பிரான்ஸில் முத்திரை பதித்த நிகழ்ச்சி
“யெகோவா நகரமா, வேண்டவே வேண்டாம்!” என நகரெங்கும் ஒரே போஸ்டர் மயம். “யெகோவா திட்டத்துக்கு எதிராக மறியல் நடத்துவோம் வாருங்கள்!” என ஒரு எதிரணி அழைத்தது. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் இதே பேச்சுதான். இதைப் பற்றி அறியாத ஆளே இல்லை எனலாம். மனுக்கள் கையெழுத்திடப்பட்டன, திட்டத்தைப் பற்றிய ஐந்து லட்சத்திற்கும் மேலான கைப்பிரதிகள் தபால் பெட்டிகளில் குவிந்தன. வடமேற்கு பிரான்ஸில் அமைந்துள்ள லூவியே பட்டணத்தின் அமைதியைக் குலைத்தது எது? யெகோவாவின் சாட்சிகள், புதிய கிளைக்காரியாலயத்திற்கான அலுவல் மற்றும் குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டுவதற்காக திட்டமிட்டதே அதற்குக் காரணம்.
யெகோவா வளர்ச்சியடையச் செய்கிறார்
பிரான்ஸில் யெகோவாவின் சாட்சிகளது நடவடிக்கை 19-ஆம் நூற்றாண்டின் முடிவில் துவங்கியது. பைபிள் பிரசுரங்களுக்கான கிடங்கு முதன்முதலில் 1905-ல் தென் பிரான்ஸிலுள்ள போவன் கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டது. 1919-ல் பாரிஸில் ஒரு சிறிய அலுவலகம் இயங்க ஆரம்பித்தது. 1930-ல் கிளைக்காரியாலயம் திறக்கப்பட்டது; அதற்கடுத்த வருடம் பாரிஸின் வடக்கே அமைந்த ஆன்கான்-லே-பான் என்ற இடத்திலிருந்த கட்டடம் ஒன்றில் பெத்தேல் ஊழியர்கள் தங்கினார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின், அவர்கள் மீண்டும் பாரிஸுக்குத் திரும்பினர்; 1959-ல் கிளைக்காரியாலயம் பாரிஸின் புறநகர்ப் பகுதியான பூலோன் பியான்குரிலிருந்த ஐந்து மாடிக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
1973-ல், ராஜ்ய பிரசங்க வேலை விஸ்தரிக்கப்பட்டதன் காரணமாய் அச்சகமும் பிரசுர குடோனும் பாரிஸிலிருந்து 100 கிலோமீட்டர் மேற்கே அமைந்த லூவியேவுக்கு மாற்றப்பட்டது; அதேசமயம் அலுவலகம் பூலோன் பியான்குரிலேயே செயல்பட்டது. இருந்தபோதிலும் பிரான்ஸில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்ததால், லூவியேவிலிருந்த கட்டடங்களை வைத்துக்கொண்டு தேவையை சமாளிக்க முடியவில்லை. இத்தனைக்கும் 1978-லும் 1985-லும் அவை விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தன. இப்போது அதை இன்னும் விரிவுபடுத்தி முழு பெத்தேல் குடும்பத்தையும் ஒரே இடத்தில் கூட்டிச்சேர்க்க தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் சொல்லப்பட்டதுபோல் அனைவருமே இந்தத் திட்டத்தை ஆதரிக்கவில்லை. அப்படிப்பட்ட எதிர்ப்பின் மத்தியிலும், அச்சகத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு இடம் வாங்கப்பட்டது. ஆறு வருட கடின உழைப்பிற்கு பின் இறுதியாக ஆகஸ்ட் 1996-ல், 23 வருடங்கள் பிரிந்திருந்த பெத்தேல் குடும்பத்தினர் லூவியேவில் ஒன்றுசேர்ந்தனர்.
நவம்பர் 15, 1997 சனிக்கிழமை அன்று, ஆளும் குழுவின் அங்கத்தினரான சகோதரர் லாயிட் பார்ரி பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுக்கவிருந்தார். அதைக் கேட்பதற்காக பிரான்ஸ் பெத்தேலைச் சேர்ந்த 300 ஊழியர்களும் மற்ற 42 கிளைக்காரியாலயங்களைச் சேர்ந்த 329 பிரதிநிதிகளுமாய் மொத்தம் 1,187 பேர் ஒன்றுகூடினர்; அங்கு சந்தோஷம் கரைபுரண்டோடியது. பிரான்ஸ் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் எள்ளி நகையாடப்பட்டனர், எதிர்க்கப்பட்டனர், ஆனாலும் அவை எல்லாவற்றையும் மீறி இந்தப் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. ஆகவே பிரான்ஸிலிருந்த எல்லா சாட்சிகளும் ஒன்றுசேர்ந்து இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டுமென விரும்பப்பட்டது. அதன் காரணமாய் நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை அன்று, “கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருங்கள்” என்ற தலைப்பில் ஒரு விசேஷ கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அது பாரிஸின் வடக்கே அமைந்த வில்பான்ட் கண்காட்சி மையத்தில் நடக்கவிருந்தது. பிரான்ஸைச் சேர்ந்த அனைத்து யெகோவாவின் சாட்சிகளும், பெல்ஜியம் மற்றும் ஸ்விட்ஸர்லாந்திலிருந்த பிரெஞ்சு மொழி பேசிய சாட்சிகளும், பிரிட்டன், ஜெர்மனி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த சாட்சிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர்.
