கல்நெஞ்சம் கரைகையில்
உள்ள யெகோவாவின் சாட்சிகள் 1989-ம் ஆண்டில் சட்டப்பூர்வ மத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டனர். கிறிஸ்தவ நடுநிலை வகிப்பினால் சிறைவாசம் பெற்ற சாட்சிகள் மெல்லமெல்ல விடுதலை செய்யப்பட்டனர்; ஆனால் அவர்களோடு பைபிளை படிப்பதற்கு ஏங்கிய அநேகர் சிறைக் கம்பிகளுக்குப் பின் அடைபட்டிருந்தனர். ஒரு சிறையில் ஒருசமயம் கல் நெஞ்சக்காரர்களாக இருந்தவர்கள் கடவுளுடைய வார்த்தையின் செல்வாக்கால் அடியோடு மாற யெகோவாவின் சாட்சிகள் உதவினர்; தொடர்ந்து நீங்கள் வாசிக்கவிருக்கும் கட்டுரை அவர்களுடைய கடும் முயற்சியைப் பற்றிய தொகுப்பே.
தென்மேற்கு போலந்தில் 12,000 மக்கள் வாழும் சிறுநகர் வாவூப். அங்கே 200 வயதான சிறைச்சாலை உள்ளது; குரூரமான குற்றவாளிகளில் சிலருக்கு அங்குதான் சிறைவாசம். யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது முதற்கொண்டு, சிறையில் தங்களோடு இருந்தவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர்கள் பெருமுயற்சி எடுத்திருக்கின்றனர்; அதை மிகுந்த ஆர்வத்துடன் செய்கின்றனர்.
பிப்ரவரி 1990-ல் போலந்தில் உள்ள எல்லா சிறை அதிகாரிகளுக்கும் நீதித்துறை அமைச்சகம் வழங்கிய கடிதமே இதற்கு வழிவகுத்தது. உவாட்ச் டவர் பிரசுரங்களை பெற்றுக்கொள்ளவோ யெகோவாவின் சாட்சிகளுடன் பேசவோ விரும்பும் கைதிகளுக்கு “எந்த விதத்திலும் தொந்தரவு தரக்கூடாது” என அந்தக் கடிதம் காட்டியது. வாவூப் சிறையில் ரொம்ப காலம் கழித்த சாட்சிகளில் சிலருக்கு மனம் இறுகிப்போன அநேக குற்றவாளிகளோடு நல்ல பழக்கம். கல் நெஞ்சக்காரர்களான இத்தகைய குற்றவாளிகளை பைபிள் சத்தியம் கனியச் செய்வதற்காக தாங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் ஆசீர்வதிக்கும்படி இவர்கள் யெகோவா மேல் முழுக்கமுழுக்க சார்ந்திருந்தனர்.
வேலை துவங்குகிறது
வாவூப் சிறையைச் சந்திப்பதற்காக சுமார் நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ரோக்ளாப் நகரைச் சேர்ந்த சகோதரர் செஸ்வாப் அனுமதி பெற்றார். “அங்கே பிரசங்க வேலையை ஆரம்பிக்கிறது அவ்வளவு ஒண்ணும் ஈஸியாக இருக்கல. நாம நடத்தற ‘மதக் கூட்டங்கள்’ கைதிகளுக்கு நிஜமாகவே பிரயோஜனமாயிருக்குன்னு சிறை அதிகாரிகளை நம்ப வைக்க அவர்களுடன் நிறைய தடவை மணிக்கணக்கா பேச வேண்டியிருந்தது” என அவர் சொல்கிறார்.
