அவர்கள் ‘சத்தியத்தை வாங்கினார்கள்’!
“சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே.” (நீதிமொழிகள் 23:23) இப்படியாக சாலொமோன் ஞானி அறிவுரைக் கூறினார். இது சத்தியத்தைப் பற்றி பொதுவாக சொல்லப்படக்கூடுமென்றாலும், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் சத்தியத்தின் விஷயத்தில் இது விசேஷமாய் உண்மையாக உள்ளது. இந்தச் சத்தியம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்! (யோவான் 17:3, 17) ஆனால் எந்தத் தியாகமும் செய்யாமல் இந்தச் சத்தியத்தைப் பெறமுடியாது என்பதைக் கவனியுங்கள். அதை ஒருவர் ‘வாங்க,’ அதாவது, அதைப் பெற்றுக்கொள்வதற்காக எதையாவது தியாகம் செய்ய அல்லது விட்டுக்கொடுத்துவிட மனமுள்ளவராக இருக்க வேண்டும். (மத்தேயு 13:45, 46-ஐ ஒப்பிடுக.) பொதுவாக ஜனங்கள் அவ்விதமாகச் செய்வதற்கு மனமில்லாதவர்களாக இருக்கின்றனர். ஆனால், அநேக தேசங்களில் தைரியமாக பைபிள் சத்தியத்தை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது; அவர்கள் அநேக சமயங்களில் பெரும் தியாகங்களைச் செய்து அதை வாங்குகின்றனர்.
உதாரணத்துக்கு மேற்கு ஆப்பிரிக்க நாடாகிய கானாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஜூன் 1989-க்குள், பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அதை சுறுசுறுப்பாக மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டவர்கள் அந்தத் தேசத்தில் 34,000 பேருக்கும் அதிகமானோர் இருந்தனர். அதற்குப்பின்பு பொது பிரசங்க வேலை அங்கு சட்டப்படி தடைசெய்யப்பட்டது. ஆனால், சட்டப்படி தடை இருந்தபோதிலும் நேர்மையான இருதயமுள்ளோர் தொடர்ந்து ‘சத்தியத்தை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.’ 1991 அக்டோபர் 31-ல் தடைகள் நீக்கப்பட்டன, 1995-ன் மத்திபத்திற்குள், அந்தத் தடைகள் நீக்கப்பட்டு வெறும் மூன்றரை ஆண்டுகளுக்குப்பின், கானாவில் சுறுசுறுப்பாக இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை 46,104 ஆக அதிகரித்துவிட்டது! மேலும் இந்த வருட எண்ணிக்கை 52,800-க்கும் அதிகமாக வளர்ந்திருக்கிறது.
கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தினிடமாக மக்களை கவர்ந்திழுத்திருப்பது எது? ‘சத்தியத்தை வாங்குவதற்காக’ சிலர் என்ன தியாகங்களைச் செய்ய வேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள்? கானாவைச் சேர்ந்த மூன்று கிறிஸ்தவர்களின் அனுபவங்களிலிருந்து அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
பைபிள் போதனைகளால் கவரப்பட்டார்கள்
முதலாவதாக, வயதில் 20-களின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணை எடுத்துக்கொள்வோம். அவளுடைய அப்பா ஒரு பாதிரியாக இருந்தார். இருந்தபோதிலும், அவள் தன்னுடைய அப்பாவின் மதத்திலிருந்து பிரிந்து செல்ல தெரிவுசெய்தாள். காரணம்? சத்தியத்தின்பால் அவளுக்கிருந்த பிரியம்தான்.
