எங்களால் இயன்ற மட்டும் செய்கிறோம்!
“உங்களால் இயன்ற மட்டும் செய்யுங்கள்.” ஒரு சமயம் மிஷனரி ஒருவருக்கு யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவைச் சேர்ந்த அங்கத்தினர் ஒருவர் கொடுத்த ஆலோசனையே அது. ஆனால், அனுபவமிக்க ஒரு ஊழியருக்கு ஏன் இப்படிப்பட்ட அடிப்படையான ஆலோசனையைக் கொடுக்க வேண்டும்? பெரும்பாலான மிஷனரிகள் நித்தம் நித்தம் பூச்சிகளையும், பாம்புகளையும், வெயிலையும், வியாதியையும், இன்னும் பல நெருக்கடிகளையும் எதிர்ப்படும் தைரியசாலிகள் அல்லவா?
உண்மையில் யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலுள்ள மிஷனரிகள் சாதாரண ஆண்களும் பெண்களுமே. யெகோவாவிடமும் சக மனிதரிடமும் உள்ள ஆழ்ந்த அன்பே இந்தக் கிறிஸ்தவர்களை அயல்நாடுகளில் சேவை செய்ய தூண்டியிருக்கிறது. இவர்கள் தங்களுடைய திறமைக்கு ஏற்ப மிகச் சிறந்த விதத்தில் யெகோவாவை சேவிக்க இயன்ற மட்டும் முயலுகிறார்கள்; பலத்திற்கு அவரையே சார்ந்திருக்கிறார்கள்.—எபேசியர் 6:10.
மிஷனரி ஊழியத்தைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு மிஷனரி இல்லத்தில் ஒரு நாளை செலவழிப்பதாக நாம் கற்பனை செய்து கொள்வோம்.
மிஷனரி ஊழியத்தில் ஒருநாள்
காலையில் சுமார் 7 மணி. அன்றைய தினவசனத்தை கலந்தாலோசிக்கும் சரியான நேரத்தில் மிஷனரி இல்லத்தை நாம் அடைகிறோம். அங்கிருக்கும் பத்து மிஷனரிகளும் நம்மை அன்புடன் வரவேற்று, காலை சிற்றுண்டியை அருந்த இருக்கைகளையும் ஒழுங்குபடுத்தித் தருகிறார்கள். நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறோம்; பின்பு, பல ஆண்டுகளாக மிஷனரியாக இருக்கும் ஒரு சகோதரி, ஊழியத்தில் தனக்கு ஏற்பட்ட நகைச்சுவை மிக்க அனுபவத்தை சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ஆனால் சந்தோஷமாக உரையாடுகிற அந்த தொகுதியிடம் இன்றைய தினவசனத்தைக் கலந்தாலோசிப்பதற்கான நேரமாகிவிட்டதை சேர்மன் நினைப்பூட்டவே, நம்முடைய பேச்சு எல்லாம் கப்சிப் என்று அடங்கிவிடுகிறது. கலந்தாலோசிப்பு பிரெஞ்சு மொழியில்தான் நடத்தப்படும். நமக்கு அந்த மொழி தெரியாவிட்டாலும், வெளிநாட்டு மிஷனரிகள் அந்த மொழியைக் கற்பதில் நன்கு தேறி வருகிறார்கள் என்பதை அவர்கள் பேசும் விதத்திலிருந்து தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
பைபிள் கலந்தாலோசிப்பிற்குப் பின்பு இதயப்பூர்வமான ஜெபம் செய்யப்படுகிறது. அதற்குப்பின் இப்போது காலை சிற்றுண்டி ஆரம்பமாகிறது. நமக்கு வேண்டிய அளவு ‘சீரியலை’ எடுத்துக்கொண்டிருக்கையில் அருகே அமர்ந்திருக்கும் மிஷனரி அதன்மீது வாழைப்பழ துண்டுகளை போடும்படி சொல்கிறார். வாழைப்பழம் என்றாலே பிடிக்காது என நாம் சொல்கிறோம்; ஆனால் அவரோ இங்குள்ள பழத்தை ஒருமுறை நாம் ருசித்து பார்த்திருப்போமானால் விடமாட்டோம் என சொல்கிறார். ஆகவே சில பழத்துண்டுகளை ‘சீரியலில்’ போடுகிறோம். அவர் சொன்னது எவ்வளவு உண்மை! இந்த வாழைப்பழங்கள் ஐஸ் க்ரீம் மாதிரி அவ்வளவு இனிப்பு, அவ்வளவு ருசி. இப்போது பரிமாறப்படுகிற பிரெஞ்சு ரொட்டி, மிஷனரி இல்லத்திற்கு எதிரேயுள்ள சிறிய கடையில் விடியற்காலையில் சுடப்பட்டது என நம்மிடம் சொல்கிறார்.
