பிலிப்பீன்ஸ் மலைகளில் கடவுளை மகிமைப்படுத்துதல்
பிலிப்பீன்ஸ் நாடு ஒரு தீவு என்று நீங்கள் நினைத்தால் அது முழுக்க முழுக்க சரிதான். ஆனால் கம்பீரமான மலைகளும் அங்கே ஏராளம் உண்டு. நகரங்களிலும் சமவெளிகளிலும் பிரசங்கிப்பது யெகோவாவின் சாட்சிகளுக்கு சுலபமாக இருந்திருக்கிறது; நல்ல பலன்களையும் தந்திருக்கிறது. ஆனால் மலைப்பகுதிகளிலோ நிலைமையே வேறு.
மணற்பாங்கான கடற்கரைகள், பவழப்பாறைகள், மீனவ கிராமங்கள், பரபரப்பான நகரங்கள் கொண்ட சமவெளி தீவிற்கும் இந்த நாட்டின் உயரமான மலைகளுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. இம்மலைகள் கடவுளுடைய ராஜ்யத்தின் ‘நற்செய்தியைப்’ பிரசங்கிப்பதற்கும் பெரிய சவாலாக நிற்கின்றன.—மத்தேயு 24:14, NW.
பூமியின் மேலோட்டில் நழுவு தளங்கள் இரண்டு மோதிக்கொள்கிற ஓர் இடத்தில் பிலிப்பீன்ஸ் தீவுகள் அமைந்திருக்கின்றன. இந்தப் பகுதியில் நிலம் ஒன்றோடொன்று இணைவதால் அங்குள்ள பெரிய தீவுகளில் செங்குத்தான மலைத்தொடர்கள் உருவாகியுள்ளன. பிலிப்பீன்ஸின் 7,100-க்கும் அதிகமான தீவுகள் பசிபிக் எரிமலை மண்டலத்தின் மேற்கு விளிம்பு நெடுகிலும் அமைந்திருக்கின்றன. ஆகவே இத்தீவுகளில் ஆங்காங்கே எரிமலைகள் உள்ளன; அவை மலைப்பாங்கான பிரதேசமாக அமைவதற்கு இதுவும் காரணமாகிறது. இந்த நிலப்பகுதி கரடுமுரடாக இருப்பதால் இந்த மலைவாழ் மக்கள் தனி உலகில் வாழ்கின்றனர். மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு ஒருசில சாலைகள் மாத்திரமே இருப்பதால் இந்த ஜனங்களைப் போய் சந்திப்பது மிகவும் கடினமாகும்.
எத்தனை தடைகள் இருந்தாலும், ‘எல்லா மனுஷரையும்’ போய் சந்திப்பது அவசியம் என்பதாக யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்கள். (1 தீமோத்தேயு 2:4) ஆகவே, பிலிப்பீன்ஸிலுள்ள சாட்சிகள் ஏசாயா 42:11, 12-ன் வார்த்தைகளுக்கு இசைவாக செயல்பட்டிருக்கிறார்கள்: “கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” NW] மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.”
மலைவாழ் மக்களுக்கு சாட்சி கொடுப்பதற்கு கவனமான முயற்சிகள் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிஷனரிகள் இந்த வேலைக்கு உத்வேகம் அளித்தார்கள். உள்ளூர்வாசிகள் அநேகர் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள், இவர்கள் உயரமான மலைகளில் அமைந்திருக்கும் கிராமங்களில் சத்தியத்தைப் பரப்புவதற்கு உதவினார்கள். இதனால் நல்ல பலன்கள் கிடைத்தன. உதாரணமாக, வடக்கே லுஜோனிலுள்ள கார்டெல்லிரா சென்ட்ரலில் 6,000-க்கும் அதிகமானோர் நற்செய்தியின் பிரஸ்தாபிகளாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இபாலாய், இஃபுகாவோ, கலிங்கா என்ற மலைஜாதியினர்.
ஆனால் மலையில் எளிதில் போக முடியாத இடங்கள் இன்னும் இருக்கின்றன. அங்குள்ள மக்கள் மறக்கப்படவில்லை. இவர்களில் சிலரை எவ்வாறு சந்திக்க முடிந்திருக்கிறது, இவர்கள் எப்படி செவிசாய்த்திருக்கிறார்கள்?
