உவாட்ச்டவர் கல்வி மையத்தின் அர்ப்பணம்—யெகோவாவுக்கு பண்டிகை
பூர்வ காலத்திலிருந்தே சந்தோஷம் பொங்கும் பண்டிகைகள் மெய் வணக்கத்தின் பாகமாக இருந்திருக்கின்றன. பூர்வ இஸ்ரவேலின் சில பண்டிகைகள் நாட்கணக்கில் கொண்டாடப்பட்டன. ஆயிரக்கணக்கில் யெகோவாவின் வணக்கத்தார் அவற்றில் கலந்துகொண்டனர். சாலொமோன் கட்டிய ஆலயத்தின் பிரதிஷ்டை கோலாகலமாக ஏழு நாட்களுக்கு நீடித்தது; அதனைத் தொடர்ந்து ஒரு வார காலம் கூடாரப் பண்டிகை குதூகலமாக கொண்டாடப்பட்டது. இது, யெகோவா தங்களை எப்படியெல்லாம் அற்புதமாக வழிநடத்தி வந்தார் என்பதை நினைத்துப் பார்க்க இஸ்ரவேலர்களுக்கு வாய்ப்பளித்தது. “யெகோவா . . . செய்த எல்லா நன்மையினிமித்தமும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே” அவர்கள் தம் தம் வீடு திரும்பினர்.—1 இராஜாக்கள் 8:66, தி.மொ.
அமெரிக்காவில், நியூ யார்க், பாட்டர்சனிலுள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில், 1999, மே 17-22-ல் நடைபெற்ற சம்பவங்கள், வருகை தந்த பார்வையாளர்களுக்கு பூர்வ காலத்திய மகிழ்ச்சிமிக்க பண்டிகை நாட்களை நினைவுபடுத்தின. இது விசேஷித்த ஒரு வாரம்; உலகளாவிய பைபிள் கல்வியை ஊக்குவிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட 28 கட்டட வளாகங்களின் பிரதிஷ்டையை மையமாக கொண்ட வாரம். புரூக்ளின், வால்கில், பாட்டர்சன் ஆகிய இடங்களில் இருந்த 5,400 தலைமைக் காரியாலய அங்கத்தினர்கள் அனைவரும் இந்த மறக்க முடியாத வாரத்தில் பாட்டர்சன் வளாக கட்டடங்களை முழுமையாக சுற்றிப் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வந்திருந்த விருந்தினர்களில், கல்வி மையத்தின் கட்டுமானத்தில் தோள்கொடுத்து உதவிய 500-க்கும் அதிகமான முன்னாள் அங்கத்தினர்களும், உவாட்ச் டவர் சொஸைட்டியின் 23 கிளை அலுவலக பிரதிநிதிகளும், அருகிலிருந்த சபைகளிலிருந்து வந்தவர்களும் உட்பட மொத்தமாக கிட்டத்தட்ட 8,100 பேர் இருந்தனர்.
பார்வைக்கு வைத்தவை தரும் படிப்பினை
கல்வி மையம் செயல்படும் விதத்தைப் புரிந்துகொள்ள, பார்வைக்காக வைக்கப்பட்ட விசேஷித்த காட்சிகளும், கல்விபுகட்டும் வீடியோ பட தொகுப்புகளும், காண வந்தவர்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. விருந்தினர் தாங்களாகவே சுற்றிப் பார்க்க வசதியான விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வரவேற்பு அறையின் முக்கியப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆலயத்தின் பெரிய அளவிலான மாதிரி ஒன்று எல்லாருடைய கவனத்தையும் உடனடியாக காந்தம்போல் கவர்ந்தது; அது இயேசுவின் பூமிக்குரிய ஊழிய காலத்தில் எருசலேமிலிருந்த ஆலயத்திற்கு ஒத்திருந்தது. கண்டு ரசிக்க வைக்கப்பட்டிருந்த இன்னும் சில படங்கள், இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து செய்யப்பட்டு வருகிற வேலைகளை அப்படியே படம்பிடித்துக் காட்டின. அவை: உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் ஆரம்ப கால சரித்திரம், வரலாற்று சிறப்புமிக்க மாநாடுகள், சபைக்கூட்டங்கள், ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் லட்சக்கணக்கான வீட்டு பைபிள் படிப்புகளில் நவீன நாளைய முன்னேற்றம், இந்த வேலையை தொடருவதற்காக சட்ட இலாகா செய்த செயல்கள்.—மத்தேயு 28:19, 20.
