உலகை மாற்றிய பைபிள் மொழிபெயர்ப்பு
கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மோசே 3,500 வருடங்களுக்கு முன்பு பைபிளை எழுதத் துவங்கியபோது, ஒரு சிறிய தேசத்தினரால் மட்டுமே அதை வாசிக்க முடிந்தது. (உபாகமம் 7:7) பைபிள் அத்தேசத்தின் தாய்மொழியாகிய எபிரெயுவில் மட்டும் கிடைக்கப்பெற்றதே அதற்குக் காரணம். இந்நிலை காலச்சக்கரத்தால் மாறவிருந்தது.
பல நூற்றாண்டுகளாக பைபிள் செய்தி பரவிய வேகத்தையும் அது ஏற்படுத்திய செல்வாக்கையும் குறைவாக எடைபோட்டுவிட முடியாது; அதற்கு வழிகோலியது அதன் முதல் மொழிபெயர்ப்பாகிய செப்டுவஜின்ட்தான். இந்த முதல் மொழிபெயர்ப்பு ஏன் பிறந்தது? உலகை மாற்றிய மொழிபெயர்ப்பு இதுவே என சொல்வது சரியா?
கடவுள் அருள்பெற்ற மொழிபெயர்ப்பா?
பொ.ச.மு. ஏழாம், ஆறாம் நூற்றாண்டுகளில் பாபிலோனில் சிறையிருப்புக்கு பின், அநேக யூதர்கள் பூர்வ இஸ்ரவேல், யூதா நாடுகளில் குடியேறவில்லை. சிறையிருப்பின் காலப்பகுதியில் பிறந்த யூதர்களுக்கு எபிரெயு இரண்டாம் மொழியானது. பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில், எகிப்திலுள்ள அலெக்ஸாண்டிரியாவில் ஒரு யூத சமுதாயம் இருந்தது. இந்த அலெக்ஸாண்டிரியா கிரேக்க பேரரசின் மாபெரும் கலாச்சார மையமாக திகழ்ந்தது. இங்கு வாழ்ந்த யூதர்கள் பரிசுத்த வேதாகமத்தை கிரேக்கில் மொழிபெயர்ப்பதை அவசியமாக கருதினார்கள். ஏனென்றால் கிரேக்க மொழிதான் இப்போது அவர்களுடைய தாய்மொழி.
அச்சமயம் வரையாக, பைபிள் பெரும்பாலும் எபிரெய மொழியில் ஏவப்பட்டு எழுதப்பட்டது. சில பகுதிகள் மட்டும் எபிரெயுவுடன் நெருங்கிய தொடர்புள்ள அரமேயிக் மொழியில் எழுதப்பட்டிருந்தன. கடவுளுடைய வார்த்தையை வேறு பாஷையில் மொழியாக்கம் செய்வது அதன் தெய்வீக ஏவுதலின் தூண்டுவிக்கும் சக்தியை குறைத்துவிடுமா? ஒருவேளை தவறாக புரிந்துகொள்வதற்கு வழிநடத்துமா? ஏவப்பட்ட வார்த்தையை தங்களுடைய ஏகபோக சொத்தாக பெற்ற யூதர்கள், மொழிபெயர்ப்பின் மூலமாக அதன் செய்தி தவறாக புரிந்துகொள்ளப்படும் அபாயத்துக்கு அதை உள்ளாக்குவார்களா?—சங்கீதம் 147:19, 20; ரோமர் 3:1, 2.
