கிறிஸ்துவின் மீட்கும்பொருள் இரட்சிப்புக்கான கடவுளுடைய ஏற்பாடு
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”—யோவான் 3:16.
1, 2. மானிட இனத்திற்கு ஏற்பட்டிருக்கும் கதியை விளக்குங்கள்.
உங்களுக்கு வியாதி என வைத்துக்கொள்ளுங்கள். ஆபரேஷன் செய்தால்தான் பிழைப்பீர்கள் என்ற நிலை. அதற்கான செலவோ உங்களுக்கு கொஞ்சமும் கட்டுப்படியாகாது. எப்படி உணருவீர்கள்? குடும்பத்தாரும் நண்பர்களும் ஒன்றுசேர்ந்து பணம் திரட்டியும் போதவில்லை என்றால்? உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இப்படித் திண்டாடுவது மரண வேதனைதான்!
2 மானிட இனத்திற்கு நேரிட்டிருக்கும் கதி இதுதான். நம் முதல் பெற்றோரான ஆதாம் ஏவாள் பரிபூரணமாய் படைக்கப்பட்டார்கள். (உபாகமம் 32:4) என்றென்றும் வாழவும், ‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி,’ கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றவும் அவர்களுக்கு வாய்ப்பு இருந்தது. (ஆதியாகமம் 1:28) இருந்தாலும் ஆதாம் ஏவாள் உயிர் கொடுத்தவருக்கு எதிராக கலகம் செய்தார்கள். (ஆதியாகமம் 3:1-6) கீழ்ப்படியாமல் போனதற்கு தண்டனையாக அவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு பிறக்கவிருந்த குழந்தைகளும் பாவிகள் ஆனார்கள். “அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை” என உத்தமரான யோபு பிற்பாடு சொன்னார்.—யோபு 14:4.
3. எவ்வாறு மரணம் எல்லாருக்கும் வந்தது?
3 பாவம், நம் ஒவ்வொருவரையும் பீடித்திருக்கும் வியாதி என்று சொல்லலாம். ஏனெனில் ‘எல்லாரும் பாவஞ்செய்திருக்கிறார்கள்’ என பைபிள் குறிப்பிடுகிறது. பாவத்தின் விளைவுகள் உயிருக்கு ஆபத்தானவை. சொல்லப்போனால் “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 3:23; 6:23) ஒருவரும் இதிலிருந்து தப்ப முடியாது. எல்லாரும் பாவம் செய்வதால் எல்லாரும் இறக்கிறார்கள். ஆதாமின் சந்ததியினராக, இந்தக் குறையோடுதான் நாம் பிறந்திருக்கிறோம். (சங்கீதம் 51:5) ‘ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோல, எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது’ என பவுல் எழுதினார். (ரோமர் 5:12) அதற்கென்று இரட்சிப்புக்கு வழியே இல்லை என அர்த்தமாகாது.
பாவத்தையும் மரணத்தையும் போக்குதல்
4. ஏன் மனிதர்களால் வியாதியையும் மரணத்தையும் போக்க முடியாது?
4 பாவத்தையும் அதன் விளைவான மரணத்தையும் போக்க என்ன தேவை? எந்த மனிதனாலும் கொடுக்க முடியாத ஒன்று தேவை. சங்கீதக்காரன் இப்படிப் புலம்பினார்: “மனித உயிரின் விலை மிக உயர்ந்தது. சாவிலிருந்து தப்பி, என்றென்றும் வாழ தேவையான விலையை அவனால் செலுத்தவே முடியாது.” (சங்கீதம் 49:8, 9, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) சத்துள்ள உணவு வகைகளும் மருத்துவ கவனிப்பும் நம் ஆயுட்காலத்தில் ஒருசில வருடங்களை கூட்டலாம் என்பது உண்மைதான். ஆனால் சுதந்தரிக்கப்பட்ட பாவத்திற்கான நிவாரணம் நம் ஒருவரிடமும் இல்லை. முதுமையின் சீரழிவை தடுத்து, கடவுளது ஆதி நோக்கத்தின்படி உடலைப் பரிபூரணமாக்க எவராலும் முடியாது. ஆதாமின் பாவத்தினால் மானிட இனமே “பயனற்ற நிலைக்கு,” உள்ளானது அல்லது த ஜெருசலேம் பைபிள் குறிப்பிடுகிறபடி, “அதன் நோக்கத்தை எட்ட முடியாமல் போனது” என பவுல் சொன்னது மிகை அல்ல. (உரோமையர் [ரோமர்] 8:20, பொ.மொ.) உயிரளித்தவர் நம்மைக் கைவிடவில்லை என்பது ஆறுதலளிக்கும் விஷயம். பாவத்தையும் மரணத்தையும் அடியோடு போக்க அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். எப்படி?
5. இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் எவ்வாறு நீதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது?
5 யெகோவா “நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்.” (சங்கீதம் 33:5) இஸ்ரவேலர்களுக்கு அவர் கொடுத்த நியாயப்பிரமாணம், பட்சபாதமற்ற சம நீதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைக் காட்டுகிறது. உதாரணத்திற்கு, ‘ஜீவனுக்கு ஜீவன் கொடுக்கவேண்டும்’ என்பது இந்த நியாயப்பிரமாண சட்டங்களில் ஒன்று. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு இஸ்ரவேலன் யாரையாவது கொலை செய்துவிட்டால், கொல்லப்பட்டவரின் உயிருக்கு ஈடாக தன் உயிரையே கொடுக்க வேண்டும். (யாத்திராகமம் 21:23; எண்ணாகமம் 35:21) அப்போதுதான் தெய்வீக நியாயத்தராசு சமமாக நிற்கும்.—யாத்திராகமம் 21:30-ஐ ஒப்பிடுக.
6. (அ) எந்த அர்த்தத்தில் ஆதாம் கொலையாளி ஆனான்? (ஆ) எப்படிப்பட்ட உயிரை ஆதாம் இழந்தான், நியாயத்தராசு சமமாக நிற்க எவ்வித பலி தேவைப்படும்?
6 ஆதாம் பாவம் செய்தபோது ஒரு கொலையாளி ஆனான். எந்த அர்த்தத்தில்? அவன் பாவத்தையும் மரணத்தையும் தன் சந்ததியினர் அனைவருக்கும் கடத்தவிருந்தான் என்ற அர்த்தத்திலேயே. ஆதாம் கீழ்ப்படியாமல் போனதினாலேயே இந்நொடி வரை நம் உடல்கள் உருக்குலைகின்றன, முடிவில் கல்லறைக்கும் செல்கின்றன. (சங்கீதம் 90:10) ஆதாமுடைய பாவத்தின் விளைவு சாதாரணமானது இல்லை. அதனால் அவனுக்கும் அவன் சந்ததிக்கும் ஏற்பட்ட இழப்பு, வெறும் 70 அல்லது 80 வருட சாதாரண வாழ்க்கையே அல்ல; அது பரிபூரண, நித்திய வாழ்க்கை என்பதை ஞாபகம் வையுங்கள். ஆகவே ‘ஜீவனுக்கு ஜீவன்’ கொடுக்க வேண்டுமென்றால், இச்சந்தர்ப்பத்தில் எப்படிப்பட்ட உயிரைக் கொடுத்து நீதியை சரிக்கட்ட முடியும்? நியாயமாகவே பரிபூரண மனித உயிரை, அதாவது பரிபூரண சந்ததியினரை பிறப்பிக்கும் ஆற்றலுடைய, ஆதாமுக்கு இருந்ததைப் போன்ற உயிரையே கொடுக்க வேண்டும். பரிபூரண மனித உயிரைப் பலியாக கொடுக்கும்போது நியாயத்தராசு சமமாக நிற்கும். அதுமட்டுமல்ல, பாவத்தையும் அதனால் ஏற்படும் மரணத்தையும் அடியோடு நீக்கும்.
பாவத்தின் விலையை சரிக்கட்டுதல்
7. ‘மீட்கும்பொருள்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்குக.
