வெளிப்படுத்துதல் புத்தக வாசகர்களே சந்தோஷமாயிருங்கள்
“இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்.”—வெளிப்படுத்துதல் 1:3.
1. வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதியபோது அப்போஸ்தலனாகிய யோவான் என்ன சூழ்நிலைமையில் இருந்தார், என்ன நோக்கத்துடன் இந்த தரிசனங்கள் எழுதப்பட்டன?
“யோவான் என்னும் நான் கடவுளைப் பற்றி பேசியதாலும் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சி பகர்ந்ததாலும் பத்மு என்னும் தீவுக்கு வர நேர்ந்தது.” (வெளிப்படுத்துதல் 1:9, NW) இப்படிப்பட்ட சூழ்நிலைமையில்தான், அப்பாக்கலிப்ஸ் அல்லது வெளிப்படுத்துதல் என்ற புத்தகத்தை அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். ரோம பேரரசர் டொமீஷியன் ஆட்சியின்போது (பொ.ச 81—96) இவர் பத்மு தீவிற்கு நாடுகடத்தப்பட்டார் என்று கருதப்படுகிறது; அந்த அரசர், பேரரசர் வழிபாட்டை கட்டாயப்படுத்தியதோடு கிறிஸ்தவர்களை துன்புறுத்தவும் செய்தார். யோவான் பத்முவில் இருந்தபோது, தொடர்ச்சியான சில தரிசனங்களை கண்டார், அவற்றை பதிவும் செய்தார். ஆரம்ப கால கிறிஸ்தவர்களை பயமுறுத்துவதற்காக யோவான் இவற்றை அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் எதிர்ப்பட்டுக்கொண்டிருந்த மற்றும் எதிர்படவிருந்த சோதனைகளை மனதில்கொண்டு அவர்களை பலப்படுத்தவும், ஆறுதல்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் இவற்றை எழுதினார்.—அப்போஸ்தலர் 28:22; வெளிப்படுத்துதல் 1:4; 2:3, 9, 10, 13.
2. யோவானுக்கும் அவருடைய உடன் கிறிஸ்தவர்களுக்கும் இருந்த சூழ்நிலைமைகள் ஏன் இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு அக்கறைக்குரியது?
2 இந்த பைபிள் புத்தகம் எழுதப்பட்டபோது இருந்த சூழ்நிலைமைகள் இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு அதிக அக்கறைக்குரியது. எப்படியெனில், யெகோவாவிற்கும் அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்கும் சாட்சி பகர்ந்ததால் யோவான் துன்புறுத்தலை அனுபவித்தார். அவரையும் உடன் கிறிஸ்தவர்களையும் எதிர்ப்பு எனும் புயல் எப்போதும் தாக்கிக் கொண்டிருந்தது; ஏனென்றால், அவர்கள் நல்ல குடிமக்களாக இருக்க கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தபோதிலும், பேரரசர் வழிபாட்டை அவர்கள் செய்யாததே காரணம். (லூக்கா 4:8) மதரீதியில் எது சரி எது தவறு என்பதை விளக்க தங்களுக்கு உரிமை இருப்பதாக நினைத்துக்கொள்ளும் நாடுகளில் இன்று வாழும் உண்மை கிறிஸ்தவர்களும் இதுபோன்ற சூழ்நிலைகளையே எதிர்ப்படுகின்றனர். ஆகவே, இந்த வெளிப்படுத்துதல் புத்தகத்தின் துவக்க வார்த்தைகள் எவ்வளவு ஆறுதல் அளிப்பதாய் இருக்கின்றன: “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.” (வெளிப்படுத்துதல் 1:3) ஆம், கவனமான கீழ்ப்படிதலுள்ள வெளிப்படுத்துதல் புத்தக வாசகர்கள் உண்மையான சந்தோஷத்தையும் அநேக ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வர்.
3. யோவானுக்கு கிடைத்த வெளிப்படுத்துதலின் ஊற்றுமூலர் யார்?
