உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 3/15 பக். 10-14
  • மனித பலவீனத்தை வெல்லுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனித பலவீனத்தை வெல்லுதல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சோதனையும் பாவமும் நிஜமே
  • மிதமீறிய தன்னம்பிக்கை வேண்டாம்
  • சோதனைகளை வெல்லலாம்!
  • ஜெபம் தரும் பலம்
  • சோதனையை மும்முரமாய் எதிர்த்து நில்லுங்கள்
  • கெட்ட ஆசையை தவிர்க்க...
    விழித்தெழு!—2015
  • கெட்ட ஆசைகளை அடக்குவது எப்படி?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • சோதனைக்கு இணங்கிவிடாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • சோதனை
    விழித்தெழு!—2017
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 3/15 பக். 10-14

மனித பலவீனத்தை வெல்லுதல்

“மாம்ச சிந்தை மரணம்.”​—⁠ரோமர் 8:⁠6.

1. மனித உடலை சிலர் எவ்வாறு கருதுகின்றனர், என்ன கேள்வி சிந்திப்பதற்குத் தகுந்தது?

யெகோவாவின் படைப்புகளில் மனிதனின் படைப்பைப் பற்றி சங்கீதக்காரனாகிய தாவீது சிந்தித்தபோது, “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்” என்று பாடினார். (சங்கீதம் 139:14) சில மதத் தலைவர்களோ, இவ்வாறு பாராட்டாமல் உடலை பாவம் பதுங்கியிருக்கும் இடமாகவும் பாவத்திற்கு தூண்டுகோலாகவும் கருதுகின்றனர். மனித உடலை, “அறியாமையெனும் முக்காடு, தீமையின் அஸ்திவாரம், அழிவெனும் கால்கட்டு, இருண்ட கூடு, சூனியமான வாழ்வு, உயிருள்ள பிணம், நடைபிணம்” என்றெல்லாம் கருதுகின்றனர். “என் மாம்சத்தில் நன்மை வாசமாயிருக்கிறதில்லை” என அப்போஸ்தலன் பவுல் சொன்னதும் உண்மையே. (ரோமர் 7:​18) ஆனால், வழியின்றி பாவ உடலில் நாம் அகப்பட்டிருப்பதை அது அர்த்தப்படுத்துகிறதா?

2. (அ) “மாம்ச சிந்தை” என்றால் என்ன? (ஆ) கடவுளைப் பிரியப்படுத்த விரும்பும் மனிதருக்குள், ‘மாம்சத்துக்கும்’ ‘ஆவிக்கும்’ இடையில் என்ன போராட்டம் நடக்கிறது?

2 கீழ்ப்படியாத ஆதாமிலிருந்து தோன்றியதால் பாவத்தன்மை பெற்ற அபூரண மனிதனை, “மாம்சம்” என்று வேதவசனங்கள் குறிப்பிடுகின்றன. (எபேசியர் 2:3; சங்கீதம் 51:5; ரோமர் 5:​12) ஆதாம் நமக்குக் கொடுத்த சொத்து ‘மாம்ச பலவீனம்.’ (ரோமர் 6:​19) அத்துடன், “மாம்ச சிந்தை மரணம்” என்று பவுல் எச்சரித்தார். (ரோமர் 8:6) இந்த “மாம்ச சிந்தை” அல்லது மனப்பான்மை, பாவ மாம்சத்தின் ஆசைகளால் அடக்கியாளப்படுவதையும் தூண்டுவிக்கப்படுவதையும் குறிக்கிறது. (1 யோவான் 2:​16) ஆகையால், கடவுளைப் பிரியப்படுத்த முயலுகையில், நம்முடைய ஆவிக்குரிய மனப்பான்மைக்கும், ‘மாம்சத்தின் கிரியைகளை’ செய்ய வற்புறுத்தும் பாவ இயல்புக்கும் இடையே பெரும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. (கலாத்தியர் 5:​17-​23; 1 பேதுரு 2:​11) தனக்குள் நிகழும் வேதனைமிக்க போராட்டத்தை விவரித்தப் பின்பு, “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்று பவுல் வருத்தத்துடன் கேட்டார். (ரோமர் 7:24) பவுல் தன்னைக் காத்துக்கொள்ள முடியாமல் சோதனைக்குப் பலியாகும் நிலையில் இருந்தாரா? இல்லை என்று அழுத்தந்திருத்தமாக பைபிள் பதிலளிக்கிறது!

