உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w00 11/15 பக். 21-23
  • மனமுவந்து கடவுளை சேவியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனமுவந்து கடவுளை சேவியுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அவர்கள் சேவை செய்ய மறுக்கின்றனர்
  • மனமுவந்து சேவிப்பது அவசியம்
  • வேண்டாவெறுப்புடன் செய்தால்?
  • கடவுளுடைய சித்தத்தை மகிழ்ச்சியோடு செய்யுங்கள்
  • ‘ஆவி உற்சாகமுள்ளது, மாம்சமோ பலவீனமுள்ளது’
  • இயேசுவின் அன்புக்கு நீங்கள் பிரதிபலிப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • நித்திய ஜீவனைப் பெற என்ன தியாகம் செய்வீர்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • இயேசு கிறிஸ்து—கடவுளால் அனுப்பப்பட்டாரா?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
w00 11/15 பக். 21-23

மனமுவந்து கடவுளை சேவியுங்கள்

“மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் [“முழுவதுமாக,” NW] செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.” (2 கொரிந்தியர் 12:15) யெகோவாவின் ஊழியர்கள் எப்படிப்பட்ட நோக்குநிலையையும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாக இந்த வார்த்தைகள் உங்களுக்குச் சொல்கின்றன? பைபிள் அறிஞர் ஒருவரின் கருத்துப்படி, கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது அவர் சொல்ல வந்தது இதுவே: “ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் செய்வதுபோல நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய பலத்தையும், நேரத்தையும், உயிரையும், என்னிடமுள்ள எல்லாவற்றையுமே உங்களுக்கு கொடுக்க நான் தயார்.” பவுல் “முழுவதுமாக செலவுபண்ணப்பட” அல்லது “களைப்படைந்து தொய்ந்துபோக” தயாராக இருந்தார். அப்படித்தான் தன்னுடைய கிறிஸ்தவ ஊழியத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கும் அவர் தயாராக இருந்தார்.

மேலும், பவுல் இதையெல்லாம் “மிகவும் சந்தோஷமாய்” செய்தார். அவர் அவ்வாறு செய்வதற்கு “முற்றிலும் மனமுள்ளவராக” இருந்தார் என்பதாக த ஜெரூசலம் பைபிள் கூறுகிறது. உங்களைப் பற்றி என்ன? நீங்கள் உங்கள் நேரம், சக்தி, திறமைகள், செல்வங்கள், ஆகியவற்றை யெகோவாவை சேவிப்பதற்காகவும் மற்றவர்களின் நலனுக்காகவும் செலவழிக்க மனமுள்ளவரா? அப்படிச் செய்வதால் சில சமயங்களில் நீங்கள் “களைப்படைந்து தொய்ந்து” போனாலும் அதை செய்வீர்களா? அதுவும், “மிகவும் சந்தோஷமாய்” அதை செய்வீர்களா?

அவர்கள் சேவை செய்ய மறுக்கின்றனர்

கடவுளை சேவிக்கும் விஷயத்தில், பெரும்பாலானோர் வெறுமனே தயக்கம் காண்பிப்பதில்லை, ஆனால் சுத்தமாக மறுத்தேவிடுகின்றனர். அவர்கள் நன்றியில்லாதவர்கள், தன்னலத்தோடு சுயேச்சையாக செயல்படுபவர்கள், கலகக்காரர்கள். ஆதாமும் ஏவாளும் இதைப் போன்ற ஒரு எண்ணத்தை வளர்க்கத்தான் சாத்தான் தூண்டினான். அவர்கள் “நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல்” இருப்பார்கள்​—⁠எது சரி எது தவறு என்பதை தாங்களாகவே தீர்மானித்துக் கொள்ள முடியும் என்று அவர்களிடம் தவறாக சொன்னான். (ஆதியாகமம் 3:1-5) இன்று அதே மனப்பான்மையுள்ள ஆட்கள், தங்களுக்கு இஷ்டமானதைச் செய்ய முழு சுதந்திரம் வேண்டும், கடவுள் இதில் குறுக்கிடக்கூடாது அல்லது இதற்கு கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறார்கள். (சங்கீதம் 81:11, 12) தங்களிடமுள்ள அனைத்தையும் தங்களுடைய சொந்த நலனுக்காகவே பயன்படுத்த விரும்புகிறார்கள்.​—⁠நீதிமொழிகள் 18:⁠1.

