விசுவாச பரீட்சையில் நாங்கள் கைவிடப்படவில்லை
விக்கி—ஆரோக்கியமும் இனிமையும் துடிப்பும் மிக்க அழகிய குட்டி பாப்பா. 1993 வசந்தத்தில் அவள் பிறந்தபோது எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஸ்வீடன் நாட்டின் தென்பகுதியிலுள்ள சிறிய டவுனில் எந்தக் கவலை கஷ்டமும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம்.
விக்கிக்கு ஒன்றரை வயதானபோது, பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருந்த எங்களுடைய வாழ்க்கை வானில் இருள் கவிய ஆரம்பித்தது. கொஞ்ச காலமாகவே அவள் ஆரோக்கியமாக இல்லை. ஆகவே, அவளை நாங்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றோம். அவளுக்கு லிம்ஃபோபிளாஸ்டிக் லூக்கேமியா (lymphoblastic leukemia) என்ற நோய் கடுமையாக தாக்கியிருப்பதாக டாக்டர் சொன்ன அந்த க்ஷணத்தை எங்களால் மறக்கவே முடியாது. லிம்ஃபோபிளாஸ்டிக் லூக்கேமியா என்பது சாதாரணமாக சிறுபிள்ளைகளுக்கு வரும் ஒருவகை புற்றுநோய்; இது இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை பாதிக்கும்.
எங்களுடைய குழந்தைக்கு இப்பேர்ப்பட்ட பயங்கரமான நோய் தொற்றியிருக்கிறது என்பதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. இப்பொழுதுதான் தன்னை சுற்றியுள்ள உலகை அறிய ஆரம்பித்திருந்தாள், அதற்குள் அவளுக்கு இந்த கதி. வேதியியல் மருத்துவ சிகிச்சையாலும் (chemotherapy) பலமுறை இரத்தமேற்றுவதாலும் இந்நோயை ஓரளவு சுகப்படுத்தலாம் என்று சொல்லி டாக்டர் எங்களை ஆசுவாசப்படுத்த முயன்றார். இது எங்களுக்கு வந்த அடுத்த அதிர்ச்சி.
விசுவாச பரீட்சை
எங்களுடைய மகள்மீது அதிக அன்பு வைத்திருந்தோம், அவளை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டி நன்கு சிகிச்சை அளிக்கவே விரும்பினோம். ஆனால் இரத்தமேற்றுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை உறுதியாக நம்பினோம், கிறிஸ்தவர்கள் ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ வேண்டும் என அது தெளிவாக குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 15:28, 29) இரத்தமேற்றுவது ஆபத்தானது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம். இரத்தமேற்றியதால் பல நோய்கள் தொற்றி ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கிறார்கள். இரத்தமேற்றாமல் ஏதாவது சிறந்த சிகிச்சை அளிப்பதே இதற்கு ஒரே மாற்றுவழி. ஆகவே, இப்போது எங்கள் விசுவாசப் போராட்டம் ஆரம்பமானது.
நாங்கள் என்ன செய்ய முடியும்? யெகோவாவின் சாட்சிகளுடைய ஸ்வீடன் கிளை அலுவலகத்திலுள்ள மருத்துவ தகவல் சேவையின் (Hospital Information Services) உதவியை நாடினோம்.a இரத்தம் ஏற்றாமலேயே வேதியியல் மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வரும் மருத்துவமனையையும் டாக்டரையும் தேடிக் கண்டுபிடிப்பதற்காக ஐரோப்பாவிலுள்ள எல்லா மருத்துவமனைகளுக்கும் உடனடியாக அது ஃபாக்ஸ் செய்தி அனுப்பியது. கிறிஸ்தவ சகோதரர்கள் உற்சாகத்துடனும் அன்புடனும் எங்களுக்கு உதவி செய்தது எங்களை மிகவும் பலப்படுத்தியது. விசுவாசப் பரீட்சையின்போது நாங்கள் தனியாக விடப்படவில்லை.
