பரிசுத்த சேவைக்கு அபரிமிதமான ஆசீர்வாதங்கள்
ஹாரி ப்ளுர் என்பவரால் சொல்லப்பட்டது
சுமார் நூறு வருடங்களுக்கு முன்பாக, என்னுடைய தாத்தா மெத்தடிஸ்ட் சர்ச்சின் தீவிரமான உறுப்பினராக இருந்தார். பாமரனான போதிலும் மதிப்புக்குரிய ஒரு பிரசங்கியாகவும் அவர் இருந்தார். இங்கிலாந்தின் மட்கல உற்பத்தி நகரமான ஸ்டோக்-ஆன்-டிரன்ட்டில் இருந்த அநேக சேப்பல்களை ஆதரிக்க அவர் தாராளமாக பண உதவியளித்து வந்தார். பின்னர் பணமுடக்கத்தால் அவர் கஷ்டப்பட்டார். தாத்தாவுக்கு உதவிசெய்ய என்னுடைய அப்பா அவருக்கு கிராமத்தில் ஒரு சிறிய கடை வைத்துக் கொடுத்தார். பீர் விற்பதற்கு கடைக்கு உரிமம் இருந்தது, மெத்தடிஸ்டுகள் இதை அறிந்தபோது, தாத்தாவை உடனடியாக விலக்கி வைத்துவிட்டார்கள்.
அப்பா ஆத்திரமடைந்து மதத்தோடு எந்த சம்பந்தமும் இனி ஒருபோதும் தான் வைத்துக்கொள்வதில்லை என்று சபதம்செய்துகொண்டார்; அதையே செயலிலும் காட்டிவிட்டார். போலீஸ்காரராக இருந்த அவர் பின்பு அருந்தகத்தின் உரிமையாளரானார். ஆகவே நான் அந்த இடத்திற்கே உரிய வாசனைகள் மற்றும் சிகரெட் புகைகளின் மத்தியில் வளர்க்கப்பட்டேன். மதத்திற்கு என்னுடைய வாழ்க்கையில் எந்த இடமும் இருக்கவில்லை, ஆனால் பெரும்பாலான சூதாட்டங்களைத் திறமையாக விளையாடுவதற்கு இடமிருந்தது! பைபிளைப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்திராவிட்டாலும் தாத்தாவின் ஆரம்ப கால செல்வாக்கின் காரணமாக பைபிள்மீது எனக்கு கணிசமான மதிப்பு இருந்தது.
பைபிள் சத்தியத்தை நான் கற்றறிந்தேன்
1923-ல், எனக்கு 24 வயதாக இருந்தபோது நான் கிழக்கே நாட்டிங்ஹாமுக்கு இடம் மாறிச்சென்றேன், அங்கே லெஸ்டருக்கு தென்மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் வெட்ஸ்டோன் என்ற கிராமத்தில் வாழ்ந்துவந்த மேரியுடன் காதலீடுபாடு கொண்டேன். ஆர்த்தர் ரெஸ்ட் என்ற அவளுடைய அப்பா உள்ளூர் சேப்பலில் ஆர்கன் வாசிப்பவராக ஒரு சமயம் இருந்தவர், இப்பொழுது ஊக்கமான ஒரு பைபிள் மாணாக்கராக இருந்தார், யெகோவாவின் சாட்சிகள் அந்தச் சமயத்தில் அவ்விதமாக அறியப்பட்டிருந்தனர். எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லாவிட்டாலும் ஆர்த்தர் எப்பொழுதும் தான் புதிதாக கண்டுபிடித்திருந்த மதத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். இருப்பினும் 1924, ஜூலை 13-ம் தேதி ஞாயிறு பிற்பகல் பிரசித்திபெற்ற பாப்டிஸ்டாக இருந்த பார்லிமென்ட் உறுப்பினர் ஒருவர் உள்ளூர் பாப்டிஸ்டு சேப்பலில் கொடுத்த பிரசங்கத்தைக் கேட்க அவரோடு சென்றிருந்தபோது என்னுடைய ஆர்வம் தூண்டப்பட்டது. “வேதாகமத்தின் வெளிச்சத்தில் பாஸ்டர் ரஸலின் போதனைகள் ஆய்வுசெய்யப்படுகின்றன” என்ற அவருடைய பேச்சின் தலைப்பு என் ஆர்வத்தைத் தூண்டியது. அப்பொழுது நான் எடுத்தக் குறிப்புகள் இன்னும் என்னிடம் இருக்கின்றன.