பாரம்பரியத்தின் இடத்தில் உண்மை விசுவாசம்
வடக்கே இருக்கும் லுஜோனிலுள்ள தீவில், ஆப்ரா என்ற மலைப்பிரதேசத்தில் டிங்கியான்ஸ் இனத்தவர் வாழ்கிறார்கள். “மலை” என்ற அர்த்தம் தரும் டிங்கி என்ற பண்டைய மலே மொழி வார்த்தையிலிருந்தே இது பிறந்திருக்கலாம். ரொம்ப பொருத்தமான பெயர்தான்! மக்கள் தங்களையும் தங்கள் மொழியையும் இட்நக் என்று அழைக்கிறார்கள். அவர்களுடைய தெய்வத்தின் பெயர் காபுனியன். தினசரி வாழ்க்கையில் அவர்கள் பின்பற்றும் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. உதாரணமாக வெளியே புறப்படும் ஒருவர் தும்மிவிட்டால் அது கெட்ட சகுனம். அதன் பாதிப்புகள் நீங்குவதற்காக அவர் ஓரிரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
1572-ல், ஸ்பானியர்கள் கத்தோலிக்க மதத்தைப் பரப்பினார்கள், ஆனால் அவர்கள் டிங்கியான்ஸ் இனத்தவர்களுக்கு உண்மை கிறிஸ்தவத்தை போதிக்க தவறினார்கள். அப்படியே கத்தோலிக்கராக மதம் மாறியவர்களும் காபுனியனிடம் அவர்களுக்கிருந்த நம்பிக்கையை துளியும் மாற்றிக்கொள்ளவில்லை, உள்ளூர் பழக்க வழக்கங்களையும் விட்டுக்கொடுக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகள் இந்த மலைப்பகுதிகளில் ராஜ்ய செய்தியை 1930-களில் பிரசங்கிக்க ஆரம்பித்த போதுதான் பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவை இந்த மக்கள் முதல் முதலாக கேள்விப்பட ஆரம்பித்தார்கள். அப்போது முதற்கொண்டு டிங்கியான்ஸ் இனத்தவரில் உண்மை மனமுள்ள பலர் “பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து” யெகோவாவை மகிமைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
உதாரணமாக லிங்பாவ்யன் என்பவர் அந்தப் பகுதியிலுள்ள மலைவாழ் மக்களின் மரியாதைக்குரிய தலைவராக இருந்தார். டிங்கியான்ஸ் கலாச்சாரத்தில் அதிக ஈடுபாடுமிக்கவராக இருந்தார். “டிங்கியான்ஸ் பாரம்பரியங்களை நான் பயபக்தியுடன் பின்பற்றினேன். ஒருவர் கொல்லப்பட்டால், சவ அடக்கத்துக்குப் பின் நாங்கள் நடனமாடி சேகண்டி அடித்தோம். மிருகங்களை பலிகொடுத்தோம். நாங்கள் காபுனியனை தெய்வமாக நம்பினோம். அப்போது பைபிளின் கடவுள் யாரென எனக்குத் தெரியாது.” பெயரளவில் ஒரு கத்தோலிக்கராக இருந்தும் கடவுள் யாரென அவருக்குத் தெரியாதிருந்தது.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியர்கள் அந்தப் பகுதிக்கு பிரசங்கிக்க சென்றார்கள், அவர்கள் லிங்பாவ்யனை சந்தித்து பைபிளை வாசிக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள். “யெகோவாவே உண்மையான கடவுள் என்பதை நான் பைபிளிலிருந்துதான் தெளிவாக தெரிந்துகொண்டேன்” என அவர் கூறுகிறார். ஒரு சாட்சி அவருக்குப் பைபிளை கற்றுக்கொடுத்தார். அவர் உண்மை கடவுளை சேவிக்க தீர்மானித்தார். அதுவரை செய்துவந்த எல்லா பழக்கவழக்கங்களையும் முழுமையாக அவர் விட்டொதுக்கினார். பழங்குடி தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதனால் அங்கிருந்த பாதிரியும் லிங்பாவ்யனின் முன்னாளைய நண்பர்களும் ஆத்திரமடைந்தனர். ஆனால் லிங்பாவ்யனோ தான் பைபிளில் கண்டுபிடித்த சத்தியங்களை பின்பற்றுவதில் உறுதியாயிருந்தார். அவர் இப்போது சபை மூப்பராக சேவிக்கிறார்.