ஒருவேளை நீங்கள் அந்தளவு சிந்திக்க மாட்டீர்கள். இப்போது அனுபவித்துவரும் பரிசாகிய உயிருக்காகவும் பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழும் அந்த மிக மகத்தான எதிர்பார்ப்புக்காகவும் நீங்கள் உண்மையிலேயே போற்றுதல் தெரிவிக்கலாம். (சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 21:1-4) யெகோவா உங்களிடம் காண்பித்திருக்கும் நற்குணத்துக்காக அவருக்கு நீங்கள் மிகவும் நன்றியுள்ளவராயிருக்கலாம். ஆனால் நம்முடைய சேவை கடவுளுக்கு ஏற்கத்தகாததாக போகும் அளவுக்கு சாத்தான் நம்முடைய சிந்தனையை கெடுத்துவிடும் ஆபத்தைக் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 11:3) இது எப்படி நடக்கும்?

மனமுவந்து சேவிப்பது அவசியம்

நாம் மனமுவந்து முழு இருதயத்தோடு செய்யும் சேவையை யெகோவா விரும்புகிறார். அவருடைய சித்தத்தை நாம் செய்ய வேண்டும் என்று ஒருபோதும் நம்மை வற்புறுத்துவது கிடையாது. சாத்தான்தான் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற மனுஷரை வற்புறுத்துவதற்கு அல்லது கவர்ந்திழுப்பதற்கு எதையும் செய்வான். கடவுளை சேவிக்கும் விஷயத்தில், அவர் எதிர்பார்ப்பவை, கட்டளையிடுபவை, நம் கடமை என குறிப்பிடுபவை என்றெல்லாம் பைபிள் குறிப்பிடுவது என்னவோ உண்மைதான். (பிரசங்கி 12:13; லூக்கா 1:6) ஆனால் நாம் கடவுளை சேவிப்பது, அவரை நேசிப்பதாலேயே.​—⁠யாத்திராகமம் 35:21; உபாகமம் 11:⁠1.

கடவுளுடைய சேவையில் பவுல் தன்னையே எவ்வளவு செலவுபண்ணினாலும் அவருக்கு ‘அன்பில்லாவிட்டால்’ அதனால் ஒன்றுமே இல்லை என்பதை அறிந்திருந்தார். (1 கொரிந்தியர் 13:1-3) பைபிள் எழுத்தாளர்கள் கிறிஸ்தவர்களை தேவனுடைய அடிமைகள் என்று குறிப்பிடும்போது, வற்புறுத்தலுடன்கூடிய, கொத்தடிமை போன்ற வாழ்வைப் பற்றி அவர்கள் குறிப்பிடவில்லை. (ரோமர் 12:11; கொலோசெயர் 3:24) கடவுள் மீதும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மீதும் இருக்கும் ஆழமான, இருதயப்பூர்வமான அன்பின் அடிப்படையில் மனமுவந்து கீழ்ப்படிந்திருப்பதையே அது குறிக்கிறது.​—⁠மத்தேயு 22:37; 2 கொரிந்தியர் 5:14; 1 யோவான் 4:10, 11.

கடவுளுக்கு நாம் செய்யும் சேவை மக்கள் மீது நமக்கிருக்கும் ஆழமான அன்பை படம்பிடித்துக் காட்டவேண்டும். “உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல” இருந்தோம் என்று பவுல் தெசலோனிக்கேயிலிருந்த சபைக்கு எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 2:7) இன்று பெரும்பாலான தேசங்களிலுள்ள தாய்மார்களுக்குத் தங்களுடைய பிள்ளைகளை கவனித்துக்கொள்ளுவது சட்டப்பூர்வமான கடமையாக உள்ளது. ஆனால் நிச்சயமாகவே, பெரும்பாலான தாய்மார்கள் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இதைச் செய்வதில்லை அல்லவா? அவர்கள் இயல்பாகவே தங்கள் பிள்ளைகள்மீது பாசத்தைக் கொட்டி வளர்க்கிறார்கள். ஏன், பால் கொடுக்கும் ஒரு தாய் தன் பிள்ளைகளுக்காக பெரும் தியாகங்களைச் செய்கிறாள். அதே போலவே பவுலும் தான் யாருக்கு ஊழியஞ்செய்தாரோ அவர்களிடம் “வாஞ்சையாய்” இருந்தபடியால் அவர்களுக்காக தன் உயிரையே ‘கொடுக்க மனதாயிருந்தார்.’ (“மிகவும் மகிழ்ந்தார்,” NW) (1 தெசலோனிக்கேயர் 2:8) பவுலின் முன்மாதிரியைப் பின்பற்ற அன்பு நம்மை தூண்டும்.​—⁠மத்தேயு 22:⁠39.

