ஆவிக்குரிய விதத்தில் பலமான குடும்பத்தைக் கட்டுதல்
“யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக் கட்டுப்பாட்டிலும் அவர்களை வளர்த்துவாருங்கள்.” —எபேசியர் 6:4, NW.
1. குடும்பம் சம்பந்தமாக கடவுளுடைய நோக்கம் என்ன, ஆனால் என்ன சம்பவித்தது?
‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.’ (ஆதியாகமம் 1:28) இவ்வாறுதான் ஆதாம் ஏவாளை வாழ்த்தி யெகோவா தேவன் அவர்களுடைய குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தார். (எபேசியர் 3:14, 15) எதிர்காலத்தில் இந்தப் பூமி தங்களுடைய சந்ததியாரால்—பரதீஸிய பூமியில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து தங்களுடைய மகத்தான சிருஷ்டிகரை ஒற்றுமையோடு வணங்கும் பரிபூரண குடும்பத்தாரால்—நிறைந்திருப்பதை ஆதி தம்பதியினர் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஆனால் ஆதாமும் ஏவாளும் பாவத்தில் வீழ்ந்தனர்; அதனால், கடவுள் பயமுள்ள, நீதியுள்ளவர்களால் பூமி நிரப்பப்படவில்லை. (ரோமர் 5:12) மாறாக, குடும்ப வாழ்க்கை சீக்கிரத்தில் சீரழிந்தது. அதுமுதல் பகை, வன்முறை, ‘சுபாவ அன்பில்லாமை’ ஆகியவையே வியாபித்திருக்கின்றன; முக்கியமாய் இந்தக் “கடைசிநாட்களில்” அதைப் பற்றி சொல்லவே வேண்டாம்.—2 தீமோத்தேயு 3:1-5; ஆதியாகமம் 4:8, 23; 6:5, 11, 12.
2. ஆதாமின் சந்ததியாருக்கு என்ன திறமைகள் இருந்தன, ஆனால் ஆவிக்குரிய விதத்தில் பலமான குடும்பத்தை உருவாக்க என்ன தேவைப்பட்டது?
2 ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டனர். ஆதாம் பாவியாகிவிட்ட போதிலும் பிள்ளைகளைப் பிறப்பிக்க யெகோவா தேவன் அனுமதித்தார். (ஆதியாகமம் 1:27; 5:1-4) ஆதாமின் சந்ததியார், தங்கள் தகப்பனைப் போலவே தார்மீக திறமை பெற்றிருந்தனர்; அவர்களால் எது சரி, எது தவறு என்பதை வேறுபடுத்திக் காண கற்றுக்கொள்ள முடியும். தங்கள் படைப்பாளரை வணங்க வேண்டிய விதம், முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் அவரை நேசிப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியும். (மாற்கு 12:30; யோவான் 4:24; யாக்கோபு 1:27) மேலும், ‘நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, . . . தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கும்படியும்’ அவர்களைப் பயிற்றுவிக்க முடியும். (மீகா 6:8) எனினும், பாவிகளாக இருந்ததால், ஆவிக்குரிய விதத்தில் பலமான குடும்பத்தை உருவாக்க அவர்கள் சற்று அதிக கவனம் செலுத்துவது தேவைப்பட்டது.
காலத்தைத் தப்பவிடாமல் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்
3. கிறிஸ்தவ பிள்ளைகளை வளர்ப்பதில் எவ்வாறு பெற்றோர் ‘காலத்தைத் தப்பவிடாமல் பிரயோஜனப்படுத்திக் கொள்ளலாம்’?