3 வெளிப்படுத்துதல் புத்தகத்தின் ஊற்றுமூலர் யார்? இதை மனிதருக்கு கொடுக்க என்ன வழி பயன்படுத்தப்பட்டுள்ளது? அதன் முதல் வசனம் இவ்வாறு துவங்குகிறது: “இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வானதூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார்.” (வெளிப்படுத்துதல் 1:1 பொ.மொ.) எளிமையாக சொல்லவேண்டுமானால், வெளிப்படுத்துதலுக்கான உண்மையான ஊற்றுமூலம் யெகோவா தேவன், அவர் அதை இயேசுவுக்கு கொடுத்தார், இயேசு ஒரு தேவதூதன் மூலமாக அதை யோவானுக்கு தெரியப்படுத்தினார். இன்னும் சற்று அலசிப் பார்த்தால், சபைகளுக்கு தகவல்களை அனுப்பவும் யோவானுக்கு தரிசனத்தை அளிக்கவும் இயேசுவும்கூட பரிசுத்த ஆவியை பயன்படுத்தியிருக்கிறார் என்பது புலப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 2:7, 11, 17, 29; 3:6, 13, 22; 4:2; 17:3; 21:10; ஒப்பிடுக: அப்போஸ்தலர் 2:33.
4. பூமியிலுள்ள தம்முடைய மக்களை இன்று வழிநடத்துவதற்காக யெகோவா எதைப் பயன்படுத்துகிறார்?
4 யெகோவா பூமியிலுள்ள தம்முடைய ஊழியக்காரருக்கு போதிப்பதற்காக ‘சபைக்குத் தலையான’ அவருடைய குமாரனை இன்னமும் பயன்படுத்துகிறார். (எபேசியர் 5:23; ஏசாயா 54:13; யோவான் 6:45) தம்முடைய மக்களை போதிப்பதற்கு யெகோவாவும் அவருடைய ஆவியை பயன்படுத்துகிறார். (யோவான் 15:26; 1 கொரிந்தியர் 2:10) இயேசு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு ஆவிக்குரிய உணவை அளிக்க “தம்முடைய ஊழியக்காரனாகிய” யோவானை பயன்படுத்தினார். அதேபோல, இன்றுள்ள தம்முடைய வேலைக்காரர் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளுக்கு “ஏற்றவேளையிலே” ஆவிக்குரிய போஜனம் கொடுக்க, பூமியிலுள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட தம்முடைய ‘சகோதரராலான’ ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ பயன்படுத்துகிறார். (மத்தேயு 24:45-47, NW; 25:40) ஆவிக்குரிய உணவு, அதை அளிக்க அவர் பயன்படுத்தும் வழிமுறை ஆகியவற்றின் வாயிலாக நன்மையான ஈவுகளின் ஊற்றுமூலரை அடையாளம் கண்டுகொள்வோர் சந்தோஷத்தில் களிகூருவர்.—யாக்கோபு 1:17.
கிறிஸ்து வழிநடத்தும் சபைகள்
5. (அ) கிறிஸ்தவ சபைகள் எதற்கு ஒப்பிடப்படுகின்றன, அவற்றின் கண்காணிகள் எதற்கு ஒப்பிடப்படுகின்றனர்? (ஆ) மனித அபூரணத்தின் மத்தியிலும், நாம் சந்தோஷமாயிருக்க எது உதவி செய்யும்?
5 வெளிப்படுத்துதலின் ஆரம்ப அதிகாரங்களில், கிறிஸ்தவ சபைகள் குத்துவிளக்குகளுக்கு ஒப்பிடப்படுகின்றன. அவற்றிலுள்ள கண்காணிகள், தேவதூதர்களுக்கும் (தூதுவர்கள்) நட்சத்திரங்களுக்கும் ஒப்பிடப்படுகின்றனர். (வெளிப்படுத்துதல் 1:20) a இயேசு கிறிஸ்து தம்மைப் பற்றி பேசும்போது யோவானை இவ்வாறு எழுதும்படியாக சொன்னார்: “ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது.” (வெளிப்படுத்துதல் 2:1) பொ.ச. முதல் நூற்றாண்டில் இருந்த அந்த சபைகளிடமும் அதன் மூப்பர்களிடமும், மெச்சத்தக்க அம்சங்களும் இருந்தன, அதே சமயத்தில் குறைபாடுகளும் இருந்தன என்பதை ஆசியாவின் ஏழு சபைகளுக்கு அனுப்பப்பட்ட ஏழு கடிதங்கள் காட்டுகின்றன. அது இன்றும் உண்மையே. ஆகையால், நம்முடைய தலைவரான கிறிஸ்து இந்த சபைகளின் நடுவில் இருக்கிறார் என்பதை நாம் எப்போதும் நம்முடைய மனக்கண்களில் வைத்திருந்தோமேயானால் நம் மனம் சந்தோஷத்தால் ஜொலிக்கும். என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அடையாள அர்த்தத்தில் அவர் கண்காணிகளை ‘தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டிருக்கிறார்,’ அதாவது அவர்கள் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ், வழிநடத்துதலின் கீழ் இருக்கின்றனர். மேலும் அவர்கள் சபைகளை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதற்கு கணக்குக்கொடுக்க வேண்டிய நிலையிலும் இருக்கின்றனர்.—அப்போஸ்தலர் 20:28; எபிரெயர் 13:17.
