உங்கள் சகிப்புத்தன்மையோடு தேவபக்தியைக் கூட்டுங்கள்
‘உங்கள் விசுவாசத்தோடு . . . சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடு தேவபக்தியையும் . . . கூட்டுங்கள்.’—2 பேதுரு 1:5-7, NW.
1, 2. (அ) ஒரு பிள்ளையிடம் எப்படிப்பட்ட வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது? (ஆ) ஆவிக்குரிய வளர்ச்சி எந்தளவு முக்கியமானது?
பிள்ளைக்கு வளர்ச்சி முக்கியம், ஆனால் சரீர வளர்ச்சி மட்டுமே போதாது. மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும்கூட பிள்ளையிடம் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. காலப்போக்கில் பிள்ளை அதன் குழந்தைத்தனமான செயல்களை விட்டுவிட்டு ஒரு ஆணாக அல்லது பெண்ணாக முழு வளர்ச்சி அடைகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இதைக் குறித்துத்தான் இப்படி எழுதினார்: “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.”—1 கொரிந்தியர் 13:11.
2 ஆவிக்குரிய வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான குறிப்பை பவுலின் வார்த்தைகள் தெரிவிக்கின்றன. ஆவிக்குரிய குழந்தைகளாக இருக்கும் கிறிஸ்தவர்கள் ‘புரிந்துகொள்ளும் ஆற்றலில் முழு வளர்ச்சி’ அடைந்தவர்களாக ஆக வேண்டும். (1 கொரிந்தியர் 14:20, NW) அவர்கள் ‘கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக’ வளர கடுமையாக முயல வேண்டும். அப்போதுதான் அவர்கள் “குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்” இருப்பார்கள்.—எபேசியர் 4:11, 14.
3, 4. (அ) ஆவிக்குரிய விதத்தில் பூரண வளர்ச்சி அடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) நாம் என்ன தெய்வீக பண்புகளை வெளிக்காட்ட வேண்டும், அவை எந்தளவு முக்கியமானவை?
3 நாம் எவ்வாறு ஆவிக்குரிய விதத்தில் பூரண வளர்ச்சி அடையலாம்? சரீர வளர்ச்சி சாதாரண சூழ்நிலைகளில் கிட்டத்தட்ட இயல்பாகவே நடக்கிறது, ஆனால் ஆவிக்குரிய வளர்ச்சியோ அதற்காக விசேஷ முயற்சி எடுப்பதை தேவைப்படுத்துகிறது. கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்று அதன்படி நடக்கையில் ஆவிக்குரிய வளர்ச்சி ஆரம்பமாகிறது. (எபிரெயர் 5:14; 2 பேதுரு 1:3) இது தெய்வீக பண்புகளை வெளிக்காட்ட நமக்கு உதவுகிறது. சரீர வளர்ச்சியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு செயல்கள் ஒரேசமயத்தில் நடைபெறுவது போலவே பல்வேறு தெய்வீக பண்புகளும் பொதுவாக ஒரேசமயத்தில் வளர்கின்றன. அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஊக்கமான முயற்சி செய்து, உங்கள் விசுவாசத்தோடு நற்குணத்தையும், உங்கள் நற்குணத்தோடு அறிவையும், உங்கள் அறிவோடு தன்னடக்கத்தையும், உங்கள் தன்னடக்கத்தோடு சகிப்புத்தன்மையையும், உங்கள் சகிப்புத்தன்மையோடு தேவபக்தியையும், உங்கள் தேவபக்தியோடு சகோதர பாசத்தையும், உங்கள் சகோதர பாசத்தோடு அன்பையும் கூட்டுங்கள்.”—2 பேதுரு 1:5-7, NW.
4 பேதுரு குறிப்பிடும் ஒவ்வொரு பண்பும் முக்கியம், எதையுமே ஒதுக்கிவிட முடியாது. “இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது” என்றும் அவர் சொல்கிறார். (2 பேதுரு 1:8) இப்போது நமது சகிப்புத்தன்மையோடு தேவபக்தியையும் கூட்டுவதன் அவசியத்தைப் பற்றி சிந்திப்போம்.