இதற்கு அருகிலிருந்த அரங்கம் ஒன்று, 1,700 பேர் சௌகரியமாக அமரத்தக்க வசதி படைத்தது; அதில் இந்தப் பிரதிஷ்டைப் பண்டிகையில் கலந்துகொள்ள வந்திருந்தவர்களுக்கு 33 நிமிட வீடியோ காட்சி ஒன்றும் காட்டப்பட்டது. “பலத்தினாலல்ல—என் ஆவியினாலே!” என்று தலைப்பிடப்பட்ட இந்த வீடியோ காட்சி உவாட்ச் டவர் கல்வி மையம் பிறந்த கதையை விளக்கியது. இந்த 15 வருட கால கட்டடத் திட்டத்தை வெற்றிகரமாக கட்டி முடிப்பதற்கு எடுக்கப்பட்ட செயல்பாடுகளில் யெகோவாவின் வழிநடத்துதலையும், அதற்கான முயற்சிகளில் அவருடைய ஆசீர்வாதத்தையும் தெள்ளத் தெளிவாகக் காட்டும் சம்பவங்களைப் பேட்டிகள் வெளிப்படுத்தின. ஆயிரக்கணக்கானோர் இந்தக் கட்டட வேலையில் கலந்துகொண்டனர். 1994-ல் ஒருசமயம் 526 வேலையாட்கள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்; இதில் 350 முழுநேர வாலண்டியர்களும், 113 தற்காலிக வேலையாட்களும், உதவிக்கரம் நீட்டும் விதத்தில் தினம் தினம் வேலைக்கு வந்துபோய்கொண்டிருந்த 63 பேரும் அடங்குவர். இன்னும் அநேகர் காணிக்கைகளை அள்ளிக் கொடுத்து அவ்வேலையை ஆதரித்தனர். எத்தனையோ பேர் ஏகப்பட்ட விதங்களில் உதவிய போதிலும் யெகோவாவின் ஆவி இல்லையேல் இவை அனைத்தும் நடந்திருக்காது என இவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.—சகரியா 4:6.
கடவுளின் போதனையை முன்னேற்றுவிக்கும் நோக்கோடுதான் கல்வி மையத்தில் எல்லா வேலைகளும் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை பார்வையிட வந்தவர்கள் தங்கள் கண்ணாரக் கண்டனர். பள்ளி கட்டடத்தின் முதல் தளத்திலுள்ள கிலியட் பள்ளியின் நுழைவாயிலில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த படங்கள், பெரும் ஆவிக்குரிய ஆஸ்தியையும் அப்பள்ளியின் வரலாற்றையும் விலாவாரியாக வர்ணித்து விளக்கின. நியூ யார்க், சௌத் லான்சிங்கில் ஆரம்பத்தில் அந்தப் பள்ளி 1943-ல் துவங்கப்பட்டதிலிருந்து 7,000-க்கும் அதிகமான மாணாக்கர்களுக்கு கிலியட் பள்ளி பயிற்சி அளித்து மிஷனரி ஊழியத்திற்காக அனுப்பியிருக்கிறது. பள்ளிக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தவை கிளை அலுவலக ஆலோசனைக் குழுவின் அங்கத்தினர்களுக்கான பள்ளியைப் பற்றியும் பயணக் கண்காணிகளுக்கான பள்ளியைப் பற்றியும் விளக்கின; இவற்றிற்கான வகுப்புகள் அங்குதான் நடைபெறுகின்றன. 1995 நவம்பர் மாதத்தில் அது துவங்கப்பட்டதிலிருந்து 106 நாடுகளைச் சேர்ந்த கிளை அலுவலக ஆலோசனைக் குழுவின் 360 அங்கத்தினர்களுக்கு இந்தப் பள்ளி விசேஷித்த பயிற்சி அளித்திருக்கிறது.
