உங்கள் மனசாட்சியை காத்துக்கொள்ளுங்கள்
தவறாக புரோகிராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டரை நம்பி ஆகாய விமானத்தில் பறப்பதை எண்ணிப் பார்த்தாலே குலைநடுங்குகிறது. யாரோ ஒருவர் விமானத்தின் வழிகாட்டி அமைப்பை தாறுமாறாக மாற்றிவிட்டதாகவோ அல்லது வேண்டுமென்றே தவறான டேட்டாக்களை பதிவு செய்துவிட்டதாகவோ கற்பனை செய்துகொள்ளுங்கள்! அடையாள அர்த்தத்தில் சொன்னால், இதைத்தான் உங்களுடைய மனசாட்சிக்கு ஒருவன் செய்துகொண்டிருக்கிறான். உங்களுடைய ஒழுக்கநெறி வழிகாட்டி அமைப்பை நாசம் செய்ய அவன் உறுதிபூண்டிருக்கிறான். கடவுளோடு மோதும் பாதையில் உங்களை செல்ல வைப்பதே அவனுடைய குறிக்கோள்!—யோபு 2:2-5; யோவான் 8:44.
இந்தப் பயங்கர நாசவேலைக்காரன் யார்? ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பு’ என பைபிளில் அவன் அழைக்கப்படுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9) முதன்முதலில் ஏதேன் தோட்டத்தில் தன் கைவரிசையை காட்டினான், ஏவாளிடம் தந்திரமாக பேசுவதன் மூலம் எது சரி என அவள் அறிந்திருந்ததை அசட்டை செய்வதற்கும் கடவுளுக்கு எதிராக கலகம் செய்வதற்கும் அவளை தூண்டினான். (ஆதியாகமம் 3:1-6, 16-19) அது முதல், முழு மனிதவர்க்கமும் கடவுளை பகைப்பதற்காக ஏமாற்று அமைப்புகளை ஏற்படுத்துவதில் வல்லவனாகியிருக்கிறான். இந்த அமைப்புகளில் மிகவும் கண்டிக்கத்தக்கது பொய் மதம்.—2 கொரிந்தியர் 11:14, 15.
பொய் மதம் மனசாட்சியை கெடுக்கிறது
பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலில், பொய் மதம் மகா பாபிலோன் என அழைக்கப்படும் ஓர் அடையாள அர்த்தமுள்ள வேசியாக சித்தரிக்கப்படுகிறது. அதன் போதனைகள் அநேகருடைய ஒழுக்கநெறி உணர்வை மழுங்கடித்துவிட்டன, வித்தியாசமான நம்பிக்கையுடையவர்களை பகைக்கவும் அவர்களுக்கு விரோதமாக வன்முறையோடு செயல்படவும் தூண்டியிருக்கின்றன. சொல்லப்போனால், வெளிப்படுத்துதல் சொல்கிறபடி, கடவுளுடைய வணக்கத்தார் உட்பட, “பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய” இரத்தத்திற்கும் முக்கியமாக பொய் மதத்திடமே கடவுள் கணக்கு கேட்கிறார்.—வெளிப்படுத்துதல் 17:1-6; 18:3, 24.
சிலருடைய “ஒழுக்கநெறி மானி”யை பொய் மதம் எந்தளவுக்கு சீர்குலைத்துவிடும் என்பதை இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எச்சரித்தபோது அவர் இவ்வாறு கூறினார்: “உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.” மூர்க்க வெறிபிடித்த இவர்கள் ஒழுக்க ரீதியில் எவ்வளவு குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்! இயேசு இவ்வாறு கூறினார்: ‘அவர்கள் பிதாவையும் என்னையும் அறியவில்லை.’ (யோவான் 16:2, 3) இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி கொஞ்ச காலத்திற்குள் சில மதத் தலைவர்களுடைய தூண்டுதலால் அவரே கொலை செய்யப்பட்டார்; அவர்களுடைய மனசாட்சிக்கு இந்தக் குற்றச்செயல் சரியென பட்டது. (யோவான் 11:47-50) மாறாக, உண்மையான சீஷர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பினால் அடையாளம் காட்டப்படுகிறார்கள் என இயேசு கூறினார். ஆனால் அவர்களுடைய அன்பு இன்னும் பரந்தது, ஏனென்றால் அது அவர்களுடைய விரோதிகளையும் சென்றெட்டுகிறது.—மத்தேயு 5:44-48; யோவான் 13:35.