7 பாவத்திலிருந்து நம்மை மீட்க தேவைப்படும் விலையை பைபிள் ‘மீட்கும்பொருள்’ என குறிப்பிடுகிறது. (சங்கீதம் 49:8) ஆங்கிலத்தில் இதற்குரிய பெயர் (ransom), கடத்தப்பட்ட நபரை விடுவிக்க கடத்தியவர் கோரும் பணயத் தொகையைக் குறிப்பிடலாம். யெகோவா அளித்திருக்கும் மீட்கும்பொருள் ஏதோ கடத்தல் சம்பந்தப்பட்டது அல்ல என்றாலும், விலை செலுத்துவது என்ற கருத்தில் அதைத்தான் அர்த்தப்படுத்துகிறது. சொல்லப்போனால், ‘மீட்கும்பொருள்’ என்பதற்கான எபிரெய வார்த்தையின் வினை வடிவத்திற்கு “மூடுவது” என்ற சொல்லர்த்தமான அர்த்தம். பாவத்திற்கு நிவாரணம் அளிக்க, மீட்கும் பொருளானது, ஈடுகட்ட வேண்டிய ஆதாமின் பரிபூரண மனித உயிருக்கு சரிசமமான ஒன்றாய் இருக்க வேண்டும்.
8. (அ) மீண்டும் விலைகொடுத்து வாங்குவதன் நியமத்தை விளக்குக. (ஆ) மீண்டும் விலைகொடுத்து வாங்குதல் எப்படி நம் பாவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?
8 இது நியாயப்பிரமாணத்திலுள்ள ஒரு நியமத்திற்கு, அதாவது மீண்டும் விலைகொடுத்து வாங்குவதன் நியமத்திற்கு இசைவாய் உள்ளது. இஸ்ரவேலர் ஒருவர் வறுமையால் தன்னை வேறு தேசத்தவருக்கு அடிமையாய் விற்றிருந்தால், உறவினர் எவராவது அவரை மீண்டும் வாங்க (அல்லது மீட்க) முடியும். அதாவது அடிமையின் மதிப்புக்கேற்ற விலையை செலுத்தி மீட்க முடியும். (லேவியராகமம் 25:47-49) அபூரண மனிதர்களான நம்மை ‘பாவத்தின் அடிமைகள்’ என பைபிள் சொல்கிறது. (ரோமர் 6:6; 7:14, 25) நம்மை மீண்டும் விலைகொடுத்து வாங்க என்ன தேவை? நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இழக்கப்பட்ட பரிபூரண மனித உயிருக்கு ஈடாக மற்றொரு பரிபூரண மனித உயிரை செலுத்த வேண்டும்—அதற்குக் கூடுதலாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை.
9. நம் பாவத்தைப் போக்க யெகோவா என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்?
9 நாம் அபூரணமாய் பிறப்பதால் நம்மில் ஒருவரும் ஆதாமுக்கு சமமாக முடியாது; நீதியை சரிக்கட்ட தேவைப்படும் மீட்கும் விலையை நம்மில் ஒருவராலும் செலுத்தவும் முடியாது. ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல், உயிருக்கு ஆபத்தான வியாதி நம்மை பீடித்திருக்கிறது. ஆபரேஷன் செலவு நமக்குக் கட்டுப்படியும் ஆகாது. இப்படிப்பட்ட நிலைமையில், நமக்காக அந்தச் செலவை ஏற்றுக்கொள்ள ஒருவர் முன்வந்தால் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்க மாட்டோமா? இதைத்தான் யெகோவா செய்திருக்கிறார்! நம்மை பாவத்திலிருந்து ஒட்டுமொத்தமாய் விடுதலையாக்க அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். ஆம், நம் சக்திக்கு மிஞ்சிய ஒன்றை அவர் தர விரும்புகிறார். எப்படி? ‘தேவனுடைய கிருபை வரம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்’ என பவுல் எழுதினார். (ரோமர் 6:23) இயேசுவை, ‘உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என யோவான் விவரித்தார். (யோவான் 1:29) மீட்கும் பொருளைச் செலுத்துவதற்கு யெகோவா எவ்வாறு தமது நேச குமாரனை பயன்படுத்தினார் என பார்க்கலாம்.
“சரிசமமான மீட்கும்பொருள்”
10. ‘வித்துவைப்’ பற்றிய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு யோசேப்பையும் மரியாளையும் சுட்டிக்காட்டின?
