உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 6/15 பக். 26-29
  • உண்மையான நீதி—எப்போது, எவ்வாறு?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மையான நீதி—எப்போது, எவ்வாறு?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நீதி தவறாகியது
  • மனித நீதித்துறை அமைப்புகள்—மனித பலவீனங்களுடன்
  • “யெகோவாவாகிய நான், நீதியை நேசிக்கிறேன்”
  • “அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • யெகோவாவை பின்பற்றி நீதியிலும் நியாயத்திலும் நடவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • யெகோவா—மெய் நீதிக்கும் நியாயத்துக்கும் மூலகாரணர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • விரைவில் எல்லா ஜாதிகளுக்கும் நீதி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 6/15 பக். 26-29

உண்மையான நீதி—எப்போது, எவ்வாறு?

குற்றமற்றவர்கள், உண்மையான நீதிக்குப் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாகவே, நீதி கிடைப்பதை உறுதி செய்ய முற்படும் சட்டப்பூர்வ அமைப்புமுறை ஒன்று தங்கள் நாட்டில் இருந்தால் நன்றியுள்ளோராக இருப்பதற்கு, பெரும்பாலும் எல்லா இடங்களிலுமுள்ள பிரஜைகளுக்கும் காரணம் உள்ளது. அத்தகைய அமைப்புமுறையில், சட்டதிட்டங்களும், அவற்றைச் செயல்படுத்துவதற்கு ஒரு போலீஸ் படையும், நீதியை வழங்குவதற்கு நீதிமன்றங்களும் உட்பட்டிருக்கின்றன. உண்மையான கிறிஸ்தவர்கள், ‘மேலான அதிகாரங்களுக்கு அடங்கி நடக்கும்படியான’ பைபிளின் அறிவுரைக்கு ஏற்ப, தாங்கள் வாழும் இடத்திலுள்ள நீதித்துறை அமைப்புமுறையை மதிக்கிறார்கள்.—ரோமர் 13:1-7, தி.மொ.

எனினும், பல்வேறு நாடுகளிலுள்ள நீதித்துறை அமைப்புமுறைகள் தீங்கான, சங்கடத்தை ஏற்படுத்தும் தவறுகளைச் செய்திருக்கின்றன. a குற்றம் செய்தவர்களைத் தண்டித்து, குற்றமற்றவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குப் பதிலாக, சில சமயங்களில், குற்றமற்ற ஆட்கள், அவர்கள் செய்யாதக் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். மற்றும் சில நபர்கள், சிறையில் பல ஆண்டுகள் செலவிட்ட பின்பு, அவர்கள் குற்றமுள்ளவர்கள் என்பதை நிரூபிக்க சரியான அத்தாட்சி இல்லாமல் அவர்களுக்குத் தீர்ப்பளிக்கப்பட்ட தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னதாகவே சந்தேகத்தின்பேரில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆகையால், எல்லாருக்கும் உண்மையான நீதி எப்போதாவது வழங்கப்படுமா? என்று பலர் கேட்கின்றனர். வழங்கப்படும் என்றால், எப்போது, எவ்வாறு? குற்றமற்றவர்களைப் பாதுகாப்பதற்கு யாரை நாம் நம்ப முடியும்? அநீதிக்குப் பலியானவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

நீதி தவறாகியது

1980-ன் பத்தாண்டுகளின்போது, “போருக்குப் பின்னான காலத்தில் அதிக பரபரப்பான வழக்கு நடவடிக்கைகளில் ஒன்றை” ஜெர்மனி கண்டது. அந்தச் சமயத்தின்போது ஒரு தாய், தன் இரண்டு மகள்களையும் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் சிறையிருப்பு தீர்ப்புடன் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டாள். எனினும், பல ஆண்டுகளுக்குப் பின்பு, அவளுக்கு எதிரான அத்தாட்சி திரும்ப ஆராயப்பட்டு, மறுபடியும் விசாரணை செய்யப்படும்படி விடுதலை செய்யப்பட்டாள். அந்த முந்தின தீர்ப்பு, “நீதித்துறையில் ஏற்பட்ட ஒரு தவறு” என்று டீ ஸீட் 1995-ல் அறிவித்தது. இது எழுதப்பட்ட சமயம் வரையில், இந்தப் பெண்மணி, குற்றமுள்ளவளா குற்றமற்றவளா என்ற நிச்சயமில்லாமல் சிறைச்சாலையில் ஒன்பது ஆண்டுகள் செலவிட்டிருந்தாள்.