வேண்டாவெறுப்புடன் செய்தால்?

நம்மீது நாமே கொள்ளும் அன்பு, கடவுள்மீதும் மக்கள்மீதும் நமக்கிருக்கும் அன்பை மிஞ்சி விடக்கூடாது. அப்படியிருந்தால் நாம் அரை மனதோடு, விருப்பமில்லாமல் சேவை செய்யும் ஆபத்தில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். நம்முடைய வாழ்க்கையை முழுமையாக நம் இஷ்டப்படி வாழ முடியவில்லையே என்று நினைத்து, நிலைகுலைந்து, ஓரளவு மனக்கசப்பைக்கூட நாம் வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கலாம். கடவுள் மீதிருந்த அன்பை இழந்து, ஆனால் கடமைக்காக ஏதோ கொஞ்சம் சேவையை கடவுளுக்குச் செய்த சில இஸ்ரவேலருக்கு இதுதான் சம்பவித்தது. விளைவு என்ன? கடவுளைச் சேவிப்பது அவர்களுக்கு ‘வருத்தமாயிருந்தது.’​—⁠மல்கியா 1:⁠13.

கடவுளுக்குச் செலுத்தும் பலிகள் எப்போதும் எந்தக் குறையுமின்றி “பழுதற்ற” ஒன்றாக, ‘மிகச் சிறந்ததாக’ இருக்க வேண்டும். (லேவியராகமம் 22:17-20; யாத்திராகமம் 23:19, NW) தங்கள் மிருகங்களில் மிகச் சிறந்தவற்றை யெகோவாவுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, மல்கியாவின் நாளில் இருந்த மக்கள் தங்களுக்கே பிடிக்காதவற்றை அவருக்கு கொடுக்க ஆரம்பித்தார்கள். யெகோவா எப்படி பிரதிபலித்தார்? அவர் ஆசாரியர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக் கொண்டுவந்தாலும், அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ . . . பீறுண்டதையும், கால் ஊனமானதையும், நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள். அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ?”​—⁠மல்கியா 1:8, 13.

இது நம் யாருக்காவது எப்படி சம்பவிக்கலாம்? நாம் மனமுவந்து சேவை செய்யாவிட்டால் நம் பலிகளும் ‘வருத்தமான’தாகிவிடலாம். (யாத்திராகமம் 35:5, 21, 22; லேவியராகமம் 1:3; சங்கீதம் 54:6; எபிரெயர் 13:15, 16) உதாரணமாக, நம்முடைய மிச்சமீதி நேரத்தை யெகோவா பெற்றுக்கொள்வாரா?

குடும்ப அங்கத்தினரோ அல்லது லேவியனோ வற்புறுத்தியதன் ஒரே காரணமாக, ஒரு இஸ்ரவேலன் வேண்டாவெறுப்பாக மிகச் சிறந்த மிருகத்தை பலிசெலுத்துவது கடவுளுக்கு பிரியமாயிருக்குமா? (ஏசாயா 29:13; மத்தேயு 15:7, 8) யெகோவா இப்படிப்பட்ட பலிகளை நிராகரித்துவிட்டார், இறுதியில் அதை செலுத்தியவர்களையும் நிராகரித்துவிட்டார்.​—⁠ஓசியா 4:6; மத்தேயு 21:⁠43.

கடவுளுடைய சித்தத்தை மகிழ்ச்சியோடு செய்யுங்கள்

கடவுள் ஏற்றுக்கொள்ளும் சேவையை செய்வதற்கு நாம் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். “எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடு”கிறேன் என்று அவர் சொன்னார். (யோவான் 5:30) கடவுளை விருப்பத்துடன் சேவிப்பதில் இயேசு பேரானந்தத்தைக் கண்டார். இயேசு தாவீதின் பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றினார்: “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்.”​—⁠சங்கீதம் 40:⁠8.