ஒரு சமயம் அவள் இவ்வாறு விளக்கினாள்: “வீட்டுக்கு வீடு செய்யும் சந்திப்புகளில் சாட்சிகள் எங்களுடைய வீட்டுக்கு வருவார்கள். அவர்களோடு நடத்திய சில கலந்தாலோசிப்புகளுக்குப் பிறகு, அவர்கள் போதித்தவற்றிற்கு சரியான பைபிள் ஆதாரம் இருந்தனவென்று நான் உணர்ந்துகொண்டேன். திரித்துவம், நரக அக்கினி, ஆத்துமா அழியாமை, விசேஷமாக விசுவாச சுகப்படுத்துதல் போன்ற விஷயங்களின்பேரில் நான் கேள்விகளைக் கேட்டேன். இந்தக் கோட்பாடுகள் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை நான் உறுதியாக நம்பினேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்பதை புரிந்துகொள்ள சாட்சிகள் எனக்கு உதவிசெய்தனர்.”—இந்த விஷயங்களின்பேரில் பைபிளின் கருத்தைக் காண மாற்கு 13:32; ரோமர் 6:23; அப்போஸ்தலர் 10:40; 1 கொரிந்தியர் 13:8-10 ஆகியவற்றைத் தயவுசெய்து பார்க்கவும்.
அந்த இளம் பெண் தொடர்ந்து சொன்னாள்: “இருந்தபோதிலும், என்னுடைய குடும்பத்தாரும் முக்கியமாக என்னுடைய அப்பாவும் அதிகமாக என்னை எதிர்த்தார்கள். நான் தவறாக வழிநடத்தப்படுவதாக அவர் நினைத்தார். என்றாலும் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து நான் கற்பது சத்தியமே என்பதை அறிந்திருந்தேன். பைபிளிலுள்ள இந்தக் காரியங்களை என் அப்பாவுக்குத் தெரிவிக்க முயன்றேன், ஆனால் அவர் செவிகொடுக்கவில்லை. உண்மையில் எதிர்ப்பு அதிகரித்தது.
“ஆனால் நான் தைரியமாக இருந்தேன். உண்மையான அறிவு மாத்திரமே பரதீஸில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தமுடியும் என்பதை அறிந்திருந்தேன், அதைப் பற்றிக்கொண்டிருக்க தீர்மானமாயிருந்தேன். உள்ளூர் சாட்சிகள் நான் எதிர்பட்டுக்கொண்டிருந்த பிரச்சினைகளைப்பற்றி கேள்விப்பட்டபோது, எனக்கு ஊக்கமளித்து எனக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை அளித்து அன்புடன் எனக்கு உதவிசெய்ய முன்வந்தார்கள். இது யோவான் 13:35-ல் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள எனக்கு உதவிசெய்தது: ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.’ யெகோவாவின் சாட்சிகளே உண்மை மதத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்ற என்னுடைய நம்பிக்கை இன்னும் உறுதியானது. பின்னர், நான் செய்த மாற்றத்தால் என்னுடைய வாழ்க்கை முன்பிருந்ததைவிட சீர்பட்டிருப்பதைக் கவனித்த என்னுடைய பெற்றோர், தாங்கள் பார்த்த காரியங்களால் கவரப்பட்டார்கள், என்னிடமாக அவர்களுடைய மனநிலை மாறியது; அதன் விளைவால் என்னுடைய அப்பா சாட்சிகளிடம் என் அண்ணனுக்கு பைபிள் படிப்பு எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்!”
சத்தியத்தை நமக்குநாமே உறுதிசெய்துகொள்ளுதல்
யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கும் பெற்றோரால் வளர்க்கப்பட்ட சில இளைஞருக்கும்கூட ‘சத்தியத்தை வாங்குவது’ ஒரு சவாலாகவே உள்ளது. சில இளைஞருக்கு பைபிளின் சத்தியத்தை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளும் மனோபாவம் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியங்களை அவர்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள தவறுவார்களேயானால் அவர்களுடைய விசுவாசம் பலவீனமாகவும் மேலோட்டமானதாகவும் இருக்கும். (மத்தேயு 13:20, 21-ஐ ஒப்பிடுக.) வயதில் தன்னுடைய 30-களில் இருக்கும் கானாவைச் சேர்ந்த நத்தானியேல் என்ற பெயருள்ள ஒருவர் சிறுவனாக இருக்கையிலேயே எவ்விதமாக தான் ‘சத்தியத்தை வாங்கினார்’ என்பதைச் சொல்கிறார்.