ஏழு பகல்களும் ஆறு இரவுகளும்
ஆப்ராவின் சில பகுதிகளில் நற்செய்தி தவறாமல் பிரசங்கிக்கப்பட்டு வந்தாலும், மற்ற பகுதிகள் மிகவும் தொலைதூரத்தில் இருப்பதால் அவ்வப்போது மட்டுமே அங்கே பிரசங்கிக்க முடிகிறது. இப்படிப்பட்ட ஓரிடத்துக்குச் செல்ல சமீபத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்ராவிலுள்ள டீனக் என்ற இடம் பிரசங்கிப்பதற்காக சபைக்கு நியமிக்கப்படாத பிராந்தியம்; 27 வருடங்களாக யாரும் அங்கு பிரசங்கிக்கச் சென்றதில்லை. 35 சாட்சிகள் அடங்கிய ஒரு குழுவினர் அங்கே பிரசங்கிக்க புறப்பட்டார்கள்.
இந்தப் பிரசங்க பயணத்திற்காக ஏழு நாட்களுக்கு மேல் நடந்தே சென்றார்கள். அவர்கள் மூட்டை முடுச்சுகளை சுமந்துகொண்டு தொங்கு பாலங்கள், ஆழமான ஆறுகள், மலைத்தொடர்கள் ஆகியவற்றைக் கடந்து மணிக்கணக்கில் நடந்து சென்றதை சற்று கற்பனை செய்து பாருங்கள், இந்தப் பாடெல்லாம் நற்செய்தியை கேட்டிராதவர்கள் கேட்க வேண்டும் என்பதற்கே! அவர்களுடைய பயணத்தின் ஆறு இரவுகளில் நான்கு இரவுகளை மலைப்பாங்கான திறந்த வெளியில் கழித்தார்கள்.
துணிந்து இந்த பிரயாணத்தை மேற்கொண்ட சாட்சிகள் கொஞ்சம் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றிருந்தார்கள்; என்றாலும் அது முழு பிரயாணத்துக்கும் போதுமானதாக இல்லை. ஆனால் இது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை. ஏனென்றால், மக்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட பைபிள் பிரசுரங்களுக்கு பண்டமாற்றாக உணவை மிக சந்தோஷமாக கொடுத்தார்கள். சாட்சிகளுக்கு பண்ணையில் விளைந்த பொருட்கள், மீன், மான் கறி என்று நிறைய உணவுப்பொருட்கள் கிடைத்தன. கொஞ்சம் அசெளகரியங்களை அனுபவித்தபோதிலும், அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “நாங்கள் அனுபவித்த அளவில்லா ஆனந்தம் எங்கள் தியாகங்களை ஈடுகட்டிவிட்டது.”
அந்த ஏழு நாட்களில், இந்த ஊழியர்கள் 10 கிராமங்களில் பிரசங்கித்தார்கள்; அப்போது 60 புத்தகங்கள், 186 பத்திரிகைகள், 50 சிற்றேடுகள், அநேக துண்டுப்பிரதிகளை அளித்தார்கள். 74 மக்கள் தொகுதிகளிடம் பைபிள் படிப்புகள் நடத்தும் முறையை நடித்துக் காட்டினார்கள். டீனக் நகரில் உள்ளூர் அதிகாரிகளும் சில பிரமுகர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சபை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது, இதற்கு 78 பேர் வந்திருந்தார்கள். அதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்களும் போலீஸ்காரர்களுமே. டிங்கியான்ஸ் மக்களில் இன்னும் அநேகர் பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ‘கெம்பீரித்து’ யெகோவாவைத் துதிப்பவர்களோடு சேர்ந்து அவருக்குத் துதியை ஏறெடுக்க வேண்டுமென விரும்புகிறோம்.
தங்கத்தைவிட மேலானது
பிலிப்பீன்ஸுக்கு தெற்கே ஸ்பானியர்கள் தங்கத்தைக் கண்டுபிடித்த சில தீவுகள் உள்ளன. இதுவே மின்டோரோ என பெயர் சூட்ட காரணமானது, இது “தங்க சுரங்கம்” என்று அர்த்தம் தரும் மீனா டி ஒரோ என்பதன் சுருக்கமாகும். ஆனால் தங்கத்தைவிட மேலானதை, அதாவது மெய்க் கடவுளாகிய யெகோவாவை சேவிக்க விரும்புகிற மக்களை இப்போது இந்தத் தீவுகளில் காண முடிகிறது.