“குற்றவாளிகள், மதக் கூட்டம்ன்னு நாம அனுமதிக்கிறத பணம் சம்பாதிக்கிறதுக்கு ஒரு வழியா பயன்படுத்திக்கிறாங்கன்னு உயரதிகாரி ஒருத்தர் விடாப்பிடியா சொல்லிக்கிட்டு இருந்தார்.” இது இப்பிரச்சினையை இன்னும் ரொம்ப சிக்கலாக்கியது என செஸ்வாப்பின் பார்ட்னர் பாவே சொல்கிறார். ஆனால், ஒருகாலத்தில் பயங்கர கேடிகளாயிருந்த மூவர் 1991-ல் முழுக்காட்டுதல் எடுத்தபோது, சிறை அதிகாரிகளுடைய மனதும் மாறியது; எனவே அதிக ஒத்துழைப்பைத் தர ஆரம்பித்தனர்.
செஸ்வாப் இவ்வாறு விளக்குகிறார்: “முதலில் சிறைக் கைதிங்க, அப்புறம் அவங்கள பார்க்கவர்ற உறவுக்காரங்க, அத்தோட சிறை அதிகாரிங்கன்னு எல்லாத்துக்கும் பிரசங்கிக்க ஆரம்பிச்சோம். கொஞ்ச நாளுக்கு அப்புறம், இதுவரைக்கும் யாருக்குமே கிடைக்காத ஒரு வாய்ப்பு எங்களுக்குக் கிடைச்சது. அதாவது வார்டு வார்டா போயி பிரசங்கிக்கிறதுக்கு அனுமதிச்சாங்க. கொஞ்சபேர் ஆர்வம் காட்ட ஆரம்பிச்சப்ப பைபிள் படிப்பு, கிறிஸ்தவ கூட்டங்கள் இதெல்லாத்தையும் நடத்தறதுக்கு எங்களுக்கு ஒரு சின்ன ஹாலும் கொடுத்தாங்க.” ஆம், கைதிகளின் கல் நெஞ்சை கரைக்க யெகோவா வழியைத் திறந்தார்.
திறம்பட்ட கல்வித்திட்டம்
விரைவிலேயே அந்தச் சிறிய ஹாலில் கூட்டம் நிரம்பி வழியத் துவங்கியது. முழுக்காட்டப்பட்ட கைதிகளும் வெளியில் இருந்து வந்த சகோதரர்களும் பிரசங்க வேலை செய்ததால், கிட்டத்தட்ட 50 கைதிகள் கூட்டங்களுக்கு வரத் துவங்கினர். “மூனு வருஷத்துக்கும் மேல அதே இடத்திலதான் எல்லா கூட்டங்களையும் நடத்தினோம். கைதிகளும் வாராவாரம் கூட்டங்களுக்கு தவறாம வந்தாங்க” என உள்ளூர் மூப்பர் ஒருவர் விளக்குகிறார். எனவே, மே 1995-ல் அதைவிட பெரிய ஹாலில் கூட்டங்களை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
சிறையில் நடைபெறும் கூட்டங்களுக்கு கைதிகளில் யாரெல்லாம் வரலாம் என்பதை பொறுப்பிலுள்ள சகோதரர்கள் எவ்வாறு தீர்மானிப்பர்? சகோதரர்கள் செஸ்வாப்பும் ஜெஸ்வாப்பும் இதற்கு பதிலளிக்கின்றனர்: “உண்மையிலுமே சத்தியத்தில அக்கறை காட்டற கைதிகளோட லிஸ்ட் எங்ககிட்ட இருக்கும். எந்தக் கைதியாவது படிக்கிறபடி நடக்கறதுக்கு முயற்சி எடுக்காம இருந்தாலோ நியாயமான காரணமில்லாம கூட்டங்கள தவறவிட்டாலோ, இதையெல்லாம் அவர் சரியாக மதிக்கலைன்னு நாங்க புரிஞ்சுக்குவோம்; அவருடைய பெயரை லிஸ்டில் இருந்து எடுத்துட்டு, ஜெயில் அதிகாரி கிட்ட சொல்லிடுவோம்.”
