வாழ்க்கை சரிதை
கஷ்டங்கள் மத்தியில் முழு ஆத்துமாவோடு சேவித்தல்
ரோடால்ஃபோ லோசானோ சொன்னபடி
மெக்ஸிகோவில், டியுராங்கோ மாநிலத்திலுள்ள கோமெஸ் பாலாஸ்யோ நகரில் 1917, செப்டம்பர் 17-ல் பிறந்தேன். அப்போது மெக்ஸிகோவில் புரட்சி தீவிரமாயிருந்தது. புரட்சி ‘தீ’ என்னவோ 1920-ல் அணைக்கப்பட்டுவிட்டது உண்மையானாலும், பல வருடங்களுக்குப் பின்னும் கலவரங்கள் என்ற பெயரில் அது ‘புகைந்துகொண்டுதான்’ இருந்தது. எனவே வாழ்க்கை நடத்துவது பெரும் பாடாய் இருந்தது.
எனக்கு மூன்று அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கை. ஒரு சமயம், கலக கும்பலும் இராணுவமும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளப் போவதைப் பற்றிய விஷயம் அம்மாவுக்குத் தெரிய வந்தது. அவ்வளவுதான், பிள்ளைகளாகிய எங்கள் அனைவரையும் வெளியே தலைகாட்டவே விடவில்லை; பாதுகாப்பிற்காக வீட்டில் பூட்டி வைத்திருந்தார்கள். சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாமல் எல்லாரும் பட்டினி கிடந்தோம். என் தங்கையோடு நான் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டிருந்தது நேற்றைக்கு நடந்தது மாதிரியே என் நினைவில் இருக்கிறது. இந்நிலைமையை சமாளிக்க அம்மா எங்களை ஐக்கிய மாகாணங்களுக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தார்கள். அப்பாவோ, பின்னர் வந்து எங்களோடு சேர்ந்துகொள்ள இருந்தார்.
ஐக்கிய மாகாணங்கள் பொருளாதார மந்தநிலையில் வீழ்வதற்கு சற்று முன்பு, 1926-ல் நாங்கள் கலிபோர்னியாவை வந்தடைந்தோம். சான்வாக்கீன் பள்ளத்தாக்கு, சான்டா க்ளாரா, சலீனஸ், கிங் சிட்டி என்று வேலை தேடி சுற்றாத இடமில்லை. வயல்களில் வேலை செய்யவும் எல்லா விதமான பழங்களையும் காய்கறிகளையும் அறுவடை செய்யவும் கற்றுக்கொண்டோம். இளமை பருவத்தில் நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடுபட்டாலும் அதுவே என்னுடைய வாழ்க்கையின் வசந்தம்.
பைபிள் சத்தியம் கிடைக்கிறது
1928-ல், மார்ச் மாதத்தில் பைபிள் மாணாக்கர் என்று அப்போது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் எங்களை சந்தித்தார். அவர் ஸ்பானிய மொழி பேசிய முதியவர். அவருடைய பெயர் ஏஸ்டேபான் ரிவெரா. அவர் எங்களிடம் “மரித்தோர் எங்கே இருக்கின்றனர்?” (ஆங்கிலம்) என்ற தலைப்பில் சிறுபுத்தகத்தை கொடுத்துவிட்டு சென்றார். தலைப்பும்சரி உள்ளே இருந்த விஷயங்களும்சரி என்னை மிகவும் கவர்ந்தன. இளைஞனாக இருந்தாலும் பைபிளை தவறாமல் வாசித்து வந்தேன், பைபிள் மாணாக்கரோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தேன். காலப்போக்கில், என்னுடைய அம்மாவும் தங்கை ஆரோராவும் யெகோவாவை வைராக்கியமாக துதிப்பவர்களாய் மாறினர்.
1930-35 வாக்கில் சான் ஜோஸிலிருந்த ஆங்கில மொழி சபைக்கு ராஜ்ய மன்றம் ஒன்று கட்டப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த பண்ணையில் அநேக ஹிஸ்பானியர்கள் வேலை செய்தனர்; எனவே நாங்கள் அவர்களுக்கு பிரசங்கிக்கவும் காவற்கோபுரம் படிப்பு நடத்தவும் ஆரம்பித்தோம். சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலிருந்த சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து வந்த ஹிஸ்பானிய சாட்சிகள் எங்களுக்கு பெரிதும் தோள்கொடுத்து உதவினர். கொஞ்ச காலத்துக்குப்பின் சான் ஜோஸ் ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற ஸ்பானிய மொழி கூட்டங்களில் சுமார் 60 பேர் கலந்துகொண்டனர்.