பொய் மதம் அநேகருடைய மனசாட்சியை நாசப்படுத்தியிருக்கிற மற்றொரு வழி, பிரபலமான எந்தவொரு ஒழுக்கநெறியையும் அல்லது தாறுமாறான எந்தவொரு ஒழுக்கநெறியையும் போதிப்பதன் மூலமாகும். இதை முன்னறிந்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி [“காதுகளுக்கு இனிமையாக இருக்கும்படி,” NW], தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொ[ள்ளும்] . . . காலம் வரும்.”—2 தீமோத்தேயு 4:3, 4.
பலருடன் பாலுறவு கொள்வது கடவுள் ஏற்றுக்கொள்ளத்தக்கது என சொல்லி மக்களுடைய செவிகளுக்கு மதத் தலைவர்கள் இனிமையூட்டுகிறார்கள். வேறுசிலரோ ஓரினப்புணர்ச்சியை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள். சொல்லப்போனால், சில குருமார்களே ஓரினப்புணர்ச்சியில் பழக்கமாக ஈடுபடுகிறார்கள். “ஊரறிந்த ஓரினப்புணர்ச்சிக்காரர்கள் பதின்மூன்று பேர்” சர்ச் ஆஃப் இங்லண்டின் பொது பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என தி டைம்ஸ் பிரிட்டிஷ் செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கட்டுரை குறிப்பிட்டது. சர்ச் தலைவர்களே பைபிள் ஒழுக்கநெறியை உதறித் தள்ளும்போது, அதற்காக அவர்களுடைய சர்ச்சுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது, அந்த சர்ச் அங்கத்தினர்கள் எந்தத் தராதரத்தைத்தான் பின்பற்றுவார்கள்? கோடிக்கணக்கானோர் முழுமையாக குழம்பிப் போயிருப்பதில் ஆச்சரியமே இல்லை.
பைபிள் போதிக்கும் ஒழுக்கநெறி மற்றும் ஆவிக்குரிய சத்தியங்கள் என்ற சமிக்கைகளால் வழிநடத்தப்படுவது எவ்வளவு சிறந்தது! (சங்கீதம் 43:3; யோவான் 17:17) உதாரணமாக, விபச்சாரக்காரரும் வேசிமார்க்கத்தாரும் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்று பைபிள் கற்பிக்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) “சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக” மாற்றுகிற ஆண்களும் பெண்களும் கடவுளுடைய பார்வையில் “அவலட்சணமானதை நடப்பி”க்கிறார்கள் என அது சொல்கிறது. (ரோமர் 1:26, 27, 32) இந்த ஒழுக்கநெறி சத்தியங்கள் அபூரண மனுஷனால் புனையப்பட்டவை அல்ல; அவை கடவுளுடைய ஏவுதலால் அருளப்பட்ட தராதரங்கள், அவற்றை அவர் ஒருபோதும் நீக்கிவிடவில்லை. (கலாத்தியர் 1:8; 2 தீமோத்தேயு 3:16, 17) ஆனால் மனசாட்சியை கெடுப்பதற்கு சாத்தான் வேறுசில வழிகளையும் வைத்திருக்கிறான்.
பொழுதுபோக்குகளை ஞானமாக தெரிந்தெடுங்கள்
கெட்ட செயலை செய்வதற்கு ஒருவரை பலவந்தப்படுத்துவது ஒரு விஷயம், ஆனால் அப்படிப்பட்ட செயலை ஒருவர் விரும்பும்படி செய்வது இன்னொரு விஷயம். இதுவே “இந்த உலகத்தின் அதிபதி”யாகிய சாத்தானுடைய இலக்கு. பேதைகளுடைய அல்லது சூதுவாதறியாதவர்களுடைய—முக்கியமாக எளிதில் வீழ்ந்துவிடும் இளைஞர்களுடைய—மனதிலும் இதயத்திலும் கெட்ட சிந்தையை பதிய வைப்பதற்கு ஆபாசமான புத்தகங்கள், திரைப் படங்கள், இசை, கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள், இன்டர்நெட்டில் ஆபாசம் ஆகிய வழிகளை சாத்தான் பயன்படுத்துகிறான்.—யோவான் 14:30; எபேசியர் 2:2.
