்களில் அறிவுரைகளைப் பின்பற்றுதல்
ஜெர்மனியிலுள்ள விஸ்பேடனுக்கு ஜூலை 1949-ல் வந்து சேர்ந்தபோது, அநேக ஜெர்மானிய நகரங்கள் சிதைந்து சிதிலங்களாகவே காட்சியளித்தன. 1933-ல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து துன்புறுத்தப்பட்டவர்களே அப்போது பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்தினார்கள். சிலர் சிறைகளுக்கும் சித்திரவதை முகாம்களுக்கும் எட்டு முதல் பத்து வருடங்களுக்கு அல்லது அதற்கும் அதிக வருடங்களுக்கு அனுப்பப்பட்டவர்கள்! அப்படிப்பட்ட யெகோவாவின் ஊழியர்களுடன் சேர்ந்து மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தேன். ஜெர்மன் சரித்திராசிரியர் காப்ரீயேலா யோனான் சொன்ன பின்வரும் விஷயத்தை அவர்களது ஒப்பற்ற முன்னுதாரணம் எனக்கு நினைவூட்டியது: “நாசி சர்வாதிகாரத்தின் கைகளில் சிக்கித் தவித்தபோது, உள்ளத்தில் உறுதி கொண்ட இந்த கிறிஸ்தவர்களின் முன்மாதிரி இல்லையேல், நாம்—ஆஸ்விட்ச் மற்றும் படுகொலைக்குப் பிறகு—இயேசுவின் கிறிஸ்தவ போதகங்களைப் பின்பற்ற முடியுமா என்று சந்தேகிக்க வேண்டியிருந்திருக்கும்.”
கிளை அலுவலகத்தில் என் வேலை, டென்மார்க்கில் செய்து வந்ததைப் போலவே இருந்தது. அதாவது: அமைப்பு சம்பந்தப்பட்ட காரியங்களை புதிய முறையில், ஒரே மாதிரி செய்யும் விதத்தை அறிமுகப்படுத்துவது. ஜெர்மன் சகோதரர்கள், இந்த மாற்றங்களுக்கான உண்மையான காரணத்தை புரிந்துகொண்டவுடன் உற்சாகத்தோடு அதை வரவேற்று பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள்; அதாவது, இந்த மாற்றங்கள், ஏற்கெனவே தாங்கள் பின்பற்றிய முறையை குறைகூறுவதற்காக அல்லாமல், தலைமை அலுவலகத்துக்கும் பல்வேறு கிளை அலுவலகங்களுக்கும் இடையில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காகவே செய்யப்பட்டதை புரிந்து நன்கு ஒத்துழைத்தார்கள்.
1952-ல், ஸ்விட்ஸர்லாந்திலுள்ள பெர்னுக்கு மாறிச் செல்லும்படி குறிப்பிட்டிருந்த ஒரு கடிதம் சகோதரர் நாரின் அலுவலகத்திலிருந்து வந்தது. அங்கு சென்றதும் 1953, ஜனவரி 1 முதல் கிளை அலுவலக கண்காணியாக நியமிக்கப்பட்டேன்.
ஸ்விட்ஸர்லாந்தில் புதுப்புது இன்பங்கள்
ஸ்விட்ஸர்லாந்துக்கு வந்து கொஞ்ச நாட்களுக்குள், எஸ்டாவை ஒரு மாநாட்டில் சந்தித்தேன்; பிறகு விரைவிலேயே நாங்கள் திருமண நிச்சயம் செய்துகொண்டோம். ஆகஸ்ட் 1954-ல், சகோதரர் நார் புரூக்ளினுக்கு வரச் சொன்னார்; அங்கு ஆர்வமூட்டும் ஒரு புதிய வேலையைப் பற்றி எனக்கு விளக்கப்பட்டது. உலகம் முழுவதிலுமுள்ள கிளை அலுவலகங்களின் எண்ணிக்கையிலும் அளவிலும் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டதால் புதுவித ஏற்பாடு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. உலக பிராந்தியம் மண்டலங்களாக பிரிக்கப்பட்டது; ஒவ்வொரு மண்டலத்தையும் ஒரு மண்டல கண்காணி மேற்பார்வை செய்யவிருந்தார். சேவை செய்யும்படி ஐரோப்பாவையும் மத்தியதரைக் கடலை சுற்றியுள்ள பகுதியையும் சேர்த்து இரண்டு மண்டலங்கள் எனக்கு ஒதுக்கப்பட்டன.
