மரியாளுக்கு ஏற்பட்டது இயற்கை மரணமா?
லா சர்வேட்டரே ரோமானோ என்ற வாட்டிகன் செய்தித்தாளின்படி, விண்ணேற்பு எனப்படும் கத்தோலிக்கக் கோட்பாடு குறிப்பிடுவதாவது: “ஆதி பாவக் கறைக்கு ஆளாகாமல் விடுவிக்கப்பட்ட தூய கன்னி, அவர்களுடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிவடைந்தபோது, உடலோடும் ஆத்துமாவோடும் மேலே பரலோக மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.” இந்தப் போதகம், மரியாள் “மரிக்கவில்லை, பூமிக்குரிய வாழ்க்கையிலிருந்து பரலோக மகிமைக்கு உடனடியாக மேலெழும்பச் செய்யப்பட்டார்கள்” என்று வலியுறுத்தும்படி, கத்தோலிக்க மத சாஸ்திர வல்லுநர் சிலரை வழிநடத்தியிருக்கிறது என்று அந்தச் செய்தித்தாள் சொல்கிறது.a
சமீபத்தில், இரண்டாம் போப் ஜான் பால், இந்த விஷயத்தின்பேரில் வேறொரு விளக்கம் அளித்தார். ஜூன் 25, 1997 அன்று, வாட்டிகனில் பொது கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் சொன்னார்: “மரியாளின் மரணத்தைப் பற்றிய சூழ்நிலைகளின்பேரில் புதிய ஏற்பாடு எந்தத் தகவலையும் அளிக்கிறதில்லை. குறிப்பிடத்தக்க நுட்பவிவரம் எதுவும் இல்லாததால், அது இயல்பாய் ஏற்பட்டிருக்கும் என்று கருதிக்கொள்ளும்படியே இந்த மௌனம் ஒருவரை வழிநடத்துகிறது. . . . இயற்கையாக உண்டாகும் மரணம் அவர்களுக்கு ஏற்படவில்லை என்று அவர்களைப் பிரத்தியேகப்படுத்த விரும்பும் கருத்துக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றே தோன்றுகிறது.”
போப் ஜான் பால் சொன்னது, இந்தத் தூய கருத்தரிப்பு கோட்பாடு வினைமையான ஒரு குறையை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் தாய், ‘ஆதி பாவக் கறைக்கு ஆளாகாமல் விடுவிக்கப்பட்டு’ இருந்தார்களென்றால், பாவியான ஆதாமால் கடத்தப்பட்ட பாவத்திலிருந்து விளைந்த ‘இயற்கை’ மரணம் மரியாளுக்கு எவ்வாறு ஏற்பட்டிருக்க முடியும்? (ரோமர் 5:12) இயேசுவின் தாயைப் பற்றிய கத்தோலிக்க சர்ச்சின் கருத்து மாறாட்டமே இந்த இறையியல் இரண்டக நிலைக்குக் காரணமாக உள்ளது. இந்த விஷயத்தின்பேரில் கத்தோலிக்க சர்ச்சுக்குள்தானே பிரிவினையும் குழப்பமும் எழும்பியிருப்பது ஆச்சரியமாயில்லை.
மரியாளை மனத்தாழ்மையும், உண்மையும், பயபக்தியும் உள்ளவராக பைபிள் காட்டுகையில், “தூய கருத்தரிப்பே” இந்தப் பண்புகளுக்குக் காரணமாக அது குறிப்பிடுகிறதில்லை. (லூக்கா 1:38; அப்போஸ்தலர் 1:13, 14) ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்’ என்றே பைபிள் சொல்கிறது. (ரோமர் 3:23) ஆம், மனிதவர்க்கத்தினர் எல்லாரையும் போலவே மரியாள் பாவத்தையும் அபூரணத்தையும் சுதந்தரித்தார்கள். இயல்பான அந்தக் காரணங்களினால் அவர்கள் மரிக்கவில்லை என்று நிரூபிப்பதற்கு எந்த அத்தாட்சியுமில்லை.—1 யோவான் 1:8-10-ஐ ஒப்பிடுக.
[அடிக்குறிப்புகள்]
a பிப்ரவரி 15, 1994 தேதியிட்ட காவற்கோபரம், பக்கங்கள் 26-9-ல் “விண்ணேற்பு—கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொள்கையா?” என்ற கட்டுரையைக் காண்க.