யெகோவா தரும் ஆசீர்வாதங்களை உண்மையில் மதிக்கிறீர்களா?
கெனிச்சி என்ற நடுவயது ஜென்டில்மேனுக்கு, சும்மா இலேசா ஜலதோஷம். அதற்காக மருந்துவாங்க மருந்துக்கடைக்கு போனார். அவர் கடைக்காரர் கொடுத்த மருந்தை சாப்பிட்டதும், அலர்ஜியாகி, ஒரே நமைச்சலுடன்கூடிய தடிப்புகளும், நீர்கொப்புளங்களும் உடம்புபூரா தோன்றின. அந்த மருந்துக்கடைக்காரர் சரியா கவனிக்காமல் மருந்து தந்துவிட்டாரோ என்று கெனிச்சி சந்தேகப்பட ஆரம்பித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
அந்த மருந்துக்கடைக்காரரை பற்றி கெனிச்சி நினைத்த மாதிரியே சிலர் யெகோவா தேவனை பற்றி நினைத்திருக்கலாம். எல்லாம்வல்ல யெகோவா தேவன், தனிப்பட்ட விதத்தில் நம்மீது உண்மையில் அக்கறைக் காட்டுகிறாரா என்பதுதான் அவர்களுடைய சந்தேகம். கடவுள் நல்லவர் என்று அவர்கள் அறிந்திருந்தாலும் நம்மை அவர் தனித்தனியே பராமரிக்கிறார் என்பதில் அவர்களுக்கு பூரண நம்பிக்கை ஏற்படவில்லை. அதிலும் குறிப்பாக, அவர்கள் எண்ணிய காரியங்கள் கைகூடாமல் போனால் அல்லது பைபிள் நியமங்களை அவர்கள் பின்பற்றும்போது கூடவே பிரச்சினைகளும் வந்தால் இப்படிப்பட்ட சந்தேகம் தலைதூக்குகிறது. நிதானித்து அறியும் விவேகம் இல்லாமல், கெனிச்சிக்கு திடீரென்று வந்த நமைச்சலுடன்கூடிய தடிப்புகள் கொப்புளங்கள் மாதிரி, அவர்கள் ஏதோ கடவுள் தவறு செய்துவிட்டதால்தான் தங்களுக்குப் பிரச்சினைகள் வந்தன என்று நினைக்கிறார்கள்.—நீதிமொழிகள் 19:3.
அபூரண மனிதர்களோடு யெகோவாவை ஒப்பிடக்கூடாது. அறிவிலும் திறனிலும் மனிதர்கள் குறைவுள்ளவர்கள். கெனிச்சிக்கு மருந்து கொடுத்த அந்தக் கடைக்காரர் போல் மனிதர்கள் மற்றவரின் உண்மையான தேவைகளை முழுமையாக அறிந்துகொள்ள தவறுகிறார்கள். இதற்கு நேர்மாறாக, யெகோவாவின் கண்களிலிருந்து எதுவும் தப்புவதில்லை. யெகோவா நமக்கு உதவிசெய்கிற விஷயம் நமக்குத் தெரியாமல் இருந்தாலும், ஒருவேளை அதை மதிக்க நாம் தவறினாலும் அவர் அடிக்கடி உதவிசெய்கிறார். எட்டாத கனிக்கு ஏங்கி தவிப்பதும், கிடைத்திருக்கும் நிறைய ஆசீர்வாதங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் நம்மிடம் உள்ள இயற்கை குணம். எந்தப் பிரச்சினை வந்தாலும் உடனே யெகோவாவின்மீது பழியைத்தூக்கிப் போடுவதற்குப் பதிலாக, நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் யெகோவாவின் ஆசீர்வாதங்களை நிதானித்து அறிய முயற்சிசெய்ய வேண்டும்.
வெப்ஸ்டர் நைன்த் காலேஜியேட் டிக்ஷ்னரியின்படி “ஆசீர்வாதத்தை” இவ்வாறு வரையறுக்கலாம்: “சந்தோஷத்தை அல்லது சௌக்கியத்தை முன்னேற்றுவிக்கும் ஒன்று.” குறிப்பாக, யெகோவா தரும் ஆசீர்வாதங்களை பொருத்தமட்டில் இந்த விஷயம் எவ்வளவு உண்மை என நீங்கள் மதிக்கிறீர்களா?