நவம்பர் 1974-ல் ஒரு சாயங்காலத்தின்போது, இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகர மையத்தில், இரண்டு அணுகுண்டுகள் வெடித்ததால், 21 ஆட்கள் கொல்லப்பட்டனர். அது “பர்மிங்ஹாமிலுள்ள எவரும் ஒருபோதும் மறக்க முடியாத” ஒரு சம்பவம் என்று சட்ட மாமன்றத்தின் ஒரு உறுப்பினரான கிரிஸ் முல்லன் எழுதினார். பின்னால், “பிரிட்டிஷ் சரித்திரத்திலேயே மிகப் பெரிய அந்தக் கொலையை நடப்பித்ததாக சொல்லி, குற்றமற்ற ஆறு பேர் குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டனர்.” பின்னர் அவர்களுடைய தீர்ப்புகள் செல்லுபடியாகாதவையென விலக்கப்பட்டன—ஆனால் அந்த ஆண்கள் 16 ஆண்டுகள் சிறையிருப்பில் செலவிட்ட பின்பே அவ்வாறு செய்யப்பட்டது!

சட்ட வழக்குரைஞர் கென் கிரிஸ்பென், “ஆஸ்திரேலியாவினுடைய சட்ட சம்பந்த சரித்திரத்தின் பதிவேடுகளில் ஒப்பற்ற வகையில் பொதுமக்களின் கற்பனையைக் கவர்ந்த” ஒரு வழக்கை அறிவித்தார். ஒரு குடும்பம் அய்யர்ஸ் ராக்கின் அருகில் கூடாரமடித்துத் தங்கியிருந்தபோது அவர்களுடைய குழந்தை திடீரெனக் காணாமற்போயிற்று, மறுபடியும் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதன் தாய் அதைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட்டு, ஆயுள் சிறையிருப்பு தண்டனை அளிக்கப்பட்டாள். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அவள் சிறைப்படுத்தப்பட்டிருந்த பின்பு, அவளுக்கு எதிராக சொல்லப்பட்ட அத்தாட்சி சரியல்லவென்று 1987-ல் ஒரு அதிகாரப்பூர்வமான விசாரணை கண்டுபிடித்தது. அவள் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டாள்.

ஐக்கிய மாகாணங்களின் தெற்கு பகுதியில் வாழ்ந்த 18 வயது பெண்மணி 1986-ல் கொலை செய்யப்பட்டாள். அதற்காக நடுத்தர வயதான ஒருவன் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளியெனத் தீர்க்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டான். அந்தக் குற்றத்தில் அவன் எவ்விதமும் சம்பந்தப்படவில்லை என்று தீர்க்கப்படுவதற்கு முன்பாக, மரண தண்டனை கைதிகளுள்ள சிறையில் அவன் ஆறு ஆண்டுகள் செலவிட்டான்.

இவை, நீதிமன்ற தீர்ப்பு தவறுகளில் மிக அரிதான உதாரணங்களா? பென்ஸில்வேனியா பல்கலைக் கழக சட்டக் கல்லூரியைச் சேர்ந்த டேவிட் ருடோவ்ஸ்கி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்த நீதித்துறை அமைப்பில் நான் ஏறக்குறைய 25 ஆண்டுகள் இருந்து, பல வழக்குகளைக் கண்டிருக்கிறேன். குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களில், உண்மையில் குற்றமற்றவர்களாக இருப்பவர்கள் . . . ஐந்துக்கும் பத்துக்கும் இடைப்பட்ட சதவீதத்தினர் என்று என்னால் சொல்ல முடியும்.” மனசங்கடத்தை உண்டாக்கும் இந்தக் கேள்வியைக் கிரிஸ்பின் கேட்கிறார்: “தனி சிறை அறைகளில் சோர்வாக முகவாட்டத்துடன் உட்கார்ந்திருக்கும் குற்றமற்ற வேறு ஆட்களும் இருக்கிறார்களா?” இத்தகைய துயர்தரும் தவறுகள் எவ்வாறு ஏற்படுகின்றன?