சிற்றுண்டிக்குப் பின்பு, பென், கேரன் தம்பதியினரோடு அன்றைய தினத்தை செலவழிப்போம். இந்த மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பலன்தரும் பிராந்தியத்தைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் நேரில் பார்த்து அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.
பேருந்து நிற்குமிடத்திற்கு நாம் வந்து சேரும்போது, அங்கு ஏகப்பட்ட ஜனங்கள் காத்துக்கொண்டு நிற்பதை பார்க்கிறோம். வந்து சேர்ந்த மாத்திரத்தில் நம்முடன் வந்த மிஷனரி தோழர்கள் அங்கு நிற்கிற பெண்மணியிடமும் அவரது மகனிடமும் பைபிளிலிருந்து ஆர்வமிக்க உரையாடலை ஆரம்பிக்கிறார்கள். பிரெஞ்சு மொழி தெரியாததால் நம்மால் புன்முறுவலோடு சும்மா நிற்கத்தான் முடிகிறது! அந்தப் பெண்மணி காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை பெற்றுக்கொள்ளவும் பஸ் வந்து சேரவும் சரியாக இருக்கிறது; பின்பு எல்லாரும் ஒரே சமயத்தில் முண்டியடித்துக் கொண்டு பஸ்ஸில் ஏற முயலுகிறார்கள்! நாம் தட்டுத்தடுமாறி ஏறுகையில் ஒரு பெரிய கும்பல் நம்மை பின்னாலிருந்து தள்ளுகிறது. பஸ்ஸின் பின்பக்கத்திற்கு செல்லும்போது நம் கால்களை சரியாக கீழே ஊன்றுவதே பெரும்பாடாகிறது. டிரைவர் பஸ்ஸை கிளப்பியதும் நாம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறோம். இடையிடையே ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பஸ் சாய்ந்து நிற்கையில் இன்னும் நிறைய பேர் ஏறி நெரித்துத் தள்ளுகிறார்கள். சக பயணிகளைப் பார்த்து நாம் புன்னகைக்க அவர்களும் பதிலுக்கு புன்னகை புரிகிறார்கள். அவர்களிடம் பேச முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
பஸ் வேகமாக செல்லும்போது தெருக்கள் சுறுசுறுப்போடு இயங்குவதை ஜன்னல் வழியாக பார்க்கிறோம். இரண்டு பெண்கள் தலையில் பெரிய சுமையை வைத்துக்கொண்டு சேர்ந்து நடந்து செல்கின்றனர். அதில் ஒருத்தி பெரிய தண்ணீர் பாத்திரத்தை தலையில் லாவகமாக சுமந்து செல்கிறாள். வியாபாரி ஒருவர் நடைபாதையில் போர்வையை விரித்து அதில் விலை குறைந்த அணிகலன்கள் சிலவற்றை விற்பனைக்கு பரப்பி வைத்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் ஜனங்கள் விற்பதும் கொள்வதுமாக இருக்கிறார்கள்; அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை.
என் அருகில் நிற்கிற பென் திடீரென ஏதோ தன் காலை கொத்துவதுபோல் உணர்கிறார். என்னவாக இருக்கும்? பஸ்ஸிலோ ஒரே நெரிசல், ஆனால் மீண்டும் கொத்துகிறது. அவர் கஷ்டப்பட்டு கீழே பார்த்தால், வாத்து! காலருகே உள்ள பையில் இருந்துகொண்டு அவ்வப்போது தலையை வெளியே நீட்டி அவரை கொத்துகிறது! அந்த வாத்தின் சொந்தக்காரர் அதை விற்பதற்கு சந்தைக்கு எடுத்துச் செல்கிறார் போலும் என்கிறார் பென்.
