பரிசுத்த சேவையின் சிலாக்கியங்களை உயர்வாய் கருதுதல்
பரிசுத்த சேவைக்குரிய வேலை நியமிப்புகளை எளிதாகக் கருதக்கூடாது. பூர்வ யூதாவில் இருந்த ஆசாரியர்கள், யெகோவாவின் ஆலயம் சம்பந்தமாகத் தங்களுக்கு இருந்த சிலாக்கியங்களிடம் அக்கறையற்ற மனப்பான்மையைக் காட்டினபோது, அவர் அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொண்டார். (மல்கியா 1:6-14) மேலும், நசரேயர் பரிசுத்த சேவை சம்பந்தமாக தாங்கள் ஏற்றிருந்த பொறுப்புகளை அற்பமாக கருதும்படி இஸ்ரவேலில் சிலர் தூண்டுதலளித்தபோது, அந்தப் பாவமுள்ள இஸ்ரவேலரை யெகோவா கடிந்துரைத்தார். (ஆமோஸ் 2:11-16) மெய்கிறிஸ்தவர்களும் பரிசுத்த சேவையில் ஈடுபடுகிறார்கள், அதை அவர்கள் முக்கியமாய் கருதுகிறார்கள். (ரோமர் 12:1) இந்தப் பரிசுத்த சேவையில் பல அம்சங்கள் உள்ளன. அவை எல்லாமே முக்கியமானவை.
இயேசு, தம்மைப் பின்பற்றினவர்களோடு பூமியில் இருந்தபோது, அவர்களை கடவுளுடைய ராஜ்ய அறிவிப்பாளராகப் பயிற்றுவித்தார். காலப் போக்கில் அவர்களுடைய செய்தி, பூமியின் கடைமுனைகள் வரையிலும் எட்டும். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8) இந்தப் பிரசங்க ஊழியம், இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களின்போது, மேலுமதிக அவசர தன்மையை ஏற்றிருக்கிறது.
யெகோவாவின் சாட்சிகள் எல்லாரும் இந்த ஊழியத்தில் பங்கேற்கிறார்கள். லட்சக்கணக்கானோர் அவ்வாறு பயனியர் செய்வதில் மகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள். உலகமெங்கும் செய்யப்படும் இந்த ஊழியத்தில் முக்கிய தேவைகளை நிரப்பும்படி, ஆயிரக்கணக்கானோர், பெத்தேலில் விசேஷ முழுநேர சேவைக்கும், வட்டார மற்றும் மாவட்ட கண்காணிகளாகப் பயண ஊழியத்துக்கும் அல்லது மிஷனரி சேவைக்கும் தங்களை அளித்திருக்கிறார்கள். இத்தகைய விசேஷ சேவையில் தொடர்ந்திருக்கும்படி விரும்புவோரின் பங்கில் எது உட்படலாம்?
குடும்பத்தில் மிகமுக்கிய தேவைகள் ஏற்படுகையில்
விசேஷ முழுநேர சேவையை ஏற்பதற்கு முன்பாக, ஒருவர் தன் சூழ்நிலைமைகளில் சில சரிப்படுத்துதல்களை பொதுவாய்ச் செய்ய வேண்டியதாக இருக்கிறது. எல்லாராலும் இதைச் செய்ய முடிகிறதில்லை. ஒருவருக்கு ஏற்கெனவே இருக்கும் வேதப்பூர்வமான கடமைகள் இதைச் சாத்தியமற்றவையாக ஆக்கலாம். எனினும், விசேஷ சேவையில் ஏற்கெனவே இருப்போர், அவசர குடும்பத் தேவைகளை, ஒருவேளை முதியோரான பெற்றோர் உட்பட்டவற்றை எதிர்ப்படுகையில் என்ன ஏற்படுகிறது? பின்வருபவற்றைப் போன்ற பைபிள் நியமங்களும் அறிவுரையும், தேவைப்படும் வழிநடத்துதலை அளிக்கின்றன.