3 இந்த சிக்கலான, கொடிய காலங்களில், உண்மையில் ‘தீமையைப் பகைத்து,’ ‘யெகோவாவில் அன்புகூருகிறவர்களாக’ பிள்ளைகளை வளர்க்க பெரும் முயற்சி தேவைப்படும். (சங்கீதம் 97:10, தி.மொ.) இந்தச் சவாலை சமாளிக்க ஞானமுள்ள பெற்றோர் ‘காலத்தைத் தப்பவிடாமல் பிரயோஜனப்படுத்திக் கொள்கிறார்கள்.’ (எபேசியர் 5:15-17, தி.மொ.) நீங்கள் பெற்றோராக இருந்தால் இதை எப்படி செய்யலாம்? முதலாவதாக, எவற்றிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென தீர்மானியுங்கள்; உங்கள் பிள்ளைகளுக்குப் போதித்து, பயிற்றுவிப்பது உட்பட ‘அதிமுக்கிய காரியங்களுக்கு’ கவனம் செலுத்துங்கள். (பிலிப்பியர் 1:10, 11, NW) இரண்டாவதாக, உங்கள் வாழ்க்கையை எளியதாக்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை உண்மையிலேயே அந்தளவுக்கு முக்கியமில்லாத செயல்களை ஒதுக்கிவிட வேண்டியிருக்கலாம். அல்லது பராமரிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் அவசியமில்லாத உடைமைகளை களைந்துவிட வேண்டியிருக்கலாம். கிறிஸ்தவ பெற்றோராக, பிள்ளைகளில் கடவுள் பக்தியை ஊட்டி வளர்க்க தேவைப்பட்ட முயற்சிகளை எடுத்ததற்காக நீங்கள் ஒருநாளும் வருந்தமாட்டீர்கள்.—நீதிமொழிகள் 29:15, 17.
4. எவ்வாறு குடும்ப ஐக்கியத்தைக் காத்துக்கொள்ளலாம்?
4 உங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது, முக்கியமாய் ஆவிக்குரிய காரியங்களுக்காக செலவிடுவது பெருமளவு பயனுள்ளது. அது குடும்ப ஐக்கியத்தைக் காத்துக்கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று. ஆனால் ஓர் ஒழுங்கில்லாமல் தோன்றும்போது மட்டும் செய்யாதீர்கள். எப்போதெல்லாம் ஒன்றாக இருப்பீர்கள் என அட்டவணை போடுங்கள். எல்லாரும் வீட்டில் இருந்து அவரவர் வேலையைக் கவனிப்பதை இது குறிப்பதில்லை. தினமும் தனிப்பட்ட கவனம் செலுத்துகையில் பிள்ளைகள் சிறந்த முறையில் வளருகிறார்கள். எக்கச்சக்கமாக அன்பைப் பொழிந்து அக்கறையைக் காட்டுவது அவசியம். பிள்ளைகளைப் பெற்றெடுக்க தீர்மானிப்பதற்கு முன்பே இந்த முக்கிய பொறுப்பைக் குறித்து தம்பதிகள் கவனமாய் சிந்திக்க வேண்டும். (லூக்கா 14:28, 30) அப்போது, பிள்ளை வளர்ப்பை ஒரு சுமையாக கருதமாட்டார்கள். மாறாக, ஆசீர்வாதமாகவும் பாக்கியமாகவும் கருதுவார்கள்.—ஆதியாகமம் 33:5; சங்கீதம் 127:4.
சொல்லிலும் செயலிலும் கற்பியுங்கள்
5. (அ) பிள்ளைகள் யெகோவாவை நேசிக்கும்படி கற்றுக்கொடுக்க முதலில் என்ன செய்யப்பட வேண்டும்? (ஆ) உபாகமம் 6:5-7-ல் என்ன அறிவுரை பெற்றோருக்குக் கொடுக்கப்படுகிறது?
5 யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் அவரை நேசிக்க வேண்டும். கடவுளிடமுள்ள அசைக்க முடியாத அன்பு, அவருடைய கட்டளைகள் அனைத்தையும் உண்மையுடன் பின்பற்ற தூண்டுவிக்கும். பிள்ளைகளை ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக் கட்டுப்பாட்டிலும்’ வளர்க்கும்படியும் செய்யும். (எபேசியர் 6:4, NW) பிள்ளைகளுக்கு முன்மாதிரி வைக்கும்படியும், அவர்களுடன் உரையாடும்படியும், அவர்களுக்குப் போதிக்கும்படியும் பெற்றோருக்கு கடவுள் அறிவுரை கூறுகிறார். உபாகமம் 6:5-7-ல் (தி.மொ.) இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “நீ உன் கடவுளாகிய யெகோவாவிலே உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் அன்புகூர வேண்டும். இந்த நாளில் நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்திலே பதிந்திருக்க வேண்டும். நீ அவைகளை உன் பிள்ளைகளின் மனதில் படும்படி போதிக்க வேண்டும். நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும் வழியில் நடக்கிறபோதும் படுத்துக்கொள்ளுகிறபோதும் எழுந்திருக்கிறபோதும் அவைகளைப்பற்றி பேச வேண்டும்.” அடிக்கடி அறிவுரை கூறுவதன் மூலமும், அவற்றைத் திரும்பத்திரும்ப நினைப்பூட்டுவதன் மூலமும், கடவுளுடைய கட்டளைகளை உங்கள் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கலாம். இவ்வாறு, யெகோவாவிடமுள்ள உங்கள் அன்பை பிள்ளைகள் உணர்ந்து, தாங்களும் அவரிடம் நெருங்கி வர தூண்டப்படுவார்கள்.—நீதிமொழிகள் 20:7.