யெகோவாவின் சித்தத்தை செய்வதில் இயேசு பேரானந்தம் கொண்டபோதிலும் இது எப்போதும் அவருக்கு எளிதாக இருக்கவில்லை. அவர் கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, கொல்லப்படுவதற்கு முன்பு நடந்த சம்பவத்தை எண்ணிப்பாருங்கள். கெத்செமனே தோட்டத்தில் இருந்தபோது, இயேசு ‘ஆழ்ந்த துக்கத்தில்’ இருந்தார், ‘மிகவும் வியாகுலப்பட்டார்.’ உணர்ச்சிப்பூர்வமாக அவர் மிகவும் அழுத்தப்பட்டதால் அவர் ஊக்கமாக ஜெபிக்கையில் “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.”​—⁠மத்தேயு 26:38, NW; லூக்கா 22:⁠44.

இயேசு ஏன் இப்படி வியாகுலப்பட்டார்? அவர் தன்னலம் கருதி செயல்பட்டதாலோ அல்லது கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு விருப்பமில்லாததாலோ இவ்வாறு வியாகுலப்படவில்லை. ஏனெனில் அவர் மரிப்பதற்கும் தயாராக இருந்தார். “ஆண்டவரே இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை” என்று பேதுரு சொன்னபோதுகூட அவனை வன்மையாக கடிந்துகொண்டாரே. (மத்தேயு 16:21-23) இழிவான ஒரு குற்றவாளியாக அவர் மரிக்கப்போவது எவ்வாறு யெகோவாவையும் அவருடைய பரிசுத்த பெயரையும் பாதிக்குமோ என்பதைக் குறித்துத்தான் அவர் கவலைப்பட்டார். தம்முடைய நேசக்குமாரன் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்படுவதைக் காண்கையில் தம் தகப்பன் எப்படி துடித்துப்போவார் என்பதை இயேசு அறிந்திருந்தார்.

யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றும் விஷயத்தில் ஒரு நெருக்கடியான கால கட்டத்தை அவர் நெருங்கிக் கொண்டிருந்தார் என்பதும் இயேசுவுக்குத் தெரியும். அவர் கடவுளுடைய கட்டளைகளுக்கு உண்மையுடன் கீழ்ப்படிந்தால், ஆதாமும் அவ்வாறே கீழ்ப்படிந்திருக்க முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகிவிடும். மனிதர்கள் சோதிக்கப்படுகையில் கடவுளை உண்மையுடன் மனமுவந்து சேவிக்கமாட்டார்கள் என்ற சாத்தானின் கூற்று முற்றிலும் பொய்யானது என்பதை இயேசுவின் உண்மைத்தன்மை அம்பலப்படுத்திவிடும். இயேசுவின் மூலமாக, யெகோவா கடைசியாக சாத்தானை நசுக்கி அவனுடைய கலகத்தின் விளைவுகளை ஒழித்துக்கட்டுவார்.​—⁠ஆதியாகமம் 3:⁠15.

இயேசு தம் தோள்கள்மீது சுமக்க வேண்டிய எத்தனை பெரும் பொறுப்பு! அவருடைய தந்தையின் பெயர், சர்வலோகத்தின் அமைதி, மனிதகுலத்தின் இரட்சிப்பு​—⁠அனைத்துமே இயேசுவின் உண்மைத்தன்மையைச் சார்ந்திருந்தது. இதை உணர்ந்த இயேசு இவ்வாறு ஜெபித்தார்: “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” (மத்தேயு 26:39) மிகவும் கடுமையாக இருந்த அழுத்தத்தின் மத்தியிலும் இயேசு தம்முடைய பிதாவின் சித்தத்துக்குத் தம்மைக் கீழ்ப்படுத்துவதிலிருந்து பின்வாங்கவில்லை.