மின்டோரோவின் மையத்திலுள்ள ஒதுக்கமான காட்டுப்பகுதியில் சுமார் 1,25,000 நாட்டுப்புறத்தார் வாழ்கிறார்கள். இவர்கள் மாங்யான்கள் எனப்படுகிறார்கள். அவர்கள் வெகு எளிய வாழ்க்கை வாழ்கிறார்கள், வெளி உலகத்தோடு அவர்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்களுக்கென்று சொந்த மொழியும் உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் ஆன்மவாதிகள், பல தெய்வ வழிபாடு செய்கிறவர்கள். இயற்கையில் பல ஆவிகள் இருப்பதாக நம்புகிறவர்கள்.
உணவோ மற்ற பொருட்களோ கிடைக்காதபோது சில மாங்யான்கள் வேலை தேடி கரையோர பகுதிகளுக்கு வருவதுண்டு. இப்படித்தான் ஒருநாள் இந்த மாங்யான்களின் ஓர் உட்பிரிவான பாட்டாங்கானைச் சேர்ந்தவரான பாயிலிங் வந்தார். மலையிலுள்ள காட்டுப் பகுதிகளில் தன் இனத்தாருடன் வாழ்ந்த இவர் பாட்டாங்கானின் நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையுமே கடைப்பிடித்து வந்தார். பொதுவாக இடுப்பில் கட்டும் துண்டுத் துணிதான் இவர்களுடைய உடை; பாட்டாங்கானின் பாரம்பரிய நம்பிக்கையின்படி, நல்ல விளைச்சலை சாகுபடி செய்ய விரும்பினால் பக்தர்கள் ஒரு கோழியை அறுத்து பிரார்த்தனை செய்துகொண்டே அதன் இரத்தத்தை தண்ணீரில் சொட்டுச்சொட்டாக வடியவிட வேண்டும்.
பாயிலிங் இந்தச் சடங்குகளை எல்லாம் இப்போது செய்வது கிடையாது. ஏன் செய்வதில்லை? மலைகளை விட்டு சமபூமிக்கு வந்தபோது யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பங்களிடம் வேலை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தக் குடும்பங்களில் ஒன்று பாயிலிங்குக்கு பைபிள் சத்தியத்தைச் சொல்வதற்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டது. அவர் நன்கு செவிகொடுத்து கேட்டார், மனிதனுக்கும் பூமிக்குமான யெகோவாவின் நோக்கத்தை நிஜமாகவே மதித்துணர்ந்தார். இவர் தொடக்கப் பள்ளிக்குச் செல்லவும் பைபிளை படிக்கவும் அக்குடும்பத்தார் ஏற்பாடு செய்தார்கள். 24-ஆம் வயதில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக பாயிலிங் முழுக்காட்டுதல் பெற்றார். 30-வது வயதில் உயர்நிலைப் பள்ளியில் இரண்டாவது ஆண்டில் இருந்தார். பள்ளியையே அவர் தன் ஊழிய பிராந்தியமாக கருதினார். இப்போது அவர்கள் இவரை ரோலான்டோ என்று (அந்த சமபூமியிலுள்ளவர் வைத்துக்கொள்ளும் பெயரால்) அழைக்கிறார்கள்.
நேர்த்தியான உடையுடன் புன்முறுவல் புரியும் ஓர் ஊழியராகவே இப்போது ரோலான்டோவை பார்ப்பீர்கள். இவர் முழுநேர பிரசங்கியாக, மின்டோரோவிலுள்ள ஒரு சபையில் உதவி ஊழியராக சேவை செய்து வருகிறார். ரோலான்டோ சமீபத்தில் மலைப்பிரதேசத்திற்கு திரும்பிச் சென்றிருக்கிறார். பாட்டாங்கான் மக்களின் சடங்குகளில் பங்குகொள்வதற்காக அல்ல, உயிர் கொடுக்கும் சத்தியங்களை பைபிளிலிருந்து அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காகவே.
ராஜ்ய மன்றத்தைப் பெற்றுக்கொள்ள ஆவல்
செபுயானோவில் “மலைவாழ் மக்கள்” என்று அர்த்தம் தரும் புக்கிட்நோன் என்ற பிரதேசம் மின்டனாவோ தெற்கு தீவில் அமைந்துள்ளது. இது மலைகளும் குறுகிய பள்ளத்தாக்குகளும் ஆற்றுப் படுகைகளும் மேட்டு நிலங்களும் நிறைந்த பிரதேசம். நிலம் செழிப்பாக இருப்பதால் அன்னாசி, சோளம், காப்பி, அரிசி, வாழை ஆகியவை ஏராளம் விளைகின்றன. டாலான்டிக், ஹிக்கயோநோன் ஆகிய மலைவாழ் மக்கள் அங்கே வாழ்கின்றனர். இவர்களும்கூட யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வது அவசியம். சமீபத்தில் தலாகாக் என்ற நகருக்கு அருகே இதற்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்தது, அது சுவாரசியமான கதை.
