சூனேம் அன்பிற்கும் கொடுமைக்கும் பெயர்போனது
தென்கலிலேயாவில், யெஸ்ரயேலின் தாழ்வான சமவெளியின் கிழக்குக் கோடியில் சூனேம் நகரம் அமைந்திருக்கிறது. பைபிள் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க இரண்டு யுத்தங்கள் இந்தச் சிறிய நகரத்தில் நடந்திருக்கின்றன. ஆனால் பற்றுமாறாத அன்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இரண்டு பெண்களின் பிறப்பிடமாகவும் அது பிரசித்தி பெற்றிருந்தது.
சூனேமுக்கு பின்புறத்தில் மோரே என்று கருதப்பட்ட குன்று காணப்பட்டது. சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் சமவெளியின் குறுக்கே கில்போவா மலை இருந்தது. இந்த இரண்டு குன்றுகளுக்குமிடையே நீர்வளமிக்க செழிப்பான தேசம் இருந்தது—இது இஸ்ரேல் முழுவதிலும் இருந்த அதிக செழுமையான பிரதேசங்களில் ஒன்றாய் விளங்கியது.
சூனேமைச் சுற்றியிருந்த இந்த வளமிக்க நாட்டுப்புற பகுதியே எக்காலத்திலும் சொல்லப்பட்டவற்றுள் அதிக கவர்ச்சியான காதல் கதைகளில் ஒன்றுக்கு—சாலொமோனின் உன்னதப்பாட்டுக்கு—பின்னணியாக திகழ்ந்தது. தன்னுடைய மனைவிகளில் ஒருத்தியாக இருப்பதற்கு சாலொமோன் ராஜா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தன்னுடைய மேய்ப்ப தோழனையே மணந்துகொள்ள விரும்பிய ஓர் அழகிய நாட்டுப்புற பெண்ணைப்பற்றி இந்தப் பாட்டு சொல்லுகிறது. அவள் இதயத்தைக் கவர சாலொமோன் தன்னுடைய எல்லா ஞானத்தையும் செல்வத்தையும் பயன்படுத்திப் பார்த்தார். திரும்பத் திரும்ப அவளை புகழ்ந்துபேசினார்: “சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்?” மேலும் அவள் எண்ணிப்பார்க்கக்கூடிய அனைத்து ஆபரணங்களையும் அவளுக்கு அணிவிப்பதாக அவர் வாக்களித்தார்.—உன்னதப்பாட்டு 1:11; 6:10.
அரண்மனை வாழ்வை அவள் ருசிபார்ப்பதற்காக, தன்னுடன் வந்த மிகச் சிறந்த போர்வீரர்களில் 60 பேர்கொண்ட பரிவாரத்தின் பாகமாக அவளை எருசலேமுக்கு சாலொமோன் கொண்டுவந்தார். (உன்னதப்பாட்டு 3:6-11) சேபாவின் ராஜஸ்திரீ அதைப் பார்த்தபோது அவ்வளவாய் மனக்கிளர்ச்சி அடைந்ததால், ‘அவளை ஆச்சரியத்தால் பிரமை கொள்ளவைத்த’ அரண்மனையில் அந்த சூனேமிய பெண்ணை தங்க வைத்தார்.—1 இராஜாக்கள் 10:4, 5.
சூனேமிலிருந்து வந்த அந்தப் பெண்ணோ மேய்ப்பனிடம் பற்றுமாறா அன்புள்ளவளாக இருந்தாள். ‘காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ அப்படியே என் நேசர் இருக்கிறார்’ என்பதாக அவள் சொன்னாள். (உன்னதப்பாட்டு 2:3) சாலொமோன் தன்னுடைய ஆயிரம் திராட்சத்தோட்டங்களில் களிகூரட்டும். தன்னுடைய நேசரோடுகூட ஒரே ஒரு திராட்சத்தோட்டம் அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அவளுடைய காதல் அசைக்க முடியாததாய் இருந்தது.—உன்னதப்பாட்டு 8:11, 12.
மற்றொரு அழகான பெண் சூனேமில் வாழ்ந்துவந்தாள். அவளுடைய உடலின் தோற்றத்தைப்பற்றி நமக்கு எதுவும் தெரியாது, ஆனால் அவள் நிச்சயமாகவே இருதயத்தில் அழகுள்ளவளாய் இருந்தாள். தீர்க்கதரிசியாகிய எலிசாவுக்கு ஒழுங்காக உணவையும் தங்குமிடத்தையும் அளிப்பதற்காக அவள் ‘தன்னை வருத்திக்கொண்டாள்’—அல்லது அதற்காக மும்முரமாக உழைத்தாள் என்பதாக பைபிள் சொல்லுகிறது.—2 இராஜாக்கள் 4:8-13, NW.
