இதுவே உங்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கைப்பணியாக இருக்க முடியுமா?
நீங்கள் முழுக்காட்டுதல் எடுத்த கிறிஸ்தவர் என்றால், கடவுளுடைய சித்தத்தைச் செய்யும்படி அவருடைய அன்பு உங்களைத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலுமாக, ஊழியத்திற்காகவே உங்களை அர்ப்பணித்திருப்பீர்கள். தம்மை பின்பற்றுகிற அனைவரும் சீஷராக்கும் வேலையை செய்ய இயேசு கிறிஸ்து கட்டளையிட்டிருக்கிறாரே. (மத்தேயு 28:19, 20) உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய தற்போது நீங்கள் எங்காவது வேலை செய்துகொண்டிருக்கலாம். ஆனால் இயேசுவைப் பின்பற்றுபவராகவும், யெகோவாவின் சாட்சியாகவும் இருப்பதால், எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் ஒரு கிறிஸ்தவ ஊழியர், ராஜ்ய பிரசங்க வேலைக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பவர்.—மத்தேயு 24:14.
நீங்கள் ஒருவேளை டீனேஜ் பருவத்தின் பிற்பகுதியில் இருக்கலாம்; அல்லது இருபதுகளின் முற்பகுதியில் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைக் குறித்து நிறைய யோசித்திருக்கலாம். உங்களுக்கு முன் இருக்கும் தெரிவுகளை சீர்தூக்கிப் பார்க்கும் போது, எதில் மனதிருப்தி கிடைக்கும் என்பதே முக்கியமாக இருக்கலாம்.
அப்படியானால், டென்மார்க்கிலுள்ள யோயர்ன் தான் செய்த தெரிவைக் குறித்து என்ன சொல்கிறார் என்பதை சிந்தியுங்கள். “உள்ளதிலேயே முக்கியமான வேலையில் கவனம் செலுத்த முடிவதால் இதுவே மிகச்சிறந்த வாழ்க்கை முறை” என்று யோயர்ன் விவரிக்கிறார். கிரீஸைச் சேர்ந்த 31 வயது பெண் ஈவா சொல்கிறார்: “என் சகாக்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், என்னுடைய வாழ்க்கை அதிக அர்த்தமுள்ளதாயும் நிறைவளிப்பதாயும் சுவாரஸ்யமூட்டுவதாயும் இருக்கிறது என்ற முடிவுக்கே எப்போதும் வருகிறேன்.” அப்படிப்பட்ட திருப்தியைத் தரும் வாழ்க்கை முறை எது? நீங்களும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள முடியுமா?
கடவுள் வழிகாட்டுகிறாரா?
ஒரு வாழ்க்கை பணியை தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கக்கூடும். உண்மையில், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கடவுளே காட்டிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றுகூட சிலர் நினைக்கலாம்.
மோசே மீதியானில் இருக்கையில், எகிப்துக்கு திரும்பிவந்து இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து வழிநடத்தும்படி யெகோவா அவருக்கு கட்டளையிட்டார். (யாத்திராகமம் 3:1-10) கடவுளுடைய தூதன் கிதியோனிடம் வந்து, இஸ்ரவேலரை ஒடுக்குதலிலிருந்து காப்பாற்ற அவர் நியமிக்கப்பட்டிருப்பதை தெரியப்படுத்தினார். (நியாயாதிபதிகள் 6:11-14) இஸ்ரவேலரின் அடுத்த அரசனாக தாவீதை அபிஷேகம் செய்யும்படி கடவுள் சாமுவேலை அனுப்பியபோது தாவீது ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். (1 சாமுவேல் 16:1-13) அவ்விதமான வழிநடத்துதல் இன்று நமக்குக் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக, காரியங்களை சீர்தூக்கிப் பார்த்து, கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் திறமைகளை எப்படி பயன்படுத்துவதென்று நாமே தீர்மானிக்க வேண்டும்.
இன்று கிறிஸ்தவ இளைஞருக்காக ‘பெரிதும் அநுகூலமுமான கதவை’ யெகோவா திறந்து வைத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 16:9) எப்படி? கடந்த பத்தாண்டில், உலகெங்கிலும் உள்ள ராஜ்ய அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை 21,25,000-லிருந்து 60,00,000-க்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் உலகளாவிய வேலைக்கும் ஆவிக்குரிய போஷாக்குக்கும் தேவையான கோடிக்கணக்கான பைபிள்கள், புத்தகங்கள், சிற்றேடுகள், பத்திரிகைகள், துண்டுப்பிரதிகள் ஆகியவற்றை அளிக்க யார் உதவி செய்கிறார்கள்? உலகெங்குமுள்ள பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட சிலாக்கியத்தை அனுபவிக்கிறார்கள்.