“[ஐக்கிய மாகாணங்களிலுள்ள] இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 வன்முறை காட்சிகளை பார்க்கிறார்கள்” என பீடியாட்ரிக்ஸ் என்ற இதழ் அறிக்கை செய்தது. “சிறுபிள்ளைகளுக்குரிய நிகழ்ச்சியில் மிக அதிகமான வன்முறை காட்சிகள் வருகின்றன.” “பருவ வயதினர் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 மறைமுகமான, அப்பட்டமான பாலியல் காட்சிகளை பார்க்கிறார்கள், அது சம்பந்தமான ஜோக்குகளையும் கேட்கிறார்கள்” என்பதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. பிரைம்-டைம் டெலிவிஷனிலும், “ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 8-க்கும் அதிகமான பாலியல் காட்சிகள் வருகின்றன, இது 1976-ல் இருந்ததைவிட நான்கு மடங்கு அதிகம்” என்றும் அது கூறியது. “ஆபாச பேச்சுக்களும் தறிகெட்டுப் போகின்றன” என்பதை அந்த ஆய்வு கண்டுபிடித்ததில் ஆச்சரியமில்லை. என்றபோதிலும், இப்படிப்பட்ட விஷயங்களை மக்களுக்கு ஊட்டுவது அவர்களை மிகவும் கெடுக்கிறது என்பதை பைபிளும் எண்ணற்ற அறிவியல் ஆய்வுகளும் எச்சரிக்கின்றன. ஆகவே, நீங்கள் உண்மையிலேயே கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினால், நீங்கள்தாமே பயனடைய விரும்பினால், நீதிமொழிகள் 4:23-க்கு செவிசாயுங்கள், அது இவ்வாறு கூறுகிறது: “உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.”—ஏசாயா 48:17.
பிரபல இசைகளும்கூட மனசாட்சியை மிகவும் கெடுக்கின்றன. மேலை நாடுகள் பலவற்றில் மிகவும் பிரபலமாகியிருக்கும் பாடல்களைப் பாடிய ஒரு பாடகர் “அதிர்ச்சியூட்டுவதற்கு விசேஷ முயற்சி” செய்வதாக தி சன்டே மெயில் என்ற ஆஸ்திரேலிய செய்தித்தாள் அறிக்கை எச்சரிக்கிறது. “போதை மருந்துகளையும் முறைதகா புணர்ச்சியையும் கற்பழிப்பையும் பற்றி அவர் புகழ்ந்து பாடுவதாகவும்,” “தன்னுடைய மனைவியை கொலைசெய்து ஓர் ஏரியில் எறிந்துவிடுவதைப் பற்றி பாடுவதாகவும்” அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. அதில் குறிப்பிடப்பட்ட வேறுசில பாடல் வரிகள் இங்கே அச்சிட முடியாத அளவுக்கு மிகவும் அசிங்கமானவை. ஆனாலும் அவருடைய இசை அவருக்கு கெளரவ பட்டத்தை பெற்றுத் தந்தது. இப்படிப்பட்ட கேடுகெட்ட விஷயங்களை—அவை இசை எனும் தேன் தடவியதாக இருந்தாலும்—உங்களுடைய மனதிலும் இருதயத்திலும் விதைப்பதற்கு நீங்கள் விரும்புவீர்களா? விரும்ப மாட்டீர்கள்தானே, ஏனென்றால் இப்படி செய்கிறவர்கள் தங்களுடைய மனசாட்சியை கெடுத்து கடைசியில் தங்களுக்குள்ளே ‘பொல்லாத இருதயத்தை’ உருவாக்கிக்கொள்கிறார்கள், அதனால் கடவுளுக்கு விரோதிகளாக மாறிவிடுகிறார்கள்.—எபிரெயர் 3:12; மத்தேயு 12:33-35.
