ஜெரோம்—பைபிள் மொழிபெயர்ப்பில் சர்ச்சைக்குரிய முன்னோடி
வருடம் 1546, மாதம் ஏப்ரல், தேதி 8. லத்தீன் வல்கேட்டைக் குறித்து கவுன்சில் ஆஃப் ட்ரெண்ட் இவ்வாறு ஆணையிட்டது: “இது [கத்தோலிக்க] சர்ச்சால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது . . . இம்மொழிபெயர்ப்பை யாரும் எக்காரணத்தைக் கொண்டும் மனதளவிலும் ஓரங்கட்டக்கூடாது.” ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே வல்கேட் மொழிபெயர்க்கப்பட்டது. இருப்பினும், வெகு காலமாகவே சச்சரவுக்குரிய ஒன்றாக இருந்து வந்திருப்பது இது மட்டுமல்ல, அதன் மொழிபெயர்ப்பாளரும்தான். யார் இந்த ஜெரோம்? இவரையும் இவரது பைபிள் மொழிபெயர்ப்பையும் பற்றி ஏன் காரசாரமான விவாதம்? இன்றைய பைபிள் மொழிபெயர்ப்பில் இவரது படைப்பு எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது?
உதயமாகிறார் ஒரு வல்லுநர்
ஜெரோம் ரோம மாகாணமாகிய டால்மாட்டியாவிலுள்ள ஸ்ட்ரீடோனில் ஏறக்குறைய பொ.ச. 346-ல் பிறந்தார்.a இது இன்றைய இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் எல்லைக்கருகில் அமைந்திருந்தது. இவருடைய லத்தீன் பெயர் யூசிபஸ் ஹிரானமஸ். இவருடைய பெற்றோர்கள் ஓரளவு பணக்காரர்களாக இருந்தனர். ஆகவே இளவயதிலேயே இவருடைய கையில் பணம் புரண்டது. இவர் ரோமில் புகழ்பெற்று விளங்கிய இலக்கண பண்டிதரான டனாடஸ்ஸிடம் கல்வி பயின்றார். இலக்கணத்திலும் பேச்சிலும் எழுத்திலும் தத்துவத்திலும் இயற்கையிலேயே திறமை பெற்றவராக திகழ்ந்தார். இச்சமயத்தில் கிரேக்க மொழியையும் படிக்கத் தொடங்கினார்.
ஜெரோம் பொ.ச. 366-ல் ரோமிலிருந்து கிளம்பி பல இடங்களில் அலைந்துதிரிந்து, கடைசியில் இத்தாலியிலுள்ள ஆக்வலாவுக்கு வந்து சேர்ந்தார். இங்குதான் துறவு வாழ்க்கை இவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. துறவற வாழ்க்கையைப் பற்றிய கருத்துகளினால் வெகுவாய் கவரப்பட்டார். விளைவு? ஜெரோமும் அவருடைய நண்பர்களும் அடுத்த சில வருடங்களுக்கு அங்கு துறவிகளாய் வாழ்ந்தனர்.
ஆனால் பொ.ச. 373-ல், என்ன காரணமோ தெரியவில்லை, அமைதியான துறவிகளின் வாழ்க்கையில் புயல் வீசியது. ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பக்கமாய் பிரிந்து போனார்கள். ஜெரோம் தெளிவடைந்தவராய், கிழக்குப் பகுதிகளிலுள்ள பத்தினியா, கலாத்தியா, சிலிசியா போன்ற இடங்களில் சுற்றித்திரிந்தார். கடைசியாக சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்கு வந்து சேர்ந்தார்.
ஜெரோமுடைய இந்த நீண்ட பயணம் அவரை வெகுவாக பாதித்து. காய்ச்சலினால் அவர் மோசமாக தாக்கப்பட்டார். ரொம்பவும் சோர்வடைந்திருந்ததால் அவருடைய உடல் ஆரோக்கியமும் சீர்குலைந்தது. தன்னுடைய நண்பருக்கு எழுதிய கடிதத்தில் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உம்மிடமாக கொண்டுவந்து சேர்த்தாரேயானால் எவ்வளவு நன்றாயிருக்கும். சாதாரணமாகவே என் உடல் தளர்ந்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு பலவீனமாகையில் நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது” என்பதாக எழுதினார்.