பைபிள் மாணாக்கர், தங்கள் நம்பிக்கைகளின்மீது செய்யப்பட்ட தாக்குதலுக்குப் பதிலளிக்க வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டபோது பாப்டிஸ்டுகள் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நான் இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு வேறு ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்தேன். அருகிலிருந்த ஒரு தானிய களஞ்சியம் பொருத்தமான இடமாக பட்டது. அதைச் சுத்தமாக பெருக்கி, ஒட்டடைகளை நீக்கி, தானியத்தைப் புடைக்கும் மிஷின்களை ஒருபுறமாக நகர்த்திவைத்துவிட்டு நாங்கள் அனைவரும் தயாராக இருந்தோம். நாங்கள் 70 நாற்காலிகளை சேகரித்து கைப்பிரதிகளை அச்சிட்டோம்.
ஃபிராங்க் ஃபிரிர் பேச்சுக்கொடுப்பதற்காக லெஸ்டரிலிருந்து வந்திறங்கியபோது, எல்லா நாற்காலிகளும் நிரம்பிவிட்டன, இன்னும் 70 பேர் நின்றுகொண்டிருந்தனர்! வேதவாக்கியங்களிலிருந்து எடுத்துப்பேசிய ஃபிராங்கின் தெளிவான நியாயவிவாதம் அங்கிருந்த அநேகரைக் கவர்ந்தது போலவே என்னையும் கவர்ந்தது. அந்தச் சமயம் முதற்கொண்டு, லெஸ்டர் அருகே பிளோபியில் இருந்த பைபிள் மாணாக்கரின் சிறிய சபை வேகமாக வளர்ந்தது. அது என்னுடைய வாழ்க்கையிலும் மேரியின் வாழ்க்கையிலும்கூட ஒரு திரும்புக்கட்டமாக இருந்தது. 1925-ல் நாங்கள் இருவரும் யெகோவாவுக்கு எங்களுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தோம், முழுக்காட்டப்பட்டோம், திருமணம் செய்துகொண்டோம்.
ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
அதற்கு அடுத்த வருடம், நான் பிளோபி சபையில் ஊழிய இயக்குநராக நியமிக்கப்பட்டேன். என்னுடைய மனைவியும் நானும் கோல்பொர்டீயர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி முழுநேர சுவிசேஷகர்களாக ஆக ஆசைப்பட்டோம், ஆனால் மேரியின் உடல்நிலை இப்படிப்பட்ட ஒரு சுறுசுறுப்பான அட்டவணைக்கு இடம் கொடுக்காது என்பது சீக்கிரமாக தெரியவந்தது. 1987-ல் அவள் மரிக்கும்வரையாக உடல்நலக் குறைவால் கஷ்டப்பட்டபோதிலும், அவள் மிகவும் நேர்த்தியான ஒரு துணையாகவும் சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதிலும் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதிலும் திறமையுடைய மிகச் சிறந்த ஒரு ஊழியக்காரியாகவும் இருந்தாள். எங்களுடைய பெரும்பாலான மாலைப்பொழுதுகளைக் கூட்டங்களுக்குச் செல்வதிலோ எங்களுடைய அயலகத்தாரோடு பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்துகொள்வதிலோ செலவழித்தோம்.
நான் ஒரு பொறியாளராக இருந்தேன், மரம் அறுக்கும் இயந்திரத்தை உற்பத்தி செய்த ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தேன். என்னுடைய வேலையினிமித்தம் பிரிட்டன் முழுவதிலும் பிரான்ஸீக்கும்கூட அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. பொதுவாக மேரி என்னுடன் வந்தாள். இந்தப் பிரயாணங்கள் அதிகமாக சாட்சிகொடுக்க எங்களுக்கு வாய்ப்பளித்தன.
