பாத்திரவான்களைத் தேடிக் கண்டுபிடித்தல் கென்யா
கென்யா—இயற்கையின் வனப்பில் ஜொலிக்கும் ஒரு நாடு. பசுமைப்புரட்சி செய்யும் காடுகள், பரந்த சமவெளிகள், தகதகவென அனல்வீசும் பாலைவனம், வெண்பனியை போர்வைபோல் போர்த்திய மலைகள்—இவையே கண்கவரும் இந்நாட்டிற்கு எழில் சேர்ப்பவை. பத்து லட்சத்திற்கும் அதிகமான மறிமான்களுக்கும் அருகிவரும் காண்டாமிருகங்களுக்கும் அடைக்கலமாக விளங்குகிறது. பெரும் மந்தை மந்தையாக புல்வெளிகளில் ஒயிலாக நடந்துவரும் ஒட்டகச்சிவிங்கிகளையும் காணலாம்.
உயரே வட்டமிடும் ராக்ஷ்ச கழுகுகள் முதல் இன்னிசை ராகம்பாடி இனிய ஒலி எழுப்பும் பல்வர்ண பாடும்பறவைகள் வரை விண்ணில் விளையாடும் ஜீவராசிகள் ஏராளம்! சிங்கங்களும் யானைகளும் யார் கண்ணிலும் படாமல் போய்விடுமா? கென்யாவில் கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளும் காதுக்கு தேன்வார்க்கும் ஒலிகளும் நெஞ்சைவிட்டு நீங்காதவை.
ஆனால் இந்த எழில் கொஞ்சும் இனிய நாடு முழுவதும் ஒலிக்கும் மற்றொரு ஒலி இருக்கிறது. அதுதான் நம்பிக்கையின் செய்தியை பரப்பும் ஆயிரமாயிரமானோரின் குரல்களின் ஒலி. (ஏசாயா 52:7) 40-க்கும் அதிகமான மரபினரையும் மொழியினரையும் இந்தக் குரல்கள் சென்றெட்டுகின்றன. இந்த அர்த்தத்தில், கென்யா ஆன்மீக வனப்பிலும் ஜொலிக்கும் ஒரு நாடாக திகழ்கிறது.
கென்யாவிலுள்ள பெரும்பாலானோர் மதப் பற்றுள்ளவர்கள், ஆன்மீக விஷயங்களை அளவளாவ ஆவலாய் இருக்கிறார்கள். இருந்தாலும், பேசுவதற்கு ஆட்களை கண்டுபிடிப்பது சவால்தான், ஏனெனில் மற்ற நாடுகளைப் போலவே கென்யாவும் மாறிக்கொண்டு வருகிறதே.
பொருளாதார கஷ்டங்கள் காரணமாக அநேகர் தங்களுடைய வாழ்க்கை பாணியை மாற்றியிருக்கிறார்கள். வீட்டில் வேலை செய்யும் பாரம்பரியத்தில் வளர்ந்த பெண்களை இப்பொழுது அலுவலகங்களிலோ அல்லது பழங்கள், காய்கறிகள், மீன்கள், முடைந்த கூடைகளை விற்றுக்கொண்டு சாலைகளிலோ வலம்வருவதை காணலாம். ஆண்கள் தங்களுடைய மனைவி மக்களை காப்பாற்ற அதிக நேரம் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். பிள்ளைகளும் தங்களுடைய பிஞ்சு கரங்களில் வறுத்த வேர்க்கடலை பாக்கெட்டுகளையும் அவித்த முட்டைகளையும் விற்றுக்கொண்டு வீதிகளில் திரிகிறார்கள். எனவே பகல்வேளைகளில் சிலரைத்தான் வீட்டில் பார்த்துப் பேசமுடிகிறது. இதனால் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்போர் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
நண்பர்கள், உறவினர்கள், வியாபாரிகள், சகபணியாளர்கள் ஆகியோருடன் பேசுவதோடு, வீட்டிற்கு வெளியில் இருப்பவர்களை—அதாவது, பிழைப்புக்காக அன்றாடம் வெளியில் போய்வருகிறவர்களை—சந்திப்பதற்கு அதிக கவனம் செலுத்தும்படி யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. இதற்கு சகோதரர்கள் செவிசாய்த்து, எங்கெல்லாம் ஆட்களை சந்திக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களிடம் பேசுகிறார்கள். (மத்தேயு 10:11) பிரசங்க வேலையை விரிவாக்குவதற்கு எடுக்கப்பட்ட இந்த முயற்சி நல்ல பலன்களை தந்திருக்கிறதா? அதில் சந்தேகமே இல்லை! சில உதாரணங்களை இப்பொழுது கவனியுங்கள்.
