உங்கள் போதகத்திற்கு தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்
“உனக்கும் உன் போதகத்திற்கும் தொடர்ந்து கவனம் செலுத்து. இவற்றில் நிலைத்திரு; இப்படி செய்வாயானால் உன்னையும் உன் போதகத்தை கேட்பவர்களையும் இரட்சித்துக் கொள்ளுவாய்.”—1 தீமோத்தேயு 4:16, NW.
1, 2. வைராக்கியமுள்ள போதகர்கள் இன்று ஏன் அவசரமாக தேவைப்படுகின்றனர்?
“புறப்பட்டுப்போய், சகல தேசத்தாரையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா காரியங்களையும் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்கு போதியுங்கள்.” (மத்தேயு 28:19, 20, NW) இயேசு கிறிஸ்து இந்தக் கட்டளையை கொடுத்திருப்பதனால் கிறிஸ்தவர்கள் அனைவரும் போதகர்களாய் இருக்க பெருமுயற்சி செய்யவேண்டும். காலம் கடந்துசெல்வதற்கு முன், நேர்மை இருதயமுள்ள மக்கள் கடவுளைப் பற்றிய அறிவைப் பெறவேண்டும்; ஆகவே அவர்களுக்கு உதவ வைராக்கியமுள்ள போதகர்கள் தேவை. (ரோமர் 13:11) அதனால்தான் பவுல் அப்போஸ்தலன் இவ்வாறு துரிதப்படுத்தினார்: “ஏற்ற காலத்திலும் கடினமான காலத்திலும் வார்த்தையை அவசரமாக பிரசங்கி.” (2 தீமோத்தேயு 4:2, NW) இது, சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்களுக்கு போதிப்பதை அவசியப்படுத்துகிறது. உண்மையை சொன்னால், போதிக்க வேண்டிய நம்முடைய கடமையை நிறைவேற்ற கடவுளுடைய செய்தியை வெறுமனே அறிவிப்பது மட்டுமே போதாது. அக்கறையுள்ளோர் சீஷர்களாக வேண்டுமென்றால் திறம்பட்ட போதிப்பும் அவசியம்.
2 நாம் “கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்க”ளில் வாழ்ந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) உலகப்பிரகாரமான தத்துவங்களும் பொய் போதகங்களும் மக்கள் மனதை குழப்பியிருக்கின்றன. அநேகர் “புத்தியில் அந்தகாரப்பட்டு . . . உணர்வில்லாதவர்களாய்” இருக்கின்றனர். (எபேசியர் 4:18, 19) சிலர் உணர்ச்சிப்பூர்வமாய் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையில் மக்கள், “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருக்கின்றனர். (மத்தேயு 9:36) ஆனாலும், போதிக்கும் கலையை உபயோகித்து, தேவையான மாற்றங்களைச் செய்ய உண்மை மனமுள்ள மக்களுக்கு நாம் உதவ முடியும்.
சபைக்குள் போதகர்கள்
3. (அ) போதிக்கும்படியான இயேசுவின் கட்டளையில் எதுவும் உட்பட்டிருக்கிறது? (ஆ) சபைக்குள் போதிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு யாருடையது?
