இரட்சிப்பு—அது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது
‘நீங்க இரட்சிக்கப்பட்டுவிட்டீர்களா?’ அநேக சமயங்களில், இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் ‘இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுவிட்டபடியால்’ தாங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். இன்னும் மற்றவர்கள், இரட்சிக்கப்படுவதற்கு பல்வேறு வழிகள் இருப்பதாகவும் ‘இயேசு உங்களுடைய இருதயத்தில் இருக்கும்’வரையில் நீங்கள் என்ன நம்புகிறீர்கள் என்பதோ அல்லது நீங்கள் எந்தச் சர்ச்சை சேர்ந்தவர் என்பதோகூட முக்கியத்துவமல்ல என்பதாகவும் நினைக்கிறார்கள்.
“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட”வேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம் என்று பைபிள் சொல்லுகிறது. (1 தீமோத்தேயு 2:3, 4) இதன் காரணமாக அதை ஏற்றுக்கொள்ளுகிற அனைவருக்கும் இரட்சிப்பு கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இரட்சிக்கப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது? அது உண்மையில் உங்களுடைய பங்கில் சிறிதளவான அல்லது எந்த முயற்சியுமே இல்லாமல் கிடைக்கக்கூடிய ஒன்றா?
“இரட்சிப்பு” என்ற வார்த்தை “ஆபத்து அல்லது அழிவிலிருந்து விடுதலையை” அர்த்தப்படுத்துகிறது. ஆகவே உண்மையான இரட்சிப்பு அமைதியான ஒரு மனநிலையைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் அழிவிலிருந்தும் கடைசியாக மரணத்திலிருந்தும் காப்பாற்றப்படுவதை அர்த்தப்படுத்துகிறது! ஆனால் கடவுள் யாரைக் காப்பாற்றப்போகிறார்? பதிலுக்காக, இந்த விஷயத்தின்பேரில் இயேசு கிறிஸ்து என்ன கற்பித்தார் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். நம்முடைய ஆய்வின் முடிவுகள் உங்களுக்கு ஆச்சரியமளிக்கக்கூடும்.
இரட்சிப்பு—எல்லா மதங்களிலும் காணப்படுகிறதா?
ஒரு சமயம், இயேசு ஒரு சமாரியப் பெண்ணோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தார். அவள் ஒரு யூத பெண்ணாக இல்லாதபோதிலும், “கிறிஸ்து என்னப்படுகிற” மேசியா வருவார் என்பதாக அவள் மிகச் சரியாகவே நம்பியிருந்தாள். (யோவான் 4:25) ஆனால் இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை அவள் இரட்சிக்கப்படுவதற்கு போதுமானதாக இருந்ததா? இல்லை, ஏனென்றால் இயேசு தைரியமாக அந்தப் பெண்ணிடம் பின்வருமாறு சொன்னார்: “நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்.” இந்தப் பெண் இரட்சிப்பைப் பெறவேண்டுமென்றால், அவள் தன்னுடைய வணக்க முறையை மாற்றி சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே இயேசு இவ்வாறு விளக்கினார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.”—யோவான் 4:22, 23.
இயேசு இரட்சிப்பைப் பற்றிய தம்முடைய கருத்தை வெளிப்படுத்தின மற்றொரு சந்தர்ப்பத்தில் யூத மதத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மதப் பிரிவாகிய பரிசேயர்களை உட்படுத்திப் பேசினார். பரிசேயர்கள் ஒரு வணக்க முறைமையை ஏற்படுத்திக்கொண்டு கடவுளுடைய அங்கீகாரம் அதற்கு இருப்பதாக நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் பரிசேயர்களிடமாக இயேசு சொன்ன வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள்: “மாய்மாலக்காரரே! உங்களைப்பற்றி ஏசாயா சரியாய் சொல்லியிருக்கிறார்: ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் இருதயங்களோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது. அவர்கள் என்னை வழிபடுவது வீண்; ஏனெனில், அவர்கள் போதிப்பது மனிதர் கற்பனை.”—மத்தேயு 15:7-9, நியூ இன்டர்நேஷனல் வெர்ஷன்.
கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதாக உரிமைபாராட்டும் அநேக மத தொகுதிகளைப் பற்றி என்ன? இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு எல்லா மத தொகுதிகளையும் ஏற்புடைய வழிகளே என இயேசு அங்கீகரிப்பாரா? இந்த விஷயத்தைக் குறித்து நாம் ஊகிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இயேசு தெளிவாக பின்வருமாறு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”—மத்தேயு 7:21-23.
