அக்கம்பக்கத்தார் எல்லாரும் எங்கே போய்விட்டார்கள்?
“அயலகத்தார் என்ற அந்தஸ்தை இன்றைய சமுதாயம் அங்கீகரிப்பதில்லை.”—பெஞ்சமின் டிஸ்ரேலி, 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டு அரசியல் மேதை.
மக்களுடைய நலனை மேம்படுத்த வயதான கியூபா நாட்டவர் ஒரு புதுமையான வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள்; அதுதான் அண்டை அயலகத்தாரின் வலைப்பின்னல்கள்; இதை தாத்தா பாட்டிமார் குழுக்கள் என அழைக்கிறார்கள். 1997 ஆண்டு அறிக்கை ஒன்றின்படி, கியூபா நாட்டு முதியோரில் ஐந்தில் ஒருவர் இந்தக் குழுக்களில் உறுப்பினர். இவர்களுக்கு இங்கு தோழமையும் ஆதரவும் ஆரோக்கியமாக வாழ நடைமுறை உதவியும் கிடைக்கிறதாம். “தடுப்பூசி திட்டத்தில் சுற்றுவட்டாரத்திலுள்ள குடும்ப மருத்துவர்களுக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் இந்தக் குழுக்களையே அவர்கள் அணுகுகிறார்கள். உதவிக்கரம் நீட்ட தயாராக இருக்கும் திறமையுள்ளவர்களை அவர்களால் இங்கே கண்டுபிடிக்க முடிகிறது.”
ஆனால் உலகின் பல பகுதிகளில், இதுபோன்ற அக்கறை காட்டும் ஆட்கள் அக்கம்பக்கத்தில் இருப்பதில்லை என்பது வேதனையான விஷயம். உதாரணமாக, மேற்கு ஐரோப்பாவில் ஒரு அப்பார்ட்மென்டில் வாழ்ந்து வந்த உல்ஃப்கேங் டர்க்ஸ் என்பவரின் சோகக் கதையைக் கேளுங்கள். சில வருடங்களுக்கு முன்பு த கேன்பரா டைம்ஸ் என்ற செய்தித்தாளில் அவரைப் பற்றி ஒரு செய்தி வெளியானது. அவர் தங்கியிருந்த அப்பார்ட்மென்டில் 17 குடும்பங்கள் வசித்து வந்தார்களாம்; அன்றாட வேலைகளை செய்வதற்கு உல்ஃப்கேங் வெளியே வராததை அவர்கள் கவனித்தபோதிலும், “அவருடைய வீட்டில் ‘பெல்’ அடித்து ஏன் என்று கேட்க யாருக்கும் தோன்றவில்லை.” கடைசியாக அப்பார்ட்மென்டின் சொந்தக்காரர் அங்கே வந்து பார்த்தபோது, “எலும்புக்கூடு ஒன்று டெலிவிஷன் முன்னால் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்.” அந்த எலும்புக்கூட்டின் மடியில் டிசம்பர் 5, 1993 தேதியிட்ட டெலிவிஷன் நிகழ்ச்சி பட்டியல் ஒன்று விரிந்து கிடந்தது. உல்ஃப்கேங்கின் உயிர் பிரிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. அக்கம்பக்கத்தில் வாழ்பவர்களிடையே அக்கறையும் கரிசனையும் இல்லாததற்கு எப்பேர்ப்பட்ட வருத்தகரமான அத்தாட்சி! மற்ற இடங்களைப் போலவே, தான் வசிக்கும் பகுதியும் “அந்நியர் வாழும் சமுதாயமாக” மாறிவிட்டதாக த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை எழுத்தாளர் குறிப்பிட்டதில் ஆச்சரியமேதுமில்லை. உங்கள் வீட்டின் பக்கத்திலும் நிலைமை இப்படித்தான் இருக்கிறதா?
சில புறநகர் பகுதிகளில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இன்னும் பாசமாக பழகுவது உண்மைதான்; சில நகர்புறங்களில்கூட அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அதிக அக்கறை காட்ட முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனால் நகரவாசிகள் பலர் தங்கள் சுற்றுவட்டாரத்திலேயே தனிமையிலும் பயத்திலும் வாழ்கிறார்கள். அந்நியத்தின் சுவர்களுக்குள் அவர்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். எப்படி?
அந்நியத்தின் சுவர்களுக்குள்
பெரும்பாலும் அக்கம்பக்கத்தில் ஆட்கள் வசிக்கத்தான் செய்கிறார்கள். டெலிவிஷன் திரையில் பளிச்சிடும் வெளிச்சம், ஜன்னலில் தோன்றி மறையும் நிழல்கள், ஆன், ஆஃப் செய்யப்படும் விளக்குகள், போகிற வருகிற கார்களின் சப்தம், வராந்தாவில் கேட்கும் காலடி ஓசைகள், வாசல் கதவுகள் பூட்டப்படுகிற திறக்கப்படுகிற சப்தம்—இவையெல்லாம் அக்கம்பக்கத்தில் மக்கள் “உயிருடனிருப்பதற்கான” அடையாளங்கள். ஆனால் அருகருகே வசிப்பவர்கள் அந்நியத்தின் சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும்போது அல்லது அவசர கதியில் சுழலும் உலகில் ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது நட்புணர்வு என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போகிறது. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பழக வேண்டிய அவசியமில்லை அல்லது எந்த வகையிலும் அவர்களை சார்ந்து வாழ வேண்டியதில்லை என மக்கள் நினைக்கலாம். ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஹெரால்ட் சன் இவ்வாறு கூறுகிறது: “வீட்டைச் சுற்றி நாலா புறமும் வசிப்பவர்களே ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். ஆகவே பெரும்பாலும் அவர்களுக்கு எந்த சமுதாய பொறுப்புணர்வும் இல்லை. கூடிப்பழகும் இயல்பற்றவர்களை அசட்டை செய்துவிடுவது அல்லது அவர்களை தவிர்த்துவிடுவது இப்போது வெகு சுலபமாகிவிடுகிறது.”
இதைக் குறித்து ஆச்சரியப்பட அவசியமில்லை. ‘தற்பிரியர்’ தழைத்தோங்கும் இவ்வுலகில் தன்னலமான வாழ்க்கை முறையின் விளைவுகளை சமுதாயம் அறுவடை செய்கிறது. (2 தீமோத்தேயு 3:2) இதனால் எங்குமுள்ள மக்கள் தனிமையில் ஒதுங்கி வாழ்கிறார்கள். ஒதுங்கி வாழ்வதால் அவநம்பிக்கை எழுகிறது; அதுவும் நாம் வாழும் பகுதியில் வன்முறையும் குற்றச்செயலும் அச்சுறுத்தி வந்தால் கேட்கவே வேண்டாம். அந்த அவநம்பிக்கையால் விரைவில் மனிதாபிமானம் மரத்துப்போகிறது.
நீங்கள் வாழும் சமுதாயம் எப்படியிருந்தாலும், நல்ல அக்கம்பக்கத்தார் சமுதாயத்தின் சொத்துக்கள் என்பதை நீங்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள். பொதுவான ஓர் இலக்கை அடைய மக்கள் உழைக்கையில் எத்தனையோ காரியங்களை சாதிக்க முடியும். நல்ல அக்கம்பக்கத்தார் ஓர் ஆசீர்வாதமாகவும் இருக்க முடியும். இது எப்படி சாத்தியம் என்பதை அடுத்த கட்டுரை விளக்கும்.