கடவுளுடைய வார்த்தையை தவறாமல் குடும்பமாக படியுங்கள்
“மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”—மத்தேயு 4:4.
1. யெகோவாவின் வழிகளை தங்களுடைய பிள்ளைகளுக்கு போதிக்கும் குடும்பத் தலைவர்களுடைய பொறுப்பைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?
பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டிய பொறுப்பு குடும்பத் தலைவர்களுக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பை அவர்களுக்கு யெகோவா தேவன் அடிக்கடி நினைப்பூட்டினார். இப்படிப்பட்ட போதனைகள் அவர்களை தற்கால வாழ்க்கைக்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் தயார்படுத்துகின்றன. “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] வழியைக் காத்து நடக்க” தன்னுடைய குடும்பத்தாருக்கு போதிக்கும் பொறுப்பை, கடவுளை பிரதிநிதித்துவம் செய்த தூதன் ஒருவர் ஆபிரகாமுக்கு சுட்டிக்காட்டினார். (ஆதியாகமம் 18:19) இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து கடவுள் எப்படிக் காப்பாற்றினார் என்றும் ஓரேபில் உள்ள சீனாய் மலையில் நியாயப்பிரமாணத்தை எப்படிக் கொடுத்தார் என்றும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு விளக்கும்படி இஸ்ரவேல பெற்றோருக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. (யாத்திராகமம் 13:8, 9; உபாகமம் 4:9, 10; 11:18-21) “கர்த்தருக்கேற்ற [“யெகோவா,” NW] சிட்சையிலும் போதனையிலும்” பிள்ளைகளை வளர்க்கும்படி கிறிஸ்தவ குடும்பத் தலைவர்களுக்கு அறிவுரை கொடுக்கப்பட்டது. (எபேசியர் 6:4) பெற்றோரில் ஒருவர் மட்டுமே யெகோவாவை சேவித்தாலும், யெகோவாவின் வழிகளை பிள்ளைகளுக்கு போதிக்க அவர் பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 1:5; 3:14, 15.
2. பிள்ளைகள் இல்லாத குடும்பத்திற்கும் குடும்ப படிப்பு தேவையா? விளக்குங்கள்.
2 பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் மட்டுமே கடவுளுடைய வார்த்தையை குடும்பமாக படிக்க வேண்டும் என இது அர்த்தப்படுத்துவதில்லை. பிள்ளைகள் இல்லை என்றாலும், கணவனும் மனைவியும் குடும்ப படிப்பை நடத்தலாம். ஆவிக்குரிய காரியங்களுக்கு சிறந்த போற்றுதலை இது காட்டுகிறது.—எபேசியர் 5:25, 26.
3. குடும்ப படிப்பை தவறாமல் நடத்துவது ஏன் இன்றியமையாதது?
3 நல்ல பலனைப் பெறவேண்டுமானால், தவறாமல் போதிக்க வேண்டும். “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று யெகோவா இஸ்ரவேலருக்கு வனாந்தரத்தில் கற்றுக்கொடுத்த பாடத்திற்கு இசைவாக இது இருக்கிறது. (உபாகமம் 8:3) குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப, சிலர் வாரத்திற்கு ஒரு தடவை குடும்பமாக படிக்க ஏற்பாடு செய்யலாம். அப்படி இயலாவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக தினமும் படிக்க தீர்மானிக்கலாம். இதில் எந்த முறையை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும்சரி, படிப்பதை மட்டும் விட்டுவிடாதீர்கள். அதற்காக ‘நேரத்தை ஒதுக்குங்கள்.’ அந்த நேரத்திற்காக தேவையான தியாகங்களை செய்வது புத்திசாலித்தனமான முதலீடு. ஏனெனில், உங்கள் குடும்ப அங்கத்தினர்களின் ஜீவனும் ஆபத்தில் இருக்கிறது.—எபேசியர் 5:15-17; பிலிப்பியர் 3:16.
மனதில் வைக்க வேண்டிய குறிக்கோள்கள்
4, 5. (அ) பிள்ளைகளுக்கு போதிப்பதில் முக்கியமான குறிக்கோளாக எதை வைக்கும்படி யெகோவா மோசே மூலம் பெற்றோருக்கு கட்டளை கொடுத்தார்? (ஆ) இன்று இது எதை உட்படுத்துகிறது?