விஸ்தரிப்புக்கான அஸ்திவாரங்கள்
1925-ல் பிளோபியில் எங்களுடைய கூட்டங்களை நடத்துவதற்காக நேர்த்தியான ஒரு கட்டடத்தைக் கட்டி அங்கிருந்து திறமையாக சாட்சிகொடுப்பதற்கு ஒரு திட்டத்தை வகுத்தோம். ஒவ்வொரு ஞாயிறு காலையும் பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஆங்காங்கே இருந்த கிராமங்களுக்கும் சிறிய பட்டணங்களுக்கும் அதில் சென்றோம். வழி நெடுகிலுமாக பிரஸ்தாபிகள் பிரசங்கிப்பதற்காக இறங்கிக்கொண்டனர். திரும்பி வருகையில் அவர்கள் வண்டியில் மீண்டும் ஏறிக்கொண்டனர். உஷ்ணமான கோடை மாதங்களின்போது, ஞாயிறு மாலையில் சமீபத்திய காவற்கோபுர பத்திரிகையை பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை நடத்தினோம். பிற்பாடு எட்டு மணிக்கு, லெஸ்டர் சந்தையில் திறந்த வெளி பொதுப் பேச்சுக்காக நாங்கள் கூடி வந்தோம். ஒரு நாள் இரவு 200 பேர் பேச்சைக் கேட்டார்கள். இதுதானே லெஸ்டரிலும் அதைச் சுற்றியும் இப்பொழுது காணப்படும் அநேக சபைகளுக்கு அஸ்திவாரமாக இருந்தது.
1926-ல் லண்டனின் அலெக்ஸாண்டிரியா பேலஸ், ராயல் ஆல்பர்ட் ஹால் ஆகிய இடங்களில் திருப்பு கட்டமாக அமைந்த ஒரு மாநாடு ஒருசேர நடத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய தலைவராக இருந்த ஜோசஃப் எஃப். ரதர்போர்டு விடுதலை (ஆங்கிலம்) புத்தகத்தை வெளியிட்டார். “உலகத்தின் ஆட்சியாளர்களுக்கு ஒரு அத்தாட்சி” என்ற தீர்மானமும், “உலக வல்லரசுகள் ஏன் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன—பரிகாரம் என்ன” என்ற சகோதரர் ரதர்போர்டின் வலிமையான பொதுப் பேச்சும் கொடுக்கப்பட்டதற்கு மறுநாளே முக்கியமான செய்தித்தாள் ஒன்றில் முழுமையாக வெளியிடப்பட்டது. 10,000-க்கும் மேலானவர்கள் பொதுப் பேச்சைக் கேட்டனர், அதைத் தொடர்ந்து தீர்மானத்தின் 5,00,00,000 பிரதிகள் உலகெங்கிலும் விநியோகிக்கப்பட்டன. அந்த மாநாடு பிரிட்டனில் பிரசங்க வேலையை துரிதப்படுத்த உதவியது.
போர் காலத்தின்போது பெரிய மாநாடுகள்
செப்டம்பர் 1939-ல் இரண்டாவது உலக போர் ஆரம்பமானது, 1941-ல் போர் மிகவும் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. ஜெர்மன் நாட்டு வெடிகுண்டு விமானங்கள் இரவும் பகலும் பறந்த வண்ணமே இருந்தன, தேசமெங்கும் முழுவிளக்கணைப்பு சட்டம் அமலில் இருந்தது. உணவுத் தட்டுப்பாடாக இருந்தது, கிடைத்த உணவும் கண்டிப்போடு பங்கீடு செய்யப்பட்டது. இரயில் போக்குவரத்து பேரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. சமாளிக்க முடியாததாக தோன்றின இந்த இடையூறுகளின் மத்தியிலும் 1941, செப்டம்பர் 3-7 வரையில் ஐந்து நாள் தேசிய மாநாட்டை நடத்தினோம்.