3 வீட்டு பைபிள் படிப்பின் மூலம் லட்சக்கணக்கானோர் தனிப்பட்ட போதனையைப் பெறுகின்றனர். ஆனாலும், புதியவர்கள் தங்களுடைய முழுக்காட்டுதலுக்கு பிறகு, “அஸ்திவாரத்திலே வேரூன்றி நிலைத்திருக்க” அவர்களுக்கு தொடர்ந்து உதவி தேவை. (எபேசியர் 3:17, NW) ஆகவே, மத்தேயு 28:19, 20-ல் காணப்படும் இயேசுவின் கட்டளையை நாம் நிறைவேற்றி புதியவர்களை யெகோவாவின் அமைப்பிற்குள் வழிநடத்தும்போது சபைக்குள் செய்யப்படும் போதனையாலும் அவர்கள் பயனடைகின்றனர். எபேசியர் 4:11-13 (NW) சொல்கிறபடி, “ஊழிய வேலை செய்ய பரிசுத்தவான்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை வளர்ச்சியடைவதற்கும் . . . மேய்ப்பர்களாகவும் போதகர்களாகவும்” சேவிக்க சில ஆண்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய போதிக்கும் கலை சில சமயங்களில், “எல்லா நீடிய பொறுமையோடும் . . . கண்டித்து, கடிந்துகொண்டு, அறிவுரை” கூறவேண்டிய அவசியத்தையும் உட்படுத்துகிறது. (2 தீமோத்தேயு 4:2, NW) போதகர்களின் வேலை அவ்வளவு முக்கியமானது; ஆகவேதான் கொரிந்தியர்களுக்கு எழுதுகையில், அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் அடுத்தபடியாக போதகர்களைப் பற்றி பவுல் குறிப்பிடுகிறார்.—1 கொரிந்தியர் 12:28.
4. எபிரெயர் 10:24, 25-ல் காணப்படும் பவுலின் அறிவுரைக்கு கீழ்ப்படிய போதிக்கும் கலை நமக்கு எப்படி உதவும்?
4 கிறிஸ்தவர்கள் அனைவரும் மூப்பர்களாகவோ கண்காணிகளாகவோ சேவிப்பதில்லை என்பது உண்மையே. இருந்தாலும், ஒருவரையொருவர் “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும்” ஏவும்படி நம் எல்லாருக்குமே உற்சாகம் அளிக்கப்படுகிறது. (எபிரெயர் 10:24, 25) கூட்டங்களில் அவ்வாறு செய்வதென்றால், அதற்காக நன்கு தயாரித்து மற்றவர்களை கட்டியெழுப்பி உற்சாகப்படுத்தும் இருதயப்பூர்வமான பதில்களைக் கொடுப்பதன் மூலமே. அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகள் புதியவர்களோடு வெளி ஊழியத்தில் பங்கு கொள்ளும்போது தங்கள் அறிவையும் அனுபவத்தையும் அவர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலமும் ‘நற்கிரியைகள் செய்ய ஏவலாம்.’ அப்படிப்பட்ட சமயங்களிலும் மற்ற சமயங்களிலும்கூட மதிப்புமிக்க போதகத்தை கொடுக்கலாம். உதாரணமாக முதிர்ச்சியுள்ள பெண்களிடம், “நற்காரியங்களைப் போதிக்கிறவர்க”ளாயிருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது.—தீத்து 2:5.
நம்பும்படி உந்துவிக்கப்படுதல்
5, 6. (அ) உண்மை கிறிஸ்தவம் பொய் வணக்கத்திலிருந்து எந்த விதத்தில் வித்தியாசப்படுகிறது? (ஆ) புதியவர்கள் ஞானமான தீர்மானங்களை செய்ய மூப்பர்கள் எவ்வாறு உதவுகின்றனர்?
5 மெய் கிறிஸ்தவம் பொய் மதங்களிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது. எப்படியென்றால், பொய் மத அமைப்புகளில் பெரும்பாலானவை தங்கள் அங்கத்தினர்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்தவே முயலுகின்றன. இயேசு பூமியில் இருந்தபோது வாழ்ந்த மத தலைவர்கள், ஒடுக்குகின்ற மனித பாரம்பரியங்களினால் மக்களுடைய முழு வாழ்க்கையையும் ஆட்டிப்படைக்க விரும்பினர். (லூக்கா 11:46) கிறிஸ்தவமண்டலத்தின் குருவர்க்கத்தினரும் அதே போலத்தான் செய்திருக்கின்றனர்.
