நவாஹோதேசத்தில்—செம்மறியாடு போன்றோருக்கு மேய்ச்சல் நிலம்
நவாஹோ இந்தியர்களின் மொழியில் ஹெழோனி என்பதற்கு அர்த்தம் “அழகானது” என்பதாகும், இப்படித்தான் நவாஹோ மக்கள் தங்கள் தேசத்தை வர்ணிக்கிறார்கள். 1868 முதற்கொண்டு அரிஜோனா, கொலராடோ, நியூ மெக்ஸிகோ, உடா என்ற நான்கு மாநிலங்களும் சந்திக்கின்ற நான்கு முனைகள் என்றழைக்கப்படும் இடத்தைச் சுற்றி வடகிழக்கு அரிஜோனாவில் சுமார் 62,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை ஐக்கிய மாகாணங்களின் அரசு நவாஹோ மக்களுக்கு ஒதுக்கி கொடுத்திருக்கிறது. மேற்கத்திய திரைப்படங்களின் மூலமாக பிரபலமாகியிருக்கும் மான்யூமென்ட் பள்ளத்தாக்கு இப்பொழுது நவாஹோ ட்ரைபல் பூங்காவாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது; உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இது கவர்ந்திழுக்கிறது. பள்ளத்தாக்கின் சிறப்பம்சம், உயரமான பாலைவனச் சமவெளியில் குறிப்பிடத்தக்கவிதமாக தனித்து உயர்ந்து நிற்கும் பிரமிக்க வைக்கும் முன்னூறு மீட்டர் உயர ஒற்றைக் கல் செம்மண் பாறைகளாகும். பள்ளத்தாக்கு என்பதற்கு நவாஹோ மக்கள் பயன்படுத்தும் வார்த்தையின் பொருளான “பாறைகளுக்கிடையில் இடைவெளி” என்பது பொருத்தமாகவே உள்ளது.
மொத்தத்தில் நவாஹோ மக்கள் மனத்தாழ்மையான நடத்தைக்கும், கனிவுடன் காட்டும் உபசரிப்புக்கும், நெருக்கமாக இருக்கும் கூட்டு குடும்பங்களுக்கும் பேர்போனவர்கள். தனி ஒதுக்கீட்டுப் பகுதியில் வாழும் 1,70,000 குடிமக்களும் முக்கியமாக தனித்தனியே குடியிருப்பு பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி வாழ்க்கை நடத்திவருகிறார்கள். சிலர் இன்னும் ஆடுகளை மேய்ப்பவர்களாகவும் மரத்தையும் மண்ணையும் வைத்துக் கட்டப்பட்ட குடிசைகளில் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். நவாஹோ மக்களின் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் எல்லா இடங்களிலும் பிரசித்திப்பெற்றுள்ளன. செம்மறியாட்டு கம்பளத்திலிருந்து நெசவுசெய்யப்படும், வர்ணமிக்க வடிவியல் அல்லது பாரம்பரிய டிசைன்களைக் கொண்ட ஜமக்காளங்களும் சால்வைகளும் விசேஷமாக மதிப்புள்ளவை. அதே அளவு பிரபலமாயிருப்பது இரத்தின கற்களையும் மற்ற பொருட்களையும் வைத்து செய்யப்பட்ட நவாஹோ வெள்ளி ஆபரணங்களாகும்.