பிராந்தியத்தை அடைந்ததும் நாம் ஆப்பிரிக்கர் வாழும் பகுதிக்குச் செல்ல இருப்பதை அறிந்து சந்தோஷப்படுகிறோம். முதல் வீட்டை நெருங்கியதும் வந்திருப்பதை வீட்டுக்காரருக்கு அறிவிக்க பென் அதிக உற்சாகத்துடன் கைதட்டுகிறார். இங்குள்ளவர்கள் இவ்வாறே “கதவை தட்டுகிறார்கள்.” ஓர் இளைஞர் வருகிறார்; அவர் பிஸியாக இருப்பதாகவும் கொஞ்ச நேரம் கழித்து வரும்படியும் சொல்கிறார்.
அடுத்த வீட்டில், நாம் ஒரு பெண்மணியை சந்திக்கிறோம். அப்பெண்மணி பேசுகிற உள்ளூர் மொழியோ பென்னுக்குப் புரியாத மொழி. எனவே அந்தப் பெண்மணி தன் மகனை அழைத்து பென் சொல்வதை மொழிபெயர்க்கும்படி கேட்கிறார். பென் பேசி முடித்ததும் அந்தப் பெண்மணி பைபிள் சிற்றேட்டை ஏற்றுக்கொள்கிறார், அவருடைய மகனும் அந்தச் சிற்றேட்டிலுள்ள விஷயங்களை தன் அம்மாவுக்கு சொல்லிக் கொடுப்பதாக உறுதியளிக்கிறான். மூன்றாவது வீட்டில், நிறைய இளைஞர்கள் வீட்டின் முன்பகுதியில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களில் இருவர் விருந்தினர் உட்காருவதற்காக உடனே தங்கள் நாற்காலியிலிருந்து எழுந்திருக்கிறார்கள். வணக்கத்தில் சிலுவையை பயன்படுத்துவதைப் பற்றிய சுவாரஸ்யமான உரையாடல் தொடர்கிறது. அடுத்த வாரத்தில் இன்னும் அதிக விஷயங்களை கலந்தாலோசிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இப்போது முதல் வீட்டில் பிஸியாக இருந்த அந்த இளைஞரை சந்திப்பதற்கான நேரம். அந்தத் தெருவில் இளைஞர்களுடன் நாம் பேசிக்கொண்டிருந்ததை அவர் எப்படியோ கேட்டிருக்கிறார். அவருக்கு பைபிள் சம்பந்தமாக நிறைய கேள்விகள் இருப்பதாகவும் தனக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்கும்படியும் கேட்கிறார். பென் தன்னுடைய காலண்டரை பார்த்துவிட்டு அடுத்த வாரம் இதே நேரத்தில் வருவதற்கு ஒத்துக்கொள்கிறார். மதிய உணவுக்காக மிஷனரி இல்லம் திரும்பும் வழியில் பென்னும் கேரனும் பைபிள் படிப்புகள் நடத்துவதை மிகக் கவனமாக திட்டமிட வேண்டும் என சொல்கிறார்கள்; ஏனெனில், தங்களால் நடத்த முடிவதற்கும் அதிகமான பைபிள் படிப்புகளை இங்கு ஆரம்பிப்பது எளிது.
பிரெஞ்சு மொழியை அவர்கள் சரளமாக பேசுவதைக் கண்டு நாம் பாராட்டுகிறோம். அவரும் கேரனும் ஆறு வருடங்களாக மிஷனரி ஊழியம் செய்து வருவதாகவும் பிரெஞ்சு மொழியை சரளமாக பேச முடிவதாகவும் பென் கூறுகிறார். ஒரு புதிய மொழியை கற்பது சாமானியமான விஷயம் அல்ல, ஆனால் விடா முயற்சி பலன் தந்தது என அவர்கள் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மதியம் 12:30 மணிக்கு மதிய உணவுக்காக மிஷனரிகள் அனைவரும் மேஜையை சுற்றிலும் அமருகிறார்கள். காலை மற்றும் மதிய உணவை தயாரிப்பதற்கும் அதற்குப்பின் பாத்திரங்களை கழுவுவதற்கும் ஒவ்வொரு நாளும் ஒரு மிஷனரி நியமிக்கப்படுகிறார் என்று தெரிந்துகொள்கிறோம். இன்றும் ஒரு மிஷனரி, வாயில் நீர் ஊறும் அளவுக்கு சிக்கன் ஃப்ரையும் ஃப்ரெஞ்ச் ஃப்ரையும் அதோடு டொமேட்டோ சாலடும் தயாரித்திருக்கிறார். இந்த உணவை தயாரிப்பதில் அந்த மிஷனரி கைதேர்ந்தவர்!