சில மணிநேரத்திற்குள் ஜெர்மனியிலுள்ள ஸார்/ஹாம்பர்க்கில் ஒரு மருத்துவமனையையும் டாக்டரையும் கண்டுபிடித்து விட்டார்கள். அடுத்த நாளே விக்கியை பரிசோதிப்பதற்காக நாங்கள் விமானத்தில் அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்தார்கள். அங்கு சென்றதும் எங்களை வரவேற்பதற்கு உறவினர்கள் சிலரும் ஹாம்பர்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளும் வந்திருந்தார்கள். உள்ளூர் மருத்துவமனை தொடர்பு குழுவின் பிரதிநிதியும் எங்களை அன்புடன் வரவேற்றார். அவர் எங்களுடன் மருத்துவமனைக்கு வந்து தன்னாலான எல்லா உதவிகளையும் செய்து தந்தார். திக்கு தெரியாத ஒரு நாட்டிலும்கூட ஆவிக்குரிய சகோதரர்கள் எங்களுக்கு பக்கத்துணையாக நின்றது ரொம்ப ஆறுதலாக இருந்தது.
மருத்துவமனையில் டாக்டர் கிராஃப்பை சந்தித்தபோது, எங்களுக்கு மீண்டும் ஆறுதல் கிடைத்தது. அவர் எங்களுடைய நிலைமையை நன்கு புரிந்துகொண்டு, இரத்தம் ஏற்றாமலேயே தன்னாலான அனைத்தையும் செய்வதாக உறுதி கூறினார். அவளுடைய சிவப்பணுக்களின் அளவு 5 கிராம்/டெசி லிட்டருக்கு வந்தாலும் இரத்தம் ஏற்றாமலேயே தொடர்ந்து சிகிச்சையளிக்கவும் மனமுள்ளவராக இருந்தார். இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க விக்கியை அங்கு கொண்டு சென்றது நல்லதாக அமைந்தது என்றும் அவர் கூறினார். இதுபோன்ற வியாதிக்கு முதன்முறையாக இரத்தமேற்றாமல் வேதியியல் மருத்துவ சிகிச்சை கொடுக்கப் போவதாக அவர் கூறினார். நாங்கள் டாக்டர் கிராஃபுக்கு மிகவும் நன்றி சொன்னோம். எங்களுக்கு உதவ அவர் காட்டிய தைரியத்தையும் மனவுறுதியையும் கண்டு வியந்து பாராட்டினோம்.
பணக் கஷ்டங்கள்
ஆனால் இப்போது பிரச்சினை என்னவென்றால், விக்கியின் சிகிச்சைக்கு ஆகும் செலவை எப்படி ஈடுகட்டுவது? இரண்டு வருட சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 30 லட்சம் தேவைப்படும் என்று சொன்னபோது நாங்கள் அப்படியே உறைந்து போனோம். எங்களிடம் இருந்த பணமோ ரொம்ப ரொம்ப குறைவு, ஆனால் சிகிச்சையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியது முக்கியமாக இருந்தது. சிகிச்சைக்காக ஸ்வீடனை விட்டு ஜெர்மனிக்கு வந்ததால் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் பணத்தைப் பெறவும் முடியாமல் போய்விட்டது. எங்களுக்கு உதவ திறமையான டாக்டர் தயார்; ஆனால் சிகிச்சைக்குத் தேவையான பணமோ எங்களிடம் இல்லை; ஆகவே சுகவீனமாக இருந்த குழந்தையையும் வைத்துக்கொண்டு நாங்கள் திண்டாடினோம்.
இப்போது மருத்துவமனையே எங்களுக்கு உதவிக்கரம் நீட்டியது. முதலில் 4 லட்சம் ரூபாய் கட்டிவிட்டு மீதியை பிறகு கட்டுவதாக கையெழுத்துப் போட்டு கொடுத்தால் சிகிச்சையை உடனடியாக ஆரம்பித்துவிடுவதாக கூறியது. எங்களிடம் இருந்த பணத்தையும், நண்பர்களும் உறவினர்களும் அன்போடு கொடுத்த பணத்தையும் சேர்த்து அந்த 4 லட்சம் ரூபாயை கட்டினோம். ஆனால் மீதி பணத்திற்கு எங்கே போவது?