ஆகவே பொழுதுபோக்குகளை தேர்ந்தெடுப்பதில் ஞானமாக இருங்கள். பைபிள் நம்மை இவ்வாறு உந்துவிக்கிறது: “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8.
மனசாட்சியை பாதிக்கும் கூட்டுறவுகள்
சிறுபிள்ளைகளாக நீலும் பிரான்ஸும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களுடன் ஆரோக்கியமான கூட்டுறவை அனுபவித்து மகிழ்ந்தார்கள்.a ஆனால் காலப்போக்கில், “கெட்ட பையன்களோடு கூட்டுச்சேர ஆரம்பித்தேன்” என நீல் சொன்னான். அதன் முடிவோ அவனுக்கு மிகவும் வேதனையைத் தந்தது: ஆம், குற்றச்செயல்களில் ஈடுபட்டு கடைசியில் ஜெயிலுக்குப் போனான். பிரான்ஸின் கதையும் இப்படித்தான். “உலகப்பிரகாரமான இளைஞர்கள் மத்தியில் இருக்கும்போது அவர்களால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள முடியும் என நான் நினைத்தேன்” என அவன் புலம்பினான். “ஆனால் கலாத்தியர் 6:7 சொல்கிறபடி, ‘தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.’ நான் செய்தது தவறு, யெகோவா சொன்னதே சரி என்பதை என்னுடைய கசப்பான அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். நான் செய்த தப்புக்காக எனக்கு இப்பொழுது ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.”
பொதுவாக, நீல் மற்றும் பிரான்ஸை போன்றவர்கள் உடனடியாக குற்றச்செயலில் ஈடுபட்டுவிடுவதில்லை; முதலில், அதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாததாக தோன்றலாம். படிப்படியாகவே சறுக்குகின்றனர், அதில் முதல்படிதான் கெட்ட கூட்டுறவுகள். (1 கொரிந்தியர் 15:33) அதற்குப் பிறகு போதைப் பொருட்களையோ மதுபானங்களையோ துஷ்பிரயோகம் செய்யும் பழக்கம் வரலாம். சொல்லப்போனால், “மதுபானத்தில் கரையும் தன்மையுடையது ஓர் ஆளின்” மனசாட்சி என பொருத்தமாகவே வருணிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து குற்றச்செயலுக்கோ அல்லது ஒழுக்கயீனத்திற்கோ செல்வதற்கு ஒரு சிறு படிதான் உள்ளது.
அப்படியானால், ஏன் அந்த முதல் படியை எடுக்க வேண்டும்? அதற்கு பதிலாக, உண்மையிலேயே கடவுளை நேசிக்கும் ஞானமுள்ள ஆட்களோடு கூட்டுறவு கொள்ளுங்கள். அவர்கள் உங்களுடைய மனசாட்சியை பலப்படுத்துவதற்கு உதவி செய்வார்கள், அப்படிப்பட்ட மனசாட்சி உங்களை சரியாக வழிநடத்தி அநேக வேதனைகளிலிருந்து உங்களை பாதுகாக்கும். (நீதிமொழிகள் 13:20) நீலும் பிரான்ஸும் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், தங்களுடைய மனசாட்சி கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு பரிசு, சரியாக பயிற்றுவிக்கப்பட வேண்டிய, ஆம், நெஞ்சார நேசித்துப் பாதுகாக்க வேண்டிய ஒன்று என உணர்ந்திருக்கிறார்கள். மேலும், தங்களுடைய கடவுளாகிய யெகோவாவுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்வதற்கு கடினமாக உழைத்து வருகிறார்கள். ஞானமாயிருங்கள், அவர்களுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 22:3.