சில நாள் பயணமாக புரூக்ளின் சென்று ஸ்விட்ஸர்லாந்து திரும்பியதும் மண்டல ஊழியத்திற்குத் தயாரானேன். நானும் எஸ்டாவும் திருமணம் செய்துகொண்டோம்; ஸ்விட்ஸர்லாந்து கிளை அலுவலகத்தில் அவள் என்னுடன் சேர்ந்து சேவை செய்ய வந்தாள். என் முதல் பயண திட்டத்தில், இத்தாலி, கிரீஸ், சைப்ரஸ், மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்க கடற்கரையோர நாடுகள், ஸ்பெய்ன், போர்ச்சுகல் என மொத்தம் 13 நாடுகளிலுள்ள மிஷனரி இல்லங்களும் கிளைகளும் உட்பட்டிருந்தன. பெர்னில் சில நாட்கள் தங்கிய பிறகு, சோவியத் யூனியன் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளுக்கு மேற்கே இருந்த ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் தொடர்ந்து பயணித்தேன். திருமணமான முதல் ஆண்டில் நம் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவுவதற்காக ஆறு மாதங்களை வெளியிடங்களிலேயே கழித்தேன்.
சூழ்நிலைகளில் மாற்றங்கள்
1957-ல் எஸ்டா கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. குழந்தைகளை உடைய பெற்றோர் கிளை அலுவலகத்தில் பணிபுரியும் ஏற்பாடு இல்லாததால், டென்மார்க்குக்குத் திரும்ப தீர்மானித்தோம்; அங்கு தன்னுடன் வந்து தங்குமாறு என் அப்பா அழைப்பு விடுத்தார். எங்கள் மகள் ராக்கேலையும் என் அப்பாவையும் எஸ்டா கவனித்துக்கொண்டாள்; நானோ, புதிதாக கட்டப்பட்டிருந்த கிளை அலுவலகத்தில் செய்யப்பட்டு வந்த வேலைகளில் உதவினேன். சபை கண்காணிகளுக்கான ராஜ்ய ஊழியப் பள்ளியில் போதனையாளராக சேவித்தேன்; அதே சமயத்தில் மண்டல கண்காணியாகவும் தொடர்ந்து பயணித்து வந்தேன்.
மண்டல ஊழியத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்ததால், எங்கள் மகளைவிட்டு நீண்ட காலம் பிரிய நேர்ந்தது விசனமாக இருந்தது. அதன் விளைவுகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று. ஒரு முறை பாரிஸில் சிறிய அச்சகம் ஒன்றை நிறுவுவதில் சில காலம் செலவிட்டேன். என்னை பார்ப்பதற்கு எஸ்டாவும் ராக்கேலும் ரயிலில் கார்டியூனாருக்கு வந்தனர். கிளை அலுவலகத்தில் சேவை செய்த லேயாப்பால் ஷாங்டாவும் நானும் அவர்களை சந்திக்க சென்றிருந்தோம். ரயில் பெட்டியின் வாசலில் நின்ற ராக்கேல், லேயாப்பாலையும் என்னையும் மாறி மாறி பார்த்தாள். பிறகு லேயாப்பாலைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்!
சூழ்நிலையில் மற்றொரு பெரிய மாற்றம் 45 வயதில் நிகழ்ந்தது. அப்போது முழுநேர ஊழியத்தை நிறுத்திவிட்டு குடும்பத்தை பராமரிப்பதற்காக உலகப்பிரகாரமான வேலையில் சேர்ந்தேன். யெகோவாவின் சாட்சிகளுடைய ஓர் ஊழியனாக நான் பெற்ற அனுபவத்தால், ஏற்றுமதி மேலாளராக எனக்கு வேலை கிடைத்தது. அதே கம்பெனியில் சுமார் ஒன்பது வருடங்கள் நான் வேலை செய்து முடிக்கையில், ராக்கேல் தன் பள்ளிப் படிப்பை முடித்திருந்தாள்; அப்போது ராஜ்ய பிரசங்கிப்பாளர் அதிகம் தேவைப்பட்ட இடத்திற்கு மாறிச் செல்ல கிடைத்த உற்சாகத்திற்கு ஏற்றவாறு செயல்பட தீர்மானித்தோம்.
