ஒளி நகரத்தில் சுடர்களாக பிரகாசித்தல்
ஃப்லூக்டுவட் நெக் மெர்கிடூர் அல்லது “அலைகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் அவள் ஆழ்ந்துவிடுவதில்லை” என்பதே பாரிஸ் நகரத்தின் பொன்மொழி.
ஒரு கப்பலை போல, கடந்த 2,000 வருடங்களாக புயல் சீற்றங்களென அந்நியரின் படையெடுப்புகள் பலவற்றையும் உள்நாட்டு கொந்தளிப்புகளையும் சகித்துநின்று பாரிஸ் தொடர்ந்து மிதக்கிறது. கலைநுட்பமிக்க கம்பீரமான கட்டிடங்களும் சாலைகளின் இருமருங்கிலும் அணிவகுத்து நிற்கும் மரங்களும் உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களும் கொண்ட உலகின் அழகிய நகரங்களில் ஒன்றாக பாரிஸ் திகழ்கிறது. கவிஞர்களும் ஓவியர்களும் தத்துவஞானிகளும் நடமாடும் இடமாக சிலர் அதை நினைக்கிறார்கள். சிலர் அதன் அறுசுவை உணவை ருசித்து சுவைத்து மகிழ்கிறார்கள், அழகிய புதுப்புது பாணிகளை ரசித்து மகிழ்கிறார்கள்.
சரித்திரப்பூர்வமாக, கத்தோலிக்க மதத்தின் கோட்டையாக இருந்திருக்கிறது இந்தப் பாரிஸ். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அறிவொளி என்று அறியப்பட்ட ஐரோப்பிய அறிவுஜீவி இயக்கத்தில் முக்கிய அங்கம் வகித்ததால் அது ஒளி நகரம் என்று அழைக்கப்பட்டது. இன்றோ, அறிந்தோ அறியாமலோ, பெரும்பாலான பாரிஸ் நாட்டவரை தத்துவம் தத்தெடுத்திருக்கிறது.
ஆனால் எதிர்பார்த்தபடி மனித ஞானம் மக்களின் வாழ்க்கையை தீபமாக பிரகாசிக்கச் செய்யவில்லை. பலர் இன்று பல்வேறு இடங்களில் அறிவொளியை தேடிக்கொண்டிருக்கின்றனர். இப்பொழுது சுமார் 90 வருடங்களாக, யெகோவாவின் சாட்சிகள் பாரிஸில் ‘சுடர்களாக பிரகாசித்துக்கொண்டிருக்கின்றனர்.’ (பிலிப்பியர் 2:14) திறமைமிக்க கப்பலோட்டிகளைப் போல, ‘சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர்களை’ ஏற்றிக்கொள்வதற்காக மாறிவரும் போக்குகளுக்கு அல்லது சம்பவங்களுக்கு ஏற்ப தங்களை தொடர்ந்து மாற்றிக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது.—ஆகாய் 2:7.
சவால்மிகு நகரம்
1850-ல், 6,00,000 வாசிகளைக் கொண்ட நகரமாக விளங்கியது பாரிஸ். நகர்ப்புறங்களில் வாழ்பவர்களையும் சேர்த்து தற்போதைய ஜனத்தொகையோ 90 லட்சத்திற்கும் அதிகம். இப்படிப்பட்ட வளர்ச்சியால் பல நாட்டவரும் வசிக்கும் ஒரு கதம்ப நகரமாக பாரிஸ் பரிணமித்திருக்கிறது. உயர் கல்விக்கு உலக மையமாக திகழ்கிறது, உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று இங்கே இருக்கிறது, சுமார் 2,50,000 மாணவர்களின் வீடாக விளங்குகிறது. பாரிஸ் நாட்டு புறநகர் பகுதிகள் சில, அட்டகாசங்களுக்கும் வேலையில்லா திண்டாட்டத்திற்கும் பெயர்பெற்ற அடுக்குமாடிக் கட்டிடங்களால் நிறைந்திருக்கின்றன—இது பாரிஸின் இருண்ட பக்கம். திறமையோடும் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் லாவகத்தோடும் அனைவரும் அகமகிழும் விதத்தில் நற்செய்தியை பகிர்ந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் முயன்றிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.—1 தீமோத்தேயு 4:10.