பைபிளை சொல்லித் தரும்போது, கூட்டங்களுக்கு எவ்வாறு நன்கு தயாரிக்க வேண்டும், நம் பிரசுரங்களை திறம்பட்ட வகையில் எப்படி பயன்படுத்த வேண்டும் போன்றவற்றை சகோதரர்கள் கற்பிக்கிறார்கள். இதனால், கைதிகள் கூட்டங்களுக்கு வரும்போது, நன்கு தயாரித்து வருகிறார்கள்; நிறைய பதில்களையும் சொல்கிறார்கள். பைபிளை திறம்பட்ட விதமாக பயன்படுத்தி மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற விதத்தில் பதில்களைத் தருகிறார்கள்; அதிலுள்ள ஆலோசனைகளை தங்களுக்கே பொருத்துகிறார்கள்; அடிக்கடி, ‘நான் இப்படி செய்யனும்னு தெரிஞ்சுகிட்டேன்’ என்று பதில் சொல்வார்கள்.
“வாவூப் சிறையில மொத்தமா 20 பைபிள் படிப்பு நடத்தப்படுது. அதுல எட்டு படிப்புகள சிறையிலிருக்கிற மூனு பிரஸ்தாபிகளே நடத்தறாங்க” என அச்சபையின் செயலர் சொல்கிறார். வார்டுக்கு வார்டும் சிறை காம்பவுண்டுக்குள் நடக்கும்போதும் பிரசங்கிக்கிறதனால அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பத்து மாதத்தில், அதாவது செப்டம்பர் 1993 முதல் ஜூன் 1994 வரை, 235 புத்தகங்களை, கிட்டத்தட்ட 300 சிற்றேடுகளை, 1,700 பத்திரிகைகளை இவர்கள் விநியோகித்திருக்கிறார்கள். சமீபத்தில், சிறை அதிகாரிகள் இருவர் தங்களுக்கும் பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டனர்.
விசேஷ மாநாடுகள் மகிழ்ச்சியான நேரங்கள்
காலப்போக்கில், சிறையில் நடைபெறும் கல்வித் திட்டத்தில், மற்றொரு அம்சமும் சேர்த்துக் கொள்ளப்பட்டது; அதாவது விசேஷ மாநாடுகள். சிறையின் உடற்பயிற்சி அறையில், பயணக் கண்காணிகளும் மற்ற தகுதியுள்ள சகோதரர்களும் வட்டார, ஒருநாள் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்களின் முக்கிய பாகங்களை அளிப்பர். முதல் விசேஷ மாநாடு அக்டோபர் 1993-ல் நடைபெற்றது. ஐம்பது கைதிகள் ஆஜராயினர்; “ரோக்ளாவிலிருந்து இல்லத்தரசிகள், குட்டிப் பிள்ளைகள் என குடும்பங்குடும்பமாக வந்திருந்தனர்” என்று ஸ்வாவோ போல்ஸ்கீ செய்தித்தாள் அறிவித்தது; ஆஜரானவர்களின் மொத்த எண்ணிக்கை 139. மாநாட்டின் இடைவேளையில் சகோதரிகள் தயாரித்திருந்த உணவை சாப்பிட்டனர்; அதோடு அருமையான கிறிஸ்தவ கூட்டுறவையும் அனுபவித்தனர்.
அதுமுதற்கொண்டு இன்னும் ஏழு விசேஷ மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன; அதன் பலன்கள் சிறைச்சாலைக்குள் மட்டுமல்ல, அதைத் தாண்டியும் சென்றிருக்கின்றன. வாவூப்பில் வசிக்கும் ஒரு முன்னாள் கைதியை சகோதரி ஒருவர் சந்தித்தார்; அவரால் நற்செய்தியை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு கைதி இன்று சாட்சியாக இருக்கிறார் என்று சகோதரி சொன்ன மாத்திரத்தில் அம்மனிதன் நம்ப முடியாமல், “அந்தக் கொலைகாரன் இப்ப ஒரு சாட்சியா?” எனக் கேட்டார்; அவருடைய குரலில் டன் கணக்கில் ஆச்சரியம். இதன் விளைவு அவரும் பைபிளைப் படிக்க ஒப்புக் கொண்டார்.