சோதனையும் பாவமும் நிஜமே

3. பாவத்தையும் சோதனையையும் பலர் எவ்வாறு கருதுகின்றனர், ஆனால், அத்தகைய மனப்பான்மைக்கு எதிராக பைபிள் எப்படி எச்சரிக்கிறது?

3 பாவம் என்பதை இன்று பலரும் நம்ப மறுக்கின்றனர். “பாவம்” என்பதை சிலர், மனித குறைபாடுகளை விவரிக்கும் பழங்கால சொல் என கேலியாக சொல்கின்றனர். “சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்” என்பதை அவர்கள் உணருவதில்லை. (2 கொரிந்தியர் 5:​10) இன்னும் சிலர், “சோதனையைத் தவிர எதையும் என்னால் சமாளிக்க முடியும்” என சாதாரணமாய் சொல்லிக் கொள்ளலாம். வேறு சிலர், உணவு, செக்ஸ், வேடிக்கை விளையாட்டு, சாதனை என எதுவானாலும் உடனடியாக அனுபவிக்க துடிக்கும் தணியா தாகமுடையவர்களாக இருக்கின்றனர். எல்லாமே தங்களுக்கு வேண்டும் அதுவும் உடனடியாக வேண்டும் என்பதே சிலருடைய நாட்டம்! (லூக்கா 15:12) தற்காலிக இன்பத்திற்கு அப்பால், ‘மெய்யான ஜீவனின்’ சந்தோஷம் எதிர்காலத்தில் இருப்பதை அவர்கள் காண்கிறதில்லை. (1 தீமோத்தேயு 6:​19, NW) பைபிளோ, கவனமாய்ச் சிந்திக்கவும், எதிர்காலத்தை எண்ணவும், ஆன்மீக ரீதியிலும் மற்ற விதத்திலும் நமக்குத் தீங்கு செய்யும் எதற்கும் வெகு தூரம் விலகியிருக்கவும் கற்பிக்கிறது. கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட நீதிமொழி, “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று சொல்கிறது.​—⁠நீதிமொழிகள் 27:⁠12.

4. 1 கொரிந்தியர் 10:12, 13-⁠ல், பவுல் என்ன அறிவுரையைக் கொடுத்தார்?

4 கொரிந்து நகரம் ஒழுக்க சீர்கேடுக்குப் பேர்போனதாய் விளங்கியது. எனவேதான் சோதனை, பாவத்தின் வல்லமை ஆகியவற்றைக் குறித்து அங்கிருந்த கிறிஸ்தவர்களைப் பவுல் உறுதியாய் எச்சரித்தார். “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” என்று அவர் எழுதினார். (1 கொரிந்தியர் 10:12, 13) பள்ளியில், வேலைசெய்யும் இடத்தில் என எங்கிருந்தாலும் இளைஞர் முதியோர், ஆண்கள் பெண்கள் என நாம் எல்லாருமே பற்பல சோதனைகளை சந்திக்கிறோம். எனவே நாம் பவுலின் வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்த வேண்டும். அவை நமக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதை ஆராய்வோம்.

மிதமீறிய தன்னம்பிக்கை வேண்டாம்

5. மிதமீறிய தன்னம்பிக்கை ஏன் ஆபத்தானது?

5 “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” என்று பவுல் சொல்லுகிறார். நம்முடைய ஒழுக்க பலத்தைக் குறித்து மிதமீறிய தன்னம்பிக்கை ஆபத்தானது. அப்படிப்பட்ட எண்ணம், பாவத்தின் இயல்பையும் சக்தியையும் நாம் சரிவர புரிந்துகொள்ளாததையே சுட்டிக்காட்டுகிறது. மோசே, தாவீது, சாலொமோன், அப்போஸ்தலனாகிய பேதுரு போன்றவர்களே பாவத்தில் வீழ்ந்தார்கள்; அப்படியிருக்க, நாம் அப்படிப்பட்ட எதிலும் சிக்கிக்கொள்ள மாட்டோம் என நினைக்கலாமா? (எண்ணாகமம் 20:​2-​13; 2 சாமுவேல் 11:​1-​27; 1 இராஜாக்கள் 11:​1-6; மத்தேயு 26:69-​75) “ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங் கொண்டு துணிகரமாயிருக்கிறான்” என்று நீதிமொழிகள் 14:16 சொல்லுகிறது. மேலும், “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 26:41) அபூரண மனிதர்கள் தவறான ஆசை எனும் பிடியிலிருந்து லேசில் வெளிவர முடியாதவர்கள்; எனவே பவுலின் எச்சரிக்கையை கவனமாய் மனதில் வைத்து, சோதனைக்கு இடம் கொடுக்காமல் எதிர்த்து நிற்க வேண்டும். இல்லாவிடில் பாவத்தில் வீழ்ந்துபோவது நிச்சயம்.​—⁠எரேமியா 17:⁠9.

