உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 9/1 பக். 19-21
  • “பிரான்ஸில் என்ன நடக்கிறது?”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “பிரான்ஸில் என்ன நடக்கிறது?”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • நீண்டதொரு நாள்
  • பலன்கள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 9/1 பக். 19-21

“பிரான்ஸில் என்ன நடக்கிறது?”

“விடுதலை, அருமை விடுதலை.” இது, “லா மார்ஸேயாஸ்” எனப்படும் பிரான்ஸின் தேசியகீதத்திலுள்ள வரியாகும். நிச்சயமாகவே விடுதலை என்பது அனைவரும் மதிக்கத்தக்க ஒன்று. ஆயினும் பிரான்ஸில் தற்போது நடக்கும் காரியங்களை பார்த்தால், அடிப்படை சுதந்திரமும்கூட பறிக்கப்பட்டுவரும் நிலை கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆகவேதான் கடந்த 2000-⁠ம் ஆண்டில் நவம்பர் 3, வெள்ளிக்கிழமை அன்று, பத்தாயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் ஒரு விசேஷ துண்டுப்பிரதியை நாடெங்கும் விநியோகித்தனர்; மொத்தம் 1 கோடியே 20 லட்சம் பிரதிகள். அதன் தலைப்பு, “பிரான்ஸில் என்ன நடக்கிறது? சுதந்திரம் பறிபோகுமா?”

த ற்போது சில ஆண்டுகளாக பிரான்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் நசுக்கப்பட்டு வருகிறார்கள்; அவர்களை நசுக்குவது அரசியல்வாதிகளும் மதப்பிரிவுகளை எதிர்க்கும் அமைப்புகளுமே. இதனால் சாட்சிகள் தனியாகவும் சபையாகவும் தேசிய அளவிலும் பிரச்சினையை எதிர்ப்படுகின்றனர். என்றாலும், 2000-⁠ம் ஆண்டு, ஜூன் 23 அன்று, பிரான்ஸின் மிக உயர்ந்த நீதிமன்றமாகிய காங்சேய் டேட்டா குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அது 1,100-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த 31 கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உறுதி செய்தது. யெகோவாவின் சாட்சிகளது வணக்க முறை பிரெஞ்சு சட்டத்திற்கு முற்றிலும் இசைவானதே; பிற மதங்களுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு சலுகைகளை பெற அவர்களது ராஜ்ய மன்றங்களும் தகுதி பெறுகின்றன என அந்த நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால் இத்தீர்ப்பைத் துளியும் மதிக்காமல் பிரெஞ்சு நிதி அமைச்சகம் நடந்துகொள்கிறது; மத நிறுவனங்களுக்கு சட்டப்படி வழங்கப்படும் வரிவிலக்கை யெகோவாவின் சாட்சிகளுக்கு வழங்க தொடர்ந்து மறுக்கிறது. இந்த அமைச்சகம் பிரான்ஸிலிருக்கும் 1,500 சபைகளிலுள்ள சாட்சிகளும் நண்பர்களும் அளிக்கும் நன்கொடைகளுக்கு 60 சதவீத வரியை விதித்துள்ளது. தற்போது இது குறித்து வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

மேற்கூறப்பட்ட துண்டுப்பிரதி விநியோகத்தின் நோக்கம், இந்த முரண்பாட்டை வெட்டவெளிச்சமாக்குவது; அத்துடன், இஷ்டப்படி வரிவிதிப்பதாலும் அனைவரது மத சுயாதீனத்தையும் பறிக்கும் விதத்தில் இயற்றப்பட்டுள்ள சட்டங்களாலும் ஏற்படும் ஆபத்தை சுட்டிக்காட்டுவது.a