உணர்வை தாக்கும் இத்தகைய விஷயங்கள் அவர்களுள் அச்சத்தை மூட்டிவிட்டன. இருப்பினும், யூதர்கள் கடவுளுடைய வார்த்தையை புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும் என்ற விஷயம் தலைதூக்கியபோது மற்ற விவாதங்கள் அடங்கி ஒடுங்கின. மோசே எழுதிய பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களாகிய டோரா கிரேக்க மொழிபெயர்ப்புக்கு தயாரானது. மொழிபெயர்ப்புக்கு காரணமான உண்மைச் சம்பவங்கள் திரைமறைவாகி கட்டுக்கதைகளே காட்சியளிக்கின்றன. அரிஸ்டியஸின் கடிதத்தின்படி, எகிப்திய அரசராகிய இரண்டாம் தாலமி (பொ.ச.மு. 285-246) முதல் ஐந்து புத்தகங்களின் (அல்லது டோராவின்) ஒரு பிரதி தன் அரச நூலகத்திற்கு வேண்டி கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென விரும்பினார். அதற்காக 72 யூத நிபுணர்களை நியமித்தார்; அவர்கள் எகிப்திலிருந்து இஸ்ரவேலுக்கு வந்தனர்; மொழிபெயர்ப்பு வேலை 72 நாட்களில் முடிவடைந்தது. இம்மொழிபெயர்ப்பு பின்னர் யூத சமுதாயத்தினருக்கு வாசித்து காட்டப்பட்டது; மொழிநயத்தோடும் திருத்தமாகவும் இருக்கிறதென்று அவர்கள் அறிவித்தார்கள். ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தனித்தனி அறையில் அமர்த்தப்பட்டார்கள்; இருந்தாலும்கூட அவர்களுடைய மொழிபெயர்ப்பில் எழுத்துக்கு எழுத்து ஒரேபோல இருந்ததென்றெல்லாம் இந்தக் கதை பிற்காலத்தில் மிகைப்படுத்திக் கூறப்பட்டது. 72 மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றி வழிவழியாக வந்த இந்தக் கதையே கிரேக்க பைபிள் மொழிபெயர்ப்பு செப்டுவஜின்ட் என அழைக்கப்பட காரணமாயிற்று; இது “எழுபது” என பொருள்படும் இலத்தீன் வார்த்தையின் அடிப்படையில் அமைந்தது.
அரிஸ்டியஸின் கடிதம் சர்ச்சைக்குரிய ஒன்று என தற்கால நிபுணர்கள் பெரும்பாலோர் ஒத்துக் கொள்கின்றனர். இந்த மொழிபெயர்ப்புக்கு வழிவகுத்தவர் அரசர் இரண்டாம் தாலமி அல்ல எனவும் அலெக்ஸாண்டிரியாவில் வாழ்ந்த யூத சமுதாயத்தினரே எனவும் அவர்கள் நம்புகின்றனர். மூல எழுத்துக்களைப் போலவே செப்டுவஜின்ட்டும் ஏவப்பட்டதுதான் என்ற பொதுவான நம்பிக்கை முதல் நூற்றாண்டு யூதர்களிடையே இருந்தது என அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த யூத தத்துவஞானி ஃபைலோ, யூத சரித்திராசிரியன் ஜோசிபஸ் ஆகியோரின் எழுத்துக்களும் தால்முட்டும் காட்டுகின்றன. இத்தகைய முயற்சி சந்தேகமில்லாமல் உலகமுழுவதும் உள்ள யூத சமுதாயம் செப்டுவஜின்ட்டை ஏற்கவேண்டும் என்பதற்காகத்தான்.