உறவினர்கள்—நமக்கு நெருங்கியவர்கள்
கென்யாவின் தலைநகரமாகிய நைரோபியில் சுமார் 30 லட்சம் பேர் வசிக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளைப் பிடிக்காத ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் அந்நகரத்தின் கிழக்குப் பகுதியில் வசித்துவந்தார். ஆனால் அவருடைய மகனே ஒரு யெகோவாவின் சாட்சி என்பது அவருக்கு விசனத்தைத் தந்தது. ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் மகா பிளவு பள்ளத்தாக்கைச் சேர்ந்த நாக்கூரு என்ற பட்டணத்தில் வசிக்கும் தன் மகனுடைய வீட்டிற்குச் செல்வதற்காக 160 கிலோமீட்டர் பயணித்தார். அப்போது, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு* புத்தகத்தை அவருடைய மகன் அவருக்கு பரிசாக கொடுத்தார். அவரும் அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்துவிட்டார்.
வீட்டிற்கு வந்தபின்பு அதை தன் மனைவியிடம் கொடுத்தார். அவருடைய மனைவி அதை படிக்க ஆரம்பித்தார், ஆனால் அது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது என்பது தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக பைபிள் சத்தியம் அவர் மனைவியினுடைய இதயத்தை தொட்டது, அதிலுள்ள விஷயங்களை தன்னுடைய கணவருடனும் பகிர்ந்துகொண்டார். அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலினால் அவரும் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். அந்தப் புத்தகத்தைப் பிரசுரிப்போர் யார் என்பதை அவர்கள் அறிந்தபோது, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தாங்கள் கேள்விப்பட்டது உண்மை அல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள். உள்ளூர் சாட்சிகளை தொடர்புகொண்டார்கள், பின்பு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. புகையிலையை பயன்படுத்துவதோ அல்லது அதை விற்பதோ கிறிஸ்தவ விசுவாசத்திற்கு புறம்பானது என்பதை அவர்களாகவே அந்தப் புத்தகத்தைப் படித்தபோது புரிந்துகொண்டார்கள். (மத்தேயு 22:39; 2 கொரிந்தியர் 7:1) உடனடியாக, தங்களுடைய கடையிலிருந்த எல்லா சிகரெட்டுகளையும் அழித்துவிட்டார்கள். பல மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக மாறினார்கள், பின்பு சீக்கிரத்தில் ஒரு மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டப்பட்டார்கள்.
குப்பையில் பொக்கிஷம்
தலைமை மாவட்டத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில், சீராக வளர்ச்சியடையாத கிராமங்கள் இருக்கின்றன; அங்கே லட்சக்கணக்கானோர் வாழ்கிறார்கள். மண்ணினால், மரத்தினால், இரும்பு தகடுகளால் அல்லது உலோகத் துண்டுகளால் கட்டப்பட்ட வீடுகள் அணிவகுத்து நிற்பதை எவரும் காணலாம். தொழிற்சாலைகளில் வேலை இல்லாத சமயத்தில் மக்கள் வேறெதாவது வேலைகளை தேடிக்கொள்கிறார்கள். ஜூவா காலி (ஸ்வாஹிலி மொழியில், “சுட்டுப்பொசுக்கும் வெயில்”) வேலையாட்கள் வெயிலில் வேலை செய்து, பழைய கார்-டயர்களிலிருந்து செருப்புகளையோ அல்லது வேண்டாமென்று வீசியெறியப்பட்ட டின்களில் மண்ணெண்ணை விளக்குகளையோ தயாரிக்கிறார்கள். வேறு சிலரோ பழைய பேப்பர்கள், தகர டப்பாக்கள், பாட்டில்கள் ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு குப்பை மேடுகளிலோ அல்லது குப்பை தொட்டிகளிலோ தேடுகிறார்கள்.