6. பார்த்து பின்பற்றும் பிள்ளைகளின் இயல்பை பெற்றோர் எவ்வாறு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்?
6 கற்றுக்கொள்ள பிள்ளைகளுக்கு ஆவல் அதிகம். அவர்கள் நன்கு செவிசாய்த்து, கூர்ந்து கவனித்து, விரைவில் உங்கள் முன்மாதிரியை அப்படியே பின்பற்றுகிறார்கள். நீங்கள் பொருளாசை இல்லாதவராய் இருப்பதைப் பார்க்கையில் இயேசுவின் அறிவுரையை எப்படி பின்பற்றுவது என்பதை கற்றுக்கொள்ள அது அவர்களுக்கு உதவுகிறது. பொருள் சம்பந்தமானவற்றைப் பற்றி கவலைப்படாமல், ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடும்படி’ அவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள். (மத்தேயு 6:25-33) பைபிள் சத்தியத்தையும் கடவுளுடைய சபையையும் நியமிக்கப்பட்ட மூப்பர்களையும் பற்றிய ஊக்கமளிக்கும் பயனுள்ள உரையாடலின் மூலம், யெகோவாவையும் அவருடைய ஏற்பாடுகளையும் மதிக்க பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறீர்கள். முரண்பாடுகளை பிள்ளைகள் சட்டென கவனித்துவிடுவார்கள்; எனவே சொல்லால் போதிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஆவிக்குரிய காரியங்களிடம் ஆழ்ந்த போற்றுதல் இருப்பதை உங்கள் மனப்பான்மையாலும் செயலாலும் காட்டுங்கள். தங்களுடைய சிறந்த முன்மாதிரியைப் பார்த்து பிள்ளைகளும் முழு இருதயத்தோடு யெகோவாவை நேசிப்பதைக் காண்கையில் அது பெற்றோருக்கு எத்தகைய பாக்கியம்!—நீதிமொழிகள் 23:24, 25.
7, 8. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதன் முக்கியத்துவத்தை என்ன உதாரணம் காட்டுகிறது, அதன் வெற்றிக்கான புகழ் யாரை சேர வேண்டும்?
7 சிறு வயதிலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதன் முக்கியத்துவத்தை வெனிசுவேலாவிலிருந்து வரும் உதாரணம் காட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:15) இளம் தம்பதியரான ஃபிலீக்ஸும் மையர்லீனும் பயனியர்கள். அவர்களுடைய மகன் ஃபெலீட்டோ பிறந்தபோது, யெகோவாவை அவன் உண்மையுடன் வணங்குவதற்கு தங்களால் ஆன அனைத்தையும் செய்ய ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர். யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து ஃபெலீட்டோவுக்கு சத்தமாய் வாசித்து காட்ட ஆரம்பித்தாள் மையர்லீன். இந்த புத்தகத்திலுள்ள படங்களில் மோசேயையும் மற்றவர்களையும் ஃபெலீட்டோ சின்னஞ்சிறு வயதிலிருந்தே அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பித்ததாக தெரிகிறது.
8 சிறுவனாக இருக்கையிலேயே ஃபெலீட்டோ தானாக சாட்சி கொடுக்க தொடங்கினான். ஆசைப்பட்டபடி அவன் ராஜ்ய பிரஸ்தாபியானான், பின்னர் அவன் முழுக்காட்டப்பட்டான். காலப்போக்கில் ஃபெலீட்டோ ஒழுங்கான பயனியரானான். அவனுடைய பெற்றோர் இவ்வாறு சொல்கிறார்கள்: “எங்கள் மகன் படிப்படியாக முன்னேறுவதைக் காண்கையில் அதற்காக நாங்கள் யெகோவாவுக்கும் அவருடைய போதனைக்குமே கடன்பட்டிருப்பதாக உணருகிறோம்.”