6 இதற்கு மாறாக, உண்மை வணக்கமானது நம்முடைய “நியாயத்தன்மையோடு” நாம் செய்யும் “பரிசுத்த சேவை” ஆகும். (ரோமர் 12:1, NW) யெகோவாவின் ஊழியர்கள் ‘நம்பிக்கை வைக்கும்படி உந்துவிக்கப்பட்டிருக்கிறார்கள்.’ (2 தீமோத்தேயு 3:14, NW) சபை சுமூகமாக செயல்படுவதற்காக முன்னின்று வழிநடத்துபவர்கள் சில சமயங்களில் சில அறிவுரைகளை அல்லது வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டியிருக்கலாம். ஆனாலும், உடன் கிறிஸ்தவர்கள் சார்பாக தீர்மானம் செய்வதற்கு பதிலாக, “நன்மை தீமையின்னதென்று . . . பகுத்தறிய” மூப்பர்கள் அவர்களுக்கு போதிப்பார்கள். (எபிரெயர் 5:14) முக்கியமாக ‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளாலும் நற்போதகத்தாலும்’ சபையை போஷிப்பதன் மூலம் மூப்பர்கள் இதை செய்கின்றனர்.—1 தீமோத்தேயு 4:6.
உங்கள் போதகத்திற்கு கவனம் செலுத்துதல்
7, 8. (அ) குறைவான திறமைகளுள்ள ஆட்கள் எவ்வாறு போதகர்களாக சேவிக்க முடிகிறது? (ஆ) திறம்பட்ட போதகராவதற்கு தனிப்பட்ட முயற்சி அவசியம் என்பதை எது காண்பிக்கிறது?
7 இப்பொழுது, போதிப்பதற்கான நம் பொதுவான நியமிப்பிற்கு கவனம் செலுத்துவோம். இந்த வேலையில் பங்குகொள்வதற்கு ஏதாவது விசேஷமான பயிற்சி, கல்வி அல்லது திறமைகள் தேவையா? அவசியமில்லை. உலகமுழுவதும் நிகழும் இந்த போதிப்பு வேலையில் பங்குகொள்ளும் பெரும்பாலானோர் குறைவான திறமைகளுள்ள மிகவும் சாதாரண ஆட்களே. (1 கொரிந்தியர் 1:26-29) பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை [ஊழியத்தை] மண்பாண்டங்களில் [அபூரண சரீரங்களில்] பெற்றிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 4:7) இந்த உலகளாவிய ராஜ்ய பிரசங்க வேலையில் நாம் அனுபவிக்கும் மகத்தான வெற்றி, யெகோவாவுடைய ஆவியின் வல்லமையை பறைசாற்றும் ஓர் அத்தாட்சியே அல்லவா?
8 இருந்தாலும், “வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும்” ஆவதற்கு கடினமான, தனிப்பட்ட முயற்சி அவசியம். (2 தீமோத்தேயு 2:15) பவுல் தீமோத்தேயுவை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “உனக்கும் உன் போதகத்திற்கும் தொடர்ந்து கவனம் செலுத்து. இவற்றில் நிலைத்திரு; இப்படி செய்வாயானால் உன்னையும் உன் போதகத்தை கேட்பவர்களையும் இரட்சித்துக் கொள்ளுவாய்.” (1 தீமோத்தேயு 4:16, NW) சபைக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி ஒருவர் தன் போதகத்திற்கு எவ்வாறு கவனம் செலுத்த முடியும்? அவ்வாறு செய்ய வேண்டுமென்றால் சில திறமைகளை அல்லது போதிக்கும் முறைகளை கட்டாயம் கரைத்துக்குடிக்க வேண்டும் என்று அர்த்தமா?
9. இயல்பான திறமைகளைவிட எது அதிக முக்கியம்?