நவாஹோ தேசத்துக்கு நற்செய்தியைக் கொண்டுவருதல்
வெறுமனே சுற்றிப்பார்ப்பதற்காக மட்டுமல்ல, ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த இடத்திலுள்ள மக்களுக்கு எடுத்துச்செல்வதற்காகவும் யெகோவாவின் சாட்சிகள் 30-க்கும் மேலான ஆண்டுகளாக நவாஹோ தேசத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். (மத்தேயு 24:14) யெகோவாவின் சாட்சிகளுடைய ஒழுங்கான மற்றும் விசேஷ பயனியர்கள் பிரசங்க வேலையை முன்நின்று செய்து வந்திருக்கிறார்கள். தேவை அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள உள்ளூர் சாட்சிகளும் வட்டார கண்காணிகளும் விடுத்துள்ள அழைப்புக்கு பிரதிபலித்து இவர்களில் அநேகர் இங்கு வந்திருக்கிறார்கள். அருகிலுள்ள சபைகளிலிருந்து சிலர் வந்திருக்கிறார்கள், பல்வேறு அமெரிக்க இனத்தவர்கள் உட்பட ஐக்கிய மாகாணங்களின் பல இடங்களிலிருந்தும் வந்த மற்றவர்களும் இங்கிருக்கிறார்கள்.
தங்களையே தியாகம் செய்திருக்கும் இந்த ஆண்களும் பெண்களும் தங்களுடைய ஊழியத்தை ஒரு மிஷனரி நியமனத்துக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? முதலாவதாக, உச்சரிப்புகள், வாக்கிய அமைப்பு, மொழிநடை ஆகியவை சிக்கலாக இருப்பதன் காரணமாக இவர்களுடைய மொழி கற்றுக்கொள்வதற்கு மிகவும் கடினமானதாகும். மேலுமாக, உள்ளூர் மக்கள் பொதுவாக மதம், குடும்ப அமைப்பு, பிழைப்புக்காக நிலத்தை நம்பியிருத்தல் போன்ற விஷயங்களில் தங்கள் பாரம்பரியமான முறைகளில் விடாபிடியாய் இருக்கிறார்கள். மேலுமாக, இந்தியரல்லாதவர்களுக்கு வீடு கிடைப்பதும் வேலை கிடைப்பதும் கடினமாக இருப்பதால், இங்கு வாழ்வதற்காக வருகிறவர்கள் தங்குவது அதிக கடினமாக ஆகிவிடுகிறது. கடைசியாக, நீண்ட காலமாக வெள்ளையர்கள் கைகளில் இவர்கள் மோசமாக நடத்தப்பட்டு வந்த காரணத்தால், வெளியிலிருந்து வருபவர்களிடம் ஓரளவு அவநம்பிக்கையோடு நடந்துகொள்வது இவர்களுடைய மனதில் பதிந்துவிட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.a
முதல் முதலில் சாட்சிகள் டை அணிந்து நேர்த்தியாக உடுத்திக்கொண்டு வீட்டுக்கு வீடு சென்றபோது, இவர்களை மார்மன்கள் என்பதாக தவறாக நினைத்துக்கொண்டு அநேகர் கதவை திறக்காமலே இருந்தார்கள். சாதாரணமான உடையில் சென்றபோதோ இவர்கள் வரவேற்கப்பட்டார்கள், அநேக சமயங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும்கூட அவர்களோடு செலவழித்தார்கள். ஊழியத்துக்கு செல்லும்போது மறுபடியும் நேர்த்தியான உடையையே இவர்கள் அணிகின்றபோதிலும் மக்கள் யெகோவாவின் சாட்சிகளை இப்பொழுது அடையாளங்கண்டு கொள்கிறார்கள்.
நவாஹோ மக்களின் தனி ஒதுக்கீட்டுப் பகுதிக்குச் செல்வதே உண்மையில் ஒரு சவாலாக இருக்கிறது. சாலைப் போடப்படாத பாறைகள் நிறைந்த, மணற்பாங்கான, சேறு நிறைந்த பாதை வழியாக அநேக கிலோமீட்டர்கள் ஓட்டிச்செல்வது சகஜமாகும். இயல்பாகவே, வண்டிகள் அதிகமான தேய்மானத்துக்கு உள்ளாகின்றன, பயணிகள் விரைவில் சோர்வடைந்துவிடுகிறார்கள். வாகனங்கள் நின்றுவிடக்கூடும், ஆனால் பொதுவாக அவ்வழியே செல்பவர்கள் உதவிசெய்ய தயாராக இருக்கிறார்கள். அக்கறைக்காட்டுபவர்களைச் சந்திப்பது, ஒரு வீட்டு பைபிள் படிப்புக்குச் செல்வது, அல்லது கிறிஸ்தவ கூட்டத்துக்கு எவராவது ஒருவரை அழைத்துச் செல்வது அநேகமாக பல மணிநேரம் சுற்றிக்கொண்டு பிரயாணம் செய்வதைத் தேவைப்படுத்துகிறது. ஆனால் சாட்சிகள் தங்களைத் தாங்களே மனமுவந்து இதற்காக அளிப்பதற்கும் இவ்வாறு உள்ளூர் மக்களுக்கு தங்கள் அன்பைக் காண்பிப்பதற்கும் மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:8-ஐ ஒப்பிடுக.
