கடவுளுடைய வார்த்தையில் நம் விசுவாசத்தை பலப்படுத்துதல்
வேறெந்த புத்தகத்தையும்விட பைபிளை பெரும்பாலான மக்கள் வாசித்திருக்கின்றனர். ஆனால் எத்தனை பேர் அதிலுள்ள செய்தியில் விசுவாசத்தை வெளிப்படுத்தி காண்பித்திருக்கின்றனர்? “விசுவாசம் எல்லாருக்கும் உரியதல்லவே” என்று பைபிளே வெளிப்படையாக சொல்லுகிறது. (2 தெசலோனிக்கேயர் 3:2, தி.மொ.) விசுவாசிப்பது நம் பிறவிகுணம் அல்ல என்பது தெளிவு. அது வளர்க்கப்பட வேண்டும். ஓரளவு விசுவாசமுள்ளவர்களும்கூட அதை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளக் கூடாது. விசுவாசத்தின் தரம் மெல்ல மெல்ல குறைந்து செத்துவிடலாம். ஆகையால், ‘விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாய்’ நிலைத்திருப்பதற்கு முயற்சி தேவை.—தீத்து 2:2.
அப்படியானால், நல்ல காரணத்தோடுதான், 1997/98 தொடர்ச்சியான மாவட்ட மாநாடுகளுக்காக, “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” என்ற பேச்சுப்பொருளை யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு தெரிந்தெடுத்தது. இதனால் லட்சக்கணக்கான சாட்சிகளும் மற்றவர்களும் கடவுளுடைய வார்த்தையில் தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு ஒன்றுகூடி வரும் சிலாக்கியம் அளிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடவுளுடைய வார்த்தையே சத்தியம்—நம்முடைய விசுவாசத்திற்கான ஆதாரம்
இதுவே முதல் நாள் மாநாட்டின் பேச்சுப்பொருள். ஆஜரானோர் அனைவருக்கும் வாழ்த்துதல் வழங்கலோடு ஆரம்பமானது. மாநாட்டிற்கு வருகைதந்தது பைபிளுக்கு காண்பிக்கப்படும் மரியாதைக்கு அத்தாட்சியாக விளங்கியது. என்றபோதிலும், நம்முடைய விசுவாசத்தின் சம்பந்தமாக சிந்தையைத் தூண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டன: ‘கடவுளுடைய வார்த்தையை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தி, நம்முடைய நம்பிக்கைகளை நாம் நிரூபிக்க முடிகிறதா? பைபிளையும், பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களையும், கூட்டங்களையும் ஒருபோதும் அசட்டை செய்யாமல், ஆவிக்குரிய உணவுக்குப் போற்றுதல் காட்டுகிறோமா? அன்பிலும் திருத்தமான அறிவிலும் பகுத்துணர்விலும் நாம் பெருகிக்கொண்டிருக்கிறோமா?’ “‘கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்’ என்ற இந்த மாவட்ட மாநாடு, நம்மைநாமே ஆராய்ந்து பார்க்கவும் தனிப்பட்டவர்களாக நமக்கிருக்கும் விசுவாசத்தின் அளவையும் தரத்தையும் பரிசோதித்துப் பார்க்கவும் நமக்கு உதவிசெய்ய தயாரிக்கப்பட்டிருக்கிறது” என குறிப்பிட்டு, கவனமாய் செவிசாய்க்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்தினார் அந்தப் பேச்சாளர்.