9 இயேசுவின் மலைப்பிரசங்கம் மிகவும் பிரசித்திப் பெற்றது; அவர் பல்வேறுபட்ட போதனா முறைகளில் கைத்தேர்ந்தவர் என்பது அப்போது தெளிவானது. ஏனென்றால் அவர் பேசி முடித்த பிறகு, “ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத்தேயு 7:29) இயேசுவைப் போல அவ்வளவு அருமையாக நம்மில் ஒருவருமே போதிக்க முடியாது என்பதென்னவோ உண்மைதான். இருந்தாலும், திறம்பட்ட போதகர்களாக இருப்பதற்கு நாம் ஆற்றல்மிக்க பேச்சாளர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. யோபு 12:7 சொல்கிறபடி, ‘மிருகங்களும் பறவைகளும்’ கூட மௌன மொழியில் போதிக்கின்றனவே! நமக்கிருக்கும் இயல்பான திறமைகள், ஆற்றல்களோடுகூட நாம் “எப்படிப்பட்ட ஆட்களாக” இருக்கிறோம் என்பதுதான் அதிக முக்கியம். அதாவது, நம்மிடம் எப்படிப்பட்ட குணங்கள் இருக்கின்றன, மற்றவர்கள் பின்பற்றத்தக்க என்ன ஆவிக்குரிய பழக்கங்களை நாம் வளர்த்திருக்கிறோம் போன்றவையே.—2 பேதுரு 3:11, NW; லூக்கா 6:40.
கடவுளுடைய வார்த்தையின் மாணாக்கர்கள்
10. கடவுளுடைய வார்த்தையின் மாணாக்கராக இயேசு எப்படி ஓர் அருமையான முன்மாதிரி வைத்தார்?
10 வேதப்பூர்வ சத்தியங்களை திறம்பட போதிக்கும் ஒருவர் கடவுளுடைய வார்த்தையின் மாணாக்கராக இருக்க வேண்டும். (ரோமர் 2:21) இந்த விஷயத்தில் இயேசு கிறிஸ்து மிகவும் அருமையான முன்மாதிரி. இயேசு தம்முடைய ஊழியத்தின்போது, எபிரெய வேதாகம புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டினார் அல்லது அங்கு சொல்லப்பட்டிருந்த கருத்துகளைக் குறிப்பிட்டார். ஒன்றல்ல இரண்டல்ல, எபிரெய வேதாகம புத்தகங்களில் ஏறக்குறைய பாதியிலிருந்து அவ்வாறு குறிப்பிட்டார். a அவர் கடவுளுடைய வார்த்தையை நன்றாக அறிந்திருந்தார் என்பது அவருடைய 12-வது வயதில் தெளிவானது. அப்போது அவர், “தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும்” செய்தார். (லூக்கா 2:46) இயேசு வளர்ந்தபிறகு, கடவுளுடைய வார்த்தை வாசிக்கப்பட்ட தேவாலயத்திற்கு செல்வது அவருடைய வழக்கமாயிருந்தது.—லூக்கா 4:16.
11. ஒரு போதகர் என்ன ஒழுங்கான படிப்பு பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
11 நீங்கள் கடவுளுடைய வார்த்தையை ஆர்வமாக வாசிக்கிறவரா? நீங்கள் அதில் தோண்டி எடுக்கும்போதுதான், ‘கர்த்தருக்கு பயப்படுதல் இன்னதென்று உணர்ந்து, தேவனை அறியும் அறிவை கண்டடைவீர்கள்.’ (நீதிமொழிகள் 2:4, 5) ஆகவே ஒழுங்காக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் கடவுளுடைய வார்த்தையில் ஒரு பகுதியை வாசிக்க முயலுங்கள். (சங்கீதம் 1:2) ஒவ்வொரு புதிய காவற்கோபுர, விழித்தெழு! பிரதிகள் வந்தவுடன் அதை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சபை கூட்டங்களில் முழு கவனம் செலுத்துங்கள். கவனமாக ஆராய்ச்சி செய்ய கற்றுக்கொள்ளுங்கள். ‘எல்லாவற்றையும் நுட்பமாய் கண்டுபிடிக்க’ கற்றுக்கொண்டால் போதிக்கும்போது மிகைப்படுத்துவதை அல்லது தவறுகள் செய்வதை நீங்கள் தவிர்க்கலாம்.—லூக்கா 1:3, NW.
மாணாக்கரிடம் அன்பும் மரியாதையும்
12. இயேசு தம் சீஷர்களைப் பற்றி என்ன மனநிலை வைத்திருந்தார்?
