உலகளாவிய சகோதரத்துவம் பரஸ்பர ஆதரவு காட்டுகிறது
மூப்பு எய்திய முதியோர் பலர், அடியெடுத்து வைக்கவும் முடியாமல் அவதியுறும் வயோதிபர் சிலர், வயிற்றில் பிள்ளைகளை சுமக்கும் பெண்கள், முந்தானையை பிடித்துக்கொண்டே வரும் சின்னஞ்சிறுசுகளுடன் இளம் தம்பதிகள் என கண்ணுக்கெட்டும் தூரம் வரை கடலென மக்கள் திரள். ஆடவர், பெண்டிர், மழலையர் என இவர்கள் அனைவருமே அகதிகள். உள்நாட்டு போரினாலோ இயற்கை சேதங்களாலோ இன்ன பிற சூழ்நிலைகளாலோ தத்தம் இல்லங்களை இழந்து அண்டை நாட்டிற்குள் அடைக்கலம் தேடி வந்த அபலைகள் இவர்கள். சிலருக்கோ இந்நிலை ஒரு தொடர்கதை. உள்நாட்டு கிளர்ச்சிக்கு அல்லது இயற்கையின் சீற்றத்திற்கு முதல் அறிகுறியை கண்டவுடனே தட்டுமுட்டு சாமான்கள் சிலவற்றை வாரிக்கொண்டு, பிஞ்சு கரங்களையும் பற்றிக்கொண்டு புகலிடம் தேடிப் புறப்படுகிறார்கள். நிலைமைகள் ஒரு நிலைக்கு வந்தப்பின் மறுபடியும் தங்கள் வீடுகளை கட்டி மீண்டும் வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.
பல ஆண்டுகளாகவே மத்திய ஆப்பிரிக்க குடியரசு எண்ணற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகளை அரவணைத்திருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளை உள்ளிட்ட ஆயிரமாயிரம் பேர் போரினால் பாதிக்கப்பட்ட காங்கோ மக்கள் குடியரசிலிருந்து ஓரளவு பாதுகாப்பான மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்குச் செல்லும் கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.
உதவிக்கரம் நீட்டும் சகோதரர்கள்
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் வாழும் சகோதரர்கள் மனிதாபிமானத்தோடு உதவிகள் அளிப்பதை அரிய பாக்கியமாக கருதினார்கள். சாரை சாரையாக வந்த கிறிஸ்தவ சகோதரர்களுக்கு தங்கும் வசதி செய்துகொடுத்தார்கள். முதலில் சிலருடைய வீடுகளில் தங்க வைத்தார்கள். ஆனால் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, வேறு ஏற்பாடுகள் செய்ய வேண்டியதாயிற்று. ராஜ்ய மன்றங்கள் சிலவற்றை தங்கும் அறைகளாக மாற்றினார்கள். அங்கு தங்குகிறவர்களுடைய வசதிக்காக, உள்ளூர் சாட்சிகள் கூடுதலான மின்விளக்குகளை பொருத்தினார்கள், தண்ணீர் குழாய் வசதிகள் செய்து கொடுத்தார்கள், தரைகளுக்கு சிமெண்ட் பூசினார்கள். இந்தத் தற்காலிக அறைகளை நிர்மாணிக்கும் வேலையில் உள்ளூர் சகோதரர்களுடன் அகதிகளும் சேர்ந்து கொண்டார்கள். இந்த அகதிகளுக்கு உயிர்காக்கும் ஆவிக்குரிய உணவும் சிறந்த முறையில் கிடைப்பதற்காக கிறிஸ்தவ கூட்டங்கள் எல்லாவற்றையும் லிங்காலா மொழியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். சர்வதேச சகோதரத்துவம் என்பது நிழல் அல்ல, நிஜமே என்பதை உள்ளூர் சாட்சிகளுக்கும் அவர்களுடைய விருந்தினருக்கும் இடையே நிலவிய நெருங்கிய ஒத்துழைப்பு காட்டியது.