‘ஆவி உற்சாகமுள்ளது, மாம்சமோ பலவீனமுள்ளது’

யெகோவாவை சேவிக்கையில் இயேசு உணர்ச்சிப்பூர்வமாக கடுமையான அழுத்தத்தை அனுபவித்தார். அதைப் போலவே, கடவுளுடைய ஊழியர்களாக நம்மீதும் சாத்தான் அழுத்தங்களைக் கொண்டுவருவான் என்று நாம் எதிர்பார்க்கலாம். (யோவான் 15:20; 1 பேதுரு 5:8) அது மட்டுமல்ல, நாம் அபூரணராக இருக்கிறோம். ஆகவே நாம் கடவுளை மனமுவந்து சேவித்தால்கூட அவ்வாறு செய்வது நமக்கு எளிதாக இருக்காது. தாம் செய்யும்படியாக சொன்ன எல்லாவற்றையும் செய்வதற்காக அப்போஸ்தலர் எப்படி போராடினார்கள் என்பதை இயேசு பார்த்தார். அதனால்தான் அவர் இவ்வாறு சொன்னார்: “ஆவி உற்சாகமுள்ளதுதான்; மாம்சமோ பலவீனமுள்ளது.” (மத்தேயு 26:41) பரிபூரணமான அவருடைய மனித சரீரத்தில் இயல்பாய் எந்த பலவீனமும் இல்லை. ஆனால் அவருடைய சீஷர்களின் சரீரத்திலிருந்த பலவீனத்தை, அபூரணமான ஆதாமிலிருந்து அவர்கள் சுதந்தரித்திருந்த அபூரணத்தை அவர் மனதில் வைத்திருந்தார். சுதந்தரிக்கப்பட்ட அபூரணம், அதன் விளைவாக மனிதருக்கிருக்கும் வரம்புகள் ஆகியவற்றின் காரணமாக யெகோவாவின் சேவையில் அவர்கள் செய்ய விரும்பும் எல்லாவற்றிலும் அவர்களுக்கு ஒரு போராட்டமிருக்கும் என்பதை இயேசு அறிந்திருந்தார்.

ஆகவே, அபூரணம் கடவுளை முழுமையாக சேவிப்பதற்கு தடை செய்ததால் கடும் வேதனைப்பட்ட அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் உணரலாம். “நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை” என்று பவுல் எழுதினார். (ரோமர் 7:18) நாமும்கூட செய்ய விரும்பும் எல்லா நல்ல காரியங்களையும் முழுமையாக செய்ய முடியாமல் போவதைக் காண்கிறோம். (ரோமர் 7:19) நம்முடைய பங்கில் இதை செய்வதற்கு விருப்பம் இல்லாதிருப்பது இதற்கு காரணமில்லை. மாறாக, எவ்வளவுதான் மிகச் சிறப்பாக நாம் முயற்சி எடுத்தாலும் மாம்சத்தின் பலவீனம் தடையாக உள்ளது.

நாம் மனதளவில் சோர்ந்துவிட வேண்டாம். நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய இருதயப்பூர்வமான விருப்பம் நமக்கிருந்தால் கடவுள் நிச்சயமாக நம்முடைய சேவையை ஏற்றுக்கொள்வார். (2 கொரிந்தியர் 8:12) கடவுளுடைய சித்தத்துக்கு முழுமையாக கீழ்ப்படிந்திருந்த கிறிஸ்துவின் மனப்பான்மையை பின்பற்ற ‘நம்மாலான சிறந்ததைச்’ செய்வோமாக. (2 தீமோத்தேயு 2:15; பிலிப்பியர் 2:5-7; 1 பேதுரு 4:1, 2) இப்படிப்பட்ட விருப்பமுள்ள மனநிலை நமக்கிருந்தால் யெகோவா அதற்கு தக்க பலனை அளித்து நம்மை தாங்குவார். நம்முடைய பலவீனங்களை ஈடுசெய்வதற்கு ‘இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை’ அவர் நமக்கு வழங்குவார். (2 கொரிந்தியர் 4:7-10, NW) யெகோவாவின் உதவியோடு நாமும் பவுலைப் போலவே அவருடைய அருமையான சேவையில் ‘மிகவும் சந்தோஷமாய் செலவுபண்ணவும் முழுவதுமாக செலவுபண்ணப்படவும்’ நம்மை அளிப்போம்.

[பக்கம் 21-ன் படம்]

பவுல் தன்னால் இயன்ற அளவு கடவுளை மனமுவந்து சேவித்தார்

[பக்கம் 23-ன் படம்]

மிகக் கடினமான அழுத்தத்தின் மத்தியிலும் இயேசு தம்முடைய தந்தையின் சித்தத்தைச் செய்தார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்