10 ஏதேனில் கலகம் ஏற்பட்ட உடனேயே, மானிட இனத்தை பாவத்திலிருந்து மீட்கவிருக்கும் ஒரு ‘வித்தை’ அல்லது வாரிசை உண்டாக்கப்போவதாய் யெகோவா குறிப்பிட்டார். (ஆதியாகமம் 3:15) அடுத்தடுத்த பல தெய்வீக வெளிப்படுத்துதல்கள் மூலம் இந்த வாரிசு வரவிருக்கும் சந்ததியை யெகோவா அடையாளங்காட்டினார். இந்த வெளிப்படுத்துதல்கள் பாலஸ்தீனாவில் வாழ்ந்த யோசேப்பையும் மரியாளையும் சுட்டிக்காட்டின. இவர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மரியாள் பரிசுத்த ஆவியால் கர்ப்பமடைந்திருப்பது யோசேப்புக்கு கனவில் சொல்லப்பட்டது. மேலும், ‘அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்’ என்று தூதர் சொன்னார்.—மத்தேயு 1:20, 21.
11. (அ) யெகோவா எவ்வாறு தம் குமாரன் பரிபூரண மனிதனாய் பிறப்பதற்கு ஏற்பாடு செய்தார்? (ஆ) எப்படி இயேசுவினால் ‘சரிசமமான மீட்கும்பொருளை’ கொடுக்க முடிந்தது?
11 மரியாளின் வயிற்றில் இருந்தது சாதாரண கருவே அல்ல, ஏனென்றால் அக்கருவாகிய இயேசு முன்னரே பரலோகத்தில் வாழ்ந்திருந்தவர். (நீதிமொழிகள் 8:22-31; கொலோசெயர் 1:15) யெகோவா தமது அற்புத வல்லமையைக் கொண்டு இயேசுவின் உயிரை மரியாளின் கருவறையில் வைத்தார். இப்படியாக கடவுளது நேசகுமாரன் மனிதனாக பிறந்தார். (யோவான் 1:1-3, 14; பிலிப்பியர் 2:6, 7) ஆதாமின் பாவம் இயேசுவைக் கறைப்படுத்தாதவாறு யெகோவா காரியங்களைக் கையாண்டார். இயேசு பரிபூரணமாய் பிறந்தார். இவ்வாறு ஆதாம் இழந்த பரிபூரண மனித உயிரை அவர் பெற்றிருந்தார். ஒருவழியாக, பாவத்தைப் போக்க தோன்றினார் ஒரு மனிதர்! பொ.ச. 33, நிசான் 14-ல் இயேசு இதைத்தான் செய்தார். அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளில், எதிரிகள் தம்மைக் கொல்ல அனுமதித்தார். இவ்வாறு ‘சரிசமமான மீட்கும்பொருளைக்’ கொடுத்தார்.—1 தீமோத்தேயு 2:6, NW.
பரிபூரண மனித உயிரின் மதிப்பு
12. (அ) இயேசுவின் மரணத்திற்கும் ஆதாமின் மரணத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசத்தை விளக்குக. (ஆ) கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு இயேசு எவ்வாறு “நித்திய பிதா” ஆனார்?
12 இயேசுவின் மரணத்திற்கும் ஆதாமின் மரணத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசம் மீட்கும்பொருளின் மதிப்பை சிறப்பித்துக் காட்டுகிறது. ஆதாமுக்கு கிடைத்த மரண தண்டனை ஏற்றதுதான், ஏனென்றால் அவன் தெரிந்தே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனான். (ஆதியாகமம் 2:16, 17) ஆனால் இயேசுவுக்கோ மரணம் சிறிதும் பொருந்தாத ஒன்று, ஏனென்றால் அவர் ‘ஒரு பாவமும் செய்யவில்லை.’ (1 பேதுரு 2:22, NW) ஆகவே இயேசு இறந்தபோது, பாவியான ஆதாம் இறக்கையில் அவனிடம் இல்லாத விலையேறப்பெற்ற ஒன்று இருந்தது. அது, பரிபூரண மனித உயிருக்கான உரிமை. இவ்வாறு இயேசுவின் மரணம் பலிசெலுத்துவதற்கு ஏற்ற மதிப்பைப் பெற்றிருந்தது. ஆவி ஆளாக பரலோகத்திற்குச் சென்றவுடன், அவர் தமது பலியின் மதிப்பை யெகோவாவிற்கு சமர்ப்பித்தார். (எபிரெயர் 9:24) அவ்வாறு செய்ததால், இயேசு பாவமுள்ள மானிட இனத்தை விலைகொடுத்து வாங்கி, ஆதாமுக்கு பதிலாக புதிய தகப்பனானார். (1 கொரிந்தியர் 15:45) ஆகவே இயேசு “நித்திய பிதா” என கன கச்சிதமாகவே அழைக்கப்படுகிறார். (ஏசாயா 9:6) இதை கொஞ்சம் ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள்! பாவமுள்ள தகப்பனான ஆதாம் தன் சந்ததியினர் அனைவருக்கும் மரணத்தைக் கடத்தினான். பரிபூரண தகப்பனான இயேசு, தமது பலியின் மதிப்பைப் பயன்படுத்தி கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறார்.