நம்முடைய முழு வாழ்க்கையும், யெகோவாவுடன் நமக்கு இருக்கும் உறவைச் சுற்றி கட்டப்பட வேண்டும். (பிரசங்கி 12:13; மாற்கு 12:28-30) நம்முடைய கவனிப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கிற பரிசுத்த காரியங்கள் உயர்வாய்க் கருதப்பட வேண்டும். (லூக்கா 1:74, 75; எபிரெயர் 12:16) ஒரு சந்தர்ப்பத்தில், தன் முதன்மையானக் காரியங்களை மாற்றிக்கொள்ளத் தேவைப்பட்ட ஒரு மனிதனிடம், கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்பதில் அவன் தன்னை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்று இயேசு சொன்னார். அந்த மனிதன், தன் தகப்பன் மரிக்கும் வரையில் அத்தகைய நடவடிக்கையைத் தள்ளிவைக்க நினைத்ததாகத் தெரிகிறது. (லூக்கா 9:59, 60) மறுபட்சத்தில், எல்லாவற்றையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டதாக உரிமைபாராட்டி, பின்பு ‘தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்யாமல்’ இருப்போரின் தவறான சிந்தனையையும் இயேசு வெளியரங்கமாக்கினார். (மாற்கு 7:9-13) பெற்றோரும் தாத்தா பாட்டிமாரும் உட்பட ‘தன் சொந்த ஜனங்களைப்’ பராமரிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பை அப்போஸ்தலன் பவுலும் குறிப்பிட்டுக் காட்டினார்.—1 தீமோத்தேயு 5:3-8.
கவனித்துக்கொள்வதற்கான அவசரத் தேவை எழும்புகையில், விசேஷ சேவையில் இருப்போர், தங்கள் ஊழிய நியமிப்புகளை விட்டுவிட வேண்டும் என்று இது அர்த்தப்படுகிறதா? இதற்கான பதில், பல காரணிகளின்பேரில் சார்ந்திருக்கிறது. இந்தத் தீர்மானம், தனிப்பட்ட வகையில் அவரவர் செய்யவேண்டியது. (கலாத்தியர் 6:5) தங்கள் ஊழிய நியமிப்பை மிகவும் விரும்பினபோதிலும், பெற்றோருக்குத் தேவைப்பட்ட உதவியைக் கொடுக்கும்படி அவர்களுடன் இருப்பதே ஞானமானதென பலர் உணர்ந்திருக்கின்றனர். ஏன்? அந்தத் தேவை மிக முக்கியமானதாய் இருக்கலாம், உதவி செய்யக்கூடிய குடும்ப உறுப்பினர் வேறு எவரும் இல்லாத நிலையாக இருக்கலாம் அல்லது அவ்விடத்து சபை, தேவைப்படுவதைச் செய்ய முடியாமல் இருக்கலாம். சிலர், இத்தகைய உதவியையும் செய்துகொண்டு, அதே சமயத்தில் பயனியராகவும் இருக்க முடிந்திருக்கிறது. மற்றவர்கள், அந்தக் குடும்ப நிலைமை கவனித்து முடிக்கப்பட்ட பின்பு, விசேஷித்த முழுநேர சேவையை ஏற்க முடிந்திருக்கிறது. எனினும், பலருடைய காரியங்களில், அந்த நிலைமையை மற்ற வழிகளில் கையாள முடிந்திருக்கிறது.
தங்கள் பொறுப்பைத் தாங்குதல்
நெருக்கடியான தேவை எழும்பியபோது, விசேஷித்த முழுநேர சேவையில் இருப்போர் சிலர், தங்கள் ஊழிய நியமிப்புகளை விட்டுவிடாமலே அந்தத் தேவைகளுக்குக் கவனம் செலுத்த முடிந்திருக்கிறது. இதற்கான அநேக உதாரணங்களில் சிலவற்றை மட்டும் இப்போது சிந்திப்போம்.