சகிப்புத்தன்மைக்கான அவசியம்
5. நமக்கு ஏன் சகிப்புத்தன்மை தேவை?
5 பேதுரு, பவுல் ஆகிய இருவருமே தேவபக்தியை சகிப்புத்தன்மையோடு இணைத்துப் பேசினர். (1 தீமோத்தேயு 6:11, NW) சகிப்புத்தன்மை என்பது கஷ்டத்தை தாங்கிக்கொண்டு உறுதியாக இருப்பதை மட்டுமே குறிப்பதில்லை. சோதனைகளை, தடைகளை, சபலங்களை, அல்லது துன்புறுத்துதல்களை எதிர்ப்படுகையில் நம்பிக்கை இழக்காமல் பொறுமையாக, தைரியமாக, உறுதியாக இருப்பதையும் அது குறிக்கிறது. நாம் “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய்” நடப்பதால் துன்புறுத்துதலை எதிர்பார்க்கிறோம். (2 தீமோத்தேயு 3:12) யெகோவாவிடம் அன்பிருப்பதை நிரூபிப்பதற்கும் இரட்சிப்புக்கு தேவையான பண்புகளை வளர்ப்பதற்கும் நாம் சகித்திருக்க வேண்டும். (ரோமர் 5:3-5, NW; 2 தீமோத்தேயு 4:7, 8; யாக்கோபு 1:3, 4, 12, NW) சகிப்புத்தன்மை இல்லாவிட்டால் நம்மால் நித்திய ஜீவனைப் பெற முடியாது.—ரோமர் 2:6, 7, NW; எபிரெயர் 10:36, NW.
6. முடிவுவரை சகித்திருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
6 நாம் எவ்வளவு நன்றாக ஆரம்பித்திருந்தாலும் இறுதிவரை சகித்திருக்கிறோமா என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது. “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே [“சகித்திருப்பவனே,” NW] இரட்சிக்கப்படுவான்” என இயேசு சொன்னார். (மத்தேயு 24:13) ஆம், நாம் முடிவுவரை—நம் வாழ்நாள் காலம் முடியும் வரை அல்லது இந்த பொல்லாத ஒழுங்குமுறை முடியும் வரை—சகித்திருக்க வேண்டும். இதில் எந்த முடிவை சந்திக்க நேரிட்டாலும், நாம் கடவுளுக்கு உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்ள வேண்டும். என்றாலும் சகிப்புத்தன்மையோடு தேவபக்தியை கூட்டாவிட்டால், நம்மால் யெகோவாவை பிரியப்படுத்த முடியாது, நித்திய ஜீவனையும் பெற முடியாது. ஆனால் தேவபக்தி என்பது என்ன?
தேவபக்தியின் அர்த்தம்
7. தேவபக்தி என்பது என்ன, அது நம்மை என்ன செய்யும்படி தூண்டுகிறது?
7 பைபிளில் தேவபக்தி என்ற வார்த்தை, யெகோவா தேவனின் சர்வலோகப் பேரரசுரிமைக்கு உண்மை தவறாதிருப்பதால் அவருக்குக் காட்டும் பக்தியை, செலுத்தும் வணக்கத்தை, செய்யும் சேவையை முக்கியமாக குறிக்கிறது. யெகோவாவை பொறுத்தமட்டில், தேவபக்தியை வெளிக்காட்டுவதற்கு அவரையும் அவரது வழிகளையும் பற்றி திருத்தமாக அறிந்துகொள்ள வேண்டும். கடவுளை தனிப்பட்ட விதமாக, நெருக்கமாக அறிய நாம் விரும்ப வேண்டும். இது அவரிடம் இருதயப்பூர்வ பிணைப்பை வளர்த்துக்கொள்ள நம்மை தூண்டும்; இப்பிணைப்பு நம் செயல்களிலும் வாழ்க்கை முறையிலும் வெளிக்காட்டப்படும். யெகோவாவின் வழிகளைப் பின்பற்றி அவரது குணங்களையும் பண்புகளையும் வெளிக்காட்டுவதன் மூலம் முடிந்த மட்டும் அவரைப் போலிருக்க நாம் விரும்ப வேண்டும். (எபேசியர் 5:1) சொல்லப்போனால், நாம் செய்யும் அனைத்திலும் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு தேவபக்தி நம்மை தூண்டுகிறது.—1 கொரிந்தியர் 10:31.