முக்கிய பேச்சு, “விசுவாசித்து நடத்தல், தரிசித்து அல்ல” என தலைப்பிடப்பட்டிருந்தது. (2 கொரிந்தியர் 5:6) “யெகோவாவின் சாட்சிகளாய் ஆகியிருக்கிறவர்களுடைய விசுவாசம், எதையும் எளிதில் நம்பிவிடும் இயல்புடையதல்ல” என்று பேச்சாளர் சொன்னார். இது எவ்வளவு உண்மை! உண்மையான விசுவாசம் குருடானதல்ல. அது மெய்மைகளின் அடிப்படையிலானது. எபிரெயர் 11:1 (NW) இவ்வாறு சொல்கிறது: “விசுவாசம் என்பது நம்பப்படும் காரியங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப் பற்றிய தெளிவான வெளிக்காட்டல்.” பேச்சாளர் குறிப்பிட்டார்: “நாம் உண்மையிலேயே விசுவாசித்து நடக்கப்போகிறவர்களாய் இருந்தால், நன்கு ஆதாரமிடப்பட்ட விசுவாசம் நமக்கு அவசியம்.” ஏனெனில் நாம் விசுவாசித்து நடக்கிறோம், தரிசித்து அல்ல; யெகோவா தம்முடைய நோக்கத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் எப்படி மற்றும் எப்பொழுது நிறைவேற்றுவார் என்பதைப் பற்றிய விவரங்கள் நமக்குத் தேவையில்லை. அவரைப் பற்றி ஏற்கெனவே நாம் அறிந்திருக்கிற விஷயங்கள், தம்முடைய வாக்குறுதிகளை அன்புடனும் நீதியுடனும் நிறைவேற்றுவதற்கு அவருக்கு இருக்கும் வல்லமையில் நமக்கு முழு நம்பிக்கையைத் தருகின்றன.
“கிறிஸ்தவ இளைஞர்கள்—சபையின் ஒரு முக்கியமான பாகமானவர்கள்” என்ற பேச்சு, யெகோவாவுக்கு இளைஞர்கள் எவ்வளவு அருமையானவர்கள் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டியது. முழு பைபிளையும் வாசிப்பது, ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுவதற்கான தகுதிகளைப் பூர்த்திசெய்வது போன்ற இலக்குகளை நாடித் தொடருவதன் மூலம் ஆவிக்குரிய விதத்தில் வளரும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர். துணைக் கல்வியை நாடுவது, பெற்றோருடன் சேர்ந்து தீர்மானிக்கப்பட வேண்டிய தனிப்பட்ட விஷயம்; ஆனால் அதைத் தொடர்ந்தால், கடவுளை இன்னும் அதிக திறம்பட்ட முறையில் சேவிப்பதற்கு ஆயத்தமாவதே எப்பொழுதும் அதன் நோக்கமாக இருக்க வேண்டும். நம்முடைய விசுவாசத்துடன் சம்பந்தப்பட்ட ‘அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளும்போது’ உலகப்பிரகாரமான கல்வி நன்மைதரும் நோக்கத்திற்கு உதவலாம்.—பிலிப்பியர் 1:9, 10, NW.
அடுத்து வந்தது, “நீங்கள் யாருடைய தராதரங்களைப் பின்பற்றுகிறீர்கள்?” என்ற பேச்சுப்பொருளில் கொடுக்கப்பட்ட மூன்று சொற்பொழிவுகள் அடங்கிய ஒரு தொடர்பேச்சு. கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் பைபிள் தராதரங்களைப் பின்பற்றி நடக்க நம்மை உந்துவிக்கிறது. யெகோவாவின் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிகின்றனர். உதாரணமாக, அசிங்கமான பேச்சையும் புண்படுத்தும் பேச்சையும் பயன்படுத்தக் கூடாதென பைபிள் நமக்கு புத்திமதி கூறுகிறது. (எபேசியர் 4:31, 32) பேச்சாளர் கேட்டார்: “கோபமூட்டப்பட்டால் அல்லது எரிச்சலூட்டப்பட்டால், நீங்கள் கத்திக் கூச்சலிட்டு உங்கள் துணைவரை அல்லது உங்கள் பிள்ளைகளைத் திட்டுகிறீர்களா?” நிச்சயமாகவே, அது கிறிஸ்தவமற்ற செயல். நம்முடைய தனிப்பட்ட தோற்றங்கள் சம்பந்தமாகவும்கூட கடவுள் தராதரங்களை வைத்திருக்கிறார். கிறிஸ்தவர்கள் தங்களை “தகுதியான வஸ்திரத்தாலும் அடக்கத்தாலும்” அலங்கரித்துக்கொள்ள வேண்டும். (1 தீமோத்தேயு 2:9, 10, NW) ‘அடக்கம்’ என்ற வார்த்தை, சுயமரியாதை, கெளரவம், மிதமான, நிதானம் ஆகிய கருத்துக்களைக் கொடுக்கிறது. பிறருக்கான அன்பால் நாம் தூண்டப்படுகிறோம், பைபிள் நியமங்களாலும் தகுந்த உணர்வாலும் வழிநடத்தப்படுகிறோம்.