யெகோவாவின் சாட்சிகளினுடைய உலகத் தலைமை அலுவலகத்தில் சேவிக்கிற ஒரு தம்பதி, ஏற்கெனவே வட்டார மற்றும் மாவட்ட ஊழியத்தில் பங்குகொண்ட பின்பு, 1978-ல் பெத்தேல் சேவையைச் செய்ய தொடங்கினார்கள். அந்தச் சகோதரரின் வேலை நியமிப்பு, தேவராஜ்ய அமைப்பில் கனத்த உத்தரவாதமும் பாரமும் உட்பட்டதாக இருக்கிறது. ஆனால் அவருடைய பெற்றோருக்கும் உதவி தேவைப்பட்டது. பெத்தேலில் இருக்கும் இந்தத் தம்பதியினர் தங்கள் பெற்றோரைக் கவனிப்பதற்காக, ஆண்டுதோறும் மூன்று அல்லது நான்கு முறை சென்று பார்த்து வந்தனர். போய்வருவதற்கு 3,500 கிலோமீட்டர்கள் பயணப்பட வேண்டும். பெற்றோரின் தேவைகளை நிரப்புவதற்காக ஒரு வீட்டையும் அவர்கள்தாமே கட்டினார்கள். அவசர மருத்துவ தேவைகளைக் கவனிக்கவும் போய்வந்தார்கள். இந்தப் பொறுப்பை நிறைவேற்றி வருவதற்கு 20 ஆண்டுகளாக பெரும்பாலும் தங்கள் விடுமுறை நாட்கள் முழுவதையும் செலவிட்டார்கள். அவர்கள் தங்கள் பெற்றோரை நேசித்து உயர்வாய் மதிக்கிறார்கள், எனினும் தங்கள் பரிசுத்த சேவையின் சிலாக்கியங்களையும் மதிப்புள்ளவையாய் கருதுகிறார்கள்.
மற்றொரு சகோதரர், 36 ஆண்டுகள் பயண ஊழியம் செய்துவந்திருந்தார், பின்பு தன் வாழ்க்கையிலேயே மிக அதிக சவாலான சந்தர்ப்பநிலைகளில் ஒன்று தனக்கு ஏற்பட்டதாக விவரிக்கிறார். யெகோவாவின் உண்மையுள்ள ஊழியராக இருந்த அவருடைய 85 வயதான மாமியார், தனக்கு உதவிசெய்யக்கூடிய ஒருவரோடு சேர்ந்து வசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில், அவர்களுடைய பிள்ளைகளில் பெரும்பான்மையர், அவர்களைத் தங்களோடு வைத்துக்கொள்வது தங்களுக்கு சரிப்பட்டு வராது என உணர்ந்தார்கள். இந்தப் பயணக் கண்காணியும் அவருடைய மனைவியும், குடும்பத்தின் நிமித்தமாக தங்கள் சேவையை விட்டுவிட்டு, தாயைக் கவனிக்க வேண்டும் என்று அந்த உறவினரில் ஒருவர் அவர்களிடம் சொன்னார். ஆனால் அந்தத் தம்பதியினர் தங்கள் அருமையான சேவையை விட்டுவிடவுமில்லை, தங்கள் தாயின் தேவைகளை அவர்கள் புறக்கணிக்கவுமில்லை. அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு, அந்தத் தாயார் பெரும்பான்மையான காலம் இவர்களோடு இருந்தார்கள். முதலில் அவர்கள் இடம் விட்டு இடம் செல்லக்கூடிய வீட்டில் வாழ்ந்தார்கள், பின்பு வட்டாரங்கள் அளித்த பல்வேறு அறைகளில் வாழ்ந்தார்கள். நீண்டகால பகுதிகள், அப்போது மாவட்டக் கண்காணியாக இருந்த அந்தச் சகோதரர், தன் ஊழிய நியமிப்புகளைக் கவனிக்கும்படி பயணப்பட்டுக்கொண்டிருந்தார், அச்சமயத்தில் அவருடைய மனைவி தன் தாய்க்கு அன்புள்ள முழுநேர கவனிப்பு தரும்படி, அவர்களுடன் தங்கியிருந்தார்கள். ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டங்களுக்குப் பின், அந்தக் கணவர் அவர்களுக்கு உதவிசெய்யும்படி நெடுந்தூரம் பயணப்பட்டு வந்தார். இந்த நிலைமையை அறிந்திருந்த பலர். இந்தத் தம்பதியினர் செய்துகொண்டிருந்ததற்கு ஆழ்ந்த மதித்துணர்வை வெளிப்படுத்தினார்கள். காலப்போக்கில், குடும்ப உறுப்பினரான மற்றவர்களும் சிறிது உதவிசெய்யும்படி உள்ளத்தில் தூண்டப்பட்டு செய்தார்கள். விசேஷித்த முழுநேர சேவைக்குரிய தங்கள் சிலாக்கியங்களை அவர்கள் விடாமல் பற்றியிருந்ததால், அந்தத் தன்னலத்தியாகம் செய்த தம்பதியின் சேவையிலிருந்து யெகோவாவின் ஆயிரக்கணக்கான ஜனங்கள் தொடர்ந்து நன்மையடைந்து வருகிறார்கள்.