8. தேவபக்தியும் தனிப்பட்ட பக்தியும் எவ்வாறு நெருங்கிய தொடர்புடையவை?
8 உண்மையான தேவபக்தியை வெளிக்காட்ட, நாம் யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்; நம் இருதயங்களில் அவருக்குரிய இடத்தை வேறு எவருக்கும் அல்லது எதற்கும் அளிக்கக்கூடாது. படைப்பாளராக நம்மிடம் தனிப்பட்ட பக்தியை எதிர்பார்க்க அவருக்கு உரிமை உண்டு. (உபாகமம் 4:24, NW; ஏசாயா 42:8, NW) இருந்தாலும் தம்மை வணங்கும்படி யெகோவா நம்மை வற்புறுத்துவதில்லை. நாம் மனமுவந்து பக்தி காட்டுவதையே அவர் விரும்புகிறார். திருத்தமான அறிவின் அடிப்படையில் அவரிடமுள்ள அன்பே, நம் வாழ்க்கையை சுத்திகரிக்கவும், நிபந்தனையின்றி நம்மையே அவருக்கு ஒப்புக்கொடுக்கவும், பின் அதற்கேற்ப வாழவும் நம்மைத் தூண்டுகிறது.
கடவுளுடன் பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
9, 10. நாம் எவ்வாறு கடவுளுடன் நெருங்கிய பந்தத்தை வளர்க்கவும், காக்கவும் முடியும்?
9 கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாக முழுக்காட்டுதல் எடுத்த பிறகு, அவரோடு இன்னும் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கும் யெகோவாவை உண்மையோடு சேவிப்பதற்குமான நம் விருப்பம், தொடர்ந்து அவரது வார்த்தையைப் படிக்கவும் தியானிக்கவும் நம்மை தூண்டுகிறது. யெகோவாவின் ஆவி நம் மனங்களிலும் இருதயங்களிலும் செயல்பட நாம் அனுமதிக்கையில், அவர் மீதுள்ள அன்பு பெருகுகிறது. அவரோடுள்ள பந்தமே நம் வாழ்க்கையில் எப்போதும் முதல் இடத்தைப் பெறுகிறது. யெகோவாவை நம் உற்ற நண்பராக கருதுகிறோம், எல்லா சந்தர்ப்பங்களிலும் அவரை பிரியப்படுத்த விரும்புகிறோம். (1 யோவான் 5:3) கடவுளுடனுள்ள இனிய பந்தத்தால் வரும் இன்பம் மேன்மேலும் அதிகரிக்கிறது; அவர் அன்போடு நமக்கு அறிவுரை வழங்குவதற்கும் தேவைப்படுகையில் நம்மை திருத்துவதற்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.—உபாகமம் 8:5.
10 யெகோவாவுடன் உள்ள மதிப்புமிக்க பந்தத்தை பலப்படுத்த நாம் தொடர்ந்து முயற்சி செய்யாவிட்டால் அது பலவீனமடைய வாய்ப்புண்டு. அப்படி நேர்ந்தால் எவ்விதத்திலும் அது கடவுளுடைய குற்றமாகாது; ஏனெனில் “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.” (அப்போஸ்தலர் 17:27) யெகோவா, தம்மிடம் நெருங்கி வருவதை கஷ்டமானதாக ஆக்காததற்கு நாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்! (1 யோவான் 5:14, 15) எனினும் யெகோவாவுடன் நெருங்கிய பிணைப்பை காத்துக்கொள்ள நாம் கடும் முயற்சி எடுக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தம்மிடம் நெருங்கிவர அவர் உதவுகிறார்; தேவபக்தியை வளர்த்துக்கொள்ளவும் காத்துக்கொள்ளவும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அளிக்கிறார். (யாக்கோபு 4:8) இந்த அன்பான உதவிகளை நாம் எவ்வாறு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்?