நவாஹோ மக்கள் பைபிள் கலந்தாலோசிப்புகளை அனுபவித்து மகிழுகிறார்கள். பொதுவாக அவர்கள் முழு குடும்பத்தையும்—பிள்ளைகள், பெற்றோர், தாத்தா பாட்டிமார் ஆகிய அனைவரையும்—மனிதவர்க்கத்துக்கு இருக்கும் ஒரு எதிர்கால பரதீஸ் பற்றிய நம்பிக்கையைக் குறித்து கேட்பதற்காக ஒன்றாக கூடிவரச் செய்கிறார்கள். பரதீஸ் எப்படி இருக்கும் என்பதாக ஒரு நவாஹோ மனிதரிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டபோது, “ஏராளமான ஆடுகளோடு பசுமையான புல்வெளியாக இருக்கும்” என்பதாக பதிலளித்து, நிலத்தின்மீதும் மந்தையின்மீதும் அவர்களுக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்தினார். பைபிள் இலக்கியங்களுக்கான போற்றுதலையும் ராஜ்ய ஊழியத்திற்கான ஆதரவையும், மணிகள், ஒரு சோப்பு கட்டி, 8 அவுன்ஸ் பால் கொண்ட ஒரு உலோக கொள்கலம் போன்றவற்றை சில சமயங்களில் நன்கொடையாக அளிப்பதன் மூலம் அவர்கள் காட்டுகிறார்கள். ஒரு விசேஷ பயனியர் ஒரு வருடத்தில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சுமார் 200 சந்தாக்களைப் பெற்றார்; இதில் ஒரு குதிரை ஓட்டுபவனிடமிருந்து அவர் பெற்றுக்கொண்ட இரண்டு சந்தாக்களும்கூட அடங்கும்.
“ஆடுகளின் கூடாரம்” ஒன்றை அமைத்தல்
கோடைகாலம் வரும்போது, நவாஹோ மேய்ப்பனுக்கு அவனுடைய அல்லது அவளுடைய ஆடுகளை அவற்றின் கூடாரத்துக்கு அழைத்துச் செல்வதற்கு சமயமாக இருக்கிறது. பசுமையான மேய்ச்சல் நிலத்துக்கும் நீர்வளத்துக்கும் அருகாமையில் இருப்பதற்காக தெரிவுசெய்யப்படும் இந்தக் கோடைகால கூடாரம், மந்தை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அடையாள அர்த்தத்தில், ஆவிக்குரிய மேய்ச்சல் நிலமாகவும் சத்திய தண்ணீர்களின் ஊற்றாகவும் இருக்கும் ராஜ்ய மன்றத்தை இப்படிப்பட்ட ஒரு கூடாரத்துக்கு ஒப்பிடலாம். அங்கு வருகிறவர்கள் ஆவிக்குரிய போஷாக்கைப் பெறுகிறார்கள்; இது அவர்களை ஆவிக்குரிய விதமாக ஆரோக்கியமாகவும் பலமுள்ளவர்களாகவும் ஆக்குகிறது.