நோயும் தனிமையும் மனப்போராட்டமும் இவரை வாட்டிவதைத்துக் கொண்டிருந்தன. இது போதாதென்று ஜெரோமுக்கு சீக்கிரத்தில் மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டது; அதுதான் ஆன்மீகம். கடவுளுடைய “நியாயாசனத்திற்கு முன்பாக தரதரவென்று இழுத்து வரப்படு”வதாக ஜெரோம் ஒரு நாள் கனவு கண்டார். ‘நீ யார்?’ என்ற கேள்வி இவரிடத்தில் கேட்கப்படுகையில் “நான் ஒரு கிறிஸ்தவன்” என்று பதிலளித்தார். உடனடியாக விசாரணையை நடத்தியவர், “நீ பொய் சொல்லுகிறாய். நீ கிறிஸ்துவையல்ல, சிசராவை பின்பற்றுகிறவன்” என்பதாக கடும்கோபத்தோடு கூறினார்.
இதுவே அவருடைய வாழ்க்கையில் திருப்புக்கட்டமாய் அமைந்தது. நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்ற பேராவல் ஜெரோமுக்கு இருந்தது. இதுவரையாக புறமத இலக்கியங்களிலேயே மூழ்கிப்போன புத்தகப்புழுவாக இருந்தார். கடவுளுடைய வார்த்தையை இவர் தொட்டுக்கூட பார்க்கவில்லை. “இது என்னுடைய மனசாட்சியை வாட்டிவதைத்தது” என்பதாக சொன்னார். எப்படியாவது தன்னில் மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார். ஆகவே தனது கனவில் கடவுளுக்கு இவ்வாறு வாக்களித்தார்: “கர்த்தாவே, நான் இனிமேல் இவ்வுலகத்தின் புத்தகங்களை ஏறெடுத்து பார்க்க மாட்டேன். அவற்றை இனி ஒருபோதும் படிக்கவும் மாட்டேன். இந்த வாக்குறுதியை நான் மீறினால் அது உம்மை நான் மறுதலித்ததற்கு சமம்.”
ஆனால் கொஞ்சம் காலம் கழித்து ஜெரோம் தனது வாக்குறுதியில் பல்டி அடித்தார். கனவில் கடவுளுக்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பதால் தான் அதற்குப் பொறுப்பாளியல்ல என்பதாக வாதாடினார். இருப்பினும் தன்னுடைய வாக்குறுதியை முழுமையாக பின்பற்றாவிட்டாலும், கருத்தளவிலாவது அதைப் பின்பற்ற தீர்மானமாயிருந்தார். ஆகவே ஜெரோம் அந்தியோகியாவை விட்டு வெளியேறி, தனிமையில் வாழ்வதற்கு சிரியாவின் பாலைவனத்திலுள்ள கால்ஸஸுக்கு சென்றார். துறவியாக வாழ்ந்த ஜெரோம் பைபிளையும் பைபிளை அடிப்படையாக கொண்ட நூல்களையும் படிப்பதில் மூழ்கிப் போனார். “நான் மனிதர்களின் புத்தகங்களை எவ்வளவு ஆர்வத்தோடு படித்தேனோ அதைக்காட்டிலும் கடவுளுடைய புத்தகங்களை அதிக ஆர்வத்தோடு படித்தேன்” என்பதாக ஜெரோம் கூறினார். கூடுதலாக உள்ளூர் மொழியான சிரியாக்கையும் கற்றுக்கொண்டார். கிறிஸ்தவராக மாறின ஒரு யூதருடைய உதவியினால் எபிரெய மொழியையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
போப்பின் உத்தரவு
ஐந்து வருட துறவறத்திற்கு பின்பு தன்னுடைய படிப்பைத் தொடருவதற்காக ஜெரோம் அந்தியோகியாவிற்கு திரும்பினார். அங்கு வந்தபோதோ சர்ச்சுக்குள் படுமோசமாக பிளவு ஏற்பட்டிருப்பதைக் கண்டார். இவர் பாலைவனத்தில் இருந்தபோதே, “சர்ச் மூன்று பகுதிகளாக பிரிந்து இருக்கிறது. ஒவ்வொரு பிரிவினரும் என்னை தங்களது அணியில் இழுத்துக்கொள்வதற்காக ஆவலோடு இருக்கிறார்கள்,” ஆகவே என்ன செய்வதென்று போப் டெமாசிஸ்ஸிடம் ஆலோசனை கேட்டார்.
