யாருக்காவது அக்கறை இருக்கிறதா?
‘ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீர்.’ இது வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. எட்டு திக்குகளிலும் நிகழும் எண்ணற்ற ‘கொடுமைகளுக்கு’ பலியானவர்கள் சிந்திய கண்ணீரே இந்த வெள்ளப்பெருக்கு. “தேற்றுவார் எவருமில்லை”—எங்களைப் பற்றி உண்மையில் யாருக்குமே அக்கறை இல்லை—என இவர்கள் அடிக்கடி உணருகிறார்கள்.—பிரசங்கி 4:1, பொது மொழிபெயர்ப்பு.
இந்தக் கண்ணீர் வெள்ளத்தின் மத்தியிலும், சிலர் தங்களுடைய சக மனிதரின் துயரத்தைப் பற்றி கவலைப்படாமல் கற்சிலையாக இருக்கிறார்கள். மற்றவர்களுடைய வேதனையைக் கண்டு இவர்கள் மனம் கொஞ்சம்கூட இரங்குவதில்லை. கள்ளர் கையில் அகப்பட்டு வழியருகே குற்றுயிராக விடப்பட்ட மனிதனைப் பற்றிய இயேசுவின் உதாரணத்திலுள்ள ஆசாரியனையும் லேவியனையும் போலவே கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிடுகிறார்கள். (லூக்கா 10:30-32) தாங்களும் தங்கள் குடும்பமும் நல்லாயிருந்தால் போதும், மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவானேன் என நினைக்கிறார்கள். சொல்லப்போனால், “யார் எக்கேடுகெட்டா எனக்கென்ன?” என்று கூறுகிறார்கள்.
இதைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. “கடைசிநாட்களில்” அநேகர் ‘சுபாவ அன்பில்லாதவர்களாய்’ இருப்பார்கள் என அப்போஸ்தலன் பவுல் முன்னறிவித்தார். (2 தீமோத்தேயு 3:1, 3) பெருகியிருக்கும் இப்படிப்பட்ட அக்கறையற்ற மனநிலையைக் கண்டு ஒருவர் புலம்பினார். “பராமரிக்க வேண்டும், பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற பழைய ஐரிஷ் தத்துவமும் பாரம்பரியமும், தங்களுக்காகவே உருவாக்க வேண்டும் உருவிக்கொள்ள வேண்டும் என்ற புதிய விதியால் மாற்றப்பட்டுவிட்டது” என அவர் சொன்னார். உலககெங்குமுள்ள மக்கள் தங்களுக்காகவே எல்லாவற்றையும் செய்கிறார்கள், மற்றவர்களுடைய நெருக்கடியைக் கண்டு கொஞ்சம்கூட அசைவதில்லை, குத்துக்கல்லாக இருக்கிறார்கள்.
அக்கறை காட்டும் ஒருவர் தேவை
நிச்சயமாகவே, அக்கறை காட்டும் ஒருவர் தேவை. உதாரணமாக, ஜெர்மனியில் தனிமையிலேயே நிலைமரமான ஒரு மனிதனைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். “கிறிஸ்மஸ் அன்று தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் அமர்ந்த அவர் ஐந்து வருஷங்களுக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டார்—செத்த நிலையில்.” வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களால் மனக்கசப்படைந்த இந்த மனிதர் “உடல்நலமின்றி தனித்து வாழ்ந்தவர், விவாகரத்தானவர்.” அவருக்கு வாடகை கட்டிவந்த வங்கியின் கணக்கிலிருந்த பணம் தீர்ந்து போகும்வரை அவரை யாருமே தேடவில்லை. உண்மையில் யாருமே அவரைப் பற்றி கவலைப்படவில்லை.
வலிமையும் பேராசையுமிக்க அதிகாரிகளுக்கு பலியாகும் திக்கற்றவர்களைப் பற்றியும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஓர் இடத்தில், தங்களுடைய தேசம் பலவந்தமாக பறிக்கப்பட்டபின் “அடக்குமுறையாலும் பஞ்சத்தாலும் இறந்தவர்கள்” சுமார் 2,00,000 பேர் (அந்நாட்டு ஜனத்தொகையில் கால் பங்கு). அல்லது நம்பமுடியாத அளவுக்கு மிருகத்தனமாக நடத்தப்பட்ட பிள்ளைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஓர் அறிக்கை இவ்வாறு சொன்னது: “[ஒரு நாட்டில்] பலதரப்பட்ட அட்டூழியங்களை—கொலைகளையும், அடிகளையும், கற்பழிப்புகளையும், சில சமயங்களில் மற்ற இளைஞர்களே இவற்றைச் செய்வதையும்—கண்ணார கண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை திகைக்க வைக்கிறது.” இப்படிப்பட்ட அநீதிகளால் பாதிக்கப்பட்டோர், “கரிசனை காட்ட யாருமே இல்லையா?” என கண்ணீரோடு கேட்பதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
ஐக்கிய நாடுகளின் அறிக்கைப்படி, வளர்ந்துவரும் நாடுகளில் வாழும் 130 கோடி மக்கள் அமெரிக்க டாலரில் ஒரு டாலருக்கும் குறைவான பணத்திற்குச் சமமான பணத்தை வைத்துத்தான் ஒரு நாளை கழிக்க வேண்டியுள்ளது. தங்களை நினைத்து கவலைப்பட ஒரு ஜீவனும் இல்லையா என அவர்கள் யோசிக்கிறார்கள். அவர்களைப் போலவே ஆயிரக்கணக்கான அகதிகளும் நினைக்கிறார்கள். “அகதிகள் முகாமிலோ அல்லது அவர்களை ஏற்றுக்கொள்ளாத மற்றொரு நாட்டிலோ அதிருப்தியுடன் இவர்கள் வாழ வேண்டும்; அல்லது போரினாலோ இனவேறுபாடுகளினாலோ இன்னும் பிளவுபட்ட நிலையிலுள்ள தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பிச்செல்ல முயற்சிசெய்ய வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டிய பரிதாபகரமான நிலையில் இருக்கிறார்கள்” என தி ஐரிஷ் டைம்ஸ் என்ற செய்தித்தாளில் வெளிவந்த ஓர் அறிக்கை சொல்கிறது. அதே அறிக்கை மனதை உறையவைக்கும் இந்தக் காரியத்தையும் செய்ய சொன்னது: “உங்களுடைய கண்களை மூடிக்கொள்ளுங்கள், மூன்று வரை எண்ணுங்கள், ஒரு குழந்தை இறந்து விட்டது. போதிய ஊட்டச்சத்து இல்லாமையால் அல்லது தவிர்க்க முடியாத நோயால் இன்றைய தினம் சாகப்போகும் 35,000 குழந்தைகளில் இதுவும் ஒன்று.” வேதனையாலும் மனக்கசப்பாலும் அநேகர் அங்கலாய்ப்பது ஆச்சரியமல்ல!—யோபு 7:11-ஐ ஒப்பிடுக.
இந்த கஷ்டங்களெல்லாம் அனுபவிப்பதற்காகவா நாம் படைக்கப்பட்டோம்? உண்மையில், உங்கள்மீது அக்கறை காட்டுபவர் மட்டுமல்ல, வேதனைகளுக்கு முடிவுகட்டவும் மனிதர் படும் இந்தக் கஷ்டங்களையெல்லாம் குணப்படுத்தவும் வல்லவர் யாராவது இருக்கிறாரா?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cover and page 32: Reuters/Nikola Solic/Archive Photos
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
A. Boulat/Sipa Press