1940, பிப்ரவரி 28 அன்று, சான் ஜோஸில் நடந்த ஒரு மாநாட்டில், யெகோவாவுக்கு என் ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றேன். அதற்கு அடுத்த வருடமே பயனியராக, அதாவது யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியராக நியமிக்கப்பட்டேன். பின்னர் 1943, ஏப்ரலில் ஸ்பானிய மொழி சபையை ஸ்தாபிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது; கேட்டுக்கொண்டதன் பேரில், சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஸ்டாக்டனுக்கு செல்ல நேர்ந்தது. அந்தச் சமயத்தில் நான் சான் ஜோஸ் ஆங்கில சபையின் நடத்தும் கண்காணியாக பணியாற்றி வந்தேன்; அங்கிருந்த ஸ்பானிய மொழி பேசும் சகோதரர்களுக்கும் பக்கபலமாய் இருந்து வந்தேன். ஆகவே இந்தப் பொறுப்புகளை எல்லாம் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஸ்டாக்டனுக்கு புறப்பட்டேன்.
உத்தமத்திற்கு வந்த பரீட்சை
இராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் நிர்வாகிகள் 1940 முதற்கொண்டு பல முறை என்னை அழைத்து பேசினர். ஆனால் ஒவ்வொரு முறையும் மத அடிப்படையில் மறுப்பு தெரிவித்தபோது, அதற்கு மதிப்பு கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனால், 1941, டிசம்பரில் ஐக்கிய மாகாணங்கள் இரண்டாம் உலகப் போரின் களத்தில் இறங்கியபோது நிர்வாகிகளின் வற்புறுத்துதல் அதிகரித்தது. கடைசியாக 1944-ல், சிறையில் அடைக்கப்பட்டேன். தீர்ப்புக்காக காத்திருந்த சமயத்தில் குற்றவாளிகளோடு அடித்தளத்தில் தங்கியிருந்தேன். நான் யெகோவாவின் சாட்சி என்பதை குற்றவாளிகளில் பலர் அறிந்துகொண்டனர்; அவர்களுடைய குற்றங்கள், கடவுளுக்கு முன்பாக அவர்கள் நிலைநிற்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிய பல கேள்விகள் கேட்டு என்னை துளைத்து எடுத்தனர்.
அந்தச் சமயத்தில் என்னை ஜாமீனில் விடுவிக்க சான் ஜோஸிலிருந்த சாட்சிகள் ஏற்பாடு செய்தனர். லாஸ் ஏஞ்சலிஸ் குடிமக்கள் உரிமை வழக்குகளில் பிரதிவாதிகளின் சார்பாக ஆஜரான ஒரு வழக்கறிஞர், கட்டணமின்றி என் சார்பாக வழக்காட முன்வந்தார். என்னை விடுதலை செய்ய நீதிபதி எனக்கு முன் வைத்த நிபந்தனை: பயனியர் செய்வதை விட்டுவிட வேண்டும்; ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்துகொண்டு, மாதா மாதம் ஃபெடரல் அதிகாரிகளிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும். இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. விளைவு? வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த மெக்னீல் ஐலண்ட் சிறையில் இரண்டாண்டு கால சிறை தண்டனை. அந்தச் சமயத்தை வீணாக்காமல் தீவிரமாக பைபிள் படித்தேன். டைப்பிங் கற்றுக்கொண்டேன். இரண்டாண்டு காலம் பூர்த்தியாவதற்கு முன்பே நன்னடத்தைக்காக விடுதலை செய்யப்பட்டேன். உடனடியாக பயனியர் ஊழியத்தைத் தொடர முற்பட்டேன்.