பலனளிக்கும் வாழ்க்கை
பெத்தேல் என்றால் “கடவுளுடைய வீடு” என்பது அர்த்தம். உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைமை அலுவலகத்திலும் கிளை அலுவலகங்களிலும் சேவிக்கும் கிறிஸ்தவ வாலண்டியர்கள் தங்கும் இடங்களே பெத்தேல் வீடுகள். (ஆதியாகமம் 28:19, NW அடிக்குறிப்பு) ‘ஞானத்தினால் கட்டப்பட்ட வீட்டில்’ வசிப்போருடன் தற்கால பெத்தேல் குடும்பங்களை ஒப்பிடலாம். இவர்கள் யெகோவாவின் மீதுள்ள அன்பை அஸ்திவாரமாகக் கொண்டு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவர்கள்.—நீதிமொழிகள் 24:3.
பெத்தேலில் காணப்படும் குடும்ப சூழலைப் பற்றி என்ன சொல்லப்படலாம்? எஸ்டோனியாவில் 25 வருடங்கள் பெத்தேல் குடும்ப அங்கத்தினராக இருந்தவர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவின் நண்பர்கள் மத்தியில் எப்போதும் இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. பெத்தேலில் இன்னும் இதைத்தான் மிக மதிப்புவாய்ந்ததாக கருதுகிறேன்.”—சங்கீதம் 15:1, 2.
உலகெங்கிலும் சுமார் 19,500 பேர் இப்போது பெத்தேல் சேவையின் சிலாக்கியத்தை அனுபவிக்கிறார்கள். (சங்கீதம் 110:3) ஐக்கிய மாகாணங்களில், பெத்தேலில் இருப்பவர்களில் 46 சதவீதத்தினர் 19-லிருந்து 29 வயதுக்குட்பட்டவர்கள். ஏசாயாவைப் போலவே அவர்களும், “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று சொல்லியிருக்கிறார்கள். (ஏசாயா 6:8) ஏற்கெனவே யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்திருந்த ஏசாயா, இன்னும் அதிக ஊழிய சிலாக்கியத்தில் ஈடுபட தன்னை மனமுவந்து அளித்தார். சொந்த நன்மைகள் சிலவற்றை தியாகம் செய்வதை இது உட்படுத்தியது. பெத்தேல் சேவையில் இருப்பவர்கள், தங்கள் வீடுகளையும், பழக்கப்பட்ட சூழலையும், அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள், நண்பர்கள் அனைவரையும் விட்டுச் செல்கிறார்கள். “சுவிசேஷத்தினிமித்தமாக” மனமுவந்து இந்த தியாகங்களை செய்கிறார்கள்.—மாற்கு 10:29, 30.
மறுபட்சத்தில், பெத்தேலில் எவ்வளவு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்! ரஷ்யாவின் பெத்தேல் குடும்பத்தை சேர்ந்த இளம் சகோதரி விளக்குகிறார்: “சுயதியாகம் செய்பவர்களாய் இருப்பதன்மூலம், புதிய உலகில் வாழ நமக்கு உதவும் பல காரியங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். என்னுடைய விஷயத்தில் பார்த்தால், என்னுடைய தியாகங்களைவிட யெகோவாவின் ஆசீர்வாதங்கள் மிகவும் அதிகம்.”—மல்கியா 3:10.
பெத்தேல் வாழ்க்கை
பெத்தேல் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அது ஆரோக்கியமானதாயும் நிறைவளிப்பதாயும், சுவாரஸ்யமிக்கதாயும்கூட இருக்கிறது என்று பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் ஒத்துக்கொள்கின்றனர். 43 வயதுள்ள என்ஸ் பெத்தேல் சேவையை சந்தோஷமாய் அனுபவிக்கிறார். ஏன்? அவர் சொல்வதாவது: “ஒரு முக்கியமான வேலையை செய்து முடிக்கும் மகத்தான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற உணர்வுதான் காரணம். யெகோவாவின் வேலை எவ்வளவு விரிவானது என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.”