குப்பையில் பொக்கிஷம் கிடைக்குமா? ஆம், கிடைத்திருக்கிறது! ஒரு சகோதரர் சொல்கிறார்: “பழைய நியூஸ்-பேப்பர்கள், பத்திரிகைகள் அமுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பிளாஸ்டிக் பையுடன், பரட்டை தலையும் முரட்டுத் தோற்றமும் கொண்ட வாட்டசாட்டமான ஒரு ஆள் நம்முடைய அசெம்பிளி ஹால் மைதானத்தில் நடந்து வந்துகொண்டிருந்தார். தன்னுடைய பெயர் வில்லியம் என்று சொன்ன பிறகு, ‘உங்ககிட்ட சமீபத்தில் வந்த காவற்கோபுரம் பத்திரிகை இருக்குதா?’ என அவர் என்னிடம் கேட்டார். நான் கொஞ்சம் பயந்துபோய், அவர் எதற்கு கேட்கிறார் என யோசித்தேன். பின்பு அவரிடம் ஐந்து பத்திரிகைகளை காட்டினேன், அதை ஒவ்வொன்றாக அவர் பார்த்துவிட்டு, ‘இதெல்லாத்தையும் நான் எடுத்துக்கிறேன்’ என சொன்னார். நான் ஆச்சரியப்பட்டு, என்னுடைய ரூமுக்குப் போய் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்a என்ற புத்தகத்தைக் கொண்டுவந்தேன். பரதீஸை பற்றிய படத்தை காண்பித்து, ஜனங்களுக்கு இலவசமாக பைபிள் படிப்பு நடத்துகிறோம் என்பதை விளக்கினேன். பின்பு அவரிடம்: ‘வில்லியம், நாம் நாளைக்கே இதிலிருந்து படிக்க ஆரம்பிக்கலாமே’ என்று கேட்டேன். அவர் நான் சொன்னபடியே வந்தார்!
“ஒரு ஞாயிற்றுக்கிழமை முதலாவதாக கூட்டத்திற்கு வந்தார். அன்று நான்தான் பொதுப் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தேன். வில்லியம் உள்ளே வந்து, அங்கிருந்தவர்களை நோட்டமிட்டார், மேடையில் என்னைப் பார்த்தார், பின்பு விருட்டென்று அங்கிருந்து போய்விட்டார். ஏன் இப்படி செய்தீர்கள் என பின்பு நான் அவரிடம் கேட்டேன். ‘எல்லாரும் ரொம்ப சுத்தமாக உடை உடுத்தியிருந்தாங்க, எனக்கு ரொம்ப சங்கடமாப்போச்சு’ என்று வெட்கத்தோடு சொன்னார்.
“வில்லியம் படிப்பில் முன்னேறி வந்தபோது, பைபிள் சத்தியம் அவருடைய வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்தது. அவர் நன்கு குளித்து, முடிவெட்டி, சுத்தமான, நல்ல டிரெஸ் போட்டுக்கொண்டு, தொடர்ந்து கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம் வெளியிடப்பட்டபோது, நாங்கள் அதிலிருந்து படிக்க தொடங்கினோம். இதற்கிடையில், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் இரண்டு பேச்சுக்கள் கொடுத்துவிட்டார், பின்பு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகவும் ஆனார். விசேஷ தின மாநாட்டில் அவர் முழுக்காட்டப்பட்டபோது அவரை என்னுடைய ஆவிக்குரிய சகோதரனாக வரவேற்றது என்னை மெய் சிலிர்க்க வைத்தது.”
காவற்கோபுரம் பத்திரிகையின் மதிப்பை அவர் முதன்முதலில் எங்கே பார்த்தார்? “குப்பைத் தொட்டியில் போடப்பட்ட பழைய பேப்பர்களுக்கு மத்தியில் சில பத்திரிகைகளை கண்டெடுத்தேன்.” ஆம், கிடைக்கக்கூடாத இடத்தில் பொக்கிஷத்தை அவர் கண்டுபிடித்தார்!