வருடா வருடம் சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான உல்லாச பயணிகள் பாரிஸுக்கு வருகை தருகிறார்கள். அவர்கள் மெய்சிலிர்க்க வைக்கும் ஈஃபில் டவர் மீது ஏறுகிறார்கள், சீன் நதிக்கரை நெடுக உல்லாசமாக உலவுகிறார்கள், அல்லது கஃபேக்கள், ரெஸ்டாரன்டுகள் அமைந்துள்ள சூழலில் லயித்தவர்களாய், நடைபாதைகளில் நகர மனமின்றி நடக்கிறார்கள். ஆனால், பாரிஸ் நாட்டவரின் அன்றாட வாழ்க்கை அரக்கப்பரக்க செல்லும் வாழ்க்கையாகவே இருக்கிறது. “ஜனங்கள் எப்பொழுதும் முண்டியடித்துக் கொண்டுதான் செல்கிறார்கள்” என்று முழுநேர ஊழியர் கிறிஸ்டியான்
சொல்கிறார். “அவர்கள் வேலையிலிருந்து திரும்பி வருகையில், களைத்துப்போய் விடுகிறார்கள்.” பிஸியாக இருக்கும் இப்படிப்பட்ட ஆட்களிடம் பேசுவது அவ்வளவு சுலபமல்ல.
ஆனால், வீடுகளில் ஜனங்களை சந்திப்பதே பாரிஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்படும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று. சில கட்டிடங்களில் இன்டர்காம் வசதி இருக்கிறது. என்றபோதிலும், குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால், பெரும்பாலான அபார்ட்மென்ட்களில் நுழைவதற்கு ‘கோட் நம்பர்’களை பயன்படுத்த வேண்டும், அங்கு நுழைவது என்பது அசாத்தியமான ஒன்று. இதனால் சில இடங்களில், 1,400 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் சாட்சிகள் இருக்கின்றனர். ஆகவே, தொலைபேசியில் சாட்சிகொடுப்பது, சந்தர்ப்ப சாட்சிகொடுப்பது அதிகமதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற வழிகளிலும் யெகோவாவின் சாட்சிகள் ‘ஒளியை பிரகாசிக்க’ செய்ய முடிந்திருக்கிறதா?—மத்தேயு 5:16, NW.
சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதற்கு வாய்ப்புகளும் இடங்களும் ஏராளமாக இருக்கின்றன. பஸ் ஸ்டாப்பில் ஏதோ கலக்கத்தோடு நின்றுகொண்டிருந்த ஒரு பெண்மணியை மார்ட்டீன் பார்த்தார். சமீபத்தில்தான் அந்தப் பெண்மணி தன்னுடைய ஒரே மகளை மரணத்தில் பறிகொடுத்திருந்தார். பைபிள் தரும் ஆறுதலளிக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றிய ஒரு சிற்றேட்டை மார்ட்டீன் அவருக்கு கொடுத்தார். சில மாதங்களுக்கு அந்தப் பெண்மணியை இவர் சந்திக்கவில்லை. அந்தப் பெண்மணியை மார்ட்டீன் மீண்டும் சந்தித்தபோது, அவரோடு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடிந்தது. தன்னுடைய கணவரிடமிருந்து எதிர்ப்பு வந்தபோதிலும், அந்தப் பெண்மணி ஒரு சாட்சியாக மாறினார்.