ஆவிக்குரிய விதத்தில் பலமாக இருங்கள்
11. நமது தேவபக்தியின் சில வெளிக்காட்டுகள் யாவை?
11 கடவுளிடமுள்ள ஆழமான அன்பு, நமக்கு எந்தளவு தேவபக்தி உள்ளதென்பதை வெளிக்காட்ட தூண்டும்; இது பவுலின் பின்வரும் புத்திமதிக்கு இசைவாக இருக்கும்: “நீ கடவுள்முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்; உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.” (2 தீமோத்தேயு 2:15, பொது மொழிபெயர்ப்பு) இதற்கு, தவறாமல் பைபிள் படிப்பதும் கூட்டங்களுக்கு செல்வதும் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதும் அவசியம். ‘இடைவிடாமல் ஜெபம் பண்ணுவதன்’ வாயிலாகவும் நாம் யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கி இருக்கலாம். (1 தெசலோனிக்கேயர் 5:17) இவை, நமது தேவபக்தியின் அர்த்தமுள்ள வெளிக்காட்டுகள். இவற்றில் எதைப் புறக்கணித்தாலும் ஆவிக்குரிய விதத்தில் நோய்வாய்ப்படுவோம், அதனால் சாத்தானின் கண்ணிகளிலும் எளிதில் சிக்கிக்கொள்வோம்.—1 பேதுரு 5:8.
12. சோதனைகளை நம்மால் எப்படி வெற்றிகரமாக சமாளிக்க முடியும்?
12 ஆவிக்குரிய விதத்தில் பலமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதுகூட, நாம் எதிர்ப்படும் அநேக சோதனைகளை சமாளிக்க உதவும். நம்மை கடுமையாக பரீட்சிக்கும் விதங்களில் சோதனைகள் வரலாம். அக்கறையின்மை, எதிர்ப்பு, துன்புறுத்துதல் ஆகியவை நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள், உறவினர்கள், அல்லது அக்கம்பக்கத்தார் ஆகியவர்களிடமிருந்து வருகையில் சகிப்பது மிகவும் கடினமாகிறது. கிறிஸ்தவ நியமங்களை விட்டுக்கொடுப்பதற்கான சூட்சுமமான அழுத்தங்களை வேலை செய்யுமிடத்தில் அல்லது பள்ளியில் நாம் சந்திக்கலாம். உற்சாகமிழத்தல், வியாதி, மனச்சோர்வு ஆகியவை உடலளவில் நம்மை பலவீனப்படுத்தலாம்; இதனால் விசுவாசப் பரீட்சைகளை சமாளிப்பது இன்னுமதிக கடினமாகலாம். ஆனால் நாம் ‘பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக’ நிலைத்திருந்து, ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருந்தால்’ எல்லாவித சோதனைகளையும் வெற்றிகரமாக சமாளிக்க முடியும். (2 பேதுரு 3:11, 12) மேலும் அவ்வாறு செய்வதில் மகிழ்ச்சியைக் காத்துக்கொண்டு, கடவுளுடைய ஆசீர்வாதம் நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்க முடியும்.—நீதிமொழிகள் 10:22.
13. நாம் தொடர்ந்து தேவபக்தியை வெளிக்காட்ட என்ன செய்ய வேண்டும்?