பவுலினஸ் என்பவர் அந்தியோகியாவின் பிஷப் பதவிக்கு போட்டியிட்ட மூவரில் ஒருவர். காலப்போக்கில், ஜெரோம் இவரோடு சேர்ந்து கொள்ள தீர்மானித்தார். புனிதப் பணி செய்ய தான் பவுலினஸால் நியமனம் பெறுவதற்குமுன் இரண்டு நிபந்தனைகளை ஜெரோம் விதித்தார். முதலாவது தன்னுடைய துறவி வாழ்க்கையை தொடர தடைசெய்யக் கூடாது. இரண்டாவது, மதகுருவாக தன் ஊழியத்தை எந்தக் குறிப்பிட்ட சர்ச்சிலும் செய்வதற்கு வற்புறுத்தக்கூடாது.
பொ.ச. 381-ல் கான்ஸ்டான்டிநோப்பிளில் நடந்த ஆலோசனை குழுவில் பவுலினஸோடு ஜெரோமும் கலந்துகொண்டார். இதன் பின்பு அவரோடு ரோமுக்கும் சென்றார். ஜெரோமுடைய புலமையையும் மொழி நூலாராய்ச்சியில் இவருக்கிருந்த திறமையையும் போப் டெமாசிஸ் சீக்கிரத்தில் புரிந்துகொண்டார். இதன் பலன்? ஒரு வருடத்திற்குள்ளாகவே போப் டெமாசிஸின் தனிச்செயலர் என்ற மதிப்புவாய்ந்த பதவிக்கு ஜெரோம் உயர்த்தப்பட்டார்.
போப்பிற்கே தனிச்செயலராக இருந்தபோதிலும் சச்சரவுகளில் மாட்டிக்கொள்வதைக் குறித்து இவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. எதுவாக இருந்தாலும்சரி மற்றவர்களுடைய கவனத்தை கவர்ந்திழுக்கும் காந்தமாக இருந்தார். உதாரணமாக இவர் வாழ்ந்ததோ போப்பினுடைய பகட்டான மாளிகை. ஆனாலும் துறவியைப்போல் எளிமையின் சிகரமாக இருந்தார். ஆடம்பரமில்லாத எளிய வாழ்க்கையை இவர் ஊக்கமளித்து ஆதரித்தது மட்டுமல்லாமல் குருவர்க்கத்தினரின் உலகப்பிரகாரமான செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கை முறையை வெளிப்படையாக கண்டனமும் செய்தார். இதனால் இவர் அநேக எதிரிகளை சம்பாதித்துக் கொண்டதுதான் மிச்சம்.
ஜெரோமை பழிதூற்றியவர்கள் இவரது பெயரைக் கெடுத்துக் கொண்டிருந்தனர். இருப்பினும் போப் டெமாசிஸின் முழு ஆதரவு இவருக்கு இருந்தது. பைபிளை தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும்படி போப் ஜெரோமை உற்சாகப்படுத்தினார். அதுவும் நல்ல காரணத்தோடுதான். அந்த சமயத்தில் பல்வேறு லத்தீன் பைபிள் மொழிபெயர்ப்புகள் உபயோகத்தில் இருந்தன. ஆனாலும் அவற்றில் பெரும்பாலானவை ஏனோதானோவென்று ஒப்புக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. எளிதில் கண்டுபிடிக்க முடிந்த அப்பட்டமான தவறுகள் ஏராளம் இருந்தன. போப் டெமாசிஸுக்கு மற்றொரு கவலையும் இருந்தது. அது, சர்ச்சின் ஆதிக்கத்தில் இருந்த கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் மொழியில் வேறுபாடு இருந்ததுதான். கிழக்கிலிருந்த சிலருக்கே லத்தீன் மொழி தெரிந்திருந்தது. மேற்கிலிருந்த சிறுபான்மையினரிடமோ கிரேக்க மொழி புகுந்து விளையாடியது.
