உயரமான கட்டடங்கள்—முதல் பனிப்பிரதேசம்—வரை ஜனங்களிடம் செல்லுங்கள்
மழையோ, பனியோ, கல்மழையோ, ஓநாய்களோ, மலைவாழ் சிங்கங்களோ, பகைவர் பிராந்தியமோ, அவர்களுடைய திடதீர்மான மனப்பான்மையைத் தளர்த்த முடியாது. மேற்குக் கரைக்கு அவசர தபாலைக் கொண்டுசெல்வதற்கு, திகைக்க வைக்கும் வேகத்துடன், 3,000 கிலோமீட்டர் அவர்கள் பாய்ந்தோடி, பரந்த புல்வெளியையும், பெருக்கெடுத்தோடும் நதிகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும் கடந்தார்கள். அவர்கள் யார்?
அவர்கள் மட்டக்குதிரைகளின்மீது சவாரி செய்து அவசர தபாலை எடுத்துச் சென்ற துணிகரமுள்ள இளம் வீரர்கள். a இத்தகைய திடதீர்மானத்தை இந்த இளம் வாலிபருக்குள் தூண்டுவித்தது எது? அந்தத் தபாலைக் கொண்டுசென்று சேர்ப்பதன் சவாலும், வீரச் செயலும் மனத்திருப்தியும் ஒருவேளை காரணமாக இருக்கலாம். கவனத்தைக் கவருவதாய், சவாரியாளர் ஒவ்வொருவரும் ஒரு பைபிளை, அந்த முக்கிய தபாலுடன் தம் சேணப் பைகளில் எடுத்துச் சென்றனர்.
ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்திற்குப் பின், அதைப் பார்க்கிலும் அதிகமான திடதீர்மானமும், ஆர்வமும், பக்தியுமுள்ள மனப்பான்மை, கனடாவின் மறு கரையில் ஆர்வப் பற்றுள்ள 1,13,000-க்கும் அதிக ராஜ்ய அறிவிப்பாளர்களால் காட்டப்படுகிறது. இவர்களுடைய உள்நோக்கம் என்ன? கடவுளின்மீதும் அயலான்மீதும் உள்ள அன்பே, ராஜ்ய சத்தியத்தை அச்சடித்த புத்தகங்களின் மூலமும் நேரடியாகவும் எங்கும் கொண்டுசெல்வதற்கு அவர்களைத் தூண்டுவிக்கிறது. ஜீவன் அளிக்கும் இந்தச் சத்தியம், வேகமான மட்டக்குதிரை தபால் பட்டுவாடாவைப் பார்க்கிலும் மிக அதிக அவசரமாய் கொண்டு செல்லப்பட வேண்டியதாக இருக்கிறது. ஆம், இதுவே, அந்த மட்டக்குதிரை அவசர தபால் கொண்டு சென்றவர்களின் சேணப் பையில் இருந்த அதே புத்தகமாகிய பரிசுத்த பைபிளின் பெரும் மதிப்புள்ள ராஜ்ய செய்தியாகும்.—நீதிமொழிகள் 2:21, 22; ஏசாயா 2:2-4; 61:2; மத்தேயு 22:37-39; 24:14.
யெகோவாவின்மீதும் ஜனங்களின்மீதும் உள்ள அன்பால் தூண்டுவிக்கப்படுகிறது
யெகோவாவின் சாட்சிகள், ராஜ்யத்தைப் பற்றி ஜனங்களிடம் பேசுவதை பெரிதும் விரும்புகிறார்கள். வானுயர்ந்த பல மாடி நகர கட்டடங்களிலும், நெடுந்தொலைவில் ஒதுக்கமாயுள்ள பனிப்பிரதேச சமுதாயங்களிலும், விமான நிலையங்களிலும், வீதிகளிலும், மற்ற பொது இடங்களிலும், டெலிபோனிலும் அவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் காண்பீர்கள். ஏன் இத்தகைய பல்வேறுபட்ட இடங்களில்?