அதைத் தொடர்ந்துவந்த இரண்டு பேச்சுக்களும் எபிரெயர் 3:7-15 மற்றும் 4:1-16 வசனங்களை வசனத்துக்கு-வசனம் ஆராய்ந்தன. இந்த பைபிள் பகுதிகள், ‘பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப்’ போகும் அபாயத்துக்கு எதிராக நம்மை எச்சரிக்கின்றன. (எபிரெயர் 3:13) பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் எவ்வாறு வெற்றிபெறலாம்? யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலம் நமக்கு உதவுகிறார். உண்மையில், “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், . . . இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.”—எபிரெயர் 4:12.
“எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்” என்பதே முதல் நாள் மாநாட்டின் கடைசி பேச்சு. அது, பைபிளின் நம்பகத்தன்மை, துல்லியம், நடைமுறைப் பயன் ஆகியவற்றை சிறப்பித்துக் காட்டியது. எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்று தலைப்பிடப்பட்ட 32-பக்க புதிய சிற்றேடு வெளியிடப்படுவதை பேச்சாளர் அறிவிப்பதைக் கேட்பது எவ்வளவாய் கிளர்ச்சியூட்டியது! முக்கியமாக, படித்த ஆனால் பைபிளைப் பற்றி அதிகம் தெரியாத ஆட்களுக்காக இந்தப் புதிய பிரசுரம் தயாரிக்கப்பட்டது. பின்வரும் வார்த்தைகளுடன் அந்தப் பேச்சு நிறைவடைந்தது: “மக்கள் தாங்களாகவே கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவர்களாகவே படித்துப் பார்க்கவேண்டும். அவ்வாறு படிக்கும்போது, பைபிள் உண்மையிலேயே ஒரு விசேஷித்த புத்தகம், நிச்சயம் இது எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்! என்று அவர்கள் உணருவார்கள். இந்தக் கருத்தில் நமக்கு நம்பிக்கை இருக்கிறது.”
‘நம்முடைய விசுவாசத்தைப் பரிபூரணமாக்குகிறவரின்’ மாதிரியைப் பின்பற்றுங்கள்
மாநாட்டின் இரண்டாம் நாளுக்கான இந்தப் பேச்சுப்பொருள், ‘நம்முடைய விசுவாசத்தைப் பரிபூரணமாக்குகிறவராகிய’ இயேசு கிறிஸ்துவின்மீது நம்முடைய கவனத்தை ஈர்த்தது. நாம் ‘அவருடைய அடிச்சுவடுகளை நெருங்கப் பின்பற்றுவது’ அவசியம். (எபிரெயர் 12:2; 1 பேதுரு 2:21, NW) கிறிஸ்தவமண்டலத்திலுள்ள அநேகருக்கு இவ்வாறு சொல்லப்படுகிறது: ‘கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய்!’ ஆனால் விசுவாசத்திற்கு இது மட்டும் போதுமா? ‘கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது’ என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 2:26) ஆகையால், இயேசுவை விசுவாசிப்பதோடுகூட, அவர் செய்த கிரியைகளை நாம் செய்ய வேண்டும், முக்கியமாக கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை பிரசங்கிப்பதன் மூலம்.
