பிலிப்பு—வைராக்கியமுள்ள ஒரு சுவிசேஷகன்
விசுவாசத்தில் முன்மாதிரி வைத்த ஆடவரையும் பெண்டிரையும் பற்றிய பற்பல விவரங்கள் வேதவசனங்களில் காணப்படுகின்றன. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ மிஷனரியாகிய பிலிப்புவை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஓர் அப்போஸ்தலர் அல்ல, என்றாலும் ராஜ்ய செய்தியைப் பரப்புவதில் வலிமையோடு பயன்படுத்தப்பட்டார். சொல்லப்போனால், ‘சுவிசேஷகன்’ என பிலிப்பு அழைக்கப்பட்டார். (அப்போஸ்தலர் 21:8) பிலிப்புவுக்கு அந்தச் சிறப்புப் பெயர் எப்படி கிடைத்தது? அவரிடமிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளலாம்?
பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேக்குப் பின் வெகு விரைவிலேயே பைபிள் பதிவில் பிலிப்புவின் பெயர் வருகிறது. அந்தச் சமயத்தில் கிரேக்க மொழி பேசிய யூதர்கள் அன்றாட உணவு பகிர்ந்தளிப்பில் தங்கள் விதவைகள் கவனியாமல் விடப்பட்டதாக கூறி எபிரெய மொழி பேசிய யூதர்களுக்கு எதிராக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். இந்தக் காரியத்தை மேற்பார்வை செய்வதற்கு, ‘நற்சாட்சி பெற்றிருந்த ஏழுபேரை’ அப்போஸ்தலர் நியமித்தார்கள். இதில் பிலிப்பும் ஒருவர்.—அப்போஸ்தலர் 6:1-6.
இந்த ஏழு ஆண்களும் ‘நற்சாட்சி பெற்றிருந்தார்கள்.’ ஆம், தாங்கள் நியமிக்கப்பட்ட அந்தச் சமயத்தில், அவர்கள் நடைமுறையில் சிந்திக்கும் திறமையுடைய ஆவிக்குரிய மனிதர் என்று ஏற்கெனவே அறியப்பட்டிருந்தார்கள். இன்று கிறிஸ்தவ கண்காணிகளாக சேவிப்போரை குறித்ததிலும் அவ்வாறே உள்ளது. இவர்கள் அவசரப்பட்டு நியமிக்கப்படுகிறதில்லை. (1 தீமோத்தேயு 5:22) ‘புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவர்களாக’ இருக்க வேண்டும். மேலும், அவர்கள் நியாயமுள்ளவர்கள், நேர்மை மனமுள்ளவர்கள் என்று உடன் கிறிஸ்தவர்களாலும் அறியப்பட்டிருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 3:2, 3, 7; பிலிப்பியர் 4:5.
எருசலேமில் தனக்கு நியமிக்கப்பட்ட வேலையை பிலிப்பு நன்கு கவனித்தாரென அத்தாட்சிகள் காட்டுகின்றன. எனினும், விரைவில், கடும் துன்புறுத்துதல் எனும் பேரலை எழும்பி கிறிஸ்துவை பின்பற்றினோரை சிதறடித்தது. மற்றவர்களைப் போலவே பிலிப்புவும் அந்நகரத்தை விட்டுச் சென்றபோதிலும் அவருடைய ஊழியம் ஓயவில்லை. சீக்கிரத்தில் ஒரு புதிய பிராந்தியத்தில், அதாவது சமாரியாவில், சுறுசுறுப்பாக பிரசங்கிப்பதில் ஈடுபட்டார்.—அப்போஸ்தலர் 8:1-5.