6. கிறிஸ்துவுக்கு கண்காணிகள் மட்டுமே கணக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பில் இல்லை என்பதை எது காட்டுகிறது?
6 இருப்பினும், கண்காணிகள் மட்டும்தான் தங்களுடைய செயல்களுக்காக கிறிஸ்துவுக்கு பதில் சொல்ல வேண்டும் அல்லது கணக்கு கொடுக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். கிறிஸ்துவின் செய்திகளுள் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.” (வெளிப்படுத்துதல் 2:23) இந்த செய்தி ஓர் எச்சரிப்பை விடுப்பதோடு உற்சாகத்தையும் அளிக்கிறது. எப்படியென்றால், நம்முடைய மனங்களில் ஆழமாய் வேரூன்றியிருக்கும் எண்ணங்களை இயேசு கிறிஸ்து அறிந்திருக்கிறார் என்ற எச்சரிப்பின் செய்தியை விடுக்கிறது; அதே சமயத்தில், நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் எல்லாவற்றையும் கிறிஸ்து பார்த்துக்கொண்டே இருக்கிறார், குறை ஏதும் வைக்காமல் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்தால், அவர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார் என்ற உற்சாகச் செய்தியையும் அளிக்கிறது.—மாற்கு 14:6-9; லூக்கா 21:3, 4.
7. பிலதெல்பியாவிலிருந்த கிறிஸ்தவர்கள் எவ்வாறு ‘இயேசுவின் சகிப்புக்குரிய வார்த்தையை காத்துக்கொண்டனர்’?
7 லிடியா நகரத்திலிருந்த பிலதெல்பியா சபைக்கு கிறிஸ்து அனுப்பிய கடிதத்தில் எந்த கடிந்துகொள்ளுதலும் காணப்படுவதில்லை, ஆனால் நம் அனைவரின் ஆர்வத்தையும் அப்படியே அள்ளிக்கொள்ளும் ஒரு வாக்குறுதியை அது அளிக்கிறது. “என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.” (வெளிப்படுத்துதல் 3:10) “என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால்” என்பதன் கிரேக்க வாக்கியம், “சகிப்புக்குரிய என் வார்த்தையைக் கைக்கொண்டபடியினால்” என்றும் பொருள்படும். பிலதெல்பியாவிலிருந்த கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தது மட்டுமல்லாமல் அவர்கள் உத்தமத்தில் நிலைத்திருக்க அவருடைய அறிவுரைகளை பின்பற்றியுமிருக்கின்றனர் என்று வசனம் 8 காட்டுகிறது.—மத்தேயு 10:22; லூக்கா 21:19.
8. (அ)பிலதெல்பியாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இயேசு என்ன வாக்குறுதி அளித்தார்? (ஆ) இன்று ‘சோதனைகாலம்’ யாரை பாதிக்கிறது?