13. (அ) ஆதாம் ஏற்படுத்திய கடனை இயேசு எவ்வாறு தீர்த்தார் என்பதை உதாரணத்தோடு விளக்குக. (ஆ) ஏன் இயேசுவின் பலி ஆதாமின் பாவத்தை போக்கவில்லை?
13 இருந்தாலும், எப்படி ஒரேவொரு மனிதனது மரணம், கோடிக்கணக்கானோரது பாவத்தை நீக்கும்? (மத்தேயு 20:28) சில வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், மீட்கும் பொருளை இந்த உதாரணத்தால் விளக்கியிருந்தோம்: “ஒரு பெரிய தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்வதாக வைத்துக்கொள்வோம். நேர்மையற்ற மானேஜரால் கம்பெனி திவாலாகிறது. தொழிற்சாலை மூடப்படுகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்து, ‘நடுத்தெருவில்’ நிற்க வேண்டிய கதி. ஒரேவொருவன் செய்த ஊழலால், தொழிலாளிகளின் மனைவி(கணவன்)மார்கள், பிள்ளைகள், கடன்கொடுத்தவர்கள் என இத்தனை பேரும் அவதிப்படுகிறார்கள்! அச்சமயம் பார்த்து, வசதிபடைத்த தர்மப்பிரபு ஒருவர் முன்வந்து, கம்பெனியின் கடனைத் தீர்த்து, தொழிற்சாலையை மறுபடியும் திறந்துவைக்கிறார். அந்த ஒரு கடனைத் தீர்த்ததால், அவ்வளவு அநேக தொழிலாளிகளும் அவர்களது குடும்பத்தாரும் கடன்கொடுத்தவர்களும் பிரச்சினை முழுமையாய் தீர்ந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஆனால் இந்த சந்தோஷத்தில் அந்த மானேஜருக்கு பங்குண்டா? இல்லை, சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கும் அவர், வேலையை நிரந்தரமாய் பறிகொடுத்து விட்டார்! அதேவிதமாய், ஆதாமின் ஒரு கடனைத் தீர்த்தது கோடிக்கணக்கான அவன் பிள்ளைகளுக்கு பயனளித்தாலும் அவனுக்கோ பயனளிப்பதில்லை.”
14, 15. ஆதாம் ஏவாள் தெரிந்தே பாவம் செய்தார்கள் என எப்படிச் சொல்லலாம், நம் நிலைமை எவ்வாறு அவர்களது நிலைமையிலிருந்து வித்தியாசப்படுகிறது?
14 இதுதான் நியாயம். ஆதாம் ஏவாள் தெரிந்தே பாவம் செய்தார்கள் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போவதையே தெரிவு செய்தார்கள். நாமோ பாவிகளாகவே பிறக்கிறோம். தெரிவு நம் கையில் இல்லை. எவ்வளவுதான் முயன்றாலும், பாவம் செய்வதை நம்மால் முழுமையாய் தடுக்க முடியாது. (1 யோவான் 1:8) சிலசமயம் நாம் பவுலைப் போலவே உணரலாம். அவர் எழுதினார்: “நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்!”—ரோமர் 7:21-24.
15 இருந்தாலும் மீட்கும் பொருள் செலுத்தப்பட்டதால், நமக்கு நம்பிக்கை இருக்கிறது! இயேசுவே கடவுள் வாக்குறுதியளித்த வித்து. அவர் மூலமாகவே “பூமியிலுள்ள தேசத்தார் அனைவரும் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள்.” (ஆதியாகமம் 22:18, NW; ரோமர் 8:20) இயேசுவின் மேல் நம்பிக்கை வைப்பவர்களுக்கு, அவரது பலி அருமையான வாய்ப்புகளை அளிக்கிறது. இவற்றில் சிலவற்றைக் கவனிக்கலாம்.