சுவிசேஷங்கள் லத்தீனில் புதிதாக மறுபடியும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என போப் டெமாசிஸ் மிகவும் ஆவலுள்ளவராக இருந்தார். மூல கிரேக்க மொழியில் உள்ளதற்கு முழுவதும் ஒத்திருக்கும் ஒரு மொழிபெயர்ப்பு வேண்டும் என்பதாக போப் விரும்பினார். அதேசமயம் இம்மொழிபெயர்ப்பு லத்தீனில் சொல் நயமிக்கதாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்பதே அவருடைய விருப்பம். இவருடைய கனவை நனவாக்க முடிந்த தகுதிவாய்ந்த சில வல்லுநர்களில் ஜெரோமும் ஒருவர். இவர் கிரேக்கிலும் லத்தீனிலும் சிரியாக் மொழியிலும் சக்கைப்போடு போட்டவர். எபிரெய மொழியையும் போதுமான அளவு தெரிந்து வைத்திருந்தார். எனவே இம்மொழிபெயர்ப்பு வேலைக்கு பொருத்தமான நபர் இவர்தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆகவே போப் டெமாசிஸினுடைய உத்தரவுக்கு தலைவணங்கினார். தன்னுடைய வாழ்நாளில் 20-க்கும் அதிகமான ஆண்டுகளை விழுங்கிய இத்திட்டத்தை ஜெரோம் ஆரம்பித்தார்.
சச்சரவு வலுக்கிறது
ஜெரோம் சுவிசேஷ மொழிபெயர்ப்பில் படுவேகமாக இறங்கினார். இருந்தபோதிலும் தெளிவான, புலமைவாய்ந்த நுணுக்கங்களைப் பின்பற்றினார். அந்தச் சந்தர்ப்பத்தில் கிடைத்த எல்லா கிரேக்க கையெழுத்துப் பிரதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தார். இதன் மூலம் லத்தீன் மொழிபெயர்ப்பில் எழுத்துநடையிலும் கருத்திலும் திருத்தங்களைச் செய்தார். கிரேக்க மொழிபெயர்ப்புடன் நெருங்கிய ஒத்திசைவில் இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தார்.
ஜெரோம் மொழிபெயர்த்த நான்கு சுவிசேஷங்கள் மக்களிடையே பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றன. அதேபோல லத்தீனில் இருந்த சங்கீத புத்தகத்தை கிரேக்க செப்டுவஜின்ட்டின் அடிப்படையில் திருத்தி மறுபதிப்பு செய்தார். அதுவும் பிரபலமடைந்து. இருப்பினும் இவரிடம் குறைகண்டுபிடிப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்தார்கள். “படித்த மூதாதையர்களின் அதிகாரம் மற்றும் முழு உலகத்தின் கருத்திற்கு எதிராக சுவிசேஷத்தை மாற்றி எழுதுவதற்கு முயற்சி செய்தேன் என்பதாக அருவருக்கத்தக்க பிராணிகள் வேண்டுமென்றே என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள்” என்பதாக ஜெரோம் எழுதினார். பொ.ச. 384-ல் போப் டெமாசிஸ் மரணமடைந்த பிறகு ஜெரோமுக்கு எதிரான கண்டன அறிவிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்தன. புதிய போப்பும் ஜெரோமோடு ஒத்துப்போகவில்லை; இவர்களுடைய உறவில் விரிசல் விழுந்தது. இதனால் ஜெரோம் ரோம் நகரை விட்டு வெளியேறினார். மீண்டும் ஒருமுறை கிழக்கு நோக்கி பயணமானார்.
எபிரெய வல்லுனராக ஜெரோம் உருவாகிறார்
பொ.ச. 386-ல் ஜெரோம் பெத்லெகேமில் குடியேறினார். தன்னுடைய வாழ்நாளின் எஞ்சிய காலப்பகுதியை ஜெரோம் இங்குதான் கழித்தார். இவரை உண்மையோடு பின்பற்றும் சிறு தொகுதியும் இவருடன் இருந்தது. ரோமில் உயர்குடியில் பிறந்த பணக்கார பெண்மணியாகிய பவுலாவும் இத்தொகுதியில் இருந்தார். ஜெரோமுடைய போதகத்தால் கவரப்பட்ட பவுலா துறவு வாழ்க்கையில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். இப்பெண்மணி அளித்த பண உதவியால் ஜெரோமின் தலைமையில் ஓர் ஆசிரமம் இங்கு நிறுவப்பட்டது. இங்குதான் ஜெரோம் தன்னுடைய இலக்கிய பணியைத் தொடர்ந்தார். இவர் தன்னுடைய வாழ்நாளில் பெரும் சாதனைகளைப் படைத்ததும் இங்குதான்.