குடும்ப ஒத்துழைப்புடன்
விசேஷித்த முழுநேர சேவையின் உயர் மதிப்பை குடும்ப உறுப்பினர் பலர் மதித்துணருகையில், அவர்களில் சிலராவது அதில் பங்குகொள்ளும்படி அவர்களுடன் ஒத்துழைக்கக்கூடும்.
இத்தகைய குடும்ப ஒத்துழைப்பு மனப்பான்மை, மேற்கு ஆப்பிரிக்காவில் மிஷனரிகளாக சேவிக்கிற கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு உதவியாக இருந்துவந்திருக்கிறது. ஒன்றும் நடவாதென்று வெறுமனே நம்புகிறவர்களாய், அவசரத் தேவை எழும்பும் வரையில் அவர்கள் காத்திருக்கவில்லை. உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளிக்குத் தாங்கள் செல்வதற்கு முன்னால், வெளி நாட்டு சேவைக்கு ஆயத்தம் செய்பவராய் அந்தக் கணவர், தங்கள் தாயார் ஒருவேளை நோயுற்றால் அல்லது முடமாய்விட்டால், அவர்களுடைய கவனிப்புக்காக தன் இளைய சகோதரருடன் கலந்து பேசினார். தங்கள் தாயாருக்கு அன்பு காட்டுபவராயும், அதோடுகூட மிஷனரி சேவையின் மதிப்பை போற்றுபவராயும் அந்த இளைய சகோதரன் இவ்வாறு சொன்னார்: “நானோ திருமணமாகி பிள்ளைகுட்டிக்காரன் ஆகிவிட்டேன். உங்களைப் போல் தூரதூரமாய்ப் போய் நீங்கள் செய்யும் வேலையை என்னால் செய்யமுடியாது. ஆகையால் அம்மாவுக்கு ஏதாவது ஆயிற்றென்றால், நான் அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன்.”
தென் ஆப்பிரிக்காவில் மிஷனரிகளாகச் சேவை செய்கிற ஒரு தம்பதியினரில், அந்த மனைவியின் வயதான தாயாரைக் கவனிப்பதற்காக அவருடைய குடும்பத்திலிருந்து மிகுந்த ஒத்துழைப்பைப் பெற்றார்கள். அவருடைய சகோதரிகளில் ஒருவரும் அந்தச் சகோதரியின் கணவரும் தாயாரை, அவர்கள் சாவுக்கேதுவான நோயுற்ற வரையில் கவனித்து வந்தார்கள். பின்பு என்ன செய்வது? கவலையைத் தணிப்பதற்காக அந்த மைத்துனன் எழுதினார்: “நானும் என் பிள்ளைகளும் உயிரோடு இருக்கும் வரையில் நீங்கள் உங்கள் மிஷனரி சேவையை விட்டுவிட வேண்டியதில்லை.” மேலும், மற்றொரு தங்கையும் அவருடைய கணவரும் தாயாரைக் கவனிப்பதற்காகத் தங்கள் வீட்டை விட்டு, தாயார் வாழ்ந்த இடத்திற்கு மாறிச் சென்றபோது மேலுமான குடும்ப உதவி கிடைத்தது. தாயாரின் மரணம் வரையில் இவர்கள் அவர்களைக் கவனித்துவந்தார்கள். எத்தகைய சிறந்த ஒத்துழைப்பு மனப்பான்மை! அவர்கள் எல்லாரும் மிஷனரி சேவையை ஆதரிப்பதற்கு உதவிசெய்தார்கள்.
தாராளமாக யெகோவாவுக்கு அளித்துவிடும் பெற்றோர்
பரிசுத்த சேவைக்கு முதன்மையான மதித்துணர்வு பெற்றோரால் அடிக்கடி காட்டப்படுகிறது. யெகோவாவைக் கனப்படுத்தும்படி தங்களுக்கு இருக்கும் மிக மதிப்புவாய்ந்த உடைமைகளாகத் தங்கள் சொந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 3:9) முழுநேர சேவையில் உட்படும்படி கிறிஸ்தவ பெற்றோர் பலர் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கிறார்கள். தன் மகனாகிய சாமுவேலை யெகோவாவின் சேவைக்கு “எப்பொழுதும்,” அதாவது, “அவன் உயிரோடிருக்கும் சகல நாளும்” ஒப்புக்கொடுத்த அன்னாளைப்போல் அவர்களில் சிலர் உணருகின்றனர்.—1 சாமுவேல் 1:22, 28.