வாரி வழங்குவதில் அவருக்கு நிகர் அவரே
ஒரு குடும்பத்தலைவி தன் கணவர் ஒரு குறையும் இல்லாமல் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார் என்று சொன்னால் அந்தக் கணவர் குடும்ப தேவைகளை நன்றாக கவனித்து, குடும்ப சந்தோஷத்திற்கும் சௌகரியத்திற்கும் வேண்டியமட்டும் உணவு, உடை, உறைவிடம் ஆகிய வசதிகளை செய்துகொடுக்கிறார் என்று அர்த்தம். வாரி வழங்குவதில் யெகோவா எவ்வாறு சிறந்துவிளங்குகிறார்? மனிதனின் வீடாகிய இந்தப் பூமி கிரகத்தை சற்று உன்னிப்பாகப் பார்க்கலாம். இது சூரியனிடமிருந்து 15,00,00,000 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது, அதாவது பூமியில் உயிர் வாழும் வகையில், மிதமான வெப்பம் நிலவுவதற்கு மிகச்சரியான தூரம். நமது பூமி உருண்டை 23.5 டிகிரிக்கு சாய்வாக இருக்கும்படி மிகத்துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனால் பல்வேறு பருவக்காலங்கள் தோன்றி, அமோக விளைச்சலை அள்ளி வழங்குகின்றன. விளைவு: ஐநூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பூமி உணவளிக்கிறது. ஆகா! உண்மையில் யெகோவா வாரி வழங்கும் வள்ளலே!
இதுமட்டுமல்ல, யெகோவா நம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே ஆழ்ந்த கவனம் செலுத்தி, நம் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை வைத்திருக்கிறார் என்று பைபிள் உறுதியளிக்கிறது. இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: பெயர்முதற்கொண்டு கோடிக்கணக்கான நட்சத்திரங்களை யெகோவா அறிந்திருக்கிறார். ஒரு சிட்டுக்குருவிக்கூட அவருக்குத் தெரியாமல் தரையில் விழாது. (ஏசாயா 40:26; மத்தேயு 10:29-31) அப்படியென்றால், அவரை நேசிக்கும் மக்களை, அவரது அருமையான மகன், இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத இரத்தத்தினால் மீட்டுக்கொள்ளப்பட்ட மக்களை அவர் இன்னும் அதிகம் நேசிப்பார் இல்லையா! (அப்போஸ்தலர் 20:28, NW) அந்த ஞானி ரொம்ப சரியாகத்தான் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”—நீதிமொழிகள் 10:22.
நம்மை செல்வந்தர் ஆக்கும் ஆசீர்வாதங்கள்
விலைமதிக்கமுடியாத ஏதோ ஒன்று நம்மிடம் இருக்கிறது, அதற்காக நாம் அதிக நன்றியோடு இருக்க வேண்டும். அது என்ன? அது என்ன என்பதை இவ்வாறு சொல்வதன் மூலம் பைபிள் அடையாளம் காட்டுகிறது: “அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.” (சங்கீதம் 119:72; நீதிமொழிகள் 8:10) நாம் தேர்ந்தெடுக்கும் பொருள்களில் தங்கம் ஒருவேளை விலை உயர்ந்ததாக இருக்கலாம், ஆனால் அதைவிட மிக மிக விரும்பக்கூடியது யெகோவாவின் வேதமாகும். அவரது வேதத்தைப் பற்றிய திருத்தமான அறிவோடுகூட உண்மை மனதோடு சத்தியத்தை தேடும் ஆட்களுக்கு யெகோவா அருளும் நுண்ணறிவு, விவேகம் ஆகியவை நாம் போற்றி பாதுகாக்கவேண்டிய அரிய பொக்கிஷங்கள். இவை நம்மைநாமே பாதுகாத்துக்கொள்ளவும், கஷ்டமான சூழ்நிலைமைகளை சமாளிக்கவும், பிரச்சினைகளை வெற்றிகரமாக கையாளவும் தயார்ப்படுத்துகின்றன. இதனால் நாம் திருப்தியோடும் சந்தோஷத்தோடும் வாழ முடியும்.