இயேசுவைப் பற்றிய திருத்தமான அறிவு இரட்சிப்புக்கு இன்றியமையாதது
இயேசுவின் இந்த வார்த்தைகளில் கருத்தாய் எடுத்துக்கொள்ளவேண்டிய குறிப்புகள் மறைந்திருக்கின்றன. பக்தியுள்ள அநேக ஆட்கள் ‘பிதாவின் சித்தத்தைச்’ செய்வதில்லை என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன. அப்படியானால் ஒருவர் எவ்விதமாக உண்மையான இரட்சிப்பைப் பெறமுடியும்? முதலாம் தீமோத்தேயு 2:3, 4 பதிலளிக்கிறது: “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற [திருத்தமான] அறிவை அடையவும், அவர் [கடவுள்] சித்தமுள்ளவராயிருக்கிறார்.”—கொலோசெயர் 1:9, 10-ஐ ஒப்பிடுக.
இரட்சிப்பை அடைவதற்கு இப்படிப்பட்ட அறிவு மிகவும் முக்கியமானதாகும். ஒரு ரோம சிறைச்சாலைக்காரன், “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்” என்பதாக அப்போஸ்தலன் பவுலையும் அவருடைய தோழராகிய சீலாவையும் கேட்டபோது, அவர்கள் இவ்விதமாக பதிலளித்தார்கள்: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” (அப்போஸ்தலர் 16:30, 31) அந்தச் சிறைச்சாலைக்காரனும் அவருடைய குடும்பத்தாரும் செய்யவேண்டியதாக இருந்ததெல்லாம் அவர்களுடைய இருதயங்களில் குறிப்பிட்ட ஒரு உணர்வைக் கொண்டிருப்பதே என்பதை அது அர்த்தப்படுத்தியதா? இல்லை, ஒரு காரணமானது, இயேசு யார், அவர் என்ன செய்தார், என்ன போதித்தார் என்பதைப் பற்றி ஓரளவான புரிந்துகொள்ளுதலை அவர்கள் கொண்டிருந்தாலொழிய அவர்கள் உண்மையில் ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்க’ முடியாது.
உதாரணமாக, ஒரு பரலோக அரசாங்கம்—“தேவனுடைய ராஜ்யம்”—ஸ்தாபிக்கப்படும் என்பதாக இயேசு கற்பித்தார். (லூக்கா 4:43) கிறிஸ்தவர்களுக்குரிய ஒழுக்கத்தையும் நடத்தையையும் குறித்த நியமங்களை அவர் எடுத்துரைத்தார். (மத்தேயு 5-7 அதிகாரங்கள்) அரசியல் விவகாரங்களில் அவருடைய சீஷர்கள் எடுக்கவேண்டிய நிலைநிற்கையைக் குறித்து அவர் சொன்னார். (யோவான் 15:19) பூகோள அளவிலான போதனா திட்டமொன்றை அவர் ஆரம்பித்துவைத்து அதில் பங்குகொள்ளுமாறு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு கட்டளையிட்டார். (மத்தேயு 24:14; அப்போஸ்தலர் 1:8) ஆம், ‘இயேசுவை விசுவாசிப்பது’ அநேக காரியங்களைப் புரிந்துகொள்வதை அர்த்தப்படுத்தியது! அப்படியென்றால் பவுலும் சீலாவும் இந்தப் புதிய விசுவாசிகள் முழுக்காட்டப்படுவதற்கு முன்பாக “அவனுக்கும் [சிறைச்சாலைக்காரனுக்கும்] அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய [யெகோவாவுடைய] வசனத்தைப் போதித்”ததைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.—அப்போஸ்தலர் 16:32, 33.
கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவும்கூட இன்றியமையாதது
இயேசுவை உண்மையாக விசுவாசிப்பதில் அடங்கியிருக்கும் அவசியமான ஒரு காரியம் இயேசுதாமே வணங்கிய அந்தக் கடவுளை வணங்குவதை உட்படுத்துகிறது. இயேசு இவ்விதமாக ஜெபம் செய்தார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3.
