உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w00 1/15 பக். 9-14
  • “தொடர்ந்து விழித்திருங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “தொடர்ந்து விழித்திருங்கள்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எச்சரிப்பின் மாதிரி
  • கடவுளுடைய தீர்க்கதரிசிகளை அசட்டை செய்தல்
  • விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்துதல்
  • நம்பவைக்கும் ஆறு அத்தாட்சிகள்
  • நமக்கு முன்னால் இருப்பது என்ன?
  • ஆவலோடு காத்திருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • யெகோவா தாமதிக்க மாட்டார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • பைபிள் புத்தக எண் 35—ஆபகூக்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • துன்மார்க்கனுக்கு இன்னும் எவ்வளவு காலம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
w00 1/15 பக். 9-14

“தொடர்ந்து விழித்திருங்கள்”

“உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் [“தொடர்ந்து,” NW] விழித்திருங்கள்.”​—⁠மத்தேயு 24:42.

யெகோவாவை உண்மையுடன் நீண்ட காலமாக சேவித்துவரும் ஊழியர்களில் பெரும்பாலானோர், இளமை ததும்பும் வாலிப பிராயத்தில் சத்தியத்தை கற்றவர்கள். விலையுயர்ந்த முத்து ஒன்றை வாங்குவதற்காக தனக்குண்டான எல்லாவற்றையும் விற்றுவிட்ட வியாபாரியைப் போல இந்த ஆர்வமுள்ள பைபிள் மாணாக்கர்கள் தங்களுடையவற்றை துறந்து யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தனர். (மத்தேயு 13:45, 46; மாற்கு 8:34) பூமிக்கான கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேறுவதைக் காண, எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் காத்திருக்கும் இவர்கள் எவ்வாறு உணருகிறார்கள்? இவர்களிடத்தில் எள்ளளவும் மனவருத்தமில்லை. கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த வாழ்க்கையில் 60 வருடங்களை செலவழித்த சகோதரர் ஏ. ஹெச். மாக்மில்லனுடைய கருத்தை இவர்களும் ஆமோதிக்கிறார்கள். சகோதரர் மாக்மில்லன் பின்வருமாறு சொன்னார்: “என்னுடைய விசுவாசத்தை காத்துக்கொள்வதற்கு எப்போதையும்விட இப்பொழுது நான் இன்னுமதிக உறுதியோடு தீர்மானித்திருக்கிறேன். இது என்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்கிறது. எதிர்காலத்தை பயமில்லாமல் சந்திப்பதற்கு இது இன்னும் உதவி செய்கிறது.”

2 உங்களைப் பற்றியதென்ன? உங்கள் வயது எதுவாயினும், இயேசுவின் வார்த்தைகளை கவனியுங்கள்: ‘உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் [“தொடர்ந்து,” NW] விழித்திருங்கள்.’ (மத்தேயு 24:42) இது மிகவும் எளிய வாக்கியம்தான்; ஆனால் இதில் ஆழமான சத்தியம் உள்ளது. கர்த்தர் எந்த நாளில் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின்மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு வருவார் என்று நமக்குத் தெரியாது. அதை நாம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், நாம் பின்னால் வருத்தப்படாதபடி இப்பொழுதே அவருடைய சித்தத்திற்கு இசைய வாழ வேண்டியது அவசியம். இதன் சம்பந்தமாக, நாம் தொடர்ந்து விழிப்புடனிருக்க உதவும் என்ன முன்மாதிரிகளை பைபிளில் காணலாம்? விழிப்புடனிருக்க வேண்டும் என்பதை இயேசு எவ்விதமாக உதாரணத்தின் மூலம் விளக்கினார்? மேலும் தெய்வ பக்தியற்ற இந்த உலகிற்கு முடிவு வரப்போகும் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை என்ன அத்தாட்சிகள் நிரூபிக்கின்றன?