கிறிஸ்துவின் மீட்கும் பொருளிலிருந்து பயனடைதல்
16. நாம் பாவிகளாக இருந்தாலும், இயேசுவின் மீட்கும் பொருளினால் என்னென்ன நன்மைகளைப் பெறுகிறோம்?
16 “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” என ஒப்புக்கொண்டார் பைபிள் எழுத்தாளரான யாக்கோபு. (யாக்கோபு 3:2) இருந்தாலும், கிறிஸ்துவின் மீட்கும் பொருளின் அடிப்படையில் நம் தவறுகள் மன்னிக்கப்படலாம். யோவான் எழுதினார்: “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே.” (1 யோவான் 2:1, 2) அதற்காக நாம் பாவத்தை சற்று அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. (யூதா 4; 1 கொரிந்தியர் 9:27-ஐ ஒப்பிடுக.) இருந்தாலும் நாம் தவறு செய்துவிட்டால், யெகோவா “மன்னிப்பதற்குத் தயாராய் இருக்கிறார்” என்ற நம்பிக்கையோடு நம் மனதிலிருப்பதை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்க்கலாம். (சங்கீதம் 86:5; 130:3, 4; ஏசாயா 1:18; 55:7; அப்போஸ்தலர் 3:19, 20) இவ்வாறு கடவுளை சுத்த மனசாட்சியோடு சேவிப்பதற்கு மீட்கும் பொருள் நமக்கு உதவுகிறது. இயேசு கிறிஸ்துவின் பெயரில் கடவுளை ஜெபத்தில் அணுகவும் உதவுகிறது.—யோவான் 14:13, 14; எபிரெயர் 9:14.
17. மீட்கும் பொருளினால் என்ன எதிர்கால ஆசீர்வாதங்கள் கிடைக்கவிருக்கின்றன?
17 கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதற்கு, அதாவது கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் பூமியில் பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்கு கிறிஸ்துவின் மீட்கும் பொருள் வழிதிறக்கிறது. (சங்கீதம் 37:29) ‘தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்று இருக்கிறது’ என பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 1:20) மரணம் ‘ஆண்டுகொண்டிருப்பது’ உண்மைதான். (ரோமர் 5:17) இந்தக் ‘கடைசி சத்துருவை’ மீட்கும் பொருளின் அடிப்படையில் கடவுள் நீக்கப்போகிறார். (1 கொரிந்தியர் 15:26; வெளிப்படுத்துதல் 21:4) இயேசுவின் மீட்கும் பொருள் இறந்தவர்களுக்கும் பலனளிக்கிறது. “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [இயேசுவுடைய] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்” என இயேசு சொன்னார்.—யோவான் 5:28, 29; 1 கொரிந்தியர் 15:20-22.
18. பாவத்தினால் மனிதர்களுக்கு என்ன சோக விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன, இவை எவ்வாறு கடவுளுடைய புதிய உலகில் நீக்கப்படும்?
18 இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் கவலைகள் எதுவும் இன்றி, கடவுள் நினைத்தபடி வாழ்வது எப்பேர்ப்பட்ட ஆனந்தமளிக்கும்! பாவம் கடவுளோடு உள்ள உறவை மட்டுமல்ல, நம் சொந்த மனம், இதயம், உடல் ஆகியவற்றையும் சேதப்படுத்திவிட்டது. இருந்தாலும் கடவுளது புதிய உலகில், ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்ல மாட்டார்கள்’ என பைபிள் வாக்குறுதியளிக்கிறது. ஆம், சரீர மற்றும் மன நோய்கள் எவையும் மனிதனை இனியும் அல்லல்படுத்தாது. ஏன்? “அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்” என ஏசாயா பதிலளிக்கிறார்.—ஏசாயா 33:24.
மீட்கும் பொருள்—அன்பின் வெளிக்காட்டு
19. நம் ஒவ்வொருவரும் எவ்வாறு கிறிஸ்துவின் மீட்கும் பொருளுக்கு போற்றுதல் காட்டவேண்டும்?