8 ‘சோதனைகாலத்தினின்று’ காப்பேன் என்று இயேசு அவர்களிடம் கூடுதலாக சொன்னார். அப்போது வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களுக்கு உண்மையில் அது எதை அர்த்தப்படுத்தியது என்று நமக்கு தெரியாது. பொ.ச. 96-ல் டொமீஷியன் இறந்தபிறகு துன்புறுத்தல் கொஞ்ச காலம் சற்று தளர்ந்தபோதிலும், டிராஜன் (பொ.ச. 98—117) ஆட்சியின் கீழ் துன்புறுத்தல் மலைபோல நிமிர்ந்து நின்றது, இது கூடுதலான சோதனைகளையே கொண்டுவந்தது. ஆனால், நாம் வாழ்ந்துவரும் ‘முடிவுகாலமாகிய’ இந்த சமயத்தில், “கர்த்தருடைய நாளில்” ‘சோதனைகாலம்’ உச்சநிலையை அடைந்துள்ளது. (வெளிப்படுத்துதல் 1:10; தானியேல் 12:4) முதல் உலக யுத்தத்தின்போதும் அதை தொடர்ந்தும் ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட சோதனைகாலத்தை அனுபவித்தனர். அந்த ‘சோதனைகாலம்’ இன்னும் இருந்துகொண்டிருக்கிறது. இது “பூச்சக்கரத்தின்மேலெங்கும்” உள்ள, மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையை கொண்டுள்ள லட்சக்கணக்கான திரள் கூட்டத்தார் உட்பட அனைவரையும் பாதிக்கிறது. (வெளிப்படுத்துதல் 3:10; 7:9, 14) ‘சகிப்புக்குரிய இயேசுவின் வார்த்தையைக் கைக்கொண்டால்’ நாம் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறப்போம்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”—மத்தேயு 24:13.
யெகோவாவின் அரசதிகாரத்திற்கு மனமுவந்த கீழ்ப்படிதல்
9, 10 அ) யெகோவாவின் சிங்காசனத்தைப் பற்றிய தரிசனம் என்ன செய்யும்படி நம்மைத் தூண்ட வேண்டும்? (ஆ) வெளிப்படுத்தலை வாசிப்பது நமக்கு எவ்வாறு சந்தோஷமளிக்கும்?
9 வெளிப்படுத்துதல் 4 மற்றும் 5 அதிகாரங்களில் விவரிக்கப்படும் யெகோவாவின் சிங்காசனம் மற்றும் அவருடைய பரலோக நியாயாசனம் பற்றிய தரிசனம் நம்மை அச்சங்கலந்த பிரமிப்பில் ஆழ்த்த வேண்டும். பரலோகத்திலுள்ள வல்லமைவாய்ந்த சிருஷ்டிகள், யெகோவாவின் நீதியான அரசதிகாரத்திற்கு சந்தோஷமாக பணிந்து அவரை துதித்து பாடும்போது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் உண்மையில் நம்மை பூரிப்பில் ஆழ்த்த வேண்டும். (வெளிப்படுத்துதல் 4:8-11) “சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக” என்ற துதியின் ஓசையில் நம்முடைய குரலும் சேர்ந்தொலிக்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 5:13.
10 புரியும்படியாக சொன்னால், எல்லாவற்றிலும் யெகோவாவின் சித்தத்திற்கு மனமுவந்து கீழ்ப்பட்டிருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அப்போஸ்தன் பவுல் இவ்வாறு எழுதினார்: “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.” (கொலோசெயர் 3:17) யெகோவாவின் அரசதிகாரத்தை நம்முடைய உள்ளம் மற்றும் இருதயத்தின் ஆழத்தில் ஏற்றுக்கொண்டு, நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய சித்தத்தின்படி செயல்பட்டால், வெளிப்படுத்துதல் புத்தகத்தின் வாசிப்பு நம்மை சந்தோஷம் என்னும் பூங்காவனத்தில் வாடாமலராய் பூத்துக் குலுங்கச்செய்யும்.
11, 12. (அ) சாத்தானுடைய பூமிக்குரிய அமைப்பு எவ்வாறு அசைக்கப்பட்டு அழிக்கப்படும்? (ஆ) வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தின் பிரகாரம், அந்த சமயத்தில் யார் “நிலைநிற்கக்கூடும்”?