ஆவிக்குரிய விதத்தில் வளர பிள்ளைகளுக்கு உதவுங்கள்
9. உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரரின் மூலமாய் நாம் பெறும் ஆவிக்குரிய போதனைக்காக நாம் ஏன் நன்றியுள்ளோராய் இருக்க வேண்டும்?
9 பிள்ளை வளர்ப்பில் அறிவுரை அளிக்கும் டஜன்கணக்கான பத்திரிகைகளும் நூற்றுக்கணக்கான புத்தகங்களும் ஆயிரக்கணக்கான இன்டர்நெட் வெப் சைட்டுகளும் இருக்கின்றன. பெரும்பாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் “தகவல்கள் முரண்படுகின்றன” என்று நியூஸ்வீக் பத்திரிகை பிள்ளைகளைப் பற்றிய விசேஷ பதிப்பில் குறிப்பிடுகிறது. “நீங்கள் நம்பலாமென நினைக்கும் தகவல் முற்றிலும் தவறாக போவது இன்னுமதிக குழப்பத்தை உண்டுபண்ணுகிறது” என்றும் அது குறிப்பிடுகிறது. குடும்பங்களின் போதனைக்கும் அவற்றின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கும் உதவும் தகவல்களை யெகோவா ஏராளமாய் அளித்திருப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளோராக இருக்கிறோம்! உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரரின் மூலம் கிடைக்கும் எல்லா ஏற்பாடுகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறீர்களா?—மத்தேயு 24:45-47.
10. பயன்தரும் குடும்ப பைபிள் படிப்பு எப்படி பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பிரயோஜனமாயிருக்கும்?
10 மிக மிக முக்கியம், ஆறஅமர உட்கார்ந்து தவறாமல் நடத்தப்படும் குடும்பப் படிப்பு. அது அறிவை ஊட்டி, மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தர வேண்டுமானால் நன்கு தயாரிப்பது தேவை. பிள்ளைகளிடம் கேள்வி கேட்டு பேச வைப்பதன் மூலம், அவர்கள் இருதயத்திலும் மனதிலும் உள்ளவற்றை பெற்றோர் தெரிந்துகொள்ளலாம். குடும்பப் படிப்பு பயனுள்ளதாக இருப்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழி, குடும்பத்தினர் அனைவரும் அதை ஆவலோடு எதிர்பார்க்கிறார்களா என்பதைக் கவனிப்பதாகும்.
11. (அ) என்ன இலக்குகளை வைக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவலாம்? (ஆ) ஒரு ஜப்பானிய சிறுமி தன் இலக்கை அடைய உழைத்ததால் கிடைத்த பலன் என்ன?
11 அவ்வாறே பைபிள் சார்ந்த இலக்குகள், ஆவிக்குரிய விதத்தில் குடும்பம் பலப்பட உதவுகின்றன. பிள்ளைகள் இப்படிப்பட்ட இலக்குகளை வைக்க பெற்றோர் உதவ வேண்டும். தினந்தோறும் பைபிள் வாசிப்பது, தவறாமல் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பிரஸ்தாபியாவது, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதலை நோக்கி முன்னேறுவது ஆகியவை பொருத்தமான இலக்குகளில் அடங்கும். பயனியராக, பெத்தேல் அங்கத்தினராக அல்லது மிஷனரியாக முழுநேர ஊழியம் செய்வதையும் இலக்குகளாக வைக்கலாம். ஆயூமீ என்ற ஜப்பானிய சிறுமி, தொடக்கப் பள்ளியில் படிக்கையில் தன் வகுப்பிலுள்ள அனைவருக்கும் சாட்சி கொடுக்கும் இலக்கை வைத்தாள். தன் ஆசிரியைக்கும் சக மாணவர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளி நூலகத்தில் பல பைபிள் பிரசுரங்களை வைப்பதற்கு அனுமதி கேட்டாள். அதன் பலனாக, தொடக்கப் பள்ளியில் செலவிட்ட ஆறு வருடங்களில் 13 பைபிள் படிப்புகளை நடத்தினாள். பைபிள் படித்தவர்களில் ஒருத்தியும் அவளுடைய குடும்பத்தாரில் மற்றவர்களும் இன்று முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள்.
