இளைஞருக்கு—என்ன நேரிட்டுக்கொண்டிருக்கிறது?
நல்ல செய்தியையா அல்லது கெட்ட செய்தியையா—எதை முதலில் கேட்க உங்களுக்கு விருப்பம்? இந்தக் கேள்வி கேட்கப்படுகையில், அநேகர் நல்ல செய்தி தங்கள் நினைவைவிட்டு நீங்காதிருக்கும் என்ற நம்பிக்கையில் கெட்ட செய்தியையே முதலில் கேட்க தெரிந்துகொள்கின்றனர்.
இளைஞருக்கு என்ன நேரிட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் ஆராயும்போது, முதலில் தற்போதுள்ள நிலைமையைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். இன்றுள்ள இளைஞர் கடந்த காலத்திலிருந்த வாலிப பிள்ளைகளைப் போல இல்லை என்பதாக வயதானவர்கள் பொதுவாக கருத்துத் தெரிவிக்கின்றனர். மறுபட்சத்தில் இளைஞரோ, கொஞ்ச காலத்திற்கு முன்பிருந்த தராதரங்களுக்கேற்ப தாங்கள் இல்லை என்று சொல்லப்படுகையில் ஆத்திரமடைகிறார்கள். இருப்பினும் இன்றைய இளைஞர் வித்தியாசமாகவே இருக்கிறார்கள் என்பதாக மனித சமுதாயத்தை கூர்ந்து கவனிப்பவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
எந்தளவு வித்தியாசமானவர்கள்?
இளைஞர் நல்நடத்தையும் பொறுப்புணர்ச்சியும் மற்றவர்களிடமாக மரியாதையும் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதாக பொதுவாக மக்கள் நினைக்கின்றபோதிலும், இந்த உயர்ந்த இலட்சியங்களை எட்டுவதில் அநேக சமயங்களில் அவர்கள் தவறிவிடுகின்றனர் என்பதே நிஜமாகும். லண்டனின் தி இண்டிப்பென்டன்டு என்ற செய்தித்தாளில் வெளியிடப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, இளைஞர் “தங்கள் எதிர்பார்ப்புகளைப் பேரளவு ஏமாற்றிவிட்டிருப்பதாக அவர்கள் காணும் உலகிற்கு எதிராக ஒரு ‘புதிய கலகத்தனமான மனப்பான்மையை’ வளர்த்துக் கொண்டு வருகிறார்கள்.” நவீன நாளைய இளைஞரில் வெகு சிலரே “அறிவுள்ளவர்களாயும் பொறுப்புள்ளவர்களாயும்” தாங்கள் கருதப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்குப் பதிலாக “கட்டுப்பாடில்லாதவர்கள் என்றும் சொல்ல முடியாதவர்கள்” என்றும் கருதப்பட வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள் என்ற ஆய்வின் இந்த முடிவிலிருந்து இந்தப் “புதிய கலகத்தனமான மனப்பான்மையைக்” காணமுடிகிறது.
உதாரணமாக, பிரிட்டனில் அறிக்கைச் செய்யப்பட்ட குற்றச் செயல்கள்—இவற்றில் பெரும்பாலானவை இளைஞரால் செய்யப்பட்டவை—1950-க்கும் 1993-க்கும் இடையே பத்து மடங்கு அதிகரித்தன. போதை மருந்து மற்றும் மதுபான துர்ப்பிரயோகத்தின் அதிகரிப்போடு சேர்ந்து இதுவும் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் பெரும்பாலும் வளர்ச்சியடைந்துள்ள எல்லா தேசங்களும் “இரண்டாம் உலக போர் முதற்கொண்டு இளைஞர் மத்தியில் சமுதாய உளவியல் கோளாறுகளில் கணிசமான அதிகரிப்பைக்” கண்டிருப்பதாக லண்டனின் த டைம்ஸ் குறிப்பிடுகிறது. குற்றவியல் பேராசிரியர் டேவிட் ஜே. ஸ்மித் என்பவரின்படி, இந்தக் கோளாறுகள் “சாதாரணமாக புரிந்துகொள்கின்ற விதத்தில் வறுமையோடு அல்லது அதிகரித்துவரும் செல்வத்தோடு சம்பந்தப்பட்டில்லை.” இளைஞருக்கும் வயதானவர்களுக்குமிடையே அதிகமான வேறுபாடு இப்பொழுது வெளிப்படையாக தெரிவதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
பிள்ளைகளும் இளம் பருவத்தினரும் இன்று அதிகப்படியான அழுத்தங்களை எதிர்ப்படுகின்றனர். தற்கொலை முயற்சியும் தற்கொலை செய்துகொள்வதும் சர்வசாதாரணமாகியிருக்கிறது. 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் தற்கொலை முயற்சிகள் பத்துக்கும் குறைவான வருடங்களில் இரு மடங்காகிவிட்டிருக்கின்றன என்பதாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ ஹெரால்ட் செய்தித்தாள் அறிவிக்கிறது. வளர்ந்த பிள்ளைகள் மனமுறிவடைகையில் இதே முடிவுக்கே வர தங்களை அனுமதிக்கிறார்கள். “இளைஞருக்கு மனநோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரிக்கையில் ஏற்படும் குரூரமான விளைவான தற்கொலை முயற்சியை தங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் உதவியினால் மேற்கொள்ள முடியவில்லை” என்பதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
யாரைக் குற்றப்படுத்துவது?