பென், கேரனின் மதிய புரோக்ராம் என்ன? மதியம் 1 முதல் 3 மணி வரை வெயிலுக்கு பயந்து ஊரே ஒளிந்துகொள்கிறது என அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, மிஷனரிகள் பொதுவாக அதில் கொஞ்ச நேரத்தை படிப்பதற்கு அல்லது குட்டித் தூக்கம் போடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். புதிய மிஷனரிகளும் சீக்கிரத்தில் இதைப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள் என கேரன் சொல்வது ஆச்சரியமாக இல்லை!
சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மறுபடியும் வெளி ஊழியத்திற்குச் செல்கிறோம். ஆர்வம் காண்பித்த ஒருவரை சந்திக்க கொஞ்ச நாட்களாகவே பென் முயற்சி செய்துவருகிறார். ஆனால் பென் கைதட்டியபோது இந்த முறையும் அந்த நபருக்கு பதிலாக வேறு இரண்டு இளைஞர்களே வெளி வருகிறார்கள். அந்த வீட்டுக்காரர் பென் வந்து சந்தித்ததைப் பற்றி தங்களிடம் ஏற்கெனவே சொல்லியிருப்பதோடு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற பைபிள் படிப்பு உதவி புத்தகத்தை தாங்கள் கண்டிப்பாக பெற்றுக்கொள்ளும்படியும் சொல்லியிருப்பதை தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு அந்தப் புத்தகத்தை கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அடுத்து, ஒரு பஸ்ஸில் ஏறுகிறோம். அது, ஆர்வம் காட்டும் ஒரு பெண்மணிக்கு கேரன் பைபிள் படிப்பு நடத்தப்போகிற இடத்துக்கு நம்மை கொண்டு சேர்க்கும்.
நெரிசலான அந்த சாலை வழியே பயணிக்கையில், ஒருநாள் மற்ற பயணிகளுடன் டாக்ஸியில் அவர்கள் இருவரும் பயணம் செய்கையில் அந்த பெண்மணியை சந்தித்ததாக கேரன் சொல்கிறார். பயணத்தின்போது கேரன் ஒரு துண்டுப்பிரதியை வாசிக்கும்படி அந்தப் பெண்மணிக்கு கொடுத்தார். அவள் அதை வாசித்துவிட்டு வேறு துண்டுப்பிரதியைத் தரும்படி கேட்டாள். அதையும் அவள் ஆர்வத்தோடு வாசித்தாள். பயணத்தின் முடிவில், அந்தப் பெண்மணியை வீட்டில் சந்திப்பதற்கு கேரன் ஏற்பாடு செய்தார்; கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டிலிருந்து பலன்தரும் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு, அந்த சிற்றேட்டிலிருந்து ஐந்தாவது பாடத்தை கேரன் நடத்த போகிறார்.
அந்த நாளை வெளி ஊழியத்தில் முழுமையாக நாம் அனுபவித்து மகிழ்ந்து விட்டோம்; ஆனாலும் மிஷனரி வேலை சம்பந்தமாக இன்னும் சில கேள்விகள் பாக்கி இருக்கின்றன. மிஷனரி இல்லத்திற்குத் திரும்பியதும் நமக்கு ஓர் எளிய உணவு தருவதாகவும், நம் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் அந்த மிஷனரி தம்பதியினர் உறுதியளிக்கிறார்கள்.
எல்லாவற்றையும் எப்படி சீராய் செய்கிறார்கள்
பொரித்த முட்டைகளையும், ஃப்ரெஞ்சு ரொட்டியையும், ச்சீஸையும் சாப்பிடுகையில், மிஷனரி வாழ்க்கையைப் பற்றி இன்னும் கூடுதல் விஷயங்களை அறிந்துகொள்கிறோம். பொதுவாக திங்கட்கிழமைகளில் மிஷனரிகள் ஓய்வு எடுக்கிறார்கள் அல்லது தங்களுடைய சொந்த வேலைகளை கவனிக்கிறார்கள். பெரும்பாலான மிஷனரிகள் தங்களுடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுத அந்நாளில் சிறிது நேரத்தை செலவிடுகிறார்கள். வீட்டிலிருந்து பெறும் தகவலை மிஷனரிகள் மிக முக்கியமானதாக கருதுகிறார்கள்; கடிதங்களை எழுதுவதிலும் பெறுவதிலும் அவர்கள் அதிக ஆனந்தம் அடைகிறார்கள்.