எங்களுடைய விசுவாசப் பரீட்சையில் நாங்கள் கைவிடப்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை எங்களுடைய அனுபவத்தில் கண்டோம். எங்களுக்கு அப்போது பழக்கமில்லாத ஆவிக்குரிய சகோதரர் ஒருவர் மீதி பணத்தை கட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்தார். இருந்தாலும், பணத்தை திரட்டுவதற்கு வேறு ஏற்பாடுகளை எங்களால் செய்ய முடிந்ததால், அவர் தாராள மனப்பான்மையோடு கொடுக்க வந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
மருத்துவ நிபுணரின் சிகிச்சை ஆரம்பமாகிறது
வேதியியல் மருத்துவ சிகிச்சை ஆரம்பமானது. நாட்கள், வாரங்கள் என காலம் கடந்தோடியது. சில சமயங்களில் இது குழந்தைக்கும் எங்களுக்கும் அதிக கஷ்டமாகவும் களைப்பாகவும் இருந்தது. அதேசமயத்தில் அவள் தேறிவருவதை பார்க்கும்போதெல்லாம் நாங்கள் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தோம், நன்றியுள்ளவர்களாகவும் இருந்தோம். வேதியியல் மருத்துவ சிகிச்சை எட்டு மாதங்களுக்கு நீடித்தது. விக்கியின் குறைந்தபட்ச சிவப்பணுக்களின் எண்ணிக்கை 6 கிராம்/டெசி லிட்டர், ஆனாலும் டாக்டர் கிராஃப் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றினார்.
ஆறு வருடங்களுக்குப் பிறகு, கடைசியாக முதுகுத்தண்டுவட நீரை பரிசோதிக்கும்போது லூக்கேமியா நோய்க்கான எந்தத் தடயமும் இல்லை. இப்போது அந்த நோய் அறிகுறிகள் ஏதுமின்றி அவள் சந்தோஷமாக இருக்கிறாள். விக்கி பூரண சுகமடைந்திருப்பதை பார்த்தால் அது ஓர் அற்புதமாகவே தோன்றுகிறது. ஏனென்றால் வேதியியல் மருத்துவ சிகிச்சை அளித்தும் இரத்தமேற்றியும் அநேக குழந்தைகள் இந்நோயால் இறந்துவிட்டதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எங்களுடைய விசுவாசப் போராட்டம் வெற்றியில் முடிவடைந்தது. ஆனால் எங்களுடைய உறவினர், கிறிஸ்தவ சகோதர சகோதரிகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடைய உதவியால்தான் வெற்றிபெற முடிந்தது. மருத்துவ தகவல் சேவையினர் ஒருநாளில் 24 மணிநேரமும் எங்களுக்கு முழு ஆதரவு அளித்தார்கள். விக்கியை குணப்படுத்த டாக்டர் கிராஃப்பும் அவருடன் பணியாற்றியவர்களும் தங்களுடைய எல்லா திறமைகளையும் உபயோகித்தார்கள். இவை எல்லாவற்றிற்கும் நாங்கள் இருதயப்பூர்வமாக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
எங்கள் விசுவாசம் பலப்பட்டது
ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவா தேவனுடைய அன்பான கவனிப்பிற்காகவும், அவருடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து கிடைத்த பலத்திற்காகவும் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். நடந்து முடிந்த காரியங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கையில், எவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொண்டோம், வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த துயர்மிகுந்த அனுபவம் எங்கள் விசுவாசத்தை எவ்வளவாய் பலப்படுத்தியிருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம்.
யெகோவா தேவனுடன் நெருங்கிய உறவை காத்துக்கொள்வதும், அவருடைய விருப்பங்களுக்கு இசைய வாழ்வதன் முக்கியத்துவத்தை எங்கள் மகளுக்குக் கற்றுக் கொடுப்பதுமே இப்போது எங்கள் உள்ளப்பூர்வமான ஆவல். இந்தப் பூமியில் வரவிருக்கும் பூந்தோட்டம் போன்ற பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்காக நல்லதோர் ஆவிக்குரிய ஆஸ்தியை அவளுக்குக் கொடுக்கவே நாங்கள் விரும்புகிறோம்.—அளிக்கப்பட்டது.
[அடிக்குறிப்பு]
a மருத்துவமனை தொடர்பு குழுக்களின் சர்வதேச நெட்வொர்க்கை இந்த மருத்துவ தகவல் சேவை மேற்பார்வையிடுகிறது. இந்தக் குழுக்கள், மருத்துவர்களுக்கும் சாட்சிகளான நோயாளிகளுக்கும் இடையே சுமூக உறவை வளர்ப்பதற்காக பயிற்றுவிக்கப்பட்ட கிறிஸ்தவ வாலண்டியர்களாலானவை. 1,400-க்கும் அதிகமான மருத்துவமனை தொடர்பு குழுக்கள் 200-க்கும் மேலான தேசங்களிலுள்ள நோயாளிகளுக்கு கைகொடுத்து வருகின்றன.