பொருளாதார மற்றும் சமுதாய நிலைமைகளினால் வலுக்கட்டாயமாக வாழ்க்கை சூழல் மாறிக்கொண்டிருப்பது, ஜனங்களை வீட்டில் காண்பதைக் கடினமாக்குகிறது. பலருடைய காரியங்களில், குடும்பத்திற்கு அடிப்படையான பொருளாதாரத் தேவைகளை அளித்து திருப்திசெய்வதற்கு கணவன், மனைவி ஆகிய இருவருமே வேலை செய்கிறார்கள். இவ்வாறு செய்வதில் ஆவிக்குரிய தேவைகளைப் பெரும்பாலும் கவனியாமல் விடுகிறார்கள். இத்தகைய நெருக்கடிகளுக்கும் தொல்லைகளுக்கும் மத்தியில் இருக்கும் அவர்களுக்கு, இருதயத்தை ஊக்குவிக்கும் நம்பிக்கைக்குரிய ஒரு செய்தி மிகவும் அவசியமாக இருக்கிறது. அதை அளிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுடன் முன்வருகின்றனர். பகுத்தறிவையும் தயவையும் அவர்கள் பயன்படுத்தி, எல்லா வகையினரான ஆட்களின் கவனத்தையும் கவர்ந்து சிந்தனையைத் தூண்டும் வகையில் நற்செய்தியை அவர்களுக்கு அளிக்க வாய்ப்புகளை உண்டாக்குகிறார்கள்.—1 தீமோத்தேயு 2:3, 4.
மற்ற மொழிகளில்: ‘போய், சீஷராக்குங்கள்’ என்று இயேசு, தம்மைப் பின்பற்றினோருக்குக் கட்டளையிட்டபோது, எல்லா மொழிபேசும் ஜனங்களுக்கும் இந்த நம்பிக்கைக்குரிய செய்தியை எடுத்துச் செல்வதில் சுயமுயற்சிக்கும் தீர்மானத்திற்கும் இடமளித்தார். (மத்தேயு 28:19) பல நாடுகளில் இருப்பதுபோல், கனடா, பல நாகரிக பண்பாட்டினரும் மொழியினரும் கலந்திருக்கும் ஒரு சமுதாயமாகியிருக்கிறது; ராஜ்ய பிரஸ்தாபிகள் பலர், புதிய மொழிகளைக் கற்பதன்மூலம் தங்களைப் பொருத்தியமைத்துக்கொண்டு இருக்கின்றனர்.
உதாரணமாக, எட்மன்டன், ஆல்பர்ட்டாவில் முழுநேர ஊழியராக இருக்கிற ஒரு தம்பதியினர், தங்கள் நகரத்தில் மான்டரின் சீனமொழியைப் பேசின ஜனங்களுக்குப் போதிப்பதற்கானத் தேவையைக் கண்டனர். எனினும், முதலாவதாக, அந்த மொழியை அந்தத் தம்பதியினர் கற்க வேண்டியதாக இருந்தது; ஆகையால், மான்டரின் அறிந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவனிடம் உதவி கேட்டனர். அவன், அந்த மொழியை அவர்களுக்குக் கற்பிப்பதற்கும் அதேசமயத்தில் அவர்களிடமிருந்து பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்வதற்கும் சம்மதித்தான். எத்தகைய சிறப்பான வாய்ப்பு! 24 மாதங்களுக்குள், ஆர்வப்பற்றுள்ள இந்த ராஜ்ய பிரஸ்தாபிகள் இருவரும், மான்டரினில் போதிப்பதற்குத் தகுதி பெற்றனர். அதே சமயத்தில், அவர்களுடைய ஆசிரியனும் மாணவனுமாக இருந்தவன், கிறிஸ்தவ முழுக்காட்டுதலுக்குத் தகுதிபெற்றான்.
மற்ற நகரங்களிலும், ராஜ்ய பிரஸ்தாபிகள் அன்பினால் தூண்டப்பட்டு, போலிஷ், ரஷ்யன், வியட்னாமீஸ் போன்ற மொழிகளைக் கற்கையில், இதைப்போன்ற அனுபவங்களை அனுபவித்து மகிழ்கின்றனர்.