விரிவாக்கப்பட்ட ஊழியம்
1947-ன் குளிர்காலத்தில், டெக்ஸஸிலுள்ள கொலராடோ நகரில் ஸ்பானிய மொழி பேசுபவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்ய மற்றொரு பயனியருடன் எனக்கு நியமனம் கிடைத்தது. ஆனால் அங்கு குளிரோ குளிர், தாங்க முடியவில்லை. எனவே கதகதப்புக்காக சான் அன்டோனியோவுக்குச் சென்றோம். ஆனால் அங்கோ அடை மழை எங்களை வரவேற்றது. எங்களால் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியவில்லை. சீக்கிரத்தில் கையிலிருந்த காசெல்லாம் கரைந்துவிட்டது. வேக வைக்காத முட்டைகோஸும், ரொட்டியும், தேநீரும்தான் சில வாரங்களுக்கு எங்களுக்கு உணவு. என்னுடன் பயனியர் செய்ய வந்தவர் வீட்டிற்குப் போய்விட்டார். ஆனால் நான் அங்கேயே தங்கிவிட்டேன். ஆங்கில சபையை சேர்ந்த சகோதரர்கள் என் தேவையை அறிந்து உதவிக்கரம் நீட்டினர்.
வசந்த காலம் வந்ததும் பழையபடி என் ஊழியத்தைத் தொடர கொலராடோ நகருக்குத் திரும்பினேன். கடைசியில் அங்கே ஸ்பானிய மொழி சபை ஒன்று உருவாகியது. அதன்பிறகு டெக்ஸஸிலுள்ள ஸ்வீட்வாட்டர் என்ற இடத்திற்குச் சென்றேன். அங்கே மற்றொரு ஸ்பானிய மொழி சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு உதவினேன். ஸ்வீட்வாட்டரில் இருக்கையில், உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 15-வது வகுப்பில் ‘பயில’ அழைப்பு வந்தது. இந்த மிஷனரி பயிற்சி 1950, பிப்ரவரி 22-ம் தேதி ஆரம்பமானது. அந்த வருடம் கோடை காலத்தில் நியூ யார்க் நகரின் யாங்கி ஸ்டேடியத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் பட்டம் பெற்றேன். பின்பு, புரூக்லினில் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் மூன்று மாதங்கள் தங்கினேன். அங்கே மெக்ஸிகோ கிளை அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மெக்ஸிகோவில் ஊழியம்
1950, அக்டோபர் 20-ல் மெக்ஸிகோ நகரில் மீண்டும் காலடி எடுத்து வைத்தேன். இரண்டு வாரங்கள் கழித்து கிளை அலுவலக கண்காணியாக நியமிக்கப்பட்டேன். நாலரை ஆண்டுகள் அந்த வேலையை செய்துவந்தேன். பயனியர் சேவையில், சிறையில், கிலியட்டில், புரூக்லினில் என நான் பெற்ற அனுபவங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தன. மெக்ஸிகோ வந்தவுடன் அங்கிருந்த சகோதர சகோதரிகளின் ஆவிக்குரிய தன்மையை ஊக்குவிப்பதே என் தலையாய வேலை என்பதை உணர்ந்தேன். முக்கியமாய், கடவுளுடைய வார்த்தையின் உயர்ந்த ஒழுக்க தராதரங்களைப் பின்பற்றுவதில் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது.
மெக்ஸிகோ உட்பட லத்தீன் அமெரிக்க நாடுகளில் சட்டப்படி திருமணம் செய்யாமல் தம்பதிகளாய் சேர்ந்து வாழுவது சகஜமாய் இருந்தது. கிறிஸ்தவமண்டல மதங்கள், முக்கியமாக ரோமன் கத்தோலிக்க சர்ச், பைபிள் பூர்வமற்ற இந்தப் பழக்கத்தைக் கண்டுகொண்டதாகவோ கண்டித்ததாகவோ தெரியவில்லை. (எபிரெயர் 13:4) இதனால், சட்டப்படி திருமணம் செய்யாத சிலர் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் இருந்தனர். ஆகவே தங்களுடைய திருமணத்தை சட்டப்படி பதிவுசெய்ய இவர்களுக்கு ஆறுமாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அவ்வாறு பதிவு செய்யாவிட்டால், அப்படிப்பட்டவர்கள் இனிமேலும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்க முடியாது.
பலருக்கு இது பெரும் பிரச்சினையாக இல்லை. சட்டப்படி திருமணத்தை பதிவு செய்வது மட்டுமே தேவைப்பட்டது. சிலருக்கு மட்டுமே நிலைமை படுசிக்கலாக இருந்தது. உதாரணமாக சிலர் சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டு, மூன்று தடவை மறுமணம் செய்திருந்தனர். கடைசியாக யெகோவாவின் மக்கள், தங்கள் திருமண வாழ்க்கையை கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக சரிசெய்தபோது சபைகளில் அபரிமிதமாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்ந்தனர்.—1 கொரிந்தியர் 6:9-11.