காலை நிகழ்ச்சிநிரல் சுவிசேஷ வேலையின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது. பவுலைப் போல, இரட்சிப்பின் செய்தியை அறிவிப்பதற்கு நாம் ஆவலுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (ரோமர் 1:14-16) எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு இயேசு பிரசங்கித்தார். நம்முடைய வழக்கமான வீட்டுக்கு வீடு ஊழியம் பலன்தருகிறபோதிலும், நாம் செல்லும்போது பெரும்பாலானோர் வீடுகளில் இருப்பதில்லை. (அப்போஸ்தலர் 20:20) அநேகர் பள்ளியிலோ வேலை செய்யுமிடத்திலோ கடையிலோ அல்லது பயணத்திலோ இருக்கின்றனர். எனவே, பொது இடங்களிலும் மக்களை எங்கெல்லாம் காணமுடியுமோ அங்கெல்லாமும் பிரசங்கிப்பதும்கூட அவசியம்.
“சத்தியத்தில் வேரூன்றப்பட்டவர்களாகவும் உறுதிப்பட்டவர்களாகவும் ஆகுங்கள்” என்ற பேச்சு, முழுக்காட்டப்படும் திரளான புதிய சீஷர்களை நமக்கு நினைப்பூட்டியது—ஒவ்வொரு நாளுக்கும் சராசரியாக 1,000 பேர் முழுக்காட்டப்படுகின்றனர்! புதியவர்களாகிய இவர்கள் விசுவாசத்தில் நன்கு வேரூன்றப்பட்டவர்களாயும் உறுதிப்பட்டவர்களாயும் ஆவது இன்றியமையாதது. (கொலோசெயர் 2:6, 7) சொல்லர்த்தமான வேர்கள் நீரையும் ஊட்டச் சத்துக்களையும் உறிஞ்சிக்கொள்கின்றன, அதே சமயத்தில் தாவரத்திற்கு வேண்டிய ஸ்திரத்தன்மையையும் அல்லது ஆதாரத்தையும் அளிக்கின்றன என விளக்கினார் பேச்சாளர். அதைப்போலவே, நல்ல படிப்பு பழக்கங்களின் மூலமும் ஆரோக்கியமான கூட்டுறவின் மூலமும் புதிய சீஷர்கள் சத்தியத்தில் ஸ்திரமிக்கவர்களாய் ஆகமுடியும்.
இந்த அறிவுரை, முக்கியமாக முழுக்காட்டுதல் பெறுகிறவர்களுக்கு பொருத்தமாக இருந்தது. ஆம், இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி பெருந்திரளான புதிய சீஷர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளில் முழுக்காட்டப்பட்டனர். “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் முழுக்காட்டுதலுக்கு வழிநடத்துகிறது” என்ற பேச்சு, முழுக்க தண்ணீரில் முக்குவது தங்களுடைய சுயநாட்டமுடைய முந்திய வாழ்க்கைப் போக்குக்கு மரிப்பதற்கு ஒரு பொருத்தமான அடையாளமாய் இருப்பதை முழுக்காட்டுதல் பெறவிருந்தவர்களுக்கு நினைப்பூட்டியது. தண்ணீரிலிருந்து அவர்கள் மேலெழுப்பப்படுவது கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு உயிரளிக்கப்படுவதை குறிக்கிறது.