எச்சரிப்பின் மாதிரி

3 பல்வேறு அம்சங்களில் பார்க்கப்போனால், நோவாவின் நாளைய ஜனங்களைப் போலவே இன்றும் மக்கள் இருக்கின்றனர். அந்த சமயம் பூமியே வன்முறையில் தத்தளித்தது. மனிதனின் இருதய நினைவுகளெல்லாம் “நித்தமும் பொல்லாத[தாக]” இருந்தது. (ஆதியாகமம் 6:5) பலரும் அன்றாட வாழ்க்கை விவகாரங்களுக்கே தங்கள் நேரம் முழுவதையும் செலவழித்தனர். என்றாலும், பெரும் ஜலப்பிரளயத்தைக் கொண்டுவரும்முன் ஜனங்கள் மனந்திரும்புவதற்கான சந்தர்ப்பத்தை யெகோவா அளித்தார். பிரசங்க வேலையையும் யெகோவா அவருக்குக் கொடுத்தார். நோவா அதற்குக் கீழ்ப்படிந்து 40 அல்லது 50 அல்லது ஒருவேளை அதற்கு மேற்பட்ட வருடங்கள்கூட ‘நீதியை பிரசங்கித்தார்.’ (2 பேதுரு 2:5) இருந்தாலும், ஜனங்கள் நோவாவின் எச்சரிப்பு செய்தியை அசட்டை செய்தனர். அவர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவில்லை. ஆகவே, முடிவில் நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே யெகோவாவின் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிப்பிழைத்தனர்.​—⁠மத்தேயு 24:37-39.

4 நோவாவுடைய ஊழியம் வெற்றியடைந்ததா? கொஞ்ச பேர்தானே அவர் பேச்சைக் கேட்டு தப்பினார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். மக்கள் சாதகமாக பிரதிபலித்தார்களோ இல்லையோ நோவாவுடைய பிரசங்கத்திற்கு பலன் கிடைத்தது. ஏன்? ஏனெனில், ஜனங்கள் யெகோவாவை சேவிப்பதற்கு தெரிந்து கொள்வார்களா இல்லையா என்பதற்கு போதுமான வாய்ப்பை அளித்தது. நீங்கள் பிரசங்கிக்கும் பிராந்தியத்தைப் பற்றியதென்ன? கொஞ்ச பேர் மட்டுமே நீங்கள் சொல்வதைக் கேட்டாலும் நீங்கள் மாபெரும் வெற்றியடைந்ததாகவே அர்த்தம். ஏன்? ஏனெனில் பிரசங்கிப்பதன்மூலம் கடவுளுடைய எச்சரிப்பின் செய்தியை அறிவிக்கிறீர்கள். இவ்வாறு, இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்த வேலையை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்.​—⁠மத்தேயு 24:14; 28:19, 20.

கடவுளுடைய தீர்க்கதரிசிகளை அசட்டை செய்தல்

5 ஜலப்பிரளயம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பிறகு, யூதா ராஜ்யத்திலும் படுமோசமான சூழ்நிலைமைகள் தலைதூக்கின. உருவ வழிபாடு, அநீதி, அடக்குமுறை, ஏன் கொலைகளும் அன்றாடம் நடக்கும் சர்வ சாதாரணமான நிகழ்ச்சிகளாயின. இருப்பினும், மக்கள் தங்களுடைய கெட்ட நடத்தைகளிலிருந்து மனந்திரும்ப மறுப்பார்களேயானால் கல்தேயர்களால் அதாவது பாபிலோனியர்களால் அழிக்கப்படுவர் என்பதை எச்சரிப்பதற்காக ஆபகூக் என்ற தீர்க்கதரிசியை யெகோவா நியமித்தார். (ஆபகூக் 1:5-7) ஆனால், ஆபகூக்கின் இந்த எச்சரிப்புக்கு மக்கள் கொஞ்சங்கூட அசையவில்லை. ஒருவேளை அவர்கள் இவ்வாறு விவாதித்திருக்கலாம்: ‘ஏன், தீர்க்கதரிசியாகிய ஏசாயாவும்தான் நூறு வருஷங்களுக்கு முன்னால் இதே எச்சரிப்பின் செய்தியை அறிவித்தார். இதுவரை ஒன்றும் நடக்கவில்லையே!’ (ஏசாயா 39:6, 7) கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை யூதாவிலுள்ள பெரும்பாலான பிரபுக்களும் ஆசாரியர்களும் அசட்டை செய்தது மட்டுமல்ல; அவர்கள் கடவுளுடைய தீர்க்கதரிசிகளை கடுமையாக பகைக்கவும் செய்தார்கள். ஒரு சமயம், தீர்க்கதரிசியாகிய எரேமியாவை கொலை செய்வதற்கும் அவர்கள் முயற்சித்தனர். அகீக்காம் குறுக்கிட்டதால் எரேமியா உயிர் தப்பினார். தெய்வீக ஏவுதலினால் அறிவிக்கப்பட்ட மற்றொரு செய்தியினால் கடுங்கோபம் கொண்ட அரசன், உரியாவை படுகொலை செய்தான்.​—⁠எரேமியா 26:21-24.