4 சில தெளிவான குறிக்கோள்களை மனதில் வைத்து, குடும்ப படிப்பை நீங்கள் நடத்தினால் சிறந்த பலன்களை பெறுவது நிச்சயம். ஒருசிலவற்றை சிந்திப்போம்.
5 யெகோவா தேவனிடமாக அன்பை வளர்க்க ஒவ்வொரு படிப்பிலும் முயற்சி செய்யுங்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் போவதற்கு முன், இஸ்ரவேலர்கள் மோவாப் சமவெளியில் கூடியிருந்தனர். “நியாயப்பிரமாணத்தில் பிரதான கற்பனை” என்று இயேசு கிறிஸ்து அடையாளப்படுத்தவிருந்த கட்டளைக்கு மோசே அவர்களது கவனத்தை திருப்பினார். என்ன கட்டளை? “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என்பதே. (மத்தேயு 22:36, 37; உபாகமம் 6:5) இஸ்ரவேலர்கள், இதை தங்களுடைய இருதயத்தில் முதலில் பதித்து, பிறகு அவர்களுடைய பிள்ளைகளுக்கும் போதிக்கும்படி மோசே அறிவுறுத்தினார். மறுபடியும் மறுபடியும் சொல்வதை அது அர்த்தப்படுத்தியது. யெகோவாவை நேசிப்பதற்கான காரணங்களிடம் கவனத்தை திருப்புவதை அது தேவைப்படுத்தியது. இப்படிப்பட்ட அன்பை காண்பிப்பதை தடுக்கும் மனப்பான்மைகளையும் நடத்தையையும் சமாளிப்பதை அது வலியுறுத்தியது. தங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்கான அன்பை நிரூபிக்கும்படி எதிர்பார்க்கப்பட்டது. இதே விதமான போதனைதான் நம் பிள்ளைகளுக்கும் தேவையா? ஆம்! அவர்களும் ‘தங்கள் இருதயங்களை விருத்தசேதனம்பண்ண’ வேண்டும். இதற்கு உதவி தேவை. அதாவது, கடவுளுக்கான அன்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எதையும் ஒதுக்கித் தள்ளுவதற்கு உதவி தேவை. (உபாகமம் 10:12, 16; எரேமியா 4:4) உலக காரியங்கள் மீதான ஆசையும் அப்படிப்பட்ட செயல்களில் முழு மூச்சாக இறங்கும் ஆவலும் இந்த முட்டுக்கட்டைகளில் ஒன்றாக இருக்கலாம். (1 யோவான் 2:15, 16) யெகோவாவுக்கான அன்பை வெளிப்படையாக, செயலில் காண்பிக்க வேண்டும். நம்முடைய பரலோக தகப்பனுக்கு பிரியமானவற்றை செய்ய இந்த அன்பு நம்மைத் தூண்ட வேண்டும். (1 யோவான் 5:3) உங்கள் குடும்ப படிப்பு, தொடர்ந்து நன்மைகளை வழங்க வேண்டும் என்றால், இந்த அன்பை பலப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு படிப்பையும் நடத்த வேண்டும்.
6. (அ) திருத்தமான அறிவை புகட்ட எது தேவை? (ஆ) திருத்தமான அறிவின் அவசியத்தை பைபிள் எப்படி வலியுறுத்துகிறது?
6 கடவுள் எதிர்பார்ப்பவற்றைப் பற்றிய திருத்தமான அறிவை புகட்டுங்கள். இது எதை உட்படுத்துகிறது? ஒரு புத்தகத்தில் இருந்தோ அல்லது பத்திரிகையில் இருந்தோ பதிலை அப்படியே வாசிப்பது போதாது. முக்கியமான கருத்துக்களையும் வார்த்தைகளையும் சரியாக புரிந்து கொள்வதற்கு அதைப்பற்றி கலந்து பேச வேண்டும். புதிய ஆள்தன்மையை தரித்துக் கொள்ள திருத்தமான அறிவு அவசியம். வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்ப்படும்போது கடவுளுக்கு பிரியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கவும் இந்தத் திருத்தமான அறிவு அவசியம்.—பிலிப்பியர் 1:9-11, NW; கொலோசெயர் 1:9, 10; 3:10.
7. (அ) படிக்கும் கட்டுரையை வாழ்க்கையில் பொருத்த குடும்ப அங்கத்தினர்கள் என்னென்ன கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம்? (ஆ) இந்த குறிக்கோளின் மதிப்பை பைபிள் எப்படி வலியுறுத்துகிறது?