நீண்டதொரு நாள்

சில சபைகளிலிருந்த சாட்சிகள், காலை இரண்டு மணிக்கு விநியோகிப்பை ஆரம்பித்தனர். அவர்கள் ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள், விமான நிலையங்கள் ஆகியவற்றுக்கு முன்பாக விநியோகிப்பை தொடங்கினர். ஆறு மணிக்கு பாரிஸ் உயிர்பெற்றது. சுமார் 6,000 வாலண்டியர்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டனர்; வேலைக்கு செல்பவர்களை சந்திப்பதே அவர்களது நோக்கம். ஓர் இளம் பெண் கூறினாள்: “மத சுதந்திரத்திற்காக நீங்கள் செய்வது மெச்சத்தக்கது. இதில் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே உட்படவில்லை.” மார்செய்ல்ஸ் நகரில், 350-⁠க்கும் மேற்பட்ட சாட்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வீதிகளிலும் இத்துண்டுப்பிரதியை இலவசமாய் வழங்கினர். ஒரு மணிநேரத்திற்குள், தேசிய வானொலி நிலையம் இவ்விநியோகிப்பை பற்றி அறிவித்தது; நேயர்களை யெகோவாவின் சாட்சிகள் சந்திக்க வாய்ப்பிருப்பதாக அது அறிவித்தது. மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றம் அமைந்துள்ள ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள, மத்திய ரயில் நிலையத்தில் தங்களுக்கான பிரதியை பெற்றுக்கொள்வதற்காக பயணிகள் வரிசையில் பொறுமையுடன் காத்து நின்றனர். நம் மத நம்பிக்கைகளை ஏற்காத போதிலும், இந்தப் போராட்டம் முக்கியம் என்பதாலும், நியாயமானது என்பதாலும், நம் வழக்கில் அக்கறையுடன் கவனம் செலுத்தி வருவதாக ஒரு வழக்கறிஞர் கூறினார்.

எட்டு மணிக்கு, கொட்டும் மழை பெய்வது ஒருபுறமிருக்க, ஆல்ப்ஸ் மலை தவழும் கிரநோபில் நகரில் 507 சாட்சிகள் ஒரு தெரு விடாமல் அலசினர், அல்லது அத்துண்டுப்பிரதியை வீட்டுத் தபால் பெட்டிகளில் போட்டனர். ஏதோ நடக்கிறதே என எட்டிப் பார்த்த கார், டிராம் டிரைவர்களும் தங்கள் வண்டிகளை நிறுத்தி ஒரு துண்டுப்பிரதியை பெற்றுச் சென்றனர். மேற்கே அமைந்துள்ள ப்வாட்டீயே நகரில், ஒன்பது மணிக்கு வந்து இறங்கிய பயணிகளை சந்தித்தபோது, ஏற்கெனவே அவர்கள் புறப்பட்ட இடத்தில் துண்டுப்பிரதியை பெற்றுக்கொண்டது தெரிய வந்தது. மலூஸ் என்ற இடத்தில், ஜெர்மானிய எல்லைப் பகுதியில், ஏற்கெனவே 40,000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

பத்து மணியளவில், தங்களிடமிருந்த துண்டுப்பிரதிகளில் பாதிக்கும் அதிகமானவற்றை அநேக சபைகள் விநியோகித்துவிட்டன. காலையில் நேரம் செல்லச் செல்ல, வெகு சிலர் மட்டுமே தங்களுக்கு வேண்டாம் என மறுத்தனர்; ஆனால் பல சுவாராஸ்யமான உரையாடல்கள் நடைபெற்றன. ஸ்விட்ஸர்லாந்தின் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பஸான்ஸோனில் ஓர் இளைஞன் பைபிளில் ஆர்வம் காட்டினான்; கடவுள் துன்பத்தை ஏன் அனுமதிக்கிறார் என்று கேட்டான். அந்த உரையாடலை தொடருவதற்காக அருகிலிருந்த ராஜ்ய மன்றத்திற்கு வரும்படி அவ்விளைஞனை சாட்சி அழைத்தார்; கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற புரோஷுரில் உடனே பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