“விசுவாசத்திற்காகக் கடினமாய்ப் போராடுங்கள்” என்ற பேச்சு, பைபிளிலுள்ள யூதா புத்தகத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஒழுக்கயீனம், கலகத்தனம், விசுவாசதுரோகம் போன்ற தீங்குவிளைவிக்கும் செல்வாக்குகளை தடுத்துநிறுத்துவதன் மூலம் நம்முடைய விசுவாசத்தை பாதுகாக்கும்படி உற்சாகப்படுத்தப்பட்டோம். அடுத்ததாக, “உங்கள் வீட்டாரைப் பராமரியுங்கள்” என்ற பேச்சு, பெற்றோர்களுக்கு—முக்கியமாக தகப்பன்மார்களுக்கு—விசேஷ கவனத்தை செலுத்தியது. குடும்பத்தின் ஆவிக்குரிய, சரீர, மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளைக் கொடுப்பது வேதப்பூர்வமான ஒரு கடமை. (1 தீமோத்தேயு 5:8) இது நேரத்தையும் பேச்சுத்தொடர்பையும் நெருக்கத்தையும் தேவைப்படுத்துகிறது. கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை சத்தியத்தில் வளர்ப்பதற்கு முயற்சி செய்யும் கடினமான எல்லா உழைப்பிலும் யெகோவா தேவன் நிச்சயமாகவே பிரியப்படுகிறார்.
“யெகோவாவின் வீட்டுக்குப் போவோம் வாருங்கள்” என்ற அடுத்த தொடர்பேச்சு, கிறிஸ்தவ கூட்டங்களுக்கான போற்றுதலை அதிகரித்தது. அவை இந்த உலகின் கவலைகளிலிருந்து விடுதலை அளிக்கின்றன. நமக்கு கூட்டங்களில் பரஸ்பர உற்சாகத்திற்கான வாய்ப்பு கிடைக்கிறது, மேலும் நம்முடைய உடன் விசுவாசிகளுக்கு நம் அன்பை வெளிப்படுத்திக் காண்பிக்கலாம். (எபிரெயர் 10:24, 25) போதகர்களாக, நம்முடைய திறமைகளை மெருகேற்றுவதற்கும்கூட கூட்டங்கள் நமக்கு உதவிபுரிகின்றன; மேலும் கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலை ஆழப்படுத்துகின்றன. (நீதிமொழிகள் 27:17) சபையிலிருந்து நம்மை ஒருபோதும் தனியே பிரித்து வைத்துக்கொள்ளாமல் இருப்போமாக; இயேசுவின் இவ்வார்த்தைகளை நாம் நினைவில் வைத்திருப்போமாக: “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.”—மத்தேயு 18:20.
“உங்கள் விசுவாசத்தின் தரம்—இப்பொழுது பரிசோதிக்கப்படுகிறது” என்பதே அந்நாளின் கடைசி பேச்சு. சோதிக்கப்படாத விசுவாசத்திற்கு நிரூபிக்கப்பட்ட மதிப்பு இல்லை, மேலும் அதன் தரம் அறியப்படாமலேயே இருக்கிறது. இன்னும் பணமாக்கப்படாத காசோலையைப் போல இருக்கிறது. அதில் காணப்படுகிற அந்தத் தொகைக்கு அது உண்மையிலேயே மதிப்புவாய்ந்ததா? அதைப் போலவே, நம்முடைய விசுவாசமும் சாரமுள்ளது, உண்மையான தரமுள்ளது என்பதை நிரூபிப்பதற்கு சோதிக்கப்பட வேண்டும். (1 பேதுரு 1:6, 7) அந்தப் பேச்சாளர் சொன்னார்: “சில சமயங்களில், செய்தி மூலங்களும் அதிகாரிகளும், மத குருமாராலும் விசுவாச துரோகிகளாலும் ஏமாற்றப்பட்டு, நம்மீது தவறான முத்திரை குத்திவிடுகின்றனர். நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் தவறாக எடுத்துரைக்கின்றனர். . . . சாத்தானால் குருடாக்கப்பட்டிருக்கிறவர்கள் நம்மை பயமுறுத்தி நம்பிக்கை இழக்கும்படியும், நற்செய்தியைக் குறித்து வெட்க உணர்ச்சியடையும்படியும் செய்விக்க நாம் அனுமதிப்போமா? சத்தியத்தைப் பற்றி சொல்லப்படும் பொய்கள், நாம் கூட்டங்களுக்குத் தவறாமல் வருவதையும் நம்முடைய பிரசங்க நடவடிக்கையையும் பாதிக்க நாம் அனுமதிப்போமா? அல்லது நாம் உறுதியாக நிலைநின்று, யெகோவாவையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றிய சத்தியத்தைத் தொடர்ந்து அறிவித்து வருவதற்கு தைரியத்துடனும் இன்னும் அதிக திடதீர்மானத்துடனும் இருப்போமா?”