பெத்தேலில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை வழிபாட்டுடன் நாள் துவங்குகிறது. அனுபவமுள்ள மூப்பரால் நடத்தப்படும் பைபிள் கலந்தாலோசிப்பு இது. திங்கட்கிழமை மாலைகளில் ஒரு மணிநேரம் காவற்கோபுர பத்திரிகையின் உதவியுடன் பைபிளை குடும்பமாக படிப்பதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது; பெத்தேல் குடும்பத்துக்கு பொருத்தமான வேதப்பூர்வ தலைப்புகளில் ஒரு பேச்சு அவ்வப்போது இந்தப் படிப்பிற்குப் பின் கொடுக்கப்படும்.
முதன்முதலாக ஒருவர் பெத்தேலுக்கு வந்ததும் என்ன நடக்கிறது? புதிய அங்கத்தினர்களை பெத்தேல் வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம், பெத்தேல் சேவையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பேச்சுக்களை குடும்பத்திலுள்ள முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்கள் கொடுக்கிறார்கள். பெத்தேல் குடும்பத்தின் புதிய அங்கத்தினர், முதல் வருடத்தில் பல வாரங்கள் மிகச் சிறந்த வாராந்தர பள்ளிக்கு செல்கிறார். வேதவசனங்களைப் பற்றிய புரிந்துகொள்ளுதலை அவர் விரிவடையச் செய்வதற்கு ஏதுவாக அந்த பள்ளி அமைக்கப்பட்டிருக்கிறது. புதிதாக வந்திருப்பவர்களுக்கு விசேஷ பைபிள் வாசிப்பு திட்டமும் இருக்கிறது. பெத்தேல் சேவையின் முதல் வருடத்தில், குடும்பத்தின் புதிய அங்கத்தினர்கள் முழு பைபிளையும் வாசித்து முடிக்க வேண்டும்.
இந்த எல்லா பயிற்சியிலிருந்தும் கிடைக்கும் பலன் என்ன? ஹாங்காங் பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த 33 வயதுள்ள ஜாஷ்வா பதிலளிக்கிறார்: “யெகோவாவிடம் ஆழ்ந்த போற்றுதலை அதிகரிக்க பெத்தேல் உண்மையிலேயே உதவியிருக்கிறது. தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை யெகோவாவின் சேவையில் செலவிட்ட அனுபவமுள்ள சகோதரர்களுடன் கூட்டுறவுகொள்ள முடிகிறது. காலை வழிபாடு, பெத்தேல் குடும்ப காவற்கோபுர படிப்பு போன்ற ஆவிக்குரிய நிகழ்ச்சிகள் எனக்கு ரொம்ப விருப்பமானவை. மேலும், இங்குள்ள ஒழுங்கான, எளிய வாழ்க்கையும் எனக்கு பிடித்திருக்கிறது. இதனால் அநாவசியமான கவலைகளின்றி வாழ முடிகிறது. கிறிஸ்தவ முறையில் காரியங்களைக் கையாளவும் கற்றுக்கொள்கிறேன்; இது எப்போதுமே பயனுள்ளதாய் இருந்திருக்கிறது.”
பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் பெரும்பாலான நேரத்தையும் சக்தியையும் தாங்கள் மனமுவந்து செய்ய விரும்பிய பணிக்காகவே செலவிடுகின்றனர். அதாவது, உடல் மற்றும் மன ரீதியிலான சக்தி, திறமை ஆகிய அனைத்தையும் பெத்தேலில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்யவே முக்கியமாகப் பயன்படுத்துகிறார்கள். பலவகைப்பட்ட காரியங்கள் செய்ய வேண்டி உள்ளன. அச்சு இயந்திரங்களை இயக்குவதில் சிலரும் பைண்ட் செய்யுமிடத்தில் சிலரும் பணிபுரிந்து புத்தகங்களை தயாரிக்கிறார்கள்; இவை பல சபைகளுக்கு அனுப்பப்படுகின்றன. வேறு சிலர் சமையலறையிலோ சாப்பாட்டறையிலோ சலவை செய்யுமிடத்திலோ பணிபுரிகிறார்கள். சுத்தம்செய்தல், பண்ணையில் வேலை, கட்டுமான பணி என பல வேலைகள் இருக்கின்றன. இவற்றிற்காக பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகளை பராமரிக்கும் பொறுப்பு சிலருடையது. வேறு சிலர் மற்றவர்களுடைய உடல்நலத்தைப் பராமரிக்கிறார்கள் அல்லது அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். பெத்தேலில் உள்ள எல்லா வேலைகளும் சந்தோஷமளிக்கும் சவால்களை உடையவை; அருமையான பலன்களையும் தருகின்றன. பெத்தேலில் செய்யப்படும் வேலை ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதாலும் கடவுள் பேரிலுள்ள அன்பினால் செய்யப்படுவதாலும் விசேஷ திருப்தி அளிக்கிறது.
பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் வெவ்வேறு இடங்களிலுள்ள சபைகளின் பாகமாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வேலையின் பலனை அங்கு அவர்கள் நேரடியாக காண்கிறார்கள். சபை கூட்டங்களை அனுபவிக்கிறார்கள், பிரசங்க வேலையில் பங்கெடுக்கிறார்கள். இதனால், தாங்கள் கூட்டுறவுகொள்ளும் சபையிலுள்ள சகோதர சகோதரிகளுடன் பெத்தேல் குடும்ப அங்கத்தினர் பலமான உறவை வளர்த்துக் கொள்கிறார்கள்.—மாற்கு 10:29, 30.
பிரிட்டன் பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த ரீட்டா இவ்வாறு சொல்கிறார்கள்: “சபைக்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்! கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் போகையில், அன்பான சகோதர சகோதரிகளையும் பிள்ளைகளையும் வயதானவர்களையும் பார்க்கும்போது என் விசுவாசம் எவ்வளவோ பலப்படுகிறது! என்ன நடந்தாலும் சரி, அவர்கள் வந்துவிடுவார்கள். பெத்தேல் சேவையில் இன்னும் வைராக்கியத்துடன் தொடர அது எனக்கு உதவி செய்கிறது.”
வேலையும் கூட்டங்களும் வெளி ஊழியமும் படிப்பும் மட்டுமே அல்ல பெத்தேல் வாழ்க்கை. பொழுதுபோக்கு நேரங்களையும் குடும்பத்தினர் அனுபவிக்கின்றனர். அவ்வப்போது, பொழுதுபோக்காகவும் ஆவிக்குரிய விதத்தில் பயனளிப்பதாகவும் இருக்கும் “ஃபாமிலி நைட்” நிகழ்ச்சிகள் நடக்கும்; பெத்தேலில் சேவை செய்யும் பலருடைய திறமைகளை பார்த்து ரசிக்கவும், அவர்களது வாழ்க்கையிலிருந்து உற்சாகமளிக்கும் காரியங்களை தெரிந்துகொள்ளவும் அது வாய்ப்பளிக்கிறது. ஆரோக்கியமான உற்சாகமூட்டும் கூட்டுறவுக்காக ஒருவரையொருவர் அழைத்து உபசரிப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. சில பொழுதுபோக்குகளை அனுபவிக்க வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், தனிப்பட்ட வகையில் வாசிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் நூலகங்களும் இருக்கின்றன. சாப்பாட்டு நேரங்களில் அனுபவிக்கும் இனிய உரையாடல்களையும் மறந்துவிட முடியாது.
எஸ்டோனியாவிலுள்ள பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த டாம் சொல்கிறார்: “பெத்தேலிலிருந்து கொஞ்சம் தள்ளி கடல் இருக்கிறது; அதற்கு பக்கத்தில் ஓரழகிய காடு இருக்கிறது. அங்கு நானும் என் மனைவியும் ‘வாக்கிங்’ போவோம். சபையிலும் பெத்தேலிலும் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது கால்ஃப், ஹாக்கி, டென்னிஸும் விளையாடுவேன். வானிலை நன்றாக இருக்கும்போது, பைக்கில் எங்காவது போய் வருவோம்.”
தகுதிபெறுவது எப்படி?
உண்மையில் பெத்தேல், முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு பரிசுத்த சேவை செய்யும் இடமாகவும், உலகெங்கிலுமுள்ள உடன் விசுவாசிகளுக்காக உழைக்கும் இடமாகவும் இருக்கிறது. பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர் ஆகிறவர்கள் குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்வது அவசியம். பெத்தேல் சேவைக்காக தகுதிபெற நீங்கள் என்ன செய்யலாம்?
பெத்தேல் சேவைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், அப்போஸ்தலன் பவுலுடன் சேவை செய்த தீமோத்தேயுவைப் போலவே சபையில் நல்ல நிலைநிற்கை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 1:1) தீமோத்தேயு “லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.” (அப்போஸ்தலர் 16:2) தீமோத்தேயு இளைஞனாய் இருந்தபோதிலும், வேத வசனங்களை நன்கு அறிந்திருந்தார்; சத்தியத்தில் உறுதியான அஸ்திவாரம் உடையவராயிருந்தார். (2 தீமோத்தேயு 3:14, 15) அதேவிதமாக, பெத்தேல் சேவைக்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள் பைபிள் அறிவு உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெத்தேல் குடும்ப அங்கத்தினர் சுயதியாக மனப்பான்மை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். தீமோத்தேயுவின் சுயதியாக மனப்பான்மையும் தன்னுடைய அக்கறைகளைவிட ராஜ்ய அக்கறைகளுக்கு மனமுவந்து முக்கியத்துவம் அளிக்கும் மனநிலையும் அவ்வளவு தெளிவாக தெரிந்ததால், பவுலால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.”—பிலிப்பியர் 2:20-22.