நார்வேயில் இருந்த வாய்ப்புகளை சீர்தூக்கிப் பார்த்த பிறகு வேலை வாய்ப்பு ஏஜென்ஸிக்கு சென்று எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டேன். வேலை கிடைப்பதாக தெரியவில்லை. 55 வயதான ஒருவருக்கு வேலைக்கான வாய்ப்பு அரிதாகவே இருந்தது. எனினும் ஆஸ்லோவிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொண்டேன்; பின்னர் டிரோபாக் நகருக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தேன்; எப்படியோ வேலை கிடைத்துவிடும் என்று நம்பினேன். ஒரு வேலை கிடைத்தது; அதன் பின்னர் நார்வேயில் ராஜ்ய சேவையை மகிழ்ந்து அனுபவிக்கவும் முடிந்தது.
எங்கள் சபையில் அநேகர் வடக்கே நியமிக்கப்படாத பிராந்தியத்திற்கு சென்று ஊழியம் செய்தது மறக்க முடியாத அனுபவமாய் அமைந்தது. கேம்ப் போட்டு சில நாட்கள் தங்கும் இடங்களில் குடில்களை வாடகைக்கு எடுத்தோம்; தினமும், கம்பீரமான மலைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த பண்ணைகளுக்குச் சென்று அங்கிருந்தவர்களை சந்தித்தோம். சிநேகப்பான்மையான இந்த ஜனங்களிடம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுவது ஓர் இனிய அனுபவமாய் இருந்தது. ஏராளமான பிரசுரங்களை அளித்தோம்; ஆனால் மறுசந்திப்புகளைச் செய்ய அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. என்றாலும் அந்த ஜனங்கள் எங்களை மறக்கவில்லை! நாங்கள் மறுசந்திப்பு செய்ய சென்றபோது, ஏதோ நெடுநாள் காணாமல் போய் திரும்பி வந்த குடும்பத்தாரைப் போல் அங்கிருந்தவர்கள் எங்களை கட்டியணைத்ததை எஸ்டாவும் ராக்கேலும் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். நார்வேயில் மூன்று ஆண்டுகள் வசித்த பின்னர் டென்மார்க்குக்குத் திரும்பினோம்.
குடும்ப வாழ்வில் இன்பங்கள்
சீக்கிரத்திலேயே வைராக்கியமான முழுநேர பயனியராக ஊழியம் செய்து வந்த நில்ஸ் ஹாய்யாருடன் ராக்கேலுக்கு திருமணம் நிச்சயமானது. அவர்களுடைய திருமணத்திற்குப் பின்னர் நில்ஸும் ராக்கேலும் பிள்ளைகள் பிறக்கும் வரை தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்தனர். நில்ஸ் நல்ல கணவனாகவும் சிறந்த தகப்பனாகவும் இருந்திருக்கிறார், தன் குடும்பத்தை உண்மையான அக்கறையோடு பராமரித்து வந்தார். ஒரு நாள் அதிகாலையில் மகனை தன் சைக்கிளில் உட்கார வைத்து சூரிய உதயத்தைப் பார்த்து ரசிக்க கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அவர் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் ஒருவர், அவர்கள் அங்கு போய் என்ன செய்தார்கள் என சிறுவனிடம் கேட்டார். அவன் சொன்ன பதில்: “நாங்க யெகோவாகிட்ட ஜெபம் பண்ணினோம்.”