பயன்தரும் சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல்
பாரிஸ் பொது போக்குவரத்து துறை உலகிலுள்ள மிகவும் பயன்தரும் போக்குவரத்து துறைகளில் ஒன்று. பிரபல மெட்ரோ போக்குவரத்து தினமும் 50,00,000 பேரை சுமந்துசெல்கிறது. ஷாட்லே லேயல் என்ற பாரிஸின் மத்திய சுரங்கப் பாதை உலகிலேயே மிகவும் பெரியது, மிகவும் சந்தடிமிக்கது என சொல்லப்படுகிறது. மக்களை சந்திப்பதற்கு இங்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அலெக்ஸாண்ட்ரா தினமும் வேலைக்கு மெட்ரோவில்தான் பயணிக்கிறாள். லூக்கேமியா என்ற தீரா வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஓர் இளைஞனோடு பேசினாள். பரதீஸிய நம்பிக்கையை விவரிக்கும் ஒரு துண்டுப்பிரதியை அலெக்ஸாண்ட்ரா அவனிடம் கொடுத்தாள். ஆறு வாரங்களுக்கு அதே நேரத்தில் அதே இடத்தில் பைபிள் படிப்பு நடத்தப்பட்டது. பின்பு ஒருநாள் அந்த இளைஞன் வருவதை நிறுத்திவிட்டான். அதற்கு சிறிது காலத்திற்குப்பின், அவனுடைய மனைவி அலெக்ஸாண்ட்ராவுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு வரும்படி கூறினாள், ஏனென்றால் அவளுடைய கணவர் மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அலெக்ஸாண்ட்ரா அதிக தாமதமாக சென்றது வருந்தத்தக்கது. அந்த மனிதன் இறந்த பிறகு, அவனுடைய மனைவி தென்மேற்கு பிரான்ஸிலுள்ள போர்டோ என்ற இடத்திற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டாள். அங்கே அவளை உள்ளூர் சாட்சிகள் சந்தித்தனர். ஓராண்டிற்குப்பின் அந்த விதவை முழுக்காட்டப்பட்ட சாட்சியாகி, தன்னுடைய கணவரை உயிர்த்தெழுதலில் பார்க்கும் நம்பிக்கையோடு இருப்பதை அலெக்ஸாண்ட்ரா கேள்விப்பட்டாள்; அது அவளுக்கு எவ்வளவு ஆச்சரியமான செய்தியாக இருந்தது!—யோவான் 5:28, 29.
பாரிஸிலிருந்து மத்திய பிரான்ஸிலுள்ள லிமோஜேஸுக்கு ரயிலில் பிரயாணம் செய்துகொண்டிருந்த ரினட்டாவிடம் வயதான கிறிஸ்தவ பெண்மணி ஒருவர் பேசினார். ரினட்டா தன்னுடைய சொந்த நாடாகிய போலந்தில் ஐந்து ஆண்டுகள் இறையியல் பயின்றிருந்தாள், அத்தோடு எபிரெயு, கிரேக்கு மொழிகளையும் கற்றிருந்தாள், ஆனால் அவள் கடவுள் நம்பிக்கையை இழந்துவிட்டாள். கடவுளிடம் ஜெபம் செய்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இந்த வயதான பெண்மணி சொல்வதைக் கேட்க உண்மையில் ஆர்வம் இல்லை, அவர் மீண்டும் தன்னிடம் தொடர்புகொள்வார் என்றும் அவள் நினைக்கவில்லை. என்றாலும், ரினட்டா அந்த வயதான சகோதரியிடம் தன் தொலைபேசி எண்ணை கொடுத்தார். ஆனால் அந்தச் சகோதரி உறுதியாக இருந்தார், சில நாட்களுக்குப் பிறகு ரினட்டாவை சந்திக்க தீர்மானித்தார். சாட்சியாக இருக்கும் தம்பதியினர் ரினட்டாவை சந்தித்தபோது, ‘அவுங்க எனக்கு என்ன சொல்லிக் கொடுத்திடப் போறாங்க?’ என நினைத்தாள். இறையியல் படித்திருந்தபோதிலும், பைபிள் சத்தியத்திடம் தாழ்மையோடு ஈர்க்கப்பட்டாள். “இதுதான் சத்தியம் என்பதை நான் உடனடியாக புரிந்துகொண்டேன்” என அவள் கூறுகிறாள். இப்பொழுது, பைபிளின் செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் அதிக மகிழ்ச்சி காண்கிறாள்.