7 கற்றுக் கொண்டவற்றை வாழ்க்கையில் பொருத்த உதவுங்கள். இந்தக் குறிக்கோளை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு குடும்ப படிப்பின்போதும், பின்வரும் கேள்விகளை கேளுங்கள்: ‘இந்தக் கட்டுரை நம் வாழ்க்கையை எப்படி பாதிக்க வேண்டும்? இப்போது நாம் செய்து கொண்டிருப்பதில் ஏதாவது மாற்றம் தேவையா? மாற்றங்களை செய்ய நாம் ஏன் விரும்ப வேண்டும்?” (நீதிமொழிகள் 2:10-15; 9:10; ஏசாயா 48:17, 18) கற்றுக்கொண்ட காரியங்களை வாழ்க்கையில் பொருத்த அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப அங்கத்தினர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான அம்சம் இதுவே.
போதிக்கும் உபகரணங்களை ஞானமாக உபயோகியுங்கள்
8. குடும்ப படிப்புக்கான என்ன உபகரணங்களை அடிமை வகுப்பு தந்திருக்கிறது?
8 குடும்ப படிப்பில் பயன்படுத்த ஏராளமான உபகரணங்களை “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” தந்திருக்கிறது. பைபிளோடு சேர்த்து படிக்க, காவற்கோபுர பத்திரிகை 131 மொழிகளில் கிடைக்கிறது. பைபிள் படிப்பிற்காக பயன்படுத்தப்படும் புத்தகங்கள் 153 மொழிகளிலும், சிற்றேடுகள் 284 மொழிகளிலும், ஆடியோகேஸட்டுகள் 61 மொழிகளிலும், வீடியோகேஸட்டுகள் 41 மொழிகளிலும், பைபிள் ஆராய்ச்சிக்காக கம்ப்யூட்டர் புரோகிராம் 9 மொழிகளிலும் கிடைக்கின்றன!—மத்தேயு 24:45-47, NW.
9. காவற்கோபுர கட்டுரையை குடும்பமாக படிக்கும்போது இந்த பத்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களில் உள்ள ஆலோசனைகளின்படி என்னென்ன செய்யலாம்?
9 அநேக குடும்பத்தினர், குடும்ப படிப்பில் சபை காவற்கோபுர படிப்பிற்காக தயார் செய்கின்றனர். எவ்வளவு பலனளிக்கும் காரியம் அது! உலகமுழுவதிலும் உள்ள யெகோவாவின் மக்களை பலப்படுத்தும் அத்தியாவசியமான ஆவிக்குரிய உணவை காவற்கோபுரம் தருகிறது. இந்தப் பத்திரிகையை குடும்பமாக படிக்கும்போது, வெறுமனே பாராக்களைப் படித்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில்கள் சொல்வதைவிட அதிகத்தை செய்யுங்கள். அவற்றை புரிந்து கொள்ள ஊக்கமாக முயற்சி செய்யுங்கள். கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வசனங்களையும் படிக்க நேரம் ஒதுக்குங்கள். இந்த வசனங்கள் பாராவில் இருக்கும் விஷயத்தோடு எப்படி சம்பந்தப்பட்டு இருக்கிறதென குடும்ப அங்கத்தினர்களை சொல்ல சொல்லுங்கள். எல்லோரும் முழுமையாக கலந்து கொள்ள உதவுங்கள்.—நீதிமொழிகள் 4:7, 23; அப்போஸ்தலர் 17:11.
10. குடும்ப படிப்பை பிள்ளைகள் ஆவலோடு எதிர்பார்த்து, அதில் கலந்துகொள்ள என்ன செய்யலாம்?