பாதையில்: தனிமையில் சவாரி சென்ற, கடந்த நூற்றாண்டின் வேகமான மட்டக்குதிரை தபால்காரர்களைப்போல், பிரிட்டிஷ் கொலம்பியாவின் உள்பகுதியில் ராஜ்ய பிரஸ்தாபிகளில் சிலர், தனிமையில் வண்டியோட்டி செல்வோராக இருக்கின்றனர். அவர்களுடைய நேரத்தில் பெருமளவு, மரக்கட்டைகளைச் சுமந்துசெல்லும் பெரும் பார வண்டிகளை, அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக மரம் அறுக்கும் ஆலைகளுக்கு ஓட்டிச் செல்லும் உலகப்பிரகாரமான தங்களுடைய வேலையில் செலவிடப்படுகிறது. இது, மற்ற டிரைவர்களிடம், சிபி (சிட்டிஸன் பான்ட்) ரேடியோ மூலமாக, போக்குவரவு நடமாட்டத்தையும் பாதையின் இடையூறுகளையும் பற்றி விடாது பேச்சுத்தொடர்பு கொண்டு தெரிவிப்பதைத் தேவைப்படுத்துகிறது.
இந்த ராஜ்ய பிரஸ்தாபிகள் தங்கள் சிபி ரேடியோக்களை ஆக்கப்பூர்வமாக தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக்கொள்கின்றனர். சிபி-யின் மூலமாகப்பேசி, தற்போது நிகழ்கிற சம்பவங்களைக் குறிப்பிட்டு உரையாடல்களைத் தொடங்குகிறார்கள். பின்பு, பைபிளில் சொல்லியிருப்பதைத் திறம்பட்ட முறையில் அதோடு இணைக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், சக டிரைவர்களில் ஒருவர், மரித்தோருக்கு இருக்கும் நம்பிக்கையைப் பற்றி பைபிள் சொல்வதை அக்கறையுடன் ஏற்றார். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) நெடுஞ்சாலை விபத்தில் சக டிரைவர் ஒருவரின் மரணம் அவரை உள்ளாழத்தில் கலங்க வைத்தது. அவர், பைபிள் படிப்பதற்கு நன்றியுடன் சம்மதித்தார்; இப்போது அவர், உடன் வேலைசெய்வோருக்கும் நண்பர்களுக்கும் நற்செய்தியை அறிவிப்பதைச் செவிகொடுத்துக் கேட்கலாம். மேலும், விதவையான அவருடைய நண்பரின் மனைவியுடன் ஒரு பைபிள் படிப்பு தொடங்கிய மகிழ்ச்சியும் அவருக்கு கிடைத்தது. ஜீவனளிக்கும் சத்தியத்தின் செய்தியை, இதைப்போன்று அசாதாரணமான முறையில் அளிப்பதற்கு முன்முயற்சி எடுத்ததற்காக எத்தகைய நற்பலன் கிடைத்தது!
ஆகாயவிமானத்தின் மூலம்: சத்தியத்தின் மதிப்புவாய்ந்த செய்தியை அறிவிக்கும் காரியத்தில், ஆர்வமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகள், எங்கெல்லாம் ஜனங்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் செல்கிறார்கள்; சிறிய ஆகாயவிமானங்களின் மூலமாய் ‘கிராமங்களில் பிரவேசிக்கிறார்கள்.’ (மத்தேயு 10:11, 12) சிறிது காலத்திற்கு முன்பாக, விமானத்தில் சென்ற இரண்டு தொகுதிகள் நற்செய்தியை அறிவிக்கும்படி, ஆர்வத்தால் தூண்டப்பட்டு மிகப் பரந்த பனிப்பிரதேசத்தில் சிதறியிருப்பவர்களாக வாழும் ஜனங்களை சந்திக்க தங்கள் சொந்த செலவில் சென்றனர். அந்த ஒவ்வொரு விமானத் தொகுதியினரும் வேகமானியில் காட்டியபடி ஏறக்குறைய 3,000 கிலோமீட்டர் பயணப்பட்டு, ஆர்க்டிக் வட்டத்தில் 250 கிலோமீட்டர் வரை சென்று, வெவ்வேறுபட்ட 14 சமுதாயத்தினரை சந்தித்தனர். நீண்ட தூரங்களில் ஒதுக்கமாயுள்ள பகுதிகளில் வாழும் ஜனங்களை சென்றெட்டுவதற்கு, இந்தச் சோர்வுறாத பிரஸ்தாபிகள் முழுமையாக ஏழு நாட்கள் தொடர்ந்து உழைத்தனர்.
