பெத்தேல்—நன்மைக்கும் தீமைக்கும் பேர்போன நகரம்
சில நகரங்கள் அங்கு நடைபெறும் சம்பவங்களைப் பொறுத்து பேர்பெற்றதாகவோ பேர்போனதாகவோ ஆகிவிடுகின்றன. பெத்தேலோ, இதற்கு விதிவிலக்கு. அது நல்லது கெட்டது இரண்டுக்குமே பேர்போனது. கோத்திரத் தலைவராகிய யாக்கோபு இந்நகரத்தை பெத்தேல் என்று பெயரிட்டார். அதற்கு “கடவுளின் வீடு” என்று அர்த்தம். ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்கள் கழித்து, தீர்க்கதரிசியாகிய ஓசியா அதை “அக்கிரமத்தின் வீடு” என அழைத்தார். இந்நகர் எப்படி நற்பெயரை இழந்து கெட்டபெயரைச் சம்பாதித்தது? அதன் சரித்திரத்திலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?
கடவுளுடைய மக்களுக்கும் பெத்தேலுக்கும் உள்ள உறவு பொ.ச.மு. 1943-ம் ஆண்டிலேயே ஆரம்பமானது. அப்போது ஆபிரகாம் உயிரோடிருந்தார். அச்சமயத்தில் அந்நகர் லூஸ் என்ற கானானியப் பெயரைத் தாங்கி நின்றது. இது எருசலேமுக்கு வடக்கே ஏறத்தாழ 17 கிலோமீட்டர் தூரத்தில் மலைமேல் அமைந்த பட்டணம். ஆபிரகாமும் அவருடைய தம்பி மகன் லோத்தும் பெத்தேலைச் சுற்றியுள்ள மலைகளில் ஓர் உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கின்றனர்; அது வளம் கொழிக்கிற யோர்தான் சமவெளியின் கீழ்ப்பகுதியைப் பார்ப்பதற்கு சௌகரியமான இடம்; அவர்கள் அங்கிருந்து கீழே பார்ப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். இருவருடைய மந்தைகளும் பெரிதாகிவிட்டதால் மேய்ச்சல் நிலங்கள் பற்றாக்குறையாகிவிட்டன; இப்பிரச்சினையை லோத்துவிடம் ஆபிரகாம் மிக நயமாக எடுத்துரைக்கிறார்: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்.”—ஆதியாகமம் 13:3-11.
இடத்தை முதலில் தெரிந்தெடுப்பதற்கான உரிமை தனக்குத்தான் உள்ளது என்று ஆபிரகாம் வற்புறுத்தவில்லை. ஆனால் தன்னைவிட இளையவரான லோத்து நல்ல இடத்தை தெரிந்தெடுப்பதற்கு வாய்ப்பளித்தார். ஆபிரகாமின் சிறந்த குணத்தை நாமும் பின்பற்றலாம். பிரச்சினைகளை அமைதியாக பேசித் தீர்ப்பதற்கும் சுயநலமின்றி நடப்பதற்கும் நாம் முந்திக் கொள்ளலாம். அதன்மூலம் சண்டை மூளத்தக்க நிலைமைகளை சுமூகமாக்கலாம்.—ரோமர் 12:18.
காலங்கள் உருண்டோடின. ஆபிரகாமின் பேரன் யாக்கோபு லூஸ் பட்டணத்தில் தங்கினார். அந்த இடத்தில் ஒரு விந்தையான கனவு கண்டார். ‘ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். அதற்கு மேலாகக் கர்த்தர் நிற்பதையும்’ அவர் பார்த்தார். (ஆதியாகமம் 28:11-19, NW; ஒப்பிடுக: யோவான் 1:51.) அந்தக் கனவில் மிக முக்கியமான அர்த்தம் பொதிந்திருந்தது. யாக்கோபின் சந்ததியைக் குறித்து கடவுள் அவரிடம் வாக்குறுதி அளித்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு கனவில் கண்ட அந்த தேவதூதர்கள் அவருக்கு உதவிபுரிவார்கள். ஏணிக்கு மேலே இருந்த கடவுளின் உன்னத ஸ்தானம் இந்த வேலையில் அவர் தேவதூதர்களை பயன்படுத்துவார் என்பதைக் காட்டியது.