10 பிள்ளைகள் இருந்தால், குடும்ப படிப்பு வெறுமனே ஒரு சடங்கைப் போல் கடமைக்கென்று இல்லாமல் உற்சாகமளிப்பதாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் சந்தோஷம் தருவதாகவும் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பொருத்தமான ஒரு வகையில் பங்குகொள்ள முயற்சி எடுங்கள். படிக்கும் கட்டுரையில் இருந்து கவனம் சிதறாமல் இருக்க இது உதவும். முடிந்தால், ஒவ்வொரு பிள்ளைக்கும் சொந்தமாக ஒரு பைபிளையும் பத்திரிகையையும் கொடுங்கள். இயேசு பாசத்தைக் காண்பித்ததுபோல், நீங்களும் காட்டலாம். ஒருவேளை, உங்கள் வீட்டுக் கடைக்குட்டியைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, உங்கள் கையை அப்பிள்ளையின்மேல் போட்டு அரவணைத்தபடி உட்காரலாம். (ஒப்பிடுக: மாற்கு 10:13-16.) படிப்புக் கட்டுரையில் இருக்கும் படத்தை ஒரு வாலிபப் பிள்ளை விளக்கும்படி குடும்பத் தலைவர் சொல்லலாம். சிறு பிள்ளையாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட வசனத்தை வாசிக்கும்படி முன்னதாகவே சொல்லி விடலாம். பெரிய பிள்ளையாக இருந்தால், படிப்புக் கட்டுரையை வாழ்க்கையில் பொருத்துவதற்கான சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டும்படி சொல்லலாம்.
11. போதிப்பதற்கு வேறு என்ன உபகரணங்கள் இருக்கின்றன, இவை எங்கே கிடைக்கின்றன, குடும்ப படிப்பில் இவற்றை எப்படி நல்ல விதத்தில் பயன்படுத்தலாம்?
11 உங்களுடைய குடும்ப படிப்பில் காவற்கோபுர பத்திரிகையை படித்தாலும், பல மொழிகளில் இருக்கும் மற்ற படிப்புக்கான உபகரணங்களையும் மறந்துவிடாதீர்கள். பைபிள் சொற்றொடருக்கான சரித்திரப் பின்னணியோ அல்லது விளக்கமோ தேவைப்பட்டால், வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை புத்தகத்தில் அது இருக்கலாம். மற்ற கேள்விகளுக்கான பதில்களை காவற்கோபுர பொருளடக்க அட்டவணையிலோ (ஆங்கிலம்) அல்லது சங்கத்தின் பைபிள் ஆராய்ச்சி கம்ப்யூட்டர் புரோகிராமிலோ பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த உபகரணங்கள் எல்லாம் உங்கள் மொழியில் கிடைத்தால், அவற்றை பயன்படுத்துவதைக் கற்றுக் கொள்ளுவதே, குடும்ப படிப்பின் மதிப்புமிக்க பாகம். குடும்ப படிப்பு நேரத்திலேயே கொஞ்சத்தை ஒதுக்கி, படிப்பினை அளிக்கும் சங்கத்தின் வீடியோக்கள் அல்லது நாடகத்தின் ஒரு பகுதியை ஆடியோகேஸட்டில் கேட்டு, பிறகு அதைப் பற்றி சிந்திக்கலாம். இது பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டும். இந்த படிப்பு உபகரணங்களை சிறந்த முறையில் உபயோகியுங்கள். இது, உங்கள் குடும்ப படிப்பை சுவாரஸ்யமுள்ளதாக்கும். முழு குடும்பத்திற்கும் நன்மை அளிக்கும்.
உங்கள் குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமையுங்கள்
12. குடும்பத்தின் அவசர தேவைகளை தீர்த்து வைப்பதில் குடும்ப படிப்பு எப்படி முக்கிய பங்கை வகிக்கிறது?
12 அந்தந்த வாரத்திற்குரிய காவற்கோபுர கட்டுரையை குடும்பமாக வாசிப்பது உங்கள் வழக்கமாக இருக்கலாம். இருந்தாலும், உங்கள் குடும்பத்தாரின் சூழ்நிலையையும் கவனத்தில் வையுங்கள். தாய், வேலைக்கு செல்லாதவர்களாக இருந்தால், பிள்ளைகள் ஸ்கூலில் இருந்து வந்ததும் பிள்ளைகளோடு சிறிது நேரம் தினந்தோறும் செலவழிக்கலாம். இது பிள்ளைகளின் பிரச்சினைகளை அவர் சரியாக புரிந்துகொள்ள உதவும். சில பிரச்சினைகளை தாயே உடனுக்குடன் தீர்த்து வைத்திடலாம். மற்றவற்றிற்கோ இன்னும் அதிகமான கவனம் தேவைப்படலாம். காலம் தாழ்த்தாமல், உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசரத் தேவைகளும் உண்டு. அவற்றை ஒத்திப் போடாதீர்கள். (நீதிமொழிகள் 27:12) இவை, ஸ்கூலில் எதிர்ப்படும் பிரச்சினைகள் மட்டுமல்ல, மற்ற சூழ்நிலைகளையும் உட்படுத்துகின்றன. சூழ்நிலைக்கு பொருத்தமான கட்டுரையை தேர்ந்தெடுங்கள். எதைப் படிக்க போகிறீர்களோ, அதை முன்னதாகவே குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவித்து விடுங்கள்.