அகதிகளின் குடும்ப அங்கத்தினர் அனைவரும் எப்போதுமே ஒன்றாக வந்துசேர்வதில்லை. சில சமயங்களில், தனித்தனியாக பிரிந்த குடும்பத்தார் முகாமுக்கு வந்தபின்தான் மீண்டும் இணைகிறார்கள். பத்திரமாக வந்து சேர்ந்தவர்களுடைய பட்டியலை ஒவ்வொரு ராஜ்ய மன்றத்திலும் வைத்திருந்தார்கள். இதுவரை வந்துசேராதவர்களை தேடிக் கண்டுபிடிக்கவும் ஏற்பாடுகள் செய்தார்கள். வழியில் வந்துகொண்டிருந்தவர்களை கூட்டிக்கொண்டு வருவதற்கும் காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கும் அந்நாட்டில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளை கவனித்துவரும் கிளை அலுவலகம் ஒரு நாளுக்கு மூன்று வாகனங்களை அனுப்பியது. இந்த வாகனங்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக, “உவாட்ச்டவர்—யெகோவாவின் சாட்சிகள்” என அதில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது.
பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்த ஏழு அகதி குழந்தைகள் யெகோவாவின் சாட்சிகளுடைய வண்டியைப் பார்த்ததும் அடைந்த மகிழ்ச்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அந்த வாகனத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஓடிவந்து தங்களை சாட்சிகள் என அறிமுகப்படுத்தினார்கள். சகோதரர்கள் அவர்களை வேனில் ஏற்றி ராஜ்ய மன்றத்திற்குக் கொண்டு சென்றார்கள். கடைசியாக அவர்கள் அங்கே தங்கள் குடும்பத்தாரோடு ஒன்றுசேர்ந்தார்கள்.
ஒருமுறையோ இரண்டுமுறையோ அல்ல ஆனால், அடிக்கடி இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்பட்டபோது, இவற்றையெல்லாம் சமாளிக்க உண்மையுள்ள இந்தக் கிறிஸ்தவர்களுக்கு எது உதவியது? பரிசுத்த வேத எழுத்துக்களில் முன்னறிவித்துள்ளபடி, நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.—2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 6:3-8.
ஆகவே, போர்கள், வன்முறைகள், சண்டை சச்சரவுகள் இவை எல்லாவற்றையும் யெகோவா தேவன் விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அகதிகள் என்ற பிரச்சினையே கடந்தகால கதையாகிவிடும். அதுவரையிலும், 1 கொரிந்தியர் 12:14-26-ல் கொடுக்கப்பட்டுள்ள அப்போஸ்தலனாகிய பவுலின் அறிவுரைக்கு இணங்க பரஸ்பர ஆதரவு காட்ட யெகோவாவின் சாட்சிகள் முயல்கிறார்கள். ஆறுகளாலும் எல்லைகளாலும் மொழிகளாலும் தொலைதூரத்தாலும் அவர்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் அக்கறை காண்பிக்கிறார்கள். ஆகவே யாருக்காவது அவசரத் தேவை ஏற்படும்போது விரைந்து வந்து தங்கள் அன்புக்கரங்களை நீட்டுகிறார்கள்.—யாக்கோபு 1:22-27.
[பக்கம் 30-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆப்பிரிக்கா
மத்திய ஆப்பிரிக்க குடியரசு
காங்கோ மக்கள் குடியரசு
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 30-ன் படங்கள்]
முகாம்களாக பயன்படுத்தப்பட்ட மூன்று ராஜ்ய மன்றங்கள்
[பக்கம் 31-ன் படம்]
சமையலறை வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட்டன
[பக்கம் 31-ன் படம்]
அதிகமதிகமான அகதிகள் வந்தனர்
[பக்கம் 31-ன் படம்]
மண்ணில் பிறந்ததே அகதிகளாக