யாக்கோபை ஆதரிப்பதாக கடவுள் இவ்வாறு உறுதியளித்தது அவருடைய மனதைத் தொட்டது. கனவிலிருந்து கண்விழித்த பிறகு, அந்த இடத்துக்கு பெத்தேல் என்று பெயரிட்டார். அதற்கு “கடவுளின் வீடு” என அர்த்தம். பிறகு, கடவுளிடம் இவ்வாறு நேர்ந்து கொண்டார்: “தேவரீர் எனக்குத்தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்.”a (ஆதியாகமம் 28:20-22) தன்னிடம் இருப்பவை அனைத்தும் கடவுளிடமிருந்தே வந்தன என்பதை யாக்கோபு புரிந்துகொண்டார். எனவே நன்றிக் கடனாக அவருக்கு ஒரு பெரும் பாகத்தை கொடுக்க விரும்பினார்.
இன்றும்கூட கிறிஸ்தவர்களுக்கு தேவதூதர்கள் பணிவிடை செய்கின்றனர். (சங்கீதம் 91:11; எபிரெயர் 1:14) “கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதில் தாராளமாய் இருப்பதன் மூலம்” அவர் நமக்கு பொழியும் ஆசீர்வாதங்களுக்கு அவர்களும்கூட போற்றுதல் காட்டலாம்.—2 கொரிந்தியர் 9:11, 12, NW.
காலப்போக்கில், யாக்கோபின் சந்ததி ஒரு தேசமாக வளர்ந்தது. அவர்களுடைய தலைவர் யோசுவா கானான் தேசத்தை முற்றுகையிட்டதும் முதற்கட்ட நடவடிக்கையாக பெத்தேலின் பொய் வணக்க அரசனை அரியணையிலிருந்து வீழ்த்தினார். (யோசுவா 12:16) நியாயாதிபதிகளின் காலத்தில், பெண் தீர்க்கதரிசியாகிய தெபோராள் பெத்தேலுக்கு அருகே வாழ்ந்துவந்தார். கடவுளுடைய வார்த்தைகளை மக்களுக்கு விளக்கினார். சாமுவேல் இஸ்ரவேல் தேசத்தின் நியாயாதிபதியாக இருந்தார்; அவ்வேலையாக பெத்தேலுக்கு தவறாமல் சென்றார்.—நியாயாதிபதிகள் 4:4, 5; 1 சாமுவேல் 7:15, 16.
விசுவாசதுரோகத்துக்கு பெத்தேல் பேர்போனதாகிறது
பொ.ச.மு. 997-ல் அந்த ராஜ்யம் இரண்டாக பிளவுற்றது; அதன் பிறகு, உண்மை வணக்கத்துடன் பெத்தேலுக்கு இருந்த தொடர்பும் அறுபட்டுப்போனது. யெரொபெயாம் பெத்தேலை கன்றுக்குட்டி வணக்கத்தின் மையமாக்கினார்; கன்றுக்குட்டி, யெகோவாவை குறிக்கிறது என சொல்லிக் கொண்டார். (1 இராஜாக்கள் 12:25-29) அதனால்தான், பெத்தேலின் அழிவைக் குறித்து ஓசியா தீர்க்கதரிசனம் உரைக்கையில், அதை ‘பெத்தாவேன்’ என அழைக்கிறார்; அதற்கு “அக்கிரமத்தின் வீடு” என அர்த்தம்.—ஓசியா 10:5, 8.
பெத்தேல் ஆவிக்குரிய அக்கிரமங்கள் தலைவிரித்தாடும் இடமானது; ஆனாலும்கூட, அங்கு நடைபெற்ற சம்பவங்கள் நமக்கு முக்கியமான பாடங்களை கற்பிக்கின்றன. (ரோமர் 15:4) பெத்தேலிலுள்ள பலிபீடங்கள் மற்றும் ஆசாரியர்களின் அழிவை முன்னுரைப்பதற்காக பெயர் குறிப்பிடப்படாத ஒரு தீர்க்கதரிசி யூதாவிலிருந்து அனுப்பப்பட்டார்; அதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்கிறோம். வழியில் எதையும் சாப்பிடாமல், குடிக்காமல், தெற்கே சில கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் யூதாவுக்கு திரும்பி விடவேண்டுமென்று யெகோவா அவரிடம் சொல்லியிருந்தார். இஸ்ரவேலின் அரசனாகிய யெரொபெயாம் முன்பு இந்தத் தீர்க்கதரிசி தைரியமாக தீர்க்கதரிசனம் உரைத்தார்; பெத்தேலில் உள்ள பலிபீடத்தை சாபமிட்டார். ஆனால் பெத்தேலில் உள்ள ஒரு வயதான தீர்க்கதரிசியின் வீட்டில் சாப்பிடுவதன் மூலம் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போனார். ஏன்? அந்தப் வயதான தீர்க்கதரிசி, தன் சக தீர்க்கதரிசியாகிய இவரை உபசரிக்கும்படி யெகோவாவின் தேவதூதன் கட்டளையிட்டாரென பொய் சொன்னார். யூதாவிலிருந்து வந்த அந்தத் தீர்க்கதரிசியின் கீழ்ப்படியாமையால் அவருடைய கதை அற்பாயுசில் முடிந்தது.—1 இராஜாக்கள் 13:1-25.