அந்த நாட்களில் மெக்ஸிகோவில் பொதுவாகவே படிப்பறிவு குறைவு. 1950-ல் நான் மெக்ஸிகோ வருவதற்கு முன்பே சபைகளில் எழுத படிக்க கற்றுக்கொடுப்பதற்கு வகுப்புகளை கிளை அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. நான் அங்கு சென்றபிறகு இந்த வகுப்புகள் மறுபடியும் ஒழுங்கமைக்கப்பட்டன, அரசாங்க ஒப்புதலும் பெறப்பட்டது. 1946 முதல் பங்குகொள்வோரின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அதன்படி மெக்ஸிகோவில் சாட்சிகள் நடத்திய ஆரம்ப வகுப்புகளில் 1,43,000-க்கும் அதிகமானோர் எழுத படிக்க கற்றுக்கொண்டனர்.
மெக்ஸிகோவின் மதம் சம்பந்தமான சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தன. ஆனால் சமீப ஆண்டுகளில் அதில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1992-ல் மத ரீதியாக புதிய சட்டம் இயற்றப்பட்டது; எனவே, 1993-ல் யெகோவாவின் சாட்சிகளின் மத அமைப்பு மெக்ஸிகோவில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.
எனக்கோ இந்த மாற்றங்களெல்லாம் விவரிக்க முடியாதளவு மகிழ்ச்சியை தந்திருக்கின்றன. ஒருகாலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காரணம், பல வருடங்களாக இது சம்பந்தமாக அரசாங்க அதிகாரிகள் பலரை அடிக்கடி போய் சந்தித்திருக்கிறேன், ஆனால் அவர்கள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசியதுகூட இல்லை. இருந்தபோதிலும், நம்முடைய கிளை அலுவலகத்திலுள்ள சட்ட இலாகா இந்த விவகாரங்களை வெகு நேர்த்தியாக கையாண்டிருக்கிறது. ஆகவே பிரசங்க வேலையில் அந்தளவுக்கு குறுக்கீடு எதுவும் இப்போது இல்லை.
மிஷனரி துணைவி
மெக்ஸிகோவிற்கு வந்தபோது ஏற்கெனவே கிலியட் பட்டதாரிகளில் பலர் இங்கிருந்தனர். அவர்களில் ஒருவர் எஸ்தர் வார்ட்டான்யன். இவள், 1942-ல் கலிபோர்னியாவிலுள்ள வலேயோவில் ஊழியத்தைத் தொடங்கியிருந்த ஆர்மீனிய சாட்சி. நாங்கள் 1955, ஜூலை 30-ம் தேதி திருமணம் செய்துகொண்டோம், அதன் பிறகு மெக்ஸிகோவில் அவரவருக்கு நியமிக்கப்பட்ட வேலையை தொடர்ந்து செய்துவந்தோம். எஸ்தர் மிஷனரி ஊழியம் செய்து வந்தாள், நான் கிளை அலுவலகத்தில் வேலை செய்து வந்தேன். அங்கேயே வசித்து வந்ததால் கிளை அலுவலகமே எங்கள் ‘வீடு.’
1947-ல் மான்டெரே என்ற இடத்தில் எஸ்தர் தன்னுடைய முதல் மிஷனரி நியமிப்பை பெற்றாள்; இந்த இடம், மெக்ஸிகோவில், நியூவோ லியோனில் உள்ளது. அப்போது மான்டெரேயில் 40 சாட்சிகளைக் கொண்ட ஒரே ஒரு சபைதான் இருந்தது. ஆனால் 1950-ல் அவள் மெக்ஸிகோ நகருக்கு மாறிய போதோ நான்கு சபைகள் இருந்தன. மான்டெரேயில் ஊழியம் செய்கையில், எஸ்தர் பைபிள் படிப்பு நடத்தி வந்த குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தற்போது மெக்ஸிகோ நகரத்திற்கு அருகிலுள்ள கிளை அலுவலகத்தில் பணியாற்றுகின்றனர்.