மோசேயின் ஐந்து புத்தகங்கள் மட்டுமே முதன்முதலில் மொழிபெயர்ப்புக்கு உட்பட்டது; எனினும், கிரேக்கிற்கு மொழிபெயர்க்கப்பட்ட முழு எபிரெய வேதாகமுமே செப்டுவஜின்ட் என அழைக்கப்படலாயிற்று. மீதமுள்ள புத்தகங்களின் மொழிபெயர்ப்பு அடுத்த நூறு ஆண்டுகளுக்கு நீடித்தது. முழு செப்டுவஜின்ட்-டின் மொழிபெயர்ப்பு ஒருங்கிணைந்த முயற்சியின் பலன் என்று சொல்லமுடியாது; மாறாக கொஞ்சம் கொஞ்சமாக மொழியாக்கத்துக்கு உட்பட்டது. திறமைகளிலும் எபிரெய மொழியின் புலமையிலும் மொழிபெயர்ப்பாளர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு இருந்தது. பெரும்பாலான புத்தகங்கள் சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்கப்பட்டன; சில சமயங்களில் இது அளவுக்குமீறி அவ்வாறு இருந்தது. மற்றசில மொழிபெயர்ப்புகள் கொஞ்சம் தாராள நடையில் இருந்தன. ஒருசில புத்தகங்கள் விலாவாரியாகவோ அல்லது ரத்தினசுருக்கமாகவோ மொழிபெயர்க்கப்பட்டன. பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குள்ளாக, எபிரெய வேதாகமத்தின் அனைத்து புத்தகங்களும் கிரேக்கில் வாசிக்கப்பட முடிந்தன. முரண்பட்ட விளைவுகள் இருந்தபோதிலும், எபிரெய வேதாகமத்தை கிரேக்கில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைத்தது.
சேமின் கூடாரங்களில் யாப்பேத்தா?
செப்டுவஜின்ட்-டைக் குறித்து விவரிக்கையில், ஆதியாகமம் 9:27-ஐ தால்முட் மேற்கோள் காட்டுகிறது: ‘யாப்பேத் . . . சேமின் கூடாரங்களில் குடியிருப்பான்.’ (மேகில்லா 9ஆ, பாபிலோனிய தால்முட்) செப்டுவஜின்ட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க மொழிநடையின் அழகினால், யாப்பேத் (கிரேக்க வம்சத்தை தோற்றுவித்த யாவானின் தகப்பன்) சேமின் (இஸ்ரவேல் தேசத்தின் மூதாதை) கூடாரங்களில் தங்கினார் என்று தால்முட் அடையாள பாஷையில் வர்ணிக்கிறது. இருந்தாலும், செப்டுவஜின்ட்டின் மூலமாக சேம் யாப்பேத்தின் கூடாரங்களில் தங்கினார் என்று அதையே மாற்றியும் சொல்லலாம். எப்படி?
பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகா அலெக்சாந்தர் பல பகுதிகளை வென்று கைப்பற்றினார்; பிறகு, அந்நாடுகளில் கிரேக்க மொழியையும் கலாச்சாரத்தையும் பரப்ப தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கொள்கை கிரேக்கமயமாக்குதல் (Hellenization) என அழைக்கப்பட்டது. யூதர்கள் தொடர்ந்த கலாச்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதைப் போல உணர்ந்தார்கள். கிரேக்க கலாச்சாரமும் தத்துவமும் மேலோங்கினால் யூதர்களின் மதம் மெதுமெதுவாய் அழிந்துவிடும். இந்தத் தாக்குதல் அலையை எது ஓயச்செய்யும்?
செப்டுவஜின்ட்டை மொழிபெயர்ப்பதில் யூதர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு உள்நோக்கம் இருந்திருக்கலாம் என யூத பைபிள் மொழிபெயர்ப்பாளர் மாக்ஸ் மார்கோலிஸ் கருத்து தெரிவிக்கிறார்: “மொழிபெயர்ப்பு அவசியம் என நினைத்தவர்கள் யூத சமுதாயத்தினரே என நாம் எடுத்துக்கொண்டால், இதில் இன்னொரு உள்நோக்கமும் அடங்கியிருப்பதை காணலாம்; அதாவது, புற இனத்தாருக்கு யூத சட்டங்களை வெட்டவெளிச்சமாக்குவதும், யூதர்களின் கலாச்சாரம் கிரேக்கர்களின் ஞானத்துக்கு ஒன்றும் சளைத்ததல்ல என்பதை உலகம் அறிவதற்குமே.” கிரேக்க உலகிற்கு எபிரெய வேதாகமத்தை அறிமுகப்படுத்துவது தற்காப்பையும் அளித்தது; எதிர்த்தாக்குதலையும் நடத்தியது.