இதெல்லாம் பயனுள்ளதாக இருந்ததா? இந்தச் சமுதாயங்களில் பைபிளின் செய்தி ஏற்றுக்கொள்ளப்பட்டு நல்ல முறையில் நற்பயனளித்ததைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். சமீப எதிர்காலத்தில், பரதீஸ் பூமியைக் கொண்டுவருவதற்கான யெகோவாவின் நோக்கத்தை, சந்திக்கும் ஊழியர்கள் சுருக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டினபோது ஆவிக்குரிய ஒரு முக்கியமானத் தேவையைப் பூர்த்திசெய்ய உதவி செய்தார்கள். (மத்தேயு 5:3) செய்தியைக் கொண்டுவந்தவர்கள் திரும்பிச் சென்ற பின்பு, அந்தச் சமுதாயங்களில் உள்ள நேர்மை இருதயமுள்ள ஆட்கள், தங்களிடம் அவர்கள் விட்டுச் சென்ற 542 பைபிள்களையும் பைபிள் படிப்பு உதவிப் புத்தகங்களையும், 3,000 பத்திரிகைகளையும் நெடுங்காலத்திற்கு வாசிக்க முடியும்.—அப்போஸ்தலர் 12:24-ஐ ஒப்பிடுக.
தொலைபேசியின் மூலம்: ஆயிரக்கணக்கான நகரவாசிகள், தனி குடியிருப்பு வீடுகளில் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு வசதிகள் கொண்ட கட்டடங்களில் வாழ்கின்றனர். இருப்பினும், ஒப்புக்கொடுத்த ராஜ்ய பிரஸ்தாபிகள் ஆர்வத்துடனும் விவேகத்துடனும் செயல்படுகின்றனர். இந்த ஆட்கள் இருக்கிற இடங்களுக்கு அவர்களால் எவ்வாறு செல்ல முடிகிறது? நேருக்குநேர் பார்த்து பேசுவது மேலானதாகக் கருதப்பட்டாலும், அந்தக் குடியிருப்பினரைக் கண்டு பேசுவதற்கான பொது முகப்பு அறையிலுள்ள இன்டர்காமை பெரும்பாலும் பயன்படுத்தி அதில் வெற்றியடைய முடிகிறது. இது சாத்தியமாக இராதபோது, அவர்கள் தங்கள் டெலிபோன் டைரக்டரியைப் பயன்படுத்தி, தொலைபேசியில் மக்களிடம் பேச முயற்சி செய்கின்றனர்.
ஒரு காலையில், வயதான ஓர் அம்மாள் தன் தொலைபேசியில் பதிலளித்தார்கள். சுருக்கமாக மரியாதையுடன் அவருக்கு வாழ்த்துரை கூறினபின்பு, இரவில் ஆட்கள் வீதியில் நடமாடுவதற்கேற்ப பாதுகாப்பாய் இருக்கும் ஒரு எதிர்காலம் வரும் என்று அந்த அம்மாள் நம்புகிறார்களா என கேட்கப்பட்டது. எதிர்காலத்தில் மிகுந்த சமாதானம் இருக்கும் என்று அந்த அம்மாளுக்கு உறுதியாக நம்பிக்கையூட்டுவதற்கு வேதவசனங்கள் வாசிக்கப்பட்டன. (சங்கீதம் 37:10, 11; தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) கடவுளுடைய வாக்குறுதிகளை நாம் ஏன் நம்பலாம் என்பதைப் பற்றி உரையாடும்படி அடுத்த வாரம் அதே நேரத்தில் தொலைபேசியில் பேசுவதற்கு அந்த அம்மாள் ஒப்புக்கொண்டார்கள். பாராக்களை பைபிள் படிப்பு உதவி புத்தகத்திலிருந்து வாசித்து, பொருத்தமான கேள்விகளை கேட்டு, இவ்வாறு தொலைபேசியின்மூலம் ஒரு மாதம் வரையில் பைபிள் படிப்பு நடத்திய பின்பு, அந்த ராஜ்ய பிரஸ்தாபி வாரந்தோறும் அத்தனை பல பிரசங்கங்களை அளிக்க முடிந்ததற்காக அந்த அம்மாளிடமிருந்து பாராட்டைப் பெற்றார். இப்போது, அந்தப் படிப்பு புத்தகத்தைப் பற்றி விவரித்து, அந்த அம்மா சொந்தமாக ஒரு பிரதியை வைத்துக்கொள்ளும்படி அளிப்பதற்குரிய சமயமாக இருந்தது. அந்த இருவரும் நேருக்குநேர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிச்சயமாகவே, யெகோவாவின் சாட்சிகள் ஜனங்களின்பேரில் அன்பு காட்டுகிறார்கள்; இந்தக் கிறிஸ்தவ பிரசங்கிகளுடன் யெகோவா இருக்கிறார் என்பதை மதித்துணருவோராய் ஆட்கள் சாதகமாய்ப் பிரதிபலிக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 14:25-ஐ ஒப்பிடுக.