பெரும்பாலான பகுதிகளில் பார்வைக்காக படங்கள் மாத்திரமே வைக்கப்படவில்லை என்பதை வருகையாளர்கள் சீக்கிரத்தில் தாங்களே கண்டுணர்ந்தனர். வெவ்வேறு இலாகாக்கள், அலுவலகங்கள், பணி செய்யும் மற்ற இடங்கள் ஆகியவற்றை நேரில் காணவும் முடிந்தது; அவ்விடங்களில் செய்யப்படும் வேலையைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ள அது வாய்ப்பளித்தது. அவர்கள் கண்ணுக்கு விருந்தளித்த அனைத்துக்குமே முத்தாய்ப்பாக அமைந்தது ஆடியோ/வீடியோ சேவை கட்டடம். பைபிள் கல்வியை முன்னேற்றுவிப்பதற்குத்தான் எத்தனை எத்தனை தனிச்சிறப்புமிக்க வசதிகள்! அடுக்கடுக்கான அறிவூட்டும் படக்காட்சிகளின் மூலமும் சிறு சிறு வீடியோ தொகுப்புகள் மூலமும் குரல் பதிவுகள் எப்படி நடைபெறுகின்றன, வீடியோக்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவி செய்யப்பட்டது. மேடை அமைப்புகளையும் ஒப்பனைகளையும் தயாரிப்பதற்கு எந்தளவுக்கு பெரும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது என்பதைப் பற்றி ஓரளவுக்கு அவர்களால் அறிந்துகொள்ள முடிந்தது. எந்தவொரு நுணுக்கமான விஷயத்தையும் விட்டுவிடாமல் மேடை அமைப்பு பொருட்கள் குறைந்த செலவில் எப்படி துல்லியமாக ஒருங்கே அமைக்கப்படுகின்றன என்பதை அவர்கள் பார்த்தனர். தாங்கள் பார்க்கும் காட்சியில் ஆட்கள் ஒன்றிப் போவதற்கு இசை எப்படி உபயோகிக்கப்படுகிறது என்பதையும் அவர்கள் கண்டனர். 1990 முதல் 10 வீடியோக்களை 41 மொழிகளில் சொஸைட்டி வெளியிட்டிருக்கிறது; அதில், அமெரிக்கன் சைகை மொழி “பேசுவோருக்கான” வீடியோக்களோடுகூட பல்வேறுபட்ட பைபிள் தலைப்புகளை விளக்கும் வீடியோக்களும் அடங்கும்.
ஃபோட்டோ லேப், ஆர்ட் இலாகா, கம்ப்யூட்டர் பயிற்சியையும் உதவியையும் அளிக்கும் தகவல் சேவைகள், 11,242 சபைகள், 572 பயணக் கண்காணிகளை மேற்பார்வை செய்யும் ஊழிய இலாகா, ஒவ்வொரு வருடமும் சுமார் 14,000 கேள்விகளுக்கு பதிலளிக்கும் கடிதத்தொடர்பு இலாகா ஆகியவற்றையும் வந்திருந்தோர் காணத் தவறவில்லை. கடிதங்களுக்கு பதிலளிக்க செய்யப்படும் ஆராய்ச்சியைக் கண்டு மலைத்தனர்; மிகவும் மோசமான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக உண்மையிலேயே போராடுவோர் கேட்கும் கேள்விகளுக்கு மெய்யான கரிசனையோடு பதிலளிக்கப்படுவதைக் கண்டனர்.
திரண்டுவந்த பார்வையாளர் படை மொழிபெயர்ப்பு சேவையையும் விட்டுவைக்காமல் கண்டுகளித்தனர். கடந்த ஐந்து வருடங்களில் சொஸைட்டி வெளியிட்டு வந்த பைபிள் பிரசுரங்களில் இன்னும் 120 மொழிகள் சேர்க்கப்பட்டிருந்ததை அறிந்து அவர்கள் வியப்படைந்தனர். ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் சொஸைட்டியின் பிரசுரங்களை உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகளில் சுமார் 80%-க்கும் அதிகமானோர் வாசிக்கின்றனர். அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 100 நாடுகளில் 1,700-க்கும் அதிகமான வாலண்டியர்கள் மொழிபெயர்ப்பு துறையில் வேலை செய்கின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் பேசப்படும் மொழிகளில் வெளியிடப்பட்ட காவற்கோபுர பத்திரிகைகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. 31 மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் விருந்தின் சுவையைக் கூட்டின. இன்று உவாட்ச் டவர் வெளியீடுகள் 332 மொழிகளில் கிடைக்கின்றன என்பதையும் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற புரோஷர் 219 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டிருப்பதையும் அறிந்து ஆனந்தமடைந்தனர்.