கடவுளுடைய குமாரன் தம்முடைய பூமிக்குரிய ஊழியக்காலத்தின்போது, எப்பொழுதுமே கவனத்தை தம்மிடமாக அல்ல, ஆனால் தம்முடைய தகப்பனிடமே திருப்பினார். அவர் ஒருபோதும் தம்மை சர்வவல்லமையுள்ள கடவுள் என்பதாக சொல்லிக்கொண்டது கிடையாது. (யோவான் 12:49, 50) இயேசு தம்முடைய பிதாவுக்குக் கீழ்ப்பட்டிருப்பதை வெளிப்படையாக சொல்வதன் மூலம் அநேக சந்தர்ப்பங்களில் கடவுளுடைய ஏற்பாட்டில் தம்முடைய ஸ்தானத்தைக் குறித்து தெளிவுபடுத்தியிருந்தார். (லூக்கா 22:41, 42; யோவான் 5:19) ஏன், “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” என்றுங்கூட இயேசு அறிவித்திருக்கிறார். (யோவான் 14:28) கடவுளுக்கும் கிறிஸ்துவுக்குமிடையே உள்ள உண்மையான உறவைப் பற்றி உங்களுடைய சர்ச் உங்களுக்குப் போதித்திருக்கிறதா? அல்லது இயேசுதாமே சர்வவல்லமையுள்ள கடவுள் என்பதாக நீங்கள் நம்பும்படியாக வழிநடத்தியிருக்கிறதா? உங்களுடைய இரட்சிப்பு சரியான புரிந்துகொள்ளுதலின்பேரிலேயே சார்ந்திருக்கிறது.
கர்த்தருடைய ஜெபத்தில், இயேசு தம்முடைய சீஷர்களைப் பின்வருமாறு ஜெபிக்கும்படியாக துரிதப்படுத்தினார்: “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) அநேக பைபிள் மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை “கர்த்தர்” என்பதாக மொழிபெயர்த்து அவருடைய பெயரை மறைத்துவிட்டிருக்கின்றன. ஆனால் “பழைய ஏற்பாட்டின்” பண்டைய நகல்களில் கடவுளுடைய பெயர் ஆறாயிரம் தடவைக்கும் மேலாக காணப்பட்டது! சங்கீதம் 83:17 வாசிப்பதாவது: ‘யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரவேண்டும்.’ யெகோவா என்ற கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தும்படியாக உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி இல்லையென்றால் உங்களுடைய இரட்சிப்பு ஆபத்தில் இருக்கிறது; ஏனென்றால் “யெகோவாவின் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்”!—அப்போஸ்தலர் 2:21, NW; யோவேல் 2:32-ஐ ஒப்பிடுக.
ஆவியோடும் உண்மையோடும்
மேலும், இயேசு கிறிஸ்து கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு கவனத்தைத் திருப்பினார். ஒரு சில விஷயங்களின்பேரில் கடவுளுடைய நோக்குநிலையை விவரிக்கையில், அவர் அடிக்கடி “எழுதியிருக்கிறதே” என்பதாக சொல்லுவார். (மத்தேயு 4:4, 7, 10; 11:10; 21:13) தாம் மரிப்பதற்கு முந்தின இரவில் இயேசு தம்முடைய சீஷர்களைக் குறித்து பின்வருமாறு ஜெபித்தார்: “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.”—யோவான் 17:17.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் போதனைகளைப் புரிந்துகொண்டிருப்பது இரட்சிப்புக்கு தேவையாக இருக்கும் மற்றொரு காரியமாகும். (2 தீமோத்தேயு 3:16) வாழ்க்கையின் அர்த்தமென்ன? கடவுள் ஏன் அக்கிரமம் இவ்வளவு நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும்படியாக அனுமதித்திருக்கிறார்? ஒரு ஆள் இறக்கும்போது அவருக்கு என்ன நேரிடுகிறது? எரி நரகத்தில் கடவுள் உண்மையில் மக்களை வாதிக்கிறாரா? பூமியினிடமாக கடவுளுடைய நோக்கம் என்ன?a போன்ற கேள்விகளுக்கு பைபிள் மாத்திரமே பதிலளிக்கிறது. இந்த விஷயங்களை சரியாக புரிந்துகொள்ளாமல் ஒருவர் கடவுளை சரிவர வணங்கமுடியாது; ஏனென்றால் இயேசு இவ்விதமாகச் சொன்னார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளு”வார்கள்.—யோவான் 4:23.
விசுவாசம் செயல்பட தூண்டுகிறது
இரட்சிப்பு வெறுமனே தகவலை பெற்றுக்கொள்வதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. அதை ஏற்று செயல்படுகின்ற ஒரு இருதயத்தில், கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவு விசுவாசத்தை தோற்றுவிக்கிறது. (ரோமர் 10:10, 17; எபிரெயர் 11:6) இப்படிப்பட்ட விசுவாசம் ஒருவரை செயல்பட தூண்டுகிறது. உதாரணமாக, பைபிள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கு . . . உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.”—அப்போஸ்தலர் 3:19, 20.