மிஷல் டிரைவிங் கிளாஸில் சேர்ந்திருந்தாள். திருமணத்திற்கு முன்பு பாலுறவு கொள்வதைப் பற்றி கிளாஸிலிருந்த மற்ற மாணவர்கள் பேச ஆரம்பித்தார்கள். மிஷல் இதை ஒத்துக்கொள்ளாமல் கண்டனம் தெரிவித்தாள். ஒரு வாரத்திற்குப் பிறகு, சில்வீ என்ற அந்த டிரைவிங் இன்ஸ்ட்ரக்டர், “நீ ஒரு யெகோவாவின் சாட்சியா?” என்று மிஷலிடம் கேட்டார். மிஷலின் பைபிள் நோக்குநிலை சில்வீயை கவர்ந்தது. பைபிள் படிப்பு ஆரம்பமானது, ஒரு வருடத்திற்குப் பிறகு சில்வீ முழுக்காட்டுதல் பெற்றார்.
பாரிஸிலுள்ள அநேக பூங்காக்களும் தோட்டங்களும் மக்களுடன் உரையாடுவதற்கு ரம்மியமான சூழலை அளிக்கின்றன. இடைவெளியில் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் ஜோசட் என்பவர் பூங்காவிற்கு சென்றார். அங்கே ஆலின் என்ற வயதான ஓர் அம்மா நடந்துகொண்டிருந்தார்கள். பைபிள் தரும் மகத்தான வாக்குறுதிகளைப் பற்றி ஜோசட் அவர்களிடம் பேசினார். ஒரு பைபிள் படிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது, முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு சீக்கிரத்தில் அவர்கள் முன்னேறினார்கள். இப்பொழுது, 74 வயதில், ஆலின் கிறிஸ்தவ சத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியை கண்டடையும் மிகவும் பலன்தரும் ஒழுங்கான பயனியராக ஊழியம் செய்கிறார்கள்.
எல்லா தேசத்தாருக்கும் ஒளி
பல்வகை கதம்ப கலாச்சாரத்தை காண்பதற்கு பாரிஸில் வாழும் சாட்சிகள் தொலைதூர நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டியதில்லை. ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தினர் அயல்நாட்டவர்களே. சுமார் 25 மொழிகளில் நடைபெறும் கிறிஸ்தவ சபைகளும் தொகுதிகளும் அங்கே இருக்கின்றன.
இயல்பாகவே இருக்கும் திறமையும் கற்பனை வளமும் இந்த விசேஷ சுவிசேஷ வேலையில் நல்ல பலன்களை அள்ளித் தருகிறது. பிலிப்பீன்ஸை சேர்ந்த ஒரு சாட்சி தனக்காக சொந்தமாகவே ஒரு பிராந்தியத்தை உருவாக்கினார். ஷாப்பிங் செய்கையில், கடைகளிலுள்ள மற்ற பிலிப்பீன்ஸ் நாட்டவர்களோடு உரையாடுவதன் மூலம் அநேக பைபிள் படிப்புகளை அவரால் ஆரம்பிக்க முடிந்திருக்கிறது.
