“கிறிஸ்தவர்களை தட்டியெழுப்புவது எப்படி?”
இந்தக் கேள்வியை கத்தோலிக்க பத்திரிகை ஃபேமி க்ராட்யன் (கிறிஸ்தவ குடும்பம்) சமீபத்தில் எதிரொலித்தது. இது அநேகருக்கு ஆச்சரியமாக தொனிக்காது. ஏனென்றால் பிரிட்டனின் கார்டினல் ஹ்யூம்கூட சர்ச் அங்கத்தினர்களை “தூக்கத்தில் மன்னர்கள்” என்று அழைத்தாரே. தூக்கத்திலிருந்து தட்டியெழுப்பவே சர்ச் சார்ந்த தொகுதிகள் மக்களுக்கு பிரசங்கிக்கிறார்கள். “புதிய முறைகளுடன் நேரடியான சுவிசேஷ வேலை” என இதை அழைக்கிறார் ஒரு இத்தாலிய பாதிரி. இப்படிப்பட்ட முன்நடவடிக்கைகளை சமீபத்தில் போப் உற்சாகப்படுத்தியபோதிலும், தங்கள் விசுவாசத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என எல்லாரும் நினைப்பதில்லை.
மிலனிலுள்ள பீஜீ பேரீனீ என்ற மதகுரு சமீபத்தில் ஆப்பிரிக்காவுக்கு விஜயம் செய்தார். அங்கு ஒரு கன்னியாஸ்திரீ அவரிடம் இவ்வாறு சொன்னார்: “நான் 40 வருஷங்களா இங்கு சேவை செய்கிறேன். ஆப்பிரிக்க பண்பாடு அழிஞ்சுறக்கூடாது என்பதற்காக இயேசுவைப் பற்றி யாரிடமும் மூச்சுவிடல.” பீஜீ பேரீனீ இவ்வாறு சொல்லி முடிக்கிறார்: “நாங்க இயேசுவைப் பற்றி பேசுறதில்ல, இயேசுவைப் பின்பற்றுவதில்ல. சுவிசேஷத்தை பிரசங்கிப்பதுமில்ல!” ஆனால் வேறு பலருக்கோ, பிரசங்கிப்பது வாழ்க்கையில் முக்கிய பாகமாகவும் ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடன் இருப்பதற்கு ஒரு வழியாகவும் இருக்கிறது. இந்த மதகுரு இவ்வாறு விளக்குகிறார்: “இயேசுவைப் பற்றி பேசுற அல்லது கையில் பைபிள வெச்சிருக்கிற ரெண்டு பேர மார்க்கெட் பக்கத்தில எதேச்சையா நீங்க சந்திச்சா, உங்க மனசுக்குள்ளேயே சொல்லுவீங்க: இவங்க, யெகோவாவின் சாட்சிகள்தான்!”
கோடிக்கணக்கான ஜனங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு கடவுளுடைய வார்த்தையை கலந்துபேச விரும்புகிறார்கள். நீங்கள் வசிக்கும் இடத்திலும்கூட பைபிளைப் பற்றி பேசுவதற்கு சாட்சிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே வைராக்கியமான கிறிஸ்தவர்களாகிய இவர்கள் தங்கள் விசுவாசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் கூடிவரும் இடங்கள் (ராஜ்ய மன்றங்கள் என அழைக்கப்படுகின்றன) அன்புக்கும் நட்புறவுக்கும் ஏற்ற இடங்களாக திகழ்கின்றன. யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களுக்கு நீங்களும் செல்லலாமே. ஆன்மீக தூக்கத்தை விட்டு எழுந்து புத்துணர்வுடன் வலம்வரும் ரகசியத்தை அறிந்து கொள்ளலாம் அல்லவா?