மிஷனரிகள் நெருங்கிய சூழலில் வசிப்பதாலும் வேலை செய்வதாலும் அன்பாக பழகுவதன் மூலமும் ஆவிக்குரிய விஷயங்களை கலந்துபேசுவதன் மூலமும் தங்களுக்கு இடையே நல்ல பேச்சுத்தொடர்பை காத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இதற்கு உதவியாக, தனிப்பட்ட விதமாக ஒழுங்கான அட்டவணையைப் பின்பற்றி தவறாமல் பைபிள் படிப்பதோடு, எல்லா திங்கட்கிழமை மாலைகளிலும் மிஷனரிகள் காவற்கோபுர பத்திரிகையுடனும் பைபிளை படிக்கிறார்கள். பலதரப்பட்ட பின்னணியிலிருந்து வந்த மிஷனரிகள் ஒன்றாக வாழும்போது சிறு சிறு பிணக்கங்களை தவிர்க்க முடியாதுதான், ஆனாலும் குடும்பமாக படிக்கும் இந்த ஆவிக்குரிய ஏற்பாடு சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க அவர்களுக்கு உதவி செய்வதாக பென் குறிப்பிடுகிறார். அது தன்னைத்தான் உயர்வாக எண்ணுவதை தவிர்க்கவும் உதவுகிறது என அவர் வலியுறுத்துகிறார்.
மனத்தாழ்மையும் மிக மிக முக்கியம். மற்றவர்கள் தங்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல, தாங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காகவே மிஷனரிகள் அனுப்பப்படுகிறார்கள். எந்த மொழியாக இருந்தாலும், “என்னை மன்னிச்சிருங்க” என சொல்வது, அதுவும் குறிப்பாக ஒருவர் ஏதோவொன்றை அறியாமல் சொல்லியோ செய்தோவிட்டால் மன்னிப்பு கேட்பதே கஷ்டமான விஷயம் என்பதை மிஷனரி நண்பர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அபிகாயிலின் உதாரணத்தை பென் நமக்கு நினைப்பூட்டுகிறார்; அவள் தன் கணவருடைய மூர்க்கத்தனமான நடத்தைக்காக மன்னிப்புக் கேட்பதன் மூலம் விபரீதத்திற்கு வழிநடத்தும் சூழ்நிலையை சரிக்கட்டினாள். (1 சாமுவேல் 25:23-28) ‘சமாதானமாக’ வாழ்வதே ஒரு சிறந்த மிஷனரிக்கு அழகு.—2 கொரிந்தியர் 13:11.
மிஷனரி குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களையும் கலந்து பேசுவதற்காக மாதத்திற்கு ஒருமுறை மிஷனரிகள் கூடிவருகிறார்கள். அதற்குப் பின்பு அனைவரும் விசேஷித்த இனிப்பு உண்டு மகிழ்கிறார்கள். இது மிகவும் நடைமுறையான—சுவையான—ஏற்பாடாக தெரிகிறது.
இரவு உணவுக்குப்பின் மிஷனரி வீட்டிற்குள் சுற்றி பார்வையிடுகிறோம். வீடு அளவானதாக இருந்தாலும் அதை சுத்தமாக வைத்திருக்க மிஷனரிகள் சேர்ந்து உழைப்பதை நாம் காண்கிறோம். அங்கு ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்டவ் அனைத்தும் இருக்கின்றன. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள இது போன்ற வெப்ப மண்டல நாடுகளில் ஏர் கண்டிஷன் வசதியும் இருக்கலாம் என கேரன் சொல்கிறார். நேர்த்தியான தங்குமிடங்கள், ஆரோக்கியமான உணவு, உடல் நலத்திற்கு எளிய முன்னெச்சரிக்கைகள் ஆகியவை மிஷனரிகள் ஆரோக்கியமாகவும் பலன்தருகிறவர்களாகவும் இருப்பதற்கு உதவுகின்றன.