சிறு பிள்ளைகளின் விஷயத்தில்கூட இது உண்மை. யெகோவாவின் வேதத்தைப் பின்பற்றி, எவ்வாறு ஒரு சிறுமி தன் பிரச்சினைகளைத் தீர்த்தாள் என்று பார்க்கலாம். ஆகிமி என்ற அந்தச் சிறுமி, டோக்கியோவுக்கு அருகில் வசிக்கிறாள். அவளை நல்லமுறையில் வளர்க்க அவளுடைய அப்பாவும் அம்மாவும் பைபிள் நியமங்களைப் பின்பற்றினார்கள். தங்கள் மகள், யெகோவாவின்மீதும் அயலகத்தார்மீதும் அன்பை வளர்க்கவேண்டும் என்பதற்காக சொல்லிலும் செயலிலும் அவளுக்கு அவர்கள் உதவினார்கள். அவள் பள்ளிக்கூடம் போனால் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரலாம் என்பதை அவர்கள் முன்னதாகவே யோசித்து அதற்கு தகுந்தபடி அவர்களால் முடிந்தளவுக்கு மகளை தயார்செய்தார்கள். சிறுமி ஆக்கிமி ஆரம்பப் பள்ளியில் அடியெடுத்து வைத்ததும், அவள் வகுப்பு பிள்ளைகள் அவளை ‘ஒருமாதிரியா’ பார்க்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் அவள் சாப்பிடுவதற்கு முன் ஜெபம் செய்தாள், பைபிளுக்கு ஒத்துவராத சில விஷயங்களை கவனமாய் தவிர்த்துவந்தாள். விரைவில், சேட்டைசெய்யும் முரட்டு பசங்களின் கும்பல் ஒன்றின் கண் அவள்மீது விழுந்தது, பள்ளி முடிந்ததும் அவர்கள் அவளை வழிமடக்கி, முகத்தில் அறைவார்கள், கையைப் பிடித்து முறுக்குவார்கள், அவளை கேலிசெய்வார்கள்.
குட்டி ஆகிமி பதிலுக்குப் பதில் ஒன்றுமே செய்யவில்லை, அதேசமயம் அவளை தொந்தரவு செய்பவர்களைப் பார்த்து அவள் பயப்படவுமில்லை. அதற்கு மாறாக, அவள் கற்ற விஷயத்தை செயலில்காட்ட முயற்சி செய்தாள். அவளது நல்நடத்தையையும் தைரியத்தையும் பார்த்த சகமாணவ மாணவியர் பலருக்கு அவள்மீது மதிப்பு ஏற்பட்டது. அவர்களே விஷயத்தை ஆசிரியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்கள், அன்றுமுதல், ஆகிமிக்கு பள்ளியில் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை.
கஷ்டமான அந்தச் சூழ்நிலைமையை வெற்றிகரமாக கையாள ஆகிமிக்கு எது உதவியது? யெகோவாவிடமிருந்து வரும் திருத்தமான அறிவு, நுண்ணறிவு, விவேகம் ஆகியவற்றை அவளது பெற்றோர் அவளுடைய மனதில் ஆழமாகப் பதிய வைத்திருந்தார்கள். இயேசு எவ்விதம் பொறுமையோடு சகித்துக்கொண்டார் என்பதையும் அவள் நன்றாக அறிந்திருந்ததால், அதுவே அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற அவளுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது. சிலர் அறியாமையால் தவறு செய்வார்கள் என்ற விவேகத்தையும், சேட்டை செய்த அந்த முரட்டு பசங்களின் கெட்ட செயல்களை வெறுக்க வேண்டுமே ஒழிய, அவர்களை அல்ல என்ற தூண்டுதலையும் பெற்றுக்கொள்ள பைபிள் அவளுக்கு உதவியது.—லூக்கா 23:34; ரோமர் 12:9, 17-21.
உண்மைதான், எந்தப் பெற்றோருக்கும் தங்கள் பிள்ளை கேலிக்கூத்தாவதையும், இம்சிக்கப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாது. இருந்தாலும், ஆகிமியின் பெற்றோர் நடந்த விவரங்களை எல்லாம் கேள்விப்பட்டப்போது எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார்கள் என்பதை கற்பனைசெய்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பிள்ளைகள் உண்மையில் யெகோவா தரும் ஆசீர்வாதமே.—சங்கீதம் 127:4, 1 பேதுரு 1:6, 7.