மதியம் தங்களது உணவு இடைவேளையில் அநேக சாட்சிகள் ஓரிரு மணிநேரத்தை சாட்சி கொடுக்க செலவிட்டனர். பிற்பகல் முழுவதிலும், விநியோகிப்பு தொடர்ந்தது; எண்ணற்ற சபைகள் அந்தப் பிற்பகலில் மூன்று அல்லது நான்கு மணிக்குள் தங்கள் விநியோகிப்பை முடித்துவிட்டன. ஷேம்பேன் மதுபான உற்பத்திக்கு பெயர்பெற்ற ரீம்ஸ் நகரில், முன்பு சாட்சிகளுடன் பைபிள் படித்தவர்கள் அல்லது கூட்டுறவு வைத்திருந்தவர்கள் சிலர், மீண்டும் சபை கூட்டங்களுக்கு வர விருப்பம் தெரிவித்தனர். போர்டோவில் மூன்று வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதே நகரில், சாட்சிகளில் ஒருவர் செய்தித்தாள் வாங்குவதற்காக ஒரு கடைக்கு சென்றார்; கவுண்டரில் துண்டுப்பிரதிகள் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். அந்தக் கடைக்காரப் பெண்மணி முன்னாள் சாட்சியாவார்; அவர் துண்டுப்பிரதியைப் பெற்றிருந்தார், அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டவராய், தானாகவே விநியோகிக்க எண்ணி ஜெராக்ஸ் செய்த அநேக பிரதிகளை வைத்திருந்தார்.

நார்மண்டி மாநிலத்திலுள்ள லே ஹாவ்ரே நகரில், யெகோவாவின் சாட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு வரிவிதிக்கப்படுவதை வானொலியில் கேட்ட ஒரு புராட்டஸ்டன்ட் பெண் திடுக்கிட்டார். ஆவலுடன் துண்டுப்பிரதியை வாங்கிக்கொண்டு, அப்படிப்பட்ட அநீதிக்கு எதிராக தைரியமாய் குரலெழுப்புவதற்காக சாட்சிகளை பாராட்டினார். மாலை 7:20 மணிக்கு, லயான்ஸ் நகரில் டிவி மண்டல ஒளிபரப்பு செய்தி இந்த விநியோகத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டது: “இன்று காலை மழைக்குத் தப்புவதுகூட எளிதாய் இருந்தது; யெகோவாவின் சாட்சிகள் விநியோகித்த துண்டுப்பிரதிக்குத் தப்ப முடியவில்லை.” இரண்டு சாட்சிகளை பேட்டி கண்டனர்; அவர்கள் இவ்விநியோகிப்புக்கான காரணங்களை விளக்கினர்.

வேலை முடிந்தபிறகு இவ்விநியோகிப்பில் கலந்துகொள்ள விரும்பிய சாட்சிகள், வீடு திரும்பும் பொதுமக்களிடம் இத்துண்டுப்பிரதிகளில் சிலவற்றை விநியோகித்தனர்; மற்றவற்றை வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் தபால் பெட்டிகளில் போட்டனர். பீங்கான் உற்பத்திக்குப் பிரசித்திபெற்ற ப்ரெஸ்ட், லிமோஜேஸ் போன்ற நகரங்களில் சினிமாவுக்குச் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு வீடு திரும்புவோரிடம் துண்டுப்பிரதிகளைக் கொடுத்ததே அன்றைய கடைசி விநியோகிப்பு. மீதமிருந்த துண்டுப்பிரதிகள் சேகரிக்கப்பட்டு அடுத்த நாள் காலை விநியோகிக்கப்பட்டன.