பெரியவர்கள் இளைஞரை, “நெறிமுறையிலிருந்து விலகிய” அவர்களுடைய கருத்துகளுக்காக எளிதில் குற்றப்படுத்திவிடுகிறார்கள். ஆனால் உண்மையில் இன்று இளைஞருக்கு நேரிட்டுக்கொண்டிருக்கும் காரியங்களுக்காக பெரியவர்களே பெரும்பாலும் பொறுப்புள்ளவர்களாக இல்லையா? சகாக்களின் கொடுமை, பெற்றோரின் அலட்சியம், இளைஞர் நம்பிக்கையோடு பார்த்துப் பின்பற்றுவதற்கு முன்மாதிரிகள் இல்லாதிருப்பது ஆகியவை இளைஞரின் நெறிமுறையிலிருந்து விலகிய நடத்தைக்கு காரணங்களாக விளக்கமளிக்கின்றன. “பொதுமக்களில் காணப்படும் மனச்சோர்வு 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போலவேதான் உள்ளது” என்பதாக பிரிட்டன்ஸ் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் சைல்ட் சைக்கியாட்டிரி யூனிட்டின் தலைவர் பேராசிரியர் சர் மைக்கல் ரெட்டர் சொல்கிறார். “ஆனால், அது பருவவயதினர் மற்றும் இளவயதிலுள்ள ஆட்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. . . . குடும்ப முறிவு இதற்கு ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை; வெறும் திருமண விலக்கு மாத்திரமல்ல, ஆனால் பெரியவர்கள் மத்தியில் பொதுவாக காணப்படும் சண்டை சச்சரவுகளும் காரணமாயிருக்கின்றன” என்றும் அவர் சொல்கிறார்.
இளைஞர் “பழமை மரபுகளை நிராகரித்துக்கொண்டிருக்கின்றனர்” என்பதாக ஒரு ஆய்வாளர் சொல்லுகிறார். ஏன்? “ஏனென்றால் பழமை மரபுகள் இனிமேலும் நடைமுறைக்கு ஒவ்வாதவை.” ஆண், பெண் ஆகிய இவர்களின் பாகத்தைப் பற்றிய மாறிவரும் கருத்துக்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அநேக இளம் பெண்கள் வலிய சண்டை செய்வது, வன்முறை போன்ற அதிகமான ஆணியல்புகளை தெரிந்துகொண்டு அதைப் பின்பற்றுகிறவர்களாயும் இளம் ஆண்கள் பெண்ணியல்புள்ளவர்களாயும் மாறிவருகின்றனர். கடந்த காலத்தின் தராதரங்களிலிருந்து எவ்வளவு வித்தியாசம்!
ஆனால் ஏன் இப்படிப்பட்ட தீவிரமான மாற்றங்களை இப்பொழுது நாம் காண்கிறோம்? மேலும் இன்றைய இளைஞரைப்பற்றி என்ன நல்ல செய்தி உள்ளது? அவர்கள் பாதுகாப்பான ஓர் எதிர்காலத்தை எப்படி பெற முடியும்? எமது அடுத்தக் கட்டுரை இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஆராய்கிறது.