ஆவிக்குரிய ஆண்களும் பெண்களும் பெத்தேல் சேவைக்கு அவசியம். பைபிள் படிப்பு, கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் தவறாமல் செல்லுதல், முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவு ஆகியவற்றின் மூலம் ஆவிக்குரிய வகையில் வளர பெத்தேல் குடும்பத்தினருக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் உதவுகின்றன. இவ்வாறு பவுலின் பின்வரும் ஆலோசனையைப் பின்பற்ற பெத்தேலில் உள்ளவர்களுக்கு உதவி கிடைக்கிறது: “அவருக்குள் [கிறிஸ்து இயேசுவுக்குள்] வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.”—கொலோசெயர் 2:6, 7.
பெத்தேல் வேலையுடைய இயல்பின் காரணமாக, இந்த சிலாக்கியத்தைப் பெறுகிறவர்கள் சரீர பலமுள்ளவர்களாயும் நல்ல ஆரோக்கியம் உள்ளவர்களாயும் இருக்க வேண்டும். நீங்கள் 19 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களாக இருந்து, முழுக்காட்டுதல் எடுத்து குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஆகியிருந்து, இங்கு சொல்லப்பட்டுள்ள தகுதிகளையும் பூர்த்தி செய்தால், நீங்கள் பெத்தேல் சேவையைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.
நம்மெல்லாருக்கும் பங்கு உண்டு
கிறிஸ்தவர்களாக நாம் அனைவருமே ராஜ்ய அக்கறைகளை வாழ்க்கையில் முதலாவதாக வைக்கவும் யெகோவாவை மனப்பூர்வமாய் சேவிக்கவும் விரும்புகிறோம். (மத்தேயு 6:33; கொலோசெயர் 3:24) பெத்தேலில் சேவை செய்கிறவர்கள் அங்கேயே பரிசுத்த சேவையைத் தொடரும்படி நாம் உற்சாகப்படுத்தலாம். விசேஷமாக, பெத்தேல் சேவைக்காக தகுதி பெறும் வாலிப சகோதரர்களை இந்த ஆசீர்வாதமான சிலாக்கியத்தை அடைய முயலும்படி ஊக்கமளிக்க வேண்டும்.
பெத்தேல் சேவையானது ஆவிக்குரிய வகையில் திருப்தியளிக்கும் வாழ்க்கை முறை. அது உங்களுடைய மிகச் சிறந்த வாழ்க்கை பணியாக இருக்கலாம். தன் 20-வது வயதில் பெத்தேல் சேவையை துவங்கிய நிக்குக்கு அப்படித்தான் இருக்கிறது. பத்து வருட பெத்தேல் சேவைக்குப்பின் அவர் சொல்வதாவது: “யெகோவாவின் தகுதியற்ற தயவுக்கு நன்றி தெரிவிப்பதற்கு அடிக்கடி அவரிடம் ஜெபிக்கிறேன். அவரிடம் இன்னும் அதிகமாக எதை கேட்பேன்? இங்கே, யெகோவாவைச் சேவிப்பதற்காக தங்களுடைய மிகச் சிறந்ததை செய்யும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களால் சூழப்பட்டிருக்கிறோமே.”
[பக்கம் 22-ன் பெட்டி/படம்]
மூப்பர்களும் பெற்றோரும் என்ன செய்யலாம்?