எலிசா நீண்ட, களைப்பான ஒரு பிரயாணத்துக்குப் பின்னர், அவளும் அவளுடைய கணவரும் அவருக்காக ஆயத்தம் செய்திருந்த சிறிய அறைவீட்டுக்கு நன்றியுணர்வோடு திரும்பிவருவதை நாம் கற்பனை செய்துபார்க்கலாம். அவருடைய ஊழியக்காலம் 60 ஆண்டுகளாக இருந்தபடியால் அவர் ஒருவேளை அடிக்கடி அவளுடைய வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். எலிசா அந்த வழியாக கடந்துபோகும் ஒவ்வொரு சமயமும் தங்கள் வீட்டில் தங்க வேண்டும் என்பதாக இந்த சூனேமிய பெண் வற்புறுத்தியதற்கு காரணம் என்ன? ஏனென்றால் அவள் எலிசா செய்துவந்த வேலையை உயர்வாக மதித்தாள். மனத்தாழ்மையுள்ள, தன்னலம் பாராத இந்தத் தீர்க்கதரிசி ராஜாக்களும், ஆசாரியர்களும், பொது ஜனங்களும் யெகோவாவைச் சேவிப்பதற்கு அவர்களுக்கிருக்கும் கடமையைக் குறித்து நினைப்பூட்டிக்கொண்டு தேசத்தின் மனச்சாட்சியாக செயல்பட்டார்.
இயேசு பின்வருமாறு சொன்னபோது, அவர் மனதிலிருந்த ஆட்களில் சூனேமிய பெண் ஒருத்தியாக இருந்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. “தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்.” (மத்தேயு 10:41) கடவுள் பயமுள்ள இந்தப் பெண்ணுக்கு விசேஷமான வெகுமதியை யெகோவா அருளினார். அநேக ஆண்டுகளாக அவள் மலடியாகவே இருந்தபோதிலும், அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். பல வருடங்களுக்குப் பிறகு ஏழு ஆண்டு காலம் நீடித்த ஒரு பஞ்சம் தேசத்தை பாழாக்கியபோது அவளுக்கு தெய்வீக உதவியும்கூட கொடுக்கப்பட்டது. மனதை நெகிழச் செய்யும் இந்தப் பதிவு, கடவுளுடைய ஊழியர்களுக்கு நாம் காண்பிக்கும் தயவை நம்முடைய பரம தந்தை ஒருபோதும் கவனியாமல் போவதில்லை என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது.—2 இராஜாக்கள் 4:13-37; 8:1-6; எபிரெயர் 6:10.
தீர்வான இரண்டு யுத்தங்கள்
பற்றுமாறாத இந்த இரண்டு பெண்களின் பிறப்பிடமாக சூனேம் நினைவுகூரப்பட்டபோதிலும், இஸ்ரவேலரின் வரலாற்று பாதையை மாற்றின இரண்டு யுத்தங்களும்கூட இங்கே நடந்திருக்கின்றன. அருகே யுத்தம் செய்வதற்கேற்ற ஒரு இடமிருந்தது, அது மோரே மற்றும் கில்போவா குன்றுகளுக்கு இடையே இருக்கும் சமவெளி. பைபிள் காலங்களிலிருந்த இராணுவ தலைவர்கள் எப்பொழுதும் அதிகமான தண்ணீர் வசதியும், பாதுகாப்புக்காக மேடான நிலமும், கூடுமானால், காலாட்படைகளையும் குதிரைகளையும் இரதங்களையும் நடத்திச் செல்வதற்கு போதுமான இடவசதியும் கொண்ட வறண்ட பள்ளத்தாக்கான சமவெளியை எதிரே உடைய ஒரு முதன்மையான இடத்தில் பாளயமிறங்கினார்கள். சூனேமிலும் கில்போவாவிலும் இப்படிப்பட்ட வசதிகள் இருந்தன.
நியாயாதிபதிகளின் காலத்தில், மீதியானியரும் அமலேக்கியரும் மற்றவர்களுமாக 1,35,000 பேர் கொண்ட ஒரு சேனை மோரேவுக்கு முன்னாலிருந்த சமவெளியில் பாளயமிறங்கியிருந்தது. அவர்களுடைய ஒட்டகங்கள், “கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.” (நியாயாதிபதிகள் 7:12) சமவெளிக்கு குறுக்கே அவர்களின் எதிர்புறத்தில் கில்போவா மலை அடிவாரத்தில் ஆரோத் என்னும் நீரூற்றின் அருகே நியாயாதிபதியான கிதியோனின் தலைமையில் இஸ்ரவேலர் இருந்தனர். இவர்களுடைய போர்வீரர்களின் எண்ணிக்கை 32,000 மட்டுமே.