சில வருடங்களுக்குப் பின்னர், எங்கள் மூத்த பேரப்பிள்ளைகளான பென்யமீனும் நாட்யாவும் முழுக்காட்டுதல் எடுத்ததை நானும் எஸ்டாவும் கண்ணாரக் கண்டோம். அங்கிருந்த நில்ஸ் திடீரென என் முன் வந்து நின்றார். அவர் என்னைப் பார்த்து: “ஆண்கள் அழக்கூடாது” என்றார். சொல்லி வாய்கூட மூடியிருக்க மாட்டார், இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினோம். சிரிப்பையும் அழுகையையும் பகிர்ந்துகொள்ள முடிந்த ஒரு மருமகனைப் பெற்றிருப்பதில்தான் எத்தனை இன்பம்!
வேறு சூழ்நிலைகளையும் அனுசரித்துப் போதல்
மீண்டும் டென்மார்க் கிளை அலுவலகத்தில் சேவை செய்ய வரும்படி எஸ்டாவும் நானும் அழைப்பைப் பெற்றபோது மற்றொரு ஆசீர்வாதம் காத்திருந்தது. என்றாலும் அதற்குள், ஹால்பெக்கில் இதைவிட பெரிய கிளை அலுவலகம் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அந்த கட்டுமான பணியை மேற்பார்வையிடும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது; அந்தப் பணி முழுவதுமே சம்பளமின்றி வாலண்டியர்களால் செய்யப்பட்டது. கடுங்குளிர் காலத்தையும் பொருட்படுத்தாமல் அவர்கள் வேலை செய்ததால் 1982-க்குள் முக்கிய கட்டுமான பணி முடிந்துவிட்டது; பெரிதாக்கப்பட்ட, மேம்பட்ட வசதிகளுள்ள கட்டடங்களுக்கு மாறிச் செல்வது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது!
விரைவில் அலுவலக பணியில் ஈடுபட்டேன்; இது எனக்கு அதிக திருப்தியளித்தது; அதே சமயத்தில் எஸ்டா டெலிபோன் ஆபரேட்டராக வேலை செய்தாள். இருந்தபோதிலும், ஒரு சமயம் அவளுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது; ஒன்றரை வருடம் கழித்து பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என்னதான் கிளை அலுவலக அங்கத்தினர்கள் எங்களை கரிசனையுடன் கவனித்துக் கொண்டாலும், நாங்கள் வெளியே போய் வசிப்பது எல்லாருக்குமே நல்லது என்று தீர்மானித்தோம். எங்கள் மகளும் அவள் குடும்பத்தாரும் இருந்த சபைக்கு மாறிச் சென்றோம்.
இப்போதெல்லாம் எஸ்டாவின் உடல்நலம் அவ்வளவு நன்றாக இல்லை. ஆனாலும், நாங்கள் இருவரும் சேர்ந்து ஊழியம் செய்த காலம் முழுவதிலும் எத்தனையோ சூழ்நிலை மாற்றங்களுக்கு மத்தியிலும் எனக்கு அருமையான துணையாக இருந்து என்னை ஆதரித்திருக்கிறாள் என்று சொன்னால் அது மிகையாகாது. உடல்நலம் குறைவுபட்டாலும், நாங்கள் இருவரும் இன்னும் பிரசங்க வேலையில் எங்களால் முடிந்தளவு ஈடுபட்டு வருகிறோம். என் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்க்கையில், சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளை நன்றிப் பெருக்குடன் நினைத்துப் பார்க்க முடிகிறது: “தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்.”—சங்கீதம் 71:17.
[அடிக்குறிப்பு]
a ஆங்கில காவற்கோபுரம், ஜூலை 15, 1963, பக்கங்கள் 437-42-ஐக் காண்க.
[பக்கம் 24-ன் படம்]
1949-ல் ஜெர்மனி கிளை அலுவலகத்தில் கட்டுமானப் பணி நடக்கையில் பிரசுரங்களை இறக்குதல்
[பக்கம் 25-ன் படம்]
சித்திரவதை முகாம்களுக்குச் சென்று திரும்பும் சாட்சிகளாகிய இவர்களைப் போன்றோரும் என்னுடன் வேலை செய்தனர்
[பக்கம் 26-ன் படங்கள்]
எஸ்டாவுடன் இன்று; அக்டோபர் 1955-ல் பெர்ன் பெத்தேலில் எங்கள் திருமணத்தன்று