13 தேவபக்தி உள்ளவர்களை சாத்தான் குறிவைத்து தாக்குவது உண்மையென்றாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை. ஏன்? ஏனென்றால் யெகோவா “தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்க . . . அறிந்திருக்கிறார்.” (2 பேதுரு 2:9) சோதனைகளை சகித்துக்கொள்ளவும் அப்படிப்பட்ட இரட்சிப்பைப் பெறவும் நாம், “அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்”பண்ண வேண்டும். (தீத்து 2:12) கிறிஸ்தவர்களாக நாம், உலகப்பிரகாரமான இச்சைகளோடும் செயல்களோடும் சம்பந்தப்பட்ட எந்த பலவீனமும் நம் தேவபக்திக்கு ஆபத்தாகி அதை அழித்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும். இந்த அச்சுறுத்தல்கள் சிலவற்றை நாம் சிந்திக்கலாம்.
தேவபக்திக்கு எதிரான அச்சுறுத்தல்களைக் குறித்து ஜாக்கிரதை
14. பொருளாசை என்ற கண்ணியால் கவரப்படுகையில் நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்?
14 அநேகருக்கு பொருளாசை ஒரு கண்ணி. ‘தேவபக்தியை [பொருள் சம்பந்தமான] ஆதாயத்தொழிலென்று எண்ணி’ நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம்; இவ்வாறு உடன் விசுவாசிகள் நம்மீது வைக்கும் நம்பிக்கையை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள துணியலாம். (1 தீமோத்தேயு 6:5) கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க முடியாது என தெரிந்தும் வசதிபடைத்த ஒரு கிறிஸ்தவரை கடன் கேட்டு வற்புறுத்துவதில் தப்பில்லை என நாம் தப்புக்கணக்கும் போடலாம். (சங்கீதம் 37:21) ஆனால் பணமும் பொருளும் சம்பாதிப்பது அல்ல, தேவபக்தியே ‘இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளது.’ (1 தீமோத்தேயு 4:8) ‘உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றையும் கொண்டுபோகவும் முடியாது’ என்பதால், ‘போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியை’ இன்னுமதிகமாய் வெளிக்காட்டுவோமாக; மேலும், ‘உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருப்போமாக.’—1 தீமோத்தேயு 6:6-11.
15. இன்பத்திற்கான நாட்டம் நம் தேவபக்திக்கு இடமளிக்காமல் அதை அச்சுறுத்தும்போது என்ன செய்யலாம்?
15 இன்பத்திற்கான நாட்டம் தேவபக்திக்கு இடமளிக்காது. இந்த விஷயத்தில் உடனடியாக சில மாற்றங்களை நாம் செய்ய வேண்டியிருக்குமோ? உடற்பயிற்சியினாலும் பொழுதுபோக்கினாலும் சில நன்மைகள் கிடைப்பது உண்மையே. இருந்தாலும் நித்திய ஜீவனோடு ஒப்பிட அவை அற்பமானவை. (1 யோவான் 2:25) இன்று அநேகர் “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும்” இருக்கிறார்கள், ஆகவே நாம் அப்படிப்பட்டவர்களை விட்டு விலக வேண்டும். (2 தீமோத்தேயு 3:4, 5) தேவபக்திக்கு முக்கியத்துவம் தருபவர்கள், ‘நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கிறார்கள்.’—1 தீமோத்தேயு 6:19.
16. கடவுளுடைய நீதியான தராதரங்களுக்கு ஏற்ப வாழவிடாதபடி பாவமுள்ள ஆசைகள் எவ்வாறு சிலரை தடுக்கலாம், இந்த ஆசைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம்?