இப்படிப்பட்ட பெற்றோரில் ஒருவரான ஓர் தாய், ஆப்பிரிக்காவில் இருக்கும் தன் மகளுக்கு இவ்வாறு எழுதினார்கள்: “உனக்கு இருக்கும் அருமையான சிலாக்கியத்திற்காக நாங்கள் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறோம். இதற்கும் மேம்பட்ட ஒன்றை நாங்கள் எதிர்பார்க்க முடியாது.” மற்றொரு சந்தர்ப்பத்தில் அந்தத் தாய் சொன்னார்கள்: “பிரிந்திருக்கும் தியாகத்தை நாங்கள் செய்ய வேண்டியதாக இருக்கிறது என்பது மெய்யே, ஆனால், எவ்வாறு யெகோவா உன்னைக் கவனித்துக்கொள்கிறார் என்பதைக் காண்பது எத்தகைய மகிழ்ச்சியாக இருக்கிறது!”
முதிர்வயதான தன் பெற்றோருக்குத் தேவைப்பட்ட கவனிப்பை அளிப்பதில் எழும்பியிருந்த பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை நன்கு சீர்தூக்கிப் பார்த்த பின்பு, ஈக்வடாரில் இருக்கும் ஒரு மிஷனரி இவ்வாறு எழுதினார்: “என் மனைவியும் நானும் பெற்ற மிகப் பெரிய உதவி என் தகப்பனாரின் ஜெபங்களே என்று நான் நினைக்கிறேன். அவருடைய மரணத்திற்குப் பின் என் அம்மா எங்களிடம் இவ்வாறு சொன்னார்கள்: ‘நீங்கள் இருவரும் உங்கள் ஊழிய நியமிப்பில் நிலைத்திருப்பதற்கு அனுமதிக்கும்படி நாள் தவறாமல் உன் அப்பா யெகோவாவிடம் ஜெபித்தார்.’”
அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியாவில், முதிர்வயதான ஒரு தம்பதி, தங்கள் மகன்களில் ஒருவர் முழுநேர சேவையில் இருந்ததைப் பற்றி மகிழ்ச்சியடைந்தனர். அந்தத் தாயார் இறந்தபோது அந்த மகனும் அவருடைய மனைவியும் ஸ்பெய்னில் இருந்தார்கள். தகப்பனைக் கவனிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் உணர்ந்தார்கள். தங்கள் எல்லாருக்கும் உலகப்பிரகாரமான வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையும், பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலையும் இருந்ததால், அதிக வேலை காரணமாக, அந்தப் பொறுப்பை தாங்கள் ஏற்க முடியாது என்று உணர்ந்தார்கள். அதற்குப் பதிலாக, விசேஷித்த முழுநேர சேவையில் இருந்த அந்தத் தம்பதியினரை, வீட்டுக்குத் திரும்பிவந்து தகப்பனைக் கவனிக்கும்படி வற்புறுத்தினார்கள். எனினும் அந்தத் தகப்பன், 79 வயதானவராக இருந்தபோதிலும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார்; மேலும், தெளிவான ஆவிக்குரிய பார்வையும் அவருக்கு இருந்தது. ஒரு தடவை குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஒன்றாக கூடிவந்தபோது, பலர் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தின பின்பு, தகப்பன் எழுந்து நின்று உறுதியாக இவ்வாறு சொன்னார்: “அவர்கள் ஸ்பெய்னுக்குத் திரும்பிச் சென்று தொடர்ந்து ஊழியம் செய்யட்டும். இதுவே என் விருப்பம்.” அவ்வாறே அவர்கள் சென்றார்கள், ஆனால் பொருள்சம்பந்தமான வழிகளில் அவருக்கு உதவியும் செய்தார்கள். அவர்களுடைய தற்போதைய ஊழிய நியமிப்பு, ஸ்பெய்னில் வட்டார ஊழியம். அந்தக் குடும்பம் ஒன்றாகக் கூடிவந்த நாள் முதற்கொண்டு, மற்ற குடும்ப உறுப்பினரும், வெளிநாட்டு