6 எரேமியாவைப் போன்றே ஆபகூக்கும் தைரியமாக பிரசங்கித்தார். மக்களோ, தெய்வீக ஏவுதலால் யூதாவின் 70 வருட பாழ்க்கடிப்பைப் பற்றிய எரேமியாவின் செய்திக்கு சாதகமாக பிரதிபலிக்காதது போலவே ஆபகூக்கின் செய்திக்கும் பிரதிபலிக்கவில்லை. (எரேமியா 25:8-11) அவர் புலம்பியதிலிருந்து அவருடைய வேதனையை நாம் அறிந்துகொள்ள முடிகிறது: “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!” (ஆபகூக் 1:2) விசுவாசத்தை பலப்படுத்தும் வார்த்தைகளால் யெகோவா பதிலளித்தார்: “குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் [“தொடர்ந்து,” NW] காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (ஆபகூக் 2:3) அடக்குதலையும் அநீதியையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கு ‘குறித்த காலத்தை’ யெகோவா நிர்ணயித்திருந்தார். இத்தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம், சற்று தாமதிப்பதுபோல தோன்றினாலும் ஆபகூக் உற்சாகத்தை இழக்க வேண்டியதில்லை; தன்னுடைய நடவடிக்கைகளில் சோர்ந்து போய் பின்வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒவ்வொரு நாளும் காலத்தின் அவசரத்தன்மையை உணர்ந்தவராக ஆபகூக் ‘தொடர்ந்து காத்திருக்க’ வேண்டியதாக இருந்தது. ஏனெனில் யெகோவாவின் நாள் காலம் தாழ்த்தாது!

7 யெகோவா ஆபகூக்கிடம் பேசி சுமார் 20 வருடங்களுக்கு பிறகு எருசலேம் அழிக்கப்பட்டது. பிற்பாடு எருசலேம் திரும்ப எடுத்துக் கட்டப்பட்டது. ஆபகூக்கின் மனதை வாட்டிவதைத்த தவறான பல நடவடிக்கைகள் சரிசெய்யப்பட்டன. இருந்தபோதிலும், பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் அந்நகரம் மீண்டும் நாசகரமான அழிவை சந்திக்கவிருந்தது. காரணம்? அதனுடைய உண்மையற்ற குடிமக்களே. இரக்கத்தின் ஊற்றுமூலரான யெகோவா, நல்லவர்களை காப்பாற்றுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த முறை எச்சரிக்கும் செய்தியை அறிவிப்பதற்கு அவர் உயர்ந்த அந்தஸ்திலிருக்கும் இயேசு கிறிஸ்துவையே பயன்படுத்தினார். பொ.ச. 33-⁠ல் தம்முடைய சீஷர்களிடம் இயேசு சொன்னார்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போக . . . கடவர்கள்.”​—⁠லூக்கா 21:20, 21.