பிரசங்கிப்பதற்கு முயற்சி எடுப்பது உண்மையிலேயே பலன் தருகிறது. டிசம்பர் 1996-ல், உலகப் புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனி தங்களுடைய ஊருக்கு வருவதை அறிந்து, அந்நிய மொழி பேசும் ஒரு சபையிலுள்ள சாட்சிகள் சர்க்கஸ்காரர்களை சந்திப்பதற்கு தீர்மானித்தனர். காட்சி முடிந்தப் பிறகு ஒரு நாள் மாலையில், ஹோட்டல்களுக்கு வந்துகொண்டிருந்த அந்த சர்க்கஸ்காரர்களிடம் அவர்கள் பேசினார்கள். இப்படி அவர்கள் முயற்சி எடுத்ததால், 28 பைபிள்களையும் 59 கிறிஸ்தவ புத்தகங்களையும் 131 சிற்றேடுகளையும் 290 பத்திரிகைகளையும் அவர்களால் கொடுக்க முடிந்தது. மூன்று-வார கால முடிவில், ‘அக்ரோபேட்’ கலைஞர் ஒருவர் இவ்வாறு கேட்டார்: “நான் எப்படி யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராவது?” மற்றொருவர் இவ்வாறு கூறினார்: “நான் என்னுடைய நாட்டில் பிரசங்கிப்பேன்!”
புதைந்திருக்கும் பொக்கிஷம்
எங்கு பார்த்தாலும் கலை பொக்கிஷங்களாக திகழும் அழகிய பழங்கால கட்டிடங்களை உல்லாச பயணிகள் கண்டுகளிக்கிறார்கள். ஆனால், கண்டுபிடிக்க வேண்டிய அதிக அருமையான பொக்கிஷங்கள் இன்னும் இருக்கின்றன. அரசியல் தூதுவராக இருக்கும் தன்னுடைய மாமாவுடன் அனிஸா பிரான்ஸுக்கு வந்தாள். இவள் தன்னுடைய வீட்டில் தவறாமல் பைபிள் வாசிப்பாள். ஒருநாள் அவசரமாக வீட்டைவிட்டு வெளியே கிளம்பியபோது, ஒரு பயனியர் அவளுக்கு நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்? என்ற துண்டுப்பிரதியை கொடுத்தார். அடுத்த வாரத்தில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. குடும்பத்தாரிடமிருந்து அனிஸாவுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு. முழுக்காட்டுதல் பெறும் அளவுக்கு தன்னுடைய படிப்பில் முன்னேறினாள். மற்றவர்களுடன் சத்தியத்தை பகிர்ந்துகொள்ளும் சிலாக்கியத்தை அவள் எப்படி கருதுகிறாள்? “எனக்கு கூச்ச சுபாவம்; எனவே முதலில் பிரசங்கிப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், பைபிள் வாசிக்கையில் அது என்னை உந்துவிக்கிறது. இப்போது பிரசங்கிக்காமல் சும்மா இருக்கவே என்னால் முடியாது.” இதுவே பாரிஸிலுள்ள சாட்சிகள்—‘கர்த்தருடைய கிரியைகளில் பெருகுகிறவர்களாக’ இருக்கும் சாட்சிகள்—பலருடைய மனோபாவம்.—1 கொரிந்தியர் 15:58.
பாரிஸ் புறநகர்பகுதி வீட்டுவாரிய திட்டங்களுக்குள்ளும் பைபிள் சத்தியம் ஒளிவீசி மற்ற “மணிக்கற்களையும்” கண்டெடுக்கச் செய்கிறது. புரூஸ் என்பவர் சில கேஸட்டுகளை வாங்குவதற்காக தன்னுடைய நண்பனை சந்திக்கச் சென்றார், அந்த நண்பன் அப்போதுதான் ஒரு யெகோவாவின் சாட்சியாகி இருந்தவர். புரூஸுக்குத் தெரிந்த சிலருடன் தன்னுடைய நண்பன் பைபிளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அந்த உரையாடலைக் கேட்டார். பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார், ஆனால் அவருக்கு சில பிரச்சினைகள் இருந்தன. “இந்த ஏரியாவில் என்னை எல்லாருக்கும் தெரியும். என்னுடைய மூத்த அண்ணன் சதா சண்டை போட்டுக்கொண்டிருந்தார், நான் காட்டுக்கத்தலோடு இருக்கும் டான்ஸ் பார்ட்டிகள் ஏற்பாடு செய்தேன். நான் சாட்சியாவதை மற்றவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?” பார்ட்டிகள் ஏற்பாடு