உலக முழுவதும் சட்டத்தின் உதவியோடு செய்யப்படும் பல்வகை காரியங்களைப் பற்றியும் சட்ட இலாகாவிற்கு விஜயம் செய்த பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. சாட்சியாய் இருக்கும் ஒரு வக்கீல், இரத்தம் ஏற்றுதல் சம்பந்தப்பட்ட ஓர் உண்மை சம்பவத்தில் வாதப் போர் தொடுக்கும் காட்சியை வீடியோவில் கண்டனர். நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு இடைஞ்சல் ஏற்படாதபடி இருக்க என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்துகொண்டனர். (பிலிப்பியர் 1:7) ஃபெடரல் டிஸ்ட்ரிக்ட் கோர்ட்டில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் தீர்ப்பான வழக்கிற்குக் கவனம் திருப்பப்பட்டது. அதில் வீடுவீடாக சென்று பிரசங்கிக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய விருப்பத்திற்கு இடமளிக்கும் விதத்தில், அனுமதி பெறுவதையும் பேட்ஜ் அணிவதையும் உட்படுத்திய அதன் சட்டங்களை மாற்றும்படி அமெரிக்கா, நியூ ஜெர்ஸி, ஓர்டல் மாகாணத்திற்கு போடப்பட்ட உத்தரவு குறிப்பிடப்பட்டது.
இவ்வளவு தான் பார்வையாளர்கள் பார்த்தனர் என நினைக்கிறீர்களா? இல்லை. கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டவற்றின் மாதிரிகளை அச்சு வார்ப்பாலையில் பார்த்தபின், கழிவுநீர் தூய்மைப்படுத்தும் இடத்தையும், மின்னகத்தையும், நீரை கனியுப்புகளற நீக்கும் (Water-Softening Facility) இடத்தையும், எண்ணற்ற பணிமனைகளையும்கூட பார்வையிட்டனர். வாழ்க்கையில் கிடைத்த ஒப்பற்ற வாய்ப்பு.
பிரதிஷ்டை நிகழ்ச்சி அறிவுறுத்தும் தெய்வீக கல்வி
மே 19, புதன்கிழமை மாலை 4 மணிக்கு பிரதிஷ்டை நிகழ்ச்சிநிரல் தொடங்கியது. அதற்குத் தலைமை காரியாலய அலுவலர்கள், சொஸைட்டியின் விருந்தினர்கள், தொலைபேசி மூலம் கனடா கிளைக் காரியாலயத்துடன் இணைக்கப்பட்ட 372 பேர் உட்பட சந்தோஷம் பொங்கும் 6,929 பேர் அங்கு கூடியிருந்தனர்.
உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரஸிடென்ட், மில்டன் ஜி. ஹென்ஷலின் வரவேற்புரை கூட்டத்தாரை உண்மையிலேயே நெகிழச் செய்தது. ஆளும் குழுவின் அங்கத்தினரும் அந்நிகழ்ச்சிநிரலின் அக்கிராசனருமான தியோடர் ஜெரக்ஸ் அடுத்து வில்லியம் மெலென்ஃபன்ட் என்பவரை அறிமுகப்படுத்தினார். “கட்டடத் திட்டத்தின் சிறப்புக் குறிப்புகள்” பகுதியைக் கையாண்ட அவர், உவாட்ச்டவர் கல்வி மையத்தை விரிவாக்குதல், வடிவமைத்தல், கட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்த மூன்று சகோதரர்களைப் பேட்டி கண்டார். கட்டடப் பணி முன்னேறி வரும் காலப் பகுதியில் 8,700-க்கும் அதிகமான தற்காலிக வேலையாட்கள் தங்கள் சொந்த செலவில் வந்து வேலை செய்தது பேட்டிகளின் போது தெரிய வந்தது. கடவுளின் போதனைக்குச் சான்றளித்த ஐக்கியத்தையும் தாராள குணத்தையும் என்னவென்று பாராட்ட!
“உலகளாவிய விதத்தில் கடவுளின் போதனை” என்ற தலைப்பில் அடுத்து ஒரு தொடர்பேச்சு அளிக்கப்பட்டது. ஆளும் குழுவின் நான்கு அங்கத்தினர்கள் அப்பேச்சைக் கொடுத்தனர். கடவுளின் போதனை அவருடைய வார்த்தையாகிய பைபிளின் அடிப்படையில் அமைந்தது என்பதையும் அது, “சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடை”வதற்கு கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துகிறது என்பதையும் ஜான் ஈ. பார் வலியுறுத்தினார். (கொலோசெயர் 1:10) கிறிஸ்தவ சபையின் தலைவராகிய இயேசு கிறிஸ்து முதல், உலகம் முழுவதிலுமுள்ள சகோதரத்துவத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் கடவுளின் போதனையால் தேவராஜ்ய நியதிப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதைக் குறித்து டானியல் சிட்லிக் கலந்தாலோசித்தார். (1 கொரிந்தியர் 12:12-27) எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களைச் சென்றெட்டவும், கடவுளுடைய வழியில் நடக்க அவர்களுக்கு போதிக்கவும் கடவுளின் போதனை எப்படி ஊழியர்களைத் திறம்பட்டவர்களாய் ஆக்குகிறது என்பதைப் பற்றி தொடர்பேச்சின் மீதமிருந்த இரு பகுதிகளில் ஜெரிட் லாஷ் மற்றும் கேரி பார்பர் பேசினார்கள்.—ஏசாயா 2:1-4; 2 கொரிந்தியர் 3:5.