6. சோதனையை சந்திக்க எப்போது, எவ்வாறு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்?

6 எதிர்பாராமல் சோதனைகள் தலைதூக்கலாம்; எனினும் அவற்றை சந்திக்க முன்னரே தயாராய் இருப்பது புத்திசாலித்தனம். சமாதான காலம் பாதுகாப்பு அரண்களை கட்டுவதற்கான காலம் என்பதை அரசனாகிய ஆசா அறிந்திருந்தார். (2 நாளாகமம் 14:​2, 6, 7) தாக்குதல் ஆரம்பித்தபின் தற்காத்துக்கொள்ள முனைவதில் பயனில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். அவ்வாறே, சோதனைகள் வந்தால் எப்படி சமாளிப்பது என்பதை அமைதியான சூழலில் நிதானமாக சிந்தித்து தீர்மானம் எடுப்பது மிகச் சிறந்தது. (சங்கீதம் 63:6) தானியேலும், கடவுள் பயமுள்ள அவருடைய நண்பர்களும் யெகோவாவின் சட்டத்திற்கு உண்மையாய் கீழ்ப்படிவதற்கு தீர்மானித்திருந்தனர்; அரசன் அருஞ்சுவை உணவை சாப்பிடும்படி வற்புறுத்துவதற்கு முன்னரே அதை மறுக்க தீர்மானமாய் இருந்தனர். அதனால்தான் தங்கள் நம்பிக்கையில் உறுதியைக் காத்துக்கொள்ளவும், தீட்டான உணவுப் பதார்த்தங்களைத் தவிர்க்கவும் அவர்களால் முடிந்தது. (தானியேல் 1:8) சோதனை வரும் முன்பே, ஒழுக்க விஷயங்களில் சுத்தமாயிருக்கும் நம் தீர்மானத்தை பலப்படுத்திக் கொள்வோமாக. அப்போது, பாவத்தை எதிர்த்து வெற்றிபெற நமக்கு பலம் கிடைக்கும்.

7. மற்றவர்கள் சோதனைகளை வெற்றிகரமாய் சமாளித்திருப்பதை அறிவது ஏன் ஆறுதலளிக்கிறது?

7 “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை” என பவுல் சொன்னார்; இந்த வார்த்தைகள் ஆறுதலின் அருமருந்தாய் ஒலிக்கின்றன! (1 கொரிந்தியர் 10:13) அப்போஸ்தலனாகிய பேதுரு, “விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு [பிசாசானவனுக்கு] எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே” என்று எழுதினார். (1 பேதுரு 5:⁠9) ஆம், இப்படிப்பட்ட சோதனைகளை மற்றவர்களும் எதிர்ப்பட்டிருக்கின்றனர்; கடவுளுடைய உதவியினால் அவற்றை வெற்றிகரமாய் சமாளித்தும் இருக்கின்றனர், எனவே நம்மாலும் முடியும். எப்படியிருந்தாலும், இந்தப் பொல்லாத உலகிலிருந்து உண்மை கிறிஸ்தவர்களாகிய நமக்கு இன்றோ நாளையோ சோதனைகள் வருமென எதிர்பார்க்கலாம். அப்படியானால், மனித பலவீனத்தையும், பாவத்தில் வீழ்த்தும் சோதனைகளையும் வெற்றிகரமாய் சமாளிப்போம் என்று எப்படி உறுதியாய் நம்பலாம்?

சோதனைகளை வெல்லலாம்!

8. சோதனையைத் தவிர்ப்பதற்கான முக்கிய வழி எது?

