நீங்கள் எச்சரிப்புக்கு செவிகொடுப்பீர்களா?
வங்காள தேசத்திலுள்ள சிட்டகாங் என்ற மாவட்டத்தை மே 19, 1997 அன்று ஒரு சூறாவளி வாரிசுருட்டிக்கொண்டு போனது. மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்தக் காற்று காக்ஸ் பஜார் டவுனில் பதிவுசெய்யப்பட்டது. கூரையால் வேயப்பட்ட கிராமப்புற குடிசைகள் மாயமாக மறைந்துவிட்டன. ஒருசமயத்தில் வீடுகள் இருந்த இடங்களில் மண் மேடைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன. மரங்களும் தொலைபேசி கம்பங்களும் அடியோடு சாய்ந்துவிட்டன. மற்றவை தீக்குச்சிகளைப் போல் பாதியாக முறிந்துவிட்டன. இந்தச் சூறாவளியில் 105 ஆட்கள் இறந்துவிட்டனர் என வோரார் காகாஜ் செய்தித்தாளில் வெளிவந்த தலைப்புச்செய்தி அறிக்கை செய்தது.
சுமார் 36 மணிநேரங்களுக்கு முன்னதாகவே புயலின் திசையை வானிலை ஆராய்ச்சி மையம் ஒலிபரப்பியது. சூறாவளி பாதுகாப்பு இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்ததால் அநேக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இப்பொழுது நூறு வருடங்களுக்கும் மேலாக, எந்தவொரு சூறாவளியைக் காட்டிலும் அதிக சேதம் விளைவிக்கும் ஒரு பேரழிவு வரப்போவதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் அறிவித்து வருகின்றனர். பைபிள் அதை ‘யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள்’ என அழைக்கிறது. (யோவேல் 2:31, தி.மொ.) பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிப்பின் தீர்க்கதரிசன செய்திகளுக்கு செவிகொடுப்பதன் மூலம், நாம் அதன் சீற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.—செப்பனியா 2:2, 3.
யெகோவாவின் சாட்சிகள் அழிவைப் பற்றி முன்னுரைக்கும் தீர்க்கதரிசிகள் அல்ல. அவர்களுடைய செய்தி நம்பிக்கையின் செய்தி. கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மக்கள் கற்றுக்கொள்ள உதவிசெய்வதே அவர்கள் விருப்பம், அந்த ராஜ்யம் வெகுசீக்கிரத்தில் இந்தப் பூமியிலுள்ள எல்லா அநீதியையும் ஒழித்துவிடும். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சொல்கிறது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
WHO/League of Red Cross