மனித நீதித்துறை அமைப்புகள்—மனித பலவீனங்களுடன்

“மனித அமைப்புமுறைகள் எதுவுமே பரிபூரணமாக இருக்கும்படி எதிர்பார்க்க முடியாது” என்று 1991-ல் பிரிட்டிஷ் மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஒரு நீதித்துறை அமைப்புமுறை, அதைத் திட்டமிட்டு நிர்வகிக்கும் ஜனங்களைப் போன்று மாத்திரமே நியாயமானதும் நம்பத்தக்கதுமாக இருக்க முடியும். ஆட்கள் இயல்பாய் தவறுசெய்யும், நேர்மையற்றிருக்கும், மற்றும் தப்பெண்ணம் கொள்ளும் போக்குடையோராக இருக்கின்றனர். ஆகையால், மனிதனின் நீதித்துறை அமைப்புமுறைகள் அதே குறைபாடுகளை வெளிப்படுத்துவது ஆச்சரியமல்ல. பின்வருவதைக் கவனியுங்கள்.

ஜெர்மன் நீதிபதி ரோல்ஃப் பென்டர் சொல்வதன் பிரகாரம், எல்லா குற்ற வழக்குகளிலும் 95 சதவீதமானவற்றில், சாட்சிகளிடமிருந்து வரும் கூற்றுகள் அத்தாட்சியைப்போல அதிக முக்கியமானவையாக இருக்கின்றன. ஆனால் நீதிமன்ற சாட்சியங்கள் எப்போதும் நம்பத்தக்கவையாக இருக்கின்றனவா? அவ்வாறு இருப்பதாக நீதிபதி பென்டர் நம்புவதில்லை. நீதிமன்றத்தில் தோன்றும் சாட்சிகளில் பாதிபேர் உண்மையற்றவற்றையே சொல்கின்றனர் என்று அவர் மதிப்பிடுகிறார். ஜெர்மனியிலுள்ள, ம்யூனிச் பல்கலைக்கழகத்தில் குற்ற இயல் சட்ட பேராசிரியரான மதிப்புக்குரிய பெர்ன்ட் ஷூனிமன், இதற்கு ஒப்பாகக் கூறினார். சாட்சிகளின் கூற்றுகள் முக்கியமான—எனினும் நம்பத்தகாத—வகையான அத்தாட்சி என்று டீ ஸீட் உடனான ஒரு பேட்டியில், ஷூனிமன் உறுதிப்படுத்தினார். “சாட்சிகளின் நம்பத்தகாதக் கூற்றுகளை நீதிபதி அப்படியே நம்பிவிடுவதே, நீதிவழங்குவதில் இவ்வகையானத் தவறுகள் ஏற்படுவதற்குக் காரணம் என்று நான் சொல்வேன்.”

