எதிர்காலத்தை நீங்களே அறிந்து கொள்ளலாம்!
எதிர்காலத்தைப் பற்றி அநேகர் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள். ஞானமாக திட்டமிட விரும்புகிறார்கள், பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய விரும்புகிறார்கள், பயமின்றி வாழ விரும்புகிறார்கள். ஆனால் நாளை நடக்கப்போவது இதுதான் என உறுதியாக தெரிந்துகொள்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?
எதிர்காலத்தைக் கண்டுபிடிக்க மனிதர்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டார்கள். ஃபியூச்சராலஜிஸ்ட் எனப்படும் சமூக விஞ்ஞானிகள் தற்போதைய போக்கை அலசிப்பார்த்து, அதன் அடிப்படையில் முன்கணிக்கிறார்கள். இதேபோல பொருளியலாளர்களும் தங்களுடைய துறையை அலசி ஆராய்ந்து முன்கணிக்கிறார்கள். ஜோதிடர்களும் குறிசொல்பவர்களும் ஜாதகத்தையும் மாயக்கண்ணாடிகளையும் (‘கிரிஸ்டல் பால்’ ) மாயமந்திர வித்தைகளையும் நம்பியிருக்கிறார்கள், அவர்களுக்குப் பின்னால் ஒரு பெருங்கும்பலே இருக்கிறது. உதாரணமாக, பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்டரடோமஸ் இன்றும் பிரபலமாகவே விளங்குகிறார்—செத்து நூற்றாண்டுகள் கடந்துவிட்டபோதிலும்.
தீர்க்கதரிசிகள் என சொல்லிக்கொள்கிற இவர்களை நம்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்? ஏனெனில் அவர்கள் யெகோவா தேவனையும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளையும் புறக்கணித்து விட்டார்கள். ஆகவே இப்படிப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள நாம் இவர்களிடம் செல்ல முடியாது: ‘பைபிளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் நடக்கும் என நான் எப்படி உறுதியாக நம்பலாம்? அவை மனிதனுக்கான கடவுளுடைய நோக்கத்தோடு எப்படி சம்பந்தப்பட்டிருக்கின்றன? நானும் என்னுடைய குடும்பத்தாரும் எப்படி இந்தத் தீர்க்கதரிசனங்களிலிருந்து பயனடைய முடியும்?’ நமக்குத் தேவையான பதில்களை பைபிள் மட்டுமே தருகிறது.
இதைத் தவிர மற்ற அநேக விஷயங்களிலும் பைபிள் தீர்க்கதரிசனம் மிக உயர்ந்தது. சோதிடம் அதுவாகவே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது, ஆனால் பைபிள் அதை நம் கையில் விட்டுவிடுகிறது. ஆகவே, எவருமே விதியின் சிறையில் விலங்கிடப்பட்டவர்களாக இல்லை. (உபாகமம் 30:19) நாஸ்டரடோமஸ் போன்றவர்களின் நூல்களில் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல் இல்லை. வெறுமனே உணர்ச்சிகளை தூண்டியெழுப்பும் மர்ம நாவல் போலத்தான் இருக்கின்றன. ஆனால் பைபிள் தீர்க்கதரிசனம் வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கிறது, வழிகாட்டுதலும் தருகிறது. கடவுள் தாம் நோக்கம் கொண்டதை ஏன் நடப்பிக்கப்போகிறார் என்பதை விளக்குகிறது. (2 நாளாகமம் 36:15) மேலும், யெகோவாவின் தீர்க்கதரிசனங்கள் ஒருபோதும் தவறாது, ஏனெனில் அவர் “பொய்யுரையாத தேவன்.” (தீத்து 1:3) ஆகவே, கடவுளுடைய வார்த்தையால் வழிநடத்தப்படுபவர்கள் தங்களுடைய அருமையான நேரத்தையும் பணத்தையும் பயனற்ற விஷயங்களுக்கு தாரை வார்க்காமல் அறிவொளியூட்டப்பட்ட, நோக்கமுள்ள, மகிழ்ச்சியுள்ள வாழ்க்கை வாழ்கிறார்கள்.—சங்கீதம் 25:12, 13.
இவையும் வேறு அநேக குறிப்புகளும் உலகம் முழுவதும் நடைபெற்ற 1999/2000 “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” என்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டில் சிந்திக்கப்பட்டன. அங்கே பேச்சுகள், பேட்டிகள், நடிப்புகள், பைபிள் நாடகம் ஆகியவை இடம்பெற்றன. இவையனைத்தும் கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தையைப் படித்து அதன்படி நடக்கிறவர்கள் அனுபவிக்கும் அற்புதமான ஆவிக்குரிய ஆஸ்திக்கு பார்வையாளருடைய கவனத்தை கவர்ந்தன. மாநாட்டின் சிறப்புக் குறிப்புகள் சிலவற்றை பின்வரும் கட்டுரை உங்களுக்கு அள்ளி வழங்குகிறது.