அச்சிட்ட பக்கங்களின்மூலம்: பிரெஞ்சு மொழியே பிரதான மொழியாக இருக்கும் க்யுபெக் மாகாணத்திலும் ராஜ்ய பிரஸ்தாபிகள், ஜனங்கள் இருக்கும் எல்லா இடங்களுக்கும் செல்கின்றனர். ஒரு பயண ஊழியர் இவ்வாறு குறிப்பிட்டார்: “சர்ச்சின் மூர்க்கமான எதிர்ப்பின் காரணமாக, தாங்கள் எந்த முன்னேற்றமும் செய்திருக்கவில்லையென பல ஆண்டுகளாக சகோதரர் கருதினர். ஆனால், முன்பு பெரும்பாலும் அறியப்படாததாக, சொற்ப பேரால் மாத்திரமே வாசிக்கப்பட்ட புத்தகமாயிருந்த பைபிள், சகோதரரின் தளராத உழைப்பின் மூலமும், அவர்கள் விடாது மறுபடியும் மறுபடியுமாக போய் சந்தித்ததின் மூலமும், இப்போது பெரும்பான்மையரின் வீடுகளில் காணப்படுகிறது.”
மருத்துவ சமுதாயம் உட்பட, க்யுபெக் சமுதாயத்தின் எல்லா படிநிலைகளிலிருந்தும் நற்செய்தியை அறிவிப்போராக புதியவர்கள் வருவதால் ஊக்கமூட்டும் பலன்கள் அனுபவிக்கப்படுகின்றன. ஒரு மருத்துவரின் காரியத்தில் இவ்வாறு இருந்தது. ராஜ்ய பிரஸ்தாபியாக இருந்த அவருடைய மனைவி, பைபிள் அளிக்கும் நம்பிக்கையைப் பற்றி அவருடன் அடிக்கடி பேசுவார்கள். விழிப்புள்ளவராக இருந்த சபை மூப்பர் ஒருவர், சபை கூட்டத்தில், உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற சிற்றேடு படிக்கப்படுகிற சமயத்தின்போது, அந்த மருத்துவரை சபைக் கூட்டத்திற்கு அழைக்க முன்முயற்சி எடுத்தார். அவர் வந்தார், அதில் பங்கும் பெற்றார். அந்தக் கலந்துரையாடல்களின் தரத்தினாலும் ஆவிக்குரிய செறிவினாலும் மனம் கவரப்பட்டவராய், தன்னோடு ஒரு பைபிள் படிப்பு நடத்தப்படுவதற்கு ஒப்புக்கொண்டார். இப்போது அவரும்கூட ஒரு ராஜ்ய பிரஸ்தாபியாக இருக்கிறார்.