வேலை செய்யுமிடத்தில் சாட்சிகொடுத்தல்
நாம் வேலை செய்யுமிடத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்புகளுக்காக விழிப்புடன் இருக்கிறோமா? நைரோபி சபையைச் சேர்ந்த ஜேம்ஸ் என்ற மூப்பர் ஒருவருக்கு இப்படித்தான் பைபிள் சத்தியம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரும் மற்றவர்களை சென்றெட்டுவதற்கு இதே முறையை பயன்படுத்துவதில் திறமைசாலியாக மாறிவிட்டார். உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில், அவருடன் வேலை பார்ப்பவர் ஒருவர், “இயேசு இரட்சிக்கிறார்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட ஒரு பேட்ஜை குத்திக்கொண்டு ஆபீஸுக்கு வந்ததை ஜேம்ஸ் கண்டார். சுவிசேஷகராகிய பிலிப்புவின் பாணியில் அவரிடம் ஜேம்ஸ் இவ்வாறு கேட்டார்: “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா”? (அப்போஸ்தலர் 8:30) அந்தக் கேள்வி சுவாரஸ்யமான சம்பாஷணைக்கு வழிநடத்தியது. பைபிள் படிப்பு துவங்கப்பட்டது, பின்பு அவர் முழுக்காட்டப்பட்டார். மற்றவர்களையும் சென்றெட்டுவதில் ஜேம்ஸ் வெற்றி பெற்றாரா? அவரே சொல்கிறார், கவனியுங்கள்:
“டாமும் நானும் ஒரே கம்பெனியில் வேலை பார்க்கிறோம். நாங்கள் பெரும்பாலும் எங்களுடைய கம்பெனி பஸ்ஸில் சேர்ந்து செல்வோம். ஒரு நாள் காலை நாங்கள் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம். நம்முடைய புத்தகங்களில் ஒன்றை நான் வாசித்துக்கொண்டிருந்தேன், அதை டாம் பார்ப்பதற்கு வசதியாக வைத்திருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே, அவருடைய கவனத்தை அது கவர்ந்தது, நான் அவருக்கு என்னுடைய புத்தகத்தை சந்தோஷத்தோடு இரவலாக கொடுத்தேன். அந்தப் புத்தகத்திலிருந்து அவர் வாசித்தது அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது, அதனால் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். இப்பொழுது அவரும் அவருடைய மனைவியும் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட ஊழியர்களாக இருக்கிறார்கள்.”
ஜேம்ஸ் தொடர்ந்து சொல்கிறார்: “எங்களுடைய கம்பெனியில் மத்தியான இடைவேளையில் ரொம்ப சுவாரஸ்யமான உரையாடல் அடிக்கடி நடந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், எப்ராயிமையும் உவால்டரையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் சந்தித்தேன். நான் ஒரு சாட்சி என்பது அந்த இரண்டு பேருக்கும் தெரியும். ஏன் யெகோவாவின் சாட்சிகள் மீது இவ்வளவு பகைமை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள எப்ராயிம் ஆவலுள்ளவராக இருந்தார். யெகோவாவின் சாட்சிகளுக்கும் மற்ற மதங்களுக்கும் உள்ள வித்தியாசம் சம்பந்தமாக உவால்டருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. நான் கொடுத்த வேதப்பூர்வமான பதில் அவர்களுக்கு ரொம்ப திருப்தியாகிவிட்டதால் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்கள். எப்ராயிம் வேகமாக முன்னேறினார். நாளடைவில், அவரும் அவருடைய மனைவியும் யெகோவாவுக்கு தங்களுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தார்கள். இப்பொழுது அவர் மூப்பராக சேவை செய்கிறார், அவருடைய மனைவி ஒழுங்கான பயனியர் சேவை செய்கிறார். ஆனால் உவால்டர் கடும் எதிர்ப்பை சந்தித்ததால், அவருடைய புத்தகத்தையே வீசியெறிந்துவிட்டார். ஆனால் நான் தொடர்ந்து அவரை உற்சாகப்படுத்தியதால், அவர் மீண்டும் படிக்க ஆரம்பித்தார். இப்பொழுது அவரும் மூப்பராக சேவை செய்யும் சிலாக்கியத்தை அனுபவித்து வருகிறார்.” மொத்தமாக, தான் வேலை செய்யும் இடத்தில் சாட்சிகொடுப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ஜேம்ஸ் பயன்படுத்திக்கொண்டதால் 11 பேர் மெய் கிறிஸ்தவர்களாக மாறியிருக்கிறார்கள்.