வியக்க வைக்கும் மாற்றங்கள்
இந்த மாபெரும் கல்வித் திட்டம் கைதிகளின் கல் நெஞ்சங்களை உண்மையிலேயே கரைத்திருக்கின்றனவா? ஏன், அவர்களிடமே கேட்போமே?
நிதான சுபாவமுள்ளவராகிய ஜிஸ்லா தன் கதையை விவரிக்கிறார்: “எங்கப்பாம்மா யாருனே எனக்கு தெரியாது. ஏன்னா, சின்னதிலேயே அவங்க என்னை அம்போனு விட்டுட்டாங்க. அதனால அன்பு, பாசத்துக்காக ஏங்கி தவிச்சேன். கேட்பாரில்லாததால, பொடிசிலயே பயங்கர ரௌடித்தனம் செய்ய ஆரம்பிச்சேன், கடைசியா கொலையும் செஞ்சேன். நான் செஞ்ச தப்பெல்லாம் மனச குத்தக்குத்த தற்கொலை செஞ்சுக்கறதுதான் மேல்னு தோணிச்சு. நல்ல வழி பிறக்காதான்னு ஏங்கினேன். அந்த சமயத்திலதான், 1987-ல காவற்கோபுர பத்திரிகை என் கண்ல பட்டுச்சு. அதிலிருந்து உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பத்தியும் நித்திய ஜீவனைப் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். இன்னும் காலம் கடந்திடலைன்னு என்னையே தேத்திக்கிட்டேன்; தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டேன்; பைபிளைப் படிக்கத் தொடங்கினேன். யெகோவா கிட்டேயிருந்தும் சகோதரர்கள் கிட்டேயிருந்தும் அன்பின் இலக்கணத்தைக் கத்துக்கிட்டேன்.” இந்த முன்னாள் கொலைகாரர் 1993-ம் ஆண்டு முதற்கொண்டு உதவி ஊழியராகவும், சிறையில் துணைப் பயனியராகவும் சேவித்து வருகிறார்; கடந்த ஆண்டு ஒழுங்கான பயனியராக ஆனார்.
மறுபட்சத்தில், டாமாஷ் பைபிள் படிப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டார். “உண்மையைச் சொல்லனும்னா, ஆர்வம் இருந்தனாலத்தான் பைபிள படிச்சேன்னு சொல்ல முடியாது. யெகோவாவின் சாட்சிகளோட போதனைகள் எனக்கும் தெரியும்னு மத்தவங்ககிட்ட காட்டிக்க ஆசைப்பட்டேன். அந்த எண்ணத்துலதான் பைபிளைப் படிச்சேன். அதனால படிச்சதோட விட்டுட்டேன்; அதுபடி நடக்கல. ஒருநாள், கூட்டம் எப்படித்தான் இருக்கும்னு பாக்கலாமேனு நினைச்சுப் போனேன். முழுக்காட்டுதல் எடுத்திருந்த கைதிகள் என்னை அன்பா வரவேற்றாங்க. சும்மா மத்தவங்ககிட்ட ஷோ காண்பிச்சுகிட்டு இருக்கிறதுக்கு பதிலா, இறுகிப்போன மனச மென்மையாக்கி, என்னை நானே அடியோட மாத்திக்கனும்கிறதே அப்பதான் என் புத்திக்கு உரச்சது” என அவர் ஒத்துக் கொள்கிறார். டாமாஷ் கிறிஸ்தவர்களுக்குரிய குணங்களை காட்டத் துவங்கினார். (எபேசியர் 4:22-24) இன்றோ, அவர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்ற சாட்சி; வார்டுக்கு வார்டு பிரசங்கம் செய்வதென்றால் அவருக்கு படுகுஷி.