ஜெரோம் பாலஸ்தீனாவில் தங்கியிருந்தது பிரயோஜனமாயிருந்தது. ஏனெனில் எபிரெய மொழியில் இன்னும் முன்னேற இது நல்ல வாய்ப்பளித்தது. எபிரெய மொழியின் கடினமான அம்சங்களைப் புரிந்துகொள்ள யூத கல்விமான்களிடம் தனிப்பயிற்சிக்கு எக்கச்சக்கமாக பணம் செலவழித்தார். பாடம் கற்றுக்கொள்ள ஒரு ஆசிரியரை அமர்த்திய போதிலும்கூட அது அவ்வளவு எளிதான விஷயமாக இல்லை. தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களில் ஒருவரான டைபரிஸின் பாரானினாஸைக் குறித்து ஜெரோம் பின்வருமாறு கூறினார்: “இரவு நேரத்திலே பாரனினாஸிடத்தில் பாடம் கற்றுக்கொண்டது, மிக மோசமான தொந்தரவுகளையும் அதிக செலவையும் உட்படுத்தின.” இவர்கள் இரவுநேரத்தில் ஏன் படித்தார்கள்? யூதன் ஒருவன் “கிறிஸ்தவனோடு” தொடர்பு வைத்திருப்பதை யூத சமுதாயத்தினர் விரும்பவில்லை. இதுவே பாரனினாஸ் அஞ்சியதற்கு காரணம்!
ஜெரோமுடைய காலப்பகுதியில் எபிரெய மொழி பேசும் புறமதத்தினரை யூதர்கள் கிண்டலடித்தனர். ஏனெனில் புறமதத்தினருக்கு எபிரெய மொழியை சரியாக உச்சரிக்க தெரியவில்லை. ஆனால் இந்த எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிய ஜெரோம் கடுமையாக முயற்சி செய்தார். விளைவு? ஜெரோம், எபிரெயுவில் தலைசிறந்த வல்லுனராக விளங்கினார். அநேக எபிரெய வார்த்தைகளை அப்படியே லத்தீனில் எழுத்துப்பெயர்ப்பு (Transliterate) செய்தார். இவ்வாறு செய்ததானது வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு ஜெரோமுக்கு உதவியது. மேலுமாக அந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்ட எபிரெய உச்சரிப்புகளை தொடர்ந்து பாதுகாக்கவும் பயன்பட்டது.
ஜெரோமின் மிகப் பெரும் சச்சரவு
பைபிளின் எவ்வளவு பகுதிகளை ஜெரோம் மொழிபெயர்க்க போப் டெமாசிஸ் விரும்பினார் என்பது தெளிவாயில்லை. ஆனால் இம்மொழிபெயர்ப்பின் சம்பந்தமாக ஜெரோமின் கருத்தைக் குறித்ததில் சற்று சந்தேகம் இருக்கிறது. ஜெரோம் தன்னுடைய நோக்கத்தில் விடாப்பிடியாக, எப்படியாகிலும் மொழிபெயர்ப்பை முடிக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். “சர்ச்சுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பிரயோஜனமான மதிப்புவாய்ந்த” எதையாவது உருவாக்கவேண்டும் என்ற பேராவல் அவரது இருதயத்தில் கொழுந்துவிட்டெரிந்தது. ஆகவே முழு பைபிளையும் லத்தீன் மொழியில் மறுபடியும் மொழிபெயர்த்து வெளியிட தீர்மானித்தார்.
ஜெரோம் செப்டுவஜின்ட்டை அடிப்படையாக வைத்து எபிரெய வேதாகமத்தை மொழிபெயர்க்க திட்டமிட்டார். இது எபிரெய வேதாகமத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் பதிப்பானது, கடவுளால் நேரடியாக ஏவப்பட்டெழுதப்பட்டது என்பதாக அநேகரால் கருதப்பட்டது. ஆகவே கிரேக்க மொழி பேசும் கிறிஸ்தவர்களிடையே இந்த செப்டுவஜின்ட் பதிப்பானது அமோக விநியோகிப்பை பெற்றது.