12 உங்கள் மாணாக்கரைப் பற்றி சரியான மனநிலை வைத்திருப்பது மற்றொரு முக்கிய பண்பாகும். பரிசேயர்கள், இயேசுவுக்கு செவிகொடுத்தவர்களை துச்சமாக நினைத்தனர். “வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்று கூறினர். (யோவான் 7:49) ஆனால் இயேசு தம் சீஷர்கள் மீது ஆழ்ந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்றார். (யோவான் 15:15) இயேசுவின் சீஷர்கள் தங்கள் போதிப்பு வேலையை எப்படி செய்யவேண்டும் என்பதை இது காண்பிக்கிறது.
13. பவுல் தன் மாணாக்கரைப் பற்றி எவ்வாறு உணர்ந்தார்?
13 உதாரணமாக, பவுல் தன் மாணாக்கரோடு அன்பற்ற, வியாபார ரீதியான உறவை வைத்திருக்கவில்லை. அவர் கொரிந்தியர்களிடம் இவ்வாறு கூறினார்: “கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன் [“உங்களுக்கு தகப்பன் ஆனேன்,” NW].” (1 கொரிந்தியர் 4:15) தான் போதித்தவர்களுக்கு அறிவுரை கூறும்போது சில சமயங்களில் அவர் கண்ணீர் வடித்தார்! (அப்போஸ்தலர் 20:31) அளவுக்கதிகமான பொறுமையையும் தயவையும் அவர் காண்பித்தார். அதனால்தான் அவரால் தெசலோனிக்கேயரிடம் இவ்வாறு சொல்ல முடிந்தது: ‘பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்.’—1 தெசலோனிக்கேயர் 2:7.
14. நம் பைபிள் மாணாக்கர்மீது தனிப்பட்ட அக்கறை வைத்திருப்பது ஏன் அவ்வளவு முக்கியம்? விளக்குங்கள்.
14 நீங்கள் இயேசுவையும் பவுலையும் பின்பற்றுகிறீர்களா? நம்மிடம் இயல்பான திறமைகள் குறைவுபட்டால்கூட பரவாயில்லை, நம் மாணாக்கரிடம் உண்மையான அன்பு இருந்தால் அதுவே போதுமானது. நாம் அவர்கள் மீது உண்மையான, தனிப்பட்ட அன்பு வைத்திருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிகிறதா? அவர்களை அறிந்துகொள்ள நாம் நேரம் எடுத்துக்கொள்கிறோமா? பைபிள் மாணாக்கர் ஒருவர் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதில் கஷ்டங்களை எதிர்ப்பட்டார். அவருக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்த கிறிஸ்தவ பெண் அவரிடம், “உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்குதா என்ன?” என்று தயவாக கேட்டார். அந்தப் பெண்மணி மனந்திறந்து பேச ஆரம்பித்து, தனக்கிருந்த அநேக கவலைகளையும் பிரச்சினைகளையும் கொட்டித் தீர்த்தார். அந்த அன்பான உரையாடலுக்கு பிறகு அந்தப் பெண்மணியின் வாழ்க்கையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைக் காணவேண்டுமே! அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வேதப்பூர்வ கருத்துகளும், ஆறுதலும் உற்சாகமும் அளிக்கும் வார்த்தைகளும் பொருத்தமானவையே. (ரோமர் 15:4) இருந்தாலும் ஓர் எச்சரிக்கை: ஒரு பைபிள் மாணாக்கர் கிடுகிடுவென்று ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யலாம்; ஆனாலும் சில கிறிஸ்தவமற்ற பழக்கங்கள் இன்னும் அவரிடம் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். ஆகவே அந்த நபரோடு அளவுக்கதிகமாக ஒட்டி உறவாடாமல் இருப்பதே ஞானமானது. கிறிஸ்தவ எல்லைக் கோடுகளை கவனத்தில் வைப்பது நல்லது.—1 கொரிந்தியர் 15:33.