ஊழியத்தில் இருக்கும் அந்தத் தம்பதி செய்பவற்றிற்கு மதித்துணர்வைக் காட்டியிருக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பின்பு, மற்ற மகன்களில் ஒருவர், தகப்பனை அவர் மரிக்கும் வரையில் கவனித்து வரும்படி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பென்ஸில்வேனியாவில், ஏறக்குறைய 40 ஆண்டுகள் பயனியர் செய்திருந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட ஒரு சகோதரர், தன் மனைவி கடுமையாக நோயுற்று மரித்தபோது 90-க்கு மேற்பட்ட வயதானவராக இருந்தார். அவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருந்தார்கள்; மேலும், ஆவிக்குரிய பிள்ளைகள் ஏராளமாக இருந்தார்கள். அவருடைய மகள்களில் ஒருவர், 40 ஆண்டுகளுக்கு மேலாக முழுநேர சேவையில் இருந்து, தன் கணவரோடு மிஷனரியாகவும், பயண ஊழியத்திலும், பெத்தேலிலும் சேவித்திருக்கிறார்கள். இந்தச் சகோதரி தன் தகப்பனுக்குத் தகுந்த கவனிப்பு கொடுக்கப்படும்படி ஏற்பாடுகள் செய்வதற்கு உதவிசெய்தார்கள். ராஜ்ய மன்ற கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதில் உள்ளூர் சகோதரர்களும் அவருக்கு உதவிசெய்தார்கள். பின்னால், தன்னுடைய கணவன் மரித்த பின்பு, தன் தகப்பனை கவனிப்பதற்கு தான் பெத்தேலை விட்டு வரவேண்டுமாவென இவர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் பரிசுத்த காரியங்களை உயர்வாய் மதிக்கிறவர். தன் தேவைகள் மற்ற வழிகளில் கவனிக்கப்படலாமென அவர் உணர்ந்தார். ஆகையால் அவர் இவ்வாறு பதிலளித்தார்: “அது மிகவும் மோசமான செயல், அதுவும் நான் உன்னை அவ்வாறு செய்யச்சொல்வது அதைவிட மோசமானது.”
உதவியாயிருக்கும் சபைகள்
விசேஷித்த முழுநேர சேவையில் இருப்போரின் முதிர்வயதான பெற்றோரைக் கவனிப்பதில் சில சபைகள் மிகவும் உதவியாக இருந்திருக்கின்றன. அத்தகைய சேவையில் பல ஆண்டுகள் உழைத்திருப்போரை அவை முக்கியமாய் மதிக்கின்றன. அவர்களுடைய வேதப்பூர்வ பொறுப்புகளிலிருந்து அவர்களை அவை விடுபட செய்ய முடியாது எனினும், பிள்ளைகள் தங்கள் விசேஷ ஊழிய நியமிப்புகளை விட்டுவிடுவதற்குத் தேவை இராதபடி, அந்த பாரத்தைப் போதியளவு இலகுவாக்குவதற்கு இந்தச் சபைகள் அதிகம் செய்கின்றன.
ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு தம்பதி வெளி நாட்டு சேவையில் ஏறக்குறைய 17 ஆண்டுகள் இருந்தனர்; அந்தக் காலத்தில் பெரும்பாகத்தைப் பயண ஊழியத்தில் செலவிட்டனர். அப்போது அவருடைய முதிர்வயதான தாய்க்கு உதவிசெய்வதற்கான தேவை அதிகமாகியது. அவர்களுக்கு உதவிசெய்ய ஒவ்வொரு ஆண்டும் தங்கள் விடுமுறையைப் பயன்படுத்தினார்கள். சாட்சிகளாயிருந்த அயலகத்தாரும் அன்புடன் உதவினார்கள். பின்பு, முழுநேர சேவையிலிருந்த அந்தத் தம்பதி நெருக்கடியான ஒரு கட்டத்தின்போது அவருடைய தாயுடன் இருந்த சமயத்தில், அவ்விடத்து சபையின் மூப்பர்கள் அவர்களைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தார்கள். அந்தத் தம்பதியினர் தங்கள் தாய்க்கு தவறாமல் செய்து