ஜெரோமுடைய மொழிபெயர்ப்பு வேலை தொடர்ந்து முன்னேறியது. இருந்தபோதிலும், லத்தீன் மொழியில் இவர் எதிர்ப்பட்ட அதே பிரச்சினை இங்கேயும் தலைதூக்கியது. கிரேக்க கையெழுத்துப் பிரதிகளுக்கு இடையே ஒத்திசைவு இல்லாமல் இருப்பதைக் கண்ட ஜெரோம் மனவேதனையால் துடித்துப்போனார். ஆகவே இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். நம்பகமான பைபிள் மொழிபெயர்ப்பு தேவையெனில், மிக உயர்வாக கருதப்பட்ட செப்டுவஜின்ட் உட்பட, கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மாறாக மூல எபிரெய பிரதியையே ஆதாரமாக வைத்து மொழிபெயர்க்க வேண்டும்.
இத்தீர்மானத்திற்கு எதிராக பெரும் கூக்குரலே கிளம்பியது. வசனங்களை புரட்டுபவர், கடவுளை தூஷிப்பவர் என்பதாகவும் ஜெரோம் குற்றஞ்சாட்டப்பட்டார். மேலுமாக யூதர்களை திருப்திப்படுத்துவதற்காக சர்ச்சின் கலாச்சாரங்களை கைவிட்ட பச்சைத் துரோகி என்ற பட்டத்தையும் பெற்றார். அந்தச் சமயத்தில் சர்ச்சின் முதன்மை இறையியல் வல்லுநராக அகஸ்டின் இருந்தார். ஜெரோம் தன் மொழிபெயர்ப்புக்கு செப்டுவஜின்ட்டை உபயோகிக்குமாறு அகஸ்டின் விடுத்த வேண்டுகோள் இதுதான்: “உம்முடைய மொழிபெயர்ப்பு அநேக சர்ச்சுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக வைத்துக்கொள்வீராக. அப்பொழுது லத்தீன் சர்ச்சுகளிலும் கிரேக்க சர்ச்சுகளிலும் வேதாகமம் வாசிக்கப்படும்போது வித்தியாசங்கள் தோன்றுமேயானால் அது மனதிற்கு வேதனை அளிக்குமல்லவா, இதை நீரே சற்று யோசித்துப்பாரும்.”
உண்மையில் அகஸ்டினின் பெரும் கவலை இதுதான்: எபிரெய பிரதிகளின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்ட ஜெரோமுடைய லத்தீன் பதிப்பை மேற்கத்திய சர்ச்சுகள் பயன்படுத்துவார்கள். அதே சமயத்தில் கிழக்கிலுள்ள கிரேக்க சர்ச்சுகளோ இன்னும் செப்டுவஜின்ட் பதிப்பையே பயன்படுத்தி வந்தார்களேயானால் சர்ச் பிளவுபட்டுவிடும் என்பதே அவருடைய கவலைக்கு காரணம்.b செப்டுவஜின்ட்டை ஒரு சாதாரண மொழிபெயர்ப்புக்காக அதுவும் ஜெரோம் மட்டுமே ஆதரிக்கும் மொழிபெயர்ப்புக்காக ஓரம்கட்டுவது சரியில்லை என்பதாக அகஸ்டியன் கருதினார்.
இந்த எதிரிகளின் தாக்குதலுக்கு ஜெரோம் எவ்விதமாக பிரதிபலித்தார்? அவருடைய இயல்பின்படியே ஜெரோம் யாருடைய குற்றச்சாட்டுகளையும் கண்டுகொள்ளவேயில்லை. எபிரெயுவிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கும் தனது வேலையை தொடர்ந்தார். இதன் விளைவாக பொ.ச. 405-ல் தன்னுடைய லத்தீன் பைபிளை மொழிபெயர்த்து முடித்தார். பல வருடங்களுக்கு பின்பு இவருடைய மொழிபெயர்ப்பு வல்கேட் என அழைக்கப்படலானது. இது பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பு என்பதைக் குறிக்கிறது (லத்தீனின் வல்கேட்டஸ் என்பதற்கு “பொதுவானது, அதாவது பிரபலமானது” என அர்த்தமாம்).