மனசாட்சியை காத்துக்கொள்ளுங்கள்
ஆரோக்கியமான பயத்துடன் கடவுள் மீது அன்பையும் விசுவாசத்தையும் வளர்த்துக்கொள்ளும்போது, நம்முடைய மனசாட்சியை காத்துக்கொள்வதற்கு நாம் விரும்புகிறோம் என்பதை காட்டுகிறோம். (நீதிமொழிகள் 8:13; 1 யோவான் 5:3) இப்படிப்பட்ட பண்புகள் இல்லாத மனசாட்சி பெரும்பாலும் ஒழுக்கநெறியில் ஸ்திரமின்றி இருக்கிறது என பைபிள் காட்டுகிறது. உதாரணமாக, “தேவன் இல்லை” என்று தங்களுடைய இருதயத்தில் சொல்கிறவர்களைப் பற்றி சங்கீதம் 14:1 பேசுகிறது. விசுவாசமின்மை எப்படி அவர்களுடைய நடத்தையைப் பாதிக்கிறது? அந்த வசனம் தொடர்ந்து சொல்கிறது: “அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்.”
கடவுள் மீது உண்மையான விசுவாசம் இல்லாதவர்களுக்கு மேம்பட்ட எதிர்காலத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கையும் இல்லை. ஆகவே, அவர்கள் மாம்ச இச்சைகளில் லயித்திருந்து தற்கால வாழ்க்கைக்காகவே வாழ்கிறார்கள். “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்பதே அவர்களுடைய தத்துவம். (1 கொரிந்தியர் 15:32) மறுபட்சத்தில், நித்திய ஜீவ பரிசின் மீது தங்களுடைய கண்களை ஊன்றவைப்பவர்கள் கணப்பொழுதில் மறைந்துபோகும் உலகியல் இன்பங்களால் திசை திருப்பப்படுவதில்லை. விமானத்திலுள்ள துல்லியமான வழிகாட்டு கம்ப்யூட்டரைப் போல, அவர்களுடைய பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி கடவுளுக்கு உண்மைப்பற்றுறுதியுள்ள கீழ்ப்படிதலை காட்டும் பாதையில் அவர்களை சரியாக வழிநடத்துகிறது.—பிலிப்பியர் 3:8.
உங்களுடைய மனசாட்சி அதன் வலிமையையும் துல்லியத்தையும் இழக்காமல் காத்துக்கொள்வதற்கு கடவுளுடைய வார்த்தையிலிருந்து தொடர்ந்து வழிநடத்துதல் தேவை. அப்படிப்பட்ட வழிநடத்துதல் நமக்கு கிடைக்கிறது என பைபிள் கூறுகிறது; அழகிய மொழிநடையில் அது இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” (ஏசாயா 30:21) ஆகவே தினமும் பைபிள் வாசிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி வையுங்கள். சரியானதை செய்வதற்கு நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்போது அல்லது கவலையும் கஷ்டமும் மேகம் போல உங்களை சூழ்ந்துகொள்ளும்போது இது உங்களை பலப்படுத்தி உற்சாகப்படுத்தும். யெகோவா மீது முழு நம்பிக்கை வைத்தால், ஒழுக்க ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் அவர் உங்களை வழிநடத்துவார் என்பதில் உறுதியோடிருக்கலாம். ஆம், சங்கீதக்காரனை பின்பற்றுங்கள், அவர் இவ்வாறு எழுதினார்: “கர்த்தரை [“யெகோவாவை,” NW] எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.”—சங்கீதம் 16:8: 55:22.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 5-ன் படங்கள்]
“மகா பாபிலோன்” என பைபிள் வர்ணிக்கும் பொய் மதமே அநேகருடைய மனசாட்சியை மழுங்கடிக்கிறது
[படத்திற்கான நன்றி]
படைவீரர்களை ஆசீர்வதிக்கும் பாதிரியார்: U.S. Army photo
[பக்கம் 6-ன் படங்கள்]
வன்முறையையும் ஒழுக்கயீனத்தையும் பார்ப்பது உங்கள் மனசாட்சியை பாழாக்கிவிடும்
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய வார்த்தை தரும் வழிநடத்துதலை தவறாமல் பெறுவது உங்கள் மனசாட்சியை பாதுகாக்கும்