யெகோவாவுக்காக பொறுமையோடு காத்திருத்தல்
சிலநேரங்களில், யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறும்முன், அவராகவே அவற்றை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் நிலைமையை யெகோவா நன்கு அறிந்திருப்பதால், உங்களது ஒவ்வொரு தேவையையும் எப்போது பூர்த்திசெய்தால் உங்களுக்கு அதிக நன்மை கிடைக்குமோ அப்போதுதான் அவர் பூர்த்திசெய்கிறார். (சங்கீதம் 145: 16; பிரசங்கி 3:1; யாக்கோபு 1:17) ஒருவேளை உங்களுக்கு பழம் என்றால் ரொம்ப பிடிக்கும், ஆனால் உங்களை விருந்துக்கு அழைத்தவர், அது காயாக இருக்கும்போதே சாப்பிடக்கொடுத்தால் நீங்கள் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? அது ஆப்பிளோ, ஆரஞ்சோ அல்லது வேறு எந்தப் பழமாக இருந்தாலும்சரி, அது நன்றாக பழுத்து, சாறோடு, தித்திப்பா இருந்தால்தான் உங்களுக்குப் பிடிக்கும். அதுமாதிரிதான், யெகோவாவும், உங்களுக்கு எது தேவையோ அதைச் சரியான நேரத்தில் கொடுப்பார்—ரொம்ப சீக்கிரமும் கொடுக்கமாட்டார், ரொம்ப லேட்டாவும் கொடுக்கமாட்டார்.
யோசேப்பின் அனுபவத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவர் தப்பு எதுவும் செய்யாமலேயே, எகிப்தில் ஜெயிலில் கிடந்தார். அவருடன் கைதியாக பார்வோனுடைய பானபாத்திரக்காரனும் இருந்தான். அவனுக்கு விரைவில் விடுதலை அடையும் நம்பிக்கை இருந்ததால், யோசேப்பின் விஷயத்தை பார்வோனிடம் சொல்வதாக வாக்குக்கொடுத்தான். ஆனால் அவன் விடுதலை அடைந்த பிறகு, யோசேப்பை அடியோடு மறந்துபோனான். யோசேப்பு ஒரேயடியாக கைவிடப்பட்டதைப்போல் இருந்தது. ஆனால், இரண்டு முழு வருடங்கள் உருண்டோடியப்பிறகே, ஒருவழியாக சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். கடைசியில் பார்த்தால், அவர் எகிப்தில் அரசனுக்கு அடுத்த பெரும் பதவியில் அமர்த்தப்பட்டார். யோசேப்பு பொறுமையிழந்து தவிப்பதற்கு பதிலாக யெகோவாவுக்காக காத்திருந்தார். இதன் காரணமாக, இஸ்ரவேலர்களின் உயிரையும் எகிப்தியரின் உயிரையும் காப்பாற்றும் விதத்தில் அவருக்குக் கிடைத்த ஆசீர்வாதம் அமைந்தது.—ஆதியாகமம் 39:1–41:57.
வடக்கு ஜப்பானிலுள்ள ஒரு சபையில் மாஷாஷி என்பவர் மூப்பராக இருந்தவர். அவர் சிறையில் எல்லாம் இருக்கவில்லை, ஆனாலும் யெகோவாவுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ஏன்? தகுதியுள்ள கிறிஸ்தவ ஊழியர்களுக்குப் பயிற்சி தர ஊழியப் பயிற்சி பள்ளி ஜப்பானில் துவங்கப்பட்டது. அன்றுமுதல் அதில் தான் எப்படியும் பங்குபெறவேண்டும் என்று அவர் துடியாய்த்துடித்தார். அதை தன் லட்சியமாகவே வைத்துக்கொண்டார். அந்தப் பாக்கியம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று உருக்கமாய் ஜெபித்து வந்தார். ஆனால் பள்ளியில் பங்குபெற அவருடைய பயனியர் பாட்னருக்கே அழைப்பு வந்தது. அதிக ஆவலோடு காத்திருந்தும் மாஷாஷிக்கு அழைப்பு வரவில்லை. அவர் அப்படியே இடிந்துபோனார்.