கிரேக்கமயமாக்குதல் என்ற அலெக்சாந்தரின் கொள்கை கிரேக்க மொழியை சர்வதேச மொழியாக ஆக்கிற்று. ரோமர்களால் அவருடைய ஆட்சி வீழ்ச்சியடைந்தபோதிலும், பாமரர்களின் கிரேக்க மொழியே, (அல்லது கொய்னி கிரேக்கு) நாடுகளுக்கிடையே வாணிபத்துக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் உறுதுணையாக தொடர்ந்து சேவித்தது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சியோ இயல்பாக ஏற்பட்ட முன்னேற்றமோ எதுவாக இருந்தாலும்சரி, எபிரெய வேதாகமத்தின் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு கடவுளையும் யூத சட்டங்களையும் அறியாத யூதரல்லாத மக்களின் மனதில் விரைவில் இடம் பிடித்தது. அதன் விளைவுகள் மலைக்க வைப்பதாய் இருந்தன.
யூத மதத்தை தழுவினவர்களும் கடவுள் பயமுள்ளவர்களும்
பொ.ச. முதல் நூற்றாண்டுக்குள்ளாக, “மோசேயுடைய சட்டத்தொகுப்பின் அழகும் மேன்மையும் யூதர்களிடையே மட்டுமல்ல, மற்ற எல்லா நாடுகளிலும் உயர்வாக மதிக்கப்பட்டன” என ஃபைலோவால் எழுத முடிந்தது. முதல் நூற்றாண்டில் பலஸ்தீனாவுக்கு வெளியே வாழ்ந்த யூதர்களைக் குறித்து யூத சரித்திராசிரியர் யோசெப் கிளௌவ்ஸ்னர் இவ்வாறு சொல்கிறார்: “இத்தனை லட்சக்கணக்கான யூதர்கள் சின்னஞ்சிறு பலஸ்தீனாவிலிருந்துதான் வந்திருப்பார்கள் என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. பெருமளவில் யூத மதத்துக்கு மாறிய ஆண்களும் பெண்களும் இதில் அடங்குவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.”
இருந்தாலும், மனதை தொடும் இத்தகைய கருத்துக்கள் முழு விவரத்தையும் அளிப்பதில்லை. யூத சரித்திரத்தின் பேராசிரியரும் எழுத்தாளருமான ஷா ஜே. டி. கோகென் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “புற இனத்தவர்களில் ஆண்களும் பெண்களுமான அநேகர் பொ.ச.மு. கடைசி நூற்றாண்டுகளிலும், பொ.ச. முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் யூத மதத்துக்கு மாறினர். இருந்தாலும், யூத மதத்தின் குறிப்பிட்ட சில கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, ஆனால் யூத மதத்துக்கு மாறாத பெரும் எண்ணிக்கையான புற இனத்தவரும் இருந்தனர்.” கிளெளவ்ஸ்னரும் கோகெனும் இப்படி மதம் மாறாதவர்களை கடவுள் பயமுள்ளவர்கள் என அழைக்கின்றனர்; இப்பதம் அக்காலத்திய கிரேக்க இலக்கியங்களில் மிகப் பிரபலம்.
யூத மதத்தை தழுவியவர்களுக்கும் கடவுள் பயமுள்ளவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? யூத மதத்தை தழுவியவர்கள் முழுவதுமாக மதம் மாறியவர்கள்; இஸ்ரவேலின் கடவுளை ஏற்று (மற்ற கடவுட்களை புறக்கணித்து), விருத்தசேதனம் செய்து, இஸ்ரவேல் தேசத்தாரோடு ஒன்றரக் கலந்ததால் முழுக்க முழுக்க யூதராகவே கருதப்பட்டார்கள். இதற்கு மாறாக, கோகென் கடவுள் பயமுள்ளவர்களைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “இந்தப் புற இனத்தவர் யூதரின் அநேக பழக்கவழக்கங்களை அனுசரித்து, யூதரின் கடவுளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயபக்தியைக் காட்டியபோதிலும், தங்களை யூதராக கருதவில்லை, மற்றவர்களும் அவர்களை யூதராக நினைக்கவில்லை.” யூத மதத்தை ஏற்று, “அதன் சில பழக்கவழக்கங்களை அனுசரித்தார்கள், ஆனால் . . . யூதராக முழுவதும் மாறவில்லை. எனவே ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைத்தவர்கள்” என கிளௌவ்ஸ்னர் விவரிக்கிறார்.