12. பிள்ளைகள் எவ்வாறு கிறிஸ்தவக் கூட்டங்களிலிருந்து அதிக பயனடையலாம்?
12 மேலும் பலமான ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு தவறாமல் கூட்டங்களுக்கு வருவதும் அவசியம். ‘சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாதிருக்க’ அப்போஸ்தலன் பவுல் சக விசுவாசிகளுக்கு அறிவுரை கூறினார். தவறவிடுவதை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளாதிருப்போமாக. ஏனெனில் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகையில் இளைஞரும் சரி முதியோரும் சரி மிகுதியாய் பயனடைகிறார்கள். (எபிரெயர் 10:24, 25; உபாகமம் 31:12) கவனமாய்ச் செவிசாய்க்க பிள்ளைகளைப் பயிற்றுவிக்க வேண்டும். கூட்டங்களுக்கு தயாரிப்பதும் முக்கியம்; ஏனெனில் பதில் சொல்லி அவற்றில் நன்றாக பங்கெடுக்கையில் கிடைக்கும் பலன் மிகுதி. ஒரு சிறு பிள்ளை ஒன்றிரண்டு வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் அல்லது பாராவிலுள்ள சிறு பகுதியை வாசிப்பதன் மூலம் பதில் சொல்ல ஆரம்பிக்கலாம். இருந்தாலும், பதில்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும், சொந்த வார்த்தைகளில் சொல்லவும் பிள்ளைகளை பயிற்றுவிக்கையில், அது அதிக நன்மையை அளிக்கும். பெற்றோர்களே, அர்த்தம் நிறைந்த பதில்களை தவறாமல் சொல்வதன் மூலம் சிறந்த முன்மாதிரி வைக்கிறீர்களா? மேலும், குடும்பத்தினர் ஒவ்வொருவரும், பைபிள், பாட்டு புத்தகம், பைபிள் கலந்தாலோசிப்புக்குரிய பிரசுரம் ஆகியவற்றை வைத்திருப்பது நல்லது.
13, 14. (அ) பெற்றோர் பிள்ளைகளுடன் சேர்ந்து ஏன் ஊழியம் செய்ய வேண்டும்? (ஆ) வெளி ஊழியத்தில் நன்மையும் சந்தோஷமும் பெற பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்?
13 யெகோவாவைச் சேவிப்பதில் இளமை கால சக்தியை செலவழிக்கவும் பிரசங்கிப்பதை வாழ்க்கையின் முக்கிய பாகமாக்கிக் கொள்ளவும் ஞானமுள்ள பெற்றோர் பிள்ளைகளுக்கு உதவுவார்கள். (எபிரெயர் 13:15) பிள்ளைகளுடன் சேர்ந்து பெற்றோர் ஊழியம் செய்யும்போதுதான், ‘வெட்கப்படாத ஊழியக்காரராயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிப்போராயும்’ ஆவதற்குத் தேவைப்படும் பயிற்சி பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுகிறதா என்பதை பெற்றோரால் உறுதி செய்துகொள்ள முடியும். (2 தீமோத்தேயு 2:15) நீங்கள் அவ்வாறு செய்கிறீர்களா? நீங்கள் பெற்றோராக இருந்தால் வெளி ஊழியத்திற்கு தயாரிக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறீர்களா? அப்போதுதான் ஊழியம் அவர்களுக்கு சந்தோஷமுள்ளதாயும் அர்த்தமுள்ளதாயும் பலன்தருவதாயும் இருக்கும்.