8 இதற்கு பின்பாக பல வருடங்கள் உருண்டோடின. எருசலேமில் வாழ்ந்த உண்மை கிறிஸ்தவர்கள், இயேசுவின் இத்தீர்க்கதரிசனம் எப்பொழுது நிறைவேறப்போகிறதோ என ஆவலோடு காத்துக்கொண்டிருந்திருப்பார்கள். அதேசமயம் சந்தேகமில்லாமல் தியாகங்களைச் செய்த சில கிறிஸ்தவர்களை சிந்தித்துப்பாருங்கள். கடவுளுடைய விருப்பத்திற்கு இசைய வாழவேண்டும் என திடமாக இவர்கள் தீர்மானித்திருந்தார்கள். ஆகவே கொள்ளை லாபமுண்டாக்கும் எத்தனையோ வியாபார வாய்ப்புகளை அவர்கள் மறுத்திருப்பார்கள். காலம் கடந்து போகையில் அவர்களில் சிலர் சோர்வடைந்தார்களா? தங்கள் பொன்னான காலத்தை வீணடிப்பதாக அவர்கள் முடிவு செய்தார்களா? இயேசுவின் தீர்க்கதரிசனங்கள் தங்களுக்கு அல்ல, பின்வரும் சந்ததிக்குத்தான் பொருந்தும் என்பதாக அசட்டை மனப்பான்மையுடன் இருந்துவிட்டார்களா? பொ.ச. 66-⁠ல் எருசலேமை ரோமர்களுடைய படை சூழ்ந்துகொண்டபோது இயேசுவின் தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பித்தது. விழிப்புள்ளவர்களாகவும் விசுவாசத்தில் உறுதியாகவும் இருந்தவர்கள், அடையாளத்தை புரிந்துகொண்டு நகரத்தை விட்டு ஓடிப்போனதன் காரணமாக எருசலேமின் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள்.

விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்துதல்

9 விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அழுத்திக்காட்டுவதற்கு திருமணம் முடிந்து திரும்பும் தங்களுடைய எஜமானை வரவேற்பதற்காக காத்திருக்கும் அடிமைகளுக்கு இயேசு தமது சீஷர்களை ஒப்பிட்டார். ஒரு குறிப்பிட்ட இரவிலே எஜமான் திரும்பி வருவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்; ஆனால் எந்த நேரத்தில் என்று தெரியுமா? அவர் முதல் ஜாமத்தில் வருவாரா? இரண்டாவது ஜாமத்திலா? மூன்றாவது ஜாமத்திலா? அவர்களுக்கு சுத்தமாக தெரியாது. இயேசு இவ்விதமாகச் சொன்னார்: ‘அவர் [எஜமான்] இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே [விழித்திருக்கிறவர்களாக] இருக்கக் கண்டால், அவ்வூழியக்காரர் [“அடிமைகள்,” NW] பாக்கியவான்கள்.’ (லூக்கா 12:35-38) இந்த அடிமைகளின் எதிர்பார்ப்பை கற்பனை செய்து பாருங்கள்! ஏதாவது சிறு துரும்பின் சத்தமோ அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதாவது நிழல் தோன்றி மறைந்தாலோ போதும், ‘இது நம்முடைய எஜமானாக இருக்குமோ?’ என்பதாக இவர்களுடைய எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தின் எல்லைக்கே சென்றுவிடும்.

10 எஜமான் இரண்டாவது ஜாமத்திலே வருவாரேயானால் அப்பொழுது என்ன? இந்த காலப்பகுதி, இரவு சுமார் 9 மணியிலிருந்து நள்ளிரவு வரையான நேரத்தைக் குறித்தது. அதிகாலையிலிருந்தே தங்களுடைய வேலையை ஆரம்பித்தவர்கள் உட்பட எஜமானுடைய எல்லா அடிமைகளும் அவரை வரவேற்பதற்கு தயாராக இருப்பார்களா? அல்லது சிலர் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்களா? ஒருவேளை எஜமான் மிகவும் தாமதமாக, மூன்றாவது ஜாமத்தில் வருகிறார் என வைத்துக்கொள்வோம். நள்ளிரவிலிருந்து அதிகாலை சுமார் 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தை இது அர்த்தப்படுத்தும். இப்பொழுதும் எல்லா ஊழியர்களும் தயாராக இருப்பார்களா? அல்லது காலம் கடந்துகொண்டே இருப்பதுபோல தோன்றுவதால் சிலர் உற்சாகத்தை இழந்து சோர்ந்து விடுவார்களா? a எஜமான் வரும்போது விழித்திருக்கும் ஊழியர்கள் மட்டுமே சந்தோஷமுள்ளவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நீதிமொழிகள் 13:12 உண்மையிலேயே பொருந்துகிறது: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்.”