இங்கிலாந்தின் மையத்தில் லெஸ்டர் இருப்பதால் மாநாடு நடத்துவதற்கு லெஸ்டர்ஸ் டி மேன்ட்ஃபேர்ட் மன்றம் தெரிந்துகொள்ளப்பட்டது. மர வேலைச் செய்யும் தொழிலில் நான் இருந்ததால் விளம்பர பலகைகளைச் செய்வதில் என்னால் உதவ முடிந்தது. மாநாட்டு பிரதிநிதிகளுக்கு உள்ளூரில் போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தேன். முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கினதாலும் வழக்கமாக வசூலிக்கப்படுவதைவிட கூடுதலாக பணம் செலுத்தியதாலும் லெஸ்டரில் டிராம்கள் ஞாயிறு அன்றும் ஓடின.
பிரயாண கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால், ஒருவேளை 3,000 சாட்சிகள் வரலாம் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வருவதாக தெரிவித்தபோது அடைந்த கிளர்ச்சியை கற்பனை செய்துபாருங்கள்! ஆனால் அவர்கள் எங்கே தங்குவார்கள்? லெஸ்டர் குடிமக்கள் அநேகரைத் தங்கள் வீடுகளில் தங்கும்படியாக அன்போடு அழைத்தார்கள். கூடுதலாக, சுமார் ஓராயிரம் பேர் மாநாடு நடைபெற்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த வயல்வெளியில் போடப்பட்ட கூடாரங்களில் தங்கினர். கிதியோன் கூடாரம் என்று நாங்கள் அழைத்த இந்தக் கூடாரத்தைப் பற்றிய செய்தி சமுதாயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
மாநாட்டு இலாகாக்களுக்கு பயன்படுத்துவதற்காக நிரம்பி வழிந்த கூட்டத்துக்கு இடமளிப்பதற்காகவும் பெரிய வெள்ளை நிற கூடாரங்கள் வாடகைக்கு வாங்கப்பட்டன. பிரகாசமான நிலாவொளியில் நாசிக்கள் இந்தக் கூடாரங்கள்மீது குறிவைத்து வெடிகுண்டு வீசுவதற்கு வாய்ப்பிருப்பதை கருத்தில்கொண்டு இவை வெளியே தெரியாதபடி அவசரமாக மூடப்பட்டன. போரும், விசேஷமாக சாட்சிகள் அதில் பங்குகொள்ளாதிருந்ததும் பொது மக்களுக்கு கவலையளித்தது. அந்தச் சமயத்தில் பைபிள் அடிப்படையில் தங்கள் நடுநிலைமையைக் காத்துக்கொண்ட காரணத்தால் நூற்றுக்கணக்கான சாட்சிகள் சிறையில் இருந்தனர்.—ஏசாயா 2:4; யோவான் 17:16.
1941, செப்டம்பர் 7 தேதியிட்ட சன்டே பிக்டோரியல் இவ்விதமாக அறிவிப்பு செய்தது: “10,000 பேர், பெரும்பாலும் இள வயதிலுள்ளவர்கள், தற்செயலாக பேசும்போது தவிர போரைப் பற்றியே பேசாமல் ஒரு வாரமாக மதத்தைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதைக் காண்பது ஆச்சரியமான காரியமாக உள்ளது.”
“சாட்சிகளுக்கு ஜெர்மனியில் உறுப்பினர்கள் எவரேனும் உள்ளனரா என்பதாக நான் கேட்டேன். ஆம் என்பதாகவும் ஏறக்குறைய அவர்கள் அனைவருமே, சுமார் 6,000 பேர் சித்திரவதை முகாம்களில் இருப்பதாகவும் எனக்குச் சொல்லப்பட்டது.”
நிருபர் மேலுமாக இவ்விதமாகச் சொன்னார்: “ஆம், நாசிக்கள் விரோதிகள் தான், துண்டுப்பிரதிகளை விற்பதையும் பேச்சுக்களைக் கேட்பதையும் தவிர சாட்சிகள் அவர்களை எதிர்ப்பதற்கு ஒன்றுமே செய்வதில்லை.”