முன்னாள் நண்பர்களிடமிருந்து தொல்லைகள்
சிறையில் பைபிளைப் படித்தவர்களுக்கு வார்டுகளிலிருந்த முன்னாள் நண்பர்களிடமிருந்தும் சிறை அதிகாரிகளிடமிருந்தும் பயங்கர தொல்லைகள் வந்தன. ஒருவர் சொல்கிறார்: “எப்பப்பாரு என்னை கேலியும் கிண்டலும் பண்ணினாங்க. ‘யெகோவா தேவன்கிட்ட ஜெபிச்சுகிட்டே இருங்க. பைபிள படிங்க, அது உங்களுக்கு மன சமாதானத்த தரும்’னு சகோதரர்கள் சொன்ன உற்சாகமான வார்த்தைகள் எப்பவும் என் காதில ஒலிச்சுகிட்டே இருந்தது. அது நிஜமாகவே எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.”
முழுக்காட்டுதல் பெற்ற சகோதரர் ரிஷார்ட் திடகாத்திரமானவர். அவர் கதையைக் கேளுங்கள்: “என்கூட இருந்த கைதிகள் ஈவிரக்கமே இல்லாம என்னைப் பத்தி கன்னாபின்னான்னு பேசுவாங்க; ‘மீட்டிங்குக்கு வேணா போயிக்கோ. ஆனா, யோக்கியமானவனா மாறிட்டதா பாவ்லா பண்ணினே அப்புறம் நடக்கறதே வேற’ அப்படின்னு என்ன மிரட்டினாங்க. பைபிள்படி வாழறதுக்கு என் பழக்கவழக்கங்களை மாற்றினேன். அதனால என்னைப் படாத பாடுபடுத்தினாங்க. படுக்கைய தலைகீழா போட்டுடுவாங்க, பைபிள் புத்தகங்களையெல்லாம் கண்டமேனிக்கி தூக்கி எறிவாங்க, என் எடத்த குப்பகூடமா ஆக்கிடுவாங்க. என் கோபத்தை அடக்கறதுக்கு பலத்தை கேட்டு நான் யெகோவா தேவன்கிட்ட ஜெபம் பண்ணிட்டே எல்லாத்தையும் எடுத்து சுத்தம் பண்ணுவேன். நாள் ஆகஆக அவங்க என் வழிக்கு வரதை அறவே விட்டுட்டாங்க.”
இன்னும் சில முழுக்காட்டப்பட்ட கைதிகள் இப்படிச் சொல்கிறார்கள்: “யெகோவா தேவன சேவிக்கிறதுக்கு முழுமனசா தீர்மானம் பண்ணிட்டோம்கிறது மத்த கைதிகளுக்கு தெரிஞ்சவுடனே, தொல்ல இன்னொரு ரூபத்திலேயும் வரும். ‘இங்க பாரு, நீ இனிமேல் தண்ணி அடிக்கக்கூடாது, சிகரெட் குடிக்கக்கூடாது, பொய்சொல்லக்கூடாதுன்னு தெரியுமில்ல’ன்னு எதுக்கெடுத்தாலும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. இது தன்னடக்கத்தை வளர்த்துக்கறதுக்கு கைகொடுக்கும்; கெட்ட பழக்கத்தையும் சீக்கிரமா விட்டுடறதுக்கு உதவும். அதோட ஆவியின் கனிகளை வளர்த்துக்கவும் முடியும்.”—கலாத்தியர் 5:22, 23.
கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள்
1991-ன் வசந்த காலத்தில் சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் உடற்பயிற்சி அறையில் முதல் முழுக்காட்டுதல் நடைபெற்றது. முழுக்காட்டுதலைப் பெற்ற அந்த பாக்கியசாலி ஜிஸ்லாவே. சிறையிலிருந்த பன்னிரண்டு கைதிகள் அதைக் காண வந்தனர். மற்ற சபைகளிலிருந்து 21 சகோதர சகோதரிகளும் வந்திருந்தனர். அந்தக் கூட்டம் கைதிகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது. வியப்புமேலிட வைக்கும் அளவுக்கு அநேகர் முன்னேற்றங்கள் செய்தனர்; எனவே அந்த ஆண்டின் இறுதியில் இன்னும் இரண்டு கைதிகள் முழுக்காட்டுதல் பெற்றனர். இரண்டு வருடம் கழித்து, அதாவது 1993-ல், முழுக்காட்டுதல் இரண்டு முறை நடைபெற்றது. அதில் இன்னும் ஏழு பேர் யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றனர்!