பெத்தேலுக்கு விண்ணப்பம் செய்யும்படி மூப்பர்களும் பயணக் கண்காணிகளும் குறிப்பாக இளைஞரை உற்சாகப்படுத்த வேண்டும். சமீபத்தில் பெத்தேல் குடும்பத்தின் இளைய அங்கத்தினரிடையே தற்செயலாக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; அதில் தெரியவந்தது என்னவென்றால், பெத்தேல் சேவையை தங்கள் இலக்காக வைக்கும்படி அவர்களில் 34 சதவீதத்தினர் முக்கியமாக கிறிஸ்தவ கண்காணிகளாலேயே ஊக்குவிக்கப்பட்டிருந்தனர். தங்களை விட்டுச் செல்வது சபையினருக்கு வருத்தம் தரும் என்பது உண்மைதான். தீமோத்தேயு, லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள மற்ற இளைஞர்மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தியபோதிலும், பவுலுடன் அவர் சேவிப்பதை அங்கிருந்த மூப்பர்கள் தடை செய்யவில்லை. அப்போஸ்தலன் பவுலுடன் தீமோத்தேயு சென்றுவிட்டால் தங்கள் சபைக்கு பேரிழப்பாகிவிடும் என்று அவர்கள் நினைக்கவில்லை.—1 தீமோத்தேயு 4:14.
இந்த விஷயத்தைக் குறித்ததில் முக்கியமாக கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சாதகமான முறையில் ஊக்குவிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கணக்கெடுப்பில், பெத்தேல் சேவையில் நுழைவதற்கு பிரதானமாக உற்சாகமளித்தது தங்கள் பெற்றோரே என்பதாக 40 சதவீதத்தினர் பதிலளித்தனர். ஒருசில வருடங்களாக பெத்தேலில் சேவை செய்யும் ஒரு சகோதரி இப்படி சொன்னார்: “யெகோவாவின் சேவையில் என் பெற்றோரின் வாழ்க்கை பெத்தேல் சேவைக்கு என்னை உந்துவிக்க பலமான காரணமாக அமைந்தது. முழுநேர ஊழியத்தில் அவர்களுடைய முன்மாதிரியைப் பார்த்த எனக்கு, இதுவே மிகச் சிறந்ததும், மிகுந்த திருப்தியளிப்பதுமான வாழ்க்கை முறை என்று தெரிந்தது.”
[பக்கம் 24-ன் பெட்டி]
அவர்கள் பெத்தேல் சேவையை போற்றுகிறார்கள்
“என் பெத்தேல் சேவையை நெஞ்சார நேசிக்கிறேன். நாள் முழுதும் யெகோவாவை சேவித்திருக்கிறேன், நாளைக்கும், அதற்கடுத்த நாளும், தொடர்ந்து வரும் நாட்களிலும் இதே மாதிரியே சேவித்துக் கொண்டிருப்பேன் என்று நினைக்கையில் திருப்தியாக இருக்கிறது. இது நல்ல மனசாட்சியை தந்து, நம்பிக்கையூட்டும் எண்ணங்களால் என் மனதை நிரப்புகிறது.”
“உங்கள் நேரம், சக்தி அனைத்தையும் கவனம் சிதறாமல் யெகோவாவின் சேவைக்கென்று கொடுக்க முடிந்த இடம் பெத்தேல். இது உள்ளான சந்தோஷத்தை தருகிறது. ஆனால் வேறொரு கோணத்திலிருந்தும் யெகோவாவின் அமைப்பைப் பார்க்க முடிகிறது. அந்த அமைப்பின் மையத்திற்கு மிக அருகில் இருப்பதாகவே நீங்கள் உணருவீர்கள்; இதுவே மிகுந்த உற்சாகம் தருகிறது.”
“என் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த காரியம் பெத்தேலுக்கு வந்ததுதான். இங்கு கற்றுக்கொள்வதற்கு முடிவே இல்லை. இங்கு பெறும் கல்வி என் தன்னல நன்மைக்காக அல்ல, ஆனால் யெகோவாவுக்காகவே. இங்கே நான் செய்யும் வேலை ஒருபோதும் வீண் போகாது.”
“என் திறமைகளை பெத்தேலில் பயன்படுத்துவதால் திருப்தியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது, ஏனென்றால் அவை யெகோவாவுக்காகவும் சகோதரர்களுக்காகவும் பயன்படுகின்றன.”
“நான் முன்பு செய்துவந்த வேலையில் உண்மையான திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை. என் சகோதர சகோதரிகளுடனும் அவர்களுக்காகவும் பணி புரியவேண்டும் என்று பல வருஷங்கள் கனவு கண்டுகொண்டிருந்தேன். அதனால்தான் பெத்தேலுக்கு வந்தேன். என்னுடைய எல்லா முயற்சிகளும் ஆவிக்குரிய விதத்தில் மற்றவர்களுக்கு பயன் தரும் என்றும் யெகோவாவுக்கு துதியைக் கொண்டுவரும் என்றும் அறிந்திருப்பது நிஜமாகவே திருப்தியாக இருக்கிறது.”