சாட்சிகள் தவறும் இயல்புடையவர்கள்; போலீஸ்காரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. முக்கியமாய், பொதுமக்களின் ஆத்திரத்தைக் கிளப்பிவிடும் ஒரு குற்றச்செயலுக்குப் பின், போலீஸார் அந்த ஆளைக் கைது செய்யும்படி வற்புறுத்தும் நிலைக்குட்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலைமைகளில், போலீஸார் ஏதோ அத்தாட்சியை உண்டுபண்ணும்படியான, அல்லது தாங்கள் சந்தேகிக்கிறவர், தான் குற்றமுள்ளவர் என்று ஒப்புக்கொள்ளும்படி அவரை வற்புறுத்தும்படியான சோதனைக்கு உட்படுகின்றனர். பர்மிங்ஹாம் அணுகுண்டு வெடிப்பு சம்பந்தப்பட்டதில் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்ட அந்த ஆறு ஆண்கள் விடுதலை செய்யப்பட்டபோது, பிரிட்டிஷ் செய்தித்தாளாகிய தி இன்டிபென்டென்ட்டில் இந்தத் தலைப்புச் செய்தி இருந்தது: “போலீஸாரின் நேர்மையில்லாமையே ஆறுபேர் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.” த டைம்ஸ் செய்தித்தாளின்படி: “போலீஸார் பொய்ச் சொல்லி, கூடி சதிசெய்து, ஏமாற்றினார்கள்.”

சில வழக்குகளில், குறிப்பிட்ட ஓர் இனத்தவரில், மதத்தினரில், அல்லது தேசத்தினரில் சிலரை சந்தேகிக்கும்படி, அவர்களைப் பற்றிய தப்பெண்ணம் போலீஸாரையும் பொதுமக்களையும் செய்விக்கலாம். யு.எஸ்.நியூஸ் அண்ட் உவோர்ல்ட் ரிப்போர்ட் குறிப்பிடுகிறபடி, ஒரு குற்ற வழக்கைத் தீர்ப்பது, ‘காரண பகுத்தாய்வுக்கு மாறாக ஓர் இனப் பிரச்சினைக்குள்’ பின்பு விழச் செய்யலாம்.

ஒரு வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டால், தீர்ப்புகள், சாட்சிகள் சொல்பவற்றால் மட்டுமல்லாமல் அறிவியல் அத்தாட்சியாலும் பாதிக்கப்படலாம். அதிகமதிகமாய்ச் சிக்கலாகிக்கொண்டிருக்கும் அறிவியல் ஆய்வு துறையில், குண்டு தாக்கிய வேகம் அல்லது கைநாட்டுக்குறிகள், கையெழுத்து, இரத்தவகை, முடியின் நிறம், நெசவு நூல்கள், அல்லது டிஎன்ஏ மாதிரிகள் ஆகியவற்றை ஆதாரமாக வைத்து குற்றமுள்ளவரா குற்றமற்றவரா என்பதைத் தீர்மானிக்கும்படி நீதிபதி அல்லது ஜூரி எதிர்பார்க்கப்படலாம். “திகைக்க வைக்கும் சிக்கலான செயல்முறைகளை விவரிக்கும் மிகப்பல அறிவியலாளரை” நீதிமன்றங்கள் எதிர்ப்படுகின்றன என ஒரு வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

மேலும், அறிவியல் ஆய்வுத் துறை அத்தாட்சியின் விளக்கத்தை எல்லா விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்வதில்லை என்று இயற்கை (ஆங்கிலம்) பத்திரிகை குறிப்பிடுகிறது. “அறிவியல் ஆய்வுத் துறை விஞ்ஞானிகளுக்கிடையே நியாயமான கருத்துவேறுபாடு இருக்கலாம்.” வருந்தத்தக்கதாக, “அறிவியல் ஆய்வுத் துறையின் தவறான அத்தாட்சி, தவறான பல முடிவுகளுக்கு ஏற்கெனவே பொறுப்புடையதாக இருக்கிறது.”

நாம் எங்கு வாழ்ந்தாலும் சரி, தற்போது செயல்படும் நீதித்துறை அமைப்புமுறைகள் எல்லாமே மனித குறைபாடுகளைப் பிரதிபலிக்கின்றன. ஆகையால் குற்றமற்றவர்களைப் பாதுகாக்கும்படி யாரை நாம் நம்ப முடியும்? என்றாவது உண்மையான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாமா? நீதித்தீர்ப்புத் தவறுகளுக்குப் பலியானோருக்கு என்ன எதிர்கால நம்பிக்கை உள்ளது?