பத்திரிகைகளை திறம்பட்ட முறையில் உபயோகிப்பது, ஆட்களை பைபிளிடமாக கவனத்தை திருப்ப வைப்பதில் முக்கியமான பாகத்தை நிறைவேற்றியிருக்கிறது. எந்தக் கட்டுரை ஒருவரை சத்தியத்தினிடமாக மனம் கவரச் செய்யும் என்பதை ஒருவர் ஒருபோதும் அறிகிறதில்லை. செய்தியைக் கேட்க விரும்பாதவளும் ஆனால் பூச்சிகளைப் பற்றியதில் அக்கறையுடையவளுமாக இருந்த அடுத்த வீட்டுக்காரருக்கு ஆங்கில விழித்தெழு! பத்திரிகை ஒன்றை ஒரு ராஜ்ய பிரஸ்தாபி அளித்தார். நவம்பர் 22, 1992, ஆங்கில விழித்தெழு! பத்திரிகையிலிருந்த “சாகாஸ் நோய்—மரணத்தைத் தழுவுதல்” என்ற கட்டுரையில் இருந்த நிழற்படம் அந்த அம்மாளின் அக்கறையைத் தூண்டிற்று. தான் வாசித்ததால் மனம் கவரப்பட்டவளாய், மேலுமதிக பத்திரிகைகளுக்காகக் கேட்டாள். அவளோடு ஒரு படிப்பு தொடங்கப்பட்டது, ஆறு மாதங்களுக்குள் அவள் மற்றவர்களுக்குச் சாட்சிகொடுப்பதில் ஈடுபட்டாள்.
பொது இடங்களில்: விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் கனடாவின் சட்டம் பேச்சு சுயாதீனத்தை அனுமதிக்கிறது. சர்வதேச விமான நிலையமாகிய ஹாலிஃபாக்ஸில், விமானங்கள் வந்துசேர்ந்து திரும்ப புறப்படுவதற்கு இடையேயுள்ள நேரத்தில், ராஜ்ய பிரஸ்தாபிகள் விவேகத்துடன் பயணிகளை அணுகி, அவர்களுடன் உரையாடலில் ஈடுபடுகிறார்கள். பேச்சை பைபிளிடம் திருப்ப சமயோசிதமான வழிகாட்டு கேள்விகள் பயன்படுத்தப்படுகின்றன. பாக்கெட்டில் வைக்கக்கூடிய சிறிய பைபிளையும் பிரசுரங்களையும் அவர்கள் எடுத்துச் செல்வதால், அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளை அவர்களால் திருப்திசெய்ய முடிகிறது. அறுவை மருத்துவர்கள், விஞ்ஞானிகள், வழக்குரைஞர்கள், விமானிகள், மதகுருமார்கள், போலீஸ்காரர்கள், வாடகை மோட்டார் ஓட்டுபவர்கள், எஞ்ஜினியர்கள், ஆசிரியர்கள், இராணுவ அதிகாரிகள், அயல் நாட்டு அரசியல்வாதிகள் ஆகியோர், ராஜ்ய செய்தியை இந்த முறையில் கேட்டு, சத்தியத்தின் விதைகளைத் தொலைதூர இடங்களுக்கு எடுத்துச் சென்றவர்களில் அடங்கியுள்ளனர்.—கொலோசெயர் 1:6.
விமான நிலையத்தில் ஒரு விடியற்காலத்தின்போது, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை ஒருவர் ஏற்றார். பின்பு அவர் அமைதியாக தாழ்ந்த குரலில்: “ஓ, இருக்காது, யெகோவாவின் சாட்சிகளா!” என்று சொன்னார். ஏன் அத்தகைய பிரதிபலிப்பு? அந்த மனிதர் பக்தியுள்ள முஸ்லிம்; அப்போதுதான் அந்த விமான நிலைய பிரார்த்தனை அறையில் ஜெபித்திருந்தார். தனக்கு ஞானத்தையும், உட்பார்வையையும், சத்தியத்தையும் காட்டும்படி கடவுளிடம் ஜெபித்திருந்தார். தன் ஜெபத்திற்கு உடனடி பதிலாக யெகோவாவின் சாட்சிகள் இருப்பதை நினைக்கையில் அது அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.
