சர்ச்சுகள் பாவங்களை ஒப்புக்கொள்கின்றன
“போப் சர்ச்சை விசாரணைக்கு உட்படுத்துகிறார்.” “கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை மற்றும் யூதர்களுக்கு விரோதமான பகை—சர்ச் அதன் மேயா குல்பாவை * தயாரிக்கிறது.” “சர்வநாசத்திற்கான மேயா குல்பா.” “மெத்தடிஸ்ட்கள் தூர மேற்கிலுள்ள அமெரிக்க இந்தியர்களிடம் வருத்தத்துடன் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர்.”
இப்படிப்பட்ட தலைப்புச் செய்திகளை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா? சர்ச்சுகள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு, பல நூற்றாண்டுகளாக தாங்கள் செய்து வந்தவற்றிற்காக மன்னிப்பு கேட்பது இப்போது அடிக்கடி சம்பவிப்பதாக தோன்றுகிறது. போப்பின் புதிய மேயா குல்பாக்களைப் பற்றி செய்தித்துறை அடிக்கடி எடுத்துக் கூறுகிறது.
போப் மன்னிப்பு கேட்கையில்
1980-க்கும் 1996-க்கும் இடையே இரண்டாம் ஜான் பால் குறைந்தது 94 தடவையாவது, ‘சர்ச்சின் சரித்திரத்தில் நடந்த தவறுகளை கண்டுணர்ந்திருப்பதாக அல்லது அதற்காக மன்னிப்பு கேட்பதாக’ வத்திகன் கருத்துரையாளர் லூயிஜி ஆக்காட்டாலி என்பவர் குவான்டோ இல் பாப்பா கெடே பெர்டோனோ (போப் மன்னிப்பு கேட்கையில்) என்ற தன் புத்தகத்தில் சொல்கிறார். ஆக்காட்டாலியின்படி, “கத்தோலிக்க சர்ச்சில் போப் மட்டுமே மேயா குல்பா செய்ய முறைப்படி ஒப்புக்கொள்ள முடியும்.” சிலுவைப் போர்கள், யுத்தங்கள், சர்வாதிகாரத்துக்கு ஆதரவு, சர்ச்சுகளில் பிரிவினை, யூதர்களுக்கு விரோதமான பகை, கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைகள், மாஃபியா, இன தப்பெண்ணங்கள் போன்ற கத்தோலிக்க சரித்திரத்தின் அதிக சர்ச்சைக்குரிய விஷயங்களைச் சுட்டிக்காட்டி அவர் இதை தெரிவித்தார். 1994-ல் கார்டினல்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் (போப்பிடமிருந்து வந்த மிக முக்கியமான பத்திரமாக சிலரால் கருதப்படுகிறது) இரண்டாம் ஜான் பால், “கடந்த ஆயிரமாண்டுகளாக செய்துவந்த பாவங்களை பொதுப்படையாக ஒப்புக்கொள்வதாக” குறிப்பிட்டார்.
உயர் திருச்சபை பதவியாளர்கள் பலர் போப்பின் உதாரணத்தைப் பின்பற்றினர். டிசம்பர் 1994-ல், இத்தாலிய செய்தித்தாள் இல் ஜார்நாலே இவ்வாறு அறிக்கை செய்தது: “அநேக அமெரிக்க பிஷப்புகள் தொலைக்காட்சியில் வெளிப்படையாய் மன்னிப்பு கேட்டனர்.” எதற்காக? பிள்ளைகளைத் தவறாக பயன்படுத்தும் பாதிரிமார்களின் பிரச்சினைகளை குறைவாக மதிப்பிட்டு அதன்மூலம் அநேக இளம் நபர்களுக்கு தீங்கு விளைவித்திருப்பதற்காகவே. ஜனவரி 1995-ல், லா ரிபூப்ளிக்கா செய்தித்தாளில், “சமகாலத்து கத்தோலிக்க மத சரித்திரத்தில் முன் என்றுமில்லாத ஒரு செயல்”—சர்வநாசத்தைக் குறித்து பன்னிரண்டாம் போப் பயஸ் மௌனம் சாதித்தார் என்ற பிரச்சினை குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனவரி 1995-ல், அதே செய்தித்தாள், நாசிக்களின் குற்றச்செயல்களை ஆதரித்த ரோமன் கத்தோலிக்கரின் “அநேக தவறுகளுக்காக” ஜெர்மன் பிஷப்புகளின் குழு மன்னிப்பு கேட்டதாக அறிக்கை செய்தது. பல்வேறு புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளும்கூட சுயவிமர்சனங்களுக்கு தங்களை உட்படுத்தியிருக்கின்றன.
ஏன்?
தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. ஆகவே சர்ச்சுகள் தங்களைத் தாங்களே விமர்சிப்பதை அநேகர் மெச்சி பாராட்டுகின்றனர். (யாக்கோபு 5:16) ஆனால் சர்ச்சுகள் இதை ஏன் செய்கின்றன? நாம் அவற்றை நோக்கும் விதத்தை அது எவ்வாறு பாதிக்க வேண்டும்?
[அடிக்குறிப்பு]
*லத்தீன் மொழியில் “என் சொந்த தவறு” என்று அர்த்தம். (கான்ஃபிடியோர் அல்லது, “நான் பாவத்தை ஒப்புக்கொள்கிறேன்”) என்ற கத்தோலிக்க ஜெபத்தின் ஒரு பாகமாயுள்ள இந்தச் சொற்றொடரை சர்ச் அங்கத்தினர்கள் திரும்பத்திரும்ப கூறுவார்கள்.