விசுவாசத்தினாலே பிழைத்திருங்கள்
மூன்றாம் நாள் மாநாட்டின் பேச்சுப்பொருள் பவுலுடைய வார்த்தைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது: “நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” (கலாத்தியர் 3:11) “நம்முடைய நாளுக்கான யோவேலின் தீர்க்கதரிசன வார்த்தைகள்” என்ற தொடர்பேச்சு, காலை சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக திகழ்ந்தது. யோவேல் புத்தகம் நம்முடைய காலத்தை சுட்டிக்காட்டி, அவசர உணர்வுடன் இவ்வாறு சொல்கிறது: “அந்த நாளுக்கு ஐயோ! ஏனென்றால் யெகோவாவின் நாள் சமீபமாய் இருக்கிறது, அது சர்வ வல்லவரிடமிருந்து வரும் மகா அழிவு போன்றது!” (யோவேல் 1:15, NW) வேகம் தணியாத வெட்டுக்கிளிகளைப் போலவே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த முடிவின் காலத்தில் ராஜ்ய அறிவிப்பை எதுவும் குறுக்கிட அனுமதிப்பதில்லை.
யோவேல் புத்தகம் நம்பிக்கையையும் தருகிறது, அது சொல்வதாவது: “யெகோவாவுடைய பெயரில் கூப்பிடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.” (யோவேல் 2:32, NW) இது, வெறுமனே யெகோவாவின் பெயரை பயன்படுத்துவதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. இருதயப்பூர்வமான மனந்திரும்புதல் தேவைப்படுகிறது, தவறுசெய்வதை வெறுத்துத் தள்ளுவதையும் இது உட்படுத்துகிறது. (யோவேல் 2:12, 13) தாமதிப்பதற்கு நேரமில்லை, ஏனெனில் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் நாளில் மோவாப், அம்மோன், சேயீர் மலைத்தேசம் ஆகியவற்றிற்கு யெகோவா செய்ததுபோல, விரைவில் தேசங்களின்மீதும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்.—2 நாளாகமம் 20:1-30; யோவேல் 3:2, 12.
“யெகோவாவுக்காகக் காத்திருப்பதன்மூலம் விசுவாசத்தைக் காட்டுங்கள்” என்ற பேச்சினால் அனைவரும் ஊக்கமூட்டப்பட்டனர். இப்பொழுது, முடிவு காலத்திற்குள் அதிகம் கடந்து வந்துவிட்ட நாம், யெகோவாவின் வாக்குறுதிகளில் அநேகம் நிறைவேறியதை பின்னோக்கிப் பார்க்கலாம்; இன்னும் நிறைவேறப்போகிற காரியங்களிலும் நாம் ஆழ்ந்த அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறோம். கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிற அனைத்தும் சம்பவிக்கும் என்பதை நினைவுகூர்ந்தவர்களாய், யெகோவாவின் மக்கள் தொடர்ந்து பொறுமையுடன் இருக்க வேண்டும்.—தீத்து 2:13; 2 பேதுரு 3:9, 10.