“நான் ஒரு சிசுவாக இருந்த சமயம் முதற்கொண்டே என்னுடைய பெற்றோர் எனக்கு பைபிளைப் போதித்துவந்தார்கள்” என்பதாக அவர் ஞாபகப்படுத்திச் சொல்கிறார். “நான் வளர்ந்துவருகையில், பிரசங்க வேலையில் அவர்களோடே சென்றேன், ஆனால் ஒரு சாட்சியாக வேண்டும் என்பதாக நான் உண்மையில் தீர்மானம் இன்னும் செய்யாமலே இருந்தேன். காலம் சென்றபோது, காரியங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.
“முதலாவதாக, வேறு எந்த மதத்தின் பரிசுத்தப் புத்தகமுமல்ல, பைபிளே கடவுளுடைய வார்த்தை என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியிருந்தது. தனிப்பட்ட படிப்பின் மூலமாக, திருத்தமாக நிறைவேற்றமடைந்திருக்கும், தெளிவான மிகப் பல தீர்க்கதரிசனங்களைக் கொண்ட ஒரே பரிசுத்த புத்தகம் இதுவே என்பதை கற்றறிந்தேன். அறிவியல் சார்ந்த பல உண்மைகள் பைபிளில் இருப்பதையும்கூட கற்றுக்கொண்டேன்—உதாரணமாக பூமி ‘அந்தரத்திலே தொங்குகிறது.’ (யோபு 26:7) அறிவியல் அறிஞர்கள் நம்முடைய சூரிய மண்டலத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வார்த்தைகள் எழுதப்பட்டன. கடவுளால் மாத்திரமே இப்படிப்பட்ட காரியங்களை எழுதும்படியாக மனிதர்களை ஏவமுடியும்!a
“அடுத்ததாக, எந்த மத அமைப்பு பைபிள் கற்பிக்கும் சத்தியங்களை போதிக்கவும் கடைப்பிடிக்கவும் செய்கிறது என்பதை கண்டுபிடிக்க விரும்பினேன். பெரும்பாலான மதங்கள் நரக அக்கினி, திரித்துவம், மரணத்துக்குப் பின்னும் வாழும் சாவாமையுள்ள ஆத்துமா பற்றி போதிக்கின்றன. ஆனால் இந்தக் கோட்பாடுகள் எனக்கு அர்த்தமற்றவையாக தோன்றின. நான் இவ்வாறு யோசித்தேன்: தன்னுடைய பிள்ளையைத் தண்டிப்பதற்காக அவனுடைய கையை கொதிநீரில் வைத்து அமுக்கிப் பிடித்திருப்பவர் ஒரு கொடிய தகப்பனாக இருக்கவேண்டுமல்லவா? அப்படியென்றால் அன்பான ஒரு கடவுள் எவ்விதமாக தம்முடைய பிள்ளைகளை எரிகிற அக்கினியில் போட்டு அவர்கள் துன்பப்பட அனுமதிப்பார்? ஆனால் யெகோவாவின் சாட்சிகளோ ரோமர் 6:23 போன்ற பைபிள் வசனங்களுக்கு இசைவாக போதிக்கிறார்கள், அது இவ்வாறு சொல்கிறது: “பாவத்தின் சம்பளம் மரணம்”—எரிநரகம் அல்ல. இது எனக்கு நியாயமானதாகப்பட்டது.
“தங்கள் உறுப்பினர்கள் எல்லாரும் பைபிள் தராதரத்தின்படி வாழவேண்டும் என்று யெகோவாவின் சாட்சிகள் வலியுறுத்துவதையும் மனம்திரும்பாமல் பழக்கமாக பாவத்தை செய்பவர்கள் அனைவரையும் சபைநீக்கம் செய்வதையும்கூட கவனித்தேன். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, யெகோவாவின் சாட்சிகளிடமே சத்தியம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்து, அவர்களில் ஒருவராக வேண்டும் என்று சொந்தமாக தீர்மானம் செய்தேன். ஒரு சாட்சியாக முழுக்காட்டுதலுக்கு தகுதிப்பெற நான் கடினமாக உழைத்தேன்.”—1 கொரிந்தியர் 5:11-13.