11 தனிப்பட்ட விதமாகவும் உலகளாவிய விதமாகவும் யெகோவாவின் அரசுரிமைக்கு மனமுவந்து கீழ்ப்படிவதுதான் சந்தோஷத்திற்கான அடிப்படை. விரைவில் அடையாள அர்த்தமான ஓர் மகா பூமியதிர்ச்சி சாத்தானுடைய உலக அமைப்புகளை அதன் அஸ்திவாரம் முதற்கொண்டு அசைவித்து ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். சட்டப்படி கடவுளுக்கே உரிய ஆட்சியை பிரதிநித்துவம் செய்யும் கிறிஸ்துவின் பரலோக ராஜ்ய அரசாங்கத்திற்கு தங்களை கீழ்ப்படுத்த மறுக்கும் மனிதர்களுக்கு அடைக்கலமாக எந்த ஒரு இடமும் இருக்காது. அந்த தீர்க்கதரிசனம் சொல்கிறதாவது: “பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: ‘நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும்’ என்றார்கள்.”—வெளிப்படுத்துதல் 6:12, 15-17.
12 அந்த கேள்வியின் சம்பந்தமாக, அடுத்த அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய யோவான் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்களான திரள் கூட்டத்தாரை பற்றி, “சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்” என்று வர்ணிக்கிறார். (வெளிப்படுத்துதல் 7:9, 14, 15) அவர்கள் கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்பது, அவர்கள் அந்த சிங்காசனத்தை அங்கீகரிப்பதையும் யெகோவாவின் அரசதிகாரத்திற்கு தங்களை முற்றிலுமாக கீழ்ப்படுத்துவதையும் காட்டுகிறது. ஆகவே அவர்களும் அங்கீகரிக்கப்பட்டவர்களாக நிற்கின்றனர்.
13. (அ) பூமியின் பெரும்பாலான குடிமக்கள் எதை வணங்குகின்றனர், மேலும் அவர்கள் நெற்றிகளிலும் கைகளிலும் தரித்திருக்கும் முத்திரைகள் எதை அடையாளப்படுத்துகின்றன? (ஆ) அதனால் பொறுமை ஏன் அவசியம்?
13 மறுபட்சத்தில், இந்த பூமியின் குடிமக்களில் மீதியானோர் மூர்க்க மிருகத்தால் அடையாளப்படுத்திக் காட்டப்படும் சாத்தானிய அரசாங்க அமைப்புகளை வணங்குவதாக 13-ம் அதிகாரம் சித்தரிக்கிறது. அவர்கள் தங்கள் ‘நெற்றிகளில்’ அல்லது தங்கள் “கைகளில்” முத்திரையை பெற்றுக்கொள்கின்றனர். அது அவர்கள் அந்த ஒழுங்குமுறைக்கு தங்களுடைய மனம் மற்றும் சரீர ஆதரவை அளிப்பதை அர்த்தப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 13:1-8, 16, 17) பிறகு 14-ம் அதிகாரம் தொடர்கிறது: “மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடி[ப்பான்], . . . தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.” (வெளிப்படுத்துதல் 14:9, 10, 12) நாளடைவில் எங்கும் கேட்கப்படப்போகும் கேள்வி இதுவே: நீங்கள் எந்தப் பக்கத்தை ஆதரிக்கிறீர்கள்? யெகோவாவையும் அவருடைய அரசதிகாரத்தையுமா அல்லது மூர்க்க மிருகமாக அடையாளப்படுத்தப்படும் தேவபக்தியற்ற அரசியல் அமைப்புகளையா? அந்த மிருகத்தின் முத்திரையை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டு, யெகோவாவின் அரசதிகாரத்திற்கு கீழ்ப்படிதலுடன் உத்தமத்தை காத்துக்கொள்வோரிடம் சந்தோஷம் குடிகொள்ளும்.
14, 15. அர்மகெதோனைப் பற்றிய வெளிப்படுத்துதலின் வர்ணனையில் என்ன செய்தி குறுக்கிடுகிறது, நமக்கு என்ன அர்த்தத்துடன்?
