பொன்காதணியால் அலங்கரிக்கப்படுதல்
பூர்வ காலங்கள் முதற்கொண்டே, பொன் ஆபரணங்கள் அவற்றின் மதிப்புக்காகவும் அழகுக்காகவும் மிக உயர்வாக மதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. யோசேப்பு எகிப்தின் முக்கிய மந்திரியானபோது, அவர் பார்வோனிடமிருந்து ஒரு பொன் சரப்பணியைப் பெற்றார். (ஆதியாகமம் 41:42) இன்றைய மதிப்புப்படி சுமார் 1,400 (ஐ.மா.) டாலர் பெறுமானமுள்ள பொன் மூக்குத்தியும், இரண்டு கடகங்களும் ரெபெக்காளுக்கு கொடுக்கப்பட்டன. (ஆதியாகமம் 24:22, தி.மொ.) விலைமதிப்புள்ள இந்தப் பரிசுப்பொருட்கள் நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்பட்டு சந்தோஷமாக அணிந்துகொள்ளப்பட்டன என்பதில் சந்தேகமில்லை.
யோசேப்பும் ரெபெக்காளும் அணிந்திருந்ததைக் காட்டிலும் மிக அதிக மதிப்புமிக்க அடையாள அர்த்தமுள்ள ஆபரணங்களைப் பற்றி பைபிள் பேசுகிறது. நீதிமொழிகள் 25:12 இவ்வாறு சொல்கிறது: “கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் [“புடமிட்ட பொன் அணிகலனுக்கும்,” NW] சரி.” ஆலோசகர் ஒருவர் தன்னுடைய சொந்த அபிப்பிராயத்தின்படி ஆலோசனை கொடுப்பதற்கு பதிலாக, கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் ஆலோசனை கொடுக்கும்போது அவர் உண்மையிலேயே மதிப்புமிக்க ஒரு பரிசை கொடுக்கிறார். ஏன்? ஏனென்றால் அடிப்படையில் இந்த ஆலோசனை யெகோவாவிடமிருந்தே வருகிறது. பைபிள் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.” (நீதிமொழிகள் 3:11, 12) செவிகொடுத்துக் கேட்பவர் புத்திமதியை மனத்தாழ்மையோடு ஏற்று அதைப் பொருத்தி பின்பற்றுகையில் பொன் காதணியால் தன்னை அலங்கரித்துக் கொள்வது போல அது இருக்கிறது. பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிள் நீதிமொழி சொல்வது போலவே அது இருக்கிறது: “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.”—நீதிமொழிகள் 3:13, 14.