15. நம்முடைய பைபிள் மாணாக்கர்களுக்கு நாம் எப்படி மரியாதை காண்பிக்கலாம்?
15 நம் மாணாக்கர் மீது மரியாதை வைத்திருப்பது, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கட்டுப்படுத்த முயலாமல் இருப்பதையும் உட்படுத்தும். (1 தெசலோனிக்கேயர் 4:12) உதாரணமாக, திருமணமாகாமல் ஒரு ஆணோடு சேர்ந்து வாழும் ஒரு பெண் நம்மோடு பைபிளைப் படிக்கலாம். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள்கூட பிறந்திருக்கலாம். இப்பொழுதோ கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றபின் தன் வாழ்க்கையை யெகோவாவின் தராதரங்களுக்கு இசைவாக கொண்டுவர அந்தப் பெண் விரும்பலாம். (எபிரெயர் 13:4) அந்த மனிதனை திருமணம் செய்துகொள்வதா அல்லது பிரிந்துவிடுவதா என்ற கேள்வி எழும்பலாம். ஆவிக்குரிய காரியங்களுக்கு மிகவும் குறைவான அல்லது அக்கறையே இல்லாத ஒரு ஆளை திருமணம் செய்துகொள்வது அவருடைய எதிர்கால வளர்ச்சியை தடைசெய்யும் என நாம் நினைக்கலாம். மறுபட்சத்தில், அவருடைய பிள்ளைகளின் நன்மையைக் கருதி அப்பெண் அந்த மனிதனை திருமணம் செய்துகொள்வதே நல்லது எனவும் நாம் யோசிக்கலாம். எப்படியிருந்தாலும், ஒரு மாணாக்கருடைய வாழ்க்கையில் தலையிட்டு, இப்படிப்பட்ட விஷயங்களில் நம் சொந்த எண்ணங்களை அவர் மீது திணிக்க நினைப்பது மரியாதையற்றது மட்டுமல்ல அன்பற்றதும்கூட. அவர் எடுக்கும் தீர்மானத்தின் பலன் நல்லதாயிருந்தாலும் கெட்டதாயிருந்தாலும், அதை அனுபவிக்கப்போகிறவர் அவர்தான் அல்லவா? ஆகவே, அந்த மாணாக்கர் தன் சொந்த “பகுத்துணரும் திறமை”யை பயன்படுத்தி, என்ன செய்யவேண்டும் என்பதை தானே தீர்மானிக்க அவருக்கு பயிற்சியளிப்பதே மிகவும் சிறந்ததல்லவா?—எபிரெயர் 5:14, NW.
16. மூப்பர்கள், கடவுளுடைய மந்தைக்கு எவ்வாறு அன்பையும் மரியாதையையும் காண்பிக்கலாம்?
16 சபை மூப்பர்கள் மந்தையை அன்போடும் மரியாதையோடும் நடத்தவேண்டியது மிகவும் அவசியம். பிலேமோனுக்கு எழுதுகையில் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.” (பிலேமோன் 9) சில சமயம், சபைகளில் நிலைகுலைய வைக்கும் சூழ்நிலைகள் எழும்பலாம். அப்போது உறுதியாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கலாம். ஆகவேதான், “விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ [தவறு செய்பவர்களை] கண்டிப்பாய்க் கடிந்துகொள்” என்று பவுல் தீத்துவை ஊக்கப்படுத்தினார். (தீத்து 1:14) அப்படியே இருந்தாலும், சபையாரிடம் அன்பற்ற விதத்தில் பேசிவிடாதபடி மூப்பர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும்” என பவுல் எழுதினார்.—2 தீமோத்தேயு 2:24; சங்கீதம் 141:3.
17. மோசே என்ன தவறு செய்தார், அதிலிருந்து மூப்பர்கள் எதைக் கற்றுக்கொள்ளலாம்?