8 முடிந்தவரை சோதனையைத் தவிர்ப்பதே, ‘பாவத்துக்கு ஊழியஞ் செய்வதை’ விட்டொழிப்பதற்கான முக்கிய வழியாகும். (ரோமர் 6:6) நீதிமொழிகள் 4:​14, 15 இவ்வாறு நம்மிடம் வலியுறுத்துகிறது: “துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.” ஒருசில சூழ்நிலைமைகள், பாவத்திற்கு வழிநடத்தும் என்பதை பெரும்பாலும் முன்னதாகவே அறிகிறோம். ஆகையால், அவற்றைவிட்டு ‘விலகிக் கடந்துபோவதே’ கிறிஸ்தவர்களாக நாம் செய்ய வேண்டிய காரியம்; நம் மனதில் தவறான ஆசைகளை தூண்டி, அசுத்தமான உணர்ச்சிகளை இன்னும் அதிகரிக்க செய்யும் ஆட்களிலிருந்தும் விஷயங்களிலிருந்தும் இடங்களிலிருந்தும் வெகு தூரம் விலகியிருக்க வேண்டும்.

9. கவர்ந்திழுக்கும் சூழ்நிலைகளிலிருந்து விலகியோடும்படி பைபிள் எப்படி அறிவுறுத்துகிறது?

9 சோதனையில் வெற்றி சிறக்க மற்றொரு முக்கிய வழி: கவர்ந்திழுக்கும் சூழ்நிலையிலிருந்து விலகி ஓடுவது. “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்று பவுல் அறிவுரை கூறினார். (1 கொரிந்தியர் 6:​18) “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்” என்றும் அவர் எழுதினார். (1 கொரிந்தியர் 10:14) மேலும், பொருளாசை எனும் வலையில் சிக்காமலிருக்கும்படியும் “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு” விலகியோடும்படியும் தீமோத்தேயுவை அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார்.​—⁠2 தீமோத்தேயு 2:​22; 1 தீமோத்தேயு 6:​9-​11.

10. சோதனைக்கு விலகியோடுவதன் அவசியத்தை, நேர் எதிர்மாறான எந்த இரண்டு உதாரணங்கள் சுட்டிக்காட்டுகின்றன?

10 இஸ்ரவேலின் அரசனாகிய தாவீதின் காரியத்தைக் கவனியுங்கள். அவர் தன் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து ஓர் அழகிய பெண் குளிப்பதை பார்த்துக்கொண்டிருந்தார்; தவறான ஆசைகள் அவருடைய இதயத்தில் துளிர்த்தன. சோதனையிலிருந்து விலக நினைத்திருந்தால் அவர் அந்த உப்பரிகையிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அந்தப் பெண் பத்சேபாளைப் பற்றிய சகல விவரத்தையும் கேட்டறிந்தார். அதனால் வந்த கஷ்டநஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. (2 சாமுவேல் 11:1–12:23) இதற்கு நேர் எதிர்மாறான உதாரணம் யோசேப்பினுடையது. அவனுடைய எஜமானின் ஒழுக்கங்கெட்ட மனைவி, தன்னோடு உடலுறவு கொள்ளும்படி யோசேப்பை ஓயாமல் நச்சரித்து வந்தாள். யோசேப்பு எப்படி நடந்துகொண்டான்? அந்த விவரப்பதிவு இவ்வாறு சொல்கிறது: “அவள் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடன் இருக்கவும் சம்மதிக்கவில்லை.” அந்தச் சமயத்தில் மோசேயின் நியாயப்பிரமாணக் கட்டளைகள் ஏதும் கொடுக்கப்படவில்லை; இருந்தாலும் யோசேப்பு அவளிடம், “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?” என்றான். ஒரு நாள் அவள் அவனைப் பிடித்து, “என்னோடே சயனி” என்றாள். அங்கு நின்றுகொண்டு யோசேப்பு அவளிடம் விளக்கமளிக்க முயற்சி செய்தானா? இல்லை. அவன் உடனடியாக “வெளியே ஓடிப்போனான்.” பாலுறவு தூண்டுதலுக்கு யோசேப்பு அடிபணியவில்லை. அங்கிருந்து ஓடிப்போனான்.​—⁠ஆதியாகமம் 39:​7-​16.

11. திரும்பத்திரும்ப சோதனையை எதிர்ப்படுகையில் எப்படி சமாளிக்கலாம்?