ஆம், நடத்தையிலும் ஒழுக்கத்திலும் கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக ஒருவர் இருப்பதையும்கூட இரட்சிப்பு உட்படுத்துகிறது. மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கடவுளுடைய வார்த்தையின் செல்வாக்கின்கீழ், பொய் சொல்லுதல் ஏமாற்றுதல் போன்ற நீண்ட நாளைய பழக்கங்களிலிருந்து ஒருவர் மாறி நேர்மையும் உண்மையுமுள்ளவராக ஆகவேண்டும். (தீத்து 2:10) ஓரின சேர்க்கை, விபச்சாரம், வேசித்தனம் போன்ற ஒழுக்கமற்ற பழக்கங்களை விட்டுவிட்டு அதற்குப் பதிலாக கற்புள்ள ஒழுக்கமான நடத்தை பின்பற்றப்பட வேண்டும். (1 கொரிந்தியர் 6:9-11) இது உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தற்காலிகமாக ஒழுக்கங்கெட்ட நடத்தையிலிருந்து விலகியிருப்பதை அல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தையைக் கவனமாக படித்து அதைப் பொருத்திப் பிரயோகிப்பதன் விளைவாக ஏற்படும் நிரந்தரமான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.—எபேசியர் 4:22-24.
காலப்போக்கில், கடவுள்பேரிலான அன்பும் போற்றுதலும் நேர்மையான இருதயமுள்ள ஒரு நபரை அவருக்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கவும் அதை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலமாக அடையாளப்படுத்தவும் தூண்டுகிறது. (மத்தேயு 28:19, 20; ரோமர் 12:1) முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பார்வையில் இரட்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். (1 பேதுரு 3:21) வரவிருக்கும் இந்தப் பொல்லாத உலகின் அழிவின் சமயத்தில், அந்த உபத்திரவத்தினூடாக அவர்களைப் பாதுகாப்பதன் மூலம் கடவுள் அவர்களை முழுமையாக இரட்சிப்பார்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
இரட்சிப்பு உங்களுக்கு எதை அர்த்தப்படுத்தும்
இரட்சிப்பு என்பது ‘கர்த்தராகிய இயேசுவை உங்கள் இருதயத்தில் வைத்திருப்பதைக்’ காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது என்பது இந்தச் சுருக்கமான கலந்தாலோசிப்பிலிருந்து தெளிவாக இருக்கிறது. அது யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய திருத்தமான அறிவைத் தொடர்ந்து பெறுவதையும் ஒருவருடைய வாழ்க்கையில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இதைச் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகத் தோன்றலாம்; ஆனால் யெகோவாவின் சாட்சிகள் இந்த முயற்சியில் உங்களுக்கு உதவிசெய்ய மனமுள்ளவர்களாயிருக்கிறார்கள். இலவசமான ஒரு வீட்டு பைபிள் படிப்பின் மூலமாக, உண்மையான இரட்சிப்பின் பாதையில் நடக்க ஆரம்பிப்பதற்கு அவர்கள் உங்களுக்கு உதவிசெய்வார்கள்.b
வரவிருக்கும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள் சமீபமாயிருப்பதை முன்னிட்டுப்பார்க்கையில், அவ்விதமாகச் செய்வது எப்போதுமிருந்ததைவிட அதிக அவசரமானதாய் இருக்கிறது! தீர்க்கதரிசியின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதற்கு இதுவே சமயமாக இருக்கிறது: “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.”—செப்பனியா 2:2, 3.
[அடிக்குறிப்புகள்]
a இந்த விஷயங்களின்பேரில் கலந்தாலோசிப்புக்கு, தயவு செய்து உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் வெளியிடப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தைப் பார்க்கவும்.
b உங்களுக்கு ஒரு வீட்டு பைபிள் படிப்பு விருப்பமென்றால், யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையோடு தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள். அல்லது இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போருக்கு நீங்கள் எழுதலாம்.
[பக்கம் 6-ன் பெட்டி]
இரட்சிப்படைய செய்ய வேண்டியவை ...
◻ கடவுளையும் இயேசுவையும் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வது.—யோவான் 17:3.
◻ விசுவாசத்தைக் காண்பிப்பது.—ரோமர் 10:17; எபிரெயர் 11:6.
◻ மனந்திரும்பி குணப்படுவது.—அப்போஸ்தலர் 3:19, 20; எபேசியர் 4:22-24.
◻ ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவது.—மத்தேயு 16:24; 28:19, 20.
◻ தொடர்ந்து பகிரங்கமாக அறிவிப்பு செய்வது.—மத்தேயு 24:14; ரோமர் 10:10.
[பக்கம் 7-ன் படங்கள்]
பைபிளைப் படிப்பதும், கற்றுக்கொண்டவற்றைப் பொருத்திப் பயன்படுத்துவதும், ஒப்புக்கொடுத்தலும், முழுக்காட்டுதலும் இரட்சிப்புக்கு வழிநடத்தும் படிகளாகும்