17 கண்காணிகள், தாங்கள் ‘தேவனுடைய மந்தையை’ கவனிக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். (1 பேதுரு 5:2) மனத்தாழ்மையுள்ள மோசேகூட ஒரு சமயம் இதை மறந்துவிட்டார். இஸ்ரவேலர்கள் “அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.” (சங்கீதம் 106:33) இவ்வாறு, அந்த ஜனங்கள் தாமே தவறு செய்திருந்தபோதிலும், மோசே கடவுளுடைய மந்தையை தவறாக நடத்தியதால் கடவுள் அவர்மேல் மிகவும் கோபங்கொண்டார். (எண்ணாகமம் 20:2-12) இன்று மூப்பர்கள் அதைப்போன்ற பிரச்சினைகளை எதிர்ப்படும்போது உட்பார்வையோடும் இரக்கத்தோடும் போதித்து அறிவுறுத்த முயலவேண்டும். திருத்தவே முடியாதவர்களாக அல்ல, கனிவோடும் உதவி தேவைப்படும் நபர்களாகவும் நம் சகோதரர்களை நடத்தினால் அவர்கள் மிகவும் நல்லவிதமாக நடந்துகொள்வார்கள். “மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்” என்று சொன்னபோது பவுலுக்கு இருந்த சாதகமான மனநிலையே மூப்பர்களுக்கும் இருக்க வேண்டும்.—2 தெசலோனிக்கேயர் 3:4.
அவர்களுடைய தேவைகளுக்கு கவனம் செலுத்துங்கள்
18, 19. (அ) குறைவான திறமைகளுள்ள பைபிள் மாணாக்கரின் தேவைகளுக்கு நாம் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும்? (ஆ) குறிப்பான விஷயங்களை புரிந்துகொள்வதில் கஷ்டப்படும் மாணாக்கருக்கு நாம் எப்படி உதவலாம்?
18 ஒரு திறம்பட்ட போதகர், தன் மாணாக்கருடைய திறமைகளுக்கும் குறைபாடுகளுக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக்கொள்ள விரும்புவார். (யோவான் 16:12-ஐ ஒப்பிடுக.) தாலந்துகளைப் பற்றிய இயேசுவின் உவமையில் அந்த எஜமான், “அவனவனுடைய திறமைக்குத்தக்க” சிலாக்கியங்களை கொடுத்தார். (மத்தேயு 25:15) பைபிள் படிப்புகளை நடத்தும்போது நாமும் அதைப்போலவே செய்யலாம். பைபிள் அடிப்படையிலான ஒரு பிரசுரத்தை ஓரளவு குறைவான சமயத்திற்குள் படித்து முடிப்பதே விரும்பத்தக்கது. இருந்தாலும், நன்றாக வாசிக்கும் திறமைகளோ புதிய எண்ணங்களை உடனே கிரகித்துக்கொள்ளும் பக்குவமோ எல்லாருக்கும் இருப்பதில்லை என்பது உண்மையே. ஆகவே, அக்கறை காண்பிக்கும் நபர்கள் வேகமாக படித்து புரிந்துகொள்வதைக் கடினமாக கண்டால் பைபிள் படிப்பின்போது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு எப்போது மாறவேண்டும் என தீர்மானிக்க பகுத்துணர்வு ஒருவருக்கு உதவும். ஒரு வாரத்திற்கு இவ்வளவு படிக்கவேண்டும் என்று அவசரப்படுவதற்கு பதிலாக படிக்கும் காரியங்களின் கருத்தை மாணாக்கர் புரிந்துகொள்ள உதவுவதே அதிக முக்கியம்.—மத்தேயு 13:51.
19 திரித்துவம் அல்லது மத விடுமுறைகள் போன்ற குறிப்பிட்ட விஷயங்களை புரிந்துகொள்ள கடினமாக உணரும் பைபிள் மாணாக்கருக்கும் இதுவே பொருந்தும். பொதுவாக, நம் பைபிள் படிப்புகளின்போது கூடுதலான ஆராய்ச்சி செய்து கூடுதல் விஷயங்களை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், இது மிகவும் முக்கியம் என்று உணர்ந்தால் எப்போதாவது அதைச் செய்யலாம். ஒரு மாணாக்கரின் முன்னேற்றத்தை அனாவசியமாக தடைசெய்யாதபடி கவனமாய் இருப்பது ஞானமானது.