புதிய பிராந்தியங்களைத் தொடங்குதல்
தம்முடைய சீஷர்கள், “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும்” பிரசங்கிப்பார்கள் என்று இயேசு முன்னறிவித்திருந்தார். (அப்போஸ்தலர் 1:8) சமாரியாவில் பிரசங்கித்ததன் மூலம் அந்த வார்த்தைகளின் நிறைவேற்றத்தில் பிலிப்புவும் பங்குகொண்டார். பொதுவாக, சமாரியரை யூதர்கள் மதிப்பு குறைவாக கருதினார்கள். ஆனால், பிலிப்பு இந்த ஜனங்களைப் பற்றி தப்பாக எடைபோடவில்லை. அவருடைய பாரபட்சமற்ற நிலை ஆசீர்வதிக்கப்பட்டது. சீமோன் என்ற பெயருடைய முன்னாள் மாயவித்தைக்காரன் உட்பட, நிச்சயமாகவே சமாரியர் பலர் முழுக்காட்டப்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 8:6-13.
ஒரு சமயத்தில், எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வனாந்தர பாதையில் செல்லும்படி, யெகோவாவின் தூதன் பிலிப்புவை வழிநடத்தினார். அங்கே, எத்தியோப்பிய பிரதானி சென்றுகொண்டிருந்த இரதத்தை பிலிப்பு கண்டார். அந்த அதிகாரி ஏசாயா தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதியை உரத்த சத்தமாய் வாசித்துக்கொண்டிருந்தார். பிலிப்பு அந்த இரதத்தின் பக்கமாய் ஓடி, அவரோடு உரையாடத் தொடங்கினார். அந்த எத்தியோப்பியர் யூத மதத்திற்கு மாறியவர், கடவுளையும் வேதவசனங்களையும் பற்றி ஓரளவு அறிவு இருந்தபோதிலும், தான் வாசித்துக்கொண்டிருந்ததைப் புரிந்துகொள்ள தனக்கு உதவி தேவை என்பதை மனத்தாழ்மையோடு ஒப்புக்கொண்டார். ஆகையால், பிலிப்பு அந்த இரதத்தில் ஏறி, தன்னுடன் உட்காரும்படி அழைத்தார். சாட்சி கொடுக்கப்பட்ட பின்பு, தண்ணீர் நிற்கும் ஓரிடத்திற்கு வந்தார்கள். “நான் முழுக்காட்டப்படுவதற்கு எனக்குத் தடை என்ன?” என்று அந்த எத்தியோப்பியர் கேட்டார். பிலிப்பு உடனடியாக அவரை முழுக்காட்டினார், அந்த எத்தியோப்பியர் மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றார். இந்தப் புதிய சீஷன் தன் தாய்நாட்டில் இந்த நற்செய்தியை பரவச் செய்திருக்கலாம்.—அப்போஸ்தலர் 8:26-39, NW.
சமாரியரிடமும் எத்தியோப்பிய அதிகாரியிடமும் செய்த பிலிப்புவின் ஊழியத்திலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளலாம்? குறிப்பிட்ட தேசத்தையோ குலத்தையோ சேர்ந்தவர்கள், அல்லது சமுதாய அந்தஸ்திலுள்ள தனிப்பட்ட நபர்கள் நற்செய்திக்கு அக்கறை காட்டமாட்டார்கள் என்று நாம் ஒருபோதும் முடிவெடுத்துவிடக்கூடாது. மாறாக, ‘எல்லா வகை ஜனங்களுக்கும்’ ராஜ்ய செய்தியை நாம் அறிவிக்க வேண்டும். (1 கொரிந்தியர் 9:19-23, NW) அப்படி பிரசங்கிக்க முன்வருவோமானால், இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு வருவதற்கு முன் ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கும்’ ஊழியத்தில் யெகோவா நம்மை பயன்படுத்தக்கூடும்.—மத்தேயு 28:19, 20.
பிலிப்புவுக்கு கிடைத்த கூடுதலான சிலாக்கியங்கள்
எத்தியோப்பிய அதிகாரிக்குப் பிரசங்கித்தப் பின்பு, பிலிப்பு ஆசோத்தில் சாட்சி பகர்ந்தார்; பின்பு, “அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்[தார்].” (அப்போஸ்தலர் 8:40) முதல் நூற்றாண்டில், இந்த இரண்டு பட்டணங்களிலும் அநேக புறஜாதியார் இருந்தனர். பிலிப்பு, வடக்கே செசரியாவுக்குப் போகும் வழியில், லித்தா, யோப்பா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த யூத குடியிருப்புகளில் பிரசங்கித்திருக்கலாம். ஒருவேளை அதனால்தான் இந்தப் பகுதிகளில் சீஷர்கள் பின்னால் தோன்றியிருக்கலாம்.—அப்போஸ்தலர் 9:32-43.