இந்தக் கல்வி மையத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைப் பற்றியும் வந்திருப்போர் தெரிந்துகொள்வதற்கு வசதியாக அவற்றோடு தொடர்புடைய போதகர்களையும் மற்றவர்களையும் உட்படுத்திய நேர்முகப் பேட்டிகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்றன. உலகளாவிய விதத்தில் கடவுளின் கல்வி திட்டத்தைச் செயல்படுத்துவதில் இந்த ஒவ்வொரு பள்ளியின் பங்கும் வலியுறுத்திக் காட்டப்பட்டது. பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தையும் படிப்பது, யெகோவாவின் மக்களுடைய நவீன நாளைய சரித்திரத்தை கற்றறிவது, மிஷனரி ஊழியத்திற்காக தயாராவது ஆகியவற்றில் கிலியட் பள்ளி கவனம் செலுத்துவது குறிப்பிடப்பட்டது. கிளை அலுவலக ஆலோசனைக் குழுவின் அங்கத்தினர்களை உட்படுத்தும் பல்வேறு செயல்நடவடிக்கைகள் பற்றிய அற்புதமான விரிவான கல்வியை அளிக்கிறது கிளை அலுவலக பள்ளி. பயணம் செய்யும் சகோதரர்களின் தேவைகளை மட்டுமல்ல அத்தோடு முக்கியமாய் சபைகளைப் பயனடையச் செய்யும் ஆவிக்குரிய உதவியை அளிக்க அவர்களை திறம்பட்டவர்களாக்குகிறது பயணக் கண்காணிகளுக்கான பள்ளி.
நிகழ்ச்சிநிரலை நிறைவுசெய்ய, “நம்முடைய மகத்தான சிருஷ்டிகரோடு சேர்ந்து கட்டுதல்” என்ற தலைப்பில் ஆளும் குழுவின் அங்கத்தினர் லாயட் பேரி பிரதிஷ்டைப் பேச்சை கொடுத்தார். சிருஷ்டிகராகிய யெகோவா தம்முடைய படைப்புகள் அனைத்திலும் பெருமகிழ்ச்சி கொள்கிறவர், நாம் அவரோடு சேர்ந்து சந்தோஷப்படும்படி நம்மை அழைக்கிறவர் என குறிப்பிட்டார். (ஏசாயா 65:18) “எல்லாவற்றையும் கட்டியவர் தேவன்” என்பதால் இந்தக் கட்டடத்திற்கான எல்லா புகழும் வாஸ்தவத்தில் யெகோவா தேவனையே சேரும். (எபிரெயர் 3:4, NW) அத்தகைய கருத்துக்களைச் சொன்ன பின்பு பேச்சாளர் இதயத்தைத் தொடும்விதத்தில் ஜெபித்தார்; மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவாவுக்கு உவாட்ச் டவர் கல்வி மையத்தை அர்ப்பணித்தார்.a
அதில் கலந்துகொண்ட ஒவ்வொருவர் மனதிலும் அந்த வாரத்தின் குதூகலமான நிகழ்ச்சி நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உவாட்ச்டவர் கல்வி மையத்தை நீங்களும் ஏன் வந்து பார்க்கக்கூடாது? நம்முடைய அன்பான சிருஷ்டிகரைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளவும் அவருடைய நீதியுள்ள தராதரங்களுக்கேற்ப வாழவும் நீங்கள் எடுக்கும் உங்கள் முயற்சிகளில் இங்கு விஜயம் செய்வதும் சுற்றி பார்வையிடுவதும் உங்களை உற்சாகப்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாய் இருக்கிறோம்.
[அடிக்குறிப்புகள்]
a சகோதரர் பேரி உண்மையோடு தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை, 1999, ஜூலை 2-ம் தேதியன்று முடித்துக்கொண்டார். 1999, அக்டோபர் 1 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில் பக்கம் 16-ஐக் காண்க.
[பக்கம் 10-ன் படங்கள்]
விருந்தினர் அலைமோதும் அரங்கமும், பொங்கி வழியும் உணவு அறையும்
[பக்கம் 10-ன் படங்கள்]
சிற்றுலா பார்வையாளர்களுக்கு கிடைத்த பாக்கியம்