மிஷனரி வேலையில் ஈடுபட்ட யூதர்களுடனான உரையாடலின் காரணமாகவோ, நடத்தையிலும் பழக்கவழக்கத்திலும் யூதர்கள் வித்தியாசமாக இருந்ததன் காரணமாகவோ சிலருக்கு அவர்களுடைய கடவுள்மீது பற்று ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும், கடவுள் பயமுள்ளவர்களுக்கு யெகோவா தேவனைப் பற்றி கற்றுக் கொடுத்த முக்கிய கருவி செப்டுவஜின்ட்தான். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கடவுள் பயமுள்ளவர்களின் எண்ணிக்கை தெரியாதபோதிலும், ரோம பேரரசு முழுவதிலும் கடவுளைப் பற்றி ஓரளவு அறிவை பரப்பியது சந்தேகமில்லாமல் செப்டுவஜின்ட்தான். செப்டுவஜின்ட்டின் மூலமாக முக்கியமான அடித்தளமும் போடப்பட்டது.
செப்டுவஜின்ட் கிறிஸ்தவத்திற்கு வழியைத் திறந்தது
கிறிஸ்தவ செய்தியைப் பரப்புவதில் முதலிடம் வகித்ததும் செப்டுவஜின்ட்தான். பொ.ச. 33-ல் கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டபோது கிரேக்க மொழி பேசும் யூதர்கள் அநேகர் அங்கு இருந்தனர். அந்த ஆரம்ப கட்டத்தில் கிறிஸ்துவின் சீஷரானவர்களில் யூத மதத்தைத் தழுவியவர்களும் இருந்தனர். (அப்போஸ்தலர் 2:5-11; 6:1-6; 8:26-38) இயேசுவின் அப்போஸ்தலர்கள், மற்ற ஆரம்ப சீஷர்கள் ஆகியோரின் ஏவப்பட்ட எழுத்துக்கள் பேரளவான மக்களை மனதில் வைத்து எழுதப்பட்டதால், அவை கிரேக்கில் பதிவு செய்யப்பட்டன.a எனவே கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் காணப்படும் எபிரெய வேதாகமத்தின் அநேக மேற்கோள்கள் செப்டுவஜின்ட்டில் இருந்து எடுக்கப்பட்டன.
யூதர்களையும் யூத மதத்தை தழுவினவர்களையும் தவிர வேறுசிலரும் ராஜ்ய செய்தியை ஏற்க தயாராக இருந்தனர். புற இனத்தை சேர்ந்த கொர்நேலியு, ‘தேவபக்தியுள்ளவரும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவருமாயிருந்து ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார்.’ பொ.ச. 36-ல் கொர்நேலியு, அவருடைய குடும்பத்தார், இன்னும் மற்றவர்கள் அவருடைய வீட்டில் குழுமியிருந்தனர்; இவர்களே புற இனத்தாரில் முதலாவதாக கிறிஸ்துவின் சீஷர்களாக முழுக்காட்டுதல் பெற்றார்கள். (அப்போஸ்தலர் 10:1, 2, 24, 44-48; ஒப்பிடுக: லூக்கா 7:2-10.) அப்போஸ்தலன் பவுல் ஆசியா மைனருக்கும் கிரீஸுக்கும் பயணம் செய்தபோது, ஏற்கெனவே தேவனுக்குப் பயந்து நடந்த புற இனத்தவர் பலரிடமும் ‘பக்தியுள்ள கிரேக்கரிடமும்’கூட பிரசங்கித்தார். (அப்போஸ்தலர் 13:16, 26; 17:4) பிற இனத்தைச் சேர்ந்த கொர்நேலியுவும் மற்ற சிலரும் நற்செய்தியை ஏற்க தயாராக இருந்தது ஏன்? செப்டுவஜின்ட் வழியைத் திறந்திருந்ததே காரணம். செப்டுவஜின்ட் “திருப்புக்கட்டத்தையே ஏற்படுத்திய முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம்; அது இல்லையேல் கிறிஸ்தவமும் மேற்கத்திய கலாச்சாரமும் இல்லை” என்பது ஒரு நிபுணரின் ஊகம்.