11 ஓடிப்போவது கோழைத்தனம் என சில சமயங்களில் கருதப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட சூழ்நிலையில் பெரும்பாலும் நாமே இடத்தை விட்டு விலகி செல்வதே ஞானமான போக்காகும். வேலை செய்யுமிடத்தில் திரும்பத்திரும்ப ஒரேவிதமான சோதனையை ஒருவேளை நாம் எதிர்ப்படலாம். அதற்காக அந்த வேலையையே விட்டுவிட்டு வேறு வேலை தேட முடியாவிட்டாலும் அந்தச் சூழ்நிலைகளை வேறு வழிகளில் தவிர்க்கலாம். தவறு என தெரிந்த எதற்கும் விலகியோட வேண்டும்; சரி என தெரிந்ததையே செய்ய தீர்மானமாய் இருக்க வேண்டும். (ஆமோஸ் 5:​15) சோதனையிலிருந்து விலகியோடுவதற்கு, பாலுறவை சித்தரிக்கும் மோசமான திரைப்படங்களையும், மோசமான பொழுதுபோக்கு இடங்களையும் தவிர்ப்பது அவசியம். அதற்காக, தரங்கெட்ட பத்திரிகைகள் படிப்பதை நிறுத்த வேண்டியிருக்கலாம்; அல்லது கடவுளை நேசிப்பவர்களும் நமக்கு உதவ விரும்புபவர்களுமான புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கலாம். (நீதிமொழிகள் 13:20) பாவத்திற்கு அழைப்புவிடுக்கும் எதையும் உறுதியாய் தவிர்க்கையில் ஞானமுள்ளோராய் இருப்போம்.​—⁠ரோமர் 12:⁠9.

ஜெபம் தரும் பலம்

12. ‘எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாதீர்’ என ஜெபிக்கையில் கடவுளிடம் என்ன கேட்கிறோம்?

12 “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” என்ற ஊக்கமூட்டும் உறுதியை பவுல் கொடுக்கிறார். (1 கொரிந்தியர் 10:13) சோதனையைச் சமாளிப்பதற்கு யெகோவாவை ஜெபத்தில் நாடுகையில் அதற்கு பதிலளிப்பதன் மூலம் அவர் நமக்கு உதவுவது ஒரு வழியாகும். “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீயோனிலிருந்து எங்களை விடுவியும்” என ஜெபிக்கும்படி இயேசு கிறிஸ்து நமக்குக் கற்பித்தார். (மத்தேயு 6:13, NW) இத்தகைய இருதயப்பூர்வ ஜெபத்திற்கு பதிலளிக்கும் வகையில், அவர் நம்மை அச்சோதனைக்குள் சிக்க அனுமதிக்க மாட்டார்; சாத்தானிடமிருந்தும், அவனுடைய தந்திரங்களிலிருந்தும் நம்மை விடுவிப்பார். (எபேசியர் 6:​11, NW அடிக்குறிப்பு) சோதனைகளை இனம் கண்டுகொள்ளவும், அவற்றை எதிர்த்து வெற்றி பெறவும் பலத்தைத் தந்து உதவும்படி நாம் கடவுளைக் கேட்க வேண்டும். சோதனையில் வழிதவறிப்போகாமல் நம்மை காக்கும்படி அவரிடம் மன்றாடுகையில், “பொல்லாங்கனாகிய” சாத்தானின் வலையில் சிக்காமலிருக்க அவர் நமக்கு உதவுவார்.

13. ஓயாத சோதனையை எதிர்ப்படுகையில் என்ன செய்ய வேண்டும்?

13 முக்கியமாக, கடுமையான சோதனையை எதிர்ப்படுகையில் நாம் அதிக ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும். சில சோதனைகள், சிந்தனைகளிலும் செயல்களிலும் நமக்குள் பலத்த போராட்டத்தை உண்டாக்கலாம்; உண்மையில் எவ்வளவு பலவீனராக இருக்கிறோம் என்பதை அவை நமக்கு நினைப்பூட்டலாம். (சங்கீதம் 51:5) உதாரணமாக, முன்னர் ஏதோ தவறான நடத்தையில் ஈடுபட்டிருக்கலாம்; அந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து நம்மை வாட்டினால் என்ன செய்வது? திரும்பவும் அதே தவறில் ஈடுபட மனம் தூண்டினால் என்ன செய்வது? அத்தகைய உணர்ச்சிகளை வெறுமனே கட்டுப்படுத்துவது மட்டும் போதாது; அவற்றை ஜெபத்தில் யெகோவாவிடம் சொல்வதும் அவசியம். தேவைப்பட்டால் மறுபடியும் மறுபடியும் அதற்காக ஜெபிக்க வேண்டும். (சங்கீதம் 55:22) அசுத்தமான எண்ணங்களிலிருந்து நம்முடைய மனதை சுத்தப்படுத்துவதற்கு அவர் பலம்படைத்த தம்முடைய வார்த்தையின் மூலமும் பரிசுத்த ஆவியின் மூலமும் உதவலாம்.​—⁠சங்கீதம் 19:​8, 9.