முத்திரை பதித்த கூட்டம்
கூட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே துவங்கிவிட்டன. ஆனால் பிரதிஷ்டைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, பிரான்ஸைச் சேர்ந்த ட்ரக் டிரைவர்கள் வேலைநிறுத்தம் செய்து, முக்கிய சாலைகளில் மறியல் நடத்தி, எரிபொருள் விநியோகத்தைத் தடை செய்தனர். அப்படியென்றால் மாநாட்டிற்குத் தேவையான சேர்களும் மற்ற சாதனங்களும் சரியான நேரத்தில் வந்து சேருமா? சாலை மறியலால் சகோதரர்களால் வர முடியாமல் போய்விடுமா? நல்லவேளையாக நிலைமை கைமீறவில்லை, ஒரே வாரத்தில் வேலை நிறுத்தம் நின்றது, சாலைகள் சகஜ நிலைக்கு திரும்பின, அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். நிகழ்ச்சிக்காக இரண்டு பெரிய ஹால்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன; அந்த வெள்ளிக்கிழமை 38 ட்ரக்குகளில் 84,000 சேர்கள் அங்கு வந்து இறங்கின. 800-க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் ராத்திரி முழுவதும் கண்விழித்து சனிக்கிழமை காலை 9:30 மணி வரை பம்பரமாய் சுழன்று வேலை செய்தார்கள். இருக்கைகள், மேடை, சவுண்ட் சிஸ்டம், ஒன்பது மாபெரும் வீடியோ ஸ்க்ரீன்கள் ஆகிய அனைத்தும் பொருத்தப்பட்டன.
ஞாயிறு காலை 6:00 மணிக்கு கதவுகள் திறக்கப்பட்டன, கூட்டம் திரண்டு வந்தது. மொத்தம் 17 விசேஷ ரயில்களில் 13,000-க்கும் அதிகமான சாட்சிகள் தலைநகருக்கு வந்துசேர்ந்தனர். உள்ளூரைச் சேர்ந்த 200-க்கும் மேலான சகோதர சகோதரிகள் ரயில் நிலையங்களில் காத்துக்கொண்டிருந்தனர்; ரயிலில் வந்து இறங்கிய சகோதர சகோதரிகளை வரவேற்று, அவர்களை தொகுதிகளாக பிரித்து மாநாட்டு இடத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த அன்பான ஏற்பாட்டினால், “பயமெல்லாம் பறந்துபோனது, நிம்மதியாய் உணர்ந்தோம்” என ஒரு சகோதரி சொன்னார்.
இன்னும் சிலர் விமானத்திலோ காரிலோ பாரிஸுக்கு வந்தனர். என்றாலும் பெரும்பான்மையர் 953 பஸ்ஸுகளில் வந்து இறங்கினர். பாரிஸிலிருந்த சாட்சிகள் பொதுப் போக்குவரத்தில் அந்தக் கண்காட்சி மையத்திற்கு வந்துசேர்ந்தனர். அநேகர் ராத்திரி முழுக்க பிரயாணம் செய்திருந்தனர் அல்லது அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்பியிருந்தனர், ஆனாலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதன் பூரிப்பு அவர்கள் முகத்தில் பொங்கி வழிந்தது. பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த சந்தோஷத்தில் ஒருவரையொருவர் கட்டியணைத்து வாழ்த்தினர். அனைவரும் முகமலர்ச்சியோடு காணப்பட்டனர். எங்கு பார்த்தாலும் விதவிதமான தேசிய உடைகள் பல வண்ணங்களில் தென்பட்டது. சர்வதேச மணம் வீசியது எனச் சொல்லலாம். வியப்பளிக்கும் ஏதோவொன்று நிச்சயமாகவே காத்திருந்தது.