13. வறுமையை எப்படி சமாளிக்கலாம் என்பதை குடும்பமாக சிந்திப்பது ஏன் நன்மை அளிக்கக்கூடும்?
13 உதாரணமாக, பூமியின் பெரும் பாகம் வறுமையின் கொடிய பிடியில் சிக்கித் தவிக்கிறது. எனவே, பல இடங்களில், இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்பதை சிந்திப்பது அவசியமாக இருக்கலாம். உண்மை வாழ்க்கை அனுபவங்களையும் பைபிள் நியமங்களையும் சிந்திப்பது உங்கள் குடும்பத்திற்கு நன்மை அளிக்குமா?—நீதிமொழிகள் 21:5; பிரசங்கி 9:11, NW; எபிரெயர் 13:5, 6, 18.
14. வன்முறை, யுத்தம், கிறிஸ்தவ நடுநிலைமை போன்ற விஷயங்களில் யெகோவாவின் கருத்தை குடும்பமாக சிந்திப்பது ஏன் காலத்திற்கேற்றது?
14 சிந்திக்க வேண்டிய மற்றொரு அம்சம் வன்முறை. நாம் எல்லாருமே யெகோவாவின் கருத்துகளை நம் மனங்களிலும் இருதயங்களிலும் நிலையாக பதிக்க வேண்டியது அவசியம். (ஆதியாகமம் 6:13; சங்கீதம் 11:5) இந்தப் பொருளை குடும்பமாக சிந்திப்பது நன்மை தரும். ஸ்கூலில் வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பவர்களை எப்படி சமாளிப்பது, கராத்தே போன்ற சண்டைப் பயிற்சிகளை கற்றுக் கொள்ளலாமா, தரமான பொழுதுபோக்கை எப்படி தேர்ந்தெடுப்பது போன்ற விஷயங்களை சிந்திக்க ஏற்ற சந்தர்ப்பம் இது. வன்முறைக் கலவரங்கள் சர்வ சகஜமாகிவிட்டன. உள்நாட்டுப் போராலோ, அரசியல் அல்லது இனக் கலவரத்தாலோ, அல்லது கொள்ளைக் கும்பல் சண்டைகளாலோ பாதிக்கப்படாத நாடே இல்லை. எனவே, உங்களுடைய குடும்பமும் சண்டையிடும் கட்சிகளால் சூழப்பட்டு இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கிறிஸ்தவ நடுநிலைமையை காத்துக் கொள்வதைப் பற்றி நீங்கள் குடும்பமாக சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.—ஏசாயா 2:2-4; யோவான் 17:16.
15. பிள்ளைகளுக்கு திருமணம், பாலுறவு சம்பந்தமான போதனைகள் கொடுப்பது எப்படி?
15 பிள்ளைகள் வளர வளர, அவர்களுடைய வயதுக்கேற்ப பாலுறவு பற்றியும் திருமணம் பற்றியும் போதனைகள் தேவை. சில கலாச்சாரங்களில், பெற்றோர் பிள்ளைகளோடு இது குறித்து பேசுவதே கிடையாது. பாலுறவு பற்றி ஒன்றுமே தெரியாத பிள்ளைகள், மற்ற இளைஞர்களிடம் இருந்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பெறுவர். அதன் விளைவோ, இன்னும் நாசகரமானது. இந்த விஷயத்தைப் பற்றி யெகோவாவின் புத்திமதி ஒளிவுமறைவில்லாதது. சாதுரியமானதும்கூட. யெகோவாவின் இந்த முன்மாதிரியை பின்பற்றுவது மேம்பட்டதல்லவா? நம் பிள்ளைகள் சுயமரியாதையை காத்துக் கொள்ளவும் எதிர்பாலாரை மரியாதையாக நடத்தவும் தெய்வீக புத்திமதி அவர்களுக்கு உதவும். (நீதிமொழிகள் 5:18-20; கொலோசெயர் 3:5; 1 தெசலோனிக்கேயர் 4:3-8) ஏற்கெனவே, இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் பிள்ளைகளோடு பேசியிருந்தாலும், மறுபடியும் அதைப் பற்றி பேச தயங்காதீர்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப, திரும்ப திரும்ப சொல்லுவது அவசியம்.