14. சோதனையை சமாளிப்பதற்கு ஜெபம் ஏன் முக்கியம்?

14 கெத்செமனே தோட்டத்தில் தம்முடைய அப்போஸ்தலர்கள் தூக்க கலக்கத்தில் இருந்ததை கவனித்த இயேசு, “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” என்று கூறினார். (மத்தேயு 26:41) சோதனையை சமாளிப்பதற்கு ஒரு வழி: அது எப்படியெல்லாம் வரும் என அறிந்து ஜாக்கிரதையாய் இருப்பதும், அதன் தந்திரமான வழிவகைகளை உணர்ந்துகொள்வதும் ஆகும். மேலும், அதை எதிர்த்து சமாளிக்க, ஆவிக்குரியப்பிரகாரமாய் பலம் பெற தாமதிக்காமல் ஜெபிப்பதும் முக்கியம். நாம் எந்த விஷயத்தில் பலவீனமாக இருக்கிறோமோ அந்த விஷயத்திலேயே சோதனை வருவதால் நம் சொந்த பலத்தில் அதை சமாளிக்க முடியாது; ஆகவே ஜெபம் மிக மிக முக்கியம். கடவுள் தரும் பலம் மட்டுமே, சாத்தானுக்கு எதிராக அரண்போல் அமைந்து நம்மை காத்துக்கொள்ளும். (பிலிப்பியர் 4:​6, 7) ‘சபை மூப்பர்களுடைய’ ஆவிக்குரிய உதவியும் ஜெபங்களும்கூட நமக்குத் தேவை.​—⁠யாக்கோபு 5:​13-​18.

சோதனையை மும்முரமாய் எதிர்த்து நில்லுங்கள்

15. சோதனையை எதிர்த்து நிற்பதில் எது உட்பட்டிருக்கிறது?

15 முடிந்த மட்டும் சோதனையைத் தவிர்க்க வேண்டும்; அத்தோடு சோதனையை முழுமையாய் சகிக்க வேண்டும் அல்லது அந்தச் சூழ்நிலைமை மாறும் வரையில் மும்முரமாய் எதிர்த்து நிற்க வேண்டும். சாத்தானால் இயேசு சோதிக்கப்பட்டபோது, பிசாசானவன் தம்மை விட்டு போகும் வரையில் எதிர்த்து நின்றார். (மத்தேயு 4:​1-​11) “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 4:7) கடவுளுடைய வார்த்தையால் நம் மனதை திடப்படுத்தி, அவருடைய சட்டதிட்டங்களைப் பின்பற்ற தீர்மானமாய் இருக்கையில் எதிர்ப்பு தொடங்குகிறது. நமக்கிருக்கும் குறிப்பிட்ட பலவீனத்தைப் பற்றிய வேதவசனங்களை மனப்பாடம் செய்து அவற்றை தியானிப்பது ஞானமானது. நம்முடைய கவலைகளை மனம்விட்டு பேசவும், தவறி விழச் செய்யும் சோதனைகளை எதிர்ப்படுகையில் சமாளிக்கவும் உதவி தேவை; அதற்கு யாரேனும் முதிர்ந்த கிறிஸ்தவரை, ஒருவேளை மூப்பரை நாடுவது நல்லது.​—⁠நீதிமொழிகள் 22:⁠17.

16. எவ்வாறு நேர்மையாய் நிலைத்திருக்க முடியும்?