டிசம்பர் மாதம் நடைபெற்ற முழுக்காட்டுதலைக் குறித்து உள்ளூர் செய்தித்தாள் யெகார்ட் ராட்ஸ்வாயா இவ்வாறு எழுதியது: “உடற்பயிற்சி அறை எங்கும் மக்கள் வெள்ளம்; எல்லாரையும் வரவேற்று கைகுலுக்குகிறார்கள். யாருமே அங்கு அந்நியர்போல் இல்லை. அவர்கள் ஒரு பெரிய குடும்பமாக, ஒரே கடவுளாகிய யெகோவாவைச் சேவிப்பதிலும் சிந்தனையிலும் வாழ்க்கை முறையிலும் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.” அப்போதிருந்த “பெரிய குடும்ப”த்தின் அளவு 50 கைதிகள் உட்பட 135 பேர். அவர்களில் சிலரைச் சந்திப்போமா?
ஜூன் மாதம் முழுக்காட்டுதல் பெற்ற யெர்சி இவ்வாறு விவரிக்கிறார்: “ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு பைபிள் சத்தியத்தப் பத்தி ஏதோ கொஞ்சம் தெரியும்; ஆனா நான் உண்மையில கல் நெஞ்சுக்காரன். மோசடி, முத மனைவிகிட்டயிருந்து டைவர்ஸ், அதுக்கப்புறம் கிறிஸ்டினான்ற பொண்ணோட தப்பான உறவு, அதனால பிறந்த ஒரு குழந்தை, அடிக்கடி தப்புத்தண்டா பண்ணிட்டு கம்பி எண்ணுறது இப்படியெல்லாம்தான் என் வாழ்க்கை ஓடிட்டு இருந்துச்சு.” சிறையில் இருந்த மற்ற பயங்கர கேடிகள்கூட சாட்சிகளாக மாறியதைக் கண்டு அவர் தனக்குத்தானே இவ்வாறு கேட்டுக் கொண்டார்: ‘அப்படின்னா, நானும் நல்லவனா மாற முடியுமா?’ ஒரு பைபிள் படிப்பை நடத்தும்படி கேட்டு கூட்டங்களுக்கு வரத் துவங்கினார். இருந்தாலும், மூன்று வருடங்களாக கிறிஸ்டினாவும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருக்கிறார் என்று பப்ளிக் பிராஸிகியூட்டர் ஒருவர் மூலமாக அறிய வந்தபோது அவருடைய வாழ்க்கைப் போக்கே முற்றிலும் மாறியது. “அப்படியே திகைச்சு போயிட்டேன். ‘அப்படின்னா நான்? நான் மட்டும் ஏன் இப்படி வாழ்க்கையை வீணாக்கிட்டிருக்கேன்?’ என்று சிந்திக்கத் தொடங்கினேன். யெகோவா என்னை ஏத்துக்கனும்னா நான் என் வாழ்க்கையை முழுசா சரிப்படுத்தனும்னு தெரிஞ்சுகிட்டேன்.” பிரிந்தவர்கள் இணையும்போது சந்தோஷத்தைக் கேட்கவா வேண்டும்! ஆம், யெர்சியும் கிறிஸ்டினாவும், அவர்களது பதினொரு வயது மகள் மார்சினாவும் இணைந்தனர். சீக்கிரத்திலேயே அவர்கள் சட்டப்படி திருமணம் செய்தார்கள். சிறைக்கைதியாகவும் அதோடு வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களின் மத்தியிலும்கூட, யெர்சி சமீபத்தில் சைகை மொழியைக் கற்றுக் கொண்டார்; இதனால செவிடாய் இருக்கும் கைதிகளுக்கு இப்போது உதவுகிறார்.