14 “பூலோகமெங்குமுள்ள” எல்லா ஆட்சியாளர்களும் மோதிக்கொள்ளும் ஓர் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். அரசதிகாரத்தை குறித்த விவாதத்தின் பேரில் யெகோவாவுக்கு எதிராகப் போரிட செல்கின்றனர். அதன் உச்சக்கட்டம், “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்த”மாகிய அர்மகெதோனாக இருக்கும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) யெகோவாவுடனான இந்த போருக்காக ராஜாக்களை கூட்டிச்சேர்ப்பதைப் பற்றிய இதன் வர்ணிப்பின் நடுவில் காணப்படும் வேறொரு விஷயம் நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இயேசுதாமே இந்த தரிசனத்தில் தலையிட்டு இதை சொல்கிறார்: “இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.” (வெளிப்படுத்துதல் 16:15) இது ஒருவேளை ஆலயத்து காவலர்களான லேவியர்களை மறைமுகமாக குறிப்பிடலாம். அவர்கள் காவல் காக்க வேண்டிய வேலை நேரத்தில் தூங்கிவிட்டு, அது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் ஆடைகள் களையப்பட்டு, அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்படுவர்.
15 செய்தி தெளிவாக இதுவே: அர்மகெதோனிலிருந்து நாம் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால், நாம் ஆவிக்குரிய ரீதியில் கவனமாக இருக்க வேண்டும், யெகோவா தேவனின் உண்மையான சாட்சி என்பதை வெளிப்படுத்தும் அடையாள அர்த்தமுள்ள வஸ்திரத்தை காத்துக்கொள்ள வேண்டும். ஆவிக்குரிய காரியங்களில் சோம்பலாக இல்லாமல், அவைகளை விட்டுவிடாமல் தொடர்ந்து காத்துக்கொள்ள வேண்டும். அதோடு, ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தின் “நித்திய சுவிசேஷத்தை” பிரசங்கிப்பதில் வைராக்கியமாக கலந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் சந்தோஷம் நம்முள் கரைபுரண்டோடும்.—வெளிப்படுத்துதல் 14:6.
‘இந்த வசனங்களை கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான்’
16. வெளிப்படுத்துதலின் கடைசி அதிகாரங்கள் பெருமகிழ்ச்சி தருவது ஏன்?
16 கடைசி சில அதிகாரங்களில், ‘சர்வவல்லமையுள்ள தேவனாகிய யெகோவாவுக்கு’ துதி சேர்க்கும் விதத்தில், ஒரு புதிய வானத்தையும் புதிய பூமியையும் குறிப்பிட்டுக்காட்டும் சுத்திகரிக்கப்பட்ட மனித சமுதாயத்தை ஆட்சிசெய்யும் ஒரு நீதியான பரலோக ராஜ்ய அரசாங்கம் பற்றிய மகிமையான நம்பிக்கையின் செய்தி காணப்படுகிறது. இதை வாசிக்கும் வெளிப்படுத்துதல் புத்தக வாசகர்கள் பூரிப்பில் ஆழ்ந்துவிடுவர். (வெளிப்படுத்துதல் 21:22, NW) இந்த அற்புதமான தொடர் தரிசனத்தின் முடிவில், தேவதூதர் ஒருவர் யோவானிடம் சொன்னார்: “இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.”—வெளிப்படுத்துதல் 22:6, 7.
17. (அ) வெளிப்படுத்துதல் 22:6-ல் என்ன உறுதி அளிக்கப்படுகிறது? (ஆ) நாம் எதை தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும்?
17 வெளிப்படுத்துதலின் சந்தோஷமுள்ள வாசகருக்கு இந்த வார்த்தைகளுக்கு ஒப்பான வார்த்தைகளை இந்த ‘புஸ்தகத்தின்’ துவக்கத்தில் பார்த்தது நினைவில் இருக்கலாம். (வெளிப்படுத்துதல் 1:1, 3) பைபிளின் இந்த கடைசி புத்தகத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டுள்ள எல்லா ‘நிகழ்ச்சிகளும்,’ ‘சீக்கிரத்தில் சம்பவிக்கும்’ என்று இந்த வார்த்தைகள் உறுதியளிக்கின்றன. முடிவு காலத்தின் விளிம்பில் இப்போது நாம் வாழ்ந்து வருகிறோம். அதனால், இதன் தொடர்பாக வெளிப்படுத்துதலில் முன்னுரைக்கப்பட்டுள்ளவை நிச்சயம் அடுத்தடுத்து விரைவாக நடந்தேறவேண்டும். சாத்தானின் காரிய ஒழுங்குமுறை நிலைத்திருப்பதுபோல் தோன்றினாலும் நாம் தூங்கிவிடும்படியாக நம்மைத் தாலாட்டிவிடக்கூடாது. ஏழு ஆசிய சபைகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதங்களில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகளை கவனமுள்ள வாசகர் தன் ஞாபகத்தில் கொண்டு, பொருளாசை, விக்கிரகாராதனை, ஒழுக்கக்கேடு, வெதுவெதுப்பு, விசுவாசதுரோக பிரிவினை வாதம் போன்ற கண்ணிகளை தவிர்ப்பார்.