“யெகோவாவாகிய நான், நீதியை நேசிக்கிறேன்”

நீதியில் ஏற்பட்ட தவறுக்கு நீங்களாவது உங்கள் குடும்பத்தினராவது பலியாகியிருந்தால், யெகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசுவும் நீங்கள் அனுபவிக்கும் சங்கடத்தை உணருகிறார்கள். வாதனைக்குரிய கழுமரத்தில் இயேசு கொல்லப்பட்டபோது, எக்காலத்திலும் நிகழாத மிக அதிக பயங்கரமான அநீதி இழைக்கப்பட்டது. இயேசு “பாவஞ்செய்யவில்லை” என்று அப்போஸ்தலன் பேதுரு நமக்குச் சொல்கிறார். எனினும், பொய்ச் சாட்சிகளால் அவர் குற்றம் சாட்டப்பட்டு, குற்றமுள்ளவரெனத் தீர்க்கப்பட்டு, கொல்லப்பட்டார்.—1 பேதுரு 2:22; மத்தேயு 26:3, 4, 59-62.

தம்முடைய குமாரன் அவ்வகையில் தவறாக நடத்தப்பட்டதைப் பற்றி யெகோவா எவ்வாறு உணர்ந்திருப்பார் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்! நீதி, யெகோவாவின் முதன்மையான பண்புகளில் ஒன்றாக இருக்கிறது. “அவர் வழிகளெல்லாம் நியாயம் [“நீதியுள்ளவை,” NW]” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது.—உபாகமம் 32:4; சங்கீதம் 33:5.

யெகோவா இஸ்ரவேலுக்கு முதன்மையான நீதித்துறை அமைப்புமுறையைக் கொடுத்தார். கொலைசெய்தவன் இன்னாரெனத் தெரியாத சந்தர்ப்பத்தில், பலி செலுத்துவதன்மூலம் அந்த மரணத்திற்கு ஈடுசெய்யப்பட்டது. குற்றமற்ற ஆளைக் குற்றவாளியெனத் தீர்க்கும் ஆபத்துடன் ஒவ்வொரு குற்றத்திற்கும் தீர்வுகாணும்படியான வற்புறுத்தல் இல்லை. வெறும் சூழ்நிலை அல்லது அறிவியல் அத்தாட்சியின்பேரில் ஒருவரையும் கொலைகுற்றமுள்ளவராகத் தீர்க்க முடியாது; குறைந்தபட்சம், நேரில் கண்ட இரண்டு சாட்சிகளாவது தேவைப்பட்டனர். (உபாகமம் 17:6; 21:1-9) யெகோவா உயர்ந்த தராதரங்களை உடையவர் என்றும், சரியான முறையில் நீதி வழங்கப்படுவதில் அக்கறையுடையவராக இருக்கிறார் என்றும் இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. நிச்சயமாகவே, அவர் சொல்கிறார்: “யெகோவாவாகிய நான், நீதியை நேசிக்கிறேன்.”—ஏசாயா 61:8, NW.

உண்மைதான், இஸ்ரவேலின் நீதித்துறை அமைப்புமுறை, நம்மைப்போன்ற குறைபாடுகளையுடைய மனிதரின் கைகளில் இருந்தது. சட்டம் தவறாக கையாளப்பட்ட சம்பவங்கள் இருந்தன. அரசன் சாலொமோன் இவ்வாறு எழுதினார்: “ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே.”—பிரசங்கி 5:8.

தம்முடைய குமாரனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை யெகோவா மாற்ற முடிந்தவராக இருந்தார். இதன் நிச்சயம் இயேசுவைப் பலப்படுத்தினது, அவர், “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு . . . வாதனைக்குரிய கழுமரத்தைச் சகித்தார்.” அவ்வாறே, மேசியாவினுடைய ஆட்சியில், உண்மையான நீதி நிலவியிருக்கும் ஒரு பரதீஸான பூமியில் வாழும் சந்தோஷமான எதிர்பார்ப்பு, இந்தப் பழைய ஒழுங்குமுறையில் அநீதியைப் பற்றி கேள்விப்படுவதை அல்லது அனுபவிப்பதையுங்கூட சகிக்க நம்மைப் பலப்படுத்தும். யெகோவா, தம்முடைய உரிய காலத்தில் சரிசெய்ய முடியாதத் தீங்கோ கேடோ இல்லை. தவறான நீதித்தீர்ப்பின்மூலம் தங்கள் உயிரை இழந்தவர்களுங்கூட உயிர்த்தெழுதலை அனுபவிக்கலாம்.—எபிரெயர் 12:2, NW; அப்போஸ்தலர் 24:15.