தொடக்கப்பள்ளியில் இருக்கும்போதே மிரோஸ்வாப் ஒரு கிரிமினல். ஃபிரன்ட்ஸ் செய்ததையெல்லாம் பார்த்து பார்த்து ரசித்தார். இவரும் அதையே செய்ய ரொம்ப காலம் எடுக்கவில்லை. அவர் அடிச்ச கொள்ளைகளுக்கு கணக்குவழக்கே இல்லை, அடித்து வீழ்த்தியவர்களும் கொஞ்சநஞ்சம் பேரில்லை. கடைசியில் ஜெயிலில் தள்ளப்பட்டார். “ஜெயிலுக்கு வந்தவுடனே, திருந்த வழி தேடி பாதிரியார்கிட்ட போனேன். ஆனா ஏமாற்றம் அடஞ்சதுதான் மிச்சம். அதனால் விஷம் குடிச்சு செத்துறலாம்னு முடிவு செஞ்சேன்” என மிரோஸ்வாப் கூறுகிறார். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த அதே நாளில், வேறொரு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கே வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி பேசிய காவற்கோபுர பிரதி அவர் கண்ணில் பட்டது. அதைக் குறித்து அவர் சொல்கிறார்: “நான் எத தேடி அலஞ்சிட்டிருந்தேனோ, அதுவே என்னை தேடி வந்ததுபோல இருந்தது. தெளிவாவும், நெஞ்சில பதியறமாதிரியும் அதுல எழுதியிருந்தது. இப்பதான் எனக்கு வாழனும்னு ஆசையே வந்துச்சு! அதனால யெகோவா தேவன்கிட்ட ஜெபம் பண்ணினேன்; பைபிள் படிப்பு நடத்தச் சொல்லி சாட்சிகள்கிட்ட கேட்டேன்.” பைபிளில் படித்தவற்றை தன் வாழ்க்கையில் பொருத்தி 1991-ல் முழுக்காட்டுதல் பெற்றார். இப்போது சிறையில் துணைப் பயனியராக சேவிக்கிறார்; வார்டுக்கு வார்டு பிரசங்கிக்கும் சிலாக்கியம் பெற்றிருக்கிறார்.
இதுவரையிலுமாக மொத்தம் பதினைந்து கைதிகள் முழுக்காட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய தண்டனைக் காலத்தை மொத்தமாக கணக்கிட்டால் கிட்டத்தட்ட 260 வருடங்கள். சிலர் தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்பட்டனர். 25 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அது பத்து வருடங்களாக குறைக்கப்பட்டது. சிறையிலிருக்கையில் ஆர்வம் காட்டிய அநேகர் விடுதலை செய்யப்பட்ட பிறகு முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாயினர். அதோடு, இப்போது நான்கு பேர் முழுக்காட்டுதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறை அதிகாரிகளின் பாராட்டு
“குற்றவாளிகளுடைய மனப்பாங்குகளில் ஏற்படுகிற மாற்றம் வெளிப்படையாகவே தெரிகிறது. அநேகர் புகைப்பதை நிறுத்திவிடுகிறார்கள்; வார்டுகளை சுத்தமாக வைக்கிறார்கள். அநேக குற்றவாளிகள் இதுபோல் மாறியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது” என ஒரு சிறை அறிக்கை குறிப்பிடுகிறது.
“மதம் மாறும் கைதிகள் மிகவும் ஒழுங்குள்ளவர்களாகிறார்கள்; சிறை காவலாளிகளுக்கு அவர்கள் எந்தத் தொல்லையையும் தருவதில்லை” என வாவூப்பிலுள்ள சிறை நிர்வாகமே ஒத்துக் கொள்வதாக ஷாகெ வார்ஷாவெ செய்தித்தாள் தெரிவிக்கிறது. தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய வாழ்க்கை முறைக்குள் ஐக்கியமாகிவிடுகிறார்கள் என்றும் மீண்டும் கிரிமினல் வாழ்க்கைக்கு திரும்புவதில்லை என்றும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.