16. (அ) வெவ்வேறு குடும்பங்களில், குடும்ப படிப்பு எப்போது நடத்தப்படுகிறது? (ஆ) குடும்ப படிப்பை தவறாமல் நடத்துவதில் உள்ள தடைகளை நீங்கள் எப்படி சமாளித்திருக்கிறீர்கள்?
16 குடும்ப படிப்பை எப்போது நடத்தலாம்? உலகம் முழுவதிலும் இருக்கும் பெத்தேல் குடும்பங்களைப் போலவே, அநேக குடும்பங்கள் தங்கள் குடும்ப படிப்பை திங்கள் மாலையில் நடத்துகின்றனர். மற்றவர்கள் மற்ற கிழமைகளில் நடத்துகின்றனர். அர்ஜென்டினாவில் ஒரு குடும்பத்தினர், தங்களுடைய குடும்ப படிப்பிற்காக தவறாமல் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருக்கின்றனர். 9 குழந்தைகள் உட்பட, 11 பேர் அடங்கிய குடும்பம் அது. பலவிதமான வேலை காரணமாக வேறே எந்த நேரமும் அவர்களுக்கு ஒத்து வரவில்லை. இது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், குடும்ப படிப்பின் முக்கியத்துவம் பிள்ளைகளின் மனதிலும் இருதயத்திலும் பதிய இது உதவியது. பிலிப்பீன்ஸில் ஒரு மூப்பர், குடும்ப படிப்பை தவறாமல் நடத்தி வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள். பிள்ளைகள் சத்தியத்தை தங்களுடையதாக்கிக் கொள்வதற்காக, பெற்றோர் வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொரு பிள்ளையோடும் தனித்தனியாக பைபிள் படிப்பு நடத்தினார்கள். ஐக்கிய மாகாணங்களில், ஒரு சகோதரி தன்னுடைய பிள்ளைகளை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிடுவதற்காக அவர்களோடு நடந்து செல்கிறார். அவருடைய கணவர் ஒரு சாட்சியல்ல. பஸ்ஸுக்காக காத்திருக்கும் அந்த பத்து நிமிடங்களில், பொருத்தமான படிப்புக் கட்டுரையை ஒன்றாக சேர்ந்து படித்து, கலந்து பேசுகின்றனர். பிள்ளைகள் பஸ்ஸில் ஏறுவதற்கு முன், தாய் ஒரு சின்ன ஜெபம் செய்து அனுப்புகிறார். காங்கோ குடியரசு நாட்டில், சத்தியத்தில் இல்லாத கணவர் குடும்பத்தை கைவிட்டுவிட்டார். படிப்பறிவு அவ்வளவாய் இல்லாத அந்த தாய், குடும்ப படிப்பை நடத்த வெகு பிரயாசப்பட வேண்டியதாயிற்று. அவருடைய பெரிய மகன் வாரத்திற்கு ஒரு முறை வந்து தன் தாய்க்கும் தம்பிமாருக்கும் சேர்த்து குடும்ப படிப்பை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்காக, கடும் முயற்சி எடுத்து தயாரிப்பதன் மூலம் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாய் அவர் இருக்கிறார். குடும்ப படிப்பை தவறாமல் நடத்துவதில் சிக்கலான சூழ்நிலை எதையாவது எதிர்ப்படுகிறீர்களா? சோர்ந்து விடாதீர்கள். குடும்ப படிப்பை தவறாமல் நடத்துவதற்கான உங்கள் முயற்சியை யெகோவா ஆசீர்வதிக்க ஊக்கமாக ஜெபியுங்கள்.—மாற்கு 11:23, 24.
விடாமுயற்சியினால் விளையும் நன்மைகள்
17. (அ) குடும்ப படிப்பை தவறாமல் நடத்த எது தேவை? (ஆ) யெகோவாவின் வழிகளை குடும்பத்திற்கு தவறாமல் போதிப்பதன் அவசியத்தை எந்த அனுபவம் விளக்குகிறது?