அநீதியை அனுபவிப்பவர்களாக நாம் துன்பப்பட்டால், அந்த நிலைமையைச் சரிப்படுத்த நமக்கு உதவிசெய்யும்படி, நீதித்துறை அமைப்புமுறைகள் பல, சட்டப்பூர்வ வழிமுறைகளை உடையவையாய் இருப்பதற்காக நாம் நன்றியுள்ளோராய் இருக்கலாம். இத்தகைய வழிமுறைகளைக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், அவர்கள் இந்த உண்மையைத் தங்கள் மனதில் வைக்கிறார்கள்: அபூரண நீதித்துறை அமைப்புமுறைகள், பெரும்படியான அளவில் திரும்ப சரிப்படுத்தி அமைக்கப்படத் தேவைப்படுகிற மனித சமுதாயத்தின் ஒரு வெளிக்காட்டாக இருக்கின்றன. அது சீக்கிரத்தில் கடவுளால் சரிசெய்யப்படவிருக்கிறது.

சீக்கிரத்தில் யெகோவா, அநீதியான இந்தக் காரிய ஒழுங்குமுறையை ஒழித்து, அதனிடத்தில், “நீதி வாசமாயிருக்கும்” ஒரு புதிய ஒழுங்குமுறையை நிலைநிறுத்துவார். அப்போது, நம்முடைய சிருஷ்டிகர், தம்முடைய மேசியானிய அரசராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நீதியை வழங்குவார் என்று நாம் முற்றிலும் நம்பிக்கையுடையோராக இருக்கலாம். எல்லாருக்கும் உண்மையான நீதி சமீபமாயுள்ளது! இந்த எதிர்பார்ப்புக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்.—2 பேதுரு 3:13.

[அடிக்குறிப்பு]

a இங்கு குறிப்பிடப்பட்ட வழக்குகளில், எந்த நபராவது குற்றமுள்ளவராக இருப்பதையோ குற்றமற்றிருப்பதையோ த உவாட்ச்டவர் குறிப்பிடுகிறதில்லை; ஒரு நாட்டின் நீதித்துறை அமைப்புமுறை மற்றொரு நாட்டினுடையதைப் பார்க்கிலும் மேம்பட்டதென உயர்த்திப் பேசுவதுமில்லை. மேலும், ஒரு வகையான தண்டனை மற்றொன்றைப் பார்க்கிலும் நலமானதென வாதாடுகிறதுமில்லை. இது எழுதப்பட்ட சமயத்தில் அறிந்த உண்மைகளை இந்தக் கட்டுரை வெறுமனே குறிப்பிடுகிறது.

[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]

அபூரண நீதித்துறை அமைப்புமுறைகள்—ஊழலான அரசாங்கத்துடனும், இழிவான மதத்துடனும், நியதியற்ற வாணிகத்துடனும்கூட—பெரும்படியான திரும்பச் சீர்ப்படுத்தப்படுதலைத் தேவைப்படுபவையாக இருக்கிற மனித சமுதாயத்தின் பிரதிபலிப்பாயுள்ளன

[பக்கம் 28-ன் பெட்டி]

பரிசுத்த வேதவசனங்களிலிருந்து ஆறுதல்

நவம்பர் 1952-ல், டெரிக் பென்ட்லேயும் கிறிஸ்டஃபர் க்ரேகும், இங்கிலாந்தில் லண்டனுக்கு அருகேயுள்ள க்ராய்டனில் ஒரு பண்டகசாலைக்குள் நுழைந்து திருடினார்கள். பென்ட்லே 19 வயதானவனாக இருந்தான், க்ரேக் 16 வயதானவன். போலீஸார் அழைக்கப்பட்டனர், அந்தப் போலீஸாரில் ஒருவரை க்ரேக் சுட்டுக் கொன்றுவிட்டான். க்ரேக் ஒன்பது ஆண்டுகள் சிறையிருப்பில் இருந்தான், பென்ட்லேயோ, கொலை குற்றஞ்சாட்டப்பட்டு, ஜனவரி 1953-ல் தூக்கிலிடப்பட்டான்.