கொஞ்ச காலத்துக்கு கூட்டங்கள் அரிஜோனாவிலுள்ள கேயன்டாவில் ஒரு பள்ளியின் வகுப்பறையில் நடத்தப்பட்டுவந்தன. பின்னர் ஆகஸ்ட் 1992-ல் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த வாலண்டியர் சாட்சிகளுடைய உதவியால் கேயன்டாவில் ஒரு புதிய ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது. இந்த ராஜ்ய மன்றமும் அந்தப் பகுதியிலுள்ள மற்ற பல ராஜ்ய மன்றங்களும் சாட்சிகள் அந்தப் பகுதியில் நிரந்தரமாக இருக்கிறார்கள் என்ற உணர்வை உள்ளூர் மக்களுக்குத் தருகின்றன. டியூபா மற்றும் சின்லியில் தனி ஒதுக்கீட்டுப் பகுதியிலுள்ளவையும் நவாஹோ குடியிருப்பு பகுதியினுள்ளே ஹாப்பி டிரைபல் தேசத்தில் கெம்ஸ் கேனியானில் ஒன்றும், குடியிருப்பின் எல்லையில் அமைந்திருக்கும் மற்றவையும் பரந்த இந்தப் பிராந்தியத்திலுள்ள மற்ற ராஜ்ய மன்றங்களாகும். விளைவு என்னவாக இருந்திருக்கிறது?
ராஜ்ய செய்திக்கு அமோக ஆதரவு
கேயன்டாவில் ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது முதற்கொண்டு உள்ளூர் மக்களில் சுமார் பன்னிரண்டு பேர் முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள்; மெய் வணக்கத்துக்குரிய இந்த இடத்தின்மீது யெகோவாவின் ஆசீர்வாதமிருப்பதை இது காட்டுகிறது. யெகோவாவின் சாட்சிகள் இங்கே தங்குவதற்காக வந்திருக்கிறார்கள் என்பதற்கு மன்றம் சான்றளிப்பதாக இருக்கிறது, மேலும் அவர்கள் பிரசங்கிக்கும் ராஜ்ய செய்தியில் நம்பிக்கையை வளர்க்கிறது. சமீபத்தில் நவாஹோ மொழியில் இங்கு முதல் பைபிள் பொதுபேச்சு கொடுக்கப்பட்டது. பெற்றோராயிருப்பதில் உட்பட்டிருக்கும் பொறுப்புகளைப் பற்றி கொடுக்கப்பட்ட பேச்சுக்கு சபையின் 40 உறுப்பினர்களும் 245 பேரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைந்தார்கள். போற்றுதலுள்ள இருதயங்களோடு, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட ஒரு குடும்பம் இந்தப் பேச்சைக் கேட்பதற்காக மூன்று மணி நேரம் பிரயாணம் செய்து வந்திருந்தார்கள்—அவர்கள் ராஜ்ய மன்றத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாக இருந்தது.
யெகோவா அளித்திருக்கும் மற்றொரு பிரயோஜனமான கருவி, நவாஹோ மொழியில் பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிற்றேடாகும். மிகவும் சிக்கலானதாக இருக்கும் நவாஹோ மொழியில் இந்தச் சிற்றேட்டை மொழிபெயர்ப்பது மிகப் பெரிய ஒரு சவாலாக இருந்தது. இந்தச் சிற்றேடு ராஜ்ய செய்தியை சரியாக எடுத்துச் செல்வதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக மொழிபெயர்ப்பாளர்கள் மொத்தமாக 1,000-க்கும் அதிகமான மணிநேரங்களை செலவிட்டார்கள். 1995-ன் பிற்பகுதியில் இது வெளியிடப்பட்டது முதற்கொண்டு, உள்ளூர் சாட்சிகள் ஆயிரக்கணக்கில் அதனுடைய பிரதிகளை விநியோகித்திருக்கிறார்கள்; இதன் விளைவாக சத்தியத்தை நாடுகிறவர்களிடம் அநேக பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ராஜ்ய பிரஸ்தாபிகள் அதைக் கற்றுக்கொள்ளும்போது அதிகமதிகமாக நவாஹோ மொழி ஊழியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியிலுள்ள சபைகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நவாஹோ மொழியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன; நவாஹோ மொழி வகுப்புகள் பிரஸ்தாபிகளைப் பயிற்றுவிப்பதற்காக நடத்தப்பட்டுவருகின்றன. மேலுமாக, உள்ளூர் அசெம்பிளிகளில் நிகழ்ச்சிநிரலும்கூட நவாஹோ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுவருகிறது. இந்த எல்லா முயற்சிகளும் நிச்சயமாகவே இந்த தனி ஒதுக்கீட்டுப் பகுதியில் இன்னும் கூடுதலான அதிகரிப்புக்கு வழிநடத்தும்.