செப்டுவஜின்ட் “ஏவப்பட்ட” தன்மையை இழக்கிறது
செப்டுவஜின்ட்டை இந்தளவுக்கு விரிவாக பயன்படுத்தியது பிற்காலத்தில் யூதர்களுக்கு முதுகில் குத்து விழுந்ததுபோல இருந்தது. உதாரணமாக, கிறிஸ்தவர்களோடு நடத்திய விவாதங்களில், செப்டுவஜின்ட் தவறான மொழிபெயர்ப்பு என யூதர்கள் குரலெழுப்பினர். பொ.ச. இரண்டாம் நூற்றாண்டுக்குள்ளாக, ஒருசமயம் ஆகா ஓஹோ என புகழ்ந்த மொழிபெயர்ப்புக்கு யூத சமுதாயம் பாராமுகம் காட்டியது. 72 மொழிபெயர்ப்பாளர்களின் பழங்கதையை மறுத்து ரபீக்கள் இவ்வாறு தெரிவித்தனர்: “ஒருகாலத்தில், தாலமி அரசருக்காக மூத்தோர் ஐவர் டோராவை கிரேக்கில் எழுதினர்; டோரா திருத்தமாக மொழிபெயர்க்க முடியாமல் போனதால், தங்கக் கன்றுகுட்டி செய்த அந்த நாளைப் போலவே இந்த நாளும் இஸ்ரவேலுக்கு அபாக்கிய நாளே.” ரபீக்களின் கருத்துக்களோடு ஒத்துப்போவதை உறுதி செய்வதற்காக, கிரேக்கில் புதிய மொழிபெயர்ப்பை உருவாக்க ரபீக்கள் ஏற்பாடு செய்தனர். பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் ரபீ அகிவ்வா சீடரும் யூத மதத்தை தழுவியவருமான அகில்லா மொழிபெயர்த்தார்.
இதன்பின் செப்டுவஜின்ட்டை யூதர்கள் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால் ஜெரோமின் லத்தீன் வல்கேட் உருவாகும் வரையில் அப்போதுதான் வளர்ந்துவந்த கத்தோலிக்க சர்ச்சுக்கு நிலையான “பழைய ஏற்பாடாக” அது இருந்தது. ஒரு மொழிபெயர்ப்பு அதன் மூல மொழியின் இடத்தை ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனாலும்கூட, யெகோவா தேவனையும், இயேசு கிறிஸ்து ஆளும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றிய அறிவை பரப்புவதில் செப்டுவஜின்ட் முக்கிய பங்கு ஆற்றியது. உண்மையாகவே, செப்டுவஜின்ட் உலகை மாற்றிய ஒரு பைபிள் மொழிபெயர்ப்பே.
[அடிக்குறிப்புகள்]
a மத்தேயு சுவிசேஷம் முதலில் எபிரெயுவில் எழுதப்பட்டிருக்கலாம்; பின்பு கிரேக்கிற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம்.
[பக்கம் 31-ன் படம்]
பவுல் பிரசங்கித்த அநேக ஆட்களால் ‘செப்டுவஜின்ட்டைப்’ புரிந்துகொள்ள முடிந்தது
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of Israel Antiquities Authority