17 திட்டமிடுதல் தேவை. விடாமுயற்சியும் அவசியம். ஆனால், தவறாமல் குடும்ப படிப்பு படிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எதுவுமே வீண்போகாது. நன்மைகளையே அறுவடை செய்வீர்கள். (நீதிமொழிகள் 22.6; 3 யோவான் 4) ஜெர்மனியில், ஃப்ரான்ட்ஸும் ஹில்டாவும் 11 பிள்ளைகளை வளர்த்தனர். பல வருடங்களுக்குப் பிறகு, அவர்களுடைய மகள் மாக்டாலேனா சொன்னாள்: “ஆவிக்குரிய போதனை இல்லாத நாளே இல்லை. இன்றும் நான் மிக முக்கியமானதாக கருதுவது அதைத்தான்.” ஹிட்லர் ஆட்சியில் தேசபக்தி உச்ச அளவில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சமயம் அது. வரப்போகிற சோதனைகளை எதிர்ப்பட தன்னுடைய குடும்பத்தை ஆயத்தப்படுத்த மாக்டாலேனாவின் அப்பா பைபிளை உபயோகித்து குடும்ப படிப்பை நடத்தினார். கொஞ்ச நாட்களில் குடும்பத்தின் இளைய அங்கத்தினர்கள் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர். குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களும் கைது செய்யப்பட்டு, சிறைகளிலும் கான்ஸன்ட்ரேஷன் முகாம்களிலும் அடைக்கப்பட்டனர். அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் எல்லாருமே விசுவாசத்தில் உறுதியாக இருந்தனர். கொடுமையான துன்புறுத்துதலின்போது மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வந்த வருடங்களிலும் தங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொண்டனர்.
18. தனிமரமான தாயோ, தகப்பனோ எடுக்கும் முயற்சிகளுக்கு எப்படி பலன் கிடைத்திருக்கிறது?
18 தனித்து விடப்பட்ட அநேக தாய், தகப்பன்மாரும் விசுவாசத்தில் இல்லாத துணையை உடையவர்களும் இதைப்போன்றே தங்கள் பிள்ளைகளுக்கு தவறாமல் பைபிள் போதனையை கற்றுக்கொடுத்தனர். இந்தியாவைச் சேர்ந்த விதவைத் தாய் ஒருவர், தன்னுடைய இரண்டு பிள்ளைகளிலும் யெகோவாவுக்கான அன்பை வளர்க்க கடுமையாக உழைத்தார். இருந்தபோதிலும், அவருடைய மகன் யெகோவாவின் மக்களோடு கூட்டுறவு கொள்வதை நிறுத்தியபோது, அவர் மனமுடைந்து போனார். மகனுக்கு தான் கொடுத்த பயிற்சியில் ஏதும் குறை இருந்தால் தன்னை மன்னிக்கும்படி யெகோவாவிடம் கெஞ்சி மன்றாடினார். ஆனால், மகன் தான் கற்ற எல்லாவற்றையும் அடியோடு மறந்து விடவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு, மறுபடியும் யெகோவாவின் மக்களோடு கூட்டுறவு கொண்டு, ஆவிக்குரியவிதத்தில் வளர்ச்சி அடைந்தார். சபை மூப்பராகவும் ஆனார். இப்போது, அவரும் அவருடைய மனைவியும் முழுநேர ஊழியர்களாக சேவை செய்கின்றனர். குடும்பத்திற்கு பைபிள் போதனையை தவறாமல் கொடுக்க வேண்டுமென்பதே யெகோவாவும் அவருடைய அமைப்பும் கொடுக்கும் புத்திமதி. இந்தப் புத்திமதியை ஏற்று நடந்த பெற்றோர்கள் எவ்வளவு நன்றி உடையவர்களாய் இருக்கின்றனர்! இந்த புத்திமதியை உங்கள் குடும்பத்தில் நீங்கள் பொருத்துகிறீர்களா?
உங்களால் விளக்க முடியுமா?
◻ தவறாமல் குடும்ப பைபிள் படிப்பு படிப்பது ஏன் அவசியம்?
◻ ஒவ்வொரு குடும்ப படிப்பின்போதும், நாம் வைக்க வேண்டிய குறிக்கோள்கள் யாவை?
◻ போதிப்பதற்கு என்ன உபகரணங்கள் நம் கைவசம் இருக்கின்றன?
◻ குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு குடும்ப படிப்பை மாற்றி அமைத்துக் கொள்வது எவ்வாறு?
[பக்கம் 15-ன் படம்]
தெளிவான குறிக்கோள்கள் இருப்பது குடும்ப படிப்பின் மதிப்பை உயர்த்தும்