அனைவரும் விரும்புவது விடுதலை
“சுதந்திரமாக மண்ணில் பிறந்த மனிதன் இன்று இருப்பதோ சிறைக்குள்” என 1762-ல் பிரெஞ்சு தத்துவஞானி ஷான்ஷாக் ரௌசயு எழுதினார். சுதந்திர பறவையாக பிறந்தோம் என்று நினைத்தாலே இனிக்கிறதல்லவா! ஆனால் ரௌசயு கூறியபடியே, சரித்திரம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் சுதந்திரத்தை துளிகூட ருசி பார்த்ததில்லை. மாறாக, வாழ்நாள் முழுவதுமே அவர்களுக்கு ‘சிறைவாசம்தான்.’ அதாவது தங்கள் வாழ்க்கையிலிருந்து நிலையான சந்தோஷத்தையும் திருப்தியையும் பறித்துப்போடும் ஓர் அமைப்பிற்கு அவர்கள் அடிமைகள்.
“மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகி”றான் என்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இன்றும் கோடிக்கணக்கானோர் கண்டிருக்கின்றனர். (பிரசங்கி 8:9) அதிகார வெறிபிடித்த ஆண்களும் பெண்களும் அதிகார வேட்டையில் இறங்குகையில் மற்றவர்களின் சுதந்திரத்தை மிதித்துப் போடுவதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படுவதே இல்லை. “தறிகெட்ட கொலைக்கார கும்பல் 21 பேரை கொன்று குவிக்கிறது” என ஓர் அறிக்கை கூறுகிறது. பாதுகாப்பு படையினர் செய்த “படுகொலை” பற்றி மற்றொரு அறிக்கை கூறியது. ‘எதிர்க்க முடியாத, நிராதரவாய் நின்ற பெண்களையும் குழந்தைகளையும் முதியோரையும் அவர்கள் கொன்றனர். அவர்களுடைய கழுத்தை அறுத்து, கைதிகளாயிருந்த பொதுமக்களை தலையில் சுட்டு, கிராமங்களை தீக்கிரையாக்கி, கண்மூடித்தனமாக குண்டு வைத்து தகர்க்கும் ஒரு போக்கை மேற்கொண்டனர்.’
நிலைமை இப்படியிருந்தால் அடக்குமுறையிலிருந்து விடுதலை பெறவும் அதற்காக போராடவும் யார்தான் விரும்பமாட்டார்கள்! ஆனால் ஒரு மனிதன் தன் சுதந்திரத்திற்காக போராடுகையில் மற்றொரு மனிதனுடைய உரிமைகளிலும் சுதந்திரத்திலும் தலையிடுகிறான் என்பதே வருத்தகரமான உண்மை. இதில் அப்பாவியான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் தவிர்க்க முடியாத வண்ணம் பலியாகின்றனர். ஒப்பற்ற, நியாயமான நோக்கத்திற்காகவே அவர்கள் வீர மரணம் எய்தினர் என்று சொல்லி அவர்களுடைய மரணத்திற்கு “நியாயம் கற்பிக்கிறார்கள்.” உதாரணமாக, கடந்த வருடம் அயர்லாந்திலுள்ள சிறிய பட்டணமாகிய ஓமாவில் “விடுதலை போராளிகள்” கார் ஒன்றில் வைத்த குண்டு வெடித்ததால் அருகில் நின்ற அப்பாவிகளான 29 பேர் இறந்தனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.
இன்றும் “சிறைக்குள்”
சண்டை முடிந்தபிறகு நிலை என்ன? “விடுதலை போராளிகள்” சண்டையில் வெற்றியடையும்போது ஓரளவு சுதந்திரத்தை ருசிப்பது உண்மையே. ஆனால் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றுவிட்டார்களா? சுதந்திர நாடுகள் என அழைக்கப்படும், விடுதலையை பேரளவாய் அனுபவிக்கும் நாடுகளிலும்கூட ஏழ்மை, அபூரணம், வியாதி, மரணம் போன்ற கொடூரமான அரக்கர்களிடம் மக்கள் ‘சிறைப்பட்டுத்தான்’ கிடக்கிறார்கள் அல்லவா? இப்படிப்பட்டவை ஒருவரை தொடர்ந்து அடிமைப்படுத்தும்வரை அவருக்கு உண்மையில் விடுதலை ஏது?
நேற்று வாழ்க்கை எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்றும் இருக்கிறது. பூர்வீக பைபிள் எழுத்தாளரான மோசே இதை மிகவும் துல்லியமாக விவரிக்கிறார். நாம் 70 அல்லது 80 வருடங்கள் வாழலாம், ஆனால், “அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே” என்றார். (சங்கீதம் 90:10) இது எப்போதாவது மாறுமா? நாம் அனைவரும், முழுமையான திருப்தி தரும் வாழ்க்கையை வாழவே முடியாதா? இன்று அநேகர் எதிர்ப்படும் கஷ்டங்களும் துன்பங்களும் இல்லாத வாழ்க்கை என்றாவது கிடைக்குமா?
கிடைக்கும் என்றே பைபிள் பதிலளிக்கிறது! “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப்” பற்றி அது கூறுகிறது. (ரோமர் 8:20) ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் முதல் நூற்றாண்டில் எழுதிய கடிதத்தில் அந்த விடுதலையைப் பற்றி கூறுகிறார். அதை நாம் கூர்ந்து ஆராய்வோமாக. நாம் ஒவ்வொருவரும் உண்மையான, நிலையான, “மகிமையான சுயாதீனத்தை” எப்படி பெறலாம் என பவுல் அதில் தெள்ளத்தெளிவாக விளக்குகிறார்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Beacon Lights of History, Vol. XIII என்ற புத்தகத்திலிருந்து