19 தமது நேசகுமாரனை அனுப்ப யெகோவாவைத் தூண்டியது அன்பே. (ரோமர் 5:8; 1 யோவான் 4:9) அதே அன்பினால் இயேசு ‘ஒவ்வொரு [மனிதனுக்காகவும்] மரணத்தை ருசிபார்த்தார்.’ (எபிரெயர் 2:9; யோவான் 15:13) நியாயமான காரணத்தோடுதான் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. . . . பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.’ (2 கொரிந்தியர் 5:14, 15) இயேசு நமக்காக செய்திருப்பதை நாம் மனதார போற்றினால், செயலில் அதைக் காண்பிக்கவும் செய்வோம். மீட்கும் பொருள் நம்மை மரணத்திலிருந்தே விடுதலையாக்கி இருக்கிறதே! இயேசுவின் பலியை துச்சமாக கருதுகிறோம் என நம் செயல்கள் காட்டக்கூடாது.—எபிரெயர் 10:29, NW.
20. இயேசுவின் ‘வசனத்தை’ கைக்கொள்வதன் சில வழிகள் யாவை?
20 மீட்கும் பொருளுக்கு நாம் எவ்வாறு இதயப்பூர்வ போற்றுதலைக் காட்டலாம்? கைதாவதற்கு சற்று முன் இயேசு சொன்னார்: “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்.” (யோவான் 14:23) இயேசுவின் ‘வசனம்’ அவர் கொடுத்த இந்த வேலையில் மும்முரமாய் ஈடுபடுவதை உட்படுத்துகிறது: ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள்.’ (மத்தேயு 28:19) இயேசுவுக்குக் கீழ்ப்படிவது என்பது, நம் ஆவிக்குரிய சகோதரர்கள்மீது அன்புகாட்டுவதையும் உட்படுத்துகிறது.—யோவான் 13:34, 35.
21. ஏப்ரல் 1-ம் தேதி நடக்கவிருக்கும் நினைவு ஆசரிப்பில் ஏன் நாம் கலந்துகொள்ள வேண்டும்?
21 மீட்கும் பொருளுக்கு போற்றுதல் காண்பிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்வதாகும். இவ்வருடம் அது ஏப்ரல் 1-ம் தேதி ஆசரிக்கப்படும்.a இதுவும் இயேசுவின் ‘வசனத்தின்’ ஒரு பாகம். ஏனெனில், இந்த ஆசரிப்பை ஆரம்பித்துவைக்கையில், “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என இயேசு தம் சீஷர்களுக்கு கட்டளையிட்டார். (லூக்கா 22:19) இந்த மிக முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கிறிஸ்துவின் எல்லா கட்டளைகளுக்கும் ஆழ்ந்த கவனம் செலுத்துவோம். இது, இயேசுவின் மீட்கும் பொருளானது இரட்சிப்பிற்கான கடவுளுடைய ஏற்பாடு என்பதை முழுமையாய் நம்புகிறோம் என காட்டும். உண்மையில், “வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை.”—அப்போஸ்தலர் 4:12.
[அடிக்குறிப்புகள்]
a இயேசு இறந்தது பொ.ச. 33, நிசான் 14 அன்று. இவ்வருடம் அது ஏப்ரல் 1-ம் தேதி வருகிறது. நினைவு ஆசரிப்பு நேரத்தையும் இடத்தையும் பற்றி தெரிந்துகொள்ள உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளை அணுகுங்கள்.
நினைவில் நின்றவை
◻ ஏன் மனிதர்களால் தங்கள் பாவத்திற்கு நிவாரணம் தர முடியாது?
◻ எவ்விதத்தில் இயேசு ‘சரிசமமான மீட்கும்பொருள்’ ஆனார்?
◻ பரிபூரண மனித வாழ்க்கைக்கான உரிமையை இயேசு எவ்வாறு நம் நன்மைக்காக பயன்படுத்தினார்?
◻ கிறிஸ்துவின் மீட்கும் பொருளினால் மனிதவர்க்கத்திற்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன?
[பக்கம் 15-ன் படம்]
ஆதாமுக்கு நிகரான பரிபூரண மனிதனாலேயே நியாயத்தராசு சமமாகும்
[பக்கம் 16-ன் படம்]
பரிபூரண மனித வாழ்க்கைக்கான உரிமை இயேசுவுக்கு இருந்ததால், அவரது மரணம் பலி செலுத்துவதற்குரிய மதிப்பு பெற்றிருந்தது