நிச்சயமாகவே, கனடாவில் இருக்கும் தைரியமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகள், ராஜ்யத்தைப் பற்றிய மதிப்புமிகுந்த செய்தியைத் தாங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதில், தடையாகக் குறுக்கிடுவதற்கு எதையும் அனுமதிப்பதில்லை. அந்நிய மொழிகளோ, அழுக்கடைந்த கரடுமுரடான பாதைகளோ, தொலைதூரத்தில் ஒதுக்கமாயுள்ள சமுதாயங்களோ, பெரும் பாதுகாப்பிலுள்ள நகரின் உயரமான கட்டடங்களோ தங்களைத் தயக்கமடைய செய்வதற்கு அவர்கள் இடமளிப்பதில்லை. சத்தியத்தை நாடித்தேடும் நேர்மை இருதயமுள்ளோருக்கு, ஜீவனளிக்கும் கடவுளுடைய செய்தியை அளிப்பதற்கு அவர்கள் திடதீர்மானமுள்ளோராக இருக்கிறார்கள். ‘போய் சீஷராக்குங்கள்’ என்ற இயேசுவின் கட்டளைக்கு, தங்கள் உடன் ஊழியராலான உலகளாவிய சகோதரத்துவத்தோடுகூட, சுயநலமற்றவர்களாய்க் கீழ்ப்படிகிறார்கள்.—மத்தேயு 28:19.
[அடிக்குறிப்பு]
a வேகமான மட்டக்குதிரை சவாரி தபால் சேவை என்பது ஐக்கிய மாகாணங்களில் 1860-லிருந்து 1861 வரையில் 18 மாத குறுகிய காலப்பகுதியின்போது செயல்பட்ட தபால் சேவையாகும்.
[பக்கம் 27-ன் பெட்டி]
தொலைபேசியைப் பயனுள்ளதாகக் காணும் ராஜ்ய பிரஸ்தாபிகள் அதைப் பயன்படுத்துகின்றனர்
சிலர் இவ்வாறு சொல்லியிருக்கின்றனர்: “ஹலோ, என் பெயர் [உங்கள் பெயரைச் சொல்லுங்கள்]. சமாதானத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதைப் பற்றி உங்கள் கட்டடத்திலுள்ளோரிடம் நான் சுருக்கமாய்ப் பேசி வருகிறேன். என்றாவது உலகமெங்கும் சமாதானம் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலளிக்க நேரம் கொடுங்கள்.] உங்கள் மனதில் எழும் குழப்பத்தை தெளிவுபடுத்த இதைச் சொல்கிறேன்; நான் ஏதோ ஆராய்ச்சியோ விற்பனையோ செய்துகொண்டில்லை. மாறாக, கடவுள்தாமே உண்மையில் சமாதானத்தைக் கொண்டுவருவார் என்ற எண்ணத்தை, பரிசுத்த வேதவசனங்களிலிருந்து பகிர்ந்து கொள்கிறேன்.” பின்பு, வேதவசனங்களிலிருந்து சுருக்கமாகக் கலந்தாராய்வதில் அந்த உரையாடல் தொடரலாம்.
மற்றவர்கள் இவ்வாறு சொல்லியிருக்கின்றனர்: “குட் ஈவினிங். என் பெயர் [உங்கள் பெயரைச் சொல்லுங்கள்]. உங்கள் பகுதியில் நான் வேலைசெய்ய விரும்பி வந்தவன். உங்கள் கட்டடத்தில் வாழும் நபர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு வருகிறேன். நம்முடைய பகுதியில் அதிகமாகி வரும் வன்முறையையும் தீயச் செயல்களையும் கவனிக்கையில் தங்கள் சொந்த பாதுகாப்பைப் பற்றி பலர் கவலையுடையோராக இருக்கின்றனர். இது உங்களுக்கும் கவலையூட்டுகிற ஒன்றாக இருக்கிறதா? [பதிலளிக்க நேரம் அனுமதியுங்கள்.] முழு உலகமும் பாதுகாப்பாய் இருப்பதாக உணரும் ஒரு காலம் எப்போதாவது வருமென்று நினைக்கிறீர்களா?” பதிலளிக்க நேரம் கொடுத்து, வேதப்பூர்வ செய்தியைத் தொடர்ந்து சொல்லுங்கள்.