நம் உடன் விசுவாசி ஒருவர் சந்தேகத்திற்குரிய ஒன்றை செய்யும்படி சொன்னால் நாம் என்ன செய்ய வேண்டும்? தவறான ஆலோசனையை நல்நோக்கத்துடன் சொன்னாலும் அது தீங்கையே கொண்டுவரும் என்பதை மறந்துவிடாதீர்கள். (மத்தேயு 16:21-23-ஐ ஒப்பிடுக.) யெகோவாவிடம் ஜெபத்தின் மூலமும், அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும் வழிநடத்துதலை நாடினால், துயரத்தில் விளைவடைந்த, பெயர் அறியப்படாத இந்தத் தீர்க்கதரிசி செய்த தவறை நாம் செய்யாமல் தவிர்ப்போம்.—நீதிமொழிகள் 19:21; 1 யோவான் 4:1.
ஏறக்குறைய 150 வருடங்கள் கழித்து, பெத்தேலுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைப்பதற்காக தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் வடக்கே பயணம் செய்தார். அங்கிருந்த பகை நிறைந்த பார்வையாளர்களையும் “யூதாதேசத்துக்கு ஓடிப்போ” என்று ஆமோஸுக்கு செருக்குடன் பதிலளித்த ஆசாரியனாகிய அமத்சியாவையும் கடுமையாக கண்டனம் செய்தார். அமத்சியாவின் வீட்டார்மேல் வரவிருந்த துயரங்களையும் ஆமோஸ் தைரியமாக சொன்னார். (ஆமோஸ் 5:4-6; 7:10-17) தாழ்மையுள்ள ஊழியர்களை யெகோவா தைரியமிக்கவர்களாக்குவார் என்பதை அவருடைய உதாரணம் நமக்கு நினைப்பூட்டுகிறது.—1 கொரிந்தியர் 1:26, 27.
கடைசியாக, யூதாவின் உண்மையுள்ள அரசனாகிய யோசியா, ‘பெத்தேலில் இருந்த பலிபீடத்தையும் மேடையையும் இடித்து, அதைச் சுட்டெரித்துத் தூளாக்கி, விக்கிரகத்தோப்பையும் சுட்டெரித்தார்.’ (2 இராஜாக்கள் 23:15, 16, NW) கடவுளின் போதனைகளை முழுமையாக பின்பற்றுவதன் மூலமும் சபையை சுத்தமாக வைத்திருப்பதில் முன்நின்று நடத்துவதன் மூலமும் மூப்பர்கள் அவருடைய வைராக்கியத்தின் சிறந்த முன்மாதிரியை இன்று பின்பற்றலாம்.
பெத்தேலின் சரித்திரத்தில் நடந்த இச்சம்பவங்கள் நீதி, அக்கிரமம், யெகோவாவுக்கு கீழ்ப்படிவது, அவருக்கு கீழ்ப்படியாதிருப்பது ஆகியவற்றின் விளைவுகளை படம்பிடித்துக் காட்டுகின்றன. பல வருடங்களுக்கு முன்பாகவே, இஸ்ரவேல் தேசத்துக்கு முன்பு இத்தகைய தெரிவை மோசே வைத்தார்: “இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.” (உபாகமம் 30:15, 16.) பெத்தேலின் சரித்திரத்தை தியானிப்பது ‘அக்கிரமத்தின் வீட்டுடன்’ அல்ல, மெய் வணக்க ஸ்தலமாகிய ‘கடவுளுடைய வீட்டுடன்’ நம்மை அடையாளம் காட்டும்.
[அடிக்குறிப்புகள்]
a யாக்கோபும் ஆபிரகாமும் மனமுவந்து தசமபாகம் செலுத்தினர்.
[பக்கம் 23-ன் படம்]
யெரொபெயாம் கன்றுக்குட்டி வணக்க மையத்தை ஏற்படுத்திய பெத்தேலின் இடிபாடுகள்