எங்களைப் பற்றிய செய்தித்தாள் குறிப்புகள் பொதுவில் எதிர்மறையானதாகவே இருந்தன; எங்களுடைய மாநாட்டில் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்காக வன்முறையிலும்கூட ஈடுபட்டு எதிரிகள் தோற்றுப்போயினர். இருந்தபோதிலும் லண்டனின் டெய்லி மெயில் வேண்டாவெறுப்போடு இவ்வாறு ஒப்புக்கொண்டது: “ஏற்பாடுகள் சுமுகமாகவும், எந்த இடையூறும் இல்லாமலும், திறமையாகவும் செய்யப்பட்டிருந்தன.”
நகரில் சிகரெட் தட்டுப்பாட்டுக்கு நாங்கள் காரணமாயிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டோம். ஆனால் த டெய்லி மெயில் இப்படி விளக்கியிருந்தது: “லெஸ்டரோ புகையிலைக் கட்டுப்பாட்டு அலுவலரோ லெஸ்டரின் சிகரெட்டுகளை எல்லாம் சாட்சிகள் புகைத்துவிட்டதாக புகார் சொல்லமுடியாது. அவர்கள் புகைபிடிப்பது கிடையாது.” மேலுமாக சாட்சிகள் பெரும்பாலும் தங்கள் உணவுபொருட்களைத் தங்களுடன் எடுத்துவந்திருப்பது விளக்கப்பட்டபோது அவர்களால் உள்ளூர்வாசிகளுக்கு உணவு தட்டுப்பாடாகிவிட்டது என்ற புகாரும்கூட நீக்கப்பட்டது. உண்மையில், மாநாட்டின் முடிவில் 1.8 கிலோகிராம் எடையுள்ள ரொட்டி துண்டுகள் லெஸ்டர் ராயல் இன்ஃபர்மரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன—உணவு பற்றாக்குறை இருந்த அந்தச் சமயத்தில் அது கணிசமான ஒரு நன்கொடை.
மாநாடு, பிரிட்டனிலிருந்த சுமார் 11,000 சாட்சிகளுக்கு மிகுதியாக ஆவிக்குரிய உற்சாகத்தை அளித்தது. சுமார் 12,000 பேர் ஆஜராயிருந்தது அவர்களுக்கு கிளர்ச்சியூட்டியது! முன்னொருபோதும் இல்லாதளவு லெஸ்டரில் பிரதிநிதிகள் தெரு ஊழியத்தில் ஈடுபட்டார்கள், தொலைவில் ஒதுக்கமாயிருந்த கிராமங்களுக்குச் சென்று ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேச்சுகளைக் கேட்கும்படி அளிப்புகளைச் செய்தார்கள்.
மாநாட்டின் முக்கிய பேச்சுக்கள், அ.ஐ.மா., முசோரி, செயின்ட் லூயிஸ்-ல் முந்திய மாதம் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய ஐந்து நாள் மாநாட்டில் கொடுக்கப்பட்ட பேச்சுக்களின் ஒலிப்பதிவாக இருந்தன. “ராஜாவின் பிள்ளைகள்” என்ற தலைப்பிலான சகோதரர் ரதர்போர்டின் பதிவு செய்யப்பட்ட பேச்சே மாநாட்டின் முக்கிய பேச்சாக இருந்தது. செயின்ட் லூயிஸ்-ல் வெளியிடப்பட்ட பிள்ளைகள் (ஆங்கிலம்) புத்தகத்தின் பிரதிகளை இறக்குமதி செய்ய முடியாமல் போனதால் பின்னால் இந்தப் புத்தகத்தின் விசேஷ தாள் அட்டையிட்ட பதிப்பு பிரிட்டனில் தயாரிக்கப்பட்டது. மாநாட்டுக்கு வந்திருந்த எல்லா பிள்ளைகளுக்கும் ஒரு பிரதி அனுப்பிவைக்கப்பட்டது.