காலை 10:00 மணிக்கு நிகழ்ச்சிநிரல் ஆரம்பமாவதற்குள் ஊசி விழவும் இடமில்லாமல் போயிற்று. ஆனாலும் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்துகொண்டே இருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் புன்னகை பூத்த முகங்கள். ஆயிரக்கணக்கானோர் கால்கடுக்க நின்றுகொண்டிருந்தனர் அல்லது அந்தக் கான்க்ரீட் தரையிலேயே அமர்ந்திருந்தனர். மாநாட்டு தலைப்பிற்கு பொருத்தமாகவே, அநேக இளைஞர்கள் கரிசனையோடு எழுந்து முதியவர்களுக்கு இடம் கொடுத்தனர். “அந்தச் சகோதர சகோதரிகளோடு முன்பின் பழக்கமில்லாவிட்டாலும், மிக வேண்டப்பட்டவர்களாகவே இருந்தார்கள்; அவர்களுக்கு எங்கள் இருக்கைகளை கொடுத்தபோது கிடைத்த பெருமிதமே தனி!” என ஒரு தம்பதியினர் எழுதினர். அநேகர் தியாக மனப்பான்மையைக் காட்டினர்: “வெள்ளிக்கிழமை ராத்திரி சேர்களை அரேஞ்ச் செய்திருந்தும், நிகழ்ச்சி முடியும் வரை அதன் பக்கத்தில் நிற்கத்தான் முடிந்தது. ஆனால் நாங்கள் மனக்கஷ்டப்படவில்லை, யெகோவாவின் பேரில் அதுவரை அனுபவித்திராத ஒரு நன்றி உணர்வுதான் எங்கள் மனதுக்குள் பெருக்கெடுத்தது.”
களைப்பும் அசௌகரியமும் இருந்தாலும், மற்ற நாடுகளைச் சேர்ந்த அறிக்கைகளையும் ஆளும் குழு அங்கத்தினர்களான லாயிட் பார்ரியும் டானியேல் ஸிட்லிக்கும் கொடுத்த பேச்சுக்களையும் கூடிவந்திருந்தோர் மெய்மறந்து கேட்டனர். “யெகோவா முழு பலம் அளிக்கிறார்” என்ற தலைப்பில் சகோதரர் பார்ரி பேசினார்; பல்வேறு சோதனைகளின் மத்தியிலும் எவ்வாறு யெகோவா தமது மக்களை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை அவர் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டினார். “யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் சந்தோஷமுள்ளது!” என்னும் தலைப்பில் சகோதரர் ஸிட்லிக் பேசினார். பிரான்ஸில் யெகோவாவின் சாட்சிகளுக்கு பெரும் எதிர்ப்பு இருப்பதால் அந்த இரண்டு பேச்சுக்களுமே காலத்திற்கு ஏற்றவையாய் இருந்தன. உண்மையான சந்தோஷம் வேறெதன் மீதுமல்ல, யெகோவாவுடன் நமக்கிருக்கும் உறவின்மீதும் வாழ்க்கையை நாம் கருதும் விதத்தின் மீதுமே சார்ந்திருக்கிறது என்பதை சகோதரர் ஸிட்லிக் காட்டினார். “நீங்கள் சந்தோஷமாயிருக்கிறீர்களா?” என அவர் சபையாரைப் பார்த்து கேட்டபோது, கைதட்டல் விண்ணைப் பிளந்தது!
“கவலையில் மூழ்கியிருந்த” ஒரு சகோதரி எழுதினார்: “என்னால் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற ஞானோதயம் திடீரென வந்தது. அவசியமற்ற காரியங்களுக்காக நான் வீணாய் முயற்சி செய்துகொண்டிருந்தேன்; நான் எப்படி மாறவேண்டுமென்பதை இந்தப் பேச்சின் மூலம் யெகோவா காட்டினார்.” மற்றொரு சகோதரர் சொன்னதாவது: “யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்த இப்போது நான் போராடத் தயார். எனக்குள் தோன்றியிருக்கும் சந்தோஷத்தில் ஒரு துளியையும் பறித்துப்போட நான் எதையும் அனுமதிக்க மாட்டேன்.”
கூட்டம் முடிவடையவிருந்தது. மாநாட்டுத் தலைவர் மிகுந்த பூரிப்போடு ஆஜராயிருந்தோரின் எண்ணிக்கையை அறிவித்தார்: 95,888! பிரான்ஸில் யெகோவாவின் சாட்சிகளது வரலாறு காணாத கூட்டம்!
அநேகர் முடிவான பாடலைப் பாடியபோது ஆனந்தத்தில் அழுதே விட்டனர்; அதன் பிறகு, முடிவு ஜெபம் செய்யப்பட்டது, சகோதரர்கள் சந்தோஷமும் சோகமும் கலந்த இனம் புரியாத உணர்ச்சியோடு வீடு திரும்பப் புறப்பட்டனர். அனைவரும் அன்பினாலும் தோழமையினாலும் திக்குமுக்காடிப்போனதைத் தெளிவாய் காண முடிந்தது. பஸ் டிரைவர்கள் பாராட்டு மழை பொழிந்தனர். எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் எல்லா 953 பஸ்ஸுகளும் இரண்டே மணிநேரத்தில் கண்காட்சி மையத்திலிருந்து வெளியேறியதைப் பார்த்து, அடேயப்பா இப்படியொரு ஒழுங்கமைப்பா என அசந்துபோனார்கள்! சாட்சிகளது நடத்தையை ரயில் நிலைய ஊழியர்களும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களும்கூட வெகுவாய் பாராட்டினர். அநேகரோடு உரையாட முடிந்தது, சிறப்பான சாட்சியும் கொடுக்கப்பட்டது.