என்றென்றும் நிலைத்திருக்கும் சாதனைகள்
ஜெரோம் மொழிபெயர்த்த எபிரெய வேதாகமம் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த பிரதிகளின் வெறும் மறுபதிப்பு அல்ல. மாறாக அவற்றை காட்டிலும் தனிச்சிறப்பு வாய்ந்தது. எதிர்காலத்தில், பைபிள் படிப்பு மற்றும் மொழிபெயர்ப்பின் போக்கை இது வெகுவாய் பாதித்தது. வரலாற்றாசிரியர் வில் டூராண்ட் இதைப் பற்றி குறிப்பிட்டார்: “வல்கேட் நான்காம் நூற்றாண்டின் மிகவும் பிரசித்தி பெற்ற, அதிக செல்வாக்குமிக்க இலக்கியப் படைப்பாக திகழ்கிறது.”
ஜெரோம் மற்றவர்களைத் தாக்கிப் பேசும் இயல்புள்ளவராகவும் எதற்கெடுத்தாலும் வாதம் செய்யும் குணமுள்ளவராகவும் இருந்தார். இருப்பினும், யாருடைய ஆதரவுமின்றி, தனிநபராக பைபிள் ஆராய்ச்சியை, ஏவப்பட்ட எபிரெய வாக்கியத்திடம் திருப்பினார். பூர்வ எபிரெய மற்றும் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளை ஆழ்ந்த கவனம் செலுத்தி ஒப்பிட்டு ஆராய்ந்தார். இந்த மூலப்பிரதிகள் இன்று உலக அரங்கிலிருந்து மறைந்து விட்டன. ஜெரோமுடைய இம்மாபெரும் பணி மசோரைட்ஸ் என்ற யூதப் புலவர்களினுடையதைக் காட்டிலும் மிகச் சிறப்பானதாகும். பைபிள் வசனங்களை வேறு மொழிபெயர்ப்புகளோடு ஒத்துப்பார்ப்பதற்கு வல்கேட் மதிப்புவாய்ந்த கருவியாக இருக்கிறது.
ஜெரோமுடைய சொந்த பழக்கவழக்கங்கள் மற்றும் மதங்களைப் பற்றிய கருத்துகளும் மெச்சத்தக்கவிதமாக இல்லையென்பது உண்மைதான். இருந்தபோதிலும் கடவுளுடைய வார்த்தையின் அன்பர்கள் ஜெரோமை போற்றுகிறார்கள்; பைபிள் மொழிபெயர்ப்பில் சர்ச்சைக்குரிய இந்த முன்னோடியின் கடுமையான உழைப்பை இவர்கள் மனதார புகழுகிறார்கள். தன்னுடைய இலக்கை ஜெரோம் எட்டிப்பிடித்தார். ஆம் “எதிர்கால சந்ததியினருக்கு பிரயோஜனமான மதிப்புவாய்ந்த” ஒன்றை உருவாக்குவதில் ஜெரோம் சாதனை படைத்தார்.
[அடிக்குறிப்புகள்]
a ஜெரோமுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் வரிசையையும் காலப்பகுதியையும் குறித்ததில் வரலாற்று ஆசிரியர்களுக்கிடையே கருத்து வேறுபாடிருக்கிறது.
b கடைசியில் நடந்ததும் அதுதான். ஜெரோம் மொழிபெயர்த்த பைபிளே கிறிஸ்தவ மண்டலத்தின் மேற்கத்திய பகுதியில் இன்று முக்கியமான பைபிள் மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கிறிஸ்தவ மண்டலத்தின் கிழக்கத்திய பகுதிகளில் செப்டுவஜின்ட் பதிப்புதான் இன்று வரையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
[பக்கம் 28-ன் படம்]
பெத்லெகேமிலுள்ள ஜெரோமின் சிலை
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
மேல் இடது, எபிரெய மூலவாக்கியம்: Courtesy of the Shrine of the Book, Israel Museum; கீழே இடது, சிரியாக் கையெழுத்துப் பிரதி: Reproduced by Permission of the Chester Beatty Library, Dublin; மேல் மத்தியில், கிரேக்க கையெழுத்துப் பிரதி: Courtesy of Israel Antiquities Authority