பலன்கள்

சாட்சி ஒருவர் எழுதினதாவது: “நம்மை பலமிழக்கச் செய்வதாக நம் விரோதிகள் நினைக்கின்றனர். உண்மையில் அதற்கு நேர்மாறாகவே நடக்கிறது.” பெரும்பாலான சபைகளில், 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட சாட்சிகள் அன்றைய விநியோகிப்பில் பங்கெடுத்தனர்; சிலர் இவ்வேலைக்காக 10, 12, அல்லது 14 மணிநேரத்தை செலவிட்டனர். பிரான்ஸின் வடக்குப் பகுதியிலுள்ள எம் என்ற இடத்தில் நைட் ஷிஃப்ட் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பிறகு, சாட்சி ஒருவர் காலை ஐந்து மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை இத்துண்டுப்பிரதியை விநியோகித்தார். 1906 முதலே சபை செயல்பட்டுவந்த இடமான, அருகிலுள்ள டணென் என்ற பகுதியில், 75 சாட்சிகள் வெள்ளிக்கிழமை இத்துண்டுப்பிரதியை விநியோகிப்பதற்காக 200 மணிநேரத்தை செலவிட்டனர். மற்றவர்கள் வயோதிகம், உடல்நலக் குறைவு, சாதகமற்ற வானிலை ஆகியவற்றின் மத்தியிலும் எப்படியாவது இவ்விநியோகிப்பில் பங்கெடுக்க தீர்மானமாய் இருந்தனர். உதாரணமாக, லே மான்ஸ் நகரில் 80 வயதைத் தாண்டிய மூவர் வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் தபால் பெட்டிகளில் இத்துண்டுப்பிரதியை போடுவதில் இரண்டு மணிநேரம் செலவிட்டனர்; சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே சாட்சி ஒருவர் ரயில் நிலையத்திற்கு முன்பு துண்டுப்பிரதிகளை விநியோகித்தார். முன்பு செயலற்றுப் போயிருந்த எண்ணற்ற சாட்சிகள் இவ்விசேஷ விநியோகிப்பில் பங்கேற்றதைக் கண்டபோது ஒவ்வொருவர் உள்ளத்திலும் பிறந்த உற்சாகத்திற்கு அளவேயில்லை!

நிச்சயமாகவே இவ்விநியோகிப்பால் சிறந்த விதத்தில் சாட்சி கொடுக்க முடிந்தது. பலதரப்பட்ட மக்கள் இத்துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்டனர்; இவர்களில் அநேகரை வீடுகளில் காண்பது அரிது. சாட்சிகளின் நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன் இன்னும் அதிகத்தை இச்செயல் சாதித்ததாக எண்ணற்றோர் நினைத்தனர். இந்த விநியோகிப்பை, பிரான்ஸில் உள்ள அனைவரது மனசாட்சி மற்றும் வணக்க சம்பந்தப்பட்ட சுதந்திரத்தையும் காத்துக்கொள்ள உதவிய ஓர் ஏதுவாக கருதினர். தங்கள் நண்பர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு கொடுப்பதற்காக கூடுதலான துண்டுப்பிரதிகளை பொது மக்கள் கேட்டு வாங்கியது இதற்கு அத்தாட்சி அளித்தது.

பிரான்ஸைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவின் பெயரை யாவரறிய தெரியப்படுத்துவதிலும் ராஜ்ய பிரசங்க வேலையின் சார்பில் வாதாடுவதிலும் பெருமைப்படுகின்றனர். (1 பேதுரு 3:15, NW) “எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்[ண]” தங்களால் முடியும் என்பதும், தங்கள் பரலோக தகப்பன் யெகோவாவை துதிப்பதில் தங்களுடன் இன்னும் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்துகொள்வர் என்பதும் அவர்களது உள்ளப்பூர்வமான நம்பிக்கையாகும்.​—⁠1 தீமோத்தேயு 2:⁠2.

[அடிக்குறிப்பு]

a இதைப் போன்றே ஜனவரி 1999-⁠ல் துண்டுப்பிரதி விநியோகிக்கப்பட்டது; அது மத பாகுபாட்டிற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக செய்யப்பட்டது. காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1999, பக்கம் 9-ஐயும், 2000 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகத்தில் (ஆங்கிலம்) பக்கங்கள் 24-6-ஐயும் காண்க.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்