11 தாமதிப்பதுபோல் தோன்றும் அந்தக் காலப்பகுதியில் இயேசுவின் அடிமைகள் தொடர்ந்து விழித்திருப்பதற்கு எது உதவியாக இருக்கும்? அவரை கைது செய்வதற்குச் சற்றுமுன்பு கெத்செமனே தோட்டத்தில் இருக்கையில், இயேசு மூன்று அப்போஸ்தலர்களிடம் சொன்னார்: ‘நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து [“தொடர்ந்து,” NW] ஜெபம்பண்ணுங்கள்.’ (மத்தேயு 26:41) இயேசு இதை சொன்னபோது பேதுருவும் உடனிருந்தார். ஆகவே பேதுருவும் தன்னுடைய உடன் கிறிஸ்தவர்களுக்கு இதே அறிவுரையைக் கொடுத்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.” (1 பேதுரு 4:7) ஊக்கமாக ஜெபிப்பதை, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் அன்றாட பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து விழிப்புடனிருப்பதற்கு உதவிக்காக யெகோவாவிடம் விடாது கேட்க வேண்டியது அவசியம்.​—⁠ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 5:17.

12 “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று” என்ற பேதுருவின் வார்த்தைகளை கவனியுங்கள். ஆனால் எந்தளவுக்கு சமீபமாக இருக்கிறது? சரியான நாளையும் நேரத்தையும் மிகவும் நுட்பமாக கண்டுபிடிக்க முயற்சிப்பது வீணானது. (மத்தேயு 24:36) இருப்பினும் முடிவு எப்பொழுது வரும் என்பதைப்பற்றி மனம்போன போக்கிலே ஊகிப்பதையும் பைபிள் ஆதரிக்கவில்லை; மாறாக அந்த நாளுக்காக எதிர்பார்த்திருப்பதையே பைபிள் உற்சாகப்படுத்துகிறது. இவ்வாறு, கடவுளுடைய நாளை ஊகிப்பதற்கும் அதற்காக எதிர்பார்த்திருப்பதற்கும் இடையே வித்தியாசம் (2 தீமோத்தேயு 4:3, 4-ஐ ஒப்பிடுக; தீத்து 3:9) முடிவை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருப்பதற்கான ஒரே வழி என்ன? முடிவு அருகில் இருக்கிறது என்பதற்கான ஆதாரத்திற்கு மிகுந்த கவனம் செலுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம். ஆகவே தெய்வ பக்தியற்ற இந்த உலகின் கடைசி நாட்களில் நாம் வாழ்கிறோம் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் ஆறு காரணங்களை நாம் மறுபார்வை செய்யலாம்.

நம்பவைக்கும் ஆறு அத்தாட்சிகள்

13 “கடைசி நாட்க”ளைப்பற்றி பவுலின் வார்த்தைகள் எவ்விதமாக நிறைவேறி வருகின்றன என்பதை நாம் முதலில் பார்ப்போமாக. பவுல் எழுதினார்: “கடைசி நாட்களில் [“கையாளுவதற்கு கடினமான,” NW] கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” (2 தீமோத்தேயு 3:1-5, 13) இந்த தீர்க்கதரிசனம் நம்முடைய நாளில் நிறைவேற்றமடைவதை காண்கிறோம் அல்லவா? உண்மை சம்பவங்களுக்கு கண்களை மூடிக்கொள்பவர்கள்தான் இதை மறுப்பார்கள்! b

14 இரண்டாவதாக, வெளிப்படுத்துதல் 12:9-⁠ன் நிறைவேற்றமாக சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதன் விளைவுகளை நாம் காணலாம். அங்கே நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” இது பூமியில் உள்ளவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தில் விளைவடைந்துள்ளது. 1914 முதற்கொண்டு மனித குலம் எண்ணற்ற வேதனைகளை அனுபவித்தது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்லுகிறது, பிசாசு பூமிக்குத் தள்ளப்பட்டதால், ‘தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்திருக்கிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:12) இந்த சமயத்தில் சாத்தான் கிறிஸ்துவைப் பின்பற்றும் அபிஷேகம் பண்ணப்பட்டவரோடு யுத்தம் செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:17) அவனுடைய தாக்குதலின் விளைவுகளை நம்முடைய நாளிலும் நாம் பார்த்திருக்கிறோம். c என்றாலும், சாத்தான் “ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு” சீக்கிரத்தில் பாதாளத்திலே அடைக்கப்படுவான்.​—⁠வெளிப்படுத்துதல் 20:1-3.