அருமையான பலன்
விக்டோரியா ஏரிக்கரையில் அமைந்திருந்த ஒரு சிறு கிராமத்தில் நண்பர்களும் உற்றார் உறவினர்களும் சவ அடக்கத்திற்காக கூடிவந்தார்கள். அவர்கள் மத்தியில் வயதான சாட்சி ஒருவரும் இருந்தார். அவர் டாலி என்ற டீச்சரை அணுகி, இறந்தவர்களின் நிலையைப் பற்றியும், சாவை அடியோடு நீக்கிவிடுவதே யெகோவாவின் நோக்கம் என்றும் அவர்களுக்கு விளக்கினார். டீச்சர் செவிசாய்ப்பதை கண்ட அவர் இவ்வாறு உறுதியளித்தார்: “நீங்க ஊருக்குப் போன பிறகு எங்க மிஷனரிகள் யாராவது வந்து உங்களுக்கு பைபிளை கத்துத் தருவாங்க.”
கென்யாவிலேயே மூன்றாவது மிகப் பெரிய நகரம்தான் டாலியின் சொந்த ஊர். அந்த நகரில் அப்போது நான்கு மிஷனரிகளே சேவை செய்துகொண்டிருந்தார்கள். உண்மையில், டாலியை சந்திக்கும்படி மிஷனரிகளில் யாரிடமும் அந்த வயதான சகோதரர் சொல்லவில்லை. யாராவது கண்டிப்பாக சந்திப்பார்கள் என்ற முழு நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவ்வாறே நடந்தது! கொஞ்ச காலத்திற்குள்ளாகவே, ஒரு மிஷனரி சகோதரி டாலியை சந்தித்து பைபிள் படிப்பையும் ஆரம்பித்துவிட்டார்கள். டாலி இப்போது முழுக்காட்டுதல் பெற்றுவிட்டார்கள். அவர்களுடைய இளைய மகளும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய இரண்டு மகன்களும் முழுக்காட்டுதல் பெற்றுவிட்டார்கள். பயனியர் சேவை பள்ளியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது.
அதிகரிப்புக்கு கவனம் செலுத்துதல்
சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்திக் காட்டப்பட்டது, கென்யாவில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் நற்செய்திக்கு செவிகொடுக்க உதவியது. 15,000-க்கும் மேலான பிரஸ்தாபிகள் இப்போது முக்கியமான இந்த வேலையில் சுறுசுறுப்புடன் ஈடுபடுகிறார்கள், 41,000-க்கும் அதிகமானோர் கடந்த வருட கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தார்கள். கென்யா நாடு முழுவதிலும் கூட்டத்திற்கு வருபவர்களுடைய எண்ணிக்கை இருமடங்காகி வருகிறது. ஆகவே, அதிகமான ராஜ்ய மன்றங்களின் தேவை ஏற்பட்டுள்ளது.
பெரிய நகரங்களிலும் தொலைதூர பகுதிகளிலும் ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுகின்றன. இந்தத் தொலைதூர பகுதிகளில் ஒன்றுதான் சாம்பூரு நகரம். இது நைரோபிக்கு வடகிழக்கே 320 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 1934-ல் இந்நகருக்கு மாராலால் என்ற பெயர் சூட்டப்பட்டது. சாம்புரு மொழியில் அதன் அர்த்தம் “மின்னுதல்” என்பதாகும். ஏனெனில் முதன்முதலில் அங்கு பயன்படுத்தப்பட்ட இரும்புத் தகடாலான கூரை சூரிய ஒளியில் ஜொலித்தது. அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப்பின் மாராலாலில் இரும்புத் தகடு கூரையைக்கொண்ட மற்றொரு கட்டிடம் கட்டப்பட்டது. இதுவும்கூட “ஒளிவீசி, ஜொலிக்கிறது.” ஏனென்றால், இந்தப் பகுதியில் உண்மை வணக்கத்திற்குரிய இடம் இதுவே.
கென்யாவின் இந்தத் தொலைதூர பகுதியில் அந்த 15 பிரஸ்தாபிகள் கடுமுயற்சி எடுத்து இந்த முதல் ராஜ்ய மன்றத்தைக் கட்டினார்கள். பணம் குறைவாக இருந்ததால், உள்ளூரில் கிடைத்த பொருட்களை வைத்தே கட்டிடத்தைக் கட்டினார்கள். செம்மண்ணை தண்ணீரில் குழப்பி, அதை செங்குத்தாக நிறுத்தப்பட்ட கம்பங்களுக்கு இடையே வைத்து சுவர் எழுப்பினார்கள். சுவர்களை சாணமும் சாம்பலும் கலந்த கலவையால் பூசி பளபளப்பாக்கினார்கள். இவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்கள் பல வருடங்களுக்கு உறுதியாக இருந்தன.
