மனித பிரச்சினைகள்—என்றாவது ஒழியுமா?
“உலக மக்கள்தொகையில் கால்வாசி பேர் வறுமையில் வாடுகிறார்கள், 130 கோடி ஜனங்கள் தினமும் 50 ரூபாய்க்கும் குறைவான பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள், 100 கோடி மக்கள் படிப்பறிவில்லாதவர்கள், 130 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கிறார்கள், 100 கோடி ஜனங்களோ தினம் தினம் பட்டினியில் துவளுகிறார்கள்.” உலக நிலைமையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது அயர்லாந்திலிருந்து வரும் ஓர் அறிக்கை.
உலக பிரச்சினைகளுக்கு மனிதனால் நிரந்தர தீர்வு காண முடியாது என்பதற்கு என்னே கவலைக்குரிய அறிக்கை! அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களில் பெருவாரியானோர் ஆதரவற்ற பெண்களும் பிள்ளைகளுமே என்பதை அறியும்போது இப்பிரச்சினைகள் இன்னுமதிக வேதனைக்குரியவையாய் தோன்றுகின்றன. இந்த 21-ம் நூற்றாண்டிலும் அவர்களுடைய உரிமைகள் தொடர்ந்து “ஒவ்வொரு நாளும் கணக்கு வழக்கில்லாமல் பறிக்கப்படுவது” அதிர்ச்சியூட்டுகிறது அல்லவா?—உலகிலுள்ள பிள்ளைகளின் நிலை 2000 (ஆங்கிலம்).
‘ஒரே தலைமுறைக்குள் புதிய உலகம்’
“உலகம் முழுவதிலும் மக்கள்மீது . . . இப்படிப்பட்ட துஷ்பிரயோகங்கள் ஏற்படுத்தியிருக்கும் துயரகரமான சூழலை போக்க முடியும்” என ஐக்கிய நாட்டு குழந்தைகள் நல நிதி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. பரிதாபமான நிலையில் இருக்கும் இந்தக் கோடிக்கணக்கான மக்கள் தற்போது சகிக்க வேண்டிய இப்பயங்கரமான நிலைமைகள் “தவிர்க்க முடியாதவையும் அல்ல, மாற்ற முடியாதவையும் அல்ல” என இந்த நிறுவனம் சொல்கிறது. சொல்லப்போனால், “ஒரே தலைமுறைக்குள் புதிய உலகை படைக்க எல்லா மக்களுக்கும்” இது அழைப்பு விடுத்திருக்கிறது. இது மனிதகுலம் முழுவதும் “வறுமையோ பாகுபாடோ இல்லாமல், வன்முறையோ நோயோ இல்லாமல்” வாழும் ஓர் உலகமாக இருக்கும் என நம்புகிறது.
இப்படிப்பட்ட கருத்துக்களைத் தெரிவிப்பவர்களுக்கு உந்துவிப்பை தருவது எதுவென்றால், “தொடர்கதை போல் தோன்றும் போராட்டங்கள் மற்றும் நெருக்கடிகளின்” கவலைக்குரிய விளைவுகளை மட்டுப்படுத்த இப்போதும்கூட ஆர்வமுள்ளோர் பலர் மிக பிரமாண்டமான அளவில் உழைத்து வருவதே. உதாரணமாக, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செர்னோபில் குழந்தைகள் திட்டம், “மின்னணு உலையிலிருந்து வெளியான கதிரியக்கத்தின் காரணமாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளின் வேதனையைக் குறைக்க உதவி செய்துள்ளது.” (தி ஐரிஷ் எக்ஸாமினர், ஏப்ரல் 4, 2000) மனிதாபிமானம் கொண்ட பெரிய மற்றும் சிறிய ஏஜன்சிகள், போரினாலும் பேரழிவினாலும் பாதிக்கப்படுவோரின் வாழ்க்கையில் நிச்சயமாகவே பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இருந்தாலும், இப்படிப்பட்ட மனிதாபிமான முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள் எதார்த்தவாதிகளே. இப்போது உள்ள பிரச்சினைகள் “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அதிக பரவலாகவும் ஆழமாக வேரூன்றியதாகவும் இருக்கின்றன” என்பதை அவர்கள் அறிவார்கள். மொஸாம்பிக் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, “பணியாளர்களும் ஆதரவாளர்களும் கொடையாளர்களும் மிகவும் வியக்கத்தக்க அளவில் கைகொடுத்து உதவினார்கள்” என ஐரிஷ் அறநிலை ஸ்தாபனத்தின் தலைமை அதிகாரி டேவிட் பெக் கூறுகிறார். அவர் மேலும் சொல்வதாவது, “ஆனால் இப்பேர்ப்பட்ட பேரழிவுகளை எங்களால் தனியாக சமாளிக்க முடியாது.” ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண பணிகளைப் பற்றி அவர் வெளிப்படையாக இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “நம்பிக்கை சுடர்வீசும் சில மெழுகுவர்த்திகளும் அணையும் நிலையில்தான் இருக்கின்றன.” அவருடைய குறிப்பு உலக சூழ்நிலையை அப்படியே தொகுத்துரைக்கிறது என்பதை பலரும் உணருவர்.
‘ஒரே தலைமுறைக்குள் புதிய உலகம்’—இந்த நம்பிக்கை நிறைவேறும் என நிஜமாகவே எதிர்பார்க்க முடியுமா? தற்போதைய மனிதாபிமான முயற்சிகள் மெச்சத்தக்கவையாக இருந்தாலும், நீதியும் சமாதானமும் தவழும் புதிய உலகைப் பற்றிய மற்றொரு நம்பிக்கையை ஆலோசிப்பது அறிவுப்பூர்வமானது. அந்த நம்பிக்கையைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது, அடுத்த கட்டுரையில் அதைக் காணலாம்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
பக்கம் 3, பிள்ளைகள்: UN/DPI Photo by James Bu