15 மூன்றாவதாக, வெளிப்படுத்துதல் 17:9-11-⁠ல் குறிப்பிடப்பட்ட எட்டாவதும் கடைசியுமான “ராஜா”வைப்பற்றிய தீர்க்கதரிசனத்தின் காலப்பகுதியில் நாம் வாழ்கிறோம். அப்போஸ்தலனாகிய யோவான் ஏழு உலக வல்லரசுகளை அடையாளப்படுத்தும் ஏழு ராஜாக்களை குறிப்பிடுகிறார்; அவை எகிப்து, அசிரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம், இரட்டை உலக வல்லரசான ஆங்கிலோ-அமெரிக்கா. ‘ஏழாவது ராஜாவிலிருந்து எட்டாவது ராஜா தோன்றுவதையும்’ யோவான் பார்க்கிறார். தரிசனத்தில் கடைசியாக யோவான் பார்க்கும் எட்டாவது ராஜா இப்போது ஐக்கிய நாட்டு சங்கத்தையே சுட்டிக்காட்டுகிறது. தீர்க்கதரிசனத்தின்படி இந்த எட்டாவது ராஜா ‘நாசமடையப் போகிறான்’ என்பதாக யோவான் கூறுகிறார். இவனுக்கு பின்னால் எந்த ராஜாவும் எழும்பப் போவதாக குறிப்பிடப்படவில்லை. d

16 நான்காவதாக நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட அந்த சொரூபத்தின் பாதத்தால் அடையாளப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நாம் வாழ்ந்து வருகிறோம். மனித தோற்றத்தையுடைய மிகப் பெரிய சொரூபத்தைப் பற்றிய சொப்பனத்தின் அர்த்தத்தை தீர்க்கதரிசியாகிய தானியேல் விளக்கினார். (தானியேல் 2:36-43) அதனுடைய தலையிலிருந்து (பாபிலோனிய சாம்ராஜ்யம்) பாதங்கள் மற்றும் கால்விரல்கள் (இன்று ஆட்சி செலுத்திவரும் அரசாங்கங்கள்) வரைக்கும் உள்ள நான்கு உலோகங்கள் பல்வேறு உலக வல்லரசுகளை வரிசையாக பிரதிநிதித்துவம் செய்கின்றன. அந்த சொரூபத்தினால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட எல்லா உலக வல்லரசுகளும் ஏற்கெனவே தோன்றிவிட்டன. அந்த சொரூபத்தின் பாதத்தால் அடையாளப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறு வல்லரசு பின்தொடரும் என்பதாக எந்த குறிப்பும் இல்லை. e

17 ஐந்தாவதாக, இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன்பு நடந்தேறும் இயேசு சொன்ன பூகோள பிரசங்க வேலை நிறைவேறிவருவதை நாம் காண்கிறோம். இயேசு குறிப்பிட்டார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) ஈடிணையற்ற விதமாக, முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு, இத்தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருகிறது. ஆனால் இப்பொழுதும்கூட சில பிராந்தியங்களில் நற்செய்தி சென்றெட்டவில்லை என்பது உண்மைதான். யெகோவாவின் உரிய காலத்தில் இந்த மகத்தான வேலைக்கான பெரிய கதவு திறக்கப்படலாம். (1 கொரிந்தியர் 16:9) இருப்பினும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்களாக நற்செய்தியை கேட்கும் வரைக்கும், கடவுள் மிகுந்த உபத்திரவத்தை ஒத்திப்போடுவார் என்பதாக பைபிள் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மாறாக யெகோவா திருப்திப்படும் அளவுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும்; அப்பொழுது முடிவு வரும்.​—⁠மத்தேயு 10:23-ஐ ஒப்பிடுக.