பெரும்பாலும் மெக்ஸிகோவின் நகர்புறங்களே 1950-களில் மிஷனரிகளின் பிராந்தியங்கள். அந்த இடங்களுக்கு அவர்கள் நடந்தோ, ஜனநெரிசல் மிக்க பேருந்துகளிலோ சென்றனர். 1955-60-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நான் அங்கே வந்தபோது ஏழு சபைகள் இருந்தன. இப்போதோ 1,600 சபைகளாக அதிகரித்திருக்கின்றன. மெக்ஸிகோ நகரில் ராஜ்ய பிரஸ்தாபிகள் எண்ணிக்கையும் 90,000-ற்கு மேலாக உயர்ந்திருக்கிறது; கடந்த ஆண்டில் அங்கு நடந்த கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு 2,50,000-க்கும் அதிகமானவர்கள் வந்திருந்தனர்! இங்குள்ள பல சபைகளில் ஊழியம் செய்யும் பாக்கியம் எனக்கும் எஸ்தருக்கும் கிடைத்திருக்கிறது.
நானும் எஸ்தரும் பைபிள் படிப்பை ஆரம்பிக்கையில், எப்போதும் அந்தக் குடும்பத்தாருடைய தகப்பனுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதில் குறியாய் இருப்போம்; இது முழு குடும்பமும் பைபிளை படிக்க வழி செய்திருக்கிறது. இதன் காரணமாக பல பெரிய குடும்பங்கள் யெகோவாவை சேவிப்பதை காணும் பாக்கியம் பெற்றோம். குடும்பம் குடும்பமாக அனைவரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதே மெக்ஸிகோவில் மெய் வணக்கம் வேகமாக செழித்தோங்குவதற்கு காரணம் என நினைக்கிறேன்.
ஊழியத்தில் யெகோவாவின் ஆசீர்வாதம்
1950 முதற்கொண்டு ஊழியத்தில் மெக்ஸிகோவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எண்ணிக்கையில் அதிகரிப்பும் அமைப்பில் மாற்றங்களும் குறிப்பிடத்தக்க விதத்தில் நிகழ்ந்துள்ளன. உபசரிக்கும் பண்பும் மகிழ்ச்சியும் கொண்ட இந்த மக்களோடு வேலைசெய்து, அதிகரிப்புக்கு நாங்களும் சிறு பங்காற்றியதில் உண்மையிலேயே எங்களுக்கு ஆனந்தமே.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு உறுப்பினர் கார்ல் கிளைனும் அவருடைய மனைவி மார்கரெட்டும் சில வருடங்களுக்கு முன் விடுமுறையில் எங்களை சந்திக்க வந்தனர். மெக்ஸிகோவில் ஊழிய நிலையை கண்ணார காண அவர்களுக்கு ஆசை. ஆகவே மெக்ஸிகோ நகருக்கு அருகிலிருந்த சான் வான் டெசோன்ட்லா சபைக்கு வந்தனர். எங்களுடைய சிறிய மன்றம் 5.5 மீட்டர் நீளமும் 4.5 மீட்டர் அகலமும் உடையது. நாங்கள் போய் சேரும் முன்பே 70 பேர் அங்கிருந்தனர், நிற்பதற்குக்கூட இடமில்லை. வயதானவர்கள் நாற்காலிகளிலும், இள வயதினர் பெஞ்சுகளிலும், சிறு பிள்ளைகள் செங்கற்களில் அல்லது தரையிலும் அமர்ந்திருந்தனர்.
பிள்ளைகள் அனைவரும் பைபிளை வைத்திருந்ததும் பேச்சாளர் குறிப்பிட்ட வசனங்களை உடனுக்குடன் எடுத்துப் பார்த்ததும் சகோதரர் கிளைனுடைய மனதை கவர்ந்தது. பொது பேச்சுக்குப் பின்பு சகோதரர் கிளைன் மத்தேயு 13:19-23-லுள்ள விஷயங்களின்பேரில் பேசினார். அதில் இயேசு குறிப்பிட்ட “நல்ல நிலம்” மெக்ஸிகோவில் ஏராளம் இருப்பதாக சொன்னார். அன்று அந்தப் பேச்சைக் கேட்ட பிள்ளைகளில் ஏழு பேர் இன்று மெக்ஸிகோ நகருக்கு அருகில் கிளை அலுவலக கட்டடங்களை விரிவுபடுத்தும் அந்த மாபெரும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருவர் பெத்தேலில் சேவை செய்கிறார், இன்னும் அநேகர் பயனியர்களாக சேவை செய்கின்றனர்!