மலைப்பிரதேசத்தில் பயணிக்கையில் சாட்சிகளுக்கு குளிராக இருந்தது. ஆனால் போய் சேர்ந்தபோதோ அங்கே அவர்களுக்கு அன்பான வரவேற்பு கிடைத்தது. அங்கு வாழ்ந்தவர்கள் சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய பிதாவை நம்புவதாக கூறினார்கள், ஆனால் அவருடைய பெயர் அவர்களுக்குத் தெரியாதிருந்தது. காட்டிலேயே காலத்தைக் கழித்த இவர்கள் முதன்முறையாக யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தார்கள். கடவுளுடைய பெயரையும் ராஜ்யத்தின் சம்பந்தமாக அவருடைய மகத்தான நோக்கங்களையும் பற்றி அவர்களுக்கு சொல்லப்பட்டது. இவற்றைக் கேள்விப்பட்டவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள், ஆகவே அவர்களுடைய கிராமத்தில் பல தடவை மீண்டும் சென்று சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இப்படி பல தடவை அவர்களைப் போய்ச் சந்தித்தார்கள். இதனால் உள்ளூர்வாசிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு “வீடு” கட்டிக்கொள்ள ஒரு இடத்தை அளித்தார்கள். அதை சாட்சிகள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். அது அந்த பகுதியிலேயே மிக உயரமான மலையின் உச்சியிலிருந்தது, அங்கிருந்து பார்த்தால் சாலையை நன்றாக பார்க்க முடியும். மரப்பலகை, மூங்கில், தென்னை ஓலை ஆகியவற்றால் அந்தக் கட்டடத்தைக் கட்டினார்கள். அதைக் கட்டி முடிக்க மூன்று மாதங்களும் பத்து நாட்களும் எடுத்தன. “யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்” என்று எழுதப்பட்டிருந்த பெயர் பலகை கட்டடத்துக்கு முன்பு எடுப்பாக தெரிந்தது. ஒரு சபை உருவாவதற்கு முன்னே ராஜ்ய மன்றம் கட்டப்பட்டுவிட்டதை சற்று கற்பனை செய்துபாருங்கள்!
அப்போது முதல், முழுநேர ஊழியராக இருந்த ஒரு சபையின் மூப்பரும் ஒரு உதவி ஊழியரும் அங்கு குடியேறினார்கள். அருகிலிருந்த பிராந்தியங்களிலுள்ள சாட்சிகளோடு சேர்ந்து அங்கு ஒரு சபையை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு அவர்கள் ஊழியம் செய்தார்கள். 1998 ஆகஸ்ட் மாதம் அவர்கள் கனவு நனவானது. மலைவாழ் மக்கள் பைபிள் சத்தியங்களை கற்றுக்கொள்ள உதவியாக அங்கே இருக்கும் ஒரு சிறிய சபை இந்த ராஜ்ய மன்றத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறது.
உண்மையாகவே, எளிதில் சென்றெட்ட முடியாத மலைகளிலும்கூட ராஜ்ய சத்தியத்தைப் பரப்புவதற்கு மனமுள்ளவர்களாயிருக்கும் பிலிப்பீன்ஸிலுள்ள தம் ஊழியர்களை யெகோவா வல்லமை வாய்ந்த விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார். ஏசாயா 52:7-லுள்ள வார்த்தைகள் நம் நினைவிற்கு வருகின்றன: “சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.”
[பக்கம் 11-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆப்ரா
மின்டோரோ
புக்கிட்நோன்
[படத்திற்கான நன்றி]
பூமி: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 10-ன் படங்கள்]
மலைகளில் பிரசங்கிப்பதற்கு, கரடுமுரடான பாதையில் மணிக்கணக்கில் நீண்ட தூரம் நடந்தே செல்ல வேண்டும்
[பக்கம் 10-ன் படம்]
மலையின் ஓடையில் முழுக்காட்டுதல்