18 ஆறாவதாக, கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையுள்ள சீஷர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தாலும், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கையில் சிலராவது பூமியில் நிச்சயம் இருப்பார்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுது மிக வயதானவர்களாக இருக்கிறார்கள். வருடங்கள் செல்லச் செல்ல அவர்களுடைய எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. இருப்பினும், மிகுந்த உபத்திரவத்தைப்பற்றி பேசுகையில் இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: “அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.” (மத்தேயு 24:21, 22) ஆகவே மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது கிறிஸ்துவால் ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களில்’ சிலராவது பூமியில் நிச்சயம் இருப்பார்கள். f

நமக்கு முன்னால் இருப்பது என்ன?

19 எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது? மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் இனிமேல்தான் அணிவகுக்கப்போகின்றன. ‘இரவிலே திருடன் வருகிற விதமாய்க் கர்த்தருடைய நாள் வரும்’ என்று பவுல் எச்சரித்தார். உலக ஞானிகளைப் போன்று காட்சியளிக்கும் மனிதரைப்பற்றி பேசுகையில் அவர் கூறுகிறார்: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது . . . அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்.” ஆகவே, அவர் தன்னுடைய வாசகர்களை இவ்வாறு துரிதப்படுத்துகிறார்: “ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.” (1 தெசலோனிக்கேயர் 5:2, 3, 6) சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் மனித அமைப்புகளை எதிர்பார்த்திருப்பவர்கள் நிஜத்தை நம்பாதவர்கள் என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருக்கிறார்கள்!

20 இந்த காரிய ஒழுங்குமுறையின் முடிவு திடீரென்று வரும். ஆகவே, யெகோவாவின் நாளுக்காக எதிர்பார்த்திருங்கள். ஏனெனில் “அது தாமதிப்பதில்லை” என்று ஆபகூக்கிடம் கடவுளே சொன்னார்! உண்மையில், முன்னொருபோதும் இருந்திராத அளவுக்கு இப்போது நாம் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது மிக மிக முக்கியம்.

[அடிக்குறிப்புகள்]

a தான் எந்த சமயத்தில் வருவாரென்று தன்னுடைய ஊழியர்களிடம் எஜமான் எந்த நேரத்தையும் குறிப்பிடவில்லை. ஆகவே, எந்த சமயத்தில் வேண்டுமானாலும் வருவதும் போவதும் அவருடைய இஷ்டம். இதைப்பற்றிய துல்லிய விவரங்களை தன்னுடைய ஊழியர்களுக்கு அவர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய வருகை சற்று தாமதிப்பதுபோல தோன்றினாலும், அதற்கான காரணங்களை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் எஜமானுக்கு இல்லை.

b கூடுதலான கலந்தாலோசிப்புக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இன்டியாவால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தின் 11-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

c கூடுதலான தகவல்களுக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இன்டியாவால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் பக்கங்கள் 180-6-ஐ காண்க.

d வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் பக்கங்கள் 251-4-ஐ காண்க.

e உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிகொடுங்கள்! என்ற புத்தகத்தின் 4-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

f செம்மறியாடுகள், வெள்ளாடுகள் பற்றிய உதாரணத்தில் அங்கே மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில் மனுஷகுமாரன் மகிமை பொருந்தினவராக வந்து, நியாயம் தீர்ப்பதற்காக உட்காருகிறார். கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களுக்கு அவர்கள் அளித்த ஆதரவின் அடிப்படையிலேயே அவர் நியாயத்தீர்ப்பு செய்கிறார். நியாயத்தீர்ப்பின் சமயத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவின் எல்லா சகோதரர்களும் பரலோகத்திற்கு சென்றுவிட்டால், நியாயம் தீர்ப்பதற்கான இந்த அடிப்படை காரணத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.​—⁠மத்தேயு 25:31-46.

நினைவிருக்கிறதா?

• நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க உதவும் வேதப்பூர்வமான சில உதாரணங்கள் யாவை?

• விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இயேசு எவ்வாறு விளக்கினார்?

• நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை நிரூபிக்கும் ஆறு அத்தாட்சிகள் யாவை?

[கேள்விகள்]

1. யெகோவாவை உண்மையுடன் நீண்ட காலம் சேவித்துவரும் ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் தங்களது வருடக்கணக்கான சேவையைக் குறித்து எவ்வாறு உணருகிறார்கள்? உதாரணம் கொடுங்கள்.