செய்யச் சொல்லி வற்புறுத்துதல்கள் வந்தபோதிலும், புரூஸ் அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு பிரசங்கிக்க ஆரம்பித்தார்: “நான் ஏன் சாட்சியாக விரும்பினேன் என்பதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினார்கள்.” அவர் சீக்கிரத்தில் முழுக்காட்டுதல் பெற்றார். சிலகாலத்திற்குப் பிறகு, ஊழியப் பயிற்சி பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
புதையல்களைத் தேடுவதற்கு பெரும் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் நல்ல பலன் கிடைக்கும்போதோ எவ்வளவு மகிழ்ச்சி! ஜாக்கி, புரூனோ, டேமியன் ஆகியோர் பாரிஸில் ரொட்டி தயாரிப்பவர்கள். “எங்களை சந்திக்கவே முடியாது, ஏனென்றால் நாங்கள் எல்லா நேரத்திலும் வேலை செய்தோம், ஒருபோதும் வீட்டில் இருந்ததே கிடையாது” என ஜாக்கி சொல்கிறார். பாட்ரிக் என்ற ஒழுங்கான பயனியர், ஒரு கட்டிடத்தின் மேல் சிறு சிறு அறைகள் இருப்பதைக் கண்டார், அவற்றில் ஒரு அறையிலாவது ஆள் குடியிருக்க வேண்டும் என நினைத்தார். அங்கு தங்கியிருப்பவர்களை சந்திப்பதற்கு விடாமல் முயற்சி செய்தார், அதனால் நல்ல பலன்களையும் பெற்றார். ஒருநாள் பிற்பகல் நேரத்தில் ஜாக்கியை சந்தித்தார், அங்கே அவர் தற்காலிகமாக தங்கியிருந்தார். விளைவு? அந்த மூன்று நண்பர்களும் சாட்சிகளானார்கள், அவர்களுக்கு வேறு வேலை கிடைத்தது, இதனால் அவர்களால் தேவராஜ்ய நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட முடிந்தது.
புயற்காற்றை அடக்குதல்
சமீபத்தில், பிரான்ஸிலுள்ள சில செய்தித் துறைகள் யெகோவாவின் சாட்சிகளை ஆபத்தான மதப் பிரிவினராக சித்தரித்திருக்கின்றன. 1996-ல், யெகோவாவின் சாட்சிகள்—அவர்களைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்ற தலைப்பில் விசேஷ தகவல்கள் அடங்கிய 90 லட்சம் பிரெஞ்சு துண்டுப்பிரதிகளை விநியோகிப்பதில் சாட்சிகள் முழு இருதயத்தோடு பங்குகொண்டார்கள். அது மிகச் சிறந்த பலன்களைத் தந்தது.
அனைவரையும் சென்றெட்டுவதற்கு விசேஷ முயற்சி எடுக்கப்பட்டது. அதிகாரிகள் பலர் சாட்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தனர். முனிசிபல் கவுன்சிலர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “இந்தத் துண்டுப்பிரதியை விநியோகிக்கும் நல்ல வேலையை யெகோவாவின் சாட்சிகள் செய்திருக்கிறார்கள். இது அவர்களைப் பற்றி தவறான அபிப்பிராயங்களைப் போக்குகிறது.” மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “இதற்காகத்தான் நான் அதிக நாட்களாக காத்திருந்தேன்!” பாரிஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு எழுதினார்: “யெகோவாவின் சாட்சிகள்—அவர்களைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்ற துண்டுப்பிரதியை வாசித்தேன். இன்னும் நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறேன், இலவசமாக பைபிளைப் பற்றி கற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன்.” மற்றொருவர் இவ்வாறு எழுதினார்: “உங்களுடைய நேர்மைக்கு நன்றி.” கத்தோலிக்க பெண் ஒருவர் சாட்சிகளிடம் இவ்வாறு சொன்னார்: “இந்தப் பொய்களுக்கு நல்ல பதிலடி கொடுத்திருக்கிறீர்கள்! சபாஷ்!”