நல்ல அம்சங்களிடம் கவனத்தை ஒருமுகப்படுத்துதல்
நாம் பார்த்த அனைத்தும் நம் மனதை வெகுவாய் கவர்ந்திருக்கின்றன. இந்த மிஷனரி வேலையை நாமும் செய்ய முடியுமா? நாம் எப்படி உறுதியாக சொல்லலாம்? சிந்தித்துப் பார்ப்பதற்கு மிஷனரி தம்பதியினர் சில விஷயங்களை நம்மிடம் எடுத்து சொல்கிறார்கள்.
முதலாவதாக, கிறிஸ்தவ மிஷனரிகள் சாதனை படைப்பதற்காக வேறு நாடுகளுக்குச் செல்வதில்லை என கூறுகிறார்கள். கடவுளுடைய அருமையான வாக்குறுதிகளை கற்றுக்கொள்ள விரும்பும் நல்மனமுடையோரை அவர்கள் தேடிச் செல்கிறார்கள். மிஷனரிகள் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 140 மணிநேரம் ஊழியத்தில் செலவிடுகிறார்கள். ஆகவே ஊழியத்திடம் காட்டும் அன்பு தவிர்க்க முடியாதது.
‘ஆனால் பாம்பு, பல்லி, பூச்சிகளைப் பற்றி என்ன?’ என்று நாம் யோசிக்கிறோம். மிஷனரி ஊழியத்திற்கு நியமிக்கப்படும் அநேக இடங்களில் இவற்றைக் காண முடிந்தாலும், மிஷனரிகளுக்கு இவை யாவும் பழக்கமாகிவிட்டன என பென் சொல்கிறார். ஒவ்வொரு மிஷனரி நியமிப்பிலும் அதற்கே உரிய சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன; காலப்போக்கில், மிஷனரிகள் தங்கள் நியமிப்பிலுள்ள நல்ல அம்சங்களிடமே தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்கள் என அவர் கூறுகிறார். “வித்தியாசமாக” முதலில் நினைத்த நிலைமைகள் சீக்கிரத்தில் சாதாரணமாகிவிடுகின்றன; சில சமயங்களில் மகிழ்வூட்டுவதாயும் ஆகிவிடுகின்றன. மேற்கு ஆப்பிரிக்காவில் பல ஆண்டு கால மிஷனரி சேவைக்குப் பின்பு சொந்த பொறுப்புகள் காரணமாக வீடு திரும்பிய ஒரு சகோதரி, மிஷனரி வேலைக்காக தன்னுடைய நாட்டை விட்டுவந்ததை காட்டிலும் இப்போது இந்த நியமிப்பை விட்டுச் செல்வது அதிக கடினமாக இருப்பதாக சொன்னார்கள். ஏனெனில் இது அவர்களுடைய வீடுபோல் ஆகியிருந்தது.
நீங்கள் தயாரா?
நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கு பென்னும் கேரனும் அதிக விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அயல்நாட்டில் மிஷனரி சேவை செய்வதைக் குறித்து எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? அப்படி யோசித்திருந்தீர்கள் என்றால் நீங்கள் கற்பனை செய்திருந்ததைவிட இப்போது இந்த இலக்கை அடைவது உங்களுக்கு இலகுவாகவே இருக்கலாம். முழுநேர ஊழியத்தை மனமார நேசிப்பதும் ஜனங்களுக்கு உதவும் வேலையை சந்தோஷமாக செய்வதுமே இதற்கான முக்கிய தேவைகளில் ஒன்று. மிஷனரிகள் சூப்பர் ஹீரோக்கள் அல்ல, அவர்கள் சாதாரண ஆண்களும் பெண்களுமே என்பதை நினைவில் வையுங்கள். மிக முக்கியமான வேலையை செய்து முடிப்பதற்கு அவர்கள் தங்களால் இயன்ற மிகச் சிறந்ததை செய்கிறார்கள்.
[பக்கம் 27-ன் படங்கள்]
ஒவ்வொரு நாளையும் தினவசன கலந்தாலோசிப்புடன் ஆரம்பிக்கிறார்கள்
[பக்கம் 28, 29-ன் படங்கள்]
ஆப்பிரிக்காவின் காட்சிகள்
[பக்கம் 29-ன் படம்]
மிஷனரி வாழ்க்கை அதிக திருப்தியளிக்கலாம்