2. (அ) காலத்திற்கேற்ற என்ன ஆலோசனையை இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்தார்? (ஆ) என்ன கேள்விகளை இந்தக் கட்டுரையில் நாம் கலந்தாலோசிப்போம்?

3. எந்த விதத்தில் இன்று பலர் நோவாவின் நாளைய ஜனங்களைப்போல் இருக்கிறார்கள்?

4. என்ன கருத்தில் நோவாவின் ஊழியம் வெற்றியடைந்ததாக சொல்லப்படலாம்? உங்களுடைய பிரசங்க வேலையிலும் இதேபோன்று எவ்வாறு சொல்லப்படலாம்?

5. (அ) ஆபகூக்கின் நாளில் யூதாவில் என்ன நிலைமைகள் தலைதூக்கின? அவருடைய தீர்க்கதரிசன செய்திக்கு ஜனங்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? (ஆ) யெகோவாவின் தீர்க்கதரிசிகளை யூதேயாவிலுள்ள ஜனங்கள் எவ்வாறு பகைத்தார்கள்?

6. யெகோவா ஆபகூக்கை எவ்வாறு பலப்படுத்தினார்?

7. பொ.ச. முதல் நூற்றாண்டில் எருசலேம் மீண்டும் அழிவை சந்திக்கவிருந்தது ஏன்?

8. (அ) இயேசுவின் மரணத்திற்குப்பின் காலம் கடந்து போகையில் சில கிறிஸ்தவர்களுக்கு என்ன சம்பவித்திருக்கலாம்? (ஆ) எருசலேமைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறின?

9, 10. (அ) திருமணம் முடிந்து திரும்பும் தங்களுடைய எஜமானுக்காக காத்திருக்கும் அடிமைகளைப் பற்றிய இயேசுவின் உவமையை சுருக்கமாக கூறுக. (ஆ) தங்கள் எஜமானுக்காக காத்துக்கொண்டிருப்பது அந்த அடிமைகளுக்கு ஏன் கடினமாக இருந்திருக்கலாம்? (இ) ஊழியக்காரர்கள் பொறுமையாக இருப்பது ஏன் பயனுள்ளதாக இருந்தது?

11. தொடர்ந்து விழிப்புடன் இருப்பதற்கு ஜெபம் எவ்வாறு உதவும்?

12. ஊகிப்பதற்கும் எதிர்பார்த்திருப்பதற்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது?

13. 2 தீமோத்தேயு 3-⁠ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பவுலின் தீர்க்கதரிசனம் நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதை எவ்வாறு நம்பவைக்கிறது?

14. பிசாசைப்பற்றி வெளிப்படுத்துதல் 12:9-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் இன்று எவ்வாறு நிறைவேறி வருகின்றன? என்றாலும், சீக்கிரத்தில் சாத்தானுக்கு என்ன நேரிடப்போகிறது?

15. நாம் முடிவின் காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கு வெளிப்படுத்துதல் 17:9-11 வசனங்கள் எவ்விதமான அத்தாட்சி அளிக்கிறது?

16. நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட சொரூபத்தின் நிறைவேற்றம் நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?

17. நம்முடைய ராஜ்ய பிரசங்க வேலை நாம் முடிவின் காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கு மேலுமான என்ன அத்தாட்சியைத் தருகிறது?

18. மகா உபத்திரவம் ஆரம்பிக்கையில் அபிஷேகம் பண்ணப்பட்ட சிலர் எங்கு இருப்பர், எதை வைத்து இப்படி சொல்ல முடியும்?

19, 20. முன்னொருபோதும் இருந்திராத அளவுக்கு இப்போது நாம் தொடர்ந்து விழிப்புடன் தெளிந்த நிலையில் இருப்பது ஏன் மிக மிக முக்கியம்?

[பக்கம் 9-ன் படங்கள்]

ஏ. ஹெச். மாக்மில்லன் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்தார்

[பக்கம் 10-ன் படம்]

இயேசு தம்முடைய சீஷர்களை தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் அடிமைகளுக்கு ஒப்பிட்டார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்