பென்ட்லேயின் சகோதரி ஐரிஸ், பென்ட்லே நடப்பிக்காத கொலைக்கு, அவன் பொறுப்பாளி ஆகாதிருக்க 40 ஆண்டுகள் போராடினாள். 1993-ல் அரசாங்கம் அந்தத் தீர்ப்பு சம்பந்தமாக மன்னிப்பை வெளியிட்டு, டெரிக் பென்ட்லே தூக்கிலிடப்பட்டிருக்கக்கூடாது என்று ஒப்புக்கொண்டது. அவனுக்கு நீதி வழங்கப்படுவதாக என்ற புத்தகத்தில் ஐரிஸ் பென்ட்லே இந்த வழக்கைப் பற்றி எழுதினாள்.

“அவன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு ஏறக்குறைய ஓர் ஆண்டுக்கு முன்னால் அவன், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை வீதியில் சந்தித்தான் . . . சகோதரி லேன் எங்களுக்குச் சமீபமான ஃபர்வ்யூ ரோடில் வாழ்ந்தார்கள், பைபிள் கதைகளைக் கேட்பதற்குத் தன் வீட்டுக்கு வரும்படி டெரிக்கை அழைத்தார்கள். . . . பைபிள் கதைகளின் ரெக்கார்டுகளை அவர்கள் வைத்திருந்தது பெரும் உதவியாக இருந்தது. [டெரிக் சரியாக வாசிக்க அறியாதவனாக இருந்ததால்] அவற்றை கேட்பதற்கு வேண்டி அவனுக்கு இரவலாகக் கொடுத்தார்கள். . . . நாம் மரித்த பின்பு நாம் எல்லாரும் திரும்ப வருவோம் என்றதைப் போன்ற காரியங்களான, சகோதரி லேன் அவனுக்குச் சொன்னவற்றை அவன் திரும்பிவந்து என்னிடம் சொல்வது வழக்கம்.”

பென்ட்லே தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக, மரண தண்டனை கைதிகளின் பகுதிக்கு ஐரிஸ் பென்ட்லே சென்று தன் சகோதரனைச் சந்தித்தாள். அவன் எத்தகைய உணர்ச்சியுடையவனாக இருந்தான்? “சகோதரி லேன் அவனுக்குச் சொல்லியிருந்த காரியங்கள், அந்தக் கடைசி ஒருசில நாட்களைச் சமாளிக்க அவனுக்கு உதவிசெய்தன.”—சாய்வெழுத்துக்கள் எங்களுடையவை.

நீதியில் தவறிழைத்ததனால் நீங்கள் கஷ்டத்தை அனுபவித்தால், பைபிள் சத்தியங்களை வாசித்து அவற்றின்பேரில் தியானிப்பது உங்களுக்கு நலமாயிருக்கும். இது மிகுந்த ஆறுதலை அளிக்க முடியும், ஏனெனில் யெகோவா தேவன் கனிவான ‘இரக்கங்களின் பிதா எல்லாவித ஆறுதலின் கடவுள், நம்முடைய சகல உபத்திரவத்திலும் நமக்கு ஆறுதல் செய்கிறவர்.’—2 கொரிந்தியர் 1:3, 4, தி.மொ.

[பக்கம் 29-ன் படம்]

கிறிஸ்து கொல்லப்பட்டபோது மிக மோசமான அநீதியான தீர்ப்பு வழங்கப்பட்டது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்