16 மதுபானம், போதைப்பொருள், ஒழுக்கக்கேடு, பாவமுள்ள ஆசைகள் ஆகியவை நம் தேவபக்தியை அழிக்கும். இவற்றிற்கு இடமளிப்பது, கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களுக்கு ஏற்ப வாழ நம்மை அனுமதிக்காது. (1 கொரிந்தியர் 6:9, 10; 2 கொரிந்தியர் 7:1) பவுலும்கூட தன் பாவமுள்ள மாம்சத்தோடு சதா போராட வேண்டியிருந்தது. (ரோமர் 7:21-25) தவறான ஆசைகளை விட்டொழிக்க நாம் கடும் நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். முதலாவதாக ஒழுக்க சுத்தமுள்ளவர்களாக இருக்க தீர்மானமாயிருக்க வேண்டும். “விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்” என பவுல் சொல்கிறார். (கொலோசெயர் 3:5) அப்படிப்பட்ட பாவமுள்ள செயல்களைக் குறித்ததில் நம் அவயவங்களை அழிப்பதற்கு மன உறுதி தேவை. கடவுளுடைய உதவிக்காக ஊக்கமாய் ஜெபிப்பது தவறான ஆசைகளை விட்டொழிக்க நமக்கு உதவும்; அதோடு இந்தப் பொல்லாத உலகில் நீதியையும் தேவபக்தியையும் நாட உதவும்.
17. நாம் சிட்சையை எப்படி கருத வேண்டும்?
17 உற்சாகமிழத்தல் நம் சகிப்புத்தன்மையை பலவீனப்படுத்தி, தேவபக்திக்கு ஆபத்தை விளைவிக்கலாம். யெகோவாவின் ஊழியர்கள் அநேகர் அவ்வப்போது உற்சாகமிழந்திருக்கிறார்கள். (எண்ணாகமம் 11:11-15; எஸ்றா 4:4; யோனா 4:3) அதுவும் நாம் உற்சாகமிழந்திருக்கையில், மற்றவர்கள் நம்மை புண்படுத்திவிட்டார்கள் அல்லது கடுமையாக கண்டித்துவிட்டார்கள் என்ற மனக்கசப்பும் ஏற்பட்டால் அழிவுக்குரிய பாதிப்பு உண்டாகலாம். இருந்தாலும், கண்டிப்பதும் திருத்துவதும் நம்மீது கடவுளுக்கு இருக்கும் அக்கறைக்கும் அன்பிற்குமே அத்தாட்சி. (எபிரெயர் 12:5-7, 10, 11) சிட்சையை வெறுமனே தண்டனையாக அல்ல, ஆனால் நீதியின் பாதையில் நம்மை பயிற்றுவிப்பதற்கான வழியாக நாம் கருத வேண்டும். நமக்கு மனத்தாழ்மை இருந்தால் ஆலோசனையை உயர்வாக மதித்து ஏற்றுக்கொள்வோம்; “போதக சிட்சையே ஜீவவழி” என்பதை உணருவோம். (நீதிமொழிகள் 6:23) இது, தேவபக்தியை வெளிக்காட்டுவதில் நல்ல ஆன்மீக முன்னேற்றம் செய்ய நமக்கு உதவும்.
18. மற்றவர்களால் மனம் புண்படுகையில் நம் பொறுப்பு என்ன?