16 புதிய மனுஷ தன்மையை அல்லது புதிய பண்பியல்பை வளர்த்துக்கொள்ளும்படி வேதவசனங்கள் நம்மை ஊக்குவிக்கின்றன. (எபேசியர் 4:​24) யெகோவா நம்மை சரிப்படுத்தி உருவமைக்க அனுமதிப்பதை இது குறிக்கிறது. தன் உடன் வேலையாளாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகையில், “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்” என பவுல் சொன்னார். (1 தீமோத்தேயு 6:11, 12) கடவுளுடைய குணங்களை நன்கு அறிவதற்காக அவருடைய வார்த்தையை ஊக்கமாக படிக்க வேண்டும்; அவருடைய கட்டளைகளுக்கு இசைவாய் நடக்க வேண்டும்; அப்போது, நாம் “நீதியை அடையும்படி நாடு”கிறோம். நற்செய்தியைப் பிரசங்கிப்பது, கூட்டங்களுக்கு வருவது போன்ற கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்காக முழுமையாய் திட்டமிடுவது அவசியம். கடவுளிடமாக நெருங்கி வருவதும், அவர் செய்திருக்கும் ஆவிக்குரிய ஏற்பாடுகளை முழுமையாய் பயன்படுத்திக் கொள்வதும் அவசியம்; இது ஆன்மீகத்தில் வளரவும் நேர்மையாய் நிலைத்திருக்கவும் உதவும்.​—⁠யாக்கோபு 4:⁠8.

17. சோதனையின்போது கடவுள் நம்மைக் கைவிடமாட்டார் என்று நமக்கு எப்படி தெரியும்?

17 நம் சக்திக்கு மிஞ்சிய எந்த சோதனையையும் நாம் அனுபவிக்க வேண்டி இருக்காது என்று பவுல் நம்பிக்கை அளிக்கிறார். யெகோவா, “சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1 கொரிந்தியர் 10:13) நாம் தொடர்ந்து யெகோவாவை சார்ந்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்தால், போதிய ஆன்மீக பலமின்றி, உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையும் நம்மை சூழ்ந்துகொள்ள அனுமதிக்க மாட்டார் என நிச்சயமாய் இருக்கலாம். அவர் தவறென கருதும் காரியங்களை நாம் செய்யாமல் மும்முரமாய் அச்சோதனையை எதிர்த்து நின்று வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார். மேலும், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்ற அவருடைய வாக்குறுதியில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்.​—⁠எபிரெயர் 13:⁠5.

18. மனித பலவீனத்தை எதிர்த்து வெற்றி பெறுவோம் என ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?

18 மனித பலவீனத்திற்கு எதிராக போராடுகையில் என்ன சம்பவிக்கும் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார். உதவியற்ற பகடைக்காய் போன்று, தன் மாம்ச இச்சைகளுக்கு இரையாகும் பலவீனனாக பவுல் தன்னைக் கருதவில்லை. அதற்கு மாறாக, “நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” என சொன்னார். (1 கொரிந்தியர் 9:26, 27) நாமும் அபூரண மாம்சத்திற்கு எதிராக வெற்றிகரமாய்ப் போராடலாம். வேதவசனங்கள், பைபிளின் அடிப்படையிலான பிரசுரங்கள், கிறிஸ்தவக் கூட்டங்கள், முதிர்ச்சியுள்ள உடன் கிறிஸ்தவர்கள் என பலவிதங்களில் நம்முடைய பரலோகத் தகப்பன் நமக்கு உதவுகிறார். இவ்வாறு, நேர்மையான போக்கைப் பின்பற்ற உதவும் நினைப்பூட்டுதல்களை தவறாமல் அளித்து வருகிறார். அவருடைய உதவியுடன் மனித பலவீனத்தை எதிர்த்து வெற்றி பெறலாம்!

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

• “மாம்ச சிந்தை” என்பதன் அர்த்தமென்ன?

• சோதனைக்கு நாம் எவ்வாறு தயாராகலாம்?

• சோதனையை சமாளிப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?

• சோதனையை சமாளிப்பதில் ஜெபத்தின் பங்கென்ன?

• மனித பலவீனத்தை எதிர்த்து வெற்றி பெற முடியும் என நமக்கு எப்படி தெரியும்?

[பக்கம் 10-ன் படங்கள்]

உதவியற்ற பகடைக்காய் போன்று நாம் மாம்ச இச்சைகளுக்கு பலியாவோம் என பைபிள் கற்பிக்கிறதில்லை

[பக்கம் 12-ன் படம்]

கவர்ந்திழுக்கும் சூழ்நிலையிலிருந்து விலகியோடுவது பாவத்தைத் தவிர்ப்பதற்கான முக்கிய வழி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்