இந்த இந்திய தனி ஒதுக்கீட்டுப் பகுதியில் பெறப்பட்டிருக்கும் ராஜ்ய கனிகளில் நம்முடைய நவாஹோ சகோதரர்கள் காண்பித்துவரும் சிறப்பான ஆவிக்குரிய பண்புகளை நாம் கவனிக்காமல் விடமுடியாது. ஏழு ஆண்டுகளாக, ஜிம்மியும் சான்ட்ராவும் தங்களுடைய ஐந்து பிள்ளைகளோடு வாராந்தர கூட்டங்களுக்கு ஆஜராயிருப்பதற்காக 120 கிலோமீட்டர் பயணம்செய்து வந்தார்கள். ராஜ்ய பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒன்றாகச் சேர்ந்து பைபிளை வாசித்துக்கொண்டும் தங்களுடைய நீண்ட பயணங்களைச் செய்ததைப் பற்றிய இனிமையான நினைவுகள் இன்னும் அவர்களுக்கு இருக்கிறது. சத்தியத்தின்பால் பெற்றோர் கொண்டிருந்த அன்பும் வைராக்கியமும் ஒப்புக்கொடுக்கப்பட்ட யெகோவாவை-துதிப்போராவதற்கு அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு பிள்ளைகளைத் தூண்டியது. அவர்களில் நான்கு பேர் இப்பொழுது ஒழுங்கான பயனியர்களாக சேவிக்கிறார்கள், ஜிம்மி ஒரு மூப்பராக இருக்கிறார். நவாஹோ மொழியில் மாத்திரமே பேசுவோரில் முதல் நபராக சமீபத்தில் ஜிம்மியின் அக்கா எல்சி முழுக்காட்டப்பட்டபோது இந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சி இன்னும் ஒரு படி அதிகமானது.
நவாஹோ தனி ஒதுக்கீட்டுப் பகுதியை அலங்கரிக்கும் ஒற்றைக் கல் பாறைக்கு உள்ளூர் மேய்ப்பர்களும் அவர்களுடைய மந்தைகளும் ஆயர்பாடிக்குரிய அமைதியான உணர்வை கூட்டுகிறார்கள். ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவைக் குறித்து வெகு காலத்திற்கு முன்பு இவ்வாறு முன்னுரைத்தார்: “மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.” (ஏசாயா 40:11) யெகோவா தம்முடைய நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நவாஹோ தனி ஒதுக்கீட்டுப் பகுதியில் ராஜ்ய நற்செய்தியைக் கேட்டு அவருடைய நித்திய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறவிரும்பும் அனைவரையும் தம்முடைய ஆவிக்குரிய மேய்ச்சல் நிலத்திற்குள் கூட்டிச் சேர்த்து வருகிறார்.
[அடிக்குறிப்புகள்]
a மே 8, 1948; பிப்ரவரி 22, 1952; ஜூன் 22, 1954; மற்றும் செப்டம்பர் 8, 1996 விழித்தெழு! (ஆங்கிலம்) இதழ்களைக் காண்க.
[பக்கம் 24-ன் படம்]
ஆடுமேய்க்கும் நவாஹோ பெண் ஒருத்தி நற்செய்தியைக் கேட்கிறார்