இருந்தாலும், அவர் தன் ஏமாற்றத்தை மேற்கொள்ள ஒருசில வழிகளை கையாண்டார். அவர் பைபிளையும் உவாட்ச் டவர் சங்கத்தின் பிரசுரங்களையும் படித்தார். எவ்வாறு மனத்தாழ்மையாக இருப்பது, எப்படி ஒருவரின் உணர்வுகளை கட்டுப்படுத்துவது போன்ற தலைப்புகளை அவற்றில் தேடிப்பிடித்து படித்தார். தன் சிந்தனையில் ஒருசில மாற்றங்களை செய்துகொண்டார். அதன்விளைவாக அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த நியமிப்பில் இன்னும் அதிக மனதிருப்தியை அவரால் அடைய முடிந்தது. அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காதபோது, இந்தப் பள்ளிக்கு வரும்படி அழைக்கப்பட்டார்.
பொறுமை, மனத்தாழ்மை போன்ற குணங்களை அவர் வளர்த்துக்கொண்டதால், அந்தப் பள்ளியிலிருந்து இன்னும் நிறைய நன்மைகளை அவரால் அடைய முடிந்தது. பிறகு, பயணக் கண்காணியாக சகோதரர்களுக்கு சேவைசெய்யும் பாக்கியம் மாஷாஷிக்கு கிடைத்தது. ஆம், மாஷாஷியின் தேவையை யெகோவா அறிந்திருந்தார். அதனால்தான் அதிக நன்மை தரும் சமயமா பார்த்து அதைக் கொடுத்தார்.
அவரது ஆசீர்வாதங்களை நாடுங்கள்
எனவே, யெகோவா அந்த மருந்துக்கடைக்காரரைப் போல் இல்லை. யெகோவா நம்மீது காட்டும் அக்கறையை, கரிசனையை நாம் நிதானித்தறிய தவறினாலும், அவரது தயவான செயல்கள் பல்வேறு வழிகளில் நம்மை வந்து அடைகின்றன. அதுவும் நமக்கு பெரும் நன்மை ஏற்படும் விதத்தில் சரியான நேரத்தில், சரியான மூலத்திலிருந்து கிடைக்கும்படி அவர் பார்த்துக்கொள்கிறார். எனவே அவருடைய ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து நாடுங்கள். அவருக்கு நன்றி செலுத்த ஏற்கெனவே ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தப் பூமியில் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை தேவைகளைத் தந்து உங்களை ஆசீர்வதித்திருக்கிறார். யெகோவாவை பற்றிய அறிவும், அவருடைய பரிபூரணமான வழிகளைப் பற்றிய அறிவும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்களுக்கு நுண்ணறிவும் தரப்பட்டுள்ளது. விவேகத்தையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இவை அனைத்தும் உங்கள் நல்வாழ்வுக்கும் சந்தோஷத்திற்கும் வழிவகுக்கும்.
யெகோவாவின் ஆசீர்வாதங்களை இன்னும் முழுமையாக அனுபவித்து மகிழ, தொடர்ந்து ஒழுங்காக பைபிள் படித்து வாருங்கள். யெகோவாவின் ஏவப்பட்ட வார்த்தையில் காணப்படும் பொன்போன்ற போதனைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்தவும் அவரது உதவியை நாடி வேண்டுதல் செய்யுங்கள். அவை உங்களை உண்மையில் செல்வந்தர் ஆக்கும்; எனவே உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது. ஆம், அந்த ஆசீர்வாதங்கள் இப்போதே உங்களுக்கு சந்தோஷத்தையும், மனதிருப்தியையும் வழங்கி, வரவிருக்கும் புதிய உலகில் எந்தவித குறையும் இல்லாத வாழ்க்கை கிடைக்கும்படி வழிசெய்யும்.—யோவான் 10:10; 1 தீமோத்தேயு 4:8, 9.
[பக்கம் 23-ன் படம்]
யெகோவாவின் ஆசீர்வாதம் பொன்னைவிட விலை உயர்ந்தது