சரி, சிறை அதிகாரி என்ன சொல்கிறார் எனக் கேட்போமா? “யெகோவாவின் சாட்சிகள் இந்தச் சிறைச்சாலையில் கற்பிக்கிறது ரொம்ப நல்லதாவும் உதவியாவும் இருக்கு. கைதிகள் [சாட்சிகளோடு] பைபிளைப் படிக்கும்போது, அவங்களோட வாழ்க்கை நியதிகளையும் தராதரங்களையும் ஆச்சரியப்படற அளவுக்கு மாறுது. அதுவே அவங்களோட வாழ்க்கையை கட்டுப்படுத்தும் சக்தியாகுது. ரொம்ப புத்திசாலித்தனமாவும் பவ்வியமாகவும் நடந்துப்பாங்க. சுறுசுறுப்பா வேல செய்வாங்க, அவங்கனால எங்களுக்கு ஒரு பிரச்சினயும் இல்ல” என அவர் சொல்கிறார். அதிகாரிகளிடமிருந்து வரும் இத்தகைய பாராட்டுக்கள் வாவூப் சிறையிலுள்ள கைதிகளிடம் பிரசங்கிக்கும் சாட்சிகளுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது.
சிறையிலுள்ளோரைச் சந்திக்கும் சாட்சிகள் இயேசுவின் இவ்வார்த்தைகளை முழுமையாக புரிந்து கொண்டிருக்கின்றனர்: “நான் என்னுடைய ஆடுகளை அறிந்திருக்கிறேன், என் ஆடுகள் என்னை அறிந்திருக்கின்றன. . . . அவை என் சத்தத்துக்கு செவிகொடுக்கும்; அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” (யோவான் 10:14, 16, NW) நல்ல மேய்ப்பர் இயேசு கிறிஸ்து செம்மறியாடு போன்றவர்களை கூட்டிச்சேர்ப்பதை சிறைக் கம்பிகள்கூட தடுக்க முடியாது. இத்தகைய ஆனந்தம் பொங்கும் வேலையில் பங்குகொள்ள கிடைத்த பாக்கியத்துக்காக வாவூப்பிலுள்ள சாட்சிகள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். முடிவு வருவதற்கு முன்பு கல்நெஞ்சுக்காரரான இன்னும் அநேகர் நற்செய்திக்கு செவிகொடுப்பதற்காக யெகோவா தொடர்ந்து தங்களை ஆசீர்வதிக்கும்படி அவரை நோக்கியிருக்கின்றனர்.—மத்தேயு 24:14.
[பக்கம் 27-ன் பெட்டி]
“பருவத்திலோ பெரியவர்கள், பழக்கத்திலோ குழந்தைகள்”
வாவூப் சிறையில் பிரசங்கிக்கும் சாட்சிகள் கூறுகின்றனர்: “சிறையில் கொஞ்ச காலம் வாழ்ந்த பிறகு, சுதந்தரமா வாழ்றதுனா, இல்ல சொந்த கால்ல நிற்கறதுனா என்னனு கைதிகள் மறந்துடறாங்க. ‘பருவத்தில பெரியவங்களாவும் பழக்கத்தில குழந்தைகளாவும்’ ஆயிடறாங்க. சிறையிலிருந்து விடுதலையான பிறகு, தன்னைத்தானே எப்படி கவனிச்சுக்கறதுன்னு அவங்களுக்குத் தெரியறதில்ல. இதனாலதான் பைபிள் சத்தியத்த கத்துக்கொடுக்கிறதோட சபையோட கடமை முடிஞ்சுறதில்ல. இந்த சமுதாயத்தின் ஒரு அங்கமா ஆகறதுக்கு நாங்க அவருக்கு உதவ வேண்டியிருக்கு; புதுசுபுதுசா என்னென்ன ஆபத்துக்கள், சோதனைகள் வரும்ன்னும் எச்சரிக்கணும். அளவுக்குமீறி பாதுகாக்கறமாதிரி போயிடாம ஜாக்கிரதையா இருந்தாலும், புதிய வாழ்க்கை ஆரம்பிக்க உதவி செய்யணும்.”