“கண்களை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள்” என்ற நாடகத்துடன் காலை நிகழ்ச்சி நிறைவுபெற்றது. தத்ரூபமான இந்த நாடகம், பொருளாதார நாட்டங்கள் சம்பந்தமாக நம்முடைய மனப்பான்மையை ஆராய்ந்து பார்ப்பதற்கு நம்மை உற்சாகப்படுத்தியது. நாம் எங்கு வாழ்ந்தாலும்சரி, நம்முடைய வாழ்க்கை கவலையில்லாமல் இருக்க நாம் விரும்பினால், நம்முடைய கண்களை தெளிவாக, கடவுளுடைய ராஜ்யத்தின்மீது நன்கு ஒருமுகப்படுத்தப்பட்டதாய் வைத்திருக்கும்படி சொல்லப்பட்ட இயேசுவின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்.—மத்தேயு 6:22.
பொதுப் பேச்சு, “விசுவாசமும் உங்கள் எதிர்காலமும்” என்ற ஆவலைத் தூண்டும் தலைப்பை கொண்டிருந்தது. அது, மனித தலைவர்கள் இவ்வுலகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாமைக்கு அத்தாட்சி அளித்தது. (எரேமியா 10:23) மனித சரித்திரம் தொடர்ந்து—பெருமளவிலும் அதிக சேதம் விளைவிக்கும் அளவிலும்—அதையே திரும்பத் திரும்ப செய்கிறது. எதிர்காலத்தைக் குறித்து யெகோவாவின் சாட்சிகள் எப்படி உணருகிறார்கள்? கடவுளுடைய ராஜ்யத்தில் உண்மையுள்ள மனிதவர்க்கத்தினருக்கு ஒளிமயமான எதிர்காலமுண்டு என நாம் நம்புகிறோம். (மத்தேயு 5:5) கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் வைக்கும் அனைவரின் நன்மைக்கேதுவாக கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார், அவருடைய வார்த்தை இவ்வாறு உந்துவிக்கிறது: “[யெகோவாவை] கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.”—ஏசாயா 55:6.
நம்முடைய நாளை கருத்தில்கொண்டு இயேசு ஓர் இன்றியமையாத கேள்வியை எழுப்பினார். அவர் கேட்டார்: “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ”? (லூக்கா 18:8) கடைசி பேச்சு மாநாட்டு நிகழ்ச்சிநிரலை நோட்டமிட்டது; விசுவாசமற்ற, மதசார்பற்ற உலகில் நாம் வாழ்கிறபோதிலும்கூட, கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் இருக்கிறது என்பதற்கு தெளிவான அத்தாட்சியை எவ்வாறு அது அளித்தது என்பதை காட்டியது.
என்றபோதிலும், நாம் தனிப்பட்டவர்களாக நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘கடவுளிலும் அவருடைய வார்த்தையிலும் உறுதியான விசுவாசம் வைத்திருக்கும் நபர்களில் நான் ஒருவனா?’ “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” என்ற இந்த மாவட்ட மாநாடு, அந்தக் கேள்விக்கு ஆம் என்று பதிலளிப்பதற்கு நமக்கு உதவிசெய்ய வேண்டும். யெகோவாவிலும் அவருடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளிலும் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காக நாம் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்!
[பக்கம் 24-ன் படங்கள்]
ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கு இடவசதியளிக்க அநேக வாலண்டியர்கள் மகிழ்ச்சிப்பொங்க வேலைசெய்தார்கள்
[பக்கம் 25-ன் படங்கள்]
ஆளும் குழுவைச் சேர்ந்த எல். ஏ. ஸ்விங்கிள் புதிய சிற்றேட்டை வெளியிடுதல்
[பக்கம் 25-ன் படங்கள்]
உலகமுழுவதிலும் இதுபோன்ற பெரிய அரங்கங்கள் பயன்படுத்தப்பட்டன
[பக்கம் 26-ன் படம்]
யெகோவாவுக்கு தங்களுடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக அநேகர் முழுக்காட்டப்பட்டார்கள்
[பக்கம் 27-ன் படங்கள்]
மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் ராஜ்ய பாடல்களை மகிழ்ச்சி பொங்க பாடினர். உள்படம்: “கண்களை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள்” என்ற நாடகம்