14 பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து ஊழியம் செய்வது ஏன் நன்மையானது? இவ்வகையில், பெற்றோரின் நல்ல முன்மாதிரியைப் பிள்ளைகள் பார்த்து பின்பற்றலாம். அதே சமயத்தில், பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் மனப்பான்மையையும், நடத்தையையும், திறமையையும் புரிந்துகொள்ள முடியும். ஊழியத்தின் மற்ற அம்சங்களிலும் பிள்ளைகள் ஈடுபட அவர்களை உங்களுடன் அழைத்துச் செல்ல மறவாதீர்கள். முடிந்தால், ஒவ்வொரு பிள்ளைக்கும் தனியே வெளி ஊழிய பையை கொடுத்து அதை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள கற்பியுங்கள். பொருத்தமான விதத்தில் தொடர்ந்து பயிற்றுவிப்பையும் ஊக்குவிப்பையும் அளிக்கையில் ஊழியத்திடம் உண்மையான மதித்துணர்வை உண்டுபண்ணலாம். அப்போது ஊழியத்தை, கடவுளுக்கும் அயலாருக்கும் அன்புகாட்டுவதற்கான வழியாக பிள்ளைகள் காண்பார்கள்.—மத்தேயு 22:37-39; 28:19, 20.
ஆவிக்குரிய நலத்தை காத்துக்கொள்ளுங்கள்
15. குடும்பத்தின் ஆவிக்குரிய நலத்தை காத்துவருவது அந்தளவுக்கு முக்கியமானதாக இருப்பதால், இதைச் செய்வதற்கான சில வழிகள் யாவை?
15 குடும்பத்தின் ஆவிக்குரிய நலத்தை காத்துவருவது முக்கியம். (சங்கீதம் 119:93) இதைச் செய்வதற்கு ஒரு வழி, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குடும்பத்தாருடன் ஆவிக்குரிய காரியங்களை கலந்து பேசுவதாகும். தினவசனத்தை அவர்களுடன் கலந்தாலோசிக்கிறீர்களா? வெளி ஊழிய அனுபவங்களை அல்லது சமீபத்திய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து குறிப்புகளை, “வழியில் நடக்கிறபோது” அவர்களோடு பகிர்ந்துகொள்வது உங்கள் பழக்கமா? ஒவ்வொரு நாளும் உயிரோடிருந்ததற்கும், அவர் தரும் ஏராளமான காரியங்களுக்கும் “படுத்துக்கொள்ளுகிறபோதும் எழுந்திருக்கிறபோதும்” ஜெபத்தில் மறக்காமல் நன்றி சொல்கிறீர்களா? (உபாகமம் 6:6-9, தி.மொ.) செய்கின்ற ஒவ்வொரு காரியத்திலும் கடவுளிடம் உங்களுக்குள்ள அன்பை பிள்ளைகள் காண்கையில், சத்தியத்தைத் தங்களுடையதாக்கிக் கொள்ள இது அவர்களுக்கு உதவும்.
16. சுயமாய் ஆராய்ச்சி செய்ய பிள்ளைகளை உற்சாகப்படுத்துவதால் கிடைக்கும் பலன் என்ன?
16 சில சமயங்களில், பிரச்சினைகளை அல்லது சூழ்நிலைமைகளை வெற்றிகரமாய் சமாளிக்க பிள்ளைகளுக்கு வழிநடத்துதல் தேவைப்படும். என்ன செய்ய வேண்டும் என எப்போதும் சொல்வதைப் பார்க்கிலும், அவர்களே சுயமாய் ஆராய்ச்சி செய்ய உற்சாகப்படுத்தி, அவற்றின்பேரில் கடவுளுடைய நோக்குநிலையை அறிவது எப்படி என கற்றுக்கொடுக்கலாம் அல்லவா? ‘உண்மையுள்ள அடிமை’ மூலமாக அளிக்கப்பட்டுள்ள எல்லா உபகரணங்களையும் பிரசுரங்களையும் முழுமையாய் பயன்படுத்த பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது, அவர்கள் யெகோவாவுடன் நெருங்கிய உறவை அனுபவிக்க வழிசெய்யும். (1 சாமுவேல் 2:21ஆ) மேலும், தங்கள் பைபிள் ஆராய்ச்சியில் கற்றுக்கொண்ட விஷயங்களை குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்கையில், குடும்பத்தின் ஆவிக்குரிய நலம் இன்னும் முன்னேற்றமடையும்.
யெகோவாவில் முழுமையாய் சார்ந்திருங்கள்
17. பிள்ளைகளை கிறிஸ்தவர்களாக வளர்க்கும் விஷயத்தில் ஒற்றைப் பெற்றோர் ஏன் சோர்ந்துவிடக் கூடாது?