யுத்தத்திற்கு முன்னான நாட்களில், ஒவ்வொரு பக்கத்திலிருப்பவரும் எதிர்ப்பக்கத்திலிருப்பவரின் மனவுறுதியை குலைக்க முயற்சி செய்வது வழக்கம். பரிகாசம் செய்யும் சேனைகளின் கூட்டங்களும், போர் ஒட்டகங்களும், இரதங்களும், குதிரைகளும் கால்நடையாக வந்திருந்த இஸ்ரவேல போர் வீரர்களின் மனதில் பீதியை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இஸ்ரவேலர் தங்களை ஒழுங்கமைக்கையில் ஏற்கெனவே தங்கள் தங்கள் இடங்களில் நின்றுவிட்டிருந்த மீதியானியர்களைப் பார்ப்பது அவர்களுக்கு திகிலூட்டும் காட்சியாக இருந்திருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. “பயமும் திகிலும் உள்ளவன் எவனோ?” என்பதாக கிதியோன் கேட்டபோது அவருடைய படையில் இருந்த மூன்றில் இரண்டு பகுதியினர் யுத்தக்களத்திலிருந்து பின்வாங்கிப் போனார்கள்.—நியாயாதிபதிகள் 7:1-3.
இஸ்ரவேலரின் படையில் 10,000 பேர் மாத்திரமே, சமவெளிக்கு குறுக்கே இருந்த 1,35,000 சத்துருக்களை இப்பொழுது உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சீக்கிரத்தில் யெகோவா இஸ்ரவேல போர்வீரர்களின் எண்ணிக்கையை வெறும் 300-க்கு குறைத்துவிட்டார். இஸ்ரவேலரின் பழக்கத்தின்படி இந்தச் சிறிய தொகுதி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இருட்டின் மறைவில் சத்துரு பாளயத்தைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் இவர்கள் பரவலாக நின்றுகொண்டார்கள். பிறகு கிதியோன் உத்தரவு கொடுத்தபோது 300 பேரும் தங்கள் தீவட்டிகளை மூடியிருந்த பானையை உடைத்து, அந்தத் தீவட்டிகளை மேலே தூக்கிப்பிடித்து, “[யெகோவாவுடைய] பட்டயம் கிதியோனுடைய பட்டயம்” என்று சத்தமாக கத்தினார்கள். அவர்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டே இருந்தார்கள். இருட்டில், திகிலடைந்த கதம்பமான போர்வீரர்களின் கூட்டம், 300 சேனைகள் தங்களைத் தாக்குவதாக எண்ணிக்கொண்டது. ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் யெகோவா ஓங்கப்பண்ணினார், “பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு ஓடிப்போனார்கள்.”—நியாயாதிபதிகள் 7:15-22; 8:10.
இரண்டாவது யுத்தம் சவுல் ராஜாவின் காலத்தில் சூனேமுக்கு அருகே நடைபெற்றது. “பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்” என்பதாக பைபிள் அறிவிப்பு செய்கிறது. பல வருடங்களுக்கு முன்பாக கிதியோனின் படை செய்தது போலவே இவர்களும் செய்தார்கள். ஆனால் கிதியோனைப் போல இல்லாமல், சவுல் யெகோவாவில் நம்பிக்கை வைக்காமல் எந்தோரில் குறி சொல்லுகிற ஒரு பெண்ணிடம் விசாரிக்க விரும்பினான். அவன் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது “பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக் கொண்டிருந்தது.” அதைத் தொடர்ந்து நடந்த யுத்தத்தில் இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள், மிக மோசமான தோல்வியை தழுவிக்கொண்டார்கள். சவுலும் யோனத்தானும் மாண்டுபோனார்கள்.—1 சாமுவேல் 28:4-7; 31:1-6.
ஆகவே சூனேமின் வரலாறு அன்பிற்கும் கொடுமைக்கும் யெகோவாவின்மீது நம்பிக்கைக்கும் பேய்களின்மீது நம்பிக்கைக்கும் பெயர்போனது. இந்தப் பள்ளத்தாக்கு சமவெளியில், அன்பையும் உபசரிக்கும் தன்மையையும் எப்பொழுதும் இரண்டு பெண்கள் காட்டினார்கள்; இரண்டு இஸ்ரவேல தலைவர்களின் தீர்வான யுத்தங்கள் நடத்தினார்கள். எல்லா நான்கு உதாரணங்களும் தம்மை சேவிப்பவர்களுக்கு தவறாமல் பலனளிக்கும் யெகோவாவின்மீது சார்ந்திருப்பதனுடைய முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.
[பக்கம் 31-ன் படம்]
பூர்வ சூனேம் பகுதியிலுள்ள நவீன சூலம் கிராமம், மோரே பின்னணியில்
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.