கிறிஸ்தவ பெற்றோரால் வளர்க்கப்படும் இளைஞரும்கூட ‘சத்தியத்தை வாங்கவேண்டும்’ என்பதை நத்தானியேலின் அனுபவம் நன்றாக விளக்குகிறது. அவர்கள் ஏனோதானோவென்று சபை கூட்டங்களுக்கு வந்துபோய்க்கொண்டிருக்கக் கூடாது. பூர்வ பெரோயர்களைப் போலவே, ‘காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்க்க’ வேண்டும். (அப்போஸ்தலர் 17:11) இதற்கு நேரமும் முயற்சியும் தேவை, ஆனால் இதன்மூலம் விசுவாசத்தையும் உறுதியான நம்பிக்கையையும் பெற்றுக்கொள்ள முடியும்.—எபேசியர் 3:17-19-ஐ ஒப்பிடுக.
பொய் மதத்தால் ஏமாற்றம்
காட்வின் என்ற பெயருடைய கானாவைச் சேர்ந்த ஒரு மனிதர் பிரிஸ்பிட்டேரியன் சர்ச்சையும் ஒரு சர்வதேச இரகசிய ஸ்தாபனத்தையும்விட்டு வெளியேறிய போது ஏறக்குறைய அவர் 70 வயதுள்ளவராக இருந்தார். “ஆட்சேபத்துக்குரியதாக நான் கண்ட பல காரியங்கள் சர்ச்சில் நடந்துகொண்டிருந்தன” என்பதாக காட்வின் சொல்லுகிறார். “உதாரணமாக, அங்கே அதிகமாக உட்பூசல்கள் இருந்தன, இன்னும் இருக்கின்றன. அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட சில சமயங்களில் போலீஸார் தலையிடவேண்டியதாக இருந்திருக்கிறது! கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கு இது சரியல்லவென நான் நினைக்கிறேன். அதன் பின்பு பிரிஸ்பிட்டேரியனாக இருந்த மற்றொருவருக்கும் எனக்குமிடையே ஒரு பிரச்சினை ஏற்பட்டது. பொது நீதிமன்றம் வழக்கை விசாரித்து அவரை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும், சர்ச்சின் பாதிரியார் அநியாயமாக அவர் பக்கம் சேர்ந்துகொண்டு முழு சபையாருக்கும் முன்னால் என்னைக் கண்டிக்க முயன்றார்! இந்த விஷயத்தில் என்னுடைய கருத்தை ஒளிவுமறைவில்லாமல் சொல்லிவிட்டு சர்ச்சிலிருந்து வெளியேறினேன்—அதன் பின் அந்தப் பக்கமே தலைகாட்டவில்லை.
“கொஞ்சக் காலம் சென்றது, யெகோவாவின் சாட்சிகள் என்னுடைய வீட்டுக்கு வந்தார்கள். முதலில், நான் செவிகொடுத்துக் கேட்டதற்கு காரணம் கடவுளைப் பற்றி பேசும் ஜனங்களை விரட்டிவிடக்கூடாது என்பதற்காகவே. ஆனால் பல பத்தாண்டுகளாக நான் ஒரு பிரிஸ்பிட்டேரியனாக இருந்தபோதிலும் பைபிளில் எனக்கு தெரிந்திராத விஷயங்கள் அதிகமிருப்பதை கவனிக்க ஆரம்பித்தேன். உதாரணமாக, பூமியில் பரதீஸில் என்றுமாக வாழும் நம்பிக்கையை பைபிள் அளிப்பது எனக்கு தெரியாமல் இருந்தது.b மேலுமாக யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு நான் செல்ல ஆரம்பித்தபோது, அவர்களுடைய நடத்தையும், விசேஷமாக அவர்கள் மத்தியில் இருந்த வாலிபர்களின் உடையும் சிகையலங்காரமும் என்னை வெகுவாக கவர்ந்தன. பைபிள் நியமங்களின்படி வாழும் ஆட்களாக அவர்கள் இருந்தனர்!”