17 ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் என்ன செய்யலாம்? பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் இவர்கள் பெரும் சவால்களை எதிர்ப்படுகிறார்கள். ஆனால், ஒற்றைப் பெற்றோரே சோர்ந்துவிடாதீர்கள்! சவால்களை வெற்றிகரமாய் சமாளிக்க முடியும் என்பதை பல ஒற்றைப் பெற்றோர்களின் அனுபவங்கள் காட்டுகின்றன. இவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய அறிவுரைகளுக்கு ஏற்ப நடந்து, ஆவிக்குரிய விதத்தில் உறுதியான சிறந்த பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்கள். (நீதிமொழிகள் 22:6) நிச்சயமாகவே, ஒற்றைப் பெற்றோராக இருக்கும் கிறிஸ்தவர்கள், யெகோவாவில் முழுமையாக சார்ந்திருக்க வேண்டும். அவர் உதவியளிப்பாரென்று விசுவாசிக்க வேண்டும்.—சங்கீதம் 121:1-3.
18. பிள்ளைகளின் மனதுக்கும் உடலுக்கும் உகந்த என்ன தேவைகளுக்கு பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும், ஆனால் அதிலும் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்?
18 “நகைக்க ஒரு காலமுண்டு . . . நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என்பதை ஞானமுள்ள பெற்றோர் தெளிவாக அறிந்திருக்கிறார்கள். (பிரசங்கி 3:1, 4) பிள்ளையின் மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் ஓய்வும், சமநிலையான, பயனுள்ள பொழுதுபோக்கும் அவசியம். கட்டியெழுப்பும் இசை, முக்கியமாய் கடவுளை துதித்துப் பாடுவது, நல்ல மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள பிள்ளைக்கு உதவும்; இது யெகோவாவுடனுள்ள உறவைப் பலப்படுத்திக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கலாம். (கொலோசெயர் 3:16) இளமைக் காலம், கடவுள் பயமுள்ள வாலிபனாக வளர தயாராகும் காலமும்கூட; இதனால் வாழ்க்கையின் சந்தோஷத்தை பரதீஸிய பூமியில் என்றென்றும் தொடர்ந்து அனுபவிக்கலாம்.—கலாத்தியர் 6:8.
19. பிள்ளைகளை வளர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகளில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்குமென்று பெற்றோர் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?
19 கிறிஸ்தவக் குடும்பங்கள் யாவும் ஆவிக்குரிய விதத்தில் பலப்பட்டு, ஐக்கியமாய் நிலைத்திருக்க யெகோவா விரும்புகிறார். நாம் உண்மையிலேயே கடவுளை நேசித்து, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கையில் அவர் நம் முயற்சிகளை ஆசீர்வதித்து, தம்முடைய ஏவப்பட்ட வழிநடத்துதலைப் பின்பற்ற தேவைப்படும் பலத்தை தருவார். (ஏசாயா 48:17; பிலிப்பியர் 4:13) பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் உங்களுக்கு இப்போது இருக்கும் வாய்ப்பு திரும்பி வராது. கடவுளுடைய வார்த்தையிலுள்ள அறிவுரையைப் பின்பற்ற உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். ஆவிக்குரிய விதத்தில் பலமான குடும்பத்தை உருவாக்கும் உங்கள் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார்.
நாம் என்ன கற்றோம்?
• பிள்ளைகளைப் பயிற்றுவிக்கையில் நேரத்தை செலவிடுவது ஏன் அவ்வளவு முக்கியம்?
• பெற்றோரின் நல்ல முன்மாதிரி ஏன் அவசியம்?
• ஆவிக்குரிய விதத்தில் பிள்ளைகள் வளர உதவும் சில முக்கிய வழிகள் யாவை?
• குடும்பத்தின் ஆவிக்குரிய நலத்தை எவ்வாறு காத்துவரலாம்?
[பக்கம் 24-ன் படங்கள்]
ஆவிக்குரிய விதத்தில் பலமான குடும்பங்கள், ஒன்றாக சேர்ந்து தவறாமல் கடவுளுடைய வார்த்தையை படிக்கின்றன, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு செல்கின்றன, ஊழியத்தில் ஈடுபடுகின்றன