முதன்முதல் மெக்ஸிகோ நகருக்கு வந்த போது கிளை அலுவலகத்தில் 11 பேர் மாத்திரமே இருந்தனர். இப்போது சுமார் 1,350 பேர் வேலை செய்கின்றனர், சுமார் 250 பேர் புதிய கிளை அலுவலக கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த கட்டுமான பணி 2002-ல் முற்றிலும் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது; அப்போது, விரிவாக்கப்பட்ட இந்தக் கிளை அலுவலகத்தில் கூடுதலாக சுமார் 1,300 பேர் தங்க முடியும். 1950-ல் தேசம் முழுவதிலும் 7,000-க்கும் குறைவான சாட்சிகளே இருந்தனர், இன்றோ 5,00,000-க்கும் அதிகமானவர்கள் இருப்பதை எண்ணி பார்க்கையில் மனம் குதூகலத்தால் துள்ளுகிறது! யெகோவாவை துதிப்பதற்கு கடினமாக உழைக்கும் தாழ்மை மனம் படைத்த மெக்ஸிகோ சகோதரர்களின் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்திருப்பதை பார்க்கையில் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷமே!
மிகப் பெரிய சவால்
என்னை வாட்டி எடுக்கும் நோய்தான் சமீப காலமாக மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. பொதுவாக நான் ஆரோக்கியமானவன். ஆனால் 1988, நவம்பரில் எனக்கு வந்த பக்கவாதம் சரீர திறமைகளை வெகுவாக ஒடுக்கிவிட்டது. யெகோவாவின் கிருபையாலும் உடற்பயிற்சியாலும், இன்னும் சில சிகிச்சை முறைகளாலும் ஓரளவுக்கு குணமடைந்துள்ளேன். ஆனாலும் உடலின் சில உறுப்புக்கள் என்னுடன் முழுமையாக ஒத்துழைப்பதில்லை. கடும் தலைவலியை தவிர்ப்பதற்கு மருந்து சாப்பிடுவதோடு, இன்னும் குணமாகாமல் இருக்கும் மற்ற குறைபாடுகளுக்காகவும் சிகிச்சை பெற்று வருகிறேன்.
இப்போதெல்லாம் ஆசைப்படும் அளவுக்கு எதையும் சாதிக்க முடிவதில்லை; என்றாலும், யெகோவாவின் நோக்கங்களை கற்றுக்கொள்ளவும், அவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாக ஆகவும் அநேகருக்கு உதவ முடிந்ததை எண்ணி திருப்திப்பட்டு கொள்கிறேன். இந்தக் கிளை அலுவலகத்துக்கு வரும் அநேக சகோதர சகோதரிகளோடு பேசி மகிழ வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு பேசுவதால் நாங்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்வதை உணருகிறேன்.
யெகோவா நம் ஊழியத்தைப் போற்றுகிறார், நம் செயல்கள் எதுவும் வீணாவதில்லை என்பதை அறிவது எனக்குள் அதிக பலத்தை அளித்திருக்கிறது. (1 கொரிந்தியர் 15:58) என்னால் அதிகம் செய்ய முடியவில்லைதான், என் உடல்நிலையும் திருப்திகரமாக இல்லைதான்; ஆனாலும் கொலோசெயர் 3:23, 24-லுள்ள வார்த்தைகளை நான் மனதார ஒப்புக்கொள்கிறேன்: “சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே [“யெகோவாவுக்கென்றே,” NW] மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” இந்த அறிவுரையை மனதில் வைத்து, கஷ்டங்கள் மத்தியிலும் யெகோவாவை முழு ஆத்துமாவோடு சேவிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்.
[பக்கம் 24-ன் படம்]
1942-ல் பயனியராக இருக்கையில்
[பக்கம் 24-ன் படம்]
1947-ல் என் மனைவி மெக்ஸிகோவில் தன் மிஷனரி ஊழியத்தை ஆரம்பித்தாள்
[பக்கம் 24-ன் படம்]
இன்று எஸ்தரோடு
[பக்கம் 26-ன் படங்கள்]
மேலே இடது: 1952-ல் மெக்ஸிகோ பெத்தேல் குடும்பம், முன்னால் நான் நிற்கிறேன்
மேலே: 1999-ல் இந்த மெக்ஸிகோ நகர ஸ்டேடியத்தில் 1,09,000-க்கும் அதிகமானோர் ஒரு மாவட்ட மாநாட்டுக்கு வந்திருந்தனர்
கீழே இடது: புதிய கிளை அலுவலக கட்டடங்கள் முடிவுறும் நிலையில்