1997-ல் கத்தோலிக்க இளைஞர் தின மாநாட்டை முன்னிட்டு பிரசங்க ஊழியம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததால் பாரிஸ் பகுதியிலுள்ள இளம் சாட்சிகளுக்கு அதிக சந்தோஷம். வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தபோதிலும், சுமார் 2,500 சாட்சிகள் இதில் கலந்துகொண்டார்கள். சில நாட்களுக்குள், உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த இளைஞர்களிடம் எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டில் 18,000 பிரதிகளை விநியோகித்தார்கள். யெகோவாவின் பெயருக்கு நற்சாட்சி கொடுத்து சத்தியத்தின் விதைகளை விதைத்ததோடுகூட, இந்த ஊழியம் இளம் சாட்சிகளையும் உற்சாகப்படுத்தியது. இந்த விசேஷ ஊழியத்தில் கலந்துகொள்வதற்காக தன்னுடைய விடுமுறை நாட்களை குறைத்துக்கொண்ட ஓர் இளம் சகோதரி இவ்வாறு எழுதினார்: “பூமியில் யெகோவா தேவனுக்கு மகிழ்ச்சியான மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் அவருடைய பெயரை துதிப்பதற்கு தங்களுடைய பலத்தை பயன்படுத்துகிறார்கள். அதிக பலன்தரத்தக்க இந்த இரண்டு நாட்கள் வாழ்க்கையிலேயே என்னுடைய எல்லா விடுமுறை நாட்களையும்விட உண்மையில் அதிக பிரயோஜனமாக இருந்தன. (சங்கீதம் 84:10)”
பிப்ரவரி 28, 1998—ஹிட்லருடைய ஆணையால் ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகள் மீது தடைவிதிக்கப்பட்டு 65-ம் ஆண்டு நிறைவு நாள். இந்த நாளில், நாசி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நிலைத்துநிற்கிறார்கள் (ஆங்கிலம்) என்ற வீடியோவை வாடகைக்கு அமர்த்தப்பட்ட மன்றங்களில் பொதுமக்களுக்காக பிரான்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் போட்டு காண்பித்தார்கள். 70 லட்சத்திற்கும் அதிகமான அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டன. சரித்திராசிரியர்களும் கான்சன்ட்ரேஷன் முகாமிலிருந்த முன்னாள் கைதிகளும் இதயத்தை தொடும் சாட்சியங்களை கூறினார்கள். பாரிஸிலுள்ள இந்தப் பகுதியில், சாட்சிகளல்லாதவர்களில் கணிசமான எண்ணிக்கையானோர் உட்பட, சுமார் 5,000 பேர் ஆஜரானார்கள்.
பாரிஸிலுள்ள பலர் ஆன்மீக ஒளியை பெரிதும் பாராட்டுகிறார்கள், ராஜ்ய பிரஸ்தாபிகள் ஒளி வீசி பிரகாசிப்பதைக் காண்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. இது இயேசு கூறியது போலவே இருக்கிறது: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.” (மத்தேயு 9:37) இந்நகரத்தில் பிரசங்கிப்பதற்கு வரும் சவால்களை சமாளிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக இருப்பது யெகோவாவுக்குத் துதியுண்டாகும் விசேஷ அர்த்தத்தில் பாரிஸை ஒளி நகரமாக ஜொலிக்கச் செய்திருக்கிறது.
[பக்கம் 9-ன் படம்]
சிட்டி ஹால்
[பக்கம் 9-ன் படம்]
லோவ்ரே அருங்காட்சியகம்
[பக்கம் 9-ன் படம்]
ஓப்ரா கார்னியர்
[பக்கம் 10-ன் படங்கள்]
மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பைபிள் செய்தியை பகிர்ந்துகொள்கிறார்கள்