இருபது ஆண்டுகளுக்குப் பின்னால், பிலிப்பு கடைசியாக குறிப்பிடப்படுகிறார். பவுல், தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தின் முடிவில், பித்தொலோமாயில் கப்பலைவிட்டு இறங்கினார். பவுலின் பயணத் தோழராகிய லூக்கா சொல்லுகிறார்: “மறுநாளிலே . . . நாங்கள் புறப்பட்டுச் செசரியா பட்டணத்துக்கு வந்து, . . . பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.” இந்தச் சமயத்திற்குள் பிலிப்புவுக்கு, “கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் . . . இருந்தார்கள்.”—அப்போஸ்தலர் 21:8, 9.
செசரியாவில் நிரந்தரமாக பிலிப்பு குடியேறியதாக தெரிகிறது. ஆனால் அவர் தன் மிஷனரி ஆர்வத்தை இழக்கவில்லை, ஏனெனில் லூக்கா அவரை ‘சுவிசேஷகன்’ என்று அழைக்கிறார். இந்தச் சொல், ஊழியம் செய்யப்படாத பகுதிகளில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்குத் தன் வீட்டை விட்டுச் செல்கிற ஒருவரை பெரும்பாலும் குறிப்பிடுகிறது. தீர்க்கதரிசனம் சொல்லும் நான்கு குமாரத்திகள் பிலிப்புவுக்கு இருந்தனர். இது, வைராக்கியமுள்ள தங்கள் தகப்பனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியதை குறிப்பாக தெரிவிக்கிறது.
தங்கள் பிள்ளைகளே தங்களுடைய மிக முக்கியமான சீஷர்கள் என்பதை தற்கால கிறிஸ்தவ பெற்றோர் நினைவில் வைக்க வேண்டும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக தேவராஜ்ய சிலாக்கியங்கள் சிலவற்றை தாங்கள் துறக்க வேண்டியதாக இருந்தாலுங்கூட, பிலிப்புவைப்போல் கடவுளின் இருதயப்பூர்வ ஊழியர்களாகவும் முன்மாதிரியான பெற்றோராகவும் அவர்கள் நிலைத்திருக்கலாம்.—எபேசியர் 6.4.
பவுலும் அவருடைய உடன்தோழர்களும் பிலிப்புவின் குடும்பத்தை சந்தித்ததானது, அவர்களை உபசரிக்கும் சிறந்த வாய்ப்பை பிலிப்புவின் குடும்பத்திற்கு அளித்தது. அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பரஸ்பர ஊக்கமூட்டுதலை கற்பனைசெய்து பாருங்கள்! ஒருவேளை இந்தச் சந்தர்ப்பத்தில்தான், பிலிப்புவின் நடவடிக்கைகளைப் பற்றிய நுட்பவிவரங்களைச் சேகரித்து பின்னால் அப்போஸ்தலர் 6-ஆம் 8-ஆம் அதிகாரங்களில் லூக்கா சேர்த்திருக்கலாம்.
ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு யெகோவா தேவன் பிலிப்புவை நன்கு பயன்படுத்தினார். பிலிப்புவின் வைராக்கியம் நற்செய்தியை புதிய பிராந்தியங்களில் பரவச் செய்வதற்கும், தன் வீட்டில் ஆரோக்கியமான ஆவிக்குரிய சூழலை ஏற்படுத்துவதற்கும் அவருக்கு உதவியது. இதுபோன்ற சிலாக்கியங்களையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ உங்களுக்கு விருப்பமா? அப்படியானால், சுவிசேஷகனாகிய பிலிப்பு காண்பித்த பண்புகளை நீங்கள் காட்டுவது நலமாயிருக்கும்.