உற்சாகமாய் இருங்கள்!
20. பவுல் தன் போதகத்தில் உற்சாகத்தையும் உறுதியையும் வெளிக்காட்டுவதில் எப்படி முன்மாதிரியாக இருந்தார்?
20 “ஆவியிலே அனலாயிருங்கள்” என்று பவுல் கூறுகிறார். (ரோமர் 12:11) நாம் வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நடத்தினாலும் சரி அல்லது சபை கூட்டத்தில் ஒரு பகுதியை கையாண்டாலும் சரி அதை உற்சாகத்தோடும் வைராக்கியத்தோடும் செய்யவேண்டும். “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது” என பவுல் தெசலோனிக்கேயரிடம் சொன்னார். (1 தெசலோனிக்கேயர் 1:5) ஆகவே, பவுலும் அவருடைய நண்பர்களும் ‘தேவனுடைய சுவிசேஷத்தை கொடுத்ததுமல்லாமல், தங்கள் ஜீவனையும் கொடுத்தார்கள்.’—1 தெசலோனிக்கேயர் 2:8.
21. போதிக்கும் நியமிப்புகளை கையாளுகையில் நாம் எவ்வாறு உற்சாகமான மனநிலையை காட்டலாம்?
21 நாம் சொல்லவிருக்கும் காரியங்களை நம் பைபிள் மாணாக்கர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கிருந்தால் உண்மையான உற்சாகம் கரைபுரண்டோடும். ஆகவே, போதிக்கும் நியமிப்பு எதையும் ஏனோதானோ என்று நினைக்காதிருப்போமாக. வேதபாரகன் எஸ்றா இந்த விஷயத்தில் தன் போதகத்திற்கு கவனம் செலுத்தினார். “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே . . . உபதேசிக்கவும், . . . தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.” (எஸ்றா 7:10) அதைப்போலவே நாமும் முழுமையாக தயாரித்து, அந்தப் பொருளின் முக்கியத்துவத்தைப் பற்றி தியானிக்க வேண்டும். விசுவாசத்தாலும் உறுதியாலும் நம்மை நிரப்பும்படி யெகோவாவிடம் ஜெபிப்போமாக. (லூக்கா 17:5) பைபிள் மாணாக்கர்கள் சத்தியத்தினிடம் ஓர் ஆழமான அன்பை வளர்த்துக்கொள்ள நம் உற்சாகம் அவர்களைத் தூண்டும். இது மட்டுமல்ல, நம் போதகத்திற்கு கவனம் செலுத்துவதில் குறிப்பான போதிக்கும் முறைகளை உபயோகிப்பதும் உட்பட்டிருக்கலாம். இதில் சிலவற்றைப் பற்றி எமது அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி வெளியிட்ட வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் தொகுதி 2, பக்கம் 1071-ஐ காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ திறம்பட்ட கிறிஸ்தவ போதகர்கள் இன்று ஏன் தேவைப்படுகின்றனர்?
◻ என்ன ஒழுங்கான படிப்பு பழக்கங்களை நாம் வளர்த்துக்கொள்ளலாம்?
◻ நம் மாணாக்கர்களிடம் அன்பும் மரியாதையும் காண்பிப்பது ஏன் மிகவும் முக்கியம்?
◻ நம்முடைய பைபிள் மாணாக்கர்களின் தேவைகளுக்கு நாம் எவ்வாறு கவனம் செலுத்தலாம்?
◻ மற்றவர்களுக்கு போதிக்கையில் உற்சாகமும் உறுதியும் ஏன் மிக முக்கியம்?
[பக்கம் 10-ன் படம்]
நல்ல போதகர்கள் கடவுளுடைய வார்த்தையின் மாணாக்கர்கள்
[பக்கம் 13-ன் படம்]
பைபிள் மாணாக்கர்களிடம் தனிப்பட்ட அக்கறை காண்பியுங்கள்