வந்தவற்றை அவர்கள் நன்றாய் அறிந்திருந்தார்கள். அந்தத் தம்பதி செய்துவந்த விசேஷித்த சேவையின் மதிப்பையும் அவர்கள் உயர்வாய்க் கருதினார்கள். ஆகையால், அந்தத் தாயைக் கவனிப்பதற்கு ஒரு திட்டத்தை அந்த மூப்பர்கள் குறிப்பிட்டு, பின்பு இவ்வாறு சொன்னார்கள்: “இதைவிட அதிகமாக உங்களால் செய்ய முடியாது. ஸ்பெய்னில் உங்கள் ஊழிய நியமிப்பில் நீங்கள் நிலைத்திருக்கும்படி, நாங்கள் உங்களுக்கு உதவிசெய்கிறோம்.” கடந்த ஏழு ஆண்டுகளாக, இந்த மூப்பர்கள் அவ்வாறு தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இவ்வாறே, 1967-லிருந்து செனீகலில் சேவை செய்துகொண்டிருக்கிற ஒரு சகோதரன், தன் தகப்பன் இருந்த சபையிலிருந்து அன்பான மிகுந்த உதவியைப் பெற்று வந்தார். ஒரு நெருக்கடியான நிலை எழும்பினபோது, அந்தக் கணவர், தன் அன்புள்ள மனைவியின் மனமுவந்த ஒத்துழைப்பால், தன் பெற்றோருக்கு உதவிசெய்ய அமெரிக்காவுக்குத் தனிமையாகப் பயணப்பட்டார். அங்கு பல மாதங்கள் தங்கவேண்டி வரும் என்று தெரிந்துகொண்டார். அந்த நிலைமை கடினமாக இருந்தது, ஆனால் தன்னால் இயன்றதை அவர் செய்த பின்பு, தன் மிஷனரி சேவையை அவர் தொடர்ந்து செய்யும்படி சபை முன்வந்து உதவிசெய்தது. ஏறக்குறைய 18 ஆண்டு காலமாக, எண்ணற்ற வழிகளில் சபை அன்புள்ள உதவியை அளித்தது; முதலில் அந்தத் தகப்பனுக்கும் (அவர்களில் பலரை அவருக்கு அடையாளம் தெரியாமல் இருந்தபோதிலும்) பின்பு அந்தத் தாய்க்கும் அவ்வாறு உதவிசெய்தது. அது அந்த மகனின் பொறுப்பை விலக்கிவிட்டதா? இல்லை; அவர் செனீகலில் இருந்து அடிக்கடி பயணப்பட்டு சென்று, தன்னால் இயன்ற எல்லா உதவியையும் அளிப்பதற்கு தன் விடுமுறை காலத்தைப் பயன்படுத்தினார். ஆனால், அந்தச் சபையிலிருந்த பலர், கடினமாக உழைக்கும் ஒரு தம்பதி செனீகலில் விசேஷித்த முழுநேர சேவையில் இருக்கும்படி செய்வதில், தங்களுக்கும் பங்கு இருந்தது என்பதை அறிந்தபோது இன்புற்றனர்.
நற்செய்தியின் நிமித்தமாக எல்லாவற்றையும் விட்டவர்கள், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும் நூறுமடங்காக அடைவார்கள் என்று இயேசு சொன்னார். (மாற்கு 10:29, 30, NW) யெகோவாவின் ஊழியர்களுக்குள் இது நிச்சயமாகவே உண்மையாக இருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெனின்னில் இப்போது சேவை செய்யும் ஒரு தம்பதியிடம், தங்கள் பெற்றோரைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டாம் என்று, அவர்களுடைய பெற்றோரின் சபையிலுள்ள இரண்டு சாட்சிகள் சொன்னபோது, இதை அவர்கள் தனிப்பட்ட முறையில் அனுபவித்தார்கள். கூடுதலாக அவர்கள்: “உங்கள் பெற்றோர் எங்களுக்கும் பெற்றோரே,” என்றும் சொன்னார்கள்.
ஆம், பரிசுத்த சேவையின் சிலாக்கியங்களை நாம் உயர்வாய்க் கருதுகிறோம் என்று காட்டுவதற்கு பல வழிகள் இருக்கின்றன. இதை இன்னும் அதிக முழுமையாகச் செய்வதற்கு வழிகள் இருக்கின்றனவா?
[பக்கம் 26-ன் படங்கள்]
விசேஷித்த முழுநேர சேவைக்கு இவர்கள் தங்களை மனமுவந்து அளித்திருக்கிறார்கள்