18 மனஸ்தாபங்கள் ஏற்படுவதும் மனம் புண்படுவதும் நம் தேவபக்திக்கு சவாலாக இருக்கலாம். இவை கவலையை ஏற்படுத்தலாம்; அல்லது ஆவிக்குரிய சகோதர சகோதரிகளிலிருந்து தங்களையே தனிமைப்படுத்திக் கொள்ளும் ஞானமற்ற போக்கைப் பின்பற்றும்படி சிலரை தூண்டலாம். (நீதிமொழிகள் 18:1) ஆனால் மற்றவர்கள்மீது மனக்கசப்பையோ வன்மத்தையோ வளர்த்துக்கொள்வது, யெகோவாவுடன் உள்ள நம் உறவை பெரிதும் பாதிக்கும் என்பதை நினைவில் வைப்பது நல்லது. (லேவியராகமம் 19:18) சொல்லப்போனால், “தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.” (1 யோவான் 4:20, பொ.மொ.) மற்றவர்களோடு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலைப் பிரசங்கத்தில் இயேசு வலியுறுத்தினார். “நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” என கேட்டுக்கொண்டிருந்தோரிடம் அவர் சொன்னார். (மத்தேயு 5:23, 24) அன்பற்ற சொற்கள் அல்லது செயல்கள் ஏற்படுத்திய புண்ணை ஆற்ற, மன்னிப்பு கேட்பது உதவியாக இருக்கலாம். மன்னிப்புக் கேட்டு, நம் பங்கில் தவறு இருந்ததை ஒப்புக்கொள்கையில், உறவில் ஏற்பட்ட விரிசல் சரிப்படுத்தப்படலாம், மீண்டும் சமாதானம் உண்டாகலாம். பிரச்சினைகளை தீர்க்க இன்னொரு ஆலோசனையையும் இயேசு கொடுத்தார். (மத்தேயு 18:15-17) பிரச்சினைகளை தீர்க்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுகையில் நாம் எவ்வளவு ஆனந்தமடைகிறோம்!—ரோமர் 12:18; எபேசியர் 4:26, 27.
இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
19. இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றுவது ஏன் அவ்வளவு முக்கியம்?
19 நமக்கு நிச்சயமாகவே சோதனைகள் வரும், ஆனால் அவை நித்திய ஜீவனுக்கான ஓட்டத்தில் நம் கவனத்தைத் திசை திருப்ப வேண்டியதில்லை. யெகோவாவால் சோதனையிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும் என்பதை நினைவில் வையுங்கள். “எந்தச் சுமையையும் . . . தள்ளிவிட்டு” ‘நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு [“சகிப்புத்தன்மையோடு,” NW] ஓடுகையில்,’ ‘நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போமாக.’ (எபிரெயர் 12:1-3, பொ.மொ.) இயேசுவின் முன்மாதிரியை உன்னிப்பாக கவனித்து, சொல்லிலும் செயலிலும் அவரைப் பின்பற்ற முயலுவது, தேவபக்தியை வளர்த்துக்கொள்ளவும் இன்னும் முழுமையாக அதை வெளிக்காட்டவும் நமக்கு உதவும்.
20. சகிப்புத்தன்மையையும் தேவபக்தியையும் காட்டுவதால் வரும் பலன்கள் என்ன?
20 நமது இரட்சிப்பை நிச்சயப்படுத்த உதவுவதில் சகிப்புத்தன்மையும் தேவபக்தியும் சேர்ந்து செயல்படுகின்றன. இந்த மதிப்புமிக்க பண்புகளை வெளிக்காட்டுவதன் மூலம் நாம் தொடர்ந்து கடவுளுக்கு உண்மையோடு பரிசுத்த சேவை செய்யலாம். நாம் சகித்திருப்பதாலும் தேவபக்தியை வெளிக்காட்டுவதாலும் யெகோவாவின் கனிவான அன்பையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிப்போம்; ஆகவே சோதனையின் மத்தியிலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். (யாக்கோபு 5:11, NW) மேலும், “உங்கள் சகிப்புத்தன்மையால் உங்கள் ஆத்துமாக்களை காத்துக்கொள்வீர்கள்” என இயேசுவே நமக்கு உறுதியளிக்கிறார்.—லூக்கா 21:19.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்
• சகிப்புத்தன்மை ஏன் முக்கியமானது?
• தேவபக்தி என்பது என்ன, அது எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது?
• நாம் எவ்வாறு கடவுளுடன் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் அதைக் காத்துக்கொள்ளவும் முடியும்?
• நம் தேவபக்திக்கு வரும் சில அச்சுறுத்தல்கள் யாவை, அவற்றை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
தேவபக்தி அநேக வழிகளில் வெளிக்காட்டப்படுகிறது
[பக்கம் 14-ன் படங்கள்]
உங்கள் தேவபக்திக்கு வரும் அச்சுறுத்தல்களை குறித்து ஜாக்கிரதை