18, 19. (அ) இயேசு இனி ஏன் வரவேண்டும், மற்றும் யோவானால் வெளிப்படுத்தப்பட்ட என்ன நம்பிக்கையில் நாமும் பங்குகொள்கிறோம்? (ஆ) என்ன நோக்கத்திற்காக யெகோவா இனி ‘வரவேண்டும்’?
18 வெளிப்படுத்துதல் புத்தகத்தில், இயேசு அநேகதரம் இவ்வாறு சொல்கிறார்: “நான் சீக்கிரமாய் வருகிறேன்.” (வெளிப்படுத்துதல் 2:16; 3:11; 22:7, 20அ) இப்போது மேசியானிய ராஜ்யத்தால் சித்தரித்துக் காட்டப்படும் யெகோவாவின் அரசதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் எல்லா மனிதவர்க்கத்தினர் மீதும், மகா பாபிலோன் மீதும், சாத்தானின் அரசாங்க அமைப்புகள் மீதும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற அவர் இனி வரவேண்டும். அப்போஸ்தலனாகிய யோவான் சொன்ன வார்த்தைகளில் நம்முடைய குரல்களும் சேர்ந்துகொள்ளட்டும்: “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.”—வெளிப்படுத்துதல் 22:20ஆ.
19 யெகோவா தாமே இவ்வாறு சொல்கிறார்: “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.” (வெளிப்படுத்துதல் 22:12) வாக்குபண்ணப்பட்ட ‘புதிய வானத்தின்’ பாகமாகவோ ‘புதிய பூமியின்’ பாகமாகவோ முடிவில்லாத நித்திய வாழ்க்கை என்னும் மிகச் சிறந்த மகிமையான பரிசை நாம் ஆவலோடு எதிர் நோக்கியிருக்கும்போது, நேர்மை இருதயமுள்ள ஆட்களுக்கு இந்த அழைப்பை கொடுப்பதில் வைராக்கியத்துடன் சேர்ந்துகொள்வோமாக: “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) ஏவப்பட்ட மற்றும் ஊக்கமூட்டும் புத்தகமாகிய வெளிப்படுத்துதலின் சந்தோஷமுள்ள வாசகர்களாக அவர்களும் ஆகட்டும்.
[அடிக்குறிப்புகள்]
a வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் பக்கங்கள் 28-9, 136 (அடிக்குறிப்பு)-ஐ பாருங்கள்.
சிந்தனைக்கு கொண்டுவர சில குறிப்புகள்
◻ வெளிப்படுத்துதலை மனிதருக்கு கொடுக்க யெகோவா என்ன வழியை பயன்படுத்தினார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ ஆசியாவின் ஏழு சபைகளுக்கும் அனுப்பப்பட்ட தகவல்களை வாசிக்க நாம் ஏன் சந்தோஷப்பட வேண்டும்?
◻ ‘சோதனை காலத்தில்’ நாம் எவ்வாறு பாதுகாக்கப்படலாம்?
◻ வெளிப்படுத்துதல் புத்தகத்தை உட்படுத்தும் பைபிளின் வார்த்தைகளை வாழ்க்கையில் கைக்கொண்டால் என்ன சந்தோஷம் நம்முடையதாகும்?
[பக்கம் 15-ன் படம்]
சந்தோஷமான செய்தியின் ஊற்றுமூலரை ஏற்றுக்கொள்வோர் சந்தோஷமுள்ளோர்
[பக்கம் 18-ன் படம்]
விழிப்பாயிருப்பவர் சந்தோஷமுள்ளவர்