“பாலைவனச் சோலை”
அப்போஸ்தலனாகிய பவுல் தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு பின்வருமாறு சொன்னார்: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; . . . ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” (எபிரெயர் 10:24, 25) இந்த விசேஷ கூட்டம் அனைவரையும் உற்சாகத்தில் தழைக்கச் செய்ததென்பதில் சந்தேகமில்லை. “பாலைவனச் சோலை” என ஒரு சகோதரி அதை விவரித்தார். “நாங்கள் பலமும் தெம்பும் உற்சாகமும் பொங்க, யெகோவாவின் சேவையில் சந்தோஷமாயிருக்க திட தீர்மானத்தோடு அங்கிருந்து விடைபெற்றோம்” என டோகோ கிளைக்காரியாலயத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எழுதினார்கள். “உள்ளம் வாடிப்போயிருந்தவர்கள் முகம் மலர வீடு திரும்பினார்கள்” என ஒரு வட்டாரக் கண்காணி சொன்னார். மற்றொருவர் சொன்னார்: “சகோதரர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள், புதுத் தெம்படைந்தார்கள்.” ஒரு தம்பதியினர் இவ்வாறு எழுதும்படி தூண்டப்பட்டனர்: “முன்னொருபோதும் யெகோவாவின் அமைப்போடு இவ்வளவு நெருக்கமாய் உணர்ந்ததேயில்லை.”
“என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்” என சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 26:12) அப்படிப்பட்ட கிறிஸ்தவ கூட்டங்கள், தடைகளின் மத்தியிலும் ஆவிக்குரிய கருத்தில் உறுதியாய் நிற்க அனைவருக்கும் உதவும். “என்ன விதமான கஷ்டங்கள் இருந்தாலும்சரி, இப்படிப்பட்ட விசேஷ நிகழ்ச்சிகள் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்துவிடுகின்றன, எப்போதுமே நம்மைத் தேற்றிக்கொண்டும் இருக்கின்றன” என ஒரு சகோதரி சொன்னார். அதேவிதமாய் ஒரு பயணக் கண்காணி எழுதியதாவது: “பரதீஸை இவ்விதத்தில் முன்னதாகவே ருசிபார்த்திருப்பது, கஷ்ட காலம் வரும்போது அதை சமாளிக்க உதவும்.”
“ஜாதிகளின் சந்ததிகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், யெகோவாவுக்கே செலுத்துங்கள்” என சங்கீதம் 96:7 (தி.மொ.) சொல்கிறது. சந்தேகமின்றி, பிரான்ஸில் புதிய கிளைக்காரியாலய கட்டிடங்களின் பிரதிஷ்டை, யெகோவாவிற்கு வெற்றிப் புகழை சேர்க்கிறது. பரவலாக காணப்பட்ட கடும் எதிர்ப்பின் மத்தியிலும் இப்படிப்பட்ட ஒரு செயல்திட்டம் நிறைவேற வேண்டுமென்றால், யெகோவாவைத் தவிர வேறெவரால் சாதித்திருக்க முடியும். பிரான்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், ‘கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கவும்,’ ‘தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யவும்’ எப்போதையும்விட அதிக தீர்மானமாயிருக்கிறார்கள். (யோவான் 15:9; மத்தேயு 5:16) பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்குகொண்ட அனைவரும், சங்கீதக்காரனது பின்வரும் உணர்ச்சியையே இருதயப்பூர்வமாய் ஏற்கின்றனர்: “அது யெகோவாவினாலே ஆயிற்று; அது நமது கண்களுக்கு ஆச்சரியம்.”—சங்கீதம் 118:23, தி.மொ.
[பக்கம் 26-ன் படம்]
லாயிட் பார்ரி
[பக்கம் 26-ன் படம்]
டானியல் ஸிட்லிக்
[பக்கம் 26-ன் படம்]
வில்பான்ட் கண்காட்சி மையத்தில் நடந்த விசேஷ கூட்டத்தில் 95,888 பேர் கலந்துகொண்டனர்
[பக்கம் 28-ன் படங்கள்]
வந்திருந்தோரில் ஆயிரக்கணக்கானோர் நின்றுகொண்டோ தரையில் அமர்ந்துகொண்டோ பேச்சுக்களைக் கேட்டனர்