கட்டிடத்திற்குத் தேவையான கம்பங்களைப் பெறுவதற்கு, மரங்களை வெட்ட சகோதரர்களுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால், நகரத்திற்கு மிக அருகில் இருந்த காடு சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. சகோதரர்களும் சகோதரிகளும் காட்டிற்கு நடந்து சென்று மரங்களை வெட்டி, கம்பத்திற்குத் தேவையான சரியான அளவில் அவற்றை செதுக்கி, பின்பு கட்டிட வேலை நடக்கும் இடத்திற்கு சுமந்துகொண்டு வந்தார்கள். ஒருமுறை சகோதரர்கள் இவ்வாறு காட்டிலிருந்து வருகையில் போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி அவர்களுடைய ‘பெர்மிட்’ செல்லாது என கூறிவிட்டார். மரங்களை வெட்டியதற்காக விசேஷித்த பயனியர் ஒருவரை கைது செய்யப்போவதாகவும் அந்தப் போலீஸ்காரர் சொன்னார். அந்த ஊரில் உள்ளவர்களுக்கும் போலீஸ்காரருக்கும் நன்கு அறிமுகமான ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்கள்: “எங்க சகோதரரை கைது செய்கிறதா இருந்தா, எங்க எல்லாரையுமே கைது செய்யணும். நாங்க எல்லாரும்தானே மரத்தை வெட்டினோம்!” உடனே அவர்கள் அனைவரையும் போக அனுமதித்தார்.
அந்த வனத்தில் மிருகங்களும் இருந்தன. ஆகவே அவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் நடந்து சென்றார்கள். ஒருநாள் ஒரு சகோதரி ஒரு மரத்தை வெட்டி வீழ்த்தினார்கள். அது கீழே விழுந்தபோது ஒரு மிருகம் குதித்து ஓடுவதைக் கண்டார்கள். அது பழுப்பு மஞ்சள் நிறத்தில் இருந்ததைக் கண்டு இம்பாலாதான் என நினைத்தார்கள். ஆனால், அதன் கால்தடங்களை பார்த்த பிறகுதான் ஓ! அது சிங்கம்!! என புரிந்தது. இப்படிப்பட்ட அபாயங்கள் ஒருபுறமிருந்தாலும், சகோதரர்கள் மன்றத்தைக் கட்டி முடித்தார்கள். யெகோவாவைத் துதிக்கும் இடமாக அது “ஜொலிக்கிறது.”
பிப்ரவரி 1, 1963, கென்யாவின் தேவராஜ்ய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நாள். அன்றுதான் 80 சதுர அடியில் ஒரே அறையைக் கொண்ட முதல் கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. அக்டோபர் 25, 1997 கென்யாவின் தேவராஜ்ய வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக இருந்தது! அதாவது, 84,000 சதுர அடியில் கட்டப்பட்ட புதிய பெத்தேல் வளாகம் அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்று வருட கடின உழைப்பின் பலனே முடிவுற்ற இத்திட்டம். 25 நாடுகளிலிருந்து தொண்டர்கள் வந்திருந்தார்கள்; பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் 80 பேர் தங்கும் அந்தப் புதிய கிளை அலுவலகத்திற்காக, சகதியும் களைகளும் நிறைந்த 7.8 ஏக்கர் நிலத்தை அழகிய பூங்காவனமாக மாற்றினார்கள்.
யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு செய்திருப்பவற்றை பார்க்கும்போது நாம் மகிழ்ச்சியடையலாம். கென்யாவில் பாத்திரமானவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் வேலையை தம்முடைய ஊழியர்கள் விரிவாக்கி தீவிரப்படுத்த அவர்களது இதயத்தைத் தூண்டியதற்கும், அதை ஆன்மீக வனப்பில் ஜொலிக்கும் அழகிய தேசமாக மாற்றியதற்கும் எல்லா புகழும் அவருக்கே உரியது.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.