என்றாலும், ‘சத்தியத்தை வாங்குவதற்காக’ அவர் கடினமான முயற்சியெடுத்து மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. காட்வின் நினைவுபடுத்தி சொல்கிறார்: “நான் ஒரு இரகசிய ஸ்தாபனத்தில் உறுப்பினனாக இருந்தேன். உறுப்பினர்களுக்கு உதவிசெய்யும் உடன் பிறப்புகளின் சங்கம் என்பதாக அது அறியப்பட்டிருந்தாலும், மண்டையோடுகளையும் எலும்புகளையும் பயன்படுத்தி ஆவிகளை வரவழைக்கும் சடங்குகளில் நான் ஈடுபட்டேன். இந்த ஆவிகள் தங்களோடு தொடர்பு வைத்துக்கொள்பவர்கள் ஆவிக்குரிய விதமாக வளருவதற்கு உதவிசெய்வதாக நம்பப்பட்டது.
“ஆவியுலகத்தோடு தொடர்புகொள்வது ஒருவரை சாத்தானின் செல்வாக்கிற்குள்ளும் பொல்லாத ஆவி சேனைகளின் செல்வாக்கிற்குள்ளும் கொண்டுவருமென்பதால் யெகோவா தேவன் இதை வெறுக்கிறார் என்பதைக் காண என்னுடைய படிப்புகள் எனக்கு உதவிசெய்தன.c புரியாத புதிராக இருக்கும் நம்பிக்கைகளோடுகூட இரகசிய ஸ்தாபனத்தின் உறுப்பினராக நான் தொடர்ந்திருப்பேனா அல்லது அதோடுள்ள தொடர்பை முறித்துக்கொண்டு யெகோவாவைப் பிரியப்படுத்துவேனா? யெகோவாவைப் பிரியப்படுத்துவதையே நான் தெரிவுசெய்தேன். இரகசிய ஸ்தாபன கூட்டங்களுக்கு நான் பயன்படுத்திய விசேஷ உடைகள் உட்பட அதோடு சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களையும் அழித்துவிட்டேன். இயேசு கூறிய ‘சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’ என்ற வாக்கின் உண்மையை அப்போதுதான் நான் உணர்ந்தேன்! (யோவான் 8:32) இப்பொழுது நான் கற்றக் காரியங்களை மற்றவர்களோடு மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்ளுகிறேன். இதற்காக எந்த மனவருத்தமும் எனக்கு இல்லை.”
நேர்மையான இருதயமுள்ள அநேக ஆயிரக்கணக்கானவர்கள் ‘சத்தியத்தை வாங்க’ இதே போல பெரும் தியாகங்களைச் செய்திருக்கின்றனர். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்த மூன்று கிறிஸ்தவர்களைப் போல, தாங்கள் செய்த மாற்றங்களுக்காக அவர்களுக்கும் எந்த வருத்தமும் கிடையாது. பைபிள் சத்தியம் ‘மெய்யான ஜீவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காக நல்ல ஆதாரத்தை’ அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. (1 தீமோத்தேயு 6:19, NW) நீங்கள் ‘சத்தியத்தை வாங்கு’வீர்களானால் அந்த ‘மெய்யான ஜீவனும்’ அதோடு சேர்ந்துவரும் ஆசீர்வாதங்களும் என்றும் உங்களுடையதாகவும்கூட இருக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தைப் பார்க்கவும்.
b உதாரணத்துக்கு, சங்கீதம் 37:9-11, 29-ஐப் பார்க்கவும்.
c உபாகமம் 18:10-12-ஐயும் கலாத்தியர் 5:19-21-ஐயும் காண்க.
[பக்கம் 9-ன் படம்]
நத்தானியேல்
[பக்கம் 9-ன் படம்]
காட்வின்