லெஸ்டரின் தனிச்சிறப்பான ஆண்டுக்கூட்டம்
போருக்குப்பின் பிரிட்டனில் ராஜ்ய அறிவிப்பாளர்களின் வளர்ச்சி வியப்பூட்டுவதாய் இருந்தது! 1980-களின் ஆரம்பத்திற்குள், லெஸ்டரிலிருந்த சபைகளின் எண்ணிக்கை பத்தாக வளர்ந்துவிட்டிருந்தது. அதற்குப்பிறகு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் ஆண்டுக் கூட்டத்தை 1983-ல் லெஸ்டரில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு தீர்மானித்திருப்பதாக எங்களுக்குத் தகவல் சொல்லப்பட்டது. லெஸ்டரின் நகர கண்காணியாக, டி மேன்ட்ஃபேர்ட் மன்றத்தை மறுபடியுமாக வாடகைக்கு எடுப்பது உட்பட பல ஏற்பாடுகளைச் செய்வதில் நான் விரைவில் இறங்கினேன்.
சங்கத்தின் ப்ரூக்ளின் தலைமை அலுவலகத்திலிருந்து அந்த நிகழ்ச்சிக்காக ஆளும் குழுவின் பதிமூன்று உறுப்பினர்கள் வந்திருந்தார்கள். மொத்தமாக 3,671 பிரதிநிதிகள்—இந்த முறை உலகம் முழுவதிலுமிருந்து வந்தவர்களும், பெரும்பாலும் நீண்ட காலமாக சாட்சிகளாக இருப்பவர்களும்—அரங்கத்தை நிரப்பினார்கள். இன்னும் கூடுதலாக 1,500 பேர் அருகிலிருந்த ஒரு மாநாட்டு மன்றத்திலிருந்து நிகழ்ச்சிநிரலைக் கேட்டார்கள்.
போர்காலத்தில் நடந்த எங்களுடைய லெஸ்டர் மாநாட்டின் சமயத்தில் லண்டன் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்தை மேற்பார்வை செய்துவந்த ஆல்பர்ட் டி. ஷ்ரோடர் இந்த ஆண்டுக்கூட்டத்தைத் தலைமைவகித்து நடத்தினார். 1941 மாநாட்டை பின்னோக்கிப் பார்ப்பவராக, சகோதரர் ஷ்ரோடர் இவ்வாறு கேட்டார்: “இன்று நம்மோடிருக்கும் எத்தனை பேர் அப்போது இருந்தீர்கள்?” கூடியிருந்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தங்கள் கைகளை உயர்த்தினர். “ஆ, உண்மையுள்ள, பற்றுமாறாத நீங்கள் அனைவரும் எப்படி மறுபடியுமாக இணைந்துவிட்டீர்கள் என்பதைப் பாருங்கள்!” என்று அவர் உணர்ச்சிப்பொங்க கூறினார். ஆம், அது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.
நான் இன்னும் 98 வயதில் என்னுடைய சபையில் செயலராக பணிபுரிந்துகொண்டு தொடர்ந்து பொது பேச்சுகளைக் கொடுத்துவருகிறேன்; இப்பொழுதெல்லாம் உட்கார்ந்து தான் பேச்சைக் கொடுக்கிறேன். 1987-ல் மேரி மரித்தப்பின், மேரிக்கும் எனக்கும் பல வருட பழக்கமுள்ள பெட்டினா என்ற ஒரு விதவையை நான் மறுமணம்செய்துகொண்டேன். சரீரப்பிரகாரமாயும் ஆவிக்குரிய பிரகாரமாயும் நன்றாக கவனிக்கப்படுவதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேரியின் உடல் நலக்குறைவாலும் இப்பொழுது என்னுடைய சொந்த முதுமையினாலும் சுமத்தப்பட்ட நிர்ப்பந்தங்களின் மத்தியிலும் பரிசுத்த சேவையில் செய்வதற்கு அதிகம் இருப்பது மிகுந்த பலனளித்ததை நான் கண்டிருக்கிறேன்.—1 கொரிந்தியர் 15:58.
[பக்கம் 26-ன் படம்]
1920-களில் ஊழியத்தில் பங்குகொள்ள தயாராயிருத்தல்
[பக்